Published:Updated:

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா! - கிராமத்தானின் பயணம் 14

ஒரு அமைதியான ஞாயிற்று கிழமை. மாரியம்மன் கோவில் தெரு எப்போதுமே வெறிச்சோடி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாளில் நானும் என் சித்தப்பா மகனும் தெருவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தோம்.

வாழ்க்கை ஒரு அழகான பயணம். குறிப்பாக நீங்கள் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்த்தால். நம்மில் பலபேர் இளமை பருவத்தை மகிழ்ச்சியுடன் இன்றும் அசைபோடுவோம்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. மழைக்காலங்களில் அப்படி ஒரு அடைமழை பெய்யும். பள்ளி விடுமுறை என்றால், உபயோகப்படுத்திய நோட்டு புத்தகத்தின் தாளை கிழித்து லாவகமாக கத்தி கப்பல் செய்து தெரு ஓரமாக ஓடும் மழைநீரில் விடுவோம். அது ஆடி ஆடி செல்வதை பார்க்கும்போது அப்படி ஒரு இன்பம். சமயங்களில் அந்த மழை நாட்களில் பள்ளியில் குடை இல்லாமல் மாட்டிக்கொண்டால் அம்மா தாத்தாவை அனுப்புவார்கள், குடையுடன். தாத்தா சற்றே பழமைவாதி. வேஷ்டி பாடி தான் அணிவார். காரணம் தெரியாது ஆனால் ஆண்கள் அணியும் அந்த மல் மல் துணியால் ஆன உடைக்கு பாடி என்றுதான் பெயர். அவர் பள்ளிக்கு வந்து எங்களுக்காக நிற்பது எங்களுக்கு சற்றே கூச்சத்தை உண்டு பண்ணும்.

Representational image
Representational image

என் கல்வியின் துவக்கம் வரக்கால்பட்டு பஞ்சாயத் யூனியன் துவக்கப்பள்ளியில்தான். நாட்டு ஓடு வேயப்பட்ட வீடுதான் பள்ளி. தரையில்தான் அமரவேண்டும். அப்படி தரையில் அமர்ந்து பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரியும் ஒரு உயரமான ஆசிரியை மட்டும் நினைவில் உள்ளார். அப்புறம் தாயாரம்மா என்று ஒரு பொது உதவியாளர். தாயாரம்மா எப்போதும் நீல பார்டர் வெள்ளை புடைவை. கண்ணாடி. அவர்தான் கிராமத்தில் எல்லோருக்கும் அம்மை ஊசி போடுவார். அப்புறம் ஒரு சக மாணவன் அவன் பென்சிலை நான் திருடியதாக சொல்லி (சத்தியமா இல்லை) தினமும் 1 பைசா வீதம் ஐந்து நாள் கொண்டுவர மிரட்டினான். நான் அப்போது டம்மி பீசு. (இப்போது பரவாயில்லை) பயந்து போய் அம்மாவிடம் சொல்ல அவர் தாத்தாவை அனுப்பி நாட்டாமை செய்ய பிரச்னை சுமூகமாக முடிந்தது.

ஆறாவது வகுப்பு முதல் நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் ஹை ஸ்கூல். பஸ்ஸில் சென்று வரவேண்டும். பஸ்ஸின் நடத்துனர்கள் என் பால்ய ஹீரோக்கள். பள்ளியில் நல்ல நண்பர்கள். சிலரோடு இன்றும் தொடர்பில். வளர வளர படிப்பின்மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கூடவே என் தோற்றத்திலும், பள்ளியில் குறிப்பிட்ட சில பெண்கள் மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஒருவர் கூட என்னை ஏறெடுத்து பார்க்கவில்லை. பெருத்த நஷ்டம் அவர்களுக்கு.

ஒவ்வொரு நாளும் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தோட்டத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு (எடுத்து) குளிப்போம். குளிர் நாட்களில் தாத்தா கொதிகலன் (boiler) வேலைகளை கவனித்துக்கொள்வார். பல வருஷம் அந்த கொதிகலன் வீட்டில் இருந்தது. குளித்து, தயாராகி மதிய உணவு டப்பாவில் எடுத்துக்கொண்டு புத்தக கட்டை அப்போதைய ட்ரெண்ட் ஆன வண்ண எலாஸ்டிக் பேண்ட் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு கிளம்புவோம். பெரிய Grundig வானொலி பெட்டியில் "உன்னை சொல்லாத நாளில்லை” இல்லை “தட்டுங்கள் திறக்கப்படும்” ஒலிக்கும். அப்பா சற்றே முன்னரே கிளம்பி அலுவலகம் சென்று விடுவார். அம்மாவுக்கு இத்தனை பேரையும் கிளப்பி அனுப்ப வேண்டும். அக்காவுக்கு தலை சீவி பல வண்ண டிசம்பர் பூவை தொடுத்து தோளில் விழும் அளவுக்கு வைக்கவேண்டும். அப்பாவுக்கு ஒரு முறை பிள்ளைகளுக்கு ஒரு முறை என்று வாசல் கதவில் நின்று நாங்கள் மாரியம்மன் கோவில் முனையில் திரும்பும்வரை எங்கள் அழகை ரசித்து கை அசைத்து அனுப்பி வைப்பார்.

மாணவர்கள்
மாணவர்கள்

பின் அப்பாவுக்கு சாப்பாடு கட்டி அனுப்பவேண்டும். ஐந்தடுக்கு கேரியர். சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என அன்றைய சமையலை சுடச்சுட அந்த அடுக்கில் இட்டு தேக்கரண்டி போன்ற ஒன்றால் பூட்ட வேண்டும். வாழை இலை, தோட்டத்திலிருந்து. முந்தைய நாள் தந்தியில் ஒரு சிறு துண்டை கிழித்து, இலையை சுற்றி வைத்து மெல்லிய நூலால் கட்டி பைக்குள் வைக்கவேண்டும். இது இலை கிழியாமல் இருக்க ஒரு பாதுகாப்பு அம்சம். அப்புறம் 1130 போல பூங்காவனம் வருவார். பூங்காவனம் இன்றைய ஸ்விக்கியின் (Swiggy) முன்னோடி. ஒரு பரந்த கூடை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீழே வைக்கோல் ஒரு 2 இஞ்சுக்கு பரப்பப்பட்டிருக்கும். அதிகபட்சம் ஐந்தோ ஆறோ இந்த மாதிரி அடுக்குகளை சேகரித்து சர்க்கரை ஆலையில் வேலை செய்யும் ஆண்களுக்கு சேர்க்கவேண்டும். அவர்கள் உண்டு முடித்த பிறகு அந்த அடுக்குகளை அவரவர் வீட்டில் சேர்க்கவேண்டும். பூங்காவனத்துக்கு கூடுதல் வேலையாக நம் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்க வேண்டும். (ஏன் “பத்து” பாத்திரம் என்று சொல்கிறோம்?) என் கணிப்பில் அப்போது பூங்காவனத்துக்கு ஒரு ஐம்பது வயது இருந்திருக்கும். குடும்பம் இருந்த மாதிரி தெரியவில்லை. நடுத்தர உயரம். பூனை கண்கள். சுருட்டை முடி. பூனை கத்துவது போல் குரல். தேய்ந்த பற்கள். சம்பளம் எவ்வளவென்று தெரியவில்லை. ஆனால் அவர் ஓரளவு திருப்தியுடன் வேலை செய்த மாதிரிதான் தெரிந்தது. நல்ல பெண்மணி. அவருடைய ஸ்விக்கி சிநேகிதி குப்பம்மா. இருவரும் எப்போதும் இணைந்தே செல்லுவார்கள். வருவார்கள். சர்க்கரை ஆலை ஒரு நாலு கிமீ தூரம். காலில் செருப்பு இல்லாமல் புகை வண்டி பாதையின் ஓரம் நடந்து சென்று வருவார்கள்.

Representational image
Representational image

ஒரு அமைதியான ஞாயிற்று கிழமை. மாரியம்மன் கோவில் தெரு எப்போதுமே வெறிச்சோடி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாளில் நானும் என் சித்தப்பா மகனும் தெருவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தோம். கார்க் பால் என்று சொல்லுவோம். நல்ல கணம். அன்றைக்கென்று என் சித்தப்பா மகன் ஒரு நல்ல பந்தை வீச, நான் வெறி வந்தது போல் விளாசினேன். பந்து பறந்து செல்ல ஆரம்பித்தபோதுதான் பூங்காவனம் மற்ற தெருவில் இருந்து திரும்பி மாரியம்மன் கோவில் தெருவில் தோன்றினார். இது ஒரு அறிவிக்கப்படாத நிகழ்வு. எனக்கு எந்த முன் தகவலும் இல்லை. பந்தை அடித்த பிறகுதான் அவர் என் பார்வைக்கு வந்தார். அடித்த பந்தை நிறுத்துவது IPL வீரர்களாலேயே முடியாது. பந்து நல்ல வேகத்தில் பறந்து சென்று பூங்காவனம்தான் நான் அடிக்க வேண்டிய இலக்கு போல் அவர் மூக்கின் நட்ட நடுவில் போய் இறங்கியது.

அடுத்த நிமிடம் பூங்காவனம் சாலையில் அப்படியே பின்பக்கம் சாய்ந்தார். பூனை கத்தி நீங்கள் கேட்டிருப்பீர்கள். பூனை அழுது? நானும் கேட்டதில்லை அன்றுவரை. ஆனால் அன்று பூங்காவனம் போட்ட கதறல், ஒரு நன்கு வளர்ந்த பூனை கூச்சல் இட்டு அழுதது போல இருந்தது. ஓடி சென்று அவரை தூக்குவதற்குள் மூக்கிலிருந்து ரத்தம் கணிசமாக வெளியாகியிருந்ததது. அதை பார்த்த எனக்கு ஒன்றும் ஓடவில்லை. அவரை தூக்கி கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்துச்சென்றேன். பூங்காவனம் பாதி மயக்கத்தில். “கிரிக்கெட் பந்து அடித்து பெண் மரணம். சிறுவன் கைது” என்று தந்தியில் வந்து விடுமோ என்று எண்ணுமளவுக்கு பயந்தேன். நல்ல வேளை அம்மா தண்ணி அளித்து, துணியை வைத்து ரத்தத்தை கட்டுப்படுத்தி, பூங்காவனத்தை கண் விழிக்க வைத்தார். பின் சிகிச்சை பெற்று சில நாட்களில் பணிக்கு திரும்பினார். ஆனால் அவர் மூக்கின் வடிவமே மாறி வித்தியாசமாகி போனது.

Representational image
Representational image

இந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் திருந்தினோமா என்றால் இல்லை. ஓணான் கழி, கோட்டிப்புல், சில்லு, கோலிக்குண்டு, பம்பரம் என பருவத்துக்கேற்ப, தெருதான் எங்கள் விளையாட்டுத்திடல். அதுவும் கடைக்கு சென்று புது பம்பரம் வாங்கும் முன், வண்ணம், மரத்தின் தரம், சுற்றளவு எல்லாம் பார்த்து கையில் வைத்து அது நமக்கு ஏற்ற பம்பரம்தானா என்று வாங்குவது ரொம்ப முக்கியம். பின்னர் அதை ஆசாரியிடம் கொடுத்து ஆணி போட்டு அதை சீர் செய்து விளையாட தயார் பண்ணுவது இன்னும் முக்கியம். இவ்வளவு மெனக்கெட்டு தயார் செய்த பம்பரம் மானாவாரியாக உக்கு (பம்பரத்தை மற்ற பம்பரத்தின் ஆணி கொண்டு குத்துவது) வாங்கும்போது வெறுத்து போய் விடும். சில நாட்களில் பம்பரம் போய், கோலிக்குண்டு. இப்படி பருவம் மாற மாற விளையாட்டும் மாறும்.

ஒரு ஆறு மணி போல அம்மாவின் அழைப்பு வரும். வீட்டுக்கு வந்து கால் கழுவி, கோவிலுக்கு சென்று சிரத்தையாக எல்லா கடவுள்களையும் வணங்கி அய்யரிடம் விபூதி வாங்கி சிறுது நெற்றியில், சிறுது நாக்கில் மீதம் கோவில் தூணில் உள்ள குழியில் வைத்து வீட்டுக்கு வந்து படித்து சாப்பிட்டு தூங்க வேண்டும். குளிர் காலம் என்றால் சித்தப்பாக்களின் பழைய சட்டைகள் 2-3 மேலே அணிந்து சுற்றி வருவோம். பின் பெரியவர்கள் பாய் விரிப்பார்கள். வரிசையாக எல்லோரும் படுப்போம். சரியாக 5 மணிக்கு அப்பா எழுப்பிவிடுவார். அந்த குளிரில், கோவிலிலிருந்து வரும் "ஓங்கி உலகளந்த" நமக்கு இன்னும் ஒரு 3 மணி தூங்கலாம்போல ரொம்பவே ஏக்கமாக இருக்கும். ஆனால் அப்பா சற்று கண்டிப்பானவர். வேறு வழியில்லாமல் எழுந்து தூங்கி வழிந்து படிப்போம்.

Representational image
Representational image

ஞாயிற்று கிழமைகளில் அப்பா வீட்டில் இருப்பார். முடிவெட்டிக்கொள்வது, விறகு வாங்குவது, சைக்கிள் துடைப்பது என்று மாறி மாறி ஏதாவது ஒன்று நடக்கும். நாவிதர் ஒரு துருப்பிடித்த பெட்டியுடன் வெற்றுடம்போடு வருவார். திண்ணையில் உட்கார்ந்து பெட்டியை திறந்து ஒரு கைப்பிடி வைத்த வெட்டும் கருவி, ஒரு பிளாஸ்டிக் சீப்பு, கத்தரிக்கோல், ஒரு சவரக்கத்தி, பிரஷ், கத்தியை தீட்ட ஒரு கல், ரசம் போன ஒரு சிறிய கண்ணாடி என ஒவ்வொன்றாக எடுத்து வைப்பார். ஒவ்வொருவராக தலையை கொடுப்போம். அவரின் கையிலிருந்து வரும் ஷேவிங் சோப்பின் வாசனை, அந்த கத்தரியின் இடையில் முடி வெட்டுப்படும்போது வரும் சத்தம், அந்த அமைதியான சூழ்நிலை அப்படியே ஒரு அசாத்திய தூக்கத்தில் தள்ளும். நாள் பூரா முடி வெட்டிக்கொள்ளலாம் போல தோணும். ஆனால் இன்னும் அண்ணன், சித்தப்பா என வரிசை கட்டி நிற்பார்கள்.

சில நாள் விறகு வண்டி வரும். பெரிய தராசு. அதில் பெரிய எடை கல். வியாபாரி ஒரு காமெடி பேர்வழி. தலையில் முடி சுத்தம். வாயில் பல் சுத்தம். பொக்கை வாயால் பயங்கரமாக சிரித்து குழந்தைகளை சந்தோஷப்படுத்துவார். அம்மா விலை பேசி வாங்கி முடித்த அடுத்த நிமிடம் விறகு பிளக்கும் ஆள் வருவார். அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. அவரிடம் இருந்து நான் கேட்ட ஒரே சத்தம் ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் தான், ஒவ்வொரு முறை அந்த கோடாலி மேலிருந்து கீழே விறகின் நடுவில் இறங்கும்போது. அது முடிந்தவுடன், பிள்ளைகள் எல்லோரும் கையை மடக்கி நீட்ட பெரியவர் யாராவது ஒருவர் பிளந்த விறகுகளை அடுக்க, எடுத்துச்சென்று விறகுக்காக உள்ள அறையில் சேர்க்க வேண்டும்.

வாழை இலை விருந்து
வாழை இலை விருந்து
Balasubramanian.C

மதிய உணவு சற்றே சிறப்பாக இருக்கும். அம்மா பார்த்து பார்த்து சமைத்த உணவை பரிமாற அப்பா அதை ஆசையுடன் பார்க்க சந்தோஷம் அளவுக்கு அதிகம். உணவுக்கு பின் அப்பா தூக்கம். நாங்கள் விளையாட்டு. சமயத்தில் நான் குணசேகர் வீட்டுக்கு போய்விடுவேன். அவர் அப்போதே சுழற்சி முறை நூலகம் (Circulating Library) நடத்தி வந்தார். எல்லா பத்திரிகைகளும் சந்தாதாரர்களுக்கு முன்பே நான் படித்துவிடுவேன். மணியனின் இதயம் பேசுகிறது, சுஜாதாவின் தொடர்கள், ஜெ மற்றும் மா சேவின் ஓவியங்கள் எல்லாம் எனக்கு பிடித்த அம்சங்கள். சாவி (Tamil Magazine of yesteryears) புத்தகத்தின் அட்டையில் நடிகை ஷோபனாவின் அட்டைப்படம் வந்தபோது, அவனிடம் சொல்லி, எல்லோரும் படித்த பிறகு அட்டையை வாங்கி வைத்துக்கெண்டேன்.

விடுமுறை நாட்களில் சமயத்தில் புடவைகார் (காரர் இல்லை. புடவைக்கார், பால்கார், வண்டிக்கார் என கார் தான்) வருவார். சில நேரம் வளையல்கார் இரண்டு தோள்களிலும் பெரிய காக்கி பைகளை தூக்கி வீடு வீடாக செல்வார். பெண்கள் வளையல் வாங்கும் திறன், அதை கொஞ்சமும் முகம் சுளிக்காமல் சமாளிக்கும் வளையல்கார் இவர்களெல்லாம் நமக்கு பாடங்கள். அதேமாதிரிதான் அந்த சாமான்கார். ஒரு பெரிய கூடை மாதிரி ஒன்றில் நிறைய பாத்திரங்களை வலை மாதிரி ஒன்றால் கட்டி வீடு வீடாக எடுத்து செல்வார். அந்த ஈயம் பூசுகிற கும்பல் ஏதோ ஒரு இடத்தில குழி தோண்டி ஒரு கனமான துணி பையை வைத்து புஸ் புஸ்சென்று காத்து செலுத்தி நெருப்பை வரவைத்து ஏதோ ஒரு வெள்ளை கலவையை பாத்திரத்தின் உள் பக்கம் பூசுவார்கள். நல்ல வாசனை வரும். கத்தி சாணை பிடிக்கும் ஆள், ஒற்றை காலால் அந்த சக்கரத்தை சுற்றி கையால் சாணை பிடிப்பது பார்க்க நன்றாக இருக்கும். பறக்கும் தீப்பொறியை முகம் சுளிக்காமல் உடலில் வாங்கிக்கொள்வது நம் தைரியத்தின் அடையாளம்.

Representational image
Representational image

விடுமுறை நாட்களில் அப்பாவுக்கு இன்னொரு முக்கிய வேலை வண்ணானை வரச்சொல்லி துணி கொடுப்பது. அப்பா எப்போதும் வெள்ளைதான். ஆனால் வண்ணானின் வெளுக்கும் திறன் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போனது. வயதும் ஆகிக்கொண்டே போனது. எப்போதும் அப்பாவுக்கு வாய் திறக்காமல் சேவகம் பண்ணிய வண்ணான் ஒரு நாள் வேறு வழியின்றி அப்பாவிடம் குரலுயர்த்த, அன்றே அப்பா வேறு வண்ணானுக்கு மாறினார். ஊரில் இரண்டே வண்ணான் குடும்பங்கள்தான். பக்கத்து பக்கத்து வீடுகள். ஆனால் பேச்சு வார்த்தை கிடையாது. பங்காளிகள் அல்லவா.

அம்மாவுக்கு பிள்ளைகளை நல்லவர்களாக வளர்த்து நல்ல படிப்பை கொடுக்கவேண்டும், ஒன்றில் ஒன்று சோடை போக கூடாது என்று. எந்த அம்மாவுக்கும் இதுதான் முதலாய குறிக்கோள், இல்லையா? இரண்டாவது, பிள்ளைகள் நன்றாக நோய் நொடி இல்லாமல் வளரவேண்டும். மூன்றாவது முடிந்தவரை நல்ல விஷயங்களை பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும்.

முதல் குறிக்கோளுக்காக மிகவும் மெனக்கெட்டார். ஓரளவுக்கு நாங்களும் ஒத்துழைத்தோம். இரண்டாவது விஷயத்துக்காகவும் மிகவும் பாடுபட்டார். வாரம் சில முறை சத்தான உணவுகளான கீரை, காய்கறிகள் எல்லாம், அப்பாவின் மேற்பார்வையில் பரிமாறப்படும். அம்மாவை ஏய்த்துவிடுவோம். அப்பா அருகில் கப்சிப். முடியாமல் சாப்பிடுவோம். பல நாள் அசைவம் பிரச்சினையே இல்லை. ஓரிருநாள் இந்த கீரை கொடுமை இருக்கிறதே. கஷ்டம், அப்போது. இப்போது என் மனைவியும் நானும் வாரத்தில் எல்லா நாளும் கீரை. மனைவி சொந்தத்தில் உள்ள குழந்தைகளுக்கும் எடுத்து செல்வார். மனைவியை பார்த்தாலே அந்த குட்டி பெண்கள் கீரை வந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளுமளவுக்கு பிரபலம். காலத்தின் கோலம். மூன்றாவது விஷயம் நல்ல துணிமணிகள். 40-45 வருடத்துக்கு முன்பே எல்லா குழந்தைகளையும் பாண்டிச்சேரி அழைத்து சென்று நான்வானிஸில் துணி வாங்கி ஜாஃபர்ஸில் தைக்க கொடுப்பார். இரண்டாவது கதாநாயகன் மாதிரி இருக்கும் அந்த ஹிந்திக்கார டைலர் சற்றே ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி நமக்கு கிராமத்தான் உணர்வை அதிகப்படுத்துவார். இதில்லாமல் "ட்ரயல்" பார்க்க நடுவில் கூப்பிட்டு எங்களுக்கு திருப்தி என்ற பிறகுதான் தைத்து முடிப்பார்.

Representational image
Representational image

இந்த பாண்டிச்சேரி படலம் பண்டிகைகளுக்கு மட்டும்தான். இன்னொரு முக்கிய சந்தர்ப்பம் வரும், புது துணி வாங்க. பள்ளி புது வருடம் துவங்கும் நேரம். நல்ல தீனி போட்டதால் வருடா வருடம் சீருடைகள் புதிதாக தைக்க வேண்டும். மறுசுழற்சி ஓரளவுக்கு கை கொடுக்கும். நம்பர் 1 உடைகள் நம்பர் 2க்கு என்று. இருந்தும் நிறைய தேவைகள் இருக்கும். பொதுவாக துணி தைக்க நாம் தையல்காரரிடம் செல்வோம். ஆனால், அம்மா தையல்காரரை தையல் இயந்திரத்தோடு வீட்டில் கேம்ப் போட வைப்பார். ஒரு ரெண்டு வாரம் அவர் இயந்திரம் நம் வீட்டில் டகடக என்று ஓடும். அவருக்கு நேரத்துக்கு நேரம் தேநீர், சாப்பாடு எல்லாம் வந்து சேரும், பீடி தவிர. அதற்கு மட்டும் வைத்தி (தையல்காரர்) வெளியே சென்றே ஆகவேண்டும். வைத்தி கழுவுகிற மீனில் நழுவுகிற ரகம். அவருடைய சால்ஜாப்புகள், அம்மா அவரை கையாளும் விதம் எல்லாம் ஒரு நல்ல ட்ராமா. ஒன்னும் பிரச்சினை இல்லம்மா, நேரத்திற்கு கொடுத்துவிடுவேன் என்று பலமுறை உத்தரவாதம் கொடுத்தும், பள்ளி நாளை என்றால், முந்திய இரவு தான் காஜா எடுத்துக்கொண்டிருப்பார்.

தைக்கும் வேலை ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம், புத்தகங்களை அட்டை போட, பைண்ட் செய்ய நிபுணர் வருவார். பக்கத்துக்கு ஊர் மாமாதான். எல்லாமே சுயமாக செய்வார். (All in-house). சட்டி வைத்து கோந்து தயார் செய்து அட்டைகளை நேர்த்தியாக வெட்டி, தைத்து, வண்ண காகிதங்கள் மூலம் மூடி ஆரம்பம் முதல் முடிவு வரை அவ்வளவு அழகாக செய்து முடிப்பார். எதிர்ப்பார்ப்பு ஒன்றும் இல்லை. அப்பழுக்கற்ற அன்பு மட்டும்தான். என்ன நல்ல மக்கள். இப்போதும் உள்ளார்கள்.

Representational image
Representational image

பள்ளி ஆரம்பித்த சில நாட்களில் கொலு காலம். எதிர் வீடு பெரியம்மா எங்களுக்கு முன்னோட்டம் காட்டுவார்கள். மணலை கொண்டு சிறிய மலை. தானியங்களை தூவி ஒரு குட்டி காடு. அதில் ஆடு மாடு பொம்மைகள். அப்புறம் தவறாமல் அந்த தகர படகு. உள்ளே எண்ணை ஊற்றி திரியை கொளுத்த சிறிது நேரத்தில் அது சுற்றி சுற்றி வரும், ஓரு வாய் அகன்ற பாத்திரதுக்குள்ளேயே. என்ன ஒரு தொழில் நுட்பம். இந்த முன்னோட்டம் ஒரு சில பேருக்குத்தான் வாய்க்கும். எங்கள் உதவியை முன்வந்து கொடுப்போம். அதற்காக அதிக சுண்டல் எதிர்பார்த்தால் தப்பு நம் மேல்தான். சமத்துவம் முக்கியம் பிள்ளைகளே. எல்லோருக்கும் ஒரு, இல்லை இல்லை அரை கைப்பிடிதான்.

கொலு நடக்கும்போதே வீட்டில் ஒரு நாள் பெரிய பழுப்பு நிற பார்சல் வந்திருக்கும். அப்பா சிறப்பு சலுகையில், அவருக்கு தெரிந்த வியாபாரிகள் (network, எல்லாம் network) மூலம் தருவிப்பார். ஆனால் உடனே பிரிக்க கூடாது. நாள் குறித்து பிரித்து அவரவர் பங்கு மஞ்சள் முத்து சில்க் ஹவுஸ் துணி பையில் அவரவர்களிடம் ஒப்படைக்கப்படும். தினம் தினம் ஒரு “மாதிரி சோதனை” (Sample Check) செய்து தீபாவளிக்கு காத்திருப்போம்.

தீபாவளி ஆரம்பித்து இரண்டே நாளில் அத்தனையும் புஸ்வானம். அப்புறம் எதிர் வீட்டு சித்தப்பா நூல் கட்டி ரயில் விடுவதை கை தட்டி ரசிப்போம். அந்த ரயில் விடுவதில் நிபுணர் அவர். எல்லாம் முடிந்து அடுத்த நாள் வெடிக்க தவறிய பட்டாசுகளை குவித்து கொளுத்தி மூட்டம் போடுவோம். அதுதான் தீபாவளி முடிந்ததுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு. சில நாட்களிலியேயே கார்த்திகை திருவிழா. இப்ப பாருங்க, நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். குழந்தைகள் எங்கள் மீது ஏற்கனவே சுமை அதிகம். இதன் நடுவில் பட்டாசு வெடிக்க வேண்டும், மூட்டம் போட வேண்டும். இதோ, கார்த்திகைக்கு பந்தம் (fireball) செய்யவேண்டும்.

Representational image
Representational image

நல்ல கவை (holder) வேண்டும். வலுவான கயிறு வேண்டும். எப்படி இத்தனை பொறுப்புகளையும் செவ்வனே செய்தோம் அந்த சின்ன வயதில். அந்த காத்தி பந்தத்தை நெருப்பு வைத்து லகுவாக சுழற்ற ஆரம்பித்து அப்புறம் இரண்டாவது ஆளை உள்ளும் வெளியும் போகசெய்து கடைசியில் பலவித வடிவங்களை அந்த நெருப்பு பந்தால் வரைந்து, நீங்களே சொல்லுங்கள், எவ்வளவு பொறுப்புகள். உடனே பொங்கல் வரும். மாட்டை குளிப்பாட்டி கொம்புக்கு வண்ணம் அடித்து பொங்கலோ பொங்கலோ என்று துரத்தி கரி நாளுக்கு (காணும் பொங்கலுக்கு) கால் காலாய் விழுந்து ஒரு கணிசமான அளவு செல்வம் சேர்பதற்குள் எவ்வளவு வேலை.

மாரியம்மன் கோவில் கார்த்திகை தீபம் சற்றே பிரசித்தம். இல்லையென்றால் பாண்டி மாமி விழுப்புரம் அத்தை எல்லாம் தங்கள் பெண் கிளிகளை கூட்டிக்கொண்டு வருவானேன். அந்த கிளிகள் அந்த பண்டிகை உடைகளில் இன்னும் கூடுதல் வனப்பாக இருப்பார்கள். இனம் புரியாத உணர்வுகள். புரிய ஆரம்பிக்கும்போது கிளிகள் பறந்து போய்விடும்.

எத்தனை நாள் சும்மா அனுபவிப்பது. வயசு ஆக ஆக பொறுப்புகள் அதிகமானது. மாட்டுக்கு வைக்கோல் போடுவது, தண்ணி காட்டுவது கடைக்கு தாத்தாவுடன் சென்று பொருள்களை தூக்கி வருவது என. அடுத்த முக்கியமான கட்டம், என்ன படிப்பது எங்கே படிப்பது. விடை கிடைத்தது, அப்பா சொன்ன விடைகள். அப்பா சொன்னா தப்பாகுமா? B.Com பின் CA. காரணம் அப்பாவின் அலுவலகத்தில் அவர் சந்தித்த CA க்கள். அவர் மொழியில் “எல்லாம் சின்ன பசங்கப்பா. என்ன புத்திசாலித்தனம். ஆனால் நான் எல்லாவற்றையும் சமாளித்து அவர்களை திருப்தி படுத்திட்டேன். அப்புறம் சேஷாத்திரி கிட்ட பேசினேன். எல்லா விவரமும் கொடுத்தார்" என்று அடிக்கடி இதைப்பற்றிய பேசுவார். பூங்காவனம் கேஷுவல் விடுமுறையில் செல்லும்போது, நான் வீட்டிலிருக்கும்பட்சத்தில் அப்பாவுக்கு நான்தான் ஸ்விக்கி வேலை பார்ப்பேன். மிதிவண்டியில் கைலி கட்டிக்கொண்டு அவர் அலுவலகத்துக்கு செல்வேன். பெருமையாக கூட்டிச்செல்வார், அவருடைய மேலதிகாரிகளிடம். அப்புறம் CA க்களிடமும். இப்படிதான் நான் CA ஆனது. அண்ணன் மருத்துவர் ஆனதற்கு என்ன வழி முறைகள் கைப்பற்றப்பட்டன என்று தெரியவில்லை. அவரவர் படிப்புக்கு ஏற்றமாதிரி வழி முறைகள். (Flexibility and adaptability in practice).

Representational image
Representational image

அந்த நாளும் வந்தது. சென்னைக்கு பெட்டி கட்டினேன். பெரிய தகர ட்ரங்குபெட்டி. பெரியதாக என் பெயர் எழுதி ஒட்டி, எல்லா அத்தியாவசிய பொருள்களும் திணித்து ஒரு நாள் மயிலாப்பூர் வந்து சேர்ந்தேன். முதல் சென்னை பயணம். வயது 16. பள்ளியில் பொய்யாக வயதை கூட்டி சொல்லிய காரணத்தினால் சீக்கிரமே கல்லூரிக்கு வந்தேன்.

16 வருஷம் என்பது நீண்ட காலம். எல்லாவற்றையும் ஒரு 6-7 பக்கங்களில் என்பது சவால். இன்னும் மாசி மகம், தீ மிதி விழா, ஆடி கூழ், காவடி, ஆற்று திருவிழா, மார்கழி கோலம் என எண்ணற்ற நினைவுகளை நீளம் கருதி சேர்க்கவில்லை. அடுத்து 30 வருட துபாய் ஒரு 6-7 பக்கங்களில். பிறகு "abroad" செல்லலாம். (UK / Ireland).

-சங்கர் வெங்கடேசன் ( shankarven@gmail.com )

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு