Published:Updated:

அப்பாவை அப்படி விட்டிருக்கக் கூடாது! - முதல் துபாய் பயண நினைவுகள் - கிராமத்தானின் பயணம் 15

ஒரு உண்மை சொல்லவேண்டும். நான் ஒன்றும் அவ்வளவு நல்ல பையனில்லை.

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-14 படிக்காதவர்கள் படிக்கலாம்)

ட்ரங்குபெட்டியுடன் சென்னை வந்தேன் என்று போன வாரம் சொன்னேன். வரக்கால்பட்டில் இருந்து பிள்ளைகள் சென்னை சென்று வருவது என்பது ஓரளவுக்கு பழகியிருந்தது பெற்றோருக்கு. பெரிய அண்ணன் சென்னை மருத்துவக்கல்லூரிக்கு சென்றது எங்கள் கல்லூரி வாழ்க்கையின் நல்ல தொடக்கம். அம்மா அடிக்கடி அண்ணனிடம் சொல்வார்கள் "முன்னேரு போற வழிதான் பின்னேரு" என்பது மாதிரி ஒரு பழமொழி. அதன் அர்த்தம் என்னவென்றால் அண்ணனாகிய நீதான் உன் தம்பிகள் எப்படி வரவேண்டும் வழிகாட்ட வேண்டும் என்று. அண்ணன் நல்ல புத்திசாலி. அப்போதே கணினி பற்றி ஓரளவுக்கு அறிந்தவர். புகைப்படக்கருவி மற்றும் கடிகாரங்களை பழுது பார்ப்பார். பெற்றோர் விரும்பியபடி நன்றாக படித்து மருத்துவமும் முடித்தார்.

Chennai central
Chennai central

அடுத்த அண்ணனும் சென்னையில் படித்ததால், நான் சென்னை செல்லும்போது அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமாக படவில்லை. விவேகானந்தா கல்லூரி வாழ்க்கை எனக்கு நிறைய நல்ல விஷயங்களையும் நல்ல நண்பர்களையும் கொடுத்தது. விடுதியில் தங்கியது என்னை இன்னும் பொறுப்புள்ளவனாக ஆக்கியது. மூன்று வருடங்கள் பி.காம் மற்றும் மூன்று வருடங்கள் சி.ஏ விடுதியில்தான். சி.ஏ கல்லூரிக்கு அப்பாற்பட்டது என்றாலும் என் நல்ல நடவடிக்கைகளாலும் நான் ஓரளவுக்கு நன்றாக படிப்பேன் என்ற காரணத்தாலும் விடுதி நிர்வாகி விதிகளை தளர்த்தி என்னை விடுதியில் தங்க அனுமதித்தார்.

ஒரு உண்மை சொல்லவேண்டும். நான் ஒன்றும் அவ்வளவு நல்ல பையனில்லை. விடுதி சுவரேறி குதித்து நிறைய இரவு காட்சிகள் காமதேனுவிலும் கபாலியிலும் பார்த்தவன். (ஆயிரத்தில் ஒருவன்/புதிய பறவை பல முறை.). அப்படியே நள்ளிரவு திரும்பி வரும்போது லஸ் கார்னெர் செலெக்ட்டில் (உணவகம்) பரோட்டா சிக்கன் குர்மா ஒரு கை பார்த்துவிட்டு பூனை மாதிரி வந்து சுவரேறி உள்ளே குதித்து சத்தமே போடாமல் அரை கதவை திறந்து படுத்துவிடுவோம். அடுத்த நாள் பொறுமையாக எழுந்து குளிக்காமல் கூட விடுதி உள்ளேயே இருக்கும் கோவிலில் பட்டாட்டம் சாமி கும்பிட்டு நெற்றியில் விபூதி அணிந்து மெஸ்ஸுக்குள் நுழையும்போது விடுதி பொறுப்பாளர் (பொறுப்பாளரை ஸ்வாமிஜி என்று கூப்பிடுவோம்) பார்க்கும் பார்வை நேராக கண்ணுக்குள் நுழைந்து மூளையை படிப்பது மாதிரி இருக்கும்.

College student
College student

செத்தாண்டா சேகர் பீலிங். ஒரு முறை கையும் களவுமாக பிடிபட்டு வெளியேற்றப்பட்டேன். இஸ்திரிப்பெட்டி (Iron Box) தடை செய்யப்பட்டது என்று தெரிந்தும் அறையில் சக மாணவர்கள் போல நானும் மறைத்து உபயோகப்படுத்தினேன். துணிகளை இஸ்திரி செய்ய மட்டுமல்ல. அவ்வப்போது முட்டை ஆம்லெட் போடவும்தான். இன்னும் சில பல சேட்டைகள் செய்திருக்கிறேன். இருந்தும் படிப்பில் ஒரு மாதிரி (பிட்டெல்லாம் இல்லப்பா) நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், என் அவ்வப்போதைய ரௌடித்தனங்கள் மன்னிக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்லூரி வாழ்க்கை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். முக்கியம் குறிப்பிட்டே ஆகவேண்டிய விஷயங்களில் முதலாவது விடுதி உணவு. ஞாயிற்றுக்கிழமை வெங்கட்ராமன் மற்றும் நாராயணன் வார்த்து தரும் மசால் தோசை, செவ்வாய் இரவு வெஜிடபள் பிரியாணி, வியாழன் மோர் குழம்பு, இவற்றிற்கெல்லாம் சொத்தையே எழுதி தரலாம். (காசா பணமா? நம்மிடம் சொத்து அப்போது பூஜ்யம்.) எல்லோரிடமும் நல்ல விதமாக பழகும் பையன் என்பதால் கொஞ்சம் விசேஷமான கவனிப்பு. அடுத்த விஷயம் என்றால் கபாலி கோவில். ஏதோ ஒரு வேண்டுதல் மாதிரி தினமும் விடுதியில் ஆரம்பித்து லஸ் கார்னெர் வழியாக கபாலி கோவில் சென்று சுவாமியை தரிசித்து அப்படியே மற்ற சிலரையும் பார்த்து விடுதி திரும்பி, இரவு உணவு அருந்தி சற்றே அரட்டை அடித்து அறைக்கு வந்து படுத்தால், தூக்கம் என்னை தழுவிக்கொள்ளும். கவலை என்று சொல்ல ஒன்றுமில்லை.

அப்புறம் மூன்றாவது விஷயம், அப்பா அம்மாவின் கடிதங்கள். விடுதியில் தவறாமல் வாரம் 2-3 கடிதங்கள் பெரும் சிறப்பான இடத்தை பிடித்தேன். அப்பாவின் ஆங்கில அழகான கையெழுத்தில் தபால் அட்டையும் (Post Card) அம்மாவின் அழகான தமிழ் எழுத்தில் உள்ளூர் கடிதமும் (Inland letter) அன்பு ஒழுக ஒழுக என்னை வந்தடையும்.

மயிலாப்பூர்
மயிலாப்பூர்

இப்படி ஒரு சந்தோஷமான சூழலில் முதல் முயற்சியில் சி.ஏ முடித்து அகில இந்திய அளவில் 45வது இடம் என்பதால், வேலைக்கு என்று ஒரு நாளும் காத்திருக்கவில்லை. முதல் வேலையே பெங்களுருவில். தங்குமிடம் மவுண்ட் கார்மல் என்ற கல்லூரிக்கு எதிரிலியே. சும்மா ஒரு தகவலுக்காக சொல்கிறேன். மற்றபடி பெரிய சிறப்பெல்லாம் அந்த "பெண்கள்" கல்லூரிக்கு கிடையாது.

திடீரென்று மும்பையில் இருந்து பணி உத்தரவு வந்தது. பெரிய நிறுவனம். கேள்வியே இல்லை. சேர்ந்தே ஆகவேண்டும். அப்போதுதான் மும்பை சென்றேன். முன்னமே கட்டுரை தொடரின் முதல் பாகத்தில் (https://www.vikatan.com/oddities/miscellaneous/travel-story-of-a-village-man) சொன்னமாதிரி இனம் புரியா பயம். என்னை பற்றியே எனக்கு நிறைய சந்தேகங்கள். இப்போதும் உள்ளன.

அக்டோபர் 1986. எனக்கு அப்போது வயது 23. முதல் நெடுந்தூர பயணம். கையில் அத்தியாவசிய பொருட்களுடன் இரண்டு பெட்டிகள். படிப்பிற்க்கான ஆவணங்கள். அப்போது Booking.com இல்லை. முன் பதிவு பற்றியும் யோசிக்கவில்லை. VT ரயில் நிலையத்தில் இறங்கி அங்கே இங்கே விசாரித்து ஒரு விடுதியில் மும்பையின் முதல் இரவை தனிமையில் கழித்தேன். அடுத்த நாள், சேரும் சம்பிரதாயங்கள் முடிந்து நிறுவனத்தின் அடுக்கு மாடி குடியிருப்பில் 23வது மாடியில் (என்று ஞாபகம், நிச்சயம் 20க்கு மேல், 28 ஆக கூட இருக்கலாம) தனி அரைக்கு மாறினேன். ப்ரபாதேவி என்ற இடம். கடற்கரை ஒட்டியே. அலைகள் சத்தம் எப்போதும் கேட்கும். ஜன்னல் திறந்தால் ஏதோ வான்வெளியில் நட்சத்திரங்கள் நடுவில் இருப்பது போல் தோன்றும்.

Mumbai
Mumbai

நிறுவனம் சில மாதங்களில் ஜூஹூ கடற்கரைக்கு மிக அருகில் தனியாக இருப்பிடம் ஒதுக்கியது. 2 அறைகள் கொண்ட பெரிய வீடு. 8 மாடி அடுக்குமாடி குடியிருப்பில். அது நிறுவனத்தின் முகவர்கள் சுமார் 250 பேர் தாங்கும் பெரிய குடியிருப்பு (Maker Kundan Gardens). நண்பர்கள் உதவியால் விரைவில் சமைக்க கற்றுக்கொண்டேன். மாற்றி மாற்றி ஒருவர் வீட்டில் என்று சமையல் பளு குறைந்து சந்தோஷம் இரட்டிப்பானது. நல்ல நண்பர்கள் கரணும் (இன்றும்), கோவிந்தனும்.

இப்படி ஒரு இளைஞன் நல்ல சம்பளம், நல்ல வீடு என நீண்ட நாள் தனியாக இருந்தால் கெட்டு போய்விடுவான் என்று அம்மா அப்பா அடித்து பிடித்து கால்கட்டும் போட்டுவிட்டார்கள். மனைவியும் மும்பை வந்து ஏதோ இருவரும் குடும்பம் நடத்துகிறோம் என்ற பெயரில் கூத்தடித்தோம். ஊர் சுற்றுவது, திரைப்படம் பார்ப்பது, வெளியில் உண்பது என பொறுப்பே இல்லாமல் இருந்தோம்.

கொலாபா, ஜூஹூ, பாந்திரா, கார் ரோடு என வாராவாரம் சுற்றுவோம். இப்படியே பொறுப்பில்லாமல் இருக்கும்போதுதான் "எருமைகளா, பொறுப்புன்னா என்னவென்று காட்டுகிறேன்" என்பதுபோல் நாங்களும் பெற்றோர்களாகும் நேரம் வந்தது.

mumbai Juhu Beach
mumbai Juhu Beach

இதனிடையில் என் வீடு ஒரு நல்ல "போக்குவரத்து" மையமாகி போனது, என் உறவினர்களுக்கு. அவர்கள் ஒவ்வொரு முறை வெளி நாடு செல்லும்போதும், என் வீட்டில் தங்கி மும்பையில் இருந்து விமானம் பிடித்து செல்வார்கள். எனக்கு இது ஒரு வாடிக்கை ஆகிப்போனது. ஒரு நாள் என் மனைவி எத்தனை நாள் நாம் மற்றவர்களுக்கு டாடா காண்பித்துக்கொண்டே இருப்பது. நமக்கு ஒருநாள் யாராவது விடை கொடுக்கவேண்டாமா என்று சொல்ல தேட ஆரம்பித்தேன் வெளிநாட்டு வேலை. புருண்டி, கமெரூன், நைஜீரியா என கண்டமேனிக்கு முயற்சித்தேன். நான்கைந்து வருடங்கள் தொழில் அபிவிருத்தி வங்கியில் (Industrial Development Banking) இருந்தது எனக்கு மற்ற நிறுவனங்களில் வேலை கிடைப்பதை சற்றே கடினமாக்கியது.

இருந்தும், என் நல்ல நேரம், எமிரேட்ஸ் விமான நிறுவனம் என்னை நேர்காணல் செய்து தேர்வு செய்தது. வடிவேலு பாஷையில் சொல்லவேண்டும் என்றால் "நான் அப்படியே ஷாக்காயிட்டேன்". நல்ல நிறுவனம். நல்ல வேலை. ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும். வேலையை ராஜினாமா செய்து, அவசர கதியில் வீட்டை ஒப்படைத்து மனைவியை குழந்தையுடன் பாண்டிச்சேரிக்கு அனுப்பி துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் பிடித்தேன், ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில். (டிசம்பர் 1991).

முன்பே ஒருமுறை கூறியிருந்தேன். எங்கள் அப்பாவின் ஆசை நாங்கள் நன்று படித்து "abroad" போகவேண்டுமென்பது. அவர் ஆசையை இப்போது நான் நிறைவேற்றும் நேரம்.

Dubai
Dubai

ஆனால் வாழ்க்கை சில சமயங்களில் சில வினோதமான திருப்பங்களை அளிக்கும். அப்படியான ஒரு திருப்பம்தான், என் அப்பாவின் எதிர்பாராத மறைவு. அவரும் அம்மாவும் சேர்ந்து உழைத்த உழைப்பு பிள்ளைகள் (அக்காவும் ஒரு பட்டதாரி) அனைவரும் நல்ல நிலையில். அந்த சந்தோஷத்தை அப்பா நீண்ட நாள் அனுபவிக்கவில்லை. என் தம்பி வேலை நிமித்தம் சிங்கப்பூரும் நான் துபாயும் சென்றபோது வழியனுப்ப அப்பா இல்லை.

இந்த இழப்பு எனக்கு ஒரு பெரிய வெற்றிடத்தை உண்டு பண்ணியது. அன்பையும் கண்டிப்பையும் ஒரு சேர கலந்து எங்களை ஓரளவுக்கு முழு மனிதனாக மாற்றிய அப்பாவுக்கு நாங்கள் செய்தது மிக குறைவு. அப்பாவின் அகால மரணத்தால், சந்தர்ப்பங்கள் பெரியதாக கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் நான் நல்ல மகனாகவே கடனாற்றினேன், ஒரே ஒரு சந்தர்ப்பத்தை தவிர்த்து.

அப்பாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, நான் ஒரு நல்ல HMT கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தபோது. வெள்ளை நிற பின்னணியில் அந்த பெரிய கருப்பு எண்கள் அப்பாவின் மங்கி வந்த கண்பார்வையிலும் தெள்ள தெளிவாக நேரம் பார்க்க உதவியது. அப்பாவிற்கு பெருமை.
சங்கர் வெங்கடேசன்

நான் மும்பையில் தனியாக இருந்தபோது, அப்பாவும் அம்மாவும் இரண்டு வாரம் என்னுடன் தங்கினார்கள். கூடவே அக்காவும், சித்தியும். மிக மகிழ்ச்சியான நாட்கள். இதுதான் முதல் முறை இந்தமாதிரி குடும்ப சகிதம் நீண்ட நாட்கள் பிள்ளையோடு தங்குவது. நன்கு சுற்றி காட்டினேன். நல்ல உணவகங்களில் நல்ல உணவையும், அவரவர்களுக்கு நல்ல அன்பளிப்பையும் வாங்கி கொடுத்தேன். அப்பாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, நான் ஒரு நல்ல HMT கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தபோது. வெள்ளை நிற பின்னணியில் அந்த பெரிய கருப்பு எண்கள் அப்பாவின் மங்கி வந்த கண்பார்வையிலும் தெள்ள தெளிவாக நேரம் பார்க்க உதவியது. அப்பாவிற்கு பெருமை.

Representational Image
Representational Image

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு நாள் அப்பா என்னிடம் "ஷங்கரி (அப்படிதான் பெற்றோர்கள் அழைப்பார்கள்), எனக்கு உடுப்பி உணவகத்தில் சப்பாத்தி தால் (Daal - பருப்பு) சாப்பிடவேண்டும்" என்று கூறினார்கள். இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது நல்ல பிள்ளையான நான் என்ன பண்ணியிருக்கவேண்டும். நிச்சயமாக அப்பா என்று சொல்லி அவர் சோர்வாடையும் வரை அவருக்கு சப்பாத்தியும் தாலும் வாங்கி தந்திருக்க வேண்டாமா? இன்றுவரை என்னால் காரணம் சொல்லமுடியாத மடத்தனமான காரியத்தை செய்தேன் நான். நேராக அவரை அந்த உணவகத்துக்கு அழைத்துச்சென்று வீட்டுக்கு வழி தெரியுமா என்று உறுதி செய்து அவரை அமர்த்திவிட்டு, சாப்பிட்டு வாருங்கள் என்று கூறி தனியாக வீடு திரும்பினேன்.

அம்மா கேட்டதற்க்கு, எனக்கு பசியில்லை அம்மா. எனவே அப்பாவை சாப்பிட சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்றேன். அம்மா என்னை ஒரு மாதிரி பார்த்தார். அப்பா ஒரு 45 நிமிடம் கழித்து வீடு வந்து சேர்ந்தார். எப்படி அப்பா இருந்தது என்று கேட்டேன். நன்றாக இருந்தது என்று சொல்லி என்னை ஒரு மாதிரி பார்த்தார். இருவரின் ஒரு மாதிரி பார்வையின் அர்த்தம் " உன்னுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் இந்த மாதிரி உன்னை தனியாக விட்டு வந்திருப்பேனா" என்று உடனே விளங்கியது. அன்று இரவே என் தவறை உணர்ந்தேன். ஆனால் நடந்தது நடந்துதான். அப்பாவுக்கு எந்த அளவுக்கு மனம் நொந்திருக்கும் அன்று அப்போதே புரிந்தது. வயது ஆக ஆக இன்னும் நன்றாக புரிந்தது. காலம் கடந்து வருந்துவதில் அர்த்தமில்லை. ஆனால் வருந்தாமலும் இருக்க முடியவில்லை.

Representational Image
Representational Image

நான் விமானத்தில் அமர்ந்தபோது அந்த சம்பவத்தை நினைத்தும், நான் "abroad" செல்லுவதை பார்க்க அப்பா இல்லாததையும் நினைத்தும் மனது சற்றே பாரமாகியது. அதே சமயம் இதுதான் முதல் வெளி நாட்டு பயணம். புதிய வேலை. புதிய நிறுவனம். விமான சேவை பற்றி ஒன்றுமே தெரியாது. எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று தெய்வங்களை துணைக்கழைத்தேன். அப்பாவையும் நினைத்துக்கொண்டேன்.

ஒரு சில மணி நேரங்களில் விமானம் துபாய் வான் எல்லையில் நுழைந்தது. நட்சத்திரங்களை தரையில் இறைத்த மாதிரி ஒரு ஜொலிப்பு. கீழே இறங்க இறங்க எனக்கு சந்தோஷம், எதிர்பார்ப்பு, அச்சம் எல்லாம் மாறி மாறி அலைக்கழித்தது. விமானத்தை விட்டு இறங்கினேன். சற்றே சிறிய விமான நிலையம்தான். (அப்போது). எல்லாம் சரியாக நடக்க குடியுரிமை வரிசையில் நின்றேன். நிறுவனம் முன்பே சொல்லியிருந்தது எனக்கு உதவி செய்ய, நிறுவனத்தின் பிரதிநிதி வருவார் என்று. வந்தார். நீண்ட வெள்ளை நிற அங்கி, தலையில் ஒரு வெள்ளை தொப்பி சகிதம். என் பெயரை சிரமப்பட்டு உச்சரித்து என்னை வெளியே அழைத்து சென்றார்.

Dubai
Dubai

என்னை எதிர்பார்த்து என் அத்தையும் மாமாவும் வந்திருந்தார்கள். அவர்கள்தான் என் விண்ணப்பத்தை எமிரேட்ஸ் நிறுவனத்தில் சேர்ப்பித்தவர்கள். அவர்கள் வாகனத்திலேயே அத்தை வீட்டுற்கு வந்து சேர்ந்தேன். வழியிலேயே என் அலுவலகத்தையும் "சுடர் ரௌண்டானா"வையும் (Flame Roundabout) பெருமையாக காட்டினார்கள். நேற்றுதான் வந்தது போல் இருக்கிறது. 30 வருடங்கள் ஓடிவிட்டன.

பெற்றோர்கள் எப்போதுமே பிள்ளைகளுக்கு தீங்கு நினைப்பதில்லை. அப்பா என்றுமே அப்பாதான். நான் அப்படி ஒரு காரியம் செய்திருந்தாலும் என்னை மன்னித்தது மட்டுமில்லாமல் எனக்கு அவரின் ஆசீர்வாதத்தையும் நிச்சயமாக வழங்கியிருக்கவேண்டும்.
-சங்கர் வெங்கடேசன்

துபாய் வந்து 30 வருடங்களில் எண்ணற்ற விருந்தாளிகள். அவ்வளவு சந்தோஷம் அவர்களை சுற்றி காட்டும்போதும் அவர்களுக்கு விருந்தோம்பல் செய்யும்போதும். ஆனால் அந்த ஒரு நாள் நான் ஒரு மரக்கட்டையாக மாறியதற்கு நான் என்ன செய்தாலும்? இன்று வரை ஏன் அப்படி செய்தேன் என்று தெரியவில்லை. இன்று வரை அந்த செயலுக்கு என்னை நான் மன்னிக்கவில்லை. சமயத்தில் எங்கள் அண்ணனிடம் சொல்லி மனம் கலங்கியிருக்கிறேன்.

பெற்றோர்கள் எப்போதுமே பிள்ளைகளுக்கு தீங்கு நினைப்பதில்லை. அப்பா என்றுமே அப்பாதான். நான் அப்படி ஒரு காரியம் செய்திருந்தாலும் என்னை மன்னித்தது மட்டுமில்லாமல் எனக்கு அவரின் ஆசீர்வாதத்தையும் நிச்சயமாக வழங்கியிருக்கவேண்டும். ஏதோ சிறு கிராமத்தின் ஒரு மூலையில் இருந்து வந்த நான் ஓரளவுக்கு வாழ்க்கையில் ஸ்திரப்பட அப்பா அம்மாவின் ஆசி முக்கிய காரணம்.

அப்படிப்பட்ட வாழ்க்கையில் பாதிக்கு மேல் நான் துபாயில்தான் வாழ்ந்துள்ளேன். எனக்கு இன்னுமொரு வாரம் கொடுங்கள். துபாயின் பெருமையை பறைசாற்ற. நிறைய இருக்கிறது.

-சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு