Published:Updated:

அமைதியோ அமைதி ஓமான், ஆச்சர்யப்பட வைத்த ஜோர்டான்! - கிராமத்தானின் பயணம் 13

என் ஓமானி நண்பர்கள் சொல்லுவார்கள் அவர்களுக்கு துபாயின் வேகம் தாக்குப்பிடிக்க முடியாதென்று. இப்ப நம்ம பாண்டிச்சேரி காரர்களுக்கு மும்பை ரொம்ப வேகம். அதே மாதிரி ஓமானிகளுக்கு துபாய்...

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-12 படிக்காதவர்கள் படிக்கலாம்)

சென்ற வாரம் நான் இந்தியாவை பற்றி சொன்ன கருத்துக்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. நான் சொன்னது போல் ஓமான், ஜோர்டான் மற்றும் பாகிஸ்தான் பற்றி இந்த வாரம்.

ஓமான்

நான் முதல் முதல் ஓமான் நாட்டை முகர்ந்தது என் 13-14 வயதில். என்னது ஓமானை முகர்ந்தியா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த வயதில் ஓமான் என்றால் அது ஓமானிலிருந்து ஊருக்கு வரும் ராஜா அண்ணனும் (பெரியம்மா மகன்) அவர் பெட்டியில் கொண்டு வரும் விதவிதமான அலங்கார பொருட்களும் துணிமணிகளும் தின்பண்டங்களும்தான். என் அம்மாவிடம் அவருக்கு ஒரு தனி பாசம். இந்தியா வரும்தோறும் வீட்டுக்கு வருவார். அம்மா அவரை வரவேற்பார்கள். நாங்கள் அவர் பெட்டியை வரவேற்போம். வந்து நலம் விசாரித்து சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமரும்போது, “அந்த பெட்டியை இப்போ திறக்கலாம்" என்பார்.

Oman
Oman

பெரிய பெட்டி. இந்த காலம் போல சக்கரம் வைத்த பெட்டிகள் அந்த காலத்தில் இல்லை. நினைத்து பார்த்தால் சக்கரம் கண்டுபிடித்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகுதான் பெட்டிகளை உபாயகப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த பெட்டிகளுக்கு சக்கரம் வைக்கலாம் என்று கண்டுபிடிக்க இன்னும் 100-150 ஆண்டுகள் ஆகியது. எங்கோயோ சிஸ்டம் சரியில்லை போல தோன்றுகிறது. இப்போதைக்கு கண்ணெல்லாம் பெட்டி மேல்தான் இருக்க வேண்டும்.

நாங்கள் சிரமத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் பெட்டியை தூக்கி வந்து நட்ட நடுவாக வைத்து சுற்றி உட்கார ஒரு கை தேர்ந்த மந்திரவாதி போல சாவியை எடுத்து அந்த பெட்டியை திறப்பார், அண்ணன். ஏதோ ஓமான் நாட்டையே அந்த பெட்டியில் கொண்டுவந்த மாதிரி நாங்கள் நாக்கை தொங்கப்போட்டு காத்திருக்க, இது உனக்கு, இது அவனுக்கு, இது அம்மாவுக்கு, இது சித்தப்பாவுக்கு என்று சொத்து பிரிப்பார். அப்போதுதான் அந்த சோப்பும் துணியும் வாசனை திரவியங்களும் கலந்த ஒரு நறுமணம் வரும். நாங்கள், சிறுவர்கள் அப்போது, அதற்கு "ஓமான்" வாசனை (Oman Smell) என்று பெயர் வைத்திருந்தோம்.

எனக்கு CAMAY Soap, Charlie/Brut நறுமண திரவியங்கள் அறிமுகமானது அப்போதுதான். நாங்கள் CAMAY போட்டு குளித்து கையை தூக்கி முகர்ந்து, அப்பா என்ன வாசனை என்று பல நாள் குதூகளித்ததுண்டு. எங்கள் கூட்டு குடும்பம் பெரியது. 10 CAMAY கட்டி 3 மாசம் கூட தாங்காது. பின் வழக்கம்போல் தேய்ந்த செங்கல் போல இருக்கும் Lifebuoyதான். அது கூட நல்ல வாசனைதான்.

Oman shop
Oman shop

அப்பாவுக்கு Brut ம் Charlie யும். அவர் அதை விசுக் விசுக் என்று தினமும் அடித்துக்கொள்வார். அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார் “நீங்கள் எல்லாம் நல்லா படித்து "abroad" (வெளிநாடு) போய் நிறைய சம்பாரிக்கணும்பா” என்று. ஆண்டவன் சிலருக்கு ஏதோ ஒரு விஷயத்தில் குறை வைப்பார். அவருடைய பிள்ளைகள் "abroad" போவதற்குள் அவர் மறைந்து விட்டார். ஈடு செய்யமுடியாத இழப்பு. வாழ்க்கையின் நிதர்சனம், எல்லோரும் ஒருநாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி ஓமானுக்கு வருவோம். ஓமானை எடுத்துக்கொண்டால், ஐக்கிய அரபு நாடுகளை ஒட்டிய நாடு. மிகவும் நட்புறவு கொண்டுள்ள நாடும் கூட. உண்மையை சொன்னால், தற்கால ஓமான் எந்த நாட்டுடனும் விரோதம் பாராட்டும் நாடு கிடையாது. மக்கள் தொகை 50 லட்சம் தான் (Approx.). மிக அமைதியான நாடு. மக்களும். அவ்வளவு அமைதி, அவ்வளவு பொறுமை.

என் ஓமானி நண்பர்கள் சொல்லுவார்கள் அவர்களுக்கு துபாயின் வேகம் தாக்குப்பிடிக்க முடியாதென்று. இப்ப நம்ம பாண்டிச்சேரி காரர்களுக்கு மும்பை ரொம்ப வேகம். அதே மாதிரி ஓமானிகளுக்கு துபாய். அந்த அளவுக்கு மாறுபட்டவை. ஓமான் நல்ல வளர்ந்த நாடுதான். நல்ல கட்டமைப்பு மற்றும் தொலை தொடர்பு வசதி கொண்ட நாடு. இருப்பினும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை (DNA) இருக்குமில்லையா? ஓமானின் தனித்தன்மை எங்கும் அமைதி எதிலும் அமைதி.

Muscat
Muscat

நான் ஓமானுக்கு ஏறக்குறைய 20 முறை சென்று வந்திருப்பேன். 4-5 முறை குடும்பத்துடன் விடுமுறைக்காக. மற்ற சமயங்களில் வேலை நிமித்தம். வேலை நிமித்தம் செல்லும்போதெல்லாம், கல்ஃபான் (ஓமான் நாட்டவர்) தான் என் ஓட்டுநர். முதல் சந்திப்பில் நண்பராகி பின்னர் செல்லும்போதெல்லாம் அழைத்தால் வந்துவிடுவார். இந்த வளைகுடா (Gulf) நாடுகளுக்குள்ளேயே நிறைய வித்தியாசங்கள். உதாரணத்துக்கு ஓமானில் டாக்ஸி ஓட்டும் தொழிலில் பெரும்பாலும் ஓமானிகள்தான். ஆனால், துபாயில் எமிராட்டிகள் டாக்ஸி ஓட்டும் தொழிலில் எனக்கு தெரிந்து இல்லை. கத்தாரிகள் கூட. குவைத்தில் விமான நிலைய டாக்சிகள் மட்டும் குவைத்திகள் கையில். ஓமானில் டாக்ஸி ஓட்டுவது மட்டுமில்லை. மேலும் பலப்பல தொழில்களில் ஓமானிகளுக்கு முன்னுரிமை. காரணம் இதுதான்.

ஓமானின் மக்கள் தொகையில் 35-40% வெளிநாட்டவர். ஆனால் படித்த ஓமானிகளுக்கு வேலைகள் வேண்டும். ஓமானின் முக்கிய தொழிலான எண்ணெய் துறையை மட்டுமே நம்பியது அந்த நாட்டுக்கு இப்போது சில சவால்களை எழுப்பியுள்ளது. வேலைவாய்ப்பு அதில் பிரதானமானது. இருப்பினும் என் பார்வையில் ஓமான் இன்றும் ஒரு நல்ல வாழ்க்கை தரமுள்ள நாடுபோலத்தான் தோன்றுகிறது.

ஓமானில் நான் பார்த்த இடங்கள் மஸ்கட், ஸலாலா மற்றும் முஸ்ஸாண்டம். ஒன்றொன்றும் வித்தியசமானவை. இப்போது பார்க்கலாம்.

Dolphin watching, Kasab.
Dolphin watching, Kasab.

துபாயில் இருந்து மஸ்கட் செல்ல விமான சேவை உண்டு. நீங்கள் 30 நிமிடம் பறக்க விமான நிலையம் 2 மணி நேரம் முன்னே சென்று காத்திருப்பதை விட, காலை சிற்றுண்டி கராமா (Karama, Dubai) சரவணபவனிலோ ஆர்யாஸிலோ (பொங்கல் வடை) முடித்து எரிபொருள் நிரப்பி, வாகன சக்கரம் நல்ல நிலையில் உள்ளதா என்று உறுதிப்படுத்தி வாகனத்தில் ஏறி அமர்ந்து ஒரு அழுத்து அழுத்தினால் 4-5 மணி நேரத்தில் மஸ்கட் நகரின் மத்தியில் மதிய உணவு சாப்பிடலாம். 450 கிமீ. சாலைகள் அவ்வளவு சுத்தம். குடியுரிமை சோதனை மிக சுலபம். துபாய் வாசிகள் சுலபமாக சென்று வரலாம். ஆனால் துணைக்கு யாராவது வேண்டும். இல்லையெனில் நீங்கள் தூங்கி விட வாய்ப்பு உண்டு. (நான் நிச்சயமாக தூங்கிவிடுவேன்). ஏனெனில் மைல் கணக்கில் இரு பக்கங்களிலும் காய்ந்த (dry) நிலப்பரப்புதான். போக்குவரத்து நிறுத்தங்களோ சாலை சமிக்கைகளோ மிக சொற்பம், நீங்கள் மஸ்கட் வரும்வரை.

ஓமானின் தலைநகரம் மஸ்கட். ஆனால் மஸ்கட்டில் துபாய் அபுதாபி போல வானுயர்ந்த கட்டடங்கள் நிறைய இல்லை. மேலும் வீடுகள் எல்லாம் மிக அழகாக நேர்த்தியாக வெள்ளை, பாலைவன நிறம் அல்லது மற்ற மென்மையான நிறங்களில் தான். பசுமையும் சற்று கூடவே. மஸ்கட் சற்றே மலைகளால் சூழப்பட்ட நகரம். ஆனால் மலைகளில் சற்றும் பசுமை கிடையாது. இருந்தும் அந்த சாலைகளில் பயணிக்கும்போது நன்றாகவே இருக்கும்.

Road along the seashore, Muscat
Road along the seashore, Muscat

மஸ்கட்டில் வணிக வளாகங்கள் உண்டு. எனக்கு துபாயிலேயே அவை சற்றே "போகா இடங்கள்" (No Go Areas). வீட்டிற்கு மற்ற நாட்டிலிருந்து வரும் விருந்தினரை கூட்டிப்போவதோடு சரி. மஸ்கட்டில் புராதன கடை வீதிகள், கோவில் என சுற்றி வந்தோம். பிறகு கடற்கரை ஓரம் மிக அழகான இடங்கள் பல உண்டு. இந்திய உணவு தாராளமாக கிடைக்கும். ஓமான் மிகவும் சமத்துவத்தனம் (reasonable equal freedom) உள்ள ஊர். கோவில்கள் (ஒரு கோவில் நம் ஊர் போல ஆனால் சிறிய கோபுரம் வைத்து) மக்கள் தாராளமாக போய் வர உள்ளன. அந்த விஷயத்தில் துபாயிலும் வழிபாட்டிற்கு நல்ல சுதந்திரம் உள்ளது.

ஓமானுக்கும் இந்தியாவிற்குமான உறவு சில நூற்றாண்டுகள் பழையது. வியாபாரிகள் நம்மூரில் இருந்து மசாலா பொருட்கள் எடுத்து சென்று ஓமானிலிருந்து வாசனை பொருட்களை கொண்டு வந்து வியாபாரம் தழைத்ததாக சொல்கிறார்கள். ஓமானின் மிகவும் அறியப்பெற்ற இந்திய குடும்பம் (இப்போது ஓமானி) கிம்ஜி குடும்பம். பெரிய வாணிப சாம்ராஜ்யம் இவரிடம். சில தலைமுறையாக ஓமானில். ஓமானின் தலைவர் சுல்தான் (பலம் பொருந்தியவர் என்று அர்த்தம்) என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில் மறைந்த சுல்தான் காபூஸ் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவர். இவர் இந்தியாவில், புனேவில் மேற்கல்வி பயின்றவர். அப்போது அவருக்கு ஆசிரியர் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஷங்கர் தயாள் ஷர்மா. சுல்தான் காபூஸின் அப்பா இந்தியாவின் மாயோ கல்லூரியில் படித்தவர். இந்தியாவுக்கு தனி மரியாதை உண்டு. இப்படி பல விதங்களில் இந்தியாவும் ஓமானும் நெருங்கிய நாடுகள். எனக்கு ராஜா அண்ணன் மூலம் இன்னும் நெருக்கம்.

Salalah
Salalah

அடுத்து நாங்கள் சென்ற இடம் ஸலாலா. ஓமான் பற்றி பேசும்போது ஸலாலா பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஓமானின் மூன்றாவது பெரிய நகரம். மஸ்கட்டில் இருந்து 1200 கிமீ தூரம். நாங்கள் துபாய் - ஸலாலா விமானம் மூலம் சென்றோம். ஸலாலா செல்ல மிக சிறந்த நேரம் ஜூன் - செப் தான். அராபிக்கில் கரீஃப் (Autumn) என்று சொல்லுவார்கள். ஆனால் Autumn என்றால் இலையுதிர்காலம். இதற்கு எதிராக இந்த மாதங்களில்தான் நல்ல மழை பெய்து அந்த மலைப்பாங்கான நிலப்பரப்பே பசுமை போர்த்தி அங்கும் இங்கும் சிறிய ஓடைகள், சிறிய நீர் வீழ்ச்சிகள் என அவ்வளவு அழகாக காட்சி அளிக்கும்.

இந்த காரணத்தினால் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். ஸலாலாவில் நல்ல தரமான விடுதிகள் உள்ளன. அந்த விடுதி மூலம், ஒரு நல்ல வாகனம் ஏற்பாடு செய்து சுற்றி வரலாம். கண்ணுக்கு குளிர்ச்சி மற்றும் ஓய்வெடுக்க மிக சிறந்த இடம் ஸலாலா. ஊருக்குள்ளேயே நல்ல காய்கறிகள், பழங்கள் அப்போதைக்கப்போது, தெருவோர கடைகளில் கிடைக்கும். ஸலாலாவில் பார்க்க வேண்டிய மற்றுமொரு இடம், முஃஹஸெயில் கடற்கரை. கடற்கரை என்பது மணலுக்கு பதிலாக மலை முகடுகள் தான். அந்த விளிம்பில் அமர்ந்து கடலின் பிரம்மாண்டத்தை பார்த்து வியக்கலாம். இப்படி மிக நிதானமாக நான்கு நாட்கள் சுற்றிவிட்டு துபாய் வந்து சேர்ந்தோம்.

Salalah
Salalah

ஓமானின் மற்றுமொரு பிரபலமான இடம், முஸ்ஸாண்டம். முக்கியமாக மேற்கத்திய நாட்டவர்கள் மிகவும் விரும்பும் இடம் இது. காரணம் இந்த இடத்தின் நில அமைப்பு நார்வே நாட்டின் பெயர்பெற்ற Fjords போல இருப்பதாக சொல்வார்கள். Fjords என்றால் மலைகளின் நடுவில் கடலின் நீழ்ச்சியாக குறுகலான நீர்நிலை. மன்னிக்கவும். முடிந்தவரை விவரித்திருக்கிறேன். Fjord க்காண தமிழ் வார்த்தை இல்லை. நான் Oslofjord பார்த்திருக்கிறேன். நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இருந்து கடலில் 2 மணி நேரம் போல பார்க்கலாம். அதே மாதிரி கசாப் (முஸ்ஸாண்டம்) என்ற இடத்தில் 2 மணி நேர படகு பயணம் மூலம் இந்த நீர் நிலைகளை வட்டமிடலாம். சுற்றி மலைகள். இந்த படகு பயணத்தின் போது காட்சிகள் மட்டுமில்லை, நம் படகின் கூடவே குழுவாக நம்மை தொடரும் டால்பின்களும் நம்மை பரவசத்துக்குள்ளாக்கும். மிக அழகான காட்சி. அந்த டால்பின்களுக்கு என்ன ஒரு மூளை. ஏதோ குழந்தைகள் நம்முடன் விளையாடுவது போல, தண்ணீரில் மூழ்கி மறைந்து பின் தோன்றி என்று படகின் கூடவே தொடரும்.

இந்த முஸ்ஸாண்டம் ஓமானை சேர்ந்த இடமென்றாலும், உண்மையில் இது ஒரு தீபகற்பம் (ராஸ் அல் காய்மா, UAE, உடன் துளி ஒட்டிக்கொண்டிருக்கும்). துபாயில் இருந்து வாகனம் மூலம் 200 கிமீ தான். நிச்சயம் பார்க்கவேண்டிய இடம், குறிப்பாக நீங்கள் ஐக்கிய அரபி எமிரேட்ஸில் வாழுபவர் என்றால்.

மொத்தமாக ஓமான் ஒரு அழகான அமைதியான நாடு. ஓமானில் இன்னும் சில இடங்கள் பார்க்க ஆசை. முக்கியமாக நிஸ்வா, மற்றும் ஓமானின் கிராமப்புறங்கள். வாய்ப்பு வரட்டும், பார்க்கலாம். ஆகவே, என் இனிய தமிழ் மக்களே, நீங்கள் பயணம் செய்வதை விரும்புவராக இருந்தால் மஸ்கட் (துபாயும் சேர்த்து) ஒரு முறை சென்று வாருங்கள். எனக்கும் சொல்லுங்கள். முடிந்தால் சந்திக்கலாம்.

Mughsail beach, Salalah, Oman
Mughsail beach, Salalah, Oman

ஜோர்டான்

மேற்கு ஆசியாவில் உள்ளது. இருந்தாலும், பெரும்பாலும் மத்திய கிழக்கு (Middle East) நாடுகளில் ஒன்றாகவே பார்க்கபடுகிறது. அதிலும் மத்திய கிழக்கு விவகாரங்களில் முக்கிய பங்காற்றும் நாடு. இந்த நாட்டை ஆள்பவர் ராஜாதான் (King). தற்போதைய ராஜா அப்துல்லா II. ஜோர்டான் மக்கள் தொகை 1 கோடிக்கு கிட்டே. அம்மான்தான் தலைநகரம். வேலை நிமித்தம் பல முறை அம்மானுக்கு சென்று வந்துள்ளேன். ஒரு முறை குடும்பத்தோடு சென்று அம்மான், ஜெராஷ், பெட்ரா, டெட் ஸீ (Dead Sea) ஒரு சுற்று அடித்துவந்தோம்.

இன்றைய அம்மான் நவீன நகரம். IKEA, Carrefour, KFC, McDonalds, Malls போன்ற எல்லா நவீன அம்சங்களும் உண்டு. ஆனாலும் அம்மான் ஒரு சரித்திரம் தோய்ந்த நகரமும் கூட. நிலப்பரப்பு நிறைய மலைகளும் குன்றுகளும் நிறைந்தது. நான் ஒவ்வொரு முறை விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு செல்லும் போதும் அந்த நிலப்பரப்பை (landscape) இரு கண்களையும் நன்கு திறந்து அனுபவிக்க மறக்கமாட்டேன். மிக பரந்த திறந்தவெளி (Valley) அதில் ஆலிவ் மரங்கள், சிறு குன்றுகள், விளை நிலங்கள், சாலை ஓரம் அப்போதுதான் அறுவடை செய்யப்பட்ட காய் கறிகள் பழங்கள் எல்லாம் மனதை மயக்கும்.

நான் ஒருமாதிரி ஆள். அதாவது ஒவ்வொரு ஊரிலும் என்னை பொருத்தி ஒன்றி, இங்கேயே வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்ப்பேன். சந்தோஷமாகத்தான் இருக்கும். மிக சில நாடுகளே விதிவிலக்கு. அந்த மாதிரிதான் அம்மானிலும் என்னை பொருத்தி கற்பனை செய்வேன். அப்ப துபாய்? சொர்கம். நான் அடிக்கடி என் மனைவியிடம் சொல்வேன் நாம் நிறைய நாடுகளில் 2-3 வருடங்கள் வாழ்ந்து அந்த மண்ணின் கலாச்சாரம், உணவு, மொழி எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று. ஆனால் முடிகிற காரியம் இல்லை.

Amman, Jordan
Amman, Jordan

சரித்திரம் தோய்ந்த நகரம் என்றேன் அல்லவா. ஒரு கணக்கின்படி அம்மான் ஏறக்குறைய 10000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மக்கள் குடியேறிய நகரம். அகழ்வாராச்சிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இன்று நீங்கள் பார்க்க கூடிய சிதிலங்கள் எல்லாம் ரோமன் பேரரசின் சின்னங்கள். ஜெராஷ் நகரில் இன்றளவும் பாதுகாக்கப்பட்ட ரோமன் வட்ட வடிவ நாடக அரங்கங்கள் (Amphitheater), ரோமன் சிதிலங்கள் உள்ளன. ஏறக்குறைய 1500 வருடங்களுக்கு முந்தைய நகரங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள் அந்தக்கால தெருக்கள், குளியல் அறைகள், கால்வாய்கள், சந்தை சதுக்கம் எல்லாம் எந்த அளவுக்கு இருந்தன என்று. அம்மானில் இன்னொரு இடம் citadel எனும் கோட்டை. இதன் வயது சரியாக கணிக்கப்படவில்லை. 1000 வருடங்களுக்கு மேல் இருக்கலாம்.

வழக்கம்போல் இங்கேயும் வாகனம் ஏற்பாடு செய்துகொண்டு ஒரே ஓட்டுநர், ஒரே வாகனம் மூலம், அம்மான் மற்றும் ஜெராஷ் பார்த்துவிட்டு, பெட்ரா செல்ல தயாரானோம். அம்மான் - பெட்ரா 230 கிமீ. சாலைகள் சற்று சுமார்தான். போக்குவரத்தும் குறைவு. வழியெங்கும் விளைநிலங்கள். முக்கியமாக ஆலிவ் மரங்கள். மற்றும் நிறைய "பெடோயின்ஸ்" என்னும் பழங்குடி நாடோடிகள் வாழும் குடில்கள். ஆடு, கழுதை, அழுக்கு துணிகள்தான் இவர்களின் சொத்து. மழையின் பாதையில் ஊர் விட்டு ஊர் நடந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள், இன்றும். ஆனால் இவர்கள் மக்கள் தொகை மிக குறைவே. அப்பா, இந்த உலகத்தில்தான் எத்தனை மாதிரி நிலப்பரப்புகள், மக்கள், வாழ்க்கை முறைகள், மொழிகள், கலாச்சாரங்கள். வியந்துகொண்டே பெட்ரா அடைந்தோம். அன்று இரவு ஓய்வெடுத்து மறுநாள் காலையிலேயே கிளம்பி பெட்ரா பார்க்க சென்றோம்.

Roman amphitheater
Roman amphitheater

நல்ல வெய்யில் அதே சமயம் குளிர். எதிர் பாராவிதமாக என் இளைய மகளுக்கு சற்றே உடம்பு முடியாமல் இருந்தது. ஆனாலும், அவர் மற்றவர் திட்டங்களை கெடுக்க விரும்பாமல் ஈடு கொடுத்து வந்தார். (ரொம்பவே முடியாமல்தான் வந்ததாக எல்லாம் முடிந்த பிறகு சொன்னார்). அவர் முடியவில்லை என்று சொல்லியிருந்தால் யாருமே வெளியே சென்றிருக்க மாட்டோம். அந்த கண்கொள்ளா பெட்ரா காட்சிகளையும் தவற விட்டிருப்போம்.

முக்கியமான இடம், அல்-கஸான (Al - Kazana, The Treasury, in English) என்ற வழிபாட்டு தளம். நபெத்தேன் (பழங்குடியினர்) மக்கள் 1900 வருடங்களுக்கு முன் கட்டிய சின்னம். செம்மண் மலையில் குடைந்து கட்டப்பட்ட இடம். உலக சுற்றுலா சின்னங்களில் மிகவும் பிரபலமானது. இந்த இடத்தை அடையவே சில கிலோமீட்டர் இரு உயர்ந்த மலைகளுக்கு நடுவில் மிக குறுகிய பாதையில் செல்ல வேண்டும். இந்த பாதையே பூகம்பத்தினால் இயற்கை உருவாக்கிய பாதையாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். மலை பிளந்தபிறகு பல்லாயிரம் ஆண்டுகளில் காற்று தன் வேலையை செய்து அந்த பிளந்த பாறைகளில் இயற்கையாய் பல வடிவங்களை செதுக்கியுள்ளது. பார்க்கவே வண்ணமயமாக அழகாக இருக்கும். (அரிசோனா மாநில ஆண்டிலோப் கண்யன் (Antelope Canyon) போல இருக்கும். ஆனால் அந்த அளவுக்கு மூச்சு முட்டாது.

ஆண்டிலோப் கண்யன் குறுகிய பாதைகள் கொஞ்சம் கஷ்டமப்பா). இப்படிபட்ட பாதையில் நடந்து செல்லும்போது திடீரென்று ஒரு இடத்தில இந்த பிரம்மாண்ட செம்மண் அல்-கஸான தெரியவரும். நிச்சயம் பிரமித்துபோவீர்கள். இந்த இடம்தான் சுற்றலாவாசிகளுக்கு மிக முக்கியமான இடம். பார்க்க, புகைப்படம் எடுக்க.

The Treasury, Petra
The Treasury, Petra

சுற்றியுள்ள செம்மண் மலைகளிலெல்லாம் ஏதோ புறா கூண்டு போல துளைகள். என்னவென்று சுற்றுலா வழிகாட்டியிடம் கேட்க, அந்த பொந்துகள் எல்லாம் நபெத்தேன் மக்களின் மலை இல்லங்கள் என்று விளக்கினார். அருகில் அழைத்து சென்று காட்டினார். அவர்களின் அடுப்புகள், சுவர் சித்திரங்கள் சில இன்னும் உள்ளன. Oh my god.... 1900 வருடத்துக்கு முன், எந்த அடிப்படை வசதியில்லாமல் இந்த குகை வீடுகளில் வசித்து இந்த அல்-கஸான மாதிரியான இடத்தை எப்படி கட்டியிருப்பார்கள்? (நம்ம ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை எப்படி கட்டினாரோ மாதிரி வியப்புதான்).

பெட்ராவிற்கு மட்டும் 2 நாட்கள் வேண்டும். மூன்றாவது நாள் அம்மான் திரும்பினோம். வழியில் dead - sea என்ற உப்பு ஏரியை பார்த்தோம். இந்த ஏரியில் மக்கள் குளித்துக்கொண்டு இருந்தார்கள். கேட்டால் இந்த உப்பு தண்ணி மருத்துவ குணம் உள்ளதாம். மேலும் உப்பின் அதிகத்தால் மக்கள் மூழ்காமல் தண்ணியில் மிதக்க மட்டுமே செய்வார்களாம். இதில் நாம் இறங்குவோமா என்ன? நல்ல தண்ணியில் இறங்கவே நாலு முறை யோசிக்கும் குடும்பம் இந்த உப்பு தண்ணியில கால் வைக்குமா? கை மட்டும் வைத்து இரண்டு சொட்டு எடுத்து நாக்கில் வைத்து, தாங்க முடியவில்லை.

அம்மான், ஜெராஷ், பெட்ரா, உப்பு ஏரி எல்லாம் பார்த்து துபாய் திரும்பினோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அம்மான் மீண்டும் ஒரு முறை செல்லலாம்தான். ஆனால் அதற்க்கு முன் பார்க்காத ஊர்கள் நிறைய உள்ளன, இந்தியாவிலேயே. பார்ப்போம்.

Dead sea
Dead sea

இஸ்லாமாபாத், பாக்கிஸ்தான்

இலவச இணைப்பு என்பதால் சற்றே சிறிதாய் முடித்துவிடுகிறேன். நமக்கும் அண்டை நாட்டுக்கும் உள்ள பகை ஜென்ம பகை என்பது உலகத்துக்கே தெரியும். ஆனால் தனிப்பட்ட முறையில் இந்தியரும் பாக்கிஸ்தானியரும் நண்பர்களாய் இருப்பது சர்வ சாதாரணம், மத்திய கிழக்கு நாடுகளில். எனக்கும் சில பாகிஸ்தானிய நண்பர்கள் உண்டு. பாக்கிஸ்தானை பற்றிய அபிப்ராயங்கள் "ஓரளவுக்கு" மாறியதற்கு இவர்களின் நட்பு ஒரு காரணம். இரண்டாவது காரணம் என் பாக்கிஸ்தான் பயணம்.

பாக்கிஸ்தான் செல்ல ஒரு வாய்ப்பு வந்தது. 2006 டிசம்பரில். விடுவேனா? ஆனால் விசா கிடைக்கவேண்டுமே? கிடைத்தது சில வார காப்பிற்கு பிறகு. விசா நிபந்தனை "இஸ்லாமாபாதுக்கு" மட்டும்தான், வேறு எங்கும் செல்லக்கூடாதென்று. விமான நிலையத்தில் இறங்கி வெளியில் வரும்வரை கொஞ்சம் பதட்டம்தான். சிறிய விமான நிலையம். கூட்டமோ அதிகம். சற்றே ஒழுங்கில்லாமல் அங்கும் இங்கும் என்று பரபரப்பான சூழ்நிலை. ஒரு வழியாக அதிகாரி ஒன்றும் கேட்காமல் என் முகத்தை (சுமார் மூஞ்சிதான்) ஒரு பார்வை பார்த்து சப்பக் என்று ஸ்டாம்ப் குத்தினார். வெளியே நிறுவன ஓட்டுநர் காத்திருந்தார்.

 Islamabad
Islamabad

அங்கே இங்கே செல்லாமல் நேராக விடுதிக்கு கூட்டி சென்றார். மாரியொட் (Marriot), இஸ்லாமாபாத். பெரிய விடுதி. உள்ளே செல்லுமுன் ஏகப்பட்ட சோதனைகள், மோப்ப நாய்கள் உட்பட. சிப்பந்திகள் மிக பணிவாக வரவேற்றார்கள். இந்தியன் என்பதால் சிறப்பு விசாரிப்புகள். ஐந்து இரவுகள் தங்கினேன். முதல் விஷயம், உணவு. காலை சிற்றுண்டிக்கே அத்தனை விதம் விதமாக ரொட்டிகள், பரோட்டாக்கள், இறைச்சி, இறைச்சி மேலும் இறைச்சி, இனிப்பு வகைகள், பழங்கள். அப்புறம் டீ, லஸ்ஸி என அளவில்லாமல் மயக்குவார்கள். சில நாள்தானே என்று கட்டுப்பாடுகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு நன்கு சாப்பிட்டு அலுவலகம் செல்வேன். அலுவலக நண்பர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய உணவகத்துக்கு அழைத்து சென்றார். ஒரு முறை மோனல் (I think) என்ற பிரபலமான மலை உச்சி உணவகத்திற்கு அழைத்து சென்றார்.

உணவுக்கு அடுத்து நான் கவனித்த அடுத்த விஷயம், எப்படி பாக்கிஸ்தானில் மற்ற நாடுகள் போலவே சமூகம் பல அடுக்குகள் கொண்டது என்று. அலுவலகம் செல்லும் வழியில் நிறைய சாதாரண மக்கள் அன்றாட தேவைகளுக்கு ஓடி உழைப்பதை பார்க்க முடியும். விடுதிக்கு வந்து உணவருந்த கீழே வரும்போது மேல்தட்டு மக்கள் விலை உயர்ந்த உடைகள், அணிகள் அணிந்து உயர் ரக வாகனங்களில் வந்திறங்கி, மது அருந்தி மேல்தட்டு மக்களுடன் இனிமையாக பொழுதை கழிப்பதை பார்க்கும்போது இது பாக்கிஸ்தான்தானா என்று தோன்றும்.

என்னதான் நடந்தாலும், சில மக்கள் நல்ல வசதியான வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வதென்று தெரிந்து வைத்திருப்பார்கள். நிறைய நீங்களே பார்த்திருப்பீர்கள். எந்த நாடும் விதிவிலக்கல்ல.

Faisal mosque
Faisal mosque

இஸ்லாமாபாத், பாக்கிஸ்தானின் தலைநகரம். மிகவும் திட்டமிட்டு அழகாக வடிவமைக்கப்பட்ட நகரம். பச்சை நிறமே என்று பாடலாம். ஆனால் உண்மையான பாகிஸ்தானை பார்க்கவேண்டி என் நண்பனிடம் கேட்டேன். அதற்கென்ன பிண்டி (Rawalpindi) செல்லலாம், விசா கட்டுப்பாடு பெரிய விஷயமில்லை என்று அழைத்து சென்றார். ரிஸ்கெல்லாம் ரஸ்க், மறுபடியும். பிண்டியும் இஸ்லாமாபாதும் இரட்டை நகரங்கள். (ஹைதராபாத் செகந்திராபாத் மாதிரி). பிண்டி பழைய நகரம்.

எல்லாம், எங்கும் நெரிசல். சற்றே அழுக்கான நகரம். ராஜா பஜார் என்ற இடத்துக்கு சென்று பாகிஸ்தானிய உடைகள் வாங்கினேன். ஒரு மணி நேரம் நின்று நிதானமாக அந்த ஊரின் ஒழுங்கற்ற போக்குவரத்து, வாகன சத்தம், கடை கன்னிக்கு குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள், பேரம் பேசும் குடும்ப தலைவிகள், தெருவோர வியாபாரிகள் என கவனித்து எங்கு செல்லினும் மக்கள் நம்மைபோலத்தான் என்று யாருமே இதுவரை கண்டுபிடிக்காத ஒன்றை கண்டுபிடித்த சந்தோஷத்துடன் விடுதிக்கு திரும்பினேன். அடுத்த நாள் நன்றி சொல்லி துபாய்.

Rawalpindi
Rawalpindi
Michelle Ahmad

இது நடந்தது 2006, டிசம்பர். 2008 செப்டெம்பரில் யாரோ இந்த இஸ்லாமாபாத் மாரியொட் மீது வாகனத்தை மோதி வெடிக்கச்செய்து அதில் 50-60 பேர் இறந்தார்கள். இறந்தவர்களில் நல்ல வசதியான வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வதென்று தெரிந்த மக்களும், இந்த மாசம் சம்பளம் வந்தால் என் பெண்ணுக்கு அவள் கேட்ட பொம்மை வாங்கிதரவேண்டும் என மனக்கணக்கிட்ட துப்புரவு தொழிலாளியும், பாதுகாப்புக்காக நாள் முழுவதும் நாயுடன் நிற்கும் காவலாளியும், வெல்கம் டு பாக்கிஸ்தான் என்று என்னை வரவேற்ற அழகிய பாக்கிஸ்தானிய யுவதியும் நிச்சயம் அடங்கும். காரணமே இல்லாமல் நிறைய நடக்கும், வாழ்க்கையில். நான் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இல்லாததற்கு காரணம் தேடமாட்டேன். நன்றிகள்தான். எது எப்படியிருப்பினும் வாழ்க்கை ஓடிக்கொண்டேயிருக்கிறது. வாழ்பவர்கள்தான் ஒருநாள் மறைந்து போகிறார்கள்.

நிறைய சுற்றிவிட்டேன். கொஞ்சம் ஹோம் சிக். அடுத்த வாரம் மீண்டும் வரக்கால்பட்டு செல்லப்போகிறேன். வாருங்கள். நல்ல ஊர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு