Published:Updated:

"சாவுற வரைக்குமா சார்?" - 'இப்போது உயிரோடிருக்கிறேன்' நாவல் வாசிப்பனுபவம்

Representational Image ( iStock : KatarzynaBialasiewicz )

உரையாடல்களை கவனித்த சில நிமிடங்களிலேயே தன்னை அந்த கதாபாத்திரத்தின் தன்மையுடன் பொருந்த வைத்து விடுவார். நமக்கே அந்த பிணி ஏற்பட்டது போல் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கும்...

"சாவுற வரைக்குமா சார்?" - 'இப்போது உயிரோடிருக்கிறேன்' நாவல் வாசிப்பனுபவம்

உரையாடல்களை கவனித்த சில நிமிடங்களிலேயே தன்னை அந்த கதாபாத்திரத்தின் தன்மையுடன் பொருந்த வைத்து விடுவார். நமக்கே அந்த பிணி ஏற்பட்டது போல் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கும்...

Published:Updated:
Representational Image ( iStock : KatarzynaBialasiewicz )
"வலி நிறைந்த இந்தப் பயணத்தில் நீங்கள் எப்படி வாழ்வை நடத்துகிறீர்கள்.வாழ்வே வலி நிறைந்ததுதான் என்று புரிந்து கொண்டால் எந்தப் பயணமும் சிரமமில்லை"
ஐங்கரநேசன்

கல்வி என்பது மட்டும் ஏழைகளுக்கு எட்டாக்கனியல்ல.. மருத்துவமும் தான். நடுத்தர வர்க்கத்தினருக்கு வரும் நோய் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதை பார்த்திருக்கிறோம். உடல் ஒன்றையே முதலீடாய் வைத்திருக்கும் ஏழைகளுக்கு உடல் நலமின்மை, சிகிச்சை எல்லாம் பெரும் நெருக்கடிகள்.

அவசர சிகிச்சை அறையின் வெளியில் இருப்போரை பார்த்திருக்கிறீர்களா.. துக்கம் தோய்ந்த முகத்துடன் ஒருவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்.. பிறிதொருவர் அலைபேசியில் யாரிடமாவது பணம் கேட்டுக் கொண்டிருப்பார். நோயாளின் பெயரை கூறி அழைத்தவுடன்.. உச்சபட்ச பயத்துடன் அவரை நோக்கி ஓடுவதைப் பார்த்திருக்கிறோம். வலியும் துக்கமும் நிறைந்த வாழ்வு தான் மருத்துவமனையில் காத்திருப்போர் துயரமும். இவர்களுக்கு சற்றும் குறைவில்லாதது நோயாளியின் தனிமையும் பயமும். தன்னால் தன் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய நெருக்கடி என நினைத்து நினைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருப்பார்.

Representational Image
Representational Image
Photo by Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவில் யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் உடல் உபாதை குறித்து பேசினால்.. நாம் சற்று விலகி விடுவோம். காரணம் நமக்கே ஒரு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பேசுவார் அல்லது தன் மீது பரிதாபம் ஏற்பட வேண்டி மிகைப்படுத்தி சொல்லுவார். நோயின் வாதையை சரியான விதத்தில் நோய்க்கான காரணிகளை எடுத்துக் கூறுவோர் மிகக் குறைவே. அந்த சரியான விதத்தில் சொல்லும் உக்தியை பயன்படுத்தியிருப்பார் இந்நூலில்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இமையத்தின் எழுத்து நடை என்பது மேற்கோள்களோ, கிளைக்கதைகளோ இன்றி மனித உணர்வின் துணையுடன் நேர்க் கோட்டுப் பாதையில் யதார்த்தம் மிளிர வாசிக்க வைப்பது. இத்தனைக்கும் ஐந்துக்கும் குறைவான கதைமாந்தர்களை கொண்டு முழு நாவலையும் சொல்லியிருப்பது இன்னுமொரு சிறப்பு. எந்த இடத்திலும் சலிப்போ அயர்ச்சியோ ஏற்படாது. மாறாக கவனத்துடன் கதைமாந்தரின் வாழ்வியலோடு ஒன்ற வைத்திருப்பார்.

உரையாடல்களை கவனித்த சில நிமிடங்களிலேயே தன்னை அந்த கதாபாத்திரத்தின் தன்மையுடன் பொருந்த வைத்து விடுவார். நமக்கே அந்த பிணி ஏற்பட்டது போல் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கும். பிறகு தன்னிலிருந்து விலகி விலகியே இறுதி வரை பயணிக்க வைத்திருப்பார். நோய்மையின் தீவிரத்தை கவர்மெண்ட் பிணம் சிறுகதையில் சொல்லியிருப்பது போல.. இதில் நோயாளியின் பார்வையிலிருந்து நாவல் விரிகிறது. எந்த இடத்திலும் தேக்கமில்லாமல்.. வர்ணனையில்லாமல் நமக்கு அருகாமையில் இக்கதை நடந்தது போல் காட்சிப்படுத்தியிருப்பார்.

Representational Image
Representational Image

#கதை

சாதாரண கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் தமிழரசனுக்கு திடீரென உடல் நலம் குன்றுகிறது. அரிசி ஆலை நடத்தும் அப்பா, வீட்டிலிருக்கும் அம்மா, தங்கை என அனைவரும் பதறியபடி நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். எப்படியும் இரு நாட்களில் பள்ளிக்குச் செல்லலாம் என தமிழரசனும் குடும்பமும் நினைத்துக் கொண்டிருக்கும் போது சிறுநீரகம் செயலிழந்த செய்தி அவர்களை நிலைகுலைய வைக்கிறது.

கடவுளை நம்பாத மனிதர்கள் கூட உண்டு.ஆனால் மருத்துவரை நம்பாதவர்கள் இல்லை என்பது போல் மருத்துவர் கூறிய அனைத்துவித டெஸ்ட்டுகளும் எடுத்துப் பார்த்ததில் வாரம் இரு முறை டயாலிஸிஸ் செய்யப்படுகிறது. எப்படியும் நோய் சரியாகி வார்டுக்கு மாற்றுவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறது குடும்பம்.நோய் இன்னும் தீவிரமடைய மாற்று சிறுநீரகம் பொருத்த பரிந்துரைக்கப் படுகிறது. யாரும் முன்வராத போது தன் தாயே மகனுக்கு சிறுநீரகம் தர முன்வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்று சிறுநீரகமும் பொறுத்தியாயிற்று இனியாவது தமிழரசன் மீண்டு வந்துவிடுவார் என ஒவ்வொரு வரியை படிக்கும் போது தோன்றும். ஆனால் அடுத்து பயாப்சி சோதனை என நீள்கிறது. தமிழரசனுக்கு அடுத்து என்ன ஆயிற்று, பாசமா பணமா எனும் போராட்டத்தில் நடுத்தர வர்க்கம் என்ன செய்யும், நோய்மையின் தாக்கத்தின் போது நோயாளியின் மன உணர்வு என்னவாக இருக்கும் என்பதை எல்லாம் மிக ஆழமாக இந்நாவல் பேசுகிறது.

நாவலின் இறுதிக்கட்டம் வரை தமிழரசனோடு நாமும் மருத்துவமனையில் இருந்த உணர்வு வருகிறது. டயாலிஸிஸ் குறித்து ஒரு நீண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்திரிக்கிறார் இமையம்.

Representational Image
Representational Image

"சதயில பிசின் மாதிரி ஒண்ணு உற்பத்தி ஆவும். அது ரத்தத்தில் கலக்கும். ரத்தத்தில் இருக்கிற அந்தப் பிசின கிட்னி சுத்தப்படுத்தி யூரின் வழியா வெளியேத்தும். கிட்னி செய்யாத வேலய மெஷின் செய்யும்." என்பார். டயாலிசிஸ் வருஷத்துக்கு எத்தன முற செய்யணும் சார்? என்பார் அப்பா."வருஷத்துக்கா?" வாரத்துக்கு ரெண்டு முறை செய்யனும்.

எது வரைக்கும் சார்?

"உயிரோடு இருக்கிறவர."

"சாவுற வரைக்குமா சார்?" என்று கேட்கும் அப்பாவின் குரலில் நம் மனதின் உடைந்த சத்தமும் கேட்கும்.

ஒவ்வொருவரும் தன்னுடைய ஃபைலை பார்க்கும் போதெல்லாம் இந்த பார்வையில் தீர்வு கிடைக்காதா என தமிழரசன் எண்ணும் போது நோயாளியின் மனநிலையை நாமும் உணர முடிகிறது. மருத்துவமனையில் எல்லா டெஸ்ட்டும் செய்துவிட்டு ஒன்றுமில்லை என்றவுடன் செலவு செய்த அனைத்தும் நம் நிம்மதிக்கான விலை என்றறிக என்பது போல் இருக்கும். முகச்சுழிப்போ, நீண்ட மெளனமோ நம்மை இன்னும் கலவரப்படுத்தும்.

#படித்ததில் கனத்தது

*டயாலிசிஸ் பேஷண்ட பொறுத்தவரை பணம் எவ்வளவு இருக்கோ அவ்வளவு நாள் உயிரோடு இருக்கலாம்.

*உசுரோட இருக்கிறதுக்கு அதிர்ஷ்டம் வேணும். சீக்கிரம் செத்துப் போறதுக்கு அதைவிட அதிர்ஷ்டம் வேண்டும்


*சிறுநீரக அறுவை சிகிச்சை சீக்கிரம் பண்ணிடுங்க. இல்லன்னா ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சே உங்களப் பிச்சைக்காரங்களா மாத்திடும் இந்த நோய்.


*சேற்றில் மாட்டிக்கொண்ட கால்களை எடுத்து வைத்து நடப்பது போல் நடந்து போனேன்

*உன் பெயர் என்ன என்று கேட்டார்?

பல ஆண்டுகளாக திறக்காமல் இருந்த பூட்டைச் சிரமப்பட்டு திறப்பது போல மெல்ல வாயைத் திறந்து என்னுடைய பெயரைச் சொன்னேன்.

Representational Image
Representational Image

*"சாமினு ஒரு கருமாதி இருந்தா எதுக்கு என் பையன் இந்த வயசுலயே இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறான்?" விரக்தியான குரலில் அப்பா சொன்னார்.


*சாவதை விட பெரிய கஷ்டம் உசுரோட இருக்கிறதுதான்


*குளத்தில் இருக்கும் மீன் திரும்பத்திரும்ப குளத்துக்குள்ள சுற்றி வருவது போல என்னுடைய மனது இந்த அறுவை சிகிச்சை அறையையே சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறது


*இந்த ஜென்மத்துல இப்படி எல்லாம் அனுபவித்து சாகணும்னு தலையில எழுதி இருக்கும் போல செத்து ஒரு கை பிடி சாம்பலாவறதுக்குத் தான் இத்தனை போராட்டமும்


*தொட்டிக்குள்ள இருக்கிறது கஷ்டமா இருக்குதுன்னு கொதிக்கிற சுடுதண்ணியில போய் விழுந்த மீனோட கதை தான் நம்ம கதை என்று அப்பா சொன்னார்


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கும் கட்டுப்பாடுகளும், மாற்று சிறுநீரகத்தை பதிவு செய்து பெற்றுக் கொள்ள இருக்கும் நேர்முகத்தேர்வுகள் குறித்தும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நவீன மருத்துவத்தில் பிழைப்பது மருத்துவமனை நிர்வாகம் தான் என்பது போன்று சில இடங்களில் உணர முடிகிறது. நாவலின் இறுதிப் பகுதி என்னவாக இருக்கும் என்பதை ஒவ்வொரு பக்கமும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புடன் படிக்க வைக்கிறது.


புத்தகத்தை மூடி வைக்கும் போது தமிழரசன் நிலையிலிருந்து சற்று நேரம் யோசிக்க வைத்திருப்பதே இந்நாவலின் வெற்றி. நம் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் வகையிலும்.. விளிம்பு நிலை மக்களுக்கு நவீன மருத்துவம் இன்னும் எட்டாக்கனியாக இருப்பதை உணர முடிகிறது. ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாத வாழ்வின் முற்பகுதி.. பின்பு அதற்கான விலையை வாழ்வின் பிற்பகுதியில் கேட்கிறது.


சமூகத்தின் ஏற்றத்தாழ்வும், குரூரமான சமூகத்தின் முகத்தையும் பார்க்கும் போது தான் கட்டமைத்திருந்த சமூகத்தின் பிம்பம் சுக்குநூறாக உடைவதையும் காண முடிகிறது. இயலாமையும் ஆற்றாமையும் தனித்து விடப்பட்ட உள்ளுணர்வும் தனிமனிதர்களுக்கு சொல்லொணாத் துயரையும் தருகிறது. இந்நாவலை படித்து முடிக்கும் போது "அனைத்து பிரார்த்தனைகளும் வந்த பிரச்சனைகளுக்காக அல்ல; வரக்கூடும் என அஞ்சிய பிரச்சனைகளுக்காகவே'' எனும் அனோஜனின் வரி நினைவுக்கு வருகிறது. வருங்கால சமூகம் ஆரோக்யத்துடன் வாழ மனித நேயத்துடன் பிரார்த்திக்க வைக்கிறது.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism