Published:Updated:

முதுமையில் யார் எல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள்? | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

இப்பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள்.

முதுமையில் யார் எல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள்? | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

இப்பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்பொழுது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. நமது கலாச்சாரத்துடன் பொருந்திப் போகிறதோ, இல்லையோ கூடுமானவரை மேலை நாட்டைப் பின்பற்ற நாம் முயன்று கொண்டிருக்கிறோம். இது கலாச்சாரச் சீரழிவுக்கு நம்மைக் கொண்டு போகிறது. முதியோரை மதிக்கும் பண்பாடடென்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட அவர்கள் சுமையாகவோ, செலவாகவோ கருதப்படுகிறார்கள்.

இப்பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது. தாம் இருப்பதே தேவையற்ற ஒன்று என்று கருதத் தொடங்குகிறார்கள். இவ்வுணர்வு அவர்களின் உடல் உபாதைகளுடன் இணைந்துகொண்டு அவர்களுக்கான வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் இவ்வாறான பல்வேறு சோகக்கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

வயது ஆக ஆக பல்வேறு நோய்களுக்கும், பிரச்சனைகளுக்கும் நமது உடல் இலக்காகிறது. கண் பார்வை குறைகிறது, கேட்கும் சக்தி குறைகிறது, நடப்பதற்குச் சிரமமாக இருக்கிறது, கீழே விழுகிறோம், மயக்கம் வருகிறது, மறதி ஏற்படுகிறது இவற்றின் காரணமாக ஒவ்வொரு காரியத்திற்கும் மற்றவர்களைச் சார்ந்தே முதியவர்கள் வாழ வேண்டியுள்ளது.

Representational Image
Representational Image

முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது. அதற்கு என்ன காரணம் என்று இதுவரை சரியாக தெரியவில்லை. சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக எனது கிராமத்திற்கு சென்ற பொழுது எனது உறவினரிடம் தலைமுறை இடைவெளி பற்றி பேச நேர்ந்தது. அப்பொழுது அவர் தெரிவித்த ஒரு கருத்து என் மனதிற்கு சற்று ஏற்புடையதாக இருந்தது. அவர் கூறியது பின் வருமாறு:

முன்பெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு கிடையாது. நான்கு, ஐந்து மகன்கள் மற்றும் மூன்று, நான்கு பெண்கள் வீட்டில் இருப்பார்கள். கூட்டுக்குடும்பத்தில் மூன்று நான்கு மருமகள்களும் இருப்பார்கள். பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் குடும்பத்து பெரியவர் கடைக்குச் சென்று நான்கு மருமகள்களுக்கும் நான்கு புடவைகள் எடுத்து வருவார். அதை ஒவ்வொரு மருமகள்களுக்கும் கொடுப்பார். மருமகள்களும் அதை பிரித்துக் கூட பார்க்காமல், பெரியவரை வணங்கி விட்டு மௌனமாக பெற்றுக் கொண்டு சென்று விடுவார்கள்.

காலம் செல்லச் செல்லச் பெரியவர் வாங்கி கொடுத்த புடவையை பெற்றுக் கொண்டு, பெரியவர் வீட்டுக்குள் சென்றதும் அவருக்குத் தெரியாமல், ஒருவருக்கொருவர் புடவையை மாற்றிக் கொள்வார்கள். சில ஆண்டுகள் கழித்து பெரியவர், புடவை வாங்குவதற்கு முன்பாகவே தங்களுக்கு இந்தக் கலர் தான் பிடிக்கும் என்று சொல்லி விடுவார்கள். காலம் செல்லச் செல்ல “மாமா பணத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள் நாங்களே கடைக்குச் சென்ற எங்களுக்குப் பிடித்தமான புடவையை வாங்கி கொள்கிறோம்” என்றார்கள். சுருங்கச் சொல்லின், பெரியவர்களுக்கு வீட்டில் முன்பு இருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனதுடன் அவர் பணம் மட்டும் கொடுக்கும் இயந்திரமாக மாற்றப்படுகிறது.

Representational Image
Representational Image

இப்படி இளைஞர்களின் மனநிலை மாறக் காரணம் என்ன?

இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்ற வேலைக்குச் செல்கிறார்கள், கை நிறைய சம்பாதிக்கிறார்கள், படிப்பும், பணமும் வந்த உடனே குடும்பப்பாங்கு தண்ணீரில் கரைந்த பெருங்காயமாக ஆகிவிடுகிறது. தலைமுறை இடைவெளிக்கு இது தான் முக்கிய காரணம் என்று என் உறவினர் கூறினார்.

நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்தோம். மறுபக்கம், அதாவது பெரியவர்களின் தற்போதைய நிலையைப் பற்றி சற்று பார்ப்போம்.

ஒரு காலகட்டத்தில் தனக்கு பையன் தான் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள் (தற்பொழுது அது சற்று மாறி வருகிறது). பையன் பிறந்தவுடன் அவனை ஆசை ஆசையாக வளர்த்து தனக்கு இவன் தான் ஒரு வாரிசு என்றும், பின்னாளில் தன்னை அவன் தான் பார்த்துக் கொள்வான் என்றும் கடைசியாக கொள்ளி போடுவது அவனே என்றும் பலவிதமான மனக்கோட்டையுடன் பிள்ளையை சொல்லிச் சொல்லி வளர்ப்பார்கள். அந்த பிள்ளையோ படித்து பட்டம் பெற்றபின் அயல்நாட்டில் வேலைக்குச் சென்று, அங்கேயே நிரந்திரமாக தங்கிவிடுவான், கடைசியில் கொள்ளி வைக்கக்கூட வரமாட்டான். இப்படி பலவிதமான எதிர்ப்பார்ப்புகளுடன் குழந்தைகளை வளர்ப்பதினால் கடைசியில் ஏமாற்றத்தில் முடிகிறது.

இந்த ஏமாற்றமே தலைமுறை இடைவெளிக்கு ஒரு முக்கிய காரணமாகிறது. முதியவர்களின் அதிகமான எதிர்பார்ப்பும், இளைய தலைமுறையினரின் படிப்பறிவும், அதிகப் பணப் புழக்கமுமே தலைமுறை இடைவெளிக்கு காரணமாகிறது. இப்படி ஆரம்பமாகும் இடைவெளி தான் காலம் செல்லச் செல்ல முதியோரை மதிக்காத மற்றும் அவமதிக்கும் ஒரு நிலைமையை ஏற்படுத்துகிறது.

Representational Image
Representational Image

முதியோர் அவமதிப்பு என்றால் என்ன?

முதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு ஊறு அல்லது மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயல்படானவையாகும். முதியோர் அவமதிப்பு குறித்து யாரும் கலந்துரையாட எண்ணுவதில்லை. மரபு சார்ந்து முதியோர் என்பவர் குடும்பத்திலும், சமூகத்திலும் மதிப்பிற்குரியவர்கள் ஆவார்கள். அவர்கள் அவமதிக்கப்படுவதை யாரும் சிந்திப்பதில்லை. பல்வேறு விதமான அவமதிப்புகள் பின்வருமாறு:

உடல் சார்ந்தது : வலி, காயம் அல்லது ஊனம் ஏற்படும் வண்ணம் வன்முறை.

மனம் சார்ந்தது : மனத்தில் துயரம் வருமாறு நடந்து கொள்ளுதல்.

பொருள் சார்ந்தது : முதியோர் தம் வருமானம் அல்லது ஆதாரத்தைத் தமது சொந்தக்காரியங்களுக்காக, கவனித்துக் கொள்பவர் அல்லது ஆலோசகர் தவறாகப் பயன்படுத்துதல், உயில் எழுதும்படி வற்புறுத்தல்.

உதாசீனப்படுத்துதல் : முதியவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது மற்றும் வேண்டும் என்றே தவிர்ப்பது. உதாரணம்: காது கேட்கும் கருவி, கைத்தடி மற்றும் மருந்துகள் போன்றவற்றை வாங்கித்தர தவிர்ப்பது.

முதுமையில் யார் எல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள்

எந்தவிதமான வருமானமோ சொத்தோ இல்லாமல் இளைஞர்களைச் சார்ந்து வசிப்பவர்கள்.

ஒரே குழந்தையை பெற்ற முதியவர்கள்.

நாள்பட்ட நோய் உள்ள முதியவர்கள் உதாரணம்: மறதி நோய், பக்கவாதம், உதறுவாதம்.

படுத்த படுக்கையில் கிடக்கும் முதியவர்கள், தங்களுடைய எல்லா தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும் பொழுது முதியவர்களிடம் வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது.

Representational Image
Representational Image

முதியவர்கள் எதனால் அவமதிக்கப்படுகிறார்கள்

சரியில்லாத குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்து வரும் குழந்தை, பெரியவனாகும் போது தன் கோபத்தை முதியவர்களிடம் காண்பிக்கிறான்.

வீட்டில் தொடர்ந்து முதியவர் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் பொழுது இடவசதி மற்றம் நிதி வசதி குறைவினால் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.

முதியவர்களை தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் போது அவர்களைப் பார்த்து கொள்ளும் உறவினர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இதனால் நிதி வசதியும் குறையும். சில சமயங்களில் செய்யும் தொழிலில் இழப்பும் ஏற்படும். இவர்கள் மது அல்லது மருந்துக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். மேற்கொண்ட பலவித காரணங்களால் பாதிக்கப்படும் உறவினர்கள், முதியவர்களை அவமதிக்க ஆளாகிறார்கள்.

சமூகத்தில் மதிப்பிழந்த பெரியவர்கள் மற்றும் நிதி வசதியில்லாத முதியவர்கள் வீட்டில் இளைஞர்களால் அவமதிக்கப்படுகிறார்கள்.

அவமதிக்கப்படுகிறவர்களின் அறிகுறிகள்

மனதளவிலும் உடலளவிலும் மற்றும் பலவகையான அவமதிப்புக்கு ஆளாகும் முதியவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை வெளியே சொல்லத் தயங்குவார்கள். ஏனெனில் முதியவர்கள் இதைப்பற்றி மற்றவர்களிடம் தெரிவித்தால் முதியவர்கள் மேலும், மேலும் அவமதிப்புக்குள்ளாவார்கள். அது மட்டுமின்றி தம் பிள்ளைகள், மருமக்கள் பெயருக்கும் மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்துவதை விரும்புவதும் இல்லை. ஆகையால் இவர்கள் படும் இன்னலை குடும்ப மருத்துவர், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.

அவமதிப்பை கண்டறிவது எப்படி?

உடலளவில் பாதிப்பு

அடிப்பட்ட இடத்தில் வீக்கம், இரத்தக்கட்டி

காரணம் அறிய முடியாத உடல் காயங்கள்

காயத்தைப் பற்றி சரியாக விளக்க முடியாத நிலை தேவையற்ற பயம்

வெளி உலகத்தின் தொடர்பை குறைத்து கொள்ளுதல்

முதியோர் குணநலத்தில் சொல்ல முடியாத மாற்றம்

பொருளாதார பாதிப்பு

ஆனால் அவர் அவருடைய வாழ்க்கை நடைமுறைக்கும், நிதி வசதிக்கும் ஒத்துவராத நிலை. உதாரணம்: வெளியே பெரிய கோடீஸ்வரன் என்று கூறிக் கொள்வார். வீட்டில் மிகந்த ஏழ்மை நிலையுடன் காணப்படுவார். காசோலையில் இருக்கும் கையொப்பமும் முதியவர்களின் கையொப்பமும் மாறுபட்டு காணப்படும்.

புறக்கணிப்பு

அடிப்படை சுகாதாரம், உணவு, தண்ணீர், உடை ஆகியவற்றில் குறைபாடு இருக்கும். தொடர்ந்து எடை குறைதல், கவனிக்கப்படாத நிலையில் உள்ள மறதி நோயாளிகள். தேவையான உபகரணங்கள் இல்லாமல் இருக்கும் முதியவர்கள் (உதாரணம்: கண் கண்ணாடி, காது கேட்கும் கருவி, பல் செட்டு, கைத்தடி, மருந்துகள்).

Representational Image
Representational Image

முதியோர் அவமதிப்பை தெரிந்து கொள்வது எப்படி?

பொதுவாகவே முதியவர்களை அவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்கள் தான் அவமதிக்கிறார்கள். இது தெளிவாகத் தெரியாத தருணத்தில் மருத்துவர்கள் தமது திறன் மற்றும் நிறுவனம் வாயிலாக இது குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். மருத்துவர்கள், நோயாளி மற்றும் அவரை கவனித்துக் கொள்பவருடன் ஒரு தொடர்பு வைத்திருப்பதின் மூலம் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கீழ்க்கண்ட வினாக்கள் உங்களுக்கு உதவும்.

1. வீட்டில் யாரேனும் உங்களைத் துன்புறுத்துகிறார்களா?

2. உங்கள் அனுமதியின்றி யாரேனும் உங்களைத் தொடுகிறார்களா?

3. உங்களுக்குப் பிடிக்காத எதையேனும் யாராவது செய்யத் தூண்டுகிறார்களா?

4. உங்களிடமிருந்து, எதையேனும் உங்களைக் கேட்காமல் எடுத்திருக்கிறார்களா?

5. யாரெனும் உங்களைத் திட்டியும், தாக்கியும் உள்ளார்களா?

6. உங்களுக்குப் புரியாத பத்திரங்களில் ஏதிலேனும் கையெழுத்திட்டு இருக்கிறீர்களா?

7. வீட்டில் யார் மீதாவது உங்களுக்கு பயம் இருக்கிறதா?

8. தனியாக இருக்கிறீர்களா?

9. உங்களுக்கு உதவி தேவைப்படும்போது யாரேனும் உங்களுக்கு உதவத் தவறியதுண்டா?

முதியோர்களுக்கு ஏற்படும் வன்முறையை அறிதலில் இடையூறு

முதியோர் அவமதித்தல் என்பது பொதுவாக இலைமறை காய் மறையாக நடப்பது. குடும்ப உறுப்பினர் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ளமுடியாத நிலை. ●

பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றவர்களிடம் சொல்ல விருப்பப்படுவது இல்லை.

மறதி நோய் மற்றும் தீவிர நோய்களினால் மனம் மற்றும் உடல் பாதித்த நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியாத நிலை.

முதியோர்கள் அவமதிப்பு என்பது ஒருவர் அதை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே ஆகும். உதாரணம்: முகம் கொடுத்து பேசாத மருமகளை அதை ஒரு சாதாரண நிகழ்வாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அதையே தன்னை மருமகள் மதிப்பதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

Representational Image
Representational Image

முதியோர்களுக்கு ஏற்படும் வன்முறையை தடுப்பது எப்படி?

படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்.

நிதி வசதி குறைவாக உள்ளவர்களுக்கு வங்கியின் மூலம் கடன் பெற்று தொழில் துவங்க உதவலாம்.

மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு உளவியல் நிபுணர்கள் மூலம் தக்க ஆலோசனை வழங்கலாம்.

இளைஞர்களின் எண்ணப்போக்கு மாற வேண்டும். தாங்களும் ஒருநாள் முதியவர்களாக ஆவோம் என்பதை எண்ணிப் பார்த்தாலே, செய்யும் தவறு புரிந்துவிடும்.

முதியவர்களை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டி விழா எடுத்து பரிசுகள் வழங்கலாம். இது மற்ற இளைஞர்கள் மனதிலும் மாற்றத்தை விளைவிக்கும்.

மக்கள் இத்தகைய அவமதிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள ஊடகங்கள் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

சிரமக் காலத்தில் உதவுவது. தொடர்ந்து முதியவர்களை கவனித்துக் கொள்ளும் உறவினர்களின் சிரமத்தை குறைக்க வாரத்தில் ஒரு நாளாவது வீட்டிற்குச் சென்று உதவி புரிவது.

தனிமையை தவிர்த்தல், வெளி உலகோடு அதிக தொடர்பு வைத்துக் கொள்வது மூலம், முதியவர்கள் தனிமையைத் தவிர்த்து அவருக்கு ஏற்படும் கொடுமைகளைத் தவிர்க்கலாம்.

உளவியல் நிபுணர் மூலம் முதியவர்கள் மற்றம் இளைஞர்களுடன் கலந்து பேசி அவர்களிடம் உள்ள தலைமுறை இடைவெளியைக் குறைத்து நல்ல சூழ்நிலையை உருவாக்கலாம்.

"ஹெல்பேஜ் இந்தியா” எனும் தொண்டு நிறுவனம் 2014லில் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 32% முதியவர்கள் இளையசமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது தக்க மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள். இதைவிட இன்னமும் அதிர்ச்சி ஊட்டும் செய்தி, 56% முதியவர்கள் தனது மகன்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் மற்றும் 23% முதியவர்கள் தனது மருமகள்களால் புறக்கணிக்கப்டுகிறார்கள்.

முதியோர்கள் புறக்கணித்தலை தவிர்க்க

இளைஞர்கள் அவர்களாகவே முதியோர்களை புறக்கணித்தலை உணராதபட்டசத்தில், சமூகம் அதை உணர வைக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் முதியவர்களின் பெருமைகளைப் பற்றியும், அவர்களின் தேவையைப் பற்றியும் சொல்லித் தர வேண்டும்.

தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களில் பெற்றோர்கள், முதியோர்களின் அவசியத்தை உணர்த்தும் பெற்றோர்கள், முதியோர்களின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஒலி/ஒளிபரப்பப்பட வேண்டும். பத்திரிகைகள் வாயிலாகவும் இது பரவலாக்கப்பட வேண்டும்.

முதியவர்களை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டி விழா எடுத்து பரிசுகளை வழங்கலாம். இது மற்ற இளைஞர்கள் மனதிலும் மாற்றத்தை விளைவிக்கும்.

ஐக்கிய நாடுகள் சபை, முதியோர்களின் கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ந் தேதியை "முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்ச்சி ஊட்டும்” நாளாக 2006 ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.

முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்ச்சி ஊட்டும் நாள்

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ம் தேதியை "முதியோருக்கு எதிரான கொடுமைகள் ஒழிய விழிப்புணர்ச்சி ஊட்டும் நாளாக” அனுசரித்து வருகிறது. அன்று எல்லா இளைஞர்களும், குடும்பத்தினரும் கீழக்கண்ட உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image

உறுதிமொழி

"முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகைக் கொடுமைகளையும் இவை வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ - எந்த உருவில் வந்தாலும் அவற்றைக் களைவதற்காக - முளையிலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன். -

மேலும், அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் அதாவது உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், அங்கீகாரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்."

முழக்கங்கள்

இயலாமையைப் பொறுத்தல் ஓர் உயர்ந்த குணம்.

ஓசையின்றி முதியோருக்கு இழைக்கும் கொடுமை தண்டனைக்குரிய வன்முறை

முதியோருக்கு எதிரான கொடுமை ஒரு மனிதாபிமானமற்ற செயல்.

முதுமையில் இயலாமை இயற்கையின் நியதி, முதியோருக்குக் கொடுமை செய்வோர் இயற்கையின் எதிரியாவர்.

ஏதோ ஒரு வீட்டில் வயதானவர்களைச் சரியாக கவனிப்பதில்லை அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று எண்ணிவிடக்கூடாது. அது போலவே நம் வீட்டில் ஒரு நாள் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம். ஆகையால் இது ஒரு வீட்டுப்பிரச்சினையாக யாரும் எண்ணிவிடக்கூடாது. இதுவே விரைவில் ஒரு சமுதாயப் பிரச்சினையாக உருவெடுத்தாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. முதியோர்களை மதிப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர்கள் நிம்மதியாக, கௌரவமாக வாழ எல்லோரும் துணையிருப்போம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.