வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
தொண்ணூறுகளில் பொதிகை சேனலில் பிரதி ஞாயிறு மதியம் தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் ஒளி பரப்புவார்கள். அதில் ஒரு வங்காள மொழிப்படம். இயக்குனர் சத்யஜித்ரே என்று நினைக்கிறேன்.
ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். அதில் பிறந்த மகள் பால்ய விவாகம் நடந்து உடனே கணவன் இறந்து விட பிறந்த வீடு வந்து விடுகிறாள் ஏழு வயது பெண் மகவுடன்.
அவளுக்கும் ஏழு வயதில் இருபது வயது ஆணுடன் பால்ய விவாஹம். ருதுவான பின் தான் புகுந்த வீட்டில் சீர் செனத்தியுடன் கொண்டு போய் விடுவது சம்பிரதாயம். ஆனால் அதற்குள் அந்த கணவன் விபத்தில் இறந்து விட கணவன் முகம் கூட சரியாக பார்த்தறியாதவள் புகுந்த வீடு போகாமல் தன் தாய் பிறந்த வீட்டில் அவளோடு தானும் கைம்பெண் கோலம் பூணுகிறாள். தலை சிரைத்து, பொட்டிழ்ந்து, பூவிழந்து வெள்ளையுடுத்தி , மலரும் போதே கருகி விடுகிறாள். அது அவள் விதி என்கின்றது இந்த சமூகம்!

கூட்டுக்குடும்பம் ஆதலால் பாட்டிகள் அத்தைகள் அவள் என்னும் விதவையர் கூட்டம் அடுக்களை மட்டுமே உலகமென வாழ வேண்டிய கட்டாயம்.
அப்போது தான் அந்த வீட்டின் அடுத்த வாரிசு வெளிநாட்டில் படித்து விட்டு வீடு திரும்புகிறான். அவன் பார்வையில் தோட்டத்தில் கன்றுக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் அத்தையின் விதவை மகள் கண்ணில் படுகிறாள்.
அவள் நிலையறிந்து வீட்டினருடன் போராடி அவள் உடையை நிலையை மாற்றி கல்வி புகட்டுகிறான். இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறாமல் ஏதோ இந்த மட்டும் உயிரோடு இருக்கிறாளே என்று அவள் உயிரை அவளுக்கு பிச்சை விட்டிருக்கிறது இந்த சமூகம் என்கின்றனர் வீட்டினர். உடன்கட்டை ஏற்றியது உங்கள் சனாதனம். உயிர் பிச்சை இட்டது சதிக்கு எதிராக சட்டமிட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் என்று சொல்கிறான் அவன்.
சமையலறையிலிருந்து வீட்டின் முன்னணிக்கு வருகிற அளவிற்கு தயாராகிறாள் அவள்.

அடிமை சங்கிலி அறுபட்டு தன் மகள் சிறகடித்து பறக்கப் போகிறாள் என்று தாய் மகிழ்ச்சி கொள்கிறாள். அவனுக்கு திருமணம் செய்ய பெண் பார்க்கின்றனர் அவன் பெற்றோர். என் மகளின் நிலை மாற்றி மேற்கொண்டு படிக்கவும் வைத்தாய். மகளை திருமணம் செய்ய மாட்டாயா என்று கேட்கிறாள் இவளுடைய தாய். அவள் மீதுகொண்ட அக்கறையால் செய்தேன். திருமணம் செய்வது என்பது இந்த சமூகத்தில் முடியாது என்கிறான் அவன். அதற்கு நான் என் இடத்தில் நானாக இருந்திருப்பேன் என்கிறாள் அந்த இளம் விதவை.
ஒரு சகோதரனால் பெண்களை வீட்டின் முன்னறை வரை தான் கொண்டு போக முடியும். கணவனால் மட்டும் தான் வெளியுலகம் காட்ட முடியும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெண்களின் நிலை இது தான். நான் பார்த்ததும் என்னை பாதித்ததுமான திரைப்படம் இது!

என் பாட்டி இவர்களைப் போல கைம்பெண் கோலம் பூண்டவர்கள். ஐம்பது வருடங்களுக்கு முன் விதவையான என் பெரியம்மாவிற்கு இந்த கதி ஏற்படவில்லை. இப்போது என் சகோதரிகள் பொட்டிட்டு கொள்கிறார்கள். இன்றைய இளம் விதவையர் மறுமணம் செய்து கொள்கிறார்கள்.
காரணம்?
பெரியார் என்னும் ஒரு மாமனிதர். பெண் ஏன் அடிமையானாள் என்று சிந்தித்தவர்.
மக்களை, சமூகத்தை, அதில் புரையோடியிருந்த கொடூர பழக்கத்தை எதிர்த்து போராடியவர். மக்களுக்காக மக்களிடம் போராடியவர். பெண்களுக்காக சிந்தித்த இவர் மட்டும் இல்லையென்றால்.? குடும்பத்தால் கைவிடப்பட்ட பிருந்தாவனம் என்னும் விதவையர் நகரம் தமிழகத்தில் வேர் பிடித்து கிளை பரப்பியிருக்கும்.

பிருந்தாவனம் (Vrindavan) "விதவைகளின் நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. கணவனை இழந்த பிறகு ஏராளமான விதவைகள் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்வதால். 15,000 முதல் 20,000 விதவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விதவைகள் மேற்கு வங்கம், அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து வருகிறார்கள். பலர் பஜனாசிரமங்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ கில்ட் ஆஃப் சர்வீஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, விதவைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் பல இல்லங்கள் மற்றும் பல்வேறு NGOக்கள் உள்ளன. இப்போது தான் அந்த விதவைப் பெண்கள் வண்ணமயமாக தீபாவளி கொண்டாடினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நம் தமிழ்நாடு போல ஆக இன்னும் எத்தனை பெரியார்கள் அங்கே பிறக்க வேண்டுமோ?
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.