Published:Updated:

மாயாண்டி எனும் போதி மரம்! - கடைசி விவசாயி விதைத்த நம்பிக்கை விதை

கடைசி விவசாயி

காவல் நிலையத்தில் எப்படி அமர வேண்டும் என்ற நிகழ்கால நடைமுறை நெளிவுசுளிவு தந்திரங்களையெல்லாம் அறியாத, தன் விவசாய கடமைகளை மட்டுமே தவமாக கொண்டு வாழும் ஒரு கிழவனின் நீதிமன்ற வாதம் எப்படி பட்டதாக இருந்துவிட முடியும் ?

மாயாண்டி எனும் போதி மரம்! - கடைசி விவசாயி விதைத்த நம்பிக்கை விதை

காவல் நிலையத்தில் எப்படி அமர வேண்டும் என்ற நிகழ்கால நடைமுறை நெளிவுசுளிவு தந்திரங்களையெல்லாம் அறியாத, தன் விவசாய கடமைகளை மட்டுமே தவமாக கொண்டு வாழும் ஒரு கிழவனின் நீதிமன்ற வாதம் எப்படி பட்டதாக இருந்துவிட முடியும் ?

Published:Updated:
கடைசி விவசாயி

டுக்குகள், படிமங்கள், குறியீடுகள் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு கதாநாயகனுக்கு பின்னால் இருக்கும் மேஜையில் கிடக்கும் குண்டூசியின் வடிவத்தை கூட இயக்குநரின் அரசியல் பின்புலத்துடன் ஒப்பிடும் தமிழ் சினிமாவின் பிரபல விமர்சகர்களும் கூட இயக்குநர் மணிகண்டனின் கடைசி விவசாயி படத்தை "மிகச் சிறந்த படம்" என்ற ஒற்றை வாசகத்துடன் கடந்துவிட்டதாகவே தோன்றுகிறது . …

உலக சினிமாவை சிலாகிப்பவர்களும், மலையாள படமான சுருளி படத்தின் காட்சி குறியீடுகளை மொழி பெயர்த்தவர்களும் கடைசி விவசாயி முழுவதும் விரவி கிடக்கும் சூட்சமமான கதை அடுக்குகளையும், குறியீடுகளையும் கண்டுகொள்ளாமலேயே தாண்டிவிட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

"ஒரு சில காட்சிகளில் வருகிறார்கள்" என்பதாகவே விமர்சிக்கப்பட்ட விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபுவின் பாத்திரங்கள் மிகவும் முழுமையானவை என்பதையும் தாண்டி படத்தின் ஓட்டத்துக்கும் அது நமக்கு உணர்த்தும் கருத்துகளுக்கும் அத்தியாவசியமானவை .

கடைசி விவசாயி
கடைசி விவசாயி

மேலோட்டமாக தெரியும் பாரம்பரிய விவசாய மற்றும் வாழ்வியல் வழிமுறைகள், ஜாதிய கட்டமைப்பு, சிறுதெய்வ வழிபாட்டுக் காரணங்கள் போன்றவற்றையும் தாண்டி, திரைக்கென எந்த சமரசங்களும் இல்லாத யதார்த்தம் வழியே புவி அரசியல் பன்னாட்டு வியாபார தந்திரங்கள் தொடங்கி ஜென்புத்தம் ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவங்கள் வரை இந்த படத்தில் கிடைக்கும் அரசியல் மற்றும் வாழ்வியல் குறியீடுகள் ஏராளம் .

"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" பாடலுடன் தொடங்கும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சிவரை முருகனின் வாகனமாக சித்தரிக்கப்படும் மயில் ஒரு குறியீடாகவே வருகிறது. கடைசி விவசாயி படத்தின் மயில்வாகன முருகன் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான கடவுள் அல்ல, அனைவருக்குமான நம்பிக்கை. வள்ளி தேவானைக்கு நடுவே வீற்றிருக்கும் முருகனை நினைவுபடுத்தத் தூண்டும் கொல்லப்பட்ட ஒரு ஆண் மயில் மற்றும் இரண்டு பெண் மயில்கள் மாயாண்டியினால் புதைக்கப்படும் விதமும் நம்பிக்கையையே உணர்த்துகிறது. இறுதி காட்சியில் மீண்டும் தோன்றும் மயில் மீண்ட நம்பிக்கையின், எதிர்கால வளமையின் குறியீடு .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யக்கத்தைவிட இருத்தலே முக்கியம் எனும் ஜென் தத்துவத்துக்கும், கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே எனும் கீதையின் சாரத்துக்கும் உதாரணமானது முதியவர் நல்லாண்டி ஏற்று நடித்த கதை நாயகனான மாயாண்டியின் வாழ்க்கை. மாயாண்டியின் வாழ்க்கைக்கு உதாரணமாக பூமியின் சுழற்சியை மட்டுமே கூற முடியும் . பிரதிபலன் என்பதின் அர்த்தமே அறியாத இந்த முதியவரே ஒரு போதி மரம் . தன் தரப்பு என்றும், தன் நிலைப்பாடு என்றும் எதையும் பேசத்தெரியாத இந்த மூத்த மரமும் தன் நிழலுக்கு கீழே வருபவர்கள் அனைவருக்கும் சுயச்சார்பு வாழ்க்கை ஞானத்தை வழங்குகிறது.

கண்திருஷ்டி கயிற்றுக்கான அத்தனை "அறிவியல்" காரணங்களும் அறிந்த இந்த ஞானக்கிழவனால் சிறைக்கைதிகளுக்கு கூட எளிமையாக இயற்கை விவசாயத்தை கடத்த முடிகிறது .

கடைசி விவசாயி
கடைசி விவசாயி

மாயாண்டி கதாபாத்திரத்தின் மூலம், நுகர்வு கலாச்சாரம் ஒரு மாமாங்கத்துக்குள் நம்மிடமிருந்து துடைத்தெரிந்துவிட்ட நம்முடைய பல நூற்றாண்டு பழக்க வழக்கங்களையும், இயற்கை சார் வாழ்வியலையும் பட்டியலிடுகிறார் இயக்குநர்.

"அவனுக்கு மட்டும் எப்படி விதை கிடைச்சிச்சி ?." எனும் மாயாண்டி கிழவனின் அலட்சிய கேள்வி பகுத்தறிவின் ஊற்றுக்கண் .

"கடவுள் மனித குலத்தைக் கைவிடவில்லை என்பதற்கு பிறக்கும் குழந்தைகளே சாட்சி" என்றார் ரவீந்திரநாத் தாகூர் .

பல்லுயிர் தொடங்கி பயிர்கள் வரை அனைத்துக்குமான இயற்கையின் அடிப்படை நியதியே இனப்பெருக்கம் தான். ஏதோ ஒரு காரணத்தால் இனப்பெருக்கம் தடைப்பட்டுவிட்டால் உலகம் என்னாகும் ?

தனது கால்நடைகளுக்கு போடும் தீவனத்தை கூட ருசித்துப் பார்த்து வாங்கும் அளவுக்கு மண் மற்றும் அதன் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவனால் மட்டுமே,

"அவனுக்கு விதைக்கொட்டை இல்லாத ஆண்பிள்ளை பிறந்தால் புரியும்..."

என விஞ்ஞான வளர்ச்சியின் பெயரில் இயற்கையின் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை யதார்த்தமாக தோலுரித்துக்காட்ட முடியும் .

கடைசி விவசாயி
கடைசி விவசாயி

"சையே அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை" என்றான் புத்தன். அப்படியான ஆசையை தூண்டுவதை அடிப்படையாக கொண்டதுதான் நுகர்வு கலாச்சாரம் .

இவற்றை உபயோகிப்பவர்கள் மட்டுமே நவநாகரீக வாழ்க்கைக்கு தகுதியானவர்கள் என்பதான விளம்பரங்களின் மூலம் நுகர்வு பொருட்களின் மீதான ஆசையைக் கூட்டி, இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் சொல்லப்படுவதை போலவே தனியார் வங்கிகளின் மூலம் ஆடு மாடு மனிதன் என அனைத்தின் பெயரிலும் கடன்களை கொடுத்து அத்தனையையும் வாங்க தூண்டி, முடிவில் "வட்டிக்கு ஒட்டியாணம் வாங்கி, அந்த கடனுக்கு வட்டி கட்ட ஒட்டியாணத்தையே விற்ற" கதையாக கடன் பட்டவனை ஓட்டாண்டியாக்கும் தந்திரம் .

பன்னாட்டு நிறுவனங்களும் வங்கிகளும் கை கோர்த்துக்கொண்டு சந்தை நாடுகளை சொந்தக்காலில் நிற்க விடாமல் தடுக்கும் மறுகாலனியாதிக்க அரசியல் .

"அறிவு வளராததனால எதச்சொல்லியும் அந்தாளை ஏமாத்த முடியலண்ணே ."

தன் நிலத்தை விற்பதற்கு ஒத்துக்கொள்ளாத மாயண்டியை பற்றி படத்தில் பேசப்படும் இந்த வசனத்தில் நுகர்வு கலாச்சார அரசியல் தந்திரத்தின் அத்தனை சூட்சமங்களும் ஒளிந்திருக்கிறது .

ஜோடி மாற்றிய கால் செருப்புகளை அணியும் அளவுக்கு மற்றவர் அபிப்பிராயங்கள் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத, காவல் நிலையத்தில் எப்படி அமர வேண்டும் என்ற நிகழ்கால நடைமுறை நெளிவுசுளிவு தந்திரங்களையெல்லாம் அறியாத, தன் விவசாய கடமைகளை மட்டுமே தவமாக கொண்டு வாழும் ஒரு கிழவனின் நீதிமன்ற வாதம் எப்படி பட்டதாக இருந்துவிட முடியும் ?

கடைசி விவசாயி
கடைசி விவசாயி

"நீங்க பேசிக்கிட்டிருக்கும் போதே நான் போயி வயலுக்கு தண்ணி பாய்ச்சிட்டு வந்திடறேன்..."

எனும் யதார்த்தமாக மட்டுமே இருக்க முடியும் .

நடிகர் நாசர் இயக்கி நடித்த அவதாரம் திரைப்படத்தின் நீதிமன்ற காட்சியில்,

"எல்லோரும் பேசி முடிச்சிட்டாங்க... நீ எதுவும் சொல்ல விரும்புகிறாயா ?" என நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கூத்துக் கலைஞன் நாசரை பார்த்து கேட்க,

சட்டென பெருங்குரலெடுத்து, ஒப்பாரி கூத்து பாட்டின் வழியே தான் வஞ்சிக்கப்பட்டதைப் பாடுவார் நாசர். கூத்து கலையை மட்டுமே உயிர்மூச்சாக கொண்டவனின் முறையிடலும் கூத்துப்பாட்டாகத்தான் வரும் . அந்த படத்துக்கு பிறகு, அர்ப்பணிப்பாக வாழும் ஒரு மனிதனை மிக யதார்த்தமாக காட்சி படுத்தியது இந்த கடைசி விவசாயி படத்தின் நீதிமன்ற காட்சிதான் .

ன்றின் அருமை அது இல்லாத போது தான் புரியும் எனும் வாழ்வியல் நியதிக்கேற்ப,

"எவன் தயவும் வேணாம்ன்னு வாழ்ந்திருக்காருய்யா சீயான்... வாழ்ந்தா இவர மாதிரி வாழனும்" என மாயாண்டி சிறையிலிருக்கும் போது அவரின் உறவுகள் அவரது வாழ்க்கை முறையில் ஈடுபாடு கொள்ளும் வேளையில்...

நீதிமன்ற கட்டாயத்தினால் கடமைக்காக தண்ணீர் பாய்ச்ச வந்த காவலர் ஆத்ம திருப்தியை உணரும் சூழலில்...

சிறைக்கைதிகளின் உள்ளத்திலும் விவசாய விதைகளை தூவிக்கொண்டிருக்கிறது மாயாண்டி எனும் அந்த மனித போதி மரம் .

தமிழ் சினிமாவின் "ஆர்டர்... ஆர்டர்..." இயந்திர நீதிபதி பாத்திரங்களுக்கு மாற்றாக, "இவரா மயில்களை கொன்றதா சொல்றீங்க ?" என கேட்கும் ரேச்சல் ரெபெக்காவின் நீதிபதி கதாபாத்திரமும் ஒரு இன்ப அதிர்ச்சி .

கடைசி விவசாயி
கடைசி விவசாயி

மூன்று அல்லது நான்கு காட்சிகளில் மட்டுமே வரும் யோகிபாபு பாத்திரம் தான் இந்த படத்தின் மிக முக்கியமான இரண்டு செய்திகளை உணர்த்துகிறது ....

நிலம் விற்ற காசில் ஆட்டோ ரிக்சா வாங்கி ஓட்டலாம் அல்லது மினி லாரி வாங்கி லோடு ஏற்றலாம். குறைந்த பட்சம் ஒரு பெட்டிக்கடையாவது வைக்கலாம் . ஆனால் யோகி பாபு வாங்குவது யானை .

"மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெலென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை" எனும் உவமைக்கு ஏற்ப இருந்த பண்டைய தமிழனின் விவசாய வளமை தரிசாக மாறி, போரடிக்க பயன்படக்கூடிய யானையை வைத்து யாசகம் செய்யும் அளவுக்கு நலிந்துவிட்டது .

விவசாயம் அழிந்துவிட்டது எனும் பொதுக்கருத்து உண்மையல்ல . விவசாயம் அழிந்தது உண்மையானால் நாளுக்கு நாள் உயரும் மக்கள் தொகையின் வேகத்துக்கு உணவு உற்பத்தியினால் ஓட முடிந்திருக்காது. "கிராமத்து குடியானவனிடமிருந்து" விவசாயம் பெருவணிக நிறுவனங்களுக்கு தந்திரமாக கைமாற்றப்பட்டுவிட்டது என்பதே உண்மை .

அந்த உண்மையை,

"லட்ச லட்சமா பணம் வச்சிருக்கற நீங்கதாண்டா இனி விவசாயம் பண்ண போறீங்க ."

எனும் யோகி பாபுவின் வார்த்தைகள் பொட்டில் அடித்தது போல உணர்த்துகின்றன .

ற்கொலை செய்துகொண்ட அக்காள் மகளுடன் மானசீகமாக வாழும் ராமையாவாக, அவளுக்கும் சேர்த்து டீ சொல்லிவிட்டு சில்லறைகளை கையினால் அளந்து கொடுக்கும் விஜய் சேதுபதி...

அறிமுக காட்சியில்,

"அவரு என் கிட்ட இங்கிலீஸ்ல பேசுனாரு... நான் அவர்கிட்ட தமிழ்ல பேசுனேன்..."

என விஜய் சேதுபதி கூறிவிட்டு சென்ற பின்னர், "மைக்ரோ சாப்ட் ஓனர்" பில்கேட்ஸ் கொடைக்கானல் வந்திருக்கும் வானொலி செய்தி .

கடைசி விவசாயி
கடைசி விவசாயி

மயில் நேர்க்கோடாகப் பறக்கும் ஆரம்ப காட்சியை கொண்ட படத்தின் ஒரு காட்சியில்,

"முருகன் மயில் ஏறி சர்ர்ன்னு போயிட்டானாம் உலகத்தை சுத்த" என்கிறான் ராமையா.

விவசாயி மாயாண்டியை ராமையா காண வரும் மற்றொரு காட்சியிலோ,

"நேரா போய்க்கிட்டிருந்தேன்... உன் நினைப்பு வந்துச்சி... வந்தேன்... ஏதாவது நினைச்சியா" என மாயாண்டியிடம் கேட்கிறான் ராமையா .

ராமையா மலை உச்சியில் ஏறி நின்று பின்னர் மறைந்துவிட்டதாக மாயாண்டியிடம் சொல்லப்படும்போது,

"மறையல... பறந்துட்டான் ." எனக்கூறி, ராமையாவிடமிருந்து வந்த விபூதியைப் பூசி விடுகிறார் மாயாண்டி .

மயில்களுக்கு ஈடாக "குமரன்" இருப்பதாக நம்பப்படும் குன்றுகளும் படம் நெடுகிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன...

ராமையா யார் ?

சித்தம் கலங்கிய கிறுக்கனா அல்லது எல்லாம் தெளிந்த சித்தனா?

பெரியவர் மாயண்டி வழிபடும் முருகனின் மனித ரூபமா இல்லை "உயிரோட வாழ்ந்தவங்களதான் தெய்வமா வச்சி கும்பிட்டிக்கிட்டிருக்கோம்" எனும் வசனத்துக்கு சாட்சியாக, வருங்கால தெய்வங்களின் வரிசையில் இடம்பெற போகும் "வாழ்ந்த" மனிதனா ?

விஜய் சேதுபதியின் சமீபத்திய படங்கள் பற்றிய விமர்சனங்களுக்கான ஒட்டுமொத்த மெளன பதிலாக அமைந்திருக்கிறது ராமையா வேடம் .

கலைந்த தலை, வெற்றிலை மெல்லும் காவி பற்கள், வெறித்த பார்வை, கேள்வியை உள்வாங்கி பதிலளிக்கும் நிதானம், சதா எதையோ தேடி அலையும் பார்வையுடன் கூடிய நடை என சித்த கலக்கத்துக்கும் புத்தி தெளிவுக்கும் நடுவே நிற்கும் ராமையாவாகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

கடைசி விவசாயி
கடைசி விவசாயி

தனக்கு முன்னால் இரண்டு தட்டில் சோறு வைத்த மாயாண்டியை பார்க்கும் பார்வையிலும்,

"அவள மறந்துட்டியே... அவளுக்கும் பூசி விடு" எனக்கூறியபடி பரதேசி விபூதி கொடுக்கும் போது கைகள் குப்பி, உடல் நடுங்கி, உதடு கோணி நிற்கும் காட்சியிலும் தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறான் இந்த கலைஞன் .

கால் வலிக்கு அப்பளம் உணர்த்தும் உணவே மருந்து, தன்னை தேடி வரும் காவலருக்கு தண்ணீர் கொடுத்து உபசரிக்கும் மனித நேயம், பூம்பூம் மாடு ஞாபகப்படுத்தும் நலிந்த கலைகள், பிறந்த நிலத்திலிருந்து சில பிடி மண் அள்ளக்கூட அனுமதி கேட்கவேண்டிய அவலம், தரிசு நிலத்தில் அமர்ந்து "மணப்பாறை மாடு கட்டி" பாட்டுப் பாடும் கொடுமை என கடைசி விவசாயி கடத்தும் செய்திகள் இன்னும் ஏராளம் .

டத்தின் இறுதியில், தன் அந்திம காலத்தில் மீண்டும் ஒரு முறை வாழ்க்கை தொடக்கத்தின் மையப்புள்ளி ஆகிறான் கடைசி விவசாயி . அவனுடன் குயவனும் பறை கலைஞனும் வேற்றுமைகள் மறந்து சேரும்போதுதான் மீண்டும் ஒரு வசந்தத்துக்கான துவக்கம் அமைகிறது . ஊருடன் சேர்ந்து யாசகம் கேட்ட யானையும் கூட விவசாயத்துக்கு திரும்புகிறது .

படம் நெடுகிலும் வந்தாலும் இறுதி காட்சியில் தான் தோகை விரிக்கிறது மயில்...

அதை தொடரும் பெருமழையின் சப்தம்...

ஊர் உலகம் ஒற்றுமையாக ஒன்றுகூடிப் பெய் என்றாலும் பெய்யும்...

மழை .

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.