Published:Updated:

”சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம்! | ஒரு திக் திக் ப்ளாஷ்பேக் | My Vikatan

சென்னை வெள்ளம்

கூவம் ஆற்றங்கரை ஓரங்களில் வசித்து வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

”சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம்! | ஒரு திக் திக் ப்ளாஷ்பேக் | My Vikatan

கூவம் ஆற்றங்கரை ஓரங்களில் வசித்து வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

Published:Updated:
சென்னை வெள்ளம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

2015-ஆம் ஆண்டு இதே கால கட்டத்தில் வடகிழக்குப் பருவமழை, வட தமிழகத்தில் வெளுத்து வாங்கியது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரை சுற்றி இருக்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிய நிலையில், தாமதமாக ஏரியை திறந்து விட்டதால், வெள்ளக்காடாக மாறியது சென்னை மாநகரம். இரவில் விடிய விடிய பெய்த மழையும், அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளமும் சைதப்பேட்டை பாலத்தை மூழ்கடித்து சென்றது. இதனால் அண்ணாசாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மெட்ரோ சுரங்க ரயில் பாதை பணிகள் நடைபெற்றதால், சைதாப்பேட்டை பாலத்தின் அருகே சுரங்கப்பாதையில் புகுந்த நீர், டிஎம்எஸ் மெட்ரோ ரயில் பாதை வழியாக வெளியேறி, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு பகுதியை வெள்ளக்காடாக மாற்றியது.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்

பெருவெள்ளத்தில் வேளச்சேரி, சைதைபேட்டை, ஜாபர்கான்பேட்டை, மேற்கு மாம்பலம், தியாகராயநகர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு வீட்டை சுற்றிலும் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது பின்னர் படிப்படியாக நிலைமை சீரடைந்தது. கிண்டி, அய்யப்பன்தாங்கல், ஜாபர்கான்பேட்டை, வட பழனி, தேனாம்பேட்டை, அண்ணாநகர், வில்லிவாக்கம், மணப்பாக்கம், மதுரவாயல் மற்றும் வட சென்னையில் வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி பகுதியில் வசித்த மக்களும், அப்போதைய மழை வெள்ளத்தில் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

கூவம் ஆற்றங்கரை ஓரங்களில் வசித்து வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. குடிசை வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன என்றால், ஊருக்குள் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள் மூழ்கத் தொடங்கின. கால் வரைக்கும் இருந்த தண்ணீர், கழுத்துக்கு வரவும் மக்களிடம் பீதி பரவியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இருளில் தவித்தனர். ஒரு லிட்டர் பால் ரூ.100 என்றாலும், பல இடங்களில் கிடைக்காமல் தட்டுப்பாடு இருந்தது.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்

2015 டிச.02, 03 ஆகிய தேதிகளில் சென்னை மாநகரமே ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. அந்த அளவுக்கு அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, இசிஆர் போன்ற முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், மாநகரப்பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. ஆட்டோக்கள், போன்ற வாகனங்களும், வெள்ளத்தில் இயக்க முடியாத சூழல் என்பதால், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைக்கு, தாய்மார்கள் தங்களது கைக் குழந்தைகளுடன் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது. ஹயாத், அக்கார்டு, ஜி.ஆர்.டி உள்ளிட்ட நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலாவாசிகளும், வெளிநாட்டினரும், விமான நிலையத்திற்கு செல்ல டாக்சி கிடைக்காமல் தவித்தனர். அண்ணாசாலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நடந்து சென்றனர். குடிசைவாசிகள் சிலர் தங்களது ரேசன்கார்டு, ஆதார் அட்டை, தாங்கள் வளர்க்கும் கிளி, நாய் போன்ற செல்லப் பிராணிகளுடன் அண்ணா மேம்பாலத்தில் தஞ்சமடைந்தனர்.

வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்றதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், உறவினர்கள் வீடுகளுக்கு அடைக்கலம் தேடியும், மக்கள் படகில் சென்றனர். மீட்பு பணியில் இருந்த ஆம்புலன்சு வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும் சூழல் காணப்பட்டது. அந்த சமயத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும். அவர்களில் பெரும்பாலனவர்களுக்கு கால்களில் சேற்றுப்புண் வந்து மிகவும் சிரமபட்டனர். எனினும், தங்களது அயராத பணிமூலம், வெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்டனர்

அப்போதைய பெருமழையில் சிக்கி, சென்னையில் மட்டும் 65 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். ஆற்றின் வெள்ளம் மருத்துமனைக்குள் புகுந்ததால், ஜென்செட் இயக்க முடியாத சூழல். ஏற்கனவே மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், ஜென்செட்-ஐ இயக்கமுடியவில்லை என்பதால், நோயாளிகள் பலர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்

சமூக வலைதளங்கள் அப்போது பெரும் உதவி புரிந்தன. வெள்ளத்தில் சிக்கிய பலர், தங்களை காத்துக்கொள்ள சமூக வலைதளங்களின் மூலம் உதவி கேட்டனர். முகநூலில் ‘சென்னை ரெயின்ஸ் ஹெல்ப்’ எனும் ஹாஸ்டாக் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதேபோல் பலர், சமூக வலைதளங்கள் மூலம் எந்தெந்த ஏரியாக்களில் எங்கு தங்குவதற்கு இடம் உள்ளது என்ற விவரங்களையும் பதிவுசெய்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்பி உதவிக்கரம் செய்தனர். சிலர் வண்டி வண்டியாக நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

வழக்கமான பருவமழை இந்த ஆண்டும் தாமதமாகத்தான் தொடங்கியது. அக்டோபரில் தொடங்கி பெய்யும் மழை, இந்தமுறை நவம்பரில் தொடங்கி இருக்கிறது. என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!

-சி.அ.அய்யப்பன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.