'ம்' இந்த ஒற்றை எழுத்து எவ்வளவு பெரிய விஷயங்களுக்கும் தீர்வைக் கொடுத்துவிடும். தற்போது பல வார்த்தைகள் சுருங்கிவிட்டன. 'சகோதரன்' 'சகோ'...பங்காளி 'பங்கு'.. வாட்ஸ் ஆப்பில் ஓ.கே. K ஆக மாறிவிட்டது. இவைகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் ஒரு பொண்ணு பையன்கிட்ட 'ம்' ன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும். அந்த ஒற்றை எழுத்து பல மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
இதைதான் ராமாயணத்தில் 'அண்ணலு 'ம்' நோக்கினான் ...அவளு 'ம்' நோக்கினாள்... என்று கம்பர் பாடினார். அங்கே இரண்டு 'ம்' கள் வந்ததால் அது காதலாகி கல்யாணத்தில் முடிந்தது.
'ம்'...என்ற ஒற்றை எழுத்தில் ஹம்மிங் சுமார் 10 லிருந்து 12 வினாடிகள் தொடர்ந்து பின்னர் ஒலிக்குமே 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாட்டு... எப்போது கேட்டாலும் அந்த ரீங்காரம் காதுக்குள் நுழைந்து உடல் முழுவதும் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். 'ம்' மின் தாக்கத்தை பற்றி... ம் மில் முடியும் சிலவற்றைப் பற்றியும் விரிவாக பார்போம்.

குள...'ம்' :
கிராமத்து அடையாளங்களில் பிரதானமானது குளம். 1980 வரையில் பல கிராமங்களில் குளங்களில் நீர் வற்றாமல் மக்களுக்கு கோடையிலும் பயன்பெறும் விதமாகவே இருந்து வந்தன. பின்னர் மெல்ல மெல்ல தூர் வாருவது குறைந்து போனது. ஒரு கட்டத்தில் சில குளங்களே காணாமல் போய்விட்டன. குளம் என்றதும் உலகளவில் புகழ்பெற்ற மகாமக குளம் நம் நினைவில் வந்து நிற்கும்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது மகாமகம். இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து புனித நீராடுவார்கள். கும்பகோணம் நகருக்கு பெருமை சேர்ப்பது இந்த குளம்தான். அந்த வகையில் பார்த்தால் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். திருவாரூர் கமலாலய தெப்பக்குளம் இவை இரண்டும் புகழ்பெற்றவை.
மனோன்மணீய 'ம்' :
பெ.சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றபட்ட நாடக நூலாகும் இது. நாடக இலக்கியங்களில் முதன்மையானது. லிட்டன் பிரபு என்ற ஆங்கிலேயர் எழுதிய 'The Secret Way' (ரகசிய வழி) என்ற நாவலை தழுவி எழுதப்பட்டது. காப்பிய நாயகி 'மனோன்மணி' சிவபக்தி கொண்டவள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅரண்மனையில் இருந்தும் அவள் மனம் துறவறம் நாடுகிறது. நிச்சயம் ஒரு நாள் உனக்குள் காதல் மலரும் என்று அவள் தோழி சொன்னது போலவே கனவில் ஒருவனை கண்டு காதல் கொள்கிறாள். அவள் கனவில் கண்டது சேர மன்னன் புருடோத்தமனை. அவனுக்கும் அதே போல கனவு வருகிறது. விஜய் நடித்த 'நினைத்தேன் வந்தாய்' மூலக்கதை எங்கே இருந்து உருவாகி இருக்கு பார்த்தீர்களா....?". இந்த காதல் எப்படி திருமணத்தில் முடிகிறது. மணமகளின் தந்தை சீவகன் வில்லன் குடிலனிடம் இருந்து எப்படி காப்பாற்றப் படுகிறான் என்பதை அழகான செய்யுள்களால் விளக்கி உள்ளார்.
நமது தமிழ்த்தாய் வாழ்த்து 'நீராரும் கடலுத்த' இதிலிருந்துதான் உருவானது என்பது கூடுதல் சிறப்பு.
நாதஸ்வர 'ம்' : "மங்களகரமான இசைக்கருவி. சிறந்த கலைஞன் ஒருவன் வாசிக்கும் போது நாம் மெய்மறந்து கேட்டு ரசிப்போம். அது 'சிக்கல் சண்முகசுந்தரம்' மாதிரி இருந்து விட்டால் என்று நினைக்கும் போதே 'எவன்டா அவன்... சுத்த ஞானம் கெட்டவனா இருக்கானே...மோகனா இல்லாமலா...? " என்று கலியுக நந்தி முத்ராக்கண்ணு அதட்டல் போட்டு கேட்பார்.
சாதனை படைத்த அந்த தில்லானா மோகனம்பாள் படத்தில் 'நாதஸ்வரமும் நாட்டியமும் இணைந்து தமிழ் திரையுலகத்தை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. அதில் நாதஸ்வர கலைஞர்கள் மதுரை M.P.N. சேதுராமன், M.P.N. பொன்னுசாமி இருவரும் நாதஸ்வரம் வாசித்து புகழ் பெற்றார்கள். தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம் 'நலந்தானா... நலந்தானா..' என்றே இல்லாத அவர்களில் பலரைப் பார்த்து கேட்கத் தோன்றும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அது மட்டுமா ஜூனியர்களுக்கான பாட்டுப் போட்டிகளில் பெரும்பாலானோர் தேர்வு செய்து பாடுவது 'சிங்கார வேலனே தேவா' பாடலை. காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வரம் வாசிக்க எஸ்.ஜானகி பாடியிருப்பார். தேமதுர இசை என்பார்களே அது அந்த பாடலைக் கேட்டு பார்த்தால் புரியும்.காருக்குறிச்சி அருணாசலம், மதுரை சேதுராமன், பொன்னுசாமி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவிழா ஜெய்சங்கர் என்று பட்டியல் தொடரும். திருவிழா ஜெய்சங்கரும் தவில் வித்வான் வலையப்பட்டி சுப்ரமணியன் இருவரும் இணைந்து பல கச்சேரிகள் நடத்தி இருக்கிறார்கள். முத்துராமன் சுஜாதா நடித்த 'பலப்பரீட்சை' திரைப்படத்தில் 'மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துகள்' என்ற பாடலுக்கு வாசித்திருக்கிறார்கள்.

இனிமையான அப்பாடலுக்கு இசை அமைத்தவர்/ அப்படத்தில் இசையமைப்பாளராக மாறிய T.M. சௌந்தர்ராஜன் அவர்கள். நாதஸ்வரத்திற்கு பிரத்யேகமாக அமையப்பெற்றது 'மல்லாரி'. சுவாமி புறப்பாட்டின் போது அது வாசிக்கப்படும். நம்மை தாளம் போடவைக்கும் அந்த 'மல்லாரி'. இனி எந்த ஒரு கோயிலுக்கு சென்றாலும் 'மல்லாரி' வாசிப்பை கேட்டுப்பாருங்கள். தெய்வீக நிலைக்கு செல்வீர்கள்.

மருத்துவ 'ம்' :
"AN APPLE A DAY KEEPS THE DOCTOR AWAY" என்று ஆங்கிலப் பழமொழி உண்டு. மருத்துவம் குறித்து பேசும் போது சிலருக்கு இது நினைவில் வந்து போகும். எம் பையனை டாக்டராக்க வேண்டும் - பெரும்பாலான பெற்றோர்களுக்கு லட்சியமே அதுதான். ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்தான் காரணமாக இருக்குமோ...? அவர்களின் உள் மனது சொல்லும் உண்மையான காரணத்தை. தனியார் மருத்துவமனைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை 'ரமணா' படத்தில் வெளிச்சம் போட்டு காட்டினார்கள். அரசியலுக்கு அடுத்தபடியாக வாரிசுகள் அதிகமாக வருவது மருத்துவதுறையில்தான்.
மருத்துவ துறையில் செவிலியர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது மே 12 ந் தேதி அன்று. கைவிளக்கேந்திய காரிகை' யான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்த தினம். தினசரி 20 மணி நேரம் நோயாளிகளுக்காக செலவிட்டார். தனது வாழ்க்கையையே மருத்துவத்திற்காக அற்பணித்தார். சென்னையில் வெறும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் திருவேங்கடம், டாக்டர் ஜெயசந்திரன் போன்றவர்கள் இருந்தார்கள். தாம்பரத்தில் டாக்டர் சேஷகிரி. இவர் 20 ரூபாய் வாங்குகிறார் என்று நண்பர் ஒருவர் தகவல் சொன்னார். அதிகமாக கொடுத்தால் வாங்க மாட்டார் என்றும் சொன்னார். மக்கள் பணியே மகேசன் பணி - இவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும். இது போன்ற நல்ல உள்ளங்களுக்கு வாரிசுகளாக இன்னும் நிறைய பேர் வரவேண்டு. 'ம்.'

அரசியலில் ஒன்று பயன்படுத்துவார்கள்...`` 'ம்' என்றால் சிறைவாசம் ... 'ஏன்' என்றால் வனவாசம்..'' என்ற வாசகத்தை ஒரு ஆட்சியின் அடக்குமுறை அரசியலை சுருக்கமாக சொல்ல இப்படிச் சொல்வார்கள்
புதிய ஆத்திச்சூடியில் பாரதி பாடிய இப்பாடலை 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி அவர்கள் அமல்படுத்திய அவசர நிலையின் விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைக்க அதைப் பயன்படுத்தினார்கள் திமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்கட்சியினர். உற்சாகம், சந்தோஷம், எங்கும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும். மனம் எப்போதும் நல்ல வழியில் செல்ல வேண்டும்.
'ஓம்' என்ற ஓங்கார மந்திரம் தினமும் சொல்ல சொல்ல உடல் முழுவதும் நல்ல நிலைக்கு உட்படும். தீய சக்திகளின் ஆதிக்கம் குறைந்து போகும்.
"கடவுளிலே கருணைதனை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம் அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்" ஒன்றே குலமென்று பாடுவோம்...ஒருவனே தேவன் என்று போற்றுவோம் - பல்லாண்டு வாழ்க படத்திற்காக புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல் 'ம்' மில் தொடர்ந்து முடிவதை பாருங்கள்...கேளுங்கள்...சொன்னதை செய்யுங்கள். நல்ல விஷயங்களுக்கு ' ம்' என்று உரத்த குரலில் சொல்லி தலையசைப்போம்...என்று நிறைவேற்றும் சபதம் எடுப்போம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.