Published:Updated:

காரமணிக்குப்பம் டு இத்தாலி கரமணிக்கோ! - கிராமத்தானின் பயணம் 10

ஒருவழியாக மகளை ஒப்புக்கொள்ள வைத்து நானே க்ரகோவிலிருந்து கரமணிக்கோ சென்று அதிகாலை இருவரும் வாடகை காரில் பஸ்ஸேரி வந்து பேருந்து பிடித்து ரோம் வருவதாக திட்டம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-9 படிக்காதவர்கள் படிக்கலாம்)

இந்த வாரம் சுற்றிப்பார்க்க போவதில்லை. பதிலாக இத்தாலி மற்றும் மால்டாவில் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களை பகிரப்போகிறேன்.

கரமணிக்கோ.

கரமணிக்கோ என்ற பேரை முதன் முதல் என் பெண் சொல்ல கேட்டபோது எனக்கு தோன்றியது "காராமணிக்குப்பம்" தான். என் ஊரான வரக்கால்பட்டிற்கு பக்கத்து ஊர்தான் "காராமணிக்குப்பம்".

நான் மே 2015 கடைசியில் க்ரகோவில் இருந்து 4-5 நாட்கள் துபாய் வந்தேன். அப்பொழுது என் மகள் சொன்னார் தானும் நண்பர்களும் இத்தாலியில் கரமணிக்கோவில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்குபெற செல்லப்போவதாக. மகள் பரதம் அரங்கிற்றியவர். மகளின் சிநேகிதி துபாயில் பரத குழு நடத்தி வந்தார்.

போகும்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரோமிலிருந்து கரமணிக்கோ அழைத்துச்செல்வதாக திட்டம். நிகழ்ச்சி முடிந்து நண்பர்களோ 5 நாள் இருந்து இத்தாலி சுற்றிவிட்டு வருவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் மகளுக்கு அலுவல் காரணமாக நிகழ்ச்சி முடிந்தவுடன் துபாய் திரும்பவேண்டும்.

Venice
Venice

ஒன்றும் பிரச்னை இல்லை, நான் தனியாக வந்துவிடுவேன் என்று மகள் சொன்னார். சரி பார்க்கலாம் என்று இணையத்தில் தேடினால், கரமணிக்கோ ஒரு சின்னஞ்சிறு மலை கிராமம். ரோமிற்கு திரும்ப நேரடியான போக்குவரத்து இல்லை. முதலில் கரமணிக்கோவிலிருந்து 30 கிமீ தள்ளி உள்ள பஸ்ஸேரி (Torre De Passeri) என்ற இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பேருந்து பிடித்து 160 கிமீ பயணித்து ரோம் விமான நிலையம் வரவேண்டும். ரோம் துபாய் விமானம் 1030 மணிபோல். ஆகவே பஸ்ஸேரியில் அதிகாலை பேருந்து பிடித்தால்தான் 1030 துபாய் விமானம் பிடிப்பது சாத்தியம்.

பஸ்ஸேரி-ரோம் முதல் பேருந்து 5 மணிக்கு என்பதால் மகள் சொன்னார் இரவே பஸ்ஸேரியில் தங்கி மறுநாள் அதிகாலை பேருந்து பிடித்து வந்துவிடுவதாக. சரி பஸ்ஸேரியில் விடுதி முன் பதிவு செய்யலாம் என்று இணையத்தில் முயற்சித்தபோதுதான் தெரிய வந்தது பெயர் சொல்லும்படி எந்த விடுதிகளும் இல்லை என்று. என் இத்தாலிய நண்பனிடம் விசாரித்தபோது பஸ்ஸேரி மிக சிறிய ஊரென்றும் பேருந்து/வாடகை கார்கள் இணைப்பு அவ்வளவு இல்லையென்றும் சொன்னார். மனைவிக்கும் எனக்கும் சிறிதே கவலை வந்தது.

ஒருவழியாக மகளை ஒப்புக்கொள்ள வைத்து நானே க்ரகோவிலிருந்து கரமணிக்கோ சென்று அதிகாலை இருவரும் வாடகை காரில் பஸ்ஸேரி வந்து பேருந்து பிடித்து ரோம் வருவதாக திட்டம். ரோமிலிருந்து மகள் துபாய்க்கும் நான் க்ரகோவிற்கு திரும்புவதாக முடிவு செய்தோம். மகள் UK யில் நான்கு வருடம் படித்தபோது தனியாகத்தான் சென்று வந்தார். இருந்தும் நாங்கள் அவர்களை இன்னும் குழந்தையாகவே பார்ப்பதாக மகளுக்கு வருத்தம். நமக்கு மகளின் பாதுகாப்பு முக்கியம்.

Rome
Rome

மே 18 அதிகாலை தயாராகி 0430 மணிக்கு வீட்டின் அருகிலியே விமான நிலைய பேருந்து பிடித்து விமானநிலையத்தில் சிற்றுண்டி உண்டு 0630 லுப்டான்ச (Lufthansa) பிடித்து ம்யூனீக் (Munich) வழியாக ரோம் அடைந்தபோது 1030. பஸ்ஸேரி செல்வதற்கு மதியம் 1 மணிக்கு இணையத்தில் முன்பதிவு செய்திருந்தேன். பஸ்ஸேரி சென்று அங்கிருந்து ஸ்கஃபா என்ற ஊருக்கு (8 கிமீ) பேருந்தில். பின் அங்கிருந்து வேறொரு பேருந்து பிடித்து கரமணிக்கோ (22 கிமீ) செல்லவேண்டும். இவ்வளவும் எனக்கு அன்னமரியா என்ற நல்ல பெண்மணி சொன்னது. அந்த பெண்மணி நான் தங்கும் கரமணிக்கோ விடுதியின் உரிமையாளர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேறி பேருந்து நிறுத்தம் வந்தபோது பஸ்ஸேரி செல்ல 1130 மணி பேருந்து காத்திருந்தது. அட இதை பிடித்தால் கரமணிக்கோ சீக்கிரமே அடைந்து நல்ல ஓய்வெடுக்கலாம் என நினைத்து ஓட்டுனரிடம் கேட்டேன். ஒரு வார்த்தை பேசாமல் பயணசீட்டை வாங்கி தன் இருக்கையின் மீது வைத்துவிட்டு ஏதோ புரியா ஒன்றை சொன்னார். அப்போது மற்றொரு பயணி ஓட்டுனரிடம் ஏதோ கேட்க, ஓட்டுனரோ சட்டை செய்யாமல் அலை பேசியில் கவனமாயிருந்தார். பயணி மீண்டும் கேட்டபோது ஓட்டுநர் எரிந்து விழுந்தார். பரவாயில்லை நம்ம ஊரு ஓட்டுநர் போல இருக்கிறாரே என்று மனதுக்குள்ளே நகைத்துக்கொண்டு அந்த பயணியை கேட்டேன் அவருக்கு ஆங்கிலம் தெரியுமா என்று. ஓரளவுக்கு தெரியும் என்ன வேண்டும் என்றார். அவரிடம் விளக்கி என் முன் பதிவு 1 மணிக்கு, 1130 பேருந்தில் பயணிக்க முடியுமா என கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே இந்த பேருந்து எப்போதும் காலியாக செல்லும். கவலை இல்லை. ஆனால் ஓட்டுநர் சரியான முசுடு போல தெரிகிறது. நீங்கள் இந்தியர்தானே? நானும் இந்தியாவில் பயணித்திருக்கிறேன் என்றார். நன்றி சொல்லி நிற்கும்போது ஓட்டுநர் எனக்கு சைகை காட்டினார் ஏறச்சொல்லி.

Street pantheon rome
Street pantheon rome

என்னை நானே பாராட்டிக்கொண்டு மனக்கணக்கிட்டேன். 1130 மணிக்கு கிளம்பி 190 கிமீ செல்ல 3-4 மணி நேரம். 4 மணிக்கு கரமணிக்கோ சென்று மகளின் நிகழ்ச்சி பார்து நல்ல ரிசோட்டோ (இத்தாலிய சாதம்தான்) சாப்பிட்டு உறங்கலாம் என்று நினைத்து இருக்கையில் அமர்ந்தேன்.

பேருந்து ரோம் நகரினுள் சென்றபோது ஒன்று நன்கு விளங்கியது. போக்குவரத்து நெரிசலும் வாகனங்கள் ஒழுங்கில்லாமல் நிறுத்தப்பட்டிருப்பதும் இந்த இத்தாலி கொஞ்சம் வித்தியாசமானதுதான் என்று தோன்றியது. சிறிது நேரத்தில் பேருந்து மலைப்பாதையில் ஏற ஆரம்பித்தது. சக பயணி என் மேல் ஆர்வம் கொண்டு விசாரிக்க நான் துபாயில் வசிக்கிறேன் என்று சொல்ல, அவர் அப்படியா, எனக்கு துபாய் செல்ல நீண்ட நாள் ஆசை, மிகவும் அழகு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். அப்புறம் அங்கே பெண்கள் தலையை மறைத்துக்கொள்ள வேண்டுமாமே என்றார். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எப்படியாயினும் நீங்கள் ஆண்தானே கவலை இல்லை என்று மொக்கை ஜோக் சொல்லி அவரை கேட்டேன் பஸ்ஸேரி வந்தால் சொல்லுங்கள் என்று. வந்தது. சொன்னார். இறங்கினேன். மணி மதியம் 0230.

இப்ப பாண்டியோ, பண்ரூட்டியோ ஏன் வரக்கால்பட்டோ சென்று இறங்கினால் முதல் அடையாளம் ஒரு பெட்டி கடை (எட்டாம் பாகத்தில் சொன்ன மாமா கடை மாதிரி), இரண்டு மூன்று நாய்கள், கொஞ்சம் குப்பை, 10-15 மக்கள் என ஒரு முன்னேறிய நாகரீகத்தின் அடையாளங்கள் தென்படும் இல்லையா? பஸ்ஸேரியில் இறங்கியபோது ஏதோ நிலவில் கால் வைப்பது போல் ஒரு அமைதி. சுற்றி மலைகள். சரி, மக்கள்? மார்கெட்லயே இல்லையாம். சரி நானும் ஸ்கஃபா போக ஏதோ ஒரு வழிகாட்டி அல்லது அடையாளம் தென்படும் என்று சுற்றி பார்க்க அதெல்லாம் உங்க ஊரில், இது இத்தாலி என்பது போல் சுத்தம்.

நல்ல வேளை ஒரு கார் வந்தது. உள்ளே ஒரு பெண், பெரிய மூக்கு வளையம், மடியில் நாய், சிறிய மேலாடை என. கவனம் சிதறக்கூடாது. நமக்கு தேவை ஸ்கஃபா போக வழி. நோ இங்கிலிஷ் என்று ஜகா வாங்க பார்த்தார். இருந்தும் சொன்னதின் சாராம்சம் ஸ்கஃபா போக ரயில் நிலையம் இன்னும் 3 கிமீல்.

Caramanico
Caramanico

இறங்கும்போது பேருந்தில் பார்த்தேன் வெப்பம் 38 டிகிரி என்று. துபாய் அளவுக்கு சூடு. சரி நடக்கலாம் என்று ஏதோ குத்துமதிப்பாக ஆரம்பித்தேன் வழியில் ஏதாவது உயிரினம் தென்படும் என்ற நம்பிக்கையில். மனைவிக்கு தெரியப்படுத்த கை பேசியை எடுத்தபோது 25% காட்டியது. நலம், நலமறிய ஆவல். பேட்டரி அபாயகரத்தில். எனவே நானே கரமணிக்கோ சென்று அழைக்கிறேன் என்று கூறி அந்த வெய்யிலில் நடந்தேன். நல்ல வேலை மடிக்கணிணியும் காமெராவும் கொண்டு செல்லவில்லை. பை கனமில்லை.

ஒரு கடை கண்ணில் படவேண்டுமே? எல்லோரும் சீயெஸ்டாவில் (மதிய தூக்கம்). எனக்கோ பசி. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் என் மனைவி கையால் தக்காளி சாதம் சாப்பிடவேண்டும் போல் தோன்றியது. நல்ல வேலை ஒரு பல்பொருள் அங்காடி கண்ணில் பட்டது உள்ளே சென்று பசிக்கு ஒரு சிப்ஸ் பாக்கெட் மற்றும் தண்ணீர் வாங்கிக்கொண்டு சரியான பாதையில் தான் இருக்கிறேன் என்று உறுதி செய்ய ஒரு தம்பதியை கேட்டேன். அதில் பாருங்க அந்த கணவன் சரியான பாதை என்று சொல்ல மனைவி இல்லையென்று முறைக்க நான் யாரை நம்புவது. ஆண்டவா என்னை பத்திரமாக ஸ்கஃபா வரை சேர்த்துவிடு. உண்டியலில் காசு போடுகிறேன் என்று வேண்டி நடந்தேன்.

நல்ல வெய்யிலில் நடக்கும்போது வியர்வை நனைந்த மேலாடையின் வழியே பக்கோடாவோ பூந்தியோ கொட்டி மேலாடைக்கும் வேர்த்த உடம்புக்கும் இடையில் இறங்கி நீங்கள் அதை ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தால் எவ்வளவு எரிச்சலாக இருக்கும். அதுவும் ஏற்றம் இறக்கமான மலைப்பாதையில் ஸ்கஃபா எங்கே என்றே தெரியாதபோது. எனக்கு சிப்ஸ் துண்டு மாட்டி எரிச்சலூட்டியது.

நான் சற்றே எடக்கு முடக்காக ஏதேதோ நினைத்துக்கொண்டே நடக்க கண்ணில் பட்டது ஸ்டேஷன் மாதிரியான கட்டிடம். சற்றே நெருங்கி கதவை திறந்தால் ஸ்டேஷனேதான். ஆனால் இருக்கும் நிலை பார்த்தால் அதன் மூலம் ரயில்கள் போகுமா என்ற சந்தேகம் வந்தது. மணி மதியம் 0330. அட்டவணையில் ஸ்கஃபா 0402 என்று காட்டியது. சீட்டு இயந்திரத்தில் கடன் அட்டையை பொருத்தி 0402க்கு கேட்டால் அடுத்த வண்டி 0442 க்கு என்று பயணசீட்டை துப்பியது. இந்த இத்தாலியர்கள் எதுவுமே சரியாய் பண்ணமாட்டார்களா?

Abruzzo
Abruzzo

ஒரு மணி நேரம் அந்த ஸ்டேஷனில் மின் விசிறி கூட இல்லாமல் ஒற்றை ஆளாக அமர்ந்திருந்தேன். கை பேசியைக்கூட நோண்ட முடியவில்லை. ட்ரெயின் வந்தது. 7 நிமிடத்தில் ஸ்கஃபா. நடந்தே வந்திருக்கலாம் என சிரித்துக்கொண்டே வெளியேறினால் ஸ்கஃபா பஸ்ஸேரியைவிட சிறிய ஊர். மணி மாலை 5.

ஸ்டேஷனை ஒட்டியே ஒரு டாஸ்மாக் கடை. உள்ளே சென்று கேட்டேன் பேருந்து எப்போது என்று. 7 மணிக்கு இங்கேதான் வரும் என்றார். உள்ளே சற்று அமர்ந்தபோது 2 ஆண்கள் அருகில் வந்து கரமணிக்கோ 20 யூரோ வர்றியா என்றார்கள். லேசாக குவார்ட்டர் போட்டிருப்பார்கள் போல. கூடவே அளவுக்கு அதிமாக மேக்-அப் 4 இன்ச் உயர காலணி, அதே அளவு உடையுடன் ஒரு பெண். இந்த குடியில் இவர்களை நம்பி மலைப்பாதையில் 22 கிமீ செல்வதைவிட கூவத்தில் நீந்தலாம். வேண்டாம் என்று சொல்லி அமர்ந்திருந்தேன். அந்த பெண் அக்கறையாக சிகரெட் நீட்டினார். நன்றி சொல்லி மறுத்தேன். “நீ நல்லவன் போல” என்று நக்கலாக சிரித்து சென்றுவிட்டார். இன்னும் 2 மணி நேரம். சற்றே வெளியே வந்தேன். வெட்டவெளியில் மூன்று ஆண்கள் மேல்சட்டை கூட இல்லாமல் இசைக்கருவிகளை இறக்கி பொருத்தி தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த வெயிலில் யாருக்கு கச்சேரி என்று நினைத்து (என் நிலைமையும் சேர்த்து) நகைத்துக்கொண்டேன். அதிலும் அந்த மொட்டை, பெரிய தொப்பை, கையில் கிடார் வைத்து ஒரே டியூனை திருப்பி திருப்பி வாசித்து எனக்கே மனப்பாடம் ஆகிவிட்டது. மற்றவனோ ஒலிவாங்கியிடம் வந்து நம்ம தமிழ்ல ஹலோ மைக் டெஸ்டிங் ஹலோ 1 2 3 சொல்லுகிற மாதிரி ஏதோ பேசினான். தம்பிங்களா கச்சேரி ஆரம்பிங்க. கிளம்புவதற்கு முன்னாள் இரண்டு பாட்டாவது கேட்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

மணி 6. ஒரு பேருந்து கரமணிக்கோ என்று போட்டு வந்தது. சரி இதுதான் போல என்று நிற்க என் அருகில் வந்து நிற்காமல் சென்றது. நான் கை அசைத்து பின்னால் ஓட சற்றே கடந்து நின்றது. ஓட்டுநர் இறங்கி புரியும்படி இது கரமணிக்கோவில் இருந்து வந்த வண்டி. போக வேண்டியது 7 மணிக்கு இங்கே வரும் என்று சொல்லி டாஸ்மாக் கடையினுள் சென்றுவிட்டார். ஒருவேளை ஓட்டுனருக்கு இலவசமோ நம்ம மாமண்டூர் மாதிரி?

Abruzzo
Abruzzo

அப்படி இப்படி நேரம் ஓட்ட ஒரு வழியாக 7 மணிக்கு பேருந்து சரியாக வந்தது. நின்றது. ஏறினேன். ஓட்டுனரிடம் பணத்தை நீட்டினேன். ஒரு மாதிரி பார்த்தார். என்னா லுக் வுட்ற, சீட்டு கொடு என்பதுபோல நான் கேட்க, கடவுளே அனுப்பிய தூதர் போல் ஒரு கன்னியாஸ்திரி (நிச்சயம் இந்தியர்) ஆங்கிலத்தில் "பயண சீட்டு" பேருந்தில் கிடைக்காது, முன்னமே ஏதாவது கடையில்தான் வாங்கியிருக்கவேண்டும் என்று சொன்னார்.

நான் கடவுளிடம் வேண்டுவது போல "மன்னிக்கவும், நான் வரக்கால்பட்டிலிருந்து வருகிறேன். சீட்டு எடுக்கவில்லை. எவ்வாறாவது உதவுங்கள். நான் கரமணிக்கோ சென்றே ஆகவேண்டும்" என்றேன். அவர் ஓட்டுனரிடம் சொல்லி அடுத்த கடையில் நிறுத்த ஓடி சென்று (மனதில் அவன் கிளப்பி போய்விடக்கூடாது ஆண்டவா) சீட்டை வாங்கி பேருந்தில் உட்கார்ந்த பிறகுதான் மூச்சு வந்தது. ஓட்டுனர் அந்த டாஸ்மாக் பெண் சொன்னமாதிரி "நீ நல்லவன் போல்" என்று கருணை காட்டினாரோ என்னவோ. இருக்கையில் அமர்ந்து அந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தேன். மலையாளியா என்றதற்கு தமிழ் என்று சொல்ல அப்படியா என்று என் க்ரகோவ்-ம்யூனிக்-ரோம்-பஸ்ஸேரி-ஸ்கஃபா-கரமணிக்கோ 16 மணி பயணத்தை 6 நிமிடத்தில் சொன்னேன். கேட்டுக்கொண்ட அவர் நான் அந்த நடனப்பெண்களை பார்த்தேன், பேசினேன், நன்றாக ஆடினார்கள் என்று சொல்லி வீட்டுக்கு வர சொல்லி அழைப்பு விடுத்தார்.

ஒருவழியாக காலை 0430 மணிக்கு க்ரகோவிலிருந்து கிளம்பி இரவு 0745க்கு கரமணிக்கோ வந்து சேர்ந்தேன். அன்னமரியா நல்ல பெண்மணி. காத்திருந்தார். ரிசோட்டோ மெய்க்கவில்லை. வேறு உணவும் கிடைக்கவில்லை. தேடி சென்றபோது "நீங்க சங்கர்தானே" என்று ஒரு குரல். வேறு ஒரு கன்னியாஸ்திரி. என் மகளை சந்திக்கநேர்ந்து பேச அவள் நான் வருவதை பற்றி சொல்ல அவரும் தமிழ் என்பதால் தெரிந்து கொண்டு என்னை அழைத்துச்சென்று உணவு கொடுத்து சிறு அன்பளிப்பும் கொடுத்து அனுப்பினார். சொந்த ஊர் திருப்பூர் பக்கமென்றும் கரமணிக்கோவில் 7 வருடமாக இருப்பதாகவும் பல நாள் கழித்து வேறு ஒரு தமிழரை பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். என் மகளின் நாட்டியம் முடிந்துபோயிருந்தது. தூங்கி மறுநாள் சீக்கிரமே எழுந்து கரமணிக்கோ-ஸ்கஃபா-பஸ்ஸேரி-ரோம் பயணித்து மகள் துபாய்க்கும் நான் க்ரகோவுக்கும் வந்து சேர்ந்தோம்.

பெயர்தான் ஒரேமாதிரி. ஆனால் நிச்சயமாக காரமணிகுப்பத்துக்கும் கரமணிக்கோவுக்கும் மிக மிக தூரம்.

Malta
Malta

மால்டா அனுபவம்

இரண்டாவது அனுபவம் சற்றே பரவாயில்லை ரகம். நவம்பர் 2015 மால்டா சென்றேன். பாதுகாப்பு கருதி, பொதுவாக நான் பெயர்ப்பெற்ற விடுதிகளிலேயே தங்குவேன். என் பெண்கள் தோழிகளுடன் பயணம் செய்யும்போது AIRBNB உபயோகிப்பார்கள். அட குழந்தைகள் போல நாமும் செய்யலாமே என்று மால்ட்டாவில் "Blue Angels Apartments" என்ற இடத்தை முன்பதிவு செய்தேன். விமான நிலையத்தில் இருந்தே எனக்கு நேரம் சரியில்லை. டாக்ஸி ஓட்டுநர் மனைவியிடம் தகராறு செய்திருக்கவேண்டும். அதற்கு மேல் ஆங்கிலமும் தகராறு. எல்லாவற்றிற்கும் மேல் "Blue Angels" எங்கோயோ ஒரு சின்ன சந்தில் இருந்தது. ஓட்டுநர் மிகவும் சோர்வடைந்து வேறு வழியில்லாமல் குத்து மதிப்பாக "Blue Angels" பகுதியில் என்னை இறக்கிவிட்டு ஓடிவிட்டார். நான் விமான நிலையத்தில் "முன்பணம்" கட்டியதால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. விடுதியை கைபேசியில் அழைத்து ஒரு வழியாக இடத்தை அடைந்தேன்.

அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மாதிரி இருந்தது. இருண்ட சாலை. வரவேற்பில் ஒரு நடு வயது ரஷ்ய பெண். பக்கத்தில் ஆஜானுபாகுவாக ஒரு ரஷ்ய ஆண், ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் வில்லன் போல வாயெல்லாம் தங்கப்பல் கட்டிக்கொண்டு. கூட தாத்தா பாட்டி பேரன் என்று ஒரு குடும்பமே உட்கார்ந்திருந்தது. எனக்கு ஒரு வித இனம் புரியாத அச்சம் வந்தது. இவனுங்க மூஞ்சே சரியில்லையே. வந்தாச்சு. சரி பணம் கட்டலாமென்று கடன்அட்டையை எடுத்தேன். அவர்களோ பணமாக கொடுங்கள் என்று கேட்டார்கள். நான் சற்றே எரிச்சலாகி இப்போது டாலர் இல்லை. வேண்டுமானால் நாளை காலை எடுத்து தருகிறேன் என்றேன். ஒத்துக்கொண்டார்கள். அறைக்கு சென்றேன். அறை எந்தவித வசதியில்லாமல் கடுப்படித்தது. நான் உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலே அழைப்பு மணி அடித்தது. திறந்தால் ஒரு இளம்பெண். தான் விடுதி சிப்பந்தியென்றும், எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்கவந்தேன் என்று கூறினார். மேலும் வேறு ஏதாவது தேவையெனில் அவரை அணுகலாம் என்று கூறி சென்றுவிட்டார். எனக்கு எதுவும் சரியாக படவில்லை.

Malta
Malta

நல்ல வேலை நான் முழு பணமும் தரவில்லை. இரவு நேரமாயினும் என் பையை அறையில் வைத்துவிட்டு வரும் வழியில் பார்த்த பெரிய விடுதிக்கு சென்று அறை இருப்பதை உறுதி செய்து மீதி இரவுகளுக்கு பதிவு செய்தேன். கூடவே பணமும் எடுத்தேன். நாளை முதல் வேலையாக விடுதி மாறவேண்டும். ஏன் உடனே மாறவேண்டியதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். யாருக்கு தெரியும் அந்த இரவு நேரத்தில் வந்த உடனே காலி செய்தால் அந்த வில்லன் என்ன செய்வான் என்று. இரவு எனக்கு தூக்கமே இல்லை. கையில் விலை உயர்ந்த கேமரா, கடவு சீட்டு, கடன் அட்டை, பணம் எல்லாம். அங்கேயே அடிச்சு போட்டு இதெல்லாம் பிடுங்கிக்கொண்டு போனால் கேட்பதற்கு நாதியில்லை. ஒருவழியாக 8 மணி நேரத்தை ஓட்டி காலையில் சென்று, மன்னிக்கவும் நான் விடுதி மாறுகிறேன், என்றேன். நல்ல வேலை அந்த வில்லன் ஹீரோ மாதிரி ஒத்துக்கொண்டு ஒரு இரவுக்கு மட்டும் பணம் வாங்கி அனுப்பி வைத்தான். நான்தான் தேவையில்லாமல் பயந்தேனா? இல்லை அறிவாக பிழைத்தேனா?

ஆனால் மால்ட்டா? மிக அழகான சுற்றுலா இடம். மனைவிக்கு வாக்கு தந்துள்ளேன் நிச்சயம் இருவரும் செல்வோம் என்று. எப்போது? கொரோன முடிவு செய்வார். அடுத்த வாரம், நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்த ஈரான் (டெஹ்ரான், ஷிராஸ் மற்றும் இஸ்பஹான்). ஈரான் என்றவுடன் உடனே வரும் எண்ணம் என்ன? தயவு செய்து கமெண்ட்ஸ்லேயோ இல்லை என் மின் அஞ்சலுக்கோ (shankarven@gmail.com)/Whatsappலோ சொல்லுங்கள். (+971506558126). பார்க்கலாம், அடுத்த வாரம்.

-சங்கர் வெங்கடேசன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு