(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-8 படிக்காதவர்கள் படிக்கலாம்)
போன வாரம் சொன்னேன், க்ரகோவ் பார்க்கலாம் என்று.
க்ரகோவ் போலந்தின் இரண்டாவது பெரிய நகரம். போலந்து பால்டிக் கடல் ஒட்டி அமைந்த நாடு. மற்ற பக்கங்களில் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாகியா, செக், லிதுவேனியா, உக்ரைன், பெலாரஸ் என பல நாடுகளால் சூழப்பட்டது. மக்கள் தொகை 4 கோடிக்கு சற்றே குறைவு. க்ரகோவில் 8 லட்சம்தான்.
நான் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் எல்லா நாடுகளிலும் சில முக்கிய பொறுப்புகளில் மற்ற நாட்டை சேர்ந்த முகவர்கள் அனுப்பப்படுவார்கள். இதில் பல நோக்கங்கள் உண்டு. ஆனால் அது இங்கே தேவை இல்லை. 2015 இல் க்ரகோவ் அலுவலகத்தில் இக்கட்டான சூழலில் ஒரு இலாகாவை நிர்வகிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. 150 போலந்து அலுவலர்களை மேற்பார்வை பார்த்து நிறுவனம் எதிர்பார்க்கும் மேம்பாட்டை ஒரே வருடத்தில் அடையவேண்டும் என்பது சற்றே சவாலான பணி. தயங்காமல் ஏற்றுக்கொண்டேன்.

முடிவில் அது இரண்டு தரப்பிலும் ஒரு மிக திருப்திகரமான பணியாக அமைந்தது. மேலும் க்ரகோவ் எனக்கு ஒரு அருமையான ஊரில் வாழ்ந்த அனுபவத்தை கொடுத்தது. ஐரோப்பாவின் மத்தியில் அமைந்திருப்பதால், எனக்கு பிடித்த பயணங்கள் மேற்கொள்வதற்கும் வசதியாய் போயிற்று.
மகள்கள் துபாயில் பணியில் இருந்தார்கள். ஆகவே நான் க்ரகோவ் சென்றாலும், என் குடும்பம் துபாயில் தான் இருந்தது. துபாயில் இருந்து க்ரகோவ் செல்ல வார்ஸா சென்று அங்கிருந்து வேக ரயில் எடுத்து க்ரகோவ் காவ்னி ஸ்டேஷனில் இறங்கி ஸ்டேஷனோடு இணைந்த கலெரியா க்ரகோவ்ஸ்க மால் வழியாகி வெளியேறி பத்து நிமிடத்தில் என் “ஏஞ்சல்” அபார்ட்மெண்ட்ஸ் வந்துவிடும். அலுவலகம் செல்லவும் இதே க்ரகோவ் காவ்னியில்தான் ரயில் ஏறவேண்டும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவார நாட்களில் 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு அருகிலேயே ஜிம்முக்கு சென்று வீடு வந்து குளித்து சிற்றுண்டி முடித்து மறக்காமல் குடை மற்றும் குளிருக்கு ஏற்ற மேலாடை எடுத்துக்கொண்டு 0810 ரயில் பிடிக்க சென்றால் நூற்றுக்கணக்கில் அலுவலக பணியாளர்கள் அந்த ரயிலுக்காக காத்திருப்பார்கள். ரயில் சில நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் சொன்னபடி வந்துவிடும். கம்யூனிஸ்ட் கால ரயில்தான். ஆனால் சுத்தமாக இருக்கும். ரயில் முழுவதுமே பணியாளர்கள்தான். எல்லாம் சீசன் டிக்கட் கேஸ் தான். நம்மூர் தரமணி மாதிரி ஒரு நிறுத்தம் வரும். ரயில் காலியாகிவிடும். நிறுத்தத்தில் இருந்து எல்லோரும் மந்தையாக "டைடல் பார்க்" மாதிரியான இடத்தில உள்ள அவரவர் அலுவலங்களுக்கு சென்று விடுவார்கள். இப்போது நீங்கள் லண்டனிலோ, ஆம்ஸ்டர்டாமிலோ இந்த மாதிரி சென்றால் மக்கள் கூட்டம் ஒரு மினி உலகமாக வெள்ளையர், ஆப்பிரிக்க மக்கள், இந்தியர்கள் என ஒரு கலவையாக இருக்கும். இங்கு அனேகமாக 99% போலந்து மக்கள்தான். ஓரே இந்தியன் நானாகத்தான் இருந்திருப்பேன்.

ஒரு நல்ல (!) பழக்கம் போலந்து மக்களிடம். யாரும் யாரிடமும் அதிகம் சிரித்து வீணாக்க மாட்டார்கள். ஏதோ கம்யூனிசம் இன்னும் ஒரு வாரத்தில் திரும்பி வந்துவிடுவதுபோல ஒரு சீரியஸ் முகத்தோடுதான் இருப்பார்கள். உள்ளுக்குள் நல்ல மக்கள்தான். இல்லாவிடில் நான் குறுகிய காலத்தில் அவர்களின் மதிப்பை பெற்று ஒத்துழைப்பையும் பெற்றிருக்க முடியாது. நல்ல புத்திசாலிகள். கடமையை மிக சீராக செய்பவர்கள். இதனாலேயே நிறைய நிறுவனங்கள் தங்கள் அலுவலங்ககளை (Back Office) க்ரகோவில் வைத்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முக்கிய விஷயம். அலுவலகங்கள் வெளியே டீ கடை கிடையவே கிடையாது. மச்சான் வாடா ஒரு டீ அடிச்சிட்டு வருவோம் என்று பத்து பேர் கும்பலாக போய் 30 நிமிடம் கழித்து சிகரெட் நாற்றத்தோடு வருவது என்ற பேச்சே இல்லை. அப்புறம், சார் ஒரே டிராபிக், பஸ் ஸ்டரைக், தம்பியோட மாமியாருக்கு வளைகாப்பு போன்ற சாக்குபோக்கு இல்லை. நல்ல உழைப்பாளிகள். விதிவிலக்குகள் மிக குறைவே.
மதிய உணவு அலுவலகத்திலியே. போலிஷ் உணவு. அதிகபட்சமாக உருளை, கோஸ், பீட்ரூட் மற்றும் இறைச்சி வகைகள். ஏதோ சாதம், தயிர், சாலட் வைத்து ஒப்பேற்றிவிடுவேன். இறைச்சி ஓரளவுக்கு. மதியம் ஐந்து மணிபோல் கடை கட்டியாகவேண்டும். ஏனெனில் ஐந்து மணிக்குமேல் ரயில் சேவைகள் குறைவு. பயண நேரம் 30 நிமிடம்தான். இரவு உணவுக்கு கலெரியா மாலில் வாங்கிவந்து விடுவேன். வீட்டில் வந்து சாப்பிட்டுக்கொண்டே மனைவியுடன் வீடியோ காலில் இன்னைக்கு என்ன சாப்பிட்ட போன்ற முக்கிய செய்திகளை (??) பரிமாறிக்கொண்டு பின் தூங்கிவிடுவேன்.

சமயத்தில் வாரத்தின் இடையில் ஒரு நாள் விடுமுறை வரும்போதும், வார இறுதியிலும் (க்ரகோவில் இருந்தால்) பொறுமையாக எழுந்து 1200 மணி போல் வெளியே வந்து வலது திரும்பி ஜடோமி (Jatomi) ஜிம்மில் என் பயிற்சியாளரை பார்த்து ஒரு ஹாய். சற்று தள்ளி பாபி பர்கரில் (Bobby Burger) ஒரு பர்கரும் கோக்கும் சாப்பிட்டுவிட்டு டாக்ஸி ஸ்டாண்டை தாண்டி இடது திரும்பி கலெரியா க்ரகோவ்ஸ்க உள்ளே புகுந்து 20 முறை பார்த்த கடைகளையே திரும்ப பார்த்து ரெண்டு ரவுண்டு அடிச்சா மணி ரெண்டு ஆகிவிடும். அங்கேயே உட்கார்ந்து நல்ல ஜூஸ் சாப்பிட்டுவிட்டு ஒரு மூணு மணிபோல் வெளியே வந்து அன்டெல்ஸ் விடுதி (நிறுவனம் வீடு தரும் வரை அங்கேதான் தங்கினேன்) தாண்டி சுரங்கப்பாதை வழியே மறு பக்கம் சென்றால் பிளான்ட்டி (Planty) எனப்படும் பசுமை வளாகம். அதன் வழியே புகுந்து மார்க்கெட் சதுக்கம் வருவேன்.
க்ரகோவில் மார்க்கெட் சதுக்கம் மிக பிரபலம். மக்கள் நிறைய கூடும் இடம். அழகான விசாலமான இடம். அந்த மத்திய சதுக்கத்திலிருந்து நிறைய பழங்கால கற்களால் ஆன தெருக்கள் பல திசைகளிலும் செல்லும். மக்களின் மன மகிழ்வுக்காக குதிரை வண்டிகள். அப்படி ஒரு கம்பீரமான குதிரைகள். நிறைய கடைகள், இளைப்பாற இடங்கள், உணவகங்கள் என உயிரோட்டமாக இருக்கும். மார்க்கெட் சதுக்கம் ஒவ்வொரு அங்குலமும் நான் அளந்துவிட்டேன் நடந்து நடந்து. ஒரு சுற்று சுற்றி அழகை பாராட்டி ஆறரை மணிபோல் டோமஸ் வீதியில் எனக்கு பிடித்த கணேஷ் இந்திய உணவகம் போய் விடுவேன். அடிக்கடி போவதால் உதட்டோரம் சிறிய புன்னகை உதிரும். (சிரிப்பு ரொம்ப காஸ்ட்லி). அங்கு சமைப்பவர் ஒரு நேபாளி. நன்கு பேசுவார். பொறுமையாக அனுபவித்து உணவு அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தால் அடித்து போட்ட மாதிரி ஒரு தூக்கம் வரும்.

க்ரகோவில் குற்றங்கள் மிக அரிது. மக்கள் தொகை குறைவு. பசுமை. சுத்தம். குளுகுளு தப்பவெட்பம். பேருந்துகள், ட்ராம்கள், எல்லாமே எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடக்கும் இடம். எல்லாவற்றிற்கும் மேல் மற்ற ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும்போது எல்லாமே விலை குறைவு.
இவ்வளவு அழகான ஊரை குடும்பத்துடன் சுற்றிப்பார்க்கவேண்டும் என்று என் மனைவி மகள்களையும் மனைவியின் தம்பி மகனையும் (என் மகள்களின் வயது, ஸ்வீடனில் இருந்தான்) டிசம்பர் (2015) மாதம் அழைத்தேன். மனைவி மற்றும் ஒரு மகள் துபாயில் இருந்து. மற்ற மகள் அப்போது லண்டனில் பணி நிமித்தம் 3 மாதம் இருந்தாள். அம்மாவுக்கு தெரியாது பெரிய மகள் லண்டனில் இருந்து வருவது. யாருக்கும் தெரியாது ஸ்வீடெனில் இருந்து ஒருவர் வருவது. எல்லோருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி.
முதலில் எல்லோரையும் மார்க்கெட் சதுக்கம் கூட்டிச்சென்றேன், நடுங்கும் குளிரில். மக்கள் ஒரு வித மகிழ்ச்சியை சுமந்து வலம் வரும் இடம். டிசம்பரில் கிறிஸ்துமஸ் குதுகூலமும் சேர்ந்துகொள்ளும். மார்க்கெட் சதுக்கம் சற்று தள்ளி விஸ்டுலா நதி கரை. அதை ஒட்டி வாவெல் ராஜ மாளிகை. ஒவ்வொன்றாக சுற்றி பார்த்தோம். நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்த “அழகை”யெல்லாம்தான் சூர்யாவும் சமந்தாவும் 24 படத்தில் "அழகியே" என்ற பாடல் மூலம் காண்பித்தார்கள். (யூடியூபில் பாருங்கள்). ஒரு சுற்று அடித்து சிறு தீனி தின்று சற்றே சோர்ந்து போய் எனக்கு பிடித்த "கணேஷ்" உணவகம் சென்றோம்.

பின் நாங்கள் எல்லோரும் பார்த்த இன்னொரு முக்கிய இடம், உப்பு சுரங்கம். (Salt Mine). என்ன சிறப்பு என்றால், இந்த உப்பு சுரங்கம் கடலுக்கு அருகில் அமைந்தது இல்லை. பதிலாக பூமிக்கு அடியில் 1,000 அடி வரை தோண்டி அதிலிருந்து உப்பு பாறைகளை வெட்டி உப்பை தயார் செய்த சுரங்கம். பரப்பளவு 2,400 ஏக்கர். சுரங்கத்தின் உள்ளேயே ஏறக்குறைய 250 கிமீ தூரத்துக்கு சுரங்க பாதைகள். ஓய்வெடுக்கும் அறைகள். குதிரைகள் சென்றுவர பாதைகள், அதற்கு தங்குமிடங்கள், உணவு சேமிக்கும் இடங்கள். இவ்வளவு நடக்கும்போது மக்களுக்கு வழிபட இடம் இல்லாமலா? உள்ளே பெரிய பாறைகளில் செதுக்கப்பட்ட தேவாலயமே உண்டு. ஒரு 300 பேர் வழிபடலாம்.
ஆனால் இதெல்லாம் இப்போ கட்டியதோ / தோண்டியதோ இல்லை. 750 வருடத்திற்கு முன் ஆரம்பித்து தொடர்ந்து 650-700 வருடங்கள் உற்பத்தி செய்து பொருளாதார முக்கியஸ்தலமாக இருந்தது. ஜெர்மனி போலந்து நாட்டின் உள்நுழைந்தபோது இந்த சுரங்கம் ராணுவ ஆயுதங்கள் சேமிக்க / செய்ய பயன்படுத்தப்பட்டதாக சொல்லகிறார்கள்.
கீழே 450 அடிவரை 380 மரப்படிகள் வழியாக நம்மை அழைத்து சென்று 3.5 கிமீ நடத்தி எல்லா கதையையும் சொல்லி பூமிக்கு அடியில் குறுகிய இடப்பரப்பில் மிக குறைந்த வெளிச்சத்தில் 2 மணிநேரம் சுற்றிக்காட்டுவார்கள். சற்று கடினமான டூர்தான். இதனாலேயே முன்பே உறுதிசெய்துவிடுவார்கள் நீங்கள் தயாரா என்று. வழியில் வயிறு சரியில்லை, மூச்சு முட்டுது என்று சுலபத்தில் நழுவ முடியாது. அப்புறம் சுவற்றில் "சுரேஷ் loves சுகன்யா" என்றெல்லாம் இதயத்தின் படம் வரைய முடியாது. பாவம் போலந்து புள்ளிங்கோ.

பிள்ளைகள் எல்லோரும் பிஸியானவர்கள். 6 நாட்கள்தான் என்னுடன். மார்க்கெட் சதுக்கம் பார்த்தாயிற்று. உப்பு சுரங்கமும் ஆயிற்று. எல்லாவற்றையும் விட முக்கியமான ஆஷ்விட்ச் (Auschwitz) இனிதான் பார்க்கவேண்டும். பார்க்கலாம் என்னவென்று.
நாஜி படைகள் எப்படி யூதர்களை சித்திரவதை செய்து கொன்று குவித்தார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம். அந்த கொடுமைகளில் ஆஷ்விட்ச் என்ற இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாஜி படைகள் 1939 இல் போலந்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து இங்கு சித்திரவதை முகாம்களை நிறுவினார்கள். 1942-44 இல் 14 லட்சம் அப்பாவி யூதர்கள் ரயில்கள் மூலம் ஐரோப்பாவின் பல மூலைகளிலிருந்தும் அழைத்துவரப்பட்டனர். சொல்லப்பட்ட காரணம், உங்கள் உறவினர்கள் இருக்கும் இடத்துக்கு பத்திரமாக அழைத்துச்செல்கிறோம் என்று. அந்த பயணத்திலேயே பலர் மாண்டு போனார்கள்.
காரணம் கூட்ட நெரிசல், கழிவறை வசதி இல்லை, குளிரிலிருந்து பாதுகாப்பு இல்லை. பலகீனமானவர்களும் குழந்தைகளும் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துபோனார்கள். பிழைத்தவர்கள் நீண்ட நாள் வாழவில்லை. ஏறக்குறைய 11 லட்சம் யூதர்கள் கொடுமையான முடிவை சந்தித்தார்கள். மிக கொடூரம் அந்த வாயு அறைகள். கும்பல் கும்பலாக மக்கள் அந்த அறைக்கு பொய்யின் பேரில் அழைத்து சென்று கண நேரத்தில் சாம்பலாக்கப்பட்டார்கள். சாவுதான் கொடுமை என்றால் வாழ்வு அதைவிட. போலந்து குளிர் பிரதேசம். அக்டோபர் - ஜனவரி கடும் குளிர்காலம். அந்த நாட்களிலும் சரியான உடை இல்லாமல், உணவு இல்லாமல், கழிப்பறை படு மோசமாக இருக்க பச்சை தண்ணீரில் குளித்து கடும் உழைப்பை தர வற்புறுத்தப்பட்டால், சாவே மேல்.

மனித குலத்தின் குரூர புத்தி எந்த அளவு பாதாளத்தை எட்டமுடியும் என்பதற்கு ஆஷ்விட்ச் பார்த்தால் போதும். இப்போது ஆஷ்விட்ச் நாஜி கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றிப்பார்க்கலாம், மன உறுதி இருந்தால். பல ஏக்கரில் அமைந்துள்ள சிறைகள், சித்திரவதை கூடங்கள், வாயு அறைகள் என எல்லாமே சற்றே நம்மை நிலைகுலைய செய்யும். அதிலும், அங்கே குவித்துவைத்துள்ள எண்ணிலடங்கா காலணிகள், பொம்மைகள், கண்ணாடிகள், உடைகள், தொப்பிகள் என ஒவ்வொரு இடமும் அந்த கொடுமையை நம் கண் முன்னே கொண்டுவரும்.
ஆஷ்விட்ச் பார்த்துவிட்டு மிக கனத்த இதயத்துடன் திரும்பி வந்தோம். பின் இரண்டு நாட்களில் அவரவர் அவரவர் திசையில் சென்றுவிட்டனர். நான் வேலையில் மூழ்கினேன். என்ன செய்வது. இது போன்ற கொடுமைகள் இனி நடக்காது என்று நம்புவோம்.
க்ரகோ ஐரோப்பாவின் மத்தியில் அமைந்திருப்பதால், எனக்கு பிடித்த பயணங்கள் மேற்கொள்வதற்கும் வசதியாய் போயிற்று. சில வாரங்களிலேயே வேலை பழகி மக்களுக்கு என்னை பிடித்து (பெரிய விஷயம்) எல்லாம் ஒருவழியாக நிலைமைக்கு வந்ததும், நான் என் பயணங்களை துவக்கினேன்.

க்ரகோவில் இருந்து ஹெல்சின்கி (Finland), ஒஸ்லோ (Norway), ரோம் (Italy), புடாபெஸ்ட் (Hungary), ரீகா (Latvia), டப்ளின் (Ireland), வியன்னா (Austria), சோபியா (Bulgaria), மால்டா (Malta), புக்கரெஸ்ட் (Romania), லிஸ்பன் (Portugal) ஆகிய இடங்களுக்கு 3-4 நாட்கள் வீதம் சென்று வந்தேன். மேலும் மனைவியுடன் ப்ராக் (Czech) 5 நாள் சென்று வந்தேன். மலிவு கட்டண விமான சேவைகள் ரொம்ப வசதி.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஹெல்சிங்கியும், ஒஸ்லோவும், லிஸ்பனும், ப்ராக்கும் அவ்வளவு அழகான நகரங்கள். புடாபெஸ்ட் கூட நல்ல அழகு. டப்ளின், மற்றும் மால்டா மிகவும் முன்னேறிய வளமான இடங்கள். புக்கரெஸ்ட், சோபியா, ரீகா அவ்வளவு இல்லை. சற்றே வளம் குன்றிய ஏழ்மை தலைகாட்டும் ஊர்கள். கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். குறிப்பாக, ஜிப்ஸி இன மக்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது ரொம்ப அதிகம். ஜிப்ஸி இன மக்கள் (ரோமா என்றும் அழைக்கப்படுகிறார்கள்) பஞ்சாபில் இருந்து 1000 வருடங்களுக்கு முன் நில மார்க்கமாக ஐரோப்பாவிற்கு சென்றவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்கள் தவறுதலாக எகிப்திலிருந்து (Egypt) வந்தாக கருதி Egyptsies என்று அழைக்கப்பெற்று அதுவே மருகி Gypsies ஆனதாக சொல்கிறார்கள். பல்கேரியா மற்றும் ருமேனியா நாட்டில் இவர்கள் சற்றே விளிம்பு நிலையிலேயே வாழ்கிறார்கள். ஏழ்மையும், சுத்தமின்மையும், குற்றங்களும் இவர்களின் அடையாளமாக ஆகிவிட்டன. கூடியவரை கூட்டம் உள்ள இடங்களில் சற்றே கூடுதல் கவனமாகவே இருந்தேன்.

1 வருடம் ஓடியதே தெரியவில்லை. 2016 மே மாதம் துபாய் திருப்பினேன். க்ரகோவ் நாட்கள் நீங்கா நினைவுகள். மேலே சொன்ன ஒவ்வொரு இடத்தை பற்றியும் எழுதினால் விகடன்.காம் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ள மாட்டார்கள். ஆனால் படிக்கின்ற நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள். எனவே, அடுத்த வாரம் இரண்டு (இத்தாலி மற்றும் மால்டா) மறக்கமுடியாத அனுபவங்களை மட்டும் பகிர்ந்து முடித்து நான் இரண்டு வருடம் வாழ்ந்த ஈரான் நாட்டுக்கு செல்லலாம்.
-சங்கர் வெங்கடேசன்
(shankarven@gmail.com)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.