Published:Updated:

மழை காலத்தில் ஒரு நீண்ட நெடிய பைக் ரைட்! - அன்புள்ள இடுக்கி அணை - 1 | My Vikatan

இடுக்கி ( Photo by Arun Varghese Kurian on Unsplash )

இதற்கிடையில் இவர்கள் திட்ட மிட்ட செப் 26க்கு அடுத்த நாள் கேரளா வானிலை மையத்திலிருந்து செப் 29, 30 தேதிகளில் கன மழை பெய்யும் என்று அறிவிப்பு வந்திருந்தது,

மழை காலத்தில் ஒரு நீண்ட நெடிய பைக் ரைட்! - அன்புள்ள இடுக்கி அணை - 1 | My Vikatan

இதற்கிடையில் இவர்கள் திட்ட மிட்ட செப் 26க்கு அடுத்த நாள் கேரளா வானிலை மையத்திலிருந்து செப் 29, 30 தேதிகளில் கன மழை பெய்யும் என்று அறிவிப்பு வந்திருந்தது,

Published:Updated:
இடுக்கி ( Photo by Arun Varghese Kurian on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

2018 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் மூணாரிலிருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH85) மிகவும் சிதைந்து இருந்தது. எப்போதும் நிலப்பரப்பில் முன் பின் தெரியாத பாதைகளில் கூகிள் மேப் பயன்படுத்துவோம். ஆனால் முழுக்க முழுக்க கூகிள் மேப் உதவியுடன் மட்டுமே ஒரு பயணம் அதும் மழை பிரதேசத்தில் செய்தால் அதில் எவ்வளவு இடர்பாடுகள் வரும் என்பதை இந்த மழைப் பயணத்தில் புரிந்து கொண்டனர் பாலுவும் ரகுவும்.

இருக்குவருக்கும் 26 வயது ஆகிறது. டிப்ளமோ கல்லூரி காலத்திலிருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது ரகு கோவையிலும், பாலு கத்தார் நாட்டிலும் பணியின் காரணமாக வசித்து வருகின்றனர். ரகுவிற்கு இடுக்கி அணை மீது அதீத பிரியம்.

ரகு முதன்முதலாக இந்த அணையை பற்றி கேள்விப்பட்டபோதும், அதனுடைய புகைப்படங்களை இணையத்தளத்தில் பார்த்தபோதும் என்றாவது ஒரு நாள் இதை நேரில் காண சென்று வரவேண்டும் என எண்ணியிருந்தான். வெவ்வேறு பகுதியில் வசித்து வந்தாலும் ரகுவும் பாலுவும் வாட்சப்பில் அன்றாடம் உரையாடுவது வழக்கம். அவ்வாறு பேசும் போது சில நாட்கள் அந்த இடுக்கியின் அழகை பற்றி ரகு சொல்ல பாலுவுக்கும் அது விருப்பமானது. இருவருக்கும் இந்த இடுக்கி அணையை காணவேண்டும் என்ற ஏக்கம் பல ஆண்டுகளாக இருந்தது.

இடுக்கி
இடுக்கி
Photo by Godwin Angeline Benjo on Unsplash

இடுக்கி அணை, ஆசியாவின் மிகப்பெரிய வளைவு (Arch Dam) அணைகளில் ஒன்று. 70 tmc அளவு நீரை சேர்த்து வைக்கும் திறன் கொண்டது. வழக்கமாக ஒரு அணையை நாம் காணும் போது நீரின் பரப்புதான் அதிகமா தெரியும். பவானிசாகர் அணையின் நீர்ப்பரப்பு பகுதி சுமார் 8KM நீளம் கொண்டது. ஆனால் இந்த இடுக்கி அணையின் நீர்பரப்புக்கு இணையான அளவு மலைப்பிரதேசம் விரிந்திருக்கும். இரண்டு பிரம்மண்டமான சுவர்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சுவர்களில் ஒரு சுவர்தான் வளைவு சுவர். ரகுவிற்கு விருப்பம் வர காரணம் இந்த வளைவு சுவர் மட்டுமே. இந்த சுவரானது இரண்டு 150M உயரம் கொண்ட மலைகளுக்கு இடையில் ஒரு அரை கூம்பு வடிவத்தை தலைகீழாக வைத்து இணைப்பது போல் இருந்தது.

இந்த அழகை வெறும் புகைப்படத்தில் மட்டுமே பார்த்து ரசித்து கொண்டு இருந்த இவர்களுக்கு எதிர்பாராத விதமாக எந்த வித முன் திட்டமும் இல்லாமல் நேரில் சென்று பார்த்து வர ஒரு வாய்ப்பு அமைந்தது. இயற்கையை காண இயற்கையாய் அமைந்த தினம் செப்டம்பர் 30, 2018 ஞாற்றுக்கிழமை.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கத்தாரில் வசித்து வந்த பாலுவிற்கு திருமணம் ஏற்பாடாகி இருந்தது. ஆகஸ்ட் 26 அன்று திருமண தேதி உறுதியாகி இருந்தது. அதற்காக ஆகஸ்ட் 20 ஆம் தேதி விமானம் மூலம் சொந்த ஊருக்கு வர திட்டமிட்டிருந்தான் பாலு. ஏப்ரல் மாதமே இந்த திருமணத்திற்கான விடுமுறை நாட்கள் முடிவாகி இருந்தது. ஆகஸ்ட் 20 முதல் 45 நாட்களுக்கு விடுப்பு என்றாகி இருந்தது. இருவரும் முதன் முறையாக கத்தர் செல்லும் முன் 2015 ஆம் ஆண்டு சந்தித்து கொண்டதே கடைசி. அதன் காரணமாக இந்த 45 நாட்களில் ஏதேனும் இரண்டு நாட்கள் எங்கேயும் சென்று வரலாம் என பேசி வைத்திருந்தனர். திருமணம் 26 அன்று, பாலு ஊருக்கு வருவதோ 20 ஆம் தேதி. இடையில் 7 நாட்கள் எங்கேயும் செல்ல முடியாது என்பதால் திருமணம் முடிந்த பிறகு சென்று வரலாம் என பேசி வைத்திருந்தனர். பாலுவின் ஊர் புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம். இது கோவையிலிருந்து 400கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் 20, பாலு ஊருக்கு வந்து 26 அன்று திருமணம் முடிந்த பிறகு விருந்துக்கு வெளியூர் செல்வதும் வருவதுமாக இருந்தான். பின் ஒரு நாள் செப்டம்பர் 26 அன்று இருவரும் பேசிக் கொள்ளும் போது செப்டம்பர் 30 அன்று இருவருக்கும் எங்கேயும் சென்று வர வசதியான தேதியாக தோன்றியது. எங்கே சென்று வரலாம் என்று பேசிக் கொண்டிருக்க அப்போதுதான் பழைய நீண்ட நாள் விருப்பமான இடுக்கி அணை நினைவுக்கு வந்தது. சரி எப்படி செல்வது ஒரு நாளில் சென்று வர வேண்டும் முன் பின் தெரியாத பகுதி வேறு என பேசிக் கொண்டிருக்க, ரகு தன்னுடைய இரு சக்கர வாகனத்திலேயே சென்று வந்தால் என்ன என முடிவெடுத்து அதிலேயே சென்று வரலாம் என பேசிக் கொண்டனர். அடுத்த நாள் செப்டம்பர் 27 அன்று மதியம் சர்வீஸ் கொடுக்க சென்ற போது நிறைய வண்டிகள் இருப்பதால் சனிக்கிழமை மாலை கிடைப்பது கூட சந்தேகம் தான் என சர்வீஸ் சென்டர் பணியாட்கள் கூறினர். சரி கிடைத்தால் சென்று வருவோம் இல்லை என்றால் வேறு பார்த்துக் கொள்வோம் என்று பாலுவிடம் சொல்லி வைத்தான் ரகு.

இதற்கிடையில் இவர்கள் திட்ட மிட்ட செப் 26க்கு அடுத்த நாள் கேரளா வானிலை மையத்திலிருந்து செப் 29, 30 தேதிகளில் கன மழை பெய்யும் என்று அறிவிப்பு வந்திருந்தது, ஏனென்றால் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் மிகப் பெரிய கன மழையால் வெள்ளத்தைச் சந்தித்து இருந்தது கேரளா மாநிலம். இந்த அறிவுப்பு ஏற்கனவே யுனிகார்னில் சென்று வர திட்ட மிட்டு குழப்பமாகி இருந்த ரகுவை மேலும் குழப்பியது.

தன்னுடைய வீட்டில் சொல்லாமல் யூனிகார்னில் செல்ல வேண்டும், மிக கனமழை அறிவிப்பு வேறு என ரகு இப்படியான மன நிலையில் இருக்க பாலுவோ விருந்தில் கலந்து கொண்டு இருந்தான். இதனிடையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இடுக்கி அணைக்கு சென்று வருவதாக மட்டும் கூறியிருந்தான். யூனிகார்னில் சென்று வருவது பற்றி ஏதும் சொல்லவில்லை. பிறகு கூறிக் கொள்ளலாம் என இருந்தான்.

செப் 29 அன்று சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு சர்வீஸ் பணியாட்கள் ரகுவை தொடர்பு கொண்டு வண்டி வேலை முடிந்தது. 6 மணிக்குள் எடுத்து செல்லும் படி கூறி இருந்தனர்.

மழை காலத்தில் ஒரு நீண்ட நெடிய பைக் ரைட்! - அன்புள்ள இடுக்கி அணை - 1 | My Vikatan

என்னதான் ரகு 5 ஆண்டுகளுக்கும் மேலாக யூனிகார்னை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நாளில் அதிக பட்சமாக 200 கிமீட்டருக்கு மேல் ஒட்டியதில்லை. ஆனால் இந்த இடுக்கி அணை பயணமோ 500 கிமீட்டருக்கும் மேல். அதிலும் பாதிக்கு மேல் மலையில் பயணம் வேறு. வீட்டில் கூறினால் கண்டிப்பாக அனுமதி கிடைக்காது என தெரிந்தும் சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றி கொண்டே இருந்தது ரகுவிற்கு.

முன்பு கூறியது போல ரகுவின் விருப்பங்களில் ஒன்று என்றாவது ஒரு முறை கோவையிலிருந்து மதுரை வரை இரு சக்கர வாகனத்தில் சென்று வர வேண்டும் அதுவே அவனுடைய முதல் நீண்ட தூர டூ வீலர் பயணமாக இருக்க வேண்டும் என எண்ணியிருந்தான். எண்ணியதோடு இல்லாமல் அவனது வீட்டிலும் சொல்லி வைத்திருந்தான். எப்பனாலும் மதுரைக்கு பைக் எடுத்துட்டு கிளம்பிடுவேன்னு ரகு கூறிய போது அவன் அம்மா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரகு எதோ சும்மா சொல்கிறான் என எண்ணிருந்தார். ஆனால் ரகு தீர்க்கமாக இருந்தான்.

அணை அமைந்துள்ள இடம் இடுக்கி மாவட்டம் கேரளா மாநிலம். தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திற்கு அருகில் இருக்கிறது. அணைக்கு தேனி சென்று செல்வோம் என பேசிய பிறகு உசிலம்பட்டியில் மறுநாள் காலையில் சந்தித்து கொள்வது என முடிவாகியது. ரகு அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு உசிலம்பட்டி வருவதாகவும் அதே நேரத்தை கணக்கில் கொண்டு புளியங்குடியில் இருந்து பாலுவும் 7 மணிக்கு உசிலம்பட்டி வந்துவிடுவதாகவும் பேசிக் கொண்டனர். பயணத்திற்கு தேவையான பொருட்களை தயார் செய்துவிட்டு தூங்க சென்றான் காலை 2:30 மணியளவில் எழுந்து அத்தியாவசிய தேவைகளை முடித்துவிட்டு தன் கனவுப் பயணத்தை தொடங்கினான். அந்த கனவுப் பயணம் அவனது பிரியத்துக் கூறிய சிங்கநல்லூரில் இருந்து 3 மணியளவில் திட்டமிட்டபடி ஆரம்பித்தது. மறக்காமல் பாலுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கூகிள் மேப் ஆன் செய்து விட்டு யுனிகார்னை ஆன் செய்தான்.

முதலில் சிங்காநல்லூரில் இருந்து சூலூர் வழியாக பல்லடம் வரையான 30 கிமீட்டருக்கான ஆரம்பக்கட்ட பயணத்தை தொடங்கினான். ஆரம்பித்து 15 நிமிடத்தில் சிறிது மழை தொடங்கியதும் அதை முதல் சோதனையாக எண்ணிவிட்டு சூலூரில் ஒரு ஓரமாக 15 நிமிடம் காத்திருந்து பிறகு மழை கொஞ்சம் குறைந்த பிறகு பயணத்தை மீண்டும் தொடங்கினான் ரகு.

அடுத்த அரை மணி நேரத்தில் பல்லடம் வந்து சேர்ந்தான். மணி 4. அடுத்து 45 கிமீ நிற்காத பயணம் தாராபுரம் வந்த போது மணி 5:30 மணி. இதுவரை பயணம் மங்கிய இருளான சாலைகளில் இருந்தது.

குறிப்பாக சிங்காநல்லூர் பல்லடம் சாலையில் பெரிதாக பிரச்சனை இல்லை. ஆனால் பல்லடம் முதல் தாராபுரம் வரையிலான சாலை தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலை ஆனால் மாநில நெடுஞ்சாலையாக இருந்ததால், குண்டும் குழியுமாக இருந்தது. எதிரில் வரும் வண்டிகளின் ஹெட் லைட் வெளிச்சம் மற்றும் ஹெல்மெட் கண்ணாடியில் இருந்த கீறல்கள் என வழக்கமான பிரச்சனைகளை தாண்டி புதிய பிரச்சனை ஒன்றை அப்போது சந்தித்தான் ரகு.

மழைக் காலம் என்பதால் பூச்சிகள் கொத்துக் கொத்தாக சாலையில் இருந்தது. அது அவனின் வேகத்துக்கு பெரும் தடையாக இருந்தது. அவன் நினைத்த வேகத்தில் அவனால் யூனிகார்னை இயக்க முடியவில்லை. இந்த காரணங்களால் ரோட்டில் இருந்த பள்ளம் மேடு எதும் சரி வர தெரியவில்லை. இரண்டு மூன்று பெரிய பள்ளங்களில் வேறு வண்டி இறங்கி ஏறியது பெரும் கவலையை கொடுத்தது. எப்படியோ இருள் நேர பயணத்தை முடித்து தாராபுரம் வந்து ஒரு டி குடித்து மீண்டும் அதிகாலை வெளிச்சத்தில் மிதமான வேகத்தில் ஒட்டன்சத்திரம் வந்தடைந்த போது மணி 6:45. தாராபுரம் அப்புறமான ஒட்டன்சத்திரம் வரையிலான பயணம் அருமையாக இருந்தது. பாதி இருட்டு பாதி பகல் கலந்த ஒரு வானம், வழியெங்கும் பெரிய மின்சார உற்பத்தி காற்றாடிகள் மெதுவாக சுழன்று கொண்டிருக்க, தூரத்தில் தெரிந்த கொடைக்கானல் மலை அழகு என அந்த பாதை மன நிறைவையும் அடுத்து செல்வதற்கான உந்துதலையும் கொடுத்தது. ஆரம்பத்தில் ஏற்பட்ட வெறுப்பு மன நிலையை இந்த சூழல் அற்புதமான மன நிலையாக மாற்றியது. பின் செம்பட்டியை கடந்து உசிலம்பட்டி வந்தடைந்த போது மணி 9. இடையிடையே பாலுவுக்கு அழைத்து நிலவரத்தை தெரிந்து கொண்டான். பேருந்து தாமதம் ஆனதால் 9:30 மணி அளவில் பாலு வந்தான்.

இடுக்கி
இடுக்கி

நீண்ட நாளைக்கு பிறகான சந்திப்பு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக முடிந்தது. தேனி நோக்கி இருவரும் பயணத்தை ஆரம்பித்தனர் பாலு இப்போது வண்டியை ஓட்டியபடி யுனிகார்ன் அருமையாக இருப்பதாக கூறினான். தனது வண்டியை புகழ்ந்ததும் ரகுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ரகுவிற்கு யுனிகார்ன் அவ்வளவு புடிக்கும். தேனிக்கு முன்னாள் அல்லி நகரத்தில் காலை உணவை முடித்து விட்டு மீண்டும் பெட்ரோல் நிரப்பி கொண்டு மேப் உதவியுடன் பயணத்தை ஆரம்பித்தனர்.

தேனியில் இருந்து இயற்கையின் சூழல் மாற தொடங்கியது. சூழல் மிக மிக பொறுத்தமாக இருக்க கடக்கும் ஒவ்வொரு ஊர் பற்றியும் பேச்சுகளோடு சுவாரசியமாக போய்க்கொண்டு இருந்தது பயணம். நடுவில் ஒரு மலையில் மிகப் பெரும் நீர் வீழ்ச்சி ஒன்று தெரிந்தது. சில பல செல்பிக்கள் எடுத்துவிட்டு கம்பம் கடந்து குமுளி மலை அடிவாரம் சென்ற போது சாலை பணிநடை பெறுவதால் மாற்று பாதையில் செல்லவும் என அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. மலையில் பாதை சேதமடைந்திருந்ததால் அதை சீரமைக்கும் பணி நடை பெற்றது. வந்த சாலையிலேயே திரும்பி 20கிமீ வந்து கம்பம் சென்று அங்கிருந்து கம்பம் மெட்டு வழியாக கட்டப்பனா சென்று அங்கிருந்து இடுக்கி செல்லலாம் என அறிந்து திரும்பி வந்ததால் கிட்ட தட்ட 40கிமீ பயணம் வீணானது.

பின் கம்பம் மெட்டு சாலையை அடைந்து பார்த்தால் அது வெறும் 10 அடி அகலம் கொண்ட சிறிய மலைப் பாதையாகவும் வெறும் குழிகளாக இருந்தது. பெயர் அளவிற்கு கூட சாலை என சொல்ல எந்த தகுதியும் இல்லாத ஒரு சாலை அது. இப்படி ஒரு மோசமான சாலையில் 10-இல் இருந்து 20 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல முடிந்தது. மெதுவாக மலை ஏறி மெட்டைக் கடந்து கேரளா மாநில எல்லைக்குள் சென்றனர். பின் கட்டப்பனா பகுதிக்கு பாதையை கேட்டறிந்து செல்ல தொடங்கினர். இந்த சாலை சுமாராகத்தான் இருந்தது. இருந்தபோதும் யுனிகார்ன் சரி வர இயங்க சிரமப்பட்டது. யூனிகார்னை இயக்கி வந்த பாலுவிற்கு சரி வர இயக்க தெரியவில்லை என எண்ணினான் ரகு. காரணம் பாலு வண்டி ஒட்டி 5 வருடம் ஆகி இருந்தது.

இந்த விஷயம் சற்று சல சலப்பாக மாறி யூனிகார்னை ரகு இயக்கத் தொடங்கினான். ஓட்ட தொடங்கியதுமே ரகுக்கு புரிந்தது யூனிகார்னின் சக்தி அவ்வளவுதான் என்று. ரகுவின் விருப்ப பட்டியலில் இந்த யூனிகார்ன்க்கு முதல் இடம் இருந்தது. அதனால் யுனிகார்ன் சரி வர இயங்காததால் ரகுவின் மனம் சற்று சோர்வடைந்ததது. இப்படியாக கட்டப்பனா சென்றடைந்தனர் மணி 12:15 ஆகியிருந்தது. அங்கிருந்து 21 கிமீ என மேப் காட்டியது ஒரு பரவச நிலையை கொடுத்தது ரகுவிற்கு. மிகுந்த ஆவலுடன் ஒவ்வொரு கிமீ கடக்கவும் 1 முதல் இரண்டு நிமிடம் ஆனது. நேரம் சரியாக 1 மணி ஆகியிருந்தது. 21 கிமீ தூரமும் முடிந்து வெல்கம் டு இடுக்கி டேம் என்ற வரவேற்பு பலகை வரவேற்த்தது.

இடுக்கி செல்லும் வழியில்
இடுக்கி செல்லும் வழியில்

உள்ளே நுழைய முற்பட்ட போதுதான் தெரிந்தது அது அணையின் பின்புறம் (கிழக்கு) வழி என்பதும் அந்த வழியை அணை ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிந்தது. அக்கம் பக்கம் விசாரித்த போதுதான் தெரிந்தது அணையின் நுழைவு வாயிலுக்கு செல்ல இன்னும் 6 கிமீ போக வேண்டும் எனவும், கிட்ட தட்ட அணையின் பின்புறம் இருந்து சுற்றி அரைவட்டம் அடித்து நுழைவு வாயிலுக்குள் செல்ல வேண்டும் போல இருந்தது.

மீண்டும் அந்த பரவசம் தொற்றியது. மெல்ல செல்ல செல்ல 2 கிமீ கடந்த பிறகு ஒரு கொண்டை ஊசி வளைவு இருந்தது. அது வரை முற்றிலும் வெறும் காடாக மட்டுமே தெரிந்த மலையில் ஒரு இடத்தில் வெண்மை நிற சுவர் ஒன்று தென்பட்டது. அதுதான் அணையின் வளைவு சுவர் ரகுவிற்கு விருப்பம் வர காரணமான சுவர். பல்வேறு இடைஞ்சல்களுக்கு மத்தயில் பாதிதான் தெரிந்தது. இந்த சுவர் அமைந்துள்ள பகுதி அணையின் வட கிழக்கு பகுதியாக இருந்ததால் தமிழ்நாட்டை நோக்கி பார்த்த வண்ணம் இருந்தது. பிறகு இந்த கொண்டை ஊசி வளைவு பகுதியில் இருந்து மேலும் கிழக்கு நோக்கி சென்று பிறகு வடக்கு நோக்கி சென்று இடுக்கி நகரம் வந்தடைந்தனர். இடுக்கி நகரம் முற்றிலும் அணையின் முன்புறம் தான் அமைந்திருந்தது. அணையின் பின்புறம் இருந்து முன்புறம் இடுக்கி நகரம் வர 20 நிமிடங்கள் ஆனது. இடுக்கி நகரத்திலிருந்து அணைக்கு மேலும் 2 கிமீ என்று இருந்தது.

இடுக்கி
இடுக்கி

இடுக்கி நகருக்குள் வரும் போதே அணையில் இருந்து வரும் ஆற்றை கடந்து தான் வந்திருந்தனர். அன்றைக்கு வழக்கமான ஒரு ஆறாக அது இல்லை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. மண் சரிவு, கரையை ஒட்டியுள்ள வீடுகள் மற்றும் கட்டிட இடிபாடுகள் அனைத்தும் அகற்ற படாமல் அப்படியே கிடந்தது. ஒரு வழியாக மழை ஏதும் வரவில்லை அதற்கான அறிகுறிகள் கூட தெரியவில்லை. 30 டிகிரி வெப்பம் பதிவு ஆகி இருந்தது. இடுக்கி நகரில் இருந்து மேலும் பயணம் செய்து வடக்கில் இருந்து தென் மேற்கு நோக்கி அணையின் நுழைவு வாயில் வந்தடைந்தனர்.

தொடரும்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.