காலம் களவாடி தன்னுள் மறைத்துக்கொண்ட கடந்த கால வாழ்க்கையின் மிச்சங்கள் நம் ஒவ்வொருவரின் மனச்சுவரிலும் நினைவோவியங்களாய் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இன்று நாற்பதை கடந்தவர்களும் ஐம்பதை தான்டியவர்களும் தங்களின் மனச்சுவரில் தேடினால் நிச்சயமாய் ஒரு நினைவுப்படம் காணக்கிடைக்கும்...
வீட்டின் கூடத்தில் மேசையின் மீதோ சுவற்றில் பொருத்தப்பட்ட மர ஷெல்பிலோ ஒரு சில பழைய இன்லாண்டு கடிதங்கள், காந்திதலை அச்சிட்ட மஞ்சள் நிற தபால் அட்டைகள் மற்றும் அபூர்வமாய் ஒன்றிரண்டு வெளிநாட்டுத் தபால்கள் இத்யாதிகளுக்கு மத்தியில் நடுநயமாய் வெல்வெட் துண்டு போர்த்தப்பட்ட ஒரு சாதனம் என்பதாக நினைவில் தொக்கி நிற்கும் அதுதான்...
"மோர்பி ரேடியோ" என்ற பொதுப்பெயரில் கொண்டாடப்பட்ட வானொலி பெட்டி !

தொலைக்காட்சி பெட்டிகள் ஊர் எல்லையை தொட்டிராத ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் சாமானிய மக்களின் ஒரே உடனடி ஊடகம் வானொலி பெட்டி தான் ! சாட்டிலைட் சானல்களும் ஸ்மார்ட் போன் சுலபங்களும் வருங்காலத்தில் வருவதற்கான அறிகுறிகளை கூட கொண்டிராத அன்றைய பொழுதுகளின் ஒரே காற்றலை பொழுதுபோக்கு வானொலி மட்டுமே !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் அவ்வளவு எளிதாக வெகுஜன மக்களை சென்றடைந்துவிடுவது கிடையாது எனும் விதி எக்காலத்துக்கும் பொருந்தும். சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் உத்திகளும் பிக் டேட்டா தரவுகளும் இல்லாத அன்றைய காலகட்டத்தில் கிராமப்புற மக்களை வானொலி பெட்டி வாங்க தூண்டுவதற்காக கையாளப்பட்ட உத்தியை பற்றிய கதை ஒன்று உண்டு...
பஞ்சாயத்துக்கூடம் போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் ஒரு வானொலி பெட்டியை விற்பனையாளர்கள் இலவசமாக வைத்துவிடுவார்களாம். முதலில் என்ன ஏது எனும் ஆர்வத்தில் கூடும் மக்கள் கூட்டம் படிப்படியாக வானொலி நிகழ்ச்சிகளுக்கு பழகி, அவரவருக்கு பிடித்த நிகழ்ச்சியின் நேரத்துக்கு வானொலி பெட்டியின் அருகில் அமர்ந்து பழகிய ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பெட்டியை தூக்கிக்கொண்டு அருகாமை நகரங்களிலிருக்கும் தங்களின் கடைகளுக்கு நடையை கட்டிவிடுவார்களாம் விற்பனையாளர்கள் !
பின்னர் என்ன ? பண்ணையாரும் பத்மினியும் கதைதான்...

வானொலி நிகழ்ச்சிக்கு பழகிய மக்கள் “வெள்ளாமை” பணத்தை மடியில் கட்டிக்கொண்டு நகரத்துக்கு கிளம்பி விடுவார்கள் ! வானொலி பெட்டி வர்த்தகத்தில் அந்த காலத்திலேயே தவணை முறையும் வழக்கத்திலிருந்திருக்கிறது !
தேர்தல், வேலை நிறுத்தம் தொடங்கி இயற்கை பேரிடர்கள், தலைவர்களின் மரணங்கள் என சகஜ வாழ்க்கையை பாதிக்கும் நிகழ்வுகள் அனைத்தின் போதும்,
"ரேடியோவை வை !"
எனும் வாசகம் அனைத்து வீடுகளிலும் கேட்கும் !
கடைத்தெரு டீ கடை வானொலி பெட்டிகளில்,
"ஆகாச வாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி…"
எனும் குரல் ஒலிக்க தொடங்கினால் வாகன சப்தங்கள் கூட சற்றே மட்டுப்படும். வெட்டிப்பேச்சு அரட்டையர்களின் குரல்கள் அடங்கும் ! தேநீர் குடிப்பவர்களின் புருவங்கள் சுருங்கி, கண்கள் இடுங்கி, காதுகள் தலைப்பு செய்திகளை கிரகிக்க தொடங்கும் !
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரு குறிப்பிட்ட காலத்தின் அடையாளமாகவே மாறிப்போன அந்த குரல் வழிதான் நாட்டு நடப்புகளும் உலக அரசியல் நிகழ்வுகளும் மக்களை வந்தடைந்தன ! பாரத பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையும் இந்திய இலங்கை ராணுவ நடவடிக்கைகளும் உடனுக்குடன் உள்ளூர் செவிகளை சேர்ந்ததும் ஆணா பெண்ணா என சட்டென அனுமானிக்க முடியாத அந்த அழுத்தமான, தெளிவான குரலால்தான் !
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் காளி, இரான் அதிபர் அலி அக்பர் ரப்செஞ்சானி என்பது போன்ற அன்றைய பொது அறிவு கேள்விகளுக்கான விடையை எங்களுக்கு கொடுத்ததும் அந்த குரல்தான் !

"பீரியட் " திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தை திரையில் உயிரூட்ட அந்த காலகட்ட நடை உடை பாவனைகளும், பொருட்களும்தான் பொதுவாக பயன்படுத்தப்படும். ஆனால் சுப்ரமணியபுரம், சர்ப்பட்டா போன்ற திரைப்படங்களில் காலத்தை உணர்த்தி, சமகால வரலாற்றுத் தடமாகவே பதிந்துவிட்டது சரோஜ் நாராயணசாமியின் குரல் !
சரோஜ் நாராயணசாமியின் வானொலி சேவைக்காக தமிழக அரசு 2009ம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்ததும், அகில இந்திய வானொலியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தமிழ் பட வசனங்களுக்கு ஆங்கில மொழியாக்கம், ஆவணப்படங்களுக்குக் குரல் கொடுப்பது என அவர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்ததும் நாம் அதிகம் அறியாத செய்திகள்.
சரோஜ் நாராயணசாமியின் வானொலி சேவைக்காக தமிழக அரசு 2009ம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்ததும், அகில இந்திய வானொலியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தமிழ் பட வசனங்களுக்கு ஆங்கில மொழியாக்கம், ஆவணப்படங்களுக்குக் குரல் கொடுப்பது என அவர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்ததும் நாம் அதிகம் அறியாத செய்திகள்.

இந்தியத் தேசிய தலைவர்களில் யாராவது மரணித்துவிட்டால், விவித் பாரதியில் இரங்கல் இசை வாசிக்கப்படும். இறந்தவர் கூட எழுந்து நிறுத்த சொல்லக்கூடிய அந்த வயலின் இசையை கேட்டவுடன் கடல் தொடும் குமரிக்கு மறுபுற தமிழகத்தில் இருப்பவர்கள் கூட ஹனுமான் பாய்ச்சலில் இலங்கை வானொலிக்கு தாவி விடுவார்கள் !
தமிழ் நெஞ்சங்களை ஏகபோக குத்தகைக்கு எடுத்திருந்த இலங்கை வானொலி தான் ஆசியாவின் முதல் வானொலி நிலையம். ஐரோப்பாவில் வானொலி ஒலிபரப்பு தொடங்கிய மூன்றே ஆண்டுகளில், 1923ம் ஆண்டு இலங்கை வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.
இலங்கை வானொலியின் இசைத்தட்டு தொகுப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஒன்று. 1920களில் தொடங்கி, ஏறக்குறைய அனைத்து தமிழ் திரைப்பட பாடல்களும் அந்த தொகுப்பில் அடங்கும் எனக்கூறுவார்கள். இதில் வெளிவராமலே போன படங்களின் பாடல்களும் அடங்கும் !
இந்தியாவின் சென்னையை மையமாக கொண்ட தமிழ்திரைத்துறையின் பாடல்களின் ஏகபோக சரணாலயமாக இலங்கை வானொலி மாறியதற்கு ஒரு அரசியல் காரணமும் உண்டு.

இந்திய வானொலி திரைப்பட பாடல்களை ஒலிபரப்ப கூடாது என 1952ம் ஆண்டு தகவல் ஒலிபரப்புத்துறை விதித்த தடை, தமிழ் திரையுலகம் இலங்கை வானொலியை தன் ஒட்டுமொத்த விளம்பர மையமாக ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது.
இலங்கை வானொலியை கேட்டறிந்தவர்களுக்குத் திரைப்பாடல்கள் என்றதுமே,
"இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக ஒலிபரப்பு... பொங்கும் பூம்புனல்"
என கே. ஜெயகிருஷ்ணாவின் மெஸ்மெரிச குரலில் தொடங்கும் அறிவிப்பும் அதை தொடர்ந்த அந்த நிகழ்ச்சியின் தொடக்க இசையும் மனதில் மறுஒலிபரப்பாகும். பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தவர்களின் எண்ண தடங்களில் இசை கீறல்களாய் பதிந்துவிட்ட அந்த பூலோக காந்தருவ இசைத்துணுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் படைப்பு.
1970ல் வெளிவந்த "Thrilling Thematic Tunes of MS Viswanathan" எனும் அவரது இசைத்தொகுப்பின் ராசலீலா எனும் பெயர்கொண்ட இசைக்கோர்வை அது ! இசைஞானி மற்றும் இசைப்புயலின் ஆல்பங்களை சிலாகிப்பவர்கள், மெல்லிசை மன்னரின் இந்த இசைத்தொகுப்பையும் அவசியம் கேட்க வேண்டும் !
பாடல் தொகுப்புகள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளில் ஜனரஞ்சகமிக்க புதுமைகள், தூய தமிழ் உச்சரிப்பு, திறமையான தொகுப்பாளர்கள் என இலங்கை வானொலி காற்றலை ராஜபாட்டையில் நடை போட்டதற்குப் பல காரணங்களை அடுக்கலாம் !
ஒட்டு மொத்த தமிழ் வானொலி நேயர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டிருந்த கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீத் இருவரையும் ரஜினி கமலுடன் ஒப்பிடலாம் !

"பிறந்த நாள்...இன்று பிறந்த நாள்... பிள்ளைகள்போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்..."
என டி.எம்.எஸ்சின் குரலுடன் தொடங்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சியில் நேயர் பெயரை குறிப்பிட்டு, "இவரை வாழ்த்துவது தாத்தா, பாட்டி, பெரியப்பா மற்றும்..." என வார்த்தை பிறழாமல் வேகமாக உச்சரிப்பதிலும்,
நேயர் விருப்பத்தில் பல நேயர்களின் பெயர்களை அவரவர் ஊர்களுடன் மூச்சுவிடாமல் அறிவிப்பதிலும்,
"நாளை வரை உங்களிடமிருந்து நன்றிக்கூறி விடை பெறுவது" என நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறுவதிலும் தனக்கென ஒரு வேகமான ஸ்டைலை கடை பிடித்தவர் கே. எஸ். ராஜா. இவரை இன்றைய தமிழ் "ரேடியோ ஜாக்கிகளின்" முன்னோடி என தாராளமாக கொண்டாடலாம்.
அப்துல் ஹமீதோ கம்பீரமான குரலில் அழுத்தமான உச்சரிப்புடன் நிதானமான பேச்சு பாணியைக் கொண்டவர் !
பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில்,
"நான் குறிப்பிட்டது கு குறில் அல்ல... கூ நெடில் !"
எனும் அவரது வெண்கல குரல் ஏகபிரபலம் !
இலங்கை வானொலியின் வெற்றிக்கான காரணங்களில் துறைசார்ந்த அறிவு மற்றும் அவர்களது சமயோஜிதம் ஆகியவை முதன்மையானவை.
படம், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பெயர்களை வெறும் இயந்திரத்தனமாக மட்டும் அறிவிக்காமல் அந்த படத்தின் படப்பிடிப்பின்போதோ அல்லது இசையமைப்பின்போதோ நடந்த சம்பவங்களையும் சுவையுடன் குறிப்பிடுவார்கள்.

சமயோஜிதம் பற்றிக் குறிப்பிடும் போது தூய தமிழின் மீது இலங்கை தமிழர்களுக்கு இருக்கும் பற்றும் ஞாபகம் வருகிறது...
ஒரு முறை,
"இந்த திரைப்பட பாடலாசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள்... மிக அழகான தமிழ் பாடலிலும் எதுகை மோனையாக ஆங்கில வார்த்தையை கலந்து விடுகிறார்களே !"
என்ற அறிவிப்புடன் ஒரு பாடல் ஒலிபரப்பப்பட்டது.
அந்த பாடல், "மயிலாடும் தோப்பில் மானாட கண்டேன் » என தொடங்கும் `சின்ன பசங்க நாங்க’ படத்தின் பாடல். அதில் வரும் "வெல்வெட்டு கண்ணம் தொட்டு வைக்கின்ற முத்தமெல்லாம்" வரிகளில் வரும் "வெல்வெட்" எனும் ஆங்கில வார்த்தையைக் குறிப்பிட்டுத்தான் அப்படி அறிவித்திருந்தார் தொகுப்பாளர் !
-காரை. அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.