Published:Updated:

விமான நிலைய முகங்கள்! | My Vikatan

Muscat airport

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களைப்போல் மஸ்கட் விமான நிலையம் வளர்ந்து வருகிறது. ஆனால் அவையிரண்டின் சேவையைப் போல் அவர்கள் கொடுக்க, நாளாகும் போல் தெரிகிறது.

விமான நிலைய முகங்கள்! | My Vikatan

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களைப்போல் மஸ்கட் விமான நிலையம் வளர்ந்து வருகிறது. ஆனால் அவையிரண்டின் சேவையைப் போல் அவர்கள் கொடுக்க, நாளாகும் போல் தெரிகிறது.

Published:Updated:
Muscat airport

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மஸ்கட் விமான நிலையம்.

காலைக் கதிரவன் மெல்ல மேலேறிக் கொண்டிருந்தான்.

ஒமன் ஏர் சூரிக் விமானம், காலை 7.05 க்குத்தான் மஸ்கட் வருமென்றும், 8.20 க்கு சென்னை விமானம் புறப்படுமென்றும் டிக்கட் ரிசர்வ் செய்திருந்த போது தெரிவித்திருந்ததால், எனக்குச் சற்றே கலக்கமாக இருந்தது. ஆனால் விமானம் 6.25 க்கே மஸ்கட் மண்ணைத் தொட்டு, எங்கள் மனதில் பால் வார்த்தது!அவசரமின்றி, நிதானமாக செக்யூரிட்டி செக்கை முடித்துக் கொண்டு C6 கேட் வந்தோம். மிக விரைவாகவே செக் முடிந்து விட்டதால், அங்கு சாவகாசமாக அமர்ந்து கதை பேசலானோம்.

சூரிக்கில் கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற வந்த மூன்று பெண்கள் தயங்கி நின்றனர்.

’என்ன தயக்கம்?’ என்று தமிழில் நான் கேட்டதும், ’பின்னால ஒருத்தவங்க வர்றாங்க! அதான்!’ என்றார்கள்.

நாங்கள் முன்னே சென்று எங்கள் சீட்டில் அமர்ந்தோம். அந்த மூன்று பேரும் மீண்டும் வந்து, ’சென்னைக்குத்தானே போறீங்க? நாங்களும் சென்னைதான் போறோம்! எங்களையும் கூட அழைச்சிக்கிட்டுப் போயிடுங்க!’ என்று வேண்டிக் கொண்டார்கள்.

’நிச்சயமாக’ என்று நானும் எனது மனைவியும் கூற, அவ்வாறே செய்தோம். அவர்கள் இருவரும் சம்பந்திகள் என்பதும், குழந்தையைப் பார்க்க வந்ததாகவும் தெரிவித்து, என் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களைப்போல் மஸ்கட் விமான நிலையம் வளர்ந்து வருகிறது. ஆனால் அவையிரண்டின் சேவையைப் போல் அவர்கள் கொடுக்க, நாளாகும் போல் தெரிகிறது. வீல் சேர் உதவி கோரும் வயதான பயணிகளையே நடக்க விட்டு விடுகிறார்கள்.

Muscat airport
Muscat airport

மற்ற இரண்டு விமான நிலையங்களிலோ எலக்ட்ரிக் காரில் எல்லோரையும் ஏற்றிச் சென்று, சிறப்பு வழியில் செக்யூரிடி செக்கையும் விரைந்து முடித்து விடுவார்கள்.

அடுத்துப் பிடிக்க வேண்டியது எந்த விமானம் என்று சொல்லி விட்டால் போதும். மற்ற எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் ‘ஹாயாக’ வேடிக்கை பார்த்துக் கொண்டு வரலாம். இந்த ‘வீல் சேர் அசிஸ்டன்ஸ்’ என்ற நிலை வந்ததும்தான், பயணிகளின் எண்ணிக்கை கூட ஆரம்பித்திருக்கிறது. நம்மூர் வயதான பெண்களும், தனியாகவே விமானப் பயணம் செய்யும் துணிச்சலையும் வளர்த்து விட்டிருக்கிறது.

சென்னை விமானம் சற்றே சிறியதுதான். அனைவரும் ஏறிக் கொண்டோம். எங்கள் இருக்கைக்கு அருகில், வலது புறத்தில் விங்க். விமானத்தின் செயல்பாட்டில் விங்க்ஸ்களின் பங்கு மகத்தானது என்று கூறக் கேட்டிருக்கிறேன். எனவே சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதன் அசைவுகளைக் கவனிப்பதுண்டு. இறங்கும்போது, ரன் வேயில் வேகத்தைக் குறைக்க, விங்க்ஸ்களில் உள்ள சில பாகங்கள் செங்குத்தாக நிற்பதைப் பார்த்திருக்கிறேன். விமானத்தில், முஸ்லீம் நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள். மூன்று பேர் சீட்டில் நான் நடுவில் அமர்ந்திருக்க என் துணையார் சன்னல் ஓரம் உட்கார்ந்திருந்தார்.

மூன்றாவது சீட்டுக்கு வயதான பெண்மணி வர, அவரின் கணவர், என்னை மாறி உட்காரச் சொன்னார். வயதானாலும், அவர்களின் அன்பும், பொசசிவ்னெசும் என்னைக் கொள்ளை கொண்டன. மனைவியை நடுச் சீட்டிற்கு மாற்றி விட்டு, நான் சன்னலோரம் வந்தேன்.

எப்போதும் போல் விங்கை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். விங்குக்கீழே லக்கேஜ்களை மூன்று, நான்கு பேர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் அந்த இளைஞன் கண்ணில் பட்டான். லக்கேஜை ஏற்றுவதும், இடையிடையே ஜன்னலைப் பார்ப்பதுமாக இருந்தான். காலை வெயில் அவன் மீது நன்றாகப் பட்டது. நமது தெற்குத் தமிழ் நாட்டு கலர். காரை அக்பர் கறுப்பு பற்றி சமீபத்தில் எழுதியிருந்தாரே, அந்த கலர். மற்றவர்கள் வெள்ளையாகத் தெரிந்தார்கள்.

அவர்களின் உடைகளும் பளிச்சென்றிருந்தன. அந்தப் இளைஞனின் உடலும், உடையும் மங்கலாகவே தெரிந்தன. நாமும் அந்தக் கலர்தானே! அவன் அடிக்கடி மேலே பார்த்தபோது, உள்ளிருந்தபடியே கையை ஆட்டலாமா என்று எண்ணினேன். அவனுக்குத் தெரியுமா? எனது கணிப்பில், அவனுக்கு 25 லிருந்து 30 வயது இருக்கலாம். நம் நாட்டுக்காரன் போல தென்பட்டான்!புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்க வேண்டும்.

Representational Image
Representational Image

எனக்கு, என் பழைய கால வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. கடைக்குட்டிப் பையனாகச் செல்லமாக வளர்ந்த நான், திருச்சிக் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தஞ்சாவூர் பஸ்ஸைப் பார்க்கும் போதெல்லாம், ’எப்பொழுது விடுமுறை வந்து பஸ் ஏறி ஊர் செல்லப்போகிறோம்?‘ என்ற எண்ணம் மனதிலோடும். சிறிது காலத்திற்குத்தான். அப்புறம், விடுதி வாழ்க்கை பழகிப்போனது. ’தாய்க்கும் தாரத்திற்கும் இடைப்பட்ட சந்தோஷ வாழ்க்கை, கல்லூரி விடுதி வாழ்க்கை!’ என்பார்கள். அது உண்மைதானோ!

மீண்டும் அந்தப் இளைஞனைப் பார்த்தேன். அவனும் என்னைப் பார்த்ததாகத் தெரிந்தது. அப்புறம் அவன் வேலையில் மும்முரமாவதும், இடையிடையே விமானத்தின் விண்டோவைப் பார்ப்பதுமாக இருந்தான்.

என்ன சொல்லுங்கள்! நம்மூர் பேரூந்தில்…ரயிலில் உள்ள வசதி ஆகாயக் கப்பல்களில் இல்லை! விண்டோவின் இருபுறமும் ட்ரான்ஸ்பாரன்ட் பைபர்! கையை நீட்டவோ, முகத்தையே வெளியே கொண்டு வந்து, மனதிற்குப் பிடித்தவர்கள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டிருக்கும் வசதிகளெல்லாம் அவற்றில் இல்லை.

சரி! அந்தப் இளைஞன் என்னதான் நினைத்துக் கொண்டு பார்க்கிறான்.

-எப்பொழுது விடுப்பில் இதே ப்ளைட்டில் ஏறி ஊர் சென்று உற்றார், உறவினரைப் பார்ப்போம்? என்று எண்ணியிருப்பானோ!

-ஊரில், கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு அவனை வரச் சொல்லி இருப்பார்களோ?

-ஒரு வேளை ஏற்கெனவே திருமணமாகி, தன் புது மனைவியை எதிர்பார்த்துக் காத்திருப்பானோ?

-புதிதாக வேலைக்கு வந்ததால், ’ஹோம் சிக்கில்’, எப்பொழுது திரும்பிப் போவது என்று நினைக்கிறானோ?

-ஊரில், நில புலன்களை விட்டு விட்டு,இப்படி பெட்டிகளைத் தூக்குகிறோமே என்று ஆதங்கப்பட்டிருப்பானோ?

-இந்த ப்ளைட்டை நாம் எப்பொழுது ஓட்டப் போகிறோம் என்று ஆசைப்பட்டிருப்பானோ?

-இந்த விமானத்திற்கு நாம் ஓனராகி, ஒரு நாள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உறுதி எடுத்திருப்பானோ?

இப்படிப் பல விதமாக என் எண்ணம் பறக்க, எப்படியோ அவன் நல்லாயிருக்க வேண்டுமென்று உள்மனது ஓர் பிரார்த்தனை செய்தது.

கையைக் காட்டலாமா! அவனுக்குத் தெரியுமா, நாம் கையைக்காட்டப் போய்,யாரோ தெரிந்தவரோ என்று எண்ணி, யாராக இருக்கும் என்று சஞ்சலப்படுவானோ?

பல ஆண்டுகளுக்கு முன்னர் நம்மூர் எழுத்தாளர் ஒருவர் பம்பாய் சென்று சில காலம் தங்கினாராம். ரயில்வே ஜங்க்‌ஷனுக்கு அருகில் விடுதியாம் . அந்த ஸ்டேஷன் வழியாகத்தான் சென்னை ரயில் வருமாம். ஸ்டேஷனில் ஓய்வாக அமர்ந்து ரயில் புறப்பட்டதும்,’யாரு செல்வராஜா? போயிட்டு வாங்க’ என்பாராம்.

’உள்ளே அந்தப் பெயரில் யாராவது இருந்தால், நம்மை அழைத்தது யாரென்று மண்டையைப் பிய்த்துக் கொள்ளட்டுமே!’ என்ற எண்ணந்தான் காரணமாம். அதில் ஓர் ஆனந்தம் அவருக்கு!ஒவ்வொரு நாளும், அதிகம் வழக்கத்திலுள்ள ஏதாவது ஒரு தமிழ்ப்பெயரைப் பயன்படுத்திக் கொள்வாராம். ஒரு வாரத்திற்கு மேலாக இது தொடர்ந்தது. அன்றும் அவர், ஒரு பெயரை செலக்ட் செய்து கொண்டு வந்து, ரயில் புறப்படக் காத்திருந்தார்.

ரயிலும் புறப்பட்டது. ரயிலின் உள்ளேயிருந்து ஒருவர், அவர் பெயரை உரக்கச் சொல்லி அழைத்து ’டாடா’ சொல்ல, ரயில் போய் விட்டது! அவருக்கோ, அது யாராக இருக்குமென்று எண்ணி, இரவெல்லாம் கூட உறக்கமின்றித் தவித்தாராம்!அப்பொழுதுதான் அவருக்கு ஞானோதயம் வந்ததாம்- இது போல்தானே பலரும் உறக்கமின்றி சிரமப்பட்டிருப்பார்கள் என்று.

நினைவிலிருந்து நான் மீண்ட போது, விமானம் பின்னோக்கித் தள்ளப்பட்டது - முன்னே போவதற்காக. அந்தப் இளைஞனோ, விமான நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்!

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.