Published:Updated:

அரிசோனா பெரிய பள்ளத்தாக்கில் ஒரு சாகச பயணம்! - வரகால்பட்டு டூ அமெரிக்கா - 1 | My Vikatan

கொஞ்சம் இளைப்பாறுவோம் ( பாலா.கே, எஸ்எஸ்கே. )

அந்த பள்ளத்தாக்கில் பல சமயம் சில மக்கள் கீழே இறங்கி நடந்து செல்வதையும் மேலிருந்து பார்த்து, அவர்கள் எங்கே செல்கிறார்கள், சென்று என்ன செய்கிறார்கள் என்றும் யோசித்திருக்கிறேன்.

அரிசோனா பெரிய பள்ளத்தாக்கில் ஒரு சாகச பயணம்! - வரகால்பட்டு டூ அமெரிக்கா - 1 | My Vikatan

அந்த பள்ளத்தாக்கில் பல சமயம் சில மக்கள் கீழே இறங்கி நடந்து செல்வதையும் மேலிருந்து பார்த்து, அவர்கள் எங்கே செல்கிறார்கள், சென்று என்ன செய்கிறார்கள் என்றும் யோசித்திருக்கிறேன்.

Published:Updated:
கொஞ்சம் இளைப்பாறுவோம் ( பாலா.கே, எஸ்எஸ்கே. )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நம்மில் பல பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும். குறிப்பாக என்னைப்போல கிராமத்தில் வளர்ந்த மக்களுக்கு.

சிறு வயதில், விடுமுறை நாட்களில், கிராமமே அமைதியாக இருக்க அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் பக்கத்துக்கு ஊருக்கோ, இல்லை குளமோ, குட்டையோ, கிணறோ ஏதோ ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து குதித்து, நீந்தி விளையாடி திரும்பிய அனுபவம் பலருக்கு இருந்திருக்கும். இல்லை, சொந்த ஊரிலோ, அல்லது ஊருக்கு பக்கத்திலோ உள்ள குன்றிலோ அல்லது சிறு மலையிலோ ஏறி மகிழ்ந்தும் விறுவிறுப்பான அனுபவம் பெற்றிருக்கலாம். நிச்சயம் அப்பாவுக்கு தெரிந்தால் வீட்டில் பிரளயம். இருந்தும் செய்யாமல் இருந்திருக்க மாட்டோம்.

அப்படி தான் சிறு வயதில் என் ஊரான வரகால்பட்டுக்கு பக்கத்து ஊரான திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில் அருகிலுள்ள மலை மீது பல முறை ஏறி இருக்கிறேன். அங்கு சொல்லாமல் சென்றதால் தண்டனையும் வாங்கியிருக்கிறேன்.

அப்போது வரக்கால்பட்டை விட்டு வெளியே தெரிந்து கொள்ள விரும்பாத “எந்த ஊரு போனாலும், நம்ம ஊரு போலாகுமா” என்று அறியாமலே புரிந்து போன சிறு வயது வாழ்க்கை.

நம் ஊரென்பது, நம் மக்கள், நம் சொந்தம் எல்லாம் சேர்ந்த ஒரு பேக்கேஜ்தான். அப்படி நம்மை கட்டி வைத்த பல உறவுகள், பறவைகள் போல பல பறந்தும், மறந்தும், மறைந்தும் போன பிறகு எந்த ஊரையும் சொந்த ஊராக்கி கொள்வது நலம்.
வசீகரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்ப பள்ளி (இப்பொழுது உயர் நிலை ஆகி விட்டது)
ஆரம்ப பள்ளி (இப்பொழுது உயர் நிலை ஆகி விட்டது)

ஆனால், அப்படி பட்ட சொந்த ஊரை விட்டு வெளியே வந்த பிறகு உலகின் “இயற்கை” அதிசயங்களில் ஒன்றான அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு (கிராண்ட் கேன்யன் - Grand Canyon Hike) மலையில் ஒரு நாள் நான் இறங்கி ஏறுவேன் என்பது, நான் நினைத்திராத ஒன்றுதான்,

சிறு வயது, ஆதலால், பல திமிரேறிய முயற்சிகள் என்றும் வரக்கால்பட்டில் வளர்ந்த காலத்தை சொல்லி விளக்கலாம். ஆனால் பல வருடங்களுக்கு பிறகுமா என்று கேட்பது சரிதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆசைக்கு வயது வரம்பு உண்டா என்ன?

அப்படித்தான் இந்த வருடம் அந்த மலை நடைப்பயண ஆசை வந்தது.

நிறைய பேர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பெரிய பள்ளத்தாக்கை (கிராண்ட் கேன்யன்) நேரில் பார்த்திருக்கலாம் அல்லது அதைப்பற்றி படித்திருக்கலாம். நானே பல முறை எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று பார்த்திருக்கிறேன்.

சிறு குறிப்பு - கிராண்ட் கேன்யன் 277 மைல்கள் (446 கிமீ) நீளமும், 4 முதல் 18 மைல்கள் (6.4 முதல் 29.0 கிமீ) வரை அகலமும், அதிகபட்சமாக 6,093 அடி ஆழமும் கொண்ட பள்ளத்தாக்கு. உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு என வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. பள்ளத்தாக்கு சுவர்களின் பலகை போன்ற பாறைகளை சூரியன் வண்ண மயமாக்கி பள்ளத்தாக்கின் நிறம் நாள் முழுவதும் மாறும்.
பள்ளத்தாக்கு
பள்ளத்தாக்கு

அப்படிப்பட்ட அந்த பள்ளத்தாக்கில் பல சமயம் சில மக்கள் கீழே இறங்கி நடந்து செல்வதையும் மேலிருந்து பார்த்து, அவர்கள் எங்கே செல்கிறார்கள், சென்று என்ன செய்கிறார்கள் என்றும் யோசித்திருக்கிறேன். நான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சில வருடங்களுக்கு பிறகுதான் இது பற்றி அறிந்து கொண்டேன்.

கிராண்ட் கேன்யன் பார்க்க வருபவர்களில், சுமாராக ஒரு சதவீத மக்கள் மட்டுமே, இந்த மிக கடினமான, சில சமயம் தங்கள் உயிரை பணயம் வைத்து கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கை ஒரு பக்கம் இறங்கி மறு பக்கம் ஏறும் சாகசத்திற்கு முயற்சி செய்கிறார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது.

இந்த வருடம், ஜீன் மாதம் 10-ந்தேதி நானும் அந்த முயற்சி செய்த ஒரு சதவிகித மக்களில் ஒருவனாகிவிட்டேன்.

நானும், எனது சில நண்பர்களும் சேர்ந்து, வடக்கு முனையிலிருந்து தெற்கு முனை வரை பள்ளத்தாக்கு வழியாக “ஹைக்” நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தோம். இது 24 மைல்களுக்கு (39 கிமீ) உள்ள ஒரு பள்ளத்தாக்கு பாதை. மேலும் ஏறக்குறைய 6000 அடி கீழே இறங்கி பிறகு ஒரு 4500 அடி மேல் ஏறி வெளியில் வரவேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ரிம் டு ரிம் ஹைக் (Rim to Rim hike) என்று பெயர்.

நடப்பது என்பது நம்மில் பலருக்கு பிடிக்கும். வாழ்க்கையில் வேறு எந்த தேவையும் இல்லை என்றால், ஒருவர் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கலாம், தூக்கம் உட்பட மற்ற இதர தேவைகளுக்கு இடையில் சிறிது ஓய்வெடுத்து கொள்ளலாம், பிறகு நடந்து கொண்டே இருக்கலாம் என்று நினைப்பது முற்றிலுமாக எனது எண்ணம்.

நானோ எனது வரக்கால்பட்டில் துவங்கி, சிங்கப்பூரில் கப்பல் செப்பனிடும் இடத்தில் வேலை ஆரம்பித்த காலத்தில் நடப்பதை விரும்பியவன். அமெரிக்காவில் இன்னும் தொடர்கிறது.

ஓடைக்குளியல்
ஓடைக்குளியல்

அதனுடன், நான் வசிக்கும் நகரான டல்லாஸ் நகரத்து வசந்த காலம் அல்லது இலையுதிர் காலம் போன்ற வானிலை இருந்தால், திறந்தவெளியில் நடப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு செயலாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, நாம் எல்லோரும் வாழ்க்கையில் வேலை செய்ய வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், அதனால் சில பல சமயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டும், பின்னர் அந்த சில பல மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டி நடக்க வேண்டியிருக்கும். இது வாழ்க்கை சக்கரம்.

பல நேரங்கள் நடப்பதும், வெளியில் ஓடுவதும் அவ்வளவு கடினமாக இருக்காது. குறைந்தபட்சம், நான் பழகி அறிந்தது அதுதான். எனவே, கிராண்ட் கேன்யன்ஸ் ரிம் டு ரிம் ஹைக்கிற்கு செல்ல பதிவு செய்தபோது, ​​எனது வழக்கமான ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சியுடன் இது ஒரு லகுவான செயல் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது அறியாமை என்று என் அனுபவம்தான் சொன்னது.

நடைப்பயணத்தின் பொழுது எது எப்படி செய்ய வேண்டும் என்பது படிப்பறிவு மட்டுமே என்பதால், ஒன்று எப்படி இருந்தால் அதற்கு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மன குழப்பம் இருந்தது என்று சொன்னால் அது பொய்யில்லை.

அவ்வளவு கடினம் என்று எதிர்பார்த்தால், ஒரு முறை மட்டும் செய்துவிடுவோம் என்று எண்ணி, இது எங்களின் “வாழ்நாளின் ஹைக்” (Hike of the Life) என்று குழுமத்தில் பெயர் சூட்டினோம்.

ஹைக்கிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு பள்ளத்தாக்கு பற்றிய பல கனவுகள். வெப்பம் அதிகம், சிலர் பள்ளத்தாக்கின் தண்ணீர் குடித்து வயிற்றுப்போக்கு, குடல் புழு என்று எச்சரிக்கை செய்திகள் தூக்கம் குறைத்து கனவையும் குறைத்தது. நாங்கள் செல்லும் ஒரு வாரத்திற்கு முன், ஒரு பெண்மணி அதிக அளவு வெப்பம் காரணமாக இறந்து போன செய்தி வேறு. நாங்கள் முடிவு செய்து விட்டோம், இனி ஹைக் பற்றிய செய்திகளை வெற்றிகரமாக ஹைக்-ஐ முடித்த பிறகுதான் பார்ப்பது என்று.

முதலில் உங்களுக்கு சஸ்பென்ஸ் வைக்காமல் சொல்லி விடுகிறேன். சிறிது அதிர்ஷ்டம் மற்றும் எங்கள் குழுவின் உந்துதல் மற்றும் உதவியுடன், ஜூன் 10, 2022 முதல் எனது இரண்டு நாள் ஹைக்-ஐ முடித்தேன். அந்த நாளின் அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி் C. மலையேறும் பொழுது வெப்பம் குறையும் — ஆனால் நாங்களோ மலை இறங்கி பிறகு ஏறுகிறோம் — அதனால் கீழே இன்னும் 7 முதல் 12 டிகிரி வரை கூடிப்போகும் — 54 டிகிரி போல் சென்றது.

மலைப்பாதை – 1
மலைப்பாதை – 1

மேலும் அங்கு “தி பாக்ஸ்” என்ற இடத்தில் நடக்கும் பொழுது சிறிது குறுகலான 4 மைல் தூரத்திற்கு, இரண்டு பக்கமும் மைல் உயரத்திற்கு மலைப்பாறை மட்டும்தான் என்பதனால் சூரிய பகவானின் உக்கிரத்தை இன்னும் 10 டிகிரி கூட்டி உடல் உணரும் வெப்பம் 60 டிகிரிக்கு மேல் செல்லும். மேலும் கடினமான பாதைகளில் நடப்பதால் உடல் உஷ்ணம் கூடி, உடல் தாதுக்கள் வேர்வையில் குறைந்து நாம் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால், நிலைமை மோசமாகலாம். அதிர்ஷ்டம் இருந்தால் சிறிது நேரம் கிடைத்து பள்ளத்தாக்கிற்கு ஹெலிகாப்டர் வந்து காப்பாற்றப்படலாம், கிட்டத்தட்ட ரூபாய் 15 லட்சம் போல் செலவாகும். (20000 டாலர்).

இதையெல்லாம் நினைத்தால் எப்படி செல்வது?

கவியரசரின் வரிகளான “பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம், அதில் பயணம் நடத்தி விடு” என்பது மட்டுமே எங்களின் முனைப்பாயிருந்தது.

முதலில் எங்கள் பயணப்பாதை பற்றி சிறிது விளக்கி விடுகிறேன்.

பள்ளத்தாக்கு மேலோட்டம்
பள்ளத்தாக்கு மேலோட்டம்

மேலே உள்ள படத்தில் காட்டியது போல், வடக்கு கைபாப் என்பது 8241 அடியில் உள்ளது, அதே சமயம் பிரைட் ஏஞ்சல் என்பது 6860 அடியில் உள்ளது. இதற்கு நடுவில் பள்ளத்தாக்கின் ஆழம் கிட்டத்தட்ட 6000 அடிகள்.

கிராண்ட் கேன்யனின் நடை பயணத்தில் கீழிறங்கி மேலேற (அல்லது தலைகீழ் மலை ஏறுதல்) மூன்று வழித்தடங்கள் உள்ளன. வடக்கு ரிம் பக்கத்தில் ஒன்று “வடக்கு கைபாப் டிரெயில்ஹெட்” என்று அழைக்கப்படுகிறது. தெற்கு ரிம் பக்கத்திலிருந்து இரண்டு. ஒன்று “தெற்கு கைபாப் டிரெயில்ஹெட்” மற்றும் இரண்டாவது “பிரைட் ஏஞ்சல் டிரெயில்ஹெட்” .

எங்கள் திட்டம். வடக்கு கைபாப்-பில் தொடங்கி பிரைட் ஏஞ்சல் சென்று அடைய வேண்டும், இடையில் ஒரு இரவு இந்தியன் கார்டன்ஸ் என்ற வனவிலங்குள் உள்ள காட்டில் குடில் போட்டு தூங்குவது.

பதினோரு பேர் கொண்ட ஹைகிங் குழுவில் பெரும்பாலானவர்கள் டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸைச் சேர்ந்தவர்கள். நண்பரின் சகோதரர் ஒருவரும் மும்பையிலிருந்து வந்து எங்களுடன் பயணத்தில் சேர்ந்து கொண்டார். இன்னும் இரண்டு நண்பர்கள் அமெரிக்காவின் பிற மாநிலத்தில் இருந்து வந்தார்கள்.

டல்லாஸ் நண்பர்கள் எல்லோரும் முதலில் ஃபீனிக்ஸ் நகருக்குச் பறந்தோம். அங்கிருந்து, நாங்கள் தெற்கு ரிம்மிற்கு 4 மணிநேரம் வாடகை கார்கள் மூலம் சென்றோம். நேரமின்மை காரணமாக தமிழ் சினிமா கடைசி காட்சி போல காரை ஓட்டி சென்றார். வழியில் போலிஸ்காரர் மிக அதிகமாக 150 கிமீ வேகத்தில் மேல் ஓட்டி சென்றதால் வாகனத்தை சிவப்பு விளக்கு போட்டு நிறுத்தி, நீங்கள் சென்ற வேகத்திற்கு கைது செய்து சிறையில் வைக்கலாம், ஆனால் அடுத்த நாள் அடிக்கும் வெயிலில் நீங்கள் நடைப்பயணம் செய்ய போவதால், உங்கள் மன நலத்தை கருத்தில் கொண்டு தண்டனைப்பணம் மட்டும் கட்டச்சொன்னார். நாளை மிக ஜாக்கிரதையாக நடைப்பயணம் செய்யுங்கள் என்று வாழ்த்தி வழி அனுப்பினார்.

வடக்கு கைபாப்-ல் இறங்கி பிரைட் ஏஞ்சலு-க்கு ஏறுவதே எங்கள் திட்டம் என்பதால், நாங்கள் ஏற்கனவே தெற்கு ரிம்மிலிருந்து வடக்கு ரிம்மிற்கு செல்ல பஸ் சேவையை முன்பதிவு செய்திருந்தோம், அதற்கு மேலும் 4 மணி நேரம் ஆனது. செல்லும் வழியில் உள்ள துரித உணவு இடங்களில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டு உடலின் நாளையின் நடை தேவைக்கு இன்றே தயாராகிக் கொண்டிருந்தோம்.

வடக்கு ரிம்-மின் மிக அருகில் இருக்கும் எங்கள் தங்குமிடத்திற்கு வந்து தூக்கு பைகளை வைத்த பிறகு, அடுத்த நாள் நாங்கள் எங்கு இறங்க போகிறோம் என்பதை நேரில் பார்க்க சென்றோம்.

நடை வழி
நடை வழி

கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான இயற்கை அழகை அதன் மேல் நின்று சுற்றிப் பார்ப்பது, நாளை பள்ளத்தில் இறங்கி செல்லாமல் இருந்திருந்தால் சற்று எளிதாக இருந்திருக்கும். கொஞ்சம் உற்சாகமும், அமைதியின்மையும் கலந்த மனது. இனி இது கனவில்லை. அடுத்த நாள் நன்கு விடியும் முன்னரே நிஜமாக போகிற செயல்.

இரவு அறைக்கு வந்து இரண்டு நாள் நடை ஹைக்கிற்கு தேவையானவற்றை முதுகு தூக்கு பையில் அடுக்கி வைத்தோம். தண்ணீர், எலக்ட்ரோலைட்ஸ் அடைத்த சிறு சிறு பைகள், ஹைக்-செய்பவர்கள் கொண்டு செல்லும் சாப்பாடு, மற்றும் உடனடி சப்பாத்தி, உப்புமா, இரவு தூங்கும் காற்றடைக்கும் மெத்தை, இரவு தூங்கும் முகாம் கொட்டகை என்று கொஞ்சம் பளு அதிகம்தான். (16 கிலோ எடை இருந்தது! ஹைக்கிற்கு பிறகுதான் உணர்ந்தோம், இது கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல் இருந்தது).

எங்கள் குழு
எங்கள் குழு

எல்லாம் முடிந்து நான் இரவு 12:30 மணியளவில் தூங்கச் சென்றேன். அதிகாலை 1:15 க்கு எழுந்து விட்டோம் (45 நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு படுத்தோம் என்று கூட சொல்லலாம்).

தயாராகி இரவு 2:30 மணிக்கு வெளியில் வந்தோம். வான வெளி நாங்கள் இருப்பது காடு வெளி என்பதால் நட்ச்சத்திரங்கள் மனித வெளிச்ச போட்டியின்றி இன்னும் ஜொலித்தது.

தங்கிய இடம்
தங்கிய இடம்

வானிலை அந்த நாள் வெப்பமான 47 டிகிரி C ஆக இருப்பதால், சூரியன் வரும் முன்னரே எவ்வளவு நடக்க முடியுமோ அதை செய்வோம் என்று இவ்வளவு அதிகாலையில் நடையை தொடங்கினோம்.

நாங்கள் செல்லும் பொழுதுதானா இத்தனை சூடாக வேண்டும்?

தங்குமிடத்திலிருந்து கிளம்பி அதிகாலை 3 மணிக்கு வடக்கு கைபாப் ரிம் டிரெயில்ஹெட் வந்தடைந்தோம். எல்லோரும் குழுவாக ஒரு சிறிய பிரார்த்தனையை முடித்துவிட்டு அதிகாலை 3:15 மணிக்கு முதுகில் தூக்கு பையை மாட்டிக் கொண்டு, கைகளில் ஹைக் குச்சி எடுத்து கொண்டு இருளில், நட்சத்திர ஒளி மற்றும் தலையில் மாட்டியிருந்த ஹெட்லேம்ப் ஒளியில் நாங்கள் நடையை தொடங்கினோம். எங்களுக்கு முன்னரே பலர் நடக்க ஆரம்பித்திருந்தார்கள் —கீழே பள்ளத்தில் சிறு சாரையாக நகரும் தலை வெளிச்சங்கள் மேலிருந்து தெரிந்தது.

மலைப்பாதை 2
மலைப்பாதை 2

ஒரு குழுவாக நாங்கள் நன்றாக அட்டவணை போட்டு வைத்திருந்தோம். எங்கு நிறுத்த வேண்டும், எங்கு தண்ணீர் பையை மீண்டும் நிரப்ப வேண்டும் மற்றும் எங்கெங்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று. எங்கள் ஹெட்லேம்ப்களுடன் நாங்கள் உள்ளே நுழைந்தபோது, ​​ அதிகமான நட்சத்திரங்களுடன் வானம் அழகாக இருந்தது. மேலும் அட்ரினலின் உந்துதல், குழுவின் ஆதரவுடன் நாங்கள் 3500 அடிகள் இறங்கி காலை 7:45 மணி அளவில் மன்சானிட்டா என்ற இடத்திற்கு வந்தோம்.

அதாவது ஒரு மணி நேரத்திற்கு 1.5 மைல் பயணம், சமதளத்தில் நாம் செய்யக்கூடிய வேகத்தில் பாதி. சூரிய உதயத்திற்கு முன் இருந்ததால் கவனமாக மெதுவாக இருந்தோம், சூரிய உதயத்திற்குப் பிறகு (காலை 5 மணிக்கே வெளிச்சமாகி விட்டது) நாங்கள் அந்த அழகான இடத்தை கண்ணில் பருகிக்கொண்டு இன்னும் மெதுவாக நடந்தோம்.

இதுதான் எங்கள் நடை பயண திட்டம்

பயண திட்டம்
பயண திட்டம்

நாங்கள் மன்சானிட்டாவில் காலை உணவை சாப்பிட்டோம். சொன்னால் நம்ப வேண்டும், ஒரு நண்பரின் மனைவி இட்லி மீது பொடி தடவி தந்திருந்தார்கள் — சந்திரனில் முதலில் கால் வைத்தது ஆர்ம்ஸ்ட்ராங் என்பது போல, கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கில் எங்களுக்கு முன்னால் யாராவது இட்லி பொடி சாப்பிட்டிருக்கிறார்களா என்ற குறிப்பு இருக்கிறதா என்று தேட வேண்டும்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பார்க் ரேஞ்சர் ஒருவர் அங்கு ஓய்வெடுக்கும் பல குழுக்களுக்கு, வெப்பநிலை 55 டிகிரி C (இங்கு ஃபாரன்ஹீட்டில் சொல்லுவார்கள், நான் செல்சியசில் மாற்றியிருக்கிறேன்) ஆக இருப்பதால், “தி பாக்ஸ்” பகுதி வழியாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். முதலில் சொன்னது போல் “தி பாக்ஸ்” பகுதி வெப்பம் மற்ற பகுதிகளை விட மிக அதிகமாக இருக்கும்.

மலையில் காலை நடை
மலையில் காலை நடை

பார்க் ரேஞ்சரின் சொல் ஒரு அறிவுரை என்பதால், வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களைக் கேட்காது பழகி இருப்பதால், நாங்கள் அந்த வழியிலும் முன்னேறினோம்.

எரியும் அடுப்பின் உள்ளே நடப்பது போல நல்ல சூடு.

ஃபாண்டம் ரான்ச்-க்கு இன்னும் 8 மைல் (!) மட்டுமே உள்ளது, அங்கு நாங்கள் சிறிது ஓய்வெடுத்து அங்கு பிரபலமான எலுமிச்சைப் பழ சாரை குடிக்க திட்டமிட்டிருந்தோம். (மொத்த பாதைக்கும் அது மட்டும்தான் ஒரு வழி-சாப்பாடு இடம்). ஃபாண்டம் ரான்ச் வரை கிட்டத்தட்ட இறங்கு முகம். கொஞ்சம் சுலபம்தான், சுடும் சூரியன்-தான் தாங்கவில்லை. அதற்கப்புறம் நிறைய ஏறுமுகம் — கீழே இறங்கனா மேல வர வேண்டுமில்லையா?

எப்படி வந்தோம் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.