Published:Updated:

அப்போ புத்தகமா படிச்சேன், இப்போ ஐ பேட்ல படிக்கிறேன்! - நெகிழும் நா.பா., ரசிகர் - | My Vikatan

Representational Image

இப்பொழுது ஒவ்வொரு முறையும் விமானத்தில் ஏறி அமர்ந்து, பணிப்பெண் நீட்டுகின்ற சாக்லட் தட்டைப் பார்க்கும் போதெல்லாம், ’ஸாரி! ஐ ஆம் இன் நோ மூட் டு ஹேவ் ஸ்வீட்ஸ்!மை லைப் ஹேஸ் பிகம் சச் அஸ் நாட் டு திங்க் ஆப் ஸ்வீட்!’என்ற சத்திய மூர்த்தியின் குரல் காதில் கேட்கிறது!

அப்போ புத்தகமா படிச்சேன், இப்போ ஐ பேட்ல படிக்கிறேன்! - நெகிழும் நா.பா., ரசிகர் - | My Vikatan

இப்பொழுது ஒவ்வொரு முறையும் விமானத்தில் ஏறி அமர்ந்து, பணிப்பெண் நீட்டுகின்ற சாக்லட் தட்டைப் பார்க்கும் போதெல்லாம், ’ஸாரி! ஐ ஆம் இன் நோ மூட் டு ஹேவ் ஸ்வீட்ஸ்!மை லைப் ஹேஸ் பிகம் சச் அஸ் நாட் டு திங்க் ஆப் ஸ்வீட்!’என்ற சத்திய மூர்த்தியின் குரல் காதில் கேட்கிறது!

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நல் ஆசிரியர்களுக்கு அடுத்தபடியாகச் சமுதாய முன்னேற்றத்திற்கு வித்திடுபவர்கள் சிறந்த எழுத்தாளர்களே!தங்கள் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப் போடுவதோடு மட்டுமல்லாமல், எழுச்சி மிக்க இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நல்வழி காட்டும் ஆசானாகவும் அவர்கள் திகழ்கிறார்கள்.

அப்பழுக்கற்ற கதை நாயகர்களைப் படைத்து உலவ விட்டு, படிப்பவர்களை நல்வழிப்படுத்த முயல்வதுண்டு. அப்படிக் கற்பனையில் சிருஷ்டிக்கப்பட்ட சில கதாநாயகர்கள் பலரின் அடிமனத்தில் ஆழமாகப்பதிந்து, பலகாலும் நல்லதே செய்யத் தூண்டுவதுண்டு. அந்த விதத்தில் பல பாத்திரப் படைப்புகள் மனதை விட்டு அகலாத மகோன்னத இடத்தைப் பிடித்து விடுவதுண்டு.

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’ அரவிந்தனும், ‘பொன்விலங்கு’ சத்தியமூர்த்தியும் படித்தவர் உள்ளங்களிலெல்லாம் என்றைக்கும் பவனி வருபவர்கள்.

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி
எழுத்தாளர் நா.பார்த்தசாரதி

பல இளைஞர்களின் உள்ளங்களில் முழுவதுமாக நிறைந்து அவர்களை எப்பொழுதும் நல்வழிப்படுத்துபவர்கள்.

திருப்பரங்குன்றத்திற்கு முதன்முறையாகச் சென்றபோது, இந்தச் சாலையில்தானே அரவிந்தனும்-பூரணியும் நடந்து சென்றிருப்பார்கள் என்றும், கோயிலின் பின்புறமுள்ள மலையில் அரவிந்தன்-பூரணி என்று கல்தச்சன் செதுக்கியதைப் பார்க்க வேண்டுமென்றும் ஆசை தோன்றியது.

இப்பொழுது ஒவ்வொரு முறையும் விமானத்தில் ஏறி அமர்ந்து, பணிப்பெண் நீட்டுகின்ற சாக்லட் தட்டைப் பார்க்கும் போதெல்லாம், ’ஸாரி! ஐ ஆம் இன் நோ மூட் டு ஹேவ் ஸ்வீட்ஸ்!மை லைப் ஹேஸ் பிகம் சச் அஸ் நாட் டு திங்க் ஆப் ஸ்வீட்!’என்ற சத்திய மூர்த்தியின் குரல் காதில் கேட்கிறது!

இன்றைய தமிழகத்தில் அரவிந்தன், சத்தியமூர்த்தி, மணிவண்ணன் ஆகிய பெயர்கள் நிலைத்து நிற்கக் காரணம் நா.பா.,வின் நாவல்களே என்பதில் சந்தேகமில்லை!

பொன் விலங்கு கதை இதுதான். சத்தியமூர்த்தி என்ற இளைஞன், மலைப் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளர் பதவிக்கான நேர்காணலுக்குச் சென்று திரும்பும்போது, அதிகாலை வேளையில் வைகை ஆற்றைக் கடக்கும் ரயிலில், தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த மோகினி என்ற ஆடலரசியைக் காப்பாற்றுகிறான்.படைத்த தெய்வத்திற்கும் மேலாகக் காப்பாற்றிய தெய்வத்தை அந்த அபலைப் பெண் கொண்டாடி, தன் மோதிரத்தைப் பரிசளிக்க, பதிலுக்குத் தன்னுடையதை சத்தியமூர்த்தி அவள் விரல்களில் போட்டு விட,காதல் கனிகிறது!ஏற்கெனவே,நேர்காணலின்போது, கல்லூரி ஸ்தாபகர் பூபதியின் மகள் பாரதியும், அவனுடைய ஆணித்தரமான பேச்சாலும்,அழகிய வர்ணனையாலும் கவரப்பட்டு அவன் மீது மையல் கொள்கிறாள்!

சில உண்மைகளை உரக்கப் பேசிவிட்டதால் பூபதி தன்னை விரிவுரையாளர் பதவிக்குத் தேர்ந்தெடுப்பாரோ,மாட்டாரோ என்ற சந்தேகத்தில் சத்தியமூர்த்தி உழல,அவனே தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று பாரதி முயல,அவள் முயற்சியே வெல்கிறது.விரிவுரையாளனாக மிக எளிதாகவே மாணவ,மாணவியரின் மனங்களில் ஆசனம் போட்டு அமர்ந்து விடும் சத்தியமூர்த்திக்கு எதிராகக் கல்லூரி முதல்வரே பொறாமையில் செயல்பட,சத்தியமூர்த்தியின் திறமைகளில் மகிழ்ந்து போய் அவனுக்குப் பொறுப்புகளை வழங்கி அழகு பார்த்த நிறுவனர்,விருது பெற விமானம் ஏறியவர் விண்ணுலகுக்கே பறந்து விட,எதிர்ப்பு வலுக்கிறது.

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி
எழுத்தாளர் நா.பார்த்தசாரதி

மோகினியை அடையத் துடிக்கும் மஞ்சப்பட்டி ஜமீன்தாரும், அவர் எடுபிடி கண்ணாயிரமும், சத்தியமூர்த்தி தந்தையின் ஏழ்மையைப் பயன்படுத்தித் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு, கல்லூரிப் பொறுப்பையும் ஏற்று, சத்தியமூர்த்தியைக் கல்லாரியைவிட்டே கழற்றி விடத் தீர்மானிக்கின்றனர். இரண்டு தங்கைகள் மற்றும் தாய், தந்தையின் எதிர்காலத்தை எண்ணிக் கலங்குகிறான் சத்தியமூர்த்தி.

விடுதியின் ஒரு பகுதியைத் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கி விட்டு, பழியைச் சத்தியமூர்த்தி மீது சுமத்துகின்றனர்.விசாரணைக்கு வரும் மாவட்ட ஆட்சியர் சத்தியமூர்த்தியின் முன்னாள் கல்லூரி விரிவுரையாளராகவே இருந்து விட, அவனை நன்கு அறிந்தவர் ஆகையால் குற்றமற்றவன் என்று தீர்ப்பளிப்பதுடன் அவனை ஜெர்மனிக்கு, மொழியியல் ஆராய்ச்சித்துறையில் பணியாற்ற அனுப்பவும் ஏற்பாடு செய்கிறார்.

மோகினியின் தாய் விபத்தில் இறந்துபோக,மோகினியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் ஜமீன் கொண்டு வந்து விடுகிறார்.பாரதி,மோகினிக்காகத் தன் காதலைத் தியாகம் செய்தாலும்,ஜமீனின் தொல்லை தாங்காத மோகினி அவருக்கு உகந்தாற்போல் நடிக்க,அதனைக்கண்ட சத்தியமூர்த்தி சந்தேகத்தில் அவள் மீது போபித்துக் கொண்டு,பேசாமலே சென்று விடுகிறான்.அதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான மோகினி தனது இறுதி முடிவைத் தூக்க மாத்திரைகள் மூலம் தேடிக் கொள்கிறாள்!அவள் கேட்டுக் கொண்டபடி,அவள் சிதையில் பூவும்,மஞ்சளும் போட்டுத் தன் செய்கைக்காக வருந்துகிறான் சத்திய மூர்த்தி! ஜெர்மன் பல்கலைக் கழகம் அழைக்க, விமானம் ஏறும் போதுதான் ‘இனிப்பு சாப்பிடும் மனநிலையில் இல்லை!’ என்று விமானப் பணிப் பெண்ணிடம் கூறுகிறான்!

பொன் விலங்கையும், குறிஞ்சி மலரையும் நா.பா.,வின்‘ மாஸ்டர் பீசஸ்’ என்றே கூறலாம். இரண்டு நாயகர்களுமே சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைவதிலும், சமத்துவத்தைத் தழைக்கச் செய்வதிலும், தம்மாலான உதவிகளை, மனமுவந்து அனைவருக்கும் செய்பவர்களாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் அழிவேயில்லை.புனிதங்களைப் படிக்கும் புத்திளம் இளைஞர்கள் உள்ளவரை,அவர்கள் உள்ளக்கோயில்களில் இருவரும் ஒளிர்ந்து கொண்டே இருப்பார்கள்.

குறிஞ்சி மலரில் அத்தியாயங்களைப் பாடல்களுடன் தொடங்கிய நா.பா.,

பொன் விலங்கில் மனதில் தைக்கும் உரைநடைகளுடன் தொடங்குவார். குறிஞ்சி மலரில் கதாநாயகன் சமூகப்பணியாற்றி இறந்து போக,

(‘சொல்லரிய பலதுறையும்

துயர்பெரிய தமிழ்நாட்டில்

மெல்லமெல்ல நலங்காண

மேலெழுந்த தமிழ்ச்செல்வன்

செல்லரித்த பழமையெல்லாம்

சீர்திருத்த முன்வந்தோன்

புல்லரித்து மனம்வாடப்

போகின்றான்!போகின்றான்!’)

Representational Image
Representational Image

பொன்விலங்கு நாயகியோ, காதலனின் கோபங்கொண்ட பிரிவைத் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்!(‘தூக்கமும் ஒரு தற்காலிகமான சாவுதான்.அதிலிருந்து மறுபடி விழித்துக்கொள்ள முடிகிறது. அதேபோல் சாவும் ஒரு நிரந்தரமான தூக்கந்தான்! ஆனால் அதிலிருந்து மறுபடி விழித்துக்கொள்ள முடிவதில்லை.)

இரண்டிலுமே கதாநாயகனின் பாதங்களைக் கண்டே நாயகிகள் கிறங்குவதாக வர்ணிப்பதிலிருந்து, அவருடைய வாழ்விலும் அது தொடர்பான நிகழ்வுகள் ஏதோ நடந்திருக்க வேண்டுமென்றே எண்ணத் தோன்றுகிறது. அதோடு, நாயகிகள் நிலம் பார்த்து நடப்பவர்கள் என்பதை ‘சிம்பாலிக்’காக உணர்த்துவதாகவும் எண்ண இடமுண்டு!

‘ஷி வால்க்ஸ் இன் பியூட்டி’(She walks in beauty) பாடலை விரிவாக நடத்தி, அதைப் பாரதியின் தமிழ்ப்பாடலுடன் பொருத்திக் காட்டுவதில் சத்தியமூர்த்தி மூலம் நா.பா.,நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார். ஒரு தமிழ் எழுத்தாளருக்கு ஆங்கில இலக்கியத்தின் மீதுள்ள ஈடுபாட்டையும், அதனை அவர் விளக்கிச் சொல்லும் திறனையும் பாராட்டாமல் இருக்க முடியாது! அதோடு மட்டுமின்றி, நவநீத கவியை அறிமுகப்படுத்தி ,அவர் எழுதியதாகச் சொல்லப்படுகின்ற கவிதைகள் அனைத்துமே உயர் ரகம்!உள்ளத்தை நிறைப்பவை. என்றைக்கும் நினைவில் நிற்பவை!

‘பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்

பாராதிருந்தே தவித்ததுவும்….

‘ஒற்றை மனத்தினுள்ளே

கற்றைச் சபலங்களாய்ப்-பல

காரியச் சுமைகள் கனக்க வைத்தாய்…’

‘முன்னும் பின்னும் நினைவாகி-அது

முடிவிற் பெரிய கனவாகி…’

‘வாழ்க்கையின் மிகப்பெரிய தேவை செல்வமும்,செழிப்பும் அல்ல;இன்றுள்ள சூழ்நிலையில் நல்ல மனிதர்களும்,நல்ல எண்ணங்களும்தான்!’-உண்மைதானே?
நா.பார்த்தசாரதி

சத்தியமூர்த்தியும் மோகினியும் சந்திக்கும்போது’நான் சந்தித்த உண்மையான மனிதர் நீங்கள்தான்!’ என்கிறாள்.அவனோ’,இந்த உண்மை ஏழையாய் இருக்கிறதே!’

என்க,’ஆதரவற்றதெல்லாம் ஏழைதான்!அந்த விதத்தில் உண்மையும் ஏழையாய் இருப்பதில் தவறில்லை!’என்கிறாள்.என்ன சத்திய வார்த்தை!

‘ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது.

முன்னதில் சுயநலமும்,அகங்காரமும் உண்டு.பின்னதில் தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.

படிப்பு குறித்த பேச்சு வருகையில்,’படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றதுதான்.எந்தப் பிரச்னையோடவாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச் சுடர் புறப்படுகிறது!’என்கிறார்.மேலும்,’அறியாமை அவ்வளவு இழிவன்று.அறிய மனம் இல்லாமைதான் மிக மிக இழிவு’என்பதும் கருத்தாழம் மிக்கது.’கல்வி வெறும் மலரைப் போன்றது. விநயமும்,பணிவுந்தான் அதை மணக்கச் செய்கின்றன.’என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படத் தகுந்தவை!

‘பணிவுள்ள’என்று முடிப்பதைக் காட்டிலும்,’உண்மையுள்ள’ என்று முடிப்பதே சிறப்புடையது என்றும், உண்மைக்குள்ளே பணிவும், நேர்மையும் போன்ற நற்குணங்கள் அனைத்துமே அடக்கமென்ற சத்தியமூர்த்தியின் விவாதம் நியாயமானதுதானே!

இலக்கியம் குறித்து,’லிட்டரேச்சர் ஈஸ் எ ரெகார்ட் ஆப் பெஸ்ட் தாட்ஸ்’(இலக்கியம் என்பது சிறந்த எண்ணங்களைப் பதித்து வைத்துக் கொண்டிருப்பது)என்ற எமர்சனின் கருத்தையும்,’இலக்கியம் இன்னதென்பதை இலக்கியத்தை ஆழ்ந்து கற்பதால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்!’என்ற டி.எஸ் எலியட்சின் கருத்தையும் கூறுகையில்,நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

‘தயக்கமோ,பயமோ உள்ளவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு முன்வருவதற்கே தகுதியற்றவர்கள்!’ என்கிறான் சத்தியமூர்த்தி.

இப்படி நாவல் முழுவதிலும் நயமான கருத்துக்களைத் தூவி விதைத்துள்ளார். பல மனங்களில் அவை மரமாய், விருட்சமாய் வளர்ந்துள்ளன.

1970 களில் இருபது வயது இளைஞனாய் இருந்தபோது புத்தக வடிவில் இதனைப் படித்தேன். தற்போது எழுபது நடந்து கொண்டிருக்கையில், மீண்டும் ஐ பேடில் படித்தேன். ’சாப்பிட்டுட்டுப் படிப்பா’ என்று அப்போது அம்மாவும்,’சாப்பிடும் போதும் ஐ பே டா?’இன்று இப்போது மனைவியும் கேட்டதே வித்தியாசம்.மற்றபடி 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே உற்சாகந்தான்.நா.பா.,அவர்களின் கதை சொல்லும் திறனே இதற்குக் காரணம்.

மெல்ல,சத்தியமூர்த்தி காட்டிய வழியில் எவ்வளவு தூரம் என்னால் செல்ல முடிந்தது என்று ஒரு சுய சோதனையை மனதில் ஓட விட்டேன்.என்னால் முடிந்த அளவு நேர்மையுடனும்,உண்மையுடனுமே வாழ்ந்து வந்துள்ளதாகவே சொல்லி,அடிமனம் ‘பாஸ் மார்க்’கே போட்டது.அந்த வகையில் ஒரு திருப்தி.

திருச்சியில் ஒரு டுடோரியல் கல்லூரியில் ஆரம்ப நாட்களில் சில காலம் பணியாற்றி விட்டு,அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பியபோது,மாணவர்களே தங்கள்

சைக்கிள்களில் எனது பொருட்களை எடுத்துக் கொண்டு என்னோடு வந்து என்னைப் பேரூந்தில் ஏற்றிவிட்டுச் சென்றதை, இன்றைக்கும் மனம் பசுமையாய் நினைவில் வைத்திருக்கிறது.பெங்களூருவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பணியாற்றி விட்டுக் கிளம்பியபோது,சாரட் வண்டியில் அவரை உட்காரவைத்து,குதிரைகளுக்குப் பதிலாக மாணவர்களே இழுத்து வந்தார்களாம்!அது மலை!இது துளி!எந்தச் சூழ்நிலையிலும் எனக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கோ,கீழ் பணியாற்றியவர்களுக்கோ நான் சிரமம் கொடுத்ததாக ஞாபகத்தில் இல்லை.வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்தபோது,பணியில் துணைபுரிந்த இளவயது நண்பர்,தன் மகனுக்கு என் அனுமதியுடன் எனது பெயரையே சூட்டினார்.

நா.பா.,வுக்கு இறப்பேயில்லை! மனித குலம் வாழும் வரை அவரின் கதாபாத்திரங் கள் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

எனது ஆசையெல்லாம்,இளவயது நண்பர்கள் அரவிந்தனையும்,சத்தியமூர்த்தியையும் படித்து,அப்பழுக்கற்ற அவர்களின் உயரிய குணங்களைத் தங்கள் குறிக்கோளாக ஏற்று,வாழ்க்கையின் உச்சங்களைத் தொட வேண்டும்.அதுவே நா.பார்த்சாரதி என்ற சிருஷ்டி கர்த்தாவுக்கு நாம் செலுத்தும் நல்ல அஞ்சலியாக அமையும்!

-ரெ.ஆத்மநாதன்,

காட்டிகன்,சுவிட்சர்லாந்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.