Published:Updated:

பாட்லக் பகிர்தலில் கிடைக்குமே கூடுதல் ருசி! - இது அமெரிக்காவின் கூட்டாஞ்சோறு பார்ட்டி! | My Vikatan

டொமேட்டோ பென்னே பாஸ்தா

எனக்கோ இவை எல்லாமே புதிய அனுபவம். அவர்களிடம் எப்படி பழகுவது என்ற தயக்கத்துடன் இருந்தேன். அங்கு ஒரு விஷயத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி...

பாட்லக் பகிர்தலில் கிடைக்குமே கூடுதல் ருசி! - இது அமெரிக்காவின் கூட்டாஞ்சோறு பார்ட்டி! | My Vikatan

எனக்கோ இவை எல்லாமே புதிய அனுபவம். அவர்களிடம் எப்படி பழகுவது என்ற தயக்கத்துடன் இருந்தேன். அங்கு ஒரு விஷயத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி...

Published:Updated:
டொமேட்டோ பென்னே பாஸ்தா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நம்மில் பெரும்பாலோர் வாழ்க்கையின் பெரும்பாலான நாள்களை அலுவலகத்தில்தான் செலவழிக்கிறோம். சக ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்தும் ஒர் உயர் அதிகாரி இருந்தால், அன்றாடம் செல்லும் அந்த இடம் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக மாறிவிடும்தானே! அப்படி ஒருவரைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.‌ அப்படியொரு பாஸ் கிடைத்தால் வேலை செய்யும் இடத்தை ஒரு நாளும் வெறுப்பதும் இல்லை; மறப்பதும் இல்லை. அப்படி ஒர் உயர் அதிகாரி கணவர் கலிஃபோர்னியாவில் வேலை பார்த்த அலுவலகத்தில் இருந்தார்.

Representational Image
Representational Image

அவர் பெயர் கேத்தி சூசா (Kathy Souza). அவர் முற்றிலும் வித்தியாசமான ரசனை கொண்டவர். டீமின் சக ஊழியர்களுக்கு திருமணம் நடந்த பின் அவரது வீட்டிலேயே ஒரு ரிசப்ஷன் நடத்துவார்கள். பேபி ஷவர் விழா, கிறிஸ்துமஸ் விழாக்களையும் வீட்டிலேயே சிறப்பாக நடத்துவார்கள். ஒவ்வோர் ஆண்டும் வசந்த காலம் ஆரம்பமானதும் வாரந்தோறும் தீம் லஞ்ச் ஏற்பாடு செய்வார்கள். இப்படி சுவையான கொண்டாட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஒரு வாரம் 'Passage to India' என்ற தீம் பிளான் செய்தார்கள். அப்போது அலுவலகத்திலுள்ள ஆண்கள் நம் நாட்டு வேஷ்டி சட்டையும் பெண்கள் சல்வார் கம்மீஸும் அணிந்து வந்திருந்தனர். அன்று லஞ்சில் இட்லி, பிஸிபேளாபாத், சப்பாத்தி, புல்கா, செட்டிநாடு கிரேவி எனப் பல விதமான இந்திய உணவுகளைச் சமைத்துக்கொண்டு வந்திருந்தனர். நம்மூர் இட்லியும் பொடியும்தான் அன்று சூப்பர் ஹிட். ரைஸ் கேக் என்று சொல்லி அனைவரும் விரும்பிச் சாப்பிட்டார்கள்.

அங்கு சென்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு எங்களுக்கும் ஒரு குட்டி ரிசப்ஷனை கேத்தியும் அவரின் கணவரும் சேர்ந்து நடத்தினார்கள். ரிசப்ஷன் விழாவுக்கு தேதி குறித்ததும் எங்களுக்கு என்னென்ன கிஃப்ட் வேணும் என்று shopping website-ல் 'wish list' வைத்திருப்பார்கள். அதில் நமக்கு விருப்பமான பொருட்களைப் பதிவு செய்ய வேண்டும். அட... இது ஒரு நல்ல ஐடியா என்று தோன்றியது!

எங்கள் ரிசப்ஷனை ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் கிரானைட் பேயிலுள்ள (Granite Bay) அவர்கள் வீட்டில் நடத்தினார்கள். எனக்கோ இவை எல்லாமே புதிய அனுபவம். அவர்களிடம் எப்படி பழகுவது என்ற தயக்கத்துடன் இருந்தேன். அங்கு ஒரு விஷயத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி... அவர்களின் டைம் மேனேஜ்மென்ட் எனக்கு வியப்பளித்தது. அன்று 7 மணிக்கு ஆரம்பிப்போம் என்று கூறினார்கள். அனைவரும் அதற்கு முன்பே வந்துவிட்டார்கள். உள்ளே நுழைந்ததும் ‘வெல்கம் சீட்ரா & மாதவ்’ (என்னுடைய மற்றொரு பெயர் சித்ரா) என்று அனைவரும் புன்னகையோடு அழைத்தார்கள்.

Representational Image
Representational Image

பின் கலிஃபோர்னியா எப்படி இருக்கிறது, எல்லாம் பிடித்துள்ளதா என்று கேட்டார்கள். பிறகு கேத்தி சூசா தாங்கள் சென்று வந்த இந்திய பயணத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் இங்கு வந்திருந்த போது சென்னையில் உள்ள தி.நகரை பார்த்து அசந்து போனதாகக் கூறினார்கள். ‘திரும்பிய இடமெல்லாம் கடைகள், டூவிலரில் அப்பா அம்மா நடுவே குழந்தைகள் என குடும்பத்தோடு கூட்ட நெரிசலில் பயணம் செய்வதை பார்த்து வியந்தேன். எங்கும் மக்கள் வெள்ளமாக இருந்தது’ என்றார்கள். தி.நகரில் அவர்கள் வாங்கிய பட்டுப் புடவை மற்றும் செயினைக் காட்டினார்கள். இந்தியாவிலுள்ள தங்க நகைகள் பளீரென்றும், பட்டுச் சேலைகள் வசீகரமான வண்ணங்களிலும் இருப்பதைப் பார்த்து ஆச்சிரியப்பட்டேன் என்றார்கள்.  

ராஜ்தானி ரயிலில் பயணம் செய்த அனுபவத்தையும் எங்களோடு பகிர்ந்தார்கள். பிறகு அவர்கள் வீட்டு கிச்சனுக்குள் அழைத்து சென்றார்கள். எங்கு திரும்பிப் பார்த்தாலும் பளிச் வெண்மை கப்போர்டுகள், வெண்மை செராமிக் பாத்திரங்கள் என அனைத்தும் வெண்மையாக இருந்தது.

அன்று பாட்லக் டின்னர். அதனால் அனைவரும் தங்கள் வீட்டில் வித விதமாகச் சமைத்து எடுத்து வந்ததை அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஏராளமான ஸ்டார்டர்ஸ், சாலட்கள், கார்லிக் பிரெட், பாஸ்தாக்கள், டிசெர்ட்ஸ் என ரசிக்க வைக்கும் ருசி அணிவகுப்பு!

கேத்தி சூசா செய்திருந்த 'டொமேட்டோ பென்னே பாஸ்தா' செவ்வண்ணத்தில் பார்க்க மிக அழகாக இருந்தது. பாஸ்தாவின் ருசியும் அதி அற்புதம். அதில் அழகான குட்டிக் குட்டி செர்ரி தக்காளிப் பழங்கள், ஆலிவ் பழங்கள், சுக்கினி மற்றும் சீஸ் காணப்பட்டன.

Representational Image
Representational Image

மற்றோர் இத்தாலியன் டிஷ் - ரேவியோலி வித் ரோஸ்டட் எக்பிளான்ட் (கத்தரிக்காய்) செய்திருந்தார்கள். அதன் சுவையும் அருமை. இப்படிப் பல வகையான உணவுகளுக்குப் பிறகு விதவிதமான கேக் மற்றும் ஐஸ்கிரீம்கள்.

விருந்து முடிந்ததும் அவர்கள் வீட்டின் ஹாலில் எல்லோரும் கொண்டு வந்திருந்த கிஃப்ட்டுகளைக் கொடுத்து, அங்கேயே பிரித்துப் பார்க்கும்படி கூறினார்கள். நாங்கள் இருவரும் நடுவில் அமர்ந்து ஒவ்வொரு பரிசு பாக்கெட்டையும் திறந்து பார்த்து அதற்குள் அவர்கள் எழுதி வைத்திருந்த வாழ்த்துகளையும் படித்தோம். அனைத்துப் பரிசுகளும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தன. எல்லோருக்கும் ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம். இந்த பார்ட்டி என் தயக்கங்களைக் களைந்து, அங்கிருந்த நண்பர்களுடன் பழகுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினசரி வேலைகளில் மூழ்கியிருப்பவர்களுக்கு இது போல கொண்டாட்டங்கள் அவசியம் தேவை.

கேத்தி சூசா எந்த ஊருக்கு சென்றாலும் கீசெயின், அலங்கார மேக்னட் அல்லது ஏதோ ஒரு பொருளை வாங்கிவந்து அவர்கள் நினைவாக நமக்குத் தருவார்கள். அவர்கள் தந்த அழகிய கிச்சன் பவுல்கள் இன்றும் ‘விருந்தோம்பல் கிச்சன்’ பயன்பாட்டில் உள்ளன. எனது சமையல் பதிவுகளுக்கு படங்கள் எடுக்கும்போதெல்லாம் தவறாமல் அவர்களின் ஞாபகம் வந்துவிடும்.‌ அவர்கள் வீட்டில் நடந்த எங்கள் ரிசப்ஷன் விழாவும் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நினைவலைகளை அளித்துள்ளது.

 பிறகு வீட்டில் அதேபோல டொமேட்டோ பென்னே பாஸ்தா செய்து பார்த்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் ஏதேனும் தவறு செய்துகொண்டே இருந்தேன். ஒருமுறை பாஸ்தாவை சரியான பதத்தில் வேகவைக்கவில்லை. மற்றொரு முறை இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்காமல் செய்து விட்டேன். இப்படி பல தவறுகள் செய்து செய்து ஒரு கட்டத்தில் அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன்.

 டொமேட்டோ பென்னே பாஸ்தா
டொமேட்டோ பென்னே பாஸ்தா

சில வாரங்களுக்குப் பின் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு கேத்தி சூசா வந்திருந்தபோது அவர்களிடம் டொமேட்டோ பென்னே பாஸ்தா குறிப்பினைக் கேட்டேன். அவர் அழகாக அதன் செய்முறை விளக்கத்தை சொல்லும்போதே செய்துபார்த்ததுபோலவே இருந்தது. பாஸ்தா வேகவைக்கும் முறை, தக்காளியை எப்படி சேர்க்க வேண்டும், எந்த வகையான சீஸ் உபயோகப்படுத்தினால் பாஸ்தா சுவையாக இருக்கும் என்று விளக்கினார். அங்கு கிடைக்கும் பல விதமான தக்காளிப்பழங்களில் மிகவும் சிறிதாக இருக்கும் செர்ரி தக்காளிப்பழம் குறிப்பிடத்தக்கது. அதையும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம் என்றார்கள். அதன்பின் அவர்கள் கூறியவாறு பென்னே பாஸ்தாவை செய்து பார்த்தேன். அந்த பாஸ்தா பார்ப்பதற்கு பேனா வடிவத்தில் இருப்பதால்தான் அதற்குப் பெயர் பென்னே பாஸ்தா!

அதன் பிறகு, அங்கு நடந்த மற்றொரு ரிசப்ஷன் விழாவுக்குச் சென்றிருந்தபோது, நான் செய்த உளுந்த வடையை ‘சீட்ராஸ் ஸ்பைசி டோனட் டேஸ்ட்ஸ் யம்மி’ என்று ரசித்துச் சாப்பிட்டார்கள். மற்றொரு வட இந்திய நண்பரிடம் அவர்கள் கற்றுக்கொண்ட பப்ஸை அன்று செய்திருந்தார்கள். எந்த ஒரு சின்ன விழாவாக இருந்தாலும், அது ‘பாட்லக்’ விருந்தாகவே அமைய வேண்டும் என்று கேத்தி வலியுறுத்துவார். அதில்தானே பலரின் பங்களிப்பும் பங்கேற்பும் சாத்தியம்!

இதுபோல ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துவது பெரிய காரியமாகும். அவர்களிடம் நான் கற்றுக்கொண்டது இதுதான்... சின்ன காரியத்தை எடுத்துச் செய்யும்போதுகூட இயல்பைவிட வேலைகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் அதில் பலரும் பங்கேற்று, அன்பைப் பகிர்கையில் நமக்கு மகிழ்ச்சியும் பல மடங்கு அதிகமாகவே கிடைக்கும்!  

எந்த ஒரு சின்ன விழாவாக இருந்தாலும், அது ‘பாட்லக்’ விருந்தாகவே அமைய வேண்டும் என்று கேத்தி வலியுறுத்துவார். அதில்தானே பலரின் பங்களிப்பும் பங்கேற்பும் சாத்தியம்! 

இப்போது டொமேட்டோ பென்னே பாஸ்தா செய்முறையை பார்ப்போம்

தேவையான பொருட்கள்:

பென்னே பாஸ்தா - ஒரு கப்

தண்ணீர் - 5 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்

பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்

பழுத்த தக்காளி - 6

செர்ரி தக்காளிப்பழம் (optional) - 5

ஆலிவ் பழங்கள் (optional) - சிறிதளவு

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

சில்லி ஃபிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

இத்தாலியன் மிஸ்க்டு ஹெர்ப்ஸ் - அரை டீஸ்பூன்

பாஸ்தா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

துருவிய பார்மஜான் சீஸ் (Parmesan Cheese) அல்லது செடார் சீஸ் - அரை கப்

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஸ்டெப் 1

பாஸ்தாவை எப்படி வேகவைப்பது?

ஓர் அகலமான பாத்திரத்தில் 5 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் பாஸ்தாவை சேர்த்து மிதமான சூட்டில் 9 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். பாஸ்தா சேர்ந்தவுடன் நடுநடுவே கரண்டியால் கிளறி விடவும். பாஸ்தா வெந்தபின் சுவைத்து பார்க்கும்போது பற்களின் இடுக்குகளில் லேசாக நறுக்கு என்று ஒட்ட வேண்டும். இதனை அல் தன்தே (al dente) என்று கூறுவார்கள். இந்தப் பதத்தில் வேகவைத்து எடுத்தால் சரியாக இருக்கும். பிறகு தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். மேலே லேசாக சிறிது எண்ணெய் விட்டு ஆறவைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

ஸ்டெப் 2

பாஸ்தாவுக்கான தக்காளி பியூர்ரி

பழுத்த தக்காளியின் கீழே 'x' வடிவில் கத்தியால் லேசாகக் கீறிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும் தக்காளியை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். பிறகு ஆறவைத்து தோலுரித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3

கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் செர்ரி தக்காளிப்பழம் மற்றும் நறுக்கிய ஆலிவ் பழங்கள் சேர்த்து லேசாக வதக்கவும்.

ஸ்டெப் 4

இப்போது தயார் செய்து வைத்துள்ள தக்காளி பியூர்ரி, சில்லி ஃபிளேக்ஸ், மிளகுத்தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், பாஸ்தா சாஸ் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கலவை லேசாக கொதித்து கெட்டியானதும் வேகவைத்து ஆறவைத்த பாஸ்தாவை சேர்த்து மெதுவாகக் கலந்து விடவும். பாஸ்தா தக்காளி கலவையோடு நன்றாக கலந்ததும் துருவிய சீஸ் சேர்த்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

டொமேட்டோ பென்னே பாஸ்தா
டொமேட்டோ பென்னே பாஸ்தா

டொமேட்டோ பென்னே பாஸ்தா செய்முறைக்கான விருந்தோம்பல் கிச்சன் வீடியோ இதோ...

https://youtu.be/8qyPxgZ5vyw

பாஸ்தா செய்வதற்கு உதவும் சில முக்கியமான டிப்ஸ் இதோ...

* பாஸ்தா வேகவைக்கும்போது தண்ணீர் சரியாகக் கொதிக்கவில்லை என்றால் பாஸ்தாவின் பதம் குழைவாக (soggy) இருக்கும்.

*பாஸ்தா வேகவைக்கும் போது எண்ணெய் சேர்க்க வேண்டாம்.

*பாஸ்தா வேகவைத்த தண்ணீரை சிறிதளவு ஆறவைத்துக் கொள்ளவும். கலவை கெட்டியாக பாஸ்தாவோடு ஒட்டாமல் இருந்தால் சிறிதளவு பாஸ்தா வேகவைத்த தண்ணீரை கலந்து கொள்ளலாம்.

*பொதுவாக பாஸ்தா வகைகளுக்கு பார்மஜான் சீஸ் வைத்து செய்யும்போதுதான் ஒரிஜினல் இத்தாலியன் பாஸ்தா ருசி கிடைக்கும். அது கிடைக்காவிட்டால் செடார் சீஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

*பாஸ்தா சாஸ் கிடைக்கவில்லை என்றால் 2 டேபிள்ஸ்பூன் தக்காளி கெட்சப் சேர்த்துக் கொள்ளலாம்.

*பாஸ்தாவுக்கு பூண்டு வதக்கும்போது நிறம் மாறாமல் பதமாக வதத்க வேண்டும்.

My Vikatan -இல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம். இதுபோல மற்றுமோர் அறுசுவை அனுபவ உணவோடு சந்திப்போம்!

அன்று பாட்லக் டின்னர். அதனால் அனைவரும் தங்கள் வீட்டில் வித விதமாகச் சமைத்து எடுத்து வந்ததை அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஏராளமான ஸ்டார்டர்ஸ், சாலட்கள், கார்லிக் பிரெட், பாஸ்தாக்கள், டிசெர்ட்ஸ் என ரசிக்க வைக்கும் ருசி அணிவகுப்பு!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.