Published:Updated:

நினைவு நாடாவில் பதிந்த நிரந்தர பாடல்! - கிராமத்தானின் ரேடியோ பெட்டி மெமரீஸ் 2

Representational Image

அந்த இரவின் ஏகாந்தத்தைக் கலைக்காமல் தவழ்ந்துகொண்டிருந்த இசையின் ஒரு பகுதி சட்டென என்னை ஈர்த்த அடுத்த நொடியே என் பால்யத்துக்கு உண்மையாகவே மீண்டுவிட்ட உணர்வு !

நினைவு நாடாவில் பதிந்த நிரந்தர பாடல்! - கிராமத்தானின் ரேடியோ பெட்டி மெமரீஸ் 2

அந்த இரவின் ஏகாந்தத்தைக் கலைக்காமல் தவழ்ந்துகொண்டிருந்த இசையின் ஒரு பகுதி சட்டென என்னை ஈர்த்த அடுத்த நொடியே என் பால்யத்துக்கு உண்மையாகவே மீண்டுவிட்ட உணர்வு !

Published:Updated:
Representational Image

டந்த கால நினைவுச்சுமைகள், நிகழ் கால கவலைகள், வருங்கால ஆசைகள் எதுவுமற்ற விடலை பருவத்தில் எத்தனையோ அந்தி மயங்கும் மாலைப் பொழுதுகளில் கடற்கரைச் சாலையில் மிதிவண்டியில் அலைந்திருந்தாலும்,

"இந்த பொன்னந்தி மாலையை மறக்க முடியாததாக்க வருகிறார் கவிஞர் வைரமுத்து..."

என்ற அறிவிப்புடன், எதோ ஒரு தேநீர்க் கடையின் வானொலியிலிருந்து காற்றில் தவழ்ந்த "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடலை என் காதுவரை கடற்காற்று கடத்தி வந்த அந்த அந்தி மட்டும் என் எண்ணச் சந்தின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் இருட்டாமலேயே உறைந்து கிடக்கிறது !

Representational Image
Representational Image

லங்கை வானொலி மூலம் தமிழ் நாட்டில் பிரபலமான இசை வடிவம் சிலோன் பைலா. சுராங்கனி, சின்ன மாமியே போன்ற சிலோன் பைலா பாடல்கள் அன்றைய அனைத்து இளவட்டங்களாலும் முணுமுணுக்கப்பட்டன !

அன்றைய நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் குரல்கள், விளம்பரங்கள், ஒளிபரப்பப்பட்ட பாடல்களின் தொகுப்பு என இன்றைய இணைய வெளியில் கிடைக்கும் பதிவேற்றங்கள் வானொலி நேயர்களுக்கும் இலங்கை வானொலிக்கும் இருந்த ஆத்மார்த்தமான நேசத்துக்கு சாட்சி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லங்கை வானொலியின் வர்த்தக வெற்றியை கண்ட பிறகு 1957ம் ஆண்டு தொடங்கப்பட்டது விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்... விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு…"

என்ற அறிவிப்பை தொடரும் தொடக்க இசையும் என் நினைவு நாடாக்களில் நிரந்தரமாக பதிவாகிவிட்ட ஒன்று !

சில வருடங்களுக்கு முன்னர், நள்ளிரவை கடந்த பொழுதில், பாரீஸ் நகரத்தின் நிலவறை கார்பார்க்கிங் ஒன்றின் படிகளில், ஏதோ நினைவுகளில் மூழ்கி தன்னிச்சையாக இறங்கிக்கொண்டிருந்தேன்...

அந்த இரவின் ஏகாந்தத்தைக் கலைக்காமல் தவழ்ந்துகொண்டிருந்த இசையின் ஒரு பகுதி சட்டென என்னை ஈர்த்த அடுத்த நொடியே என் பால்யத்துக்கு உண்மையாகவே மீண்டுவிட்ட உணர்வு !

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியை ஒரு நொடியில் இல்லாமல் ஆக்கி, ஞாயிறு மாலைகளில் ஊஞ்சல் ஆடும் என் தந்தையின் மடியில் அமர்ந்து வானொலி நிகழ்ச்சிகள் கேட்ட அந்த தருணத்துக்கு என்னை அழைத்துத் திரும்பிய அந்த இசைத்துணுக்கு தான் விவித் பாரதி தமிழ் வர்த்தக ஒலிபரப்பின் ஆரம்ப இசை!

நினைவு நாடாவில் பதிந்த நிரந்தர பாடல்! - கிராமத்தானின் ரேடியோ பெட்டி மெமரீஸ் 2

ஏதோ ஒரு மேற்கத்திய சிம்பொனி இசைத்தொகுப்பின் அந்த இசைக் கோர்வையை இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்…

சோசியல் மீடியா அட்ராசிட்டிகளெல்லாம் இல்லாத அந்த காலத்தில் புதிய திரைப்படங்களுக்கான விளம்பர மேடையாக விளங்கியதும் வானொலிதான் !

இரவு எட்டரை மணி அளவில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படங்களுக்கான விளம்பர ஒலிபரப்பு நிகழும். பாடல்களின் ஆரம்ப வரிகள் மற்றும் முக்கிய காட்சிகளின் வசனங்களுக்கிடையே "விரைவில் உங்கள் அபிமான திரையரங்குகளில்..." என ஒலிக்கும் அறிவிப்பாளரின் குரலுடன் ஒலிபரப்பான அந்த விளம்பரங்களை இன்றைய திரைப்பட டீசர் மற்றும் டிரைலர்களுக்கான முன்னோடி எனக் கூறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொண்டாட்டமான பறை இசையுடன் "ஜே... அண்ணனுக்கு ஜே... காளையனுக்கு ஜே..." என தொடங்கிய ரஜினிகாந்த்தின் முரட்டுக்காளை பட விளம்பரமும், "தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட.." என ஆரம்பித்து புதுமையாக வில்லுப்பாட்டு பாணியில் விளம்பரப்படுத்தப்பட்ட கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள் பட விளம்பரமும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கின்றன!

புதுப்படங்களின் பாடல்கள் பிரபலமாக தொடங்கியதுமே, அந்த படத்தின் பாட்டு புத்தகத்தை வாங்க ஒரு கூட்டம் எங்கள் ஊரின் ஒரே பெரிய புத்தக கடையாக விளங்கிய ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர்ஸை மொய்க்கும். ரஜினி, கமல் படங்களின் முதல் காட்சிகளின் போது, அந்தந்த படங்களின் பாட்டு புத்தகங்களைக் கையில் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக நின்ற உள்ளூர் மைனர்களும் உண்டு !

"யூ டியூப் மில்லியன் வியூ" அளவை போல, அன்றைய வானொலியில் ஒலிபரப்பான புதிய திரைப்பாடல்களின் வெற்றி அது எத்தனை முறை தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது என்ற எண்ணிக்கையை வைத்துக் கணக்கிடப்பட்டது.

Representational Image
Representational Image

சின்னவர் படத்தின் "அந்தியில வானம்" பாடல், காலை சரியாக ஏழரை மணிக்கு தொடர்ந்து வாரக்கணக்கில் ஒலிபரப்பாகி நாங்கள் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய நேரத்தை உணர்த்தும் அலாரமாகவே சில காலத்துக்கு திகழ்ந்தது !

ஐந்தே நிமிட நிகழ்ச்சியின் மூலம் உலக புகழடைந்த ஒரே வானொலி நிகழ்ச்சியாளர் உலகத்திலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் !

மிழ் வானொலி பற்றிய எந்த ஒரு பதிவும், நெல்லை வானொலியில் அறிவிப்பாளாராக தொடங்கி அகில இந்திய வானொலியின் உதவி இயக்குநராக ஓய்வு பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதனைப் பற்றி குறிப்பிடாமல் முழுமை பெறாது. ஐந்தே நிமிட நிகழ்ச்சியின் மூலம் உலக புகழடைந்த ஒரே வானொலி நிகழ்ச்சியாளர் உலகத்திலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் !

சற்றே அயர்வான தொனியை கொண்ட குரலில், ஒரு குட்டி கதை அல்லது வாழ்க்கை அனுபவம் மூலம் ஐந்தே நிமிடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இவரது இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை பள்ளிக்கூடம் கிளம்பும் அலப்பறைகளுக்கு மத்தியிலும் மறந்ததில்லை. அன்றைய தகவலை பள்ளிக்கூட முதல் பீரியட்டில் ஒப்பிக்க ஒரு போட்டியே நிகழும். இன்று ஒரு தகவலை தவறவிடக்கூடாது என்பதற்காக பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் இரட்டை அலாரம் வைத்துக்கொண்டெல்லாம் உறங்கியது உண்டு !

1988ம் ஆண்டிலிருந்து 2002 வரை தொடர்ந்து ஒலிபரப்பாகி வயது வித்தியாசம் எல்லை பேதமின்றி உலக தமிழ் வானொலி நேயர்கள் அனைவரையும் கவர்ந்த இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி மொத்தமாக தொகுக்கப்பட்டு, 23 பாக புத்தகங்களாய் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக விற்பனையில் தனக்கு கிடைத்த வருமானம் முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார் தென்கச்சி சுவாமிநாதன்.

வீட்டை விட்டு அதிகம் வெளியே போக வாய்ப்பு இல்லாத வயசு பெண்களின் அன்றைய விரல்விட்டு எண்ணக்கூடிய பொழுது போக்கு நிகழ்வுகளில் முதன்மையாக விளங்கியவை நீங்கள் கேட்டவை, நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகள் தான் !

பதினைந்து பைசா தபால் அட்டையில் பிடித்த பாடலை ஊர், பெயருடன் எழுதி அனுப்பிவிட்டு காத்திருந்து, நிகழ்ச்சியில் பெயர் உச்சரிக்கப்பட்டுவிட்டால் தெருவே குதூகலிக்கும் !

Representational Image
Representational Image

வானொலி பெட்டிக்கு அருகே குத்துக்காலிட்டு,

"செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே... என் மன்னன் எங்கே"

பாடல் வரிகளில் லயித்து, முகம் தெரியாத மன்னவனின் வருகையை எதிர்நோக்கி, ஏங்கி காத்திருந்த எங்கள் தெரு முதிர்கன்னி அக்காக்களின் ஞாபகம் அந்த பாடலை இப்போது கேட்டாலும் வந்து போகும்!

-காரை.அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism