Published:Updated:

ஏலே... எங்க ஆச்சி சொன்ன திரிபாகம் இதுதான்! | விருந்தோம்பல் | My Vikatan

திரிபாகம்

பேத்தி என்றாலும், பேரன் என்றாலும் எல்லோரையும் ஆச்சி செல்லமாக 'ஏலே' என்றுதான் அழைப்பார்கள். அவர் அடிக்கடி சொல்வது ‘எப்போதும் பிள்ளைகள் சூட்டிக்கமாக இருக்க வேண்டும்; சோம்பேறித்தனம் ஆகாது’ என்பதுதான்.

ஏலே... எங்க ஆச்சி சொன்ன திரிபாகம் இதுதான்! | விருந்தோம்பல் | My Vikatan

பேத்தி என்றாலும், பேரன் என்றாலும் எல்லோரையும் ஆச்சி செல்லமாக 'ஏலே' என்றுதான் அழைப்பார்கள். அவர் அடிக்கடி சொல்வது ‘எப்போதும் பிள்ளைகள் சூட்டிக்கமாக இருக்க வேண்டும்; சோம்பேறித்தனம் ஆகாது’ என்பதுதான்.

Published:Updated:
திரிபாகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

திரிபாகம்... இதை மூன்று இனிப்புகளின் சங்கமம் என்று சொல்லலாம். ஆம்... இளமஞ்சள் நிறத்தில் பால்கோவா போலவும், மைசூர்பாகு மாதிரியும், காஜூ கத்லி (முந்திரி பர்பி) சுவையிலும் என மூன்று முக்கியமான இனிப்புகளின் ருசியில் சுண்டி இழுக்குமே இந்தத் திரிபாகம்!

இந்த இனிப்பை என் தந்தை வழி ஆச்சியிடம் கற்றுக்கொண்டேன். ஆச்சிக்குப் பாரம்பரிய இனிப்புகளும் பலகாரங்களும் செய்வதில் ஒரு தனித்திறமை உண்டு. அந்தக் காலத்தில் ஒரு குழுவாகச் சேர்ந்து கைச்சுற்று முறுக்கு செய்வார்கள். அதில் ஆச்சி சுற்றும் முறுக்குதான் மிகவும் அழகாக இருக்கும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆச்சி செய்த அதிரசம், திரிபாகம், தேங்காய் மிட்டாய், மகிழம்பூ தேன்குழல், கடலைப் பணியாரம் என எல்லா உணவுகளும் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கடலை மாவு
கடலை மாவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேத்தி என்றாலும், பேரன் என்றாலும் எல்லோரையும் ஆச்சி செல்லமாக 'ஏலே' என்றுதான் அழைப்பார்கள். அவர் அடிக்கடி சொல்வது ‘எப்போதும் பிள்ளைகள் சூட்டிக்கமாக இருக்க வேண்டும்; சோம்பேறித்தனம் ஆகாது’ என்பதுதான். லீவுக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் காலையில் அவர்கள் பக்கத்தில் அமர்ந்து செய்தித்தாளில் உள்ள தலையங்கத்தைப் படித்துக் காட்ட வேண்டும். ஆச்சிக்கு புத்தகம் மற்றும் செய்திகள் படிப்பதில் அளவு கடந்த ஆர்வம். இரவு நேரங்களில் பேரப்பிள்ளைகளை வீட்டு வாசலில் அரை வட்டமாக உட்கார வைத்து ஒரு சில்வர் பேசினில் தயிர்ச்சோற்றைப் பிசைந்து ஒவ்வொருவர் கையிலும் கொடுப்பார்கள். நாங்களும் எழுந்தரிக்கவே மனசு இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்போம்.


நாங்கள் ஒரு சின்ன வேலை செய்தாலும்கூட அதற்கு 'பெரிய கெட்டிக்காரி' என்று பாராட்டி, மேலும் மேலும் ஊக்கப்படுத்துவார்கள். சொல்ல மறந்துவிட்டேன்... அவர்கள் பெயரும் முத்துலெட்சுமிதான். ஆச்சி வீட்டில் நடக்கும் சின்ன விசேஷங்கள் முதல் தீபாவளி வரை திரிபாகம் செய்வது வழக்கம். ஆனால், எப்படி செய்ய வேண்டும் என்பதை நான் விருந்தோம்பல் சேனல் ஆரம்பித்தபிறகுதான் அவர்களிடம் கேட்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த முறை இலஞ்சிக்குச் சென்றிருந்தபோது திரிபாகம் செய்வதைப் பற்றிக் கேட்டதும் ஆச்சி ரொம்ப கூலாக இது ரொம்ப 'ஈஸியான ஸ்வீட் ஆச்சே... இதுல்ல கத்துக்க பெரிசா ஒண்ணும் இல்லையே' என்று சொன்னார்கள். அன்று மாலையே எனக்காகச் செய்து காட்டினார்கள்.

‘முதல்ல எல்லாவற்றையும் அளந்து தனித்தனியா ரெடியா எடுத்து வைப்போம். ஒரு மிக்ஸி ஜாரில் அண்டிப் பருப்பை (முந்திரிப் பருப்பை இலஞ்சியில் அண்டிப் பருப்பு என்பார்கள்) இடைவேளை விட்டு விட்டு, பொடி செய்து எடுத்துட்டு வா... அப்பறம் நான் செய்வதை கவனமாகப் பார்’ என்றார்கள். முதலில் பாலையும் சர்க்கரையும் சரியான அளவில் எடுத்து மிதமான சூட்டில் வைத்து, சர்க்கரை கரைந்ததும் கடலைமாவை அப்படியே சேர்க்கப் போனேன். ஆச்சி ‘அப்படி சேர்க்கக் கூடாது. ஓரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி சேர்க்கணும்’ என்றார்கள். பிறகு சிறிது சிறிதாகத் தூவினேன். அடுத்து பாதியளவு நெய் சேர்க்கச் சொன்னார்கள்.

ஆச்சி ஒரு பக்கம் கைவிடாமல் கடலை மாவு கலவையைக் கிளற நான் நெய்யைச் சேர்த்துக்கொண்டே வந்தேன். அப்போது ஒரு போன் அழைப்பு வந்தது. ஆச்சி என்னிடம், ‘அது பாட்டுக்கு அடிக்கட்டும்... திரிபாகம் செய்யும்போது எந்தப் போனும் பேசக் கூடாது... ஏனென்றால் பதம் தவறிவிடும். செய்து முடித்துப் பாத்துக்கலாம்’ என்றார்கள்.
Muthulakshmi Madhavakrishnan
Muthulakshmi Madhavakrishnan

‘கடலை மாவின் நிறம் மாறி வருது பாரு...’ என்றதும், மீதி நெய்யைச் சேர்த்து பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து, பொடித்த முந்திரியையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து சில நிமிடங்களில் அடுப்பை அணைத்து விட்டோம். இப்போது அந்தச் சூட்டிலேயே சில நிமிடங்கள் வைத்திருந்தோம். ‘கையிலே லேசா உருட்டினால் ஒட்டாத பதம் வரும்... அதுதான் திரிபாகத்துக்கான பக்குவம்’ என்ற ஆச்சி, அந்தப் பக்குவம் வந்ததும், அதை அப்படியே ஒரு தாம்பாளத்துக்கு மாற்றி, சில நிமிடங்கள் கரண்டியை வைத்துக் கிளறிக்கொண்டே இருந்தார்கள். இப்போது பார்ப்பதற்கு பாதாம் அல்வா போலவே இருந்தது.
பின் பட்டர் பேப்பரை பொறுமையாகவும் அழகாகவும் சதுர வடிவில் வெட்டித் தந்தார்கள். ‘ஒரு ஸ்பூன் எடுத்து அழகா நடுவில் வை... ஆறியதும் மடிச்சு வைச்சிடலாம்’ என்றார்கள்.
செய்து முடித்தவுடன் ஆச்சி சொன்ன டிரிக் என்ன தெரியுமா?
'சரியான அளவும் சிறிதளவு பொறுமையும் சேர்த்து செய்வதுதான் திரிபாகத்தின் சிறப்பு!’ அன்று இரண்டு முத்துலெட்சுமிகளும் சேர்ந்து செய்த திரிபாகம் சூப்பராக இருந்தது.

அதன் பின் ஆச்சி சொன்ன பக்குவத்தை மாற்றாமல் அப்படியே செய்வேன்; எப்போதுமே சூப்பராக இருக்கும். ஒரு முறை நண்பர்களோடு கொடைக்கானல் செல்லும்போது திரிபாகம் செய்து எடுத்துச் சென்றேன். உடன் வந்த சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் மலை ஏறி முடிப்பதற்குள் மொத்த திரிபாகத்தையும் காலி செய்து விட்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதைச் செய்யும்போதும் சூட்டிங் முடிந்த பத்தே நிமிடத்தில் காலியாகிவிட்டது. அந்த அளவுக்கு மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சூப்பரான இனிப்பு இது.

கடலைமாவு
கடலைமாவு
freepik

திரிபாகம் பற்றி ஒரு குட்டி விளக்கம் பார்த்து விட்டு, அதன் செய்முறைக்குச் செல்வோம்.
* கடலைமாவு, பால், பொடித்த முந்திரி, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து, சுவை கூட்டுவதற்காகச் சிறிது பச்சைக்கற்பூரமும் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பதற்கு சிறிது குங்குமப்பூவும் சேர்த்துச் செய்வதுதான் திரிபாகம்.
* கடலை மாவு, நெய், பால், முந்திரிப் பருப்பு எல்லாம் சம அளவு சர்க்கரை மட்டும் இரண்டு பங்கு சேர்க்க வேண்டும். இதில் முந்திரிப் பருப்பு முக்கால் பங்கு, பாதாம் பருப்பு கால் பங்கு என்ற அளவிலும் செய்யலாம்.
* முதலில் பாலையும் சர்க்கரையும் சரியான அளவில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் வைத்து, சர்க்கரை கரைந்ததும் கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவி, பாதியளவு நெய் சேர்த்து, கைவிடாமல் கிளறி கடலை மாவின் நிறம் மாறி வரும்போது மீதமுள்ள நெய்யைச் சேர்த்து, பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமப்பூ, பொடித்த முந்திரியையும் சேர்த்து, ஒன்றாகக் கலந்து, சில நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடவும். அதன் சூட்டிலேயே சில நிமிடங்கள் வைத்திருந்து ஒட்டாத பதம்தான் திரிபாகத்துக்கான பக்குவம். பின் பட்டர் பேப்பரில் அழகாக வைத்து மடிக்க வேண்டியதுதான். சுவையான திரிபாகத்தை சிரமமின்றி இருபது நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.

இப்போது திரிபாகம் செய்முறையைப் பார்ப்போம்.


தேவையான பொருட்கள்
கடலை மாவு - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - ஒரு கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை


ஸ்டெப் 1
ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் 1 கப் முந்திரிப் பருப்பைச் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். இடைவேளை விட்டுவிட்டு பொடிச் செய்யவும்.
ஸ்டெப் 2
ஒரு அகலமான கனமான கடாயில் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
சர்க்கரை முழுவதும் கரைந்த பின் கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்து அரை கப் நெய் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

ஸ்டெப் 3
கடலைமாவு நன்கு நுரைத்து வரும்போது மீதமுள்ள நெய், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ மற்றும் பொடித்த முந்திரிப்பருப்பு மாவை சேர்த்து சிறிது நேரம் கைவிடாமல் கிளறி கலவை தோசை மாவு பதத்தில் இருக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.

ஸ்டெப் 4
10 நிமிடங்களுக்குப் பின் கலவை அல்வா போலவே கெட்டியாகும். இப்போது சிறிதளவு கையில் உருட்டிப் பார்க்கும்போது ஒட்டாமல் வந்தால் சரியான பக்குவம். இந்தப் பதம் வந்ததும் ஒரு நெய் தடவிய தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 5
பட்டர் பேப்பரை சிறு சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
பட்டர் பேப்பரின் நடுவில் ஒரு மேஜைக்கரண்டி திரிபாகத்தை வைத்து ஆறியதும் பேப்பரை மடக்கி வைக்கவும்.

திரிபாகம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
1. கடலைமாவை ஒரு முறை சலித்துக் கொண்டு சர்க்கரைப் பாகில் சேர்த்தால் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.
2. முந்திரிப் பருப்பைப் பொடிக்கும்போது இடைவேளை விட்டு விட்டுப் பொடித்துக் கொள்ளவும். முந்திரியை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்தவுடனே பொடி செய்யக் கூடாது.
3. காய்ச்சி ஆறவைத்த பாலைதான் சர்க்கரையோடு சேர்க்க வேண்டும்.
4. பச்சைக்கற்பூரம் சிறிது சேர்த்தால் போதும்... அதிகமாகி விட்டால் திரிபாகத்தின் ருசியை மாற்றிவிடும்.
நீங்களும் இதேபோல் அளவுகள் ஏதும் மாற்றாமல் செய்து பாருங்கள். .
கடந்த அத்தியாயத்தில் வெளியான 'சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம்’ மற்றும் முன்பு பதிவு செய்த 'அருவிக் குளியலும் ஆனியன் தூள் பஜ்ஜியும்' பதிவுகளைப் பள்ளிப் பருவத்தினர் பலர் படித்துப் பார்த்து நன்றாக இருந்தது என்று கூறினார்கள். இப்படி சிறுவர்கள் கூறும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றும் ஒரு அறுசுவை அனுபவ உணவோடு சந்திப்போம்!

My Vikatan -இல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.