Published:Updated:

அம்மாயி திருவிழாவும் அடிமை பெண் திரைப்படமும்! - சிலாகிக்கும் கிராமத்து இளைஞர்

Representational Image
Representational Image

ஏன் இந்த திருவிழாவிற்கு அம்மாயி திருவிழா என்ற பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான அறிவியல் பூர்வமான விளக்கமோ அல்லது நம்பிக்கை (Myth) சார்ந்த விளக்கமோ என்னிடம் இல்லை..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எங்கள் ஊர் பிள்ளையார் கோயில் கல் மேடையின் இடதுபுறம் ஒரு சாவடி உண்டு. அதற்கு அம்மாயி சாவடி என்று பெயர். மூன்று புறம் சுவரும் ஒருபுறம் திறந்த வெளியாகவும் இருக்கும். மேற்புறம் ஓடும் சுற்று சுவர்கள் சுக்கா மண் எனப்படும் ஒருவகை மண்ணினால் ஆன சுவர் அது. கிராமங்களில் வீட்டின் வாசலுக்கு இந்த சுக்கா மண்ணைத்தான் பரப்பி நன்றாக திமிசு கட்டை வைத்து அதனை இடித்து கெட்டிப்பார்கள். பின்பு நாள் தோறும் பசு மாட்டின் சாணத்தை கரைத்து தெளித்து அதனை பராமரிப்பார்கள்.

இன்றும் நகரங்களில் இதனை முறைவாசல் என்று சொல்கிறார்கள். இன்று வெறும் தண்ணீர் மட்டும் தெளித்து கோலம் போடுகிறார்கள். அறுவடை சமயம் மிக கெட்டியாக பசு சாணத்தை கரைத்து வாசலை நன்றாக மெழுகி விடுவார்கள். தானியங்கள் வீணாகாமல் சேகரிக்க அது உதவும்.

பிள்ளையார்
பிள்ளையார்

வருடத்தில் ஒரு நாள் அம்மாயி திருவிழா நடக்கும். ஊர் மக்களுக்கு எதும் நோய் தொற்றோ அல்லது உடல்நல குறைபாடோ ஏற்படாதிருக்க இந்த திருவிழாவை நடத்துவார்கள். ஏன் இந்த திருவிழாவிற்கு அம்மாயி திருவிழா என்ற பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான அறிவியல் பூர்வமான விளக்கமோ அல்லது நம்பிக்கை (Myth) சார்ந்த விளக்கமோ என்னிடம் இல்லை. அதனை இதுவரை ஆராய்ந்துப் பார்க்கவும் நான் முயற்சித்தது இல்லை. ஆனால் எனக்குள் ஒரு விளக்கம் இருக்கிறது. கிராமங்களில் அம்மாயி என்ற உறவுமுறை அனைவருக்கும் மிக நெருக்கமானது. அம்மாவின் அம்மாவை தான் அவ்வாறு கூப்பிடுவார்கள். தன் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மீது அளவில்லாத பாசம் வைத்திருப்பார்கள்.

ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அனைத்து விதமான கை வைத்தியத்தையும், கடவுள் வழிபாடு பற்றிய விளக்கத்தையும் கடைபிடிக்க செய்து உடல்நிலை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் வரை பாசமுடன் கவனித்துக் கொள்வார்கள். அதனால் தான் இந்த விழாவின் மூலமாக இருக்கும் தெய்வத்திற்கு அம்மாயி என்று பெயர் வைத்திருக்கக் கூடும். மேலும் இன்னொரு விளக்கமும் எனக்கு தோன்றுகிறது. கோடை காலங்களில் பரவும் அம்மை நோயை வராது காப்பதன் பொருட்டு நடத்தப்படும் அம்மை திருவிழா அம்மாயி திருவிழாவாக மருவி இருக்க கூடும். எந்த விளக்கமாக இருந்தாலும் இது ஊர் மக்களை காப்பதன் பொருட்டு நடத்தப்படும் விழா என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை என்பதே உண்மை.

Representational Image
Representational Image

ஒருநாள் திருவிழா ஒரு கரகம் பாலித்து வைத்து ஒரு சிறிய தேரை ஜோடனை செய்து வைப்பார்கள். தேர் ஜோடனை செய்ய பச்சை வாழை மரத்தின் பட்டையை உரித்து தேரின் மேற்கூரையில் உள்ள சட்டங்களுடன் கட்டி அதன் மேல் தென்னங் குருத்தோலையில் தோரணங்களும் பலவிதமான அலங்கார வடிவங்களை செய்து அதன் மேல் கட்டியோ அல்லது செருகியோ விடுவார்கள்.

பெரும்பாலும் பிரசிடெண்ட் பெரியப்பாதான் இந்த ஜோடனை வேலைகளை முன்னின்று செய்வார். பிற்பகல் மூன்று அல்லது நான்கு மணிவாக்கில் இந்த வேலை தொடங்கும். இரவு ஏழு அல்லது எட்டு மணிவாக்கில் ஜோடனை முடிந்து தேர் தயாராக இருக்கும். அதன் பின்புதான் திருவிழா களை கட்ட ஆரம்பிக்கும். ஊர் மக்கள் மாவிளக்கு செய்து படைப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிராமம் என்பதால் பலரும் அன்று அவர்களிடம் இருக்கும் உடைகளில் நல்லதை எடுத்து அணிந்து கொள்வார்கள். பெரும்பாலும் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் தான் இருக்கும். பல நாட்கள் பெட்டியில் பாச்சை உருண்டைக்கு (Naphtha Ball) இடையில் இருப்பதால் பெரும்பாலோரின் உடைகளில் அந்த வாசம் இருக்கும். நன்கு எண்ணையை தலையில் தடவி படிய வாரி பின்னலிட்டு பெண்களும் படிய வழித்து தலையை சீவிக்கொண்டும் பாண்ட்ஸ் (Ponds) பவுடர் மணக்க வளைய வருவார்கள்.

யாரோ ஒருவர் நடுவில் நின்று பாட கும்மியடிக்க தொடங்குவார்கள். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் உற்சாகமாக கும்மியடிக்க முதலில் மூன்று நான்கு பேருடன் சிறிய வட்டமாக தொடங்கும் இது நேரம் செல்ல செல்ல நாற்பது ஐம்பது பேருடன் பெரிய வட்டமாக மாறும். களைப்படைந்த சிலர் வெளியேற புதிதாக சிலர் சேர்ந்து கொள்ள என குறைந்தது ஒரு மணி நேரம் நடக்கும்.

Representational Image
Representational Image

இடையில் வெவ்வேறு வகையில் ஆட்டத்தை மாற்றுவார்கள். கால்களும் கையும் அனைவரும் ஒரே விதமாக அசைக்க தொடங்குவார்கள். கும்மி வட்டத்தில் ஒருவர் இந்த ஆட்ட முறைகளை கட்டுப்படுத்துவார். அவர் செய்யும் மாற்றத்தை பின்பற்றி அனைவரும் தங்களது அசைவுகளை நொடிப்பொழுதில் மாற்றுவார்கள். சிலர் இறுதிவரை வேர்க்க விறுவிறுக்க கும்மி வட்டத்தை விட்டு வெளியேறாமல் கும்மி அடித்துக் கொண்டிருப்பார்கள்.

இரவு ஒன்பது மணி வாக்கில் அனைத்து கொண்டாட்டங்களும் குறைந்து அவரவர் சாமி கும்பிட்டு விட்டு கடை வீதி(??) சுற்றிவிட்டு வீட்டுக்கு செல்வார்கள். தேரை அம்மாயி சாவடியை ஒரு சுற்று சுற்றிவிட்டு கொண்டுவந்து வைத்துவிடுவார்கள்.

பின்பு அம்மாயி குடிவிடும் வைபவம் நடக்கும். சில ஊர் பெரியவர்களுடன் ஊர் பொதுமக்களும் சேர்ந்து குடி விடும் இடத்திற்கு சென்று கரகத்தை வைத்து ஒரு சிறிய பூசையுடன் அடுத்த முறை மீண்டும் கரகம் பாலித்து அம்மாயியை ஊருக்குள் அழைத்து வரும் வரை அந்த இடத்தில வாசம் செய்ய வேண்டி திரும்புவார்கள்.

1980 - 1990 காலகட்டங்களில் கிராமங்களில் நடக்கும் சிறிய மற்றும் பெரிய திருவிழாக்கள் அனைத்திலும் இரவு பத்து மணிக்கு மேல் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் திரையிடுவார்கள். பெரும்பாலும் கருப்பு வெள்ளை திரைப்படங்களும் எப்போதேனும் வண்ண ஈஸ்ட்மேன் கலர் திரை படங்களும் திரையிடப்படும். எங்களுடைய மண்ணின் மைந்தர்கள் இரவு உணவை முடித்து விட்டு வீட்டிலிருந்து ஒரு பாயையோ அல்லது ஒரு கோணியோ எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்க்க வருவார்கள்.

Representational Image
Representational Image

திரைப்படம் போடுவதற்கான ஏற்பாடுகள் இரவு எட்டு மணியளவிலேயே தொடங்கிவிடும். இரு மூங்கில் காம்புகளை நட்டு ஒரு அழுக்கடைந்த வெள்ளை(??) திரைக் காட்டுவார்கள். பின்பு இரு மூங்கில்களிலும் இரு குழாய் ஸ்பீக்கர்களை காட்டி இணைப்பு கொடுத்து பாடல்களை ஒளிபரப்பி கொண்டிருப்பார்கள். அவ்வப்பொழுது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வந்துக் கொண்டிருக்கும். 10 நிமிடத்திற்கு ஒருமுறை திரைப்படம் மாறிக்கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் அப்போது வந்த புதிய திரைப்படம் என்று ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல 70-களில் வெளியான அடிமைப்பெண் திரையிடப்படும்.

எங்கள் ஊரில் கடை வைத்திருந்த பெருமாளிடம் சென்று இதற்காக பேசுவார்கள். ஆரம்ப காலத்தில் நாமக்கல்லிலிருந்து 16mm ப்ரொஜெக்டரை (16MM Projector) வாடகைக்கு எடுத்து வந்து திரையிடுவார். பின்பு சிறிது நாட்கள் கழித்து அவரே சொந்தமாக ஒரு பழைய ப்ரொஜெக்டரை வாங்கி விட்டார். திரைப்பட பிலிம் பெட்டி மட்டும் நமக்களிலிருந்து வரும் கடைசி பெருந்தான காமாட்சி பஸ்சில் இரவு 10 மணியளவில் வரும். எந்த திரைப்படம் என்பது 10 மணிக்கு பெட்டி வரும் வரை தெரியாது. அவருக்கு லாபமே இல்லாவிட்டாலும் திரைப்பட பெட்டிக்கான வாடகையுடன் 100 ருபாய் கூடுதலாக இருந்தாலும் சிலசமயம் அதுவும் இல்லாமலும் ஏற்பாடு செய்து தருவார்.

Representational image
Representational image

திரைப்படம் திரையிடுவதற்கான செலவுகளை ஒரு நாற்பது பக்க நோட்டு வாங்கி வசூல் செய்வார்கள். அதில் முக்கியமாக இதற்கான நன்கொடை கொடுப்பவர்களில் முக்கியமானவர்கள் அந்த இரவில் லங்கர் கட்டை எனப்படும் ஒருவகையான பணம் வைத்து விளையாடும் விளையாட்டை நடத்துபவர்கள். இந்த விளையாட்டில் ஒரு நீள்சதுர பலகையில் ஆறு கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு படம் ஒட்டப்பட்டிருக்கும். பொதுவாக சீட்டு கட்டிலுள்ள ஸ்பேடு, கிளாவர், டைமண்ட் மற்றும் ஹார்டின் மற்ற இரு கட்டங்களிலும் ஏதேனும் இரு படங்கள் இருக்கும் (இந்த விளையாட்டை நீங்கள் பிதாமகன் திரைப்படத்தில் பார்த்திருக்கலாம்).

மூன்று சிறிய கன சதுர கட்டைகளில் இந்த ஆறு படங்களும் ஆறு பக்கங்களிலும் ஓட்ட பட்டிருக்கும். ஒரு அமுல் டப்பாவில் இந்த மூன்று கட்டைகளையும் போட்டு


டகரா டகரா டக் .... என்று குலுக்கி கவிழ்க்க,


மக்கள் ஒவ்வொரு கட்டங்களிலும் அவர்களிடம் இருக்கும் பணத்தை அவர்கள் விருப்பம் போல் வைப்பார்கள். டப்பாவை திறக்கும்போது மூன்று கட்டைகளில் மேற்புறமாக வரும் படங்களுக்கு அது இருக்கும் எண்ணிக்கை பொறுத்து ஒரு மடங்கு, இரு மடங்கு அல்லது மூன்று மடங்காக திருப்பி கொடுப்பார்கள். பிற கட்டங்களிலுள்ள பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

Representational image
Representational image

மக்கள் திரையின் முன்புறமும் பின்புறமும் அமர்ந்து பார்ப்பார்கள். நானும் பலமுறை கோரை பாயோ அல்லது சர்க்கரை கோணியை எடுத்துக்கொண்டு அதில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு என்பது மிக அரிதாகவே கிடைக்கும். அதனால் திருவிழா நாட்களில் மற்றும் எம் ஜி ஆர் அல்லது சிவாஜி பிறந்த நாளில் அவர்களுடைய ரசிகர்கள் செலவு செய்து ஏதேனும் திரைப்படத்தை 16mm ப்ரொஜெக்டர் வைத்து திரையிடுவார்கள். இது போன்று திரையிடும் திரைப்படங்களை பலமுறை நாலணாவுக்கு பொட்டு கடலையையும் ஒரு பைசா குடல் அப்பளம் நாலணாவுக்கும் வாங்கினால் அதை சாப்பிட்டு கொண்டே படத்தை பார்த்து ரசிக்கலாம். ஒரு திரைப்படத்தை மக்கள் எவ்வாறு ரசிக்கிறார்கள் என்பதை அங்குதான் பார்க்க முடியும்.

இன்றைய கால கட்டத்தில் திரைப்படங்கள் திரையிடப்படும் பகுதிகளை எ, பி, சி (A B C) என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் வகைப்படுத்தப்படாத ஒரு பிரிவு, வெளிவந்து இருபது வருடங்களுக்கு பிறகும் ஆர்பாட்டத்துடன் ரசிக்கும் எங்கள் கிராமத்து மக்கள்தான்.

சமீபத்தில் கூட எங்களுடைய குலதெய்வ கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றிருந்தேன். விழா முடிந்து இரவில் அண்ணாமலை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் இம்முறை LED ப்ரொஜெக்டரிலிருந்து.

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு