Published:Updated:

என் இரட்டை வகுப்புத்தேர்ச்சி நினைவுகள்! | My Vikatan

Representational Image

முதல்நாள் வகுப்பு. துணைக்கு அக்கா. சிலேட்டு, சிலேட்டுக்குச்சி, -சில இடங்களில் 'பலப்பம்' என்பார்கள்- தமிழ் எழுத்துக்கள் முழுதும் படங்கள், சிறு சொற்கள் மூலம், விதம் விதமாக விவரிக்கப்பட்ட ஒரே ஒரு புத்தகம். அவ்வளவுதான்.

என் இரட்டை வகுப்புத்தேர்ச்சி நினைவுகள்! | My Vikatan

முதல்நாள் வகுப்பு. துணைக்கு அக்கா. சிலேட்டு, சிலேட்டுக்குச்சி, -சில இடங்களில் 'பலப்பம்' என்பார்கள்- தமிழ் எழுத்துக்கள் முழுதும் படங்கள், சிறு சொற்கள் மூலம், விதம் விதமாக விவரிக்கப்பட்ட ஒரே ஒரு புத்தகம். அவ்வளவுதான்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இரட்டை வகுப்புத்தேர்ச்சி - இதுபோன்ற சொற்பிரயோகத்தை இக்கால மாணவர்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். ஆனால் அறுபதுகளில் பிறந்தவர்களோ, வயது அறுபதைக் கடந்தவர்களோ, இதனை நன்கு அறிவர். அப்படி தேர்ச்சி பெற்ற (அ }பாக்கியவான்களில் நானும் ஒருவன். நிகழ்ச்சிகள் பழமையானவைகளாக இருந்தாலும், அந்த அனுபவம் இக்காலக்குழந்தைகளுக்கு புதிய தகவலாகத்தானே இருக்கும்!

Representational Image
Representational Image

சரஸ்வதி பூஜைக்கு ஒருவாரம் முன்னதாக பஞ்சாயத்து போர்டு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டிற்கு வந்தார். "பையனை ஒண்ணாங்கிளாசுக்கு அனுப்பிவையுங்கோ வித்யாரம்பம் பூஜையன்னிக்கு பேஷா பண்ணிடலாம்" என்றார். "பையனுக்கு மூன்றரை வயசுதான் ஆகிறது. ரொம்ப சின்னவன். அடுத்த வருஷம் பாத்துக்கலாமே!" என்றார் அப்பா. வயசு பிரச்சினை இல்லை. அதை நான் பாத்துக்கிறேன். பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னரே வந்து விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு கிளம்பினார். அக்கா, என்னைவிட இரண்டு வயது மூத்தவள், அதே பள்ளியில் இரண்டாவது படிக்கிறாள். ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும் என்று அம்மாவும் ஒப்புக்கொண்டாள். அம்மா என்ன செய்வாள்? பாவம். அடுத்தடுத்து குழந்தைகள்!

முதல்நாள் வகுப்பு. துணைக்கு அக்கா. சிலேட்டு, சிலேட்டுக்குச்சி, -சில இடங்களில் 'பலப்பம்' என்பார்கள்- தமிழ் எழுத்துக்கள் முழுதும் படங்கள், சிறு சொற்கள் மூலம், விதம் விதமாக விவரிக்கப்பட்ட ஒரே ஒரு புத்தகம். அவ்வளவுதான். பதினைந்து இருபது பேர் இருப்பார்கள். மதியம் சாப்பிடச் செல்லுமுன்னர் ஒரு சிறு இடைவேளை. இப்போதுள்ளதுபோல் கழிவறைகள் கிடையாது. கொல்லைக்கடைசிதான். வீட்டிலும் அப்படித்தான். துணைக்கு யாராவது வருவார்கள். அதற்கான மணி அடித்தவுடன், அக்கா வந்து பையன்களுடன் போகச்சொன்னாள். "நீயும் வா" என்றேன். முறைத்துப்பார்த்து "போடா, அவனுடன்" என்று விரட்டினாள். அழுகையாக வந்தது.

அடுத்த கல்வி ஆண்டு. நான் இரண்டு, அக்கா மூன்று என்று வகுப்பு மாறினோம். கூடுதலாக ஒரு கோடு போட்ட நோட்டு, பென்சில்,,இன்னொரு புத்தகம். அதுவே சுமை கூடிவிட்டதைப்போலிருந்தது.

'ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்'

என்று கோரஸ்ஸாக பாடுவது மிகவும் பிடித்திருந்தது. மாலை வீடு திரும்பியபின் அம்மாவை மறந்துவிட்டு 'நீ யார்' என்று கேட்கக்கூடாது என மூன்றாவது வரிக்கு எங்களுக்குப்புரியும்படி அர்த்தம் கூறினார் ஆசிரியர்!

Representational Image
Representational Image

அரையாண்டுத் தேர்வுக்குபின் விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. எங்கள் வகுப்பில், நான்கு பேரை மட்டும் அழைத்து, "நீங்கள் நால்வரும், இனி மூன்றாம் வகுப்பு. அங்கு நன்றாக படிக்கவேண்டும" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அம்மாவிடம், "இனி நான் அக்கா கிளாஸ்" என்றேன். "ஏண்டி, அவன் க்ளாஸ் வாத்தியார் இன்னிக்கு லீவா?" என்று கேட்க, அக்கா, "அவனுக்கும், இன்னும் மூன்று பேருக்கும் டபுள் ப்ரோமோஷன்" என்றாள்."அவ்வளவு நல்லாவா படிக்கிறான் என் பிள்ளை?" என்று ஆச்சரியப்பட்டாள் அம்மா யாருக்குத்தெரியும் நான் படித்ததைப்பற்றி?

அப்போது மதிய உணவுத்திட்டம் அமுலில் இருந்தது. "அது நம்மைவிட மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களுக்காக. நீங்கள் வீட்டிற்கு வந்து இருப்பதை உண்டு விட்டு செல்லுங்கள்" என்பாள் அம்மா. மாலை விளையாடச்செல்லுமுன்னர், விளையாட்டுத்திடலில் எல்லோரையும் வரிசையாக நிற்கவைத்து, கொதிக்கும் வெந்நீரில் பி. எல் 480 என்ற அமெரிக்க உதவி திட்டத்தின் கீழ் தருவிக்கப்பட்ட பால் பவுடரை கலந்து கொடுப்பார்கள். அதன் மனமும் சுவையும் இன்னும் நினைவிலிருக்கிறது.

அக்காவுடன் படிப்பவர்களில் எல்லோருக்கும் இளையவன் என்பதால் செல்லப்பிள்ளைதான். ஆனால் ஒருநாள் அக்கா அழுதுகொண்டே வந்தாள் "இவனுக்கு ஏன்தான் டபுள் ப்ரோமோஷன் கொடுத்தார்களோ? நீ பெயிலாகி தம்பியுடன் ஒரே கிளாசில் படிக்கிறாயா?என்று கேட்கிறார்கள்" என அழ அம்மா சமாதானப்படுத்தினாள்.

ஐந்தாம் வகுப்பில்தான் A B C D கற்றுக்கொண்டோம். என் பெயரை ஆங்கிலத்தில் எழுதி எல்லோரிடமும் காட்டிக்கொண்டிருந்தேன். சேட்டை செய்யும் மாணவர்களை ஆசிரியர் அடிப்பதுண்டு. கையை நீட்டச்சொல்லி உள்ளங்கையில், ஸ்கேலால் அடிப்பது, காதைப்பிடித்துத்திருகுவது, தோப்புக்கரணம் செய்யச்சொல்வது, முட்டிபோட்டு நிற்கச்செய்வது, எல்லாம் உண்டு. ஒரு ஆசிரியர், பென்சிலை ஆள்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவில், வைத்து நன்கு அமுக்குவார். அமுக்கிக்கொண்டு பென்சிலையும் சுழட்டுவார். அதட்டலும், மிரட்டலும் அதிகமே தவிர, பாதிப்பு ஒன்றுமிராது.

தொடக்கக்கல்விக்கு அடுத்து உயர்நிலைப்பள்ளி. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இந்தி. ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தால் வகுப்புகள் ரத்து. வேறு மாநிலங்களில் வேலை பார்த்தபோது கொஞ்சம் படித்தது பயனளித்தது.

 அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

ஒருநாள் மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தோம். முடித்ததும் அம்மா,"க்ளாஸ் டீச்சரிடம் அக்கா பத்து நாட்கள் லீவென்று சொல்லிவிடு. அவள் பெரியவளாகிவிட்டாள்" என்றாள், புரிபடாததை யாரிடம் கேட்பது? அம்மாவிடம்தான். "நீ பெரியவனானதும் தானே தெரிந்து கொள்வாய்" என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.

ஆரம்பத்தில், அபாக்கியவான் என்றும் குறிப்பித்தற்குக்காரணம் உண்டு. முக்கியமாக சகவயது நட்புவட்டம் - peer group - பின்னர் கல்லூரியில் கிடைத்தாலும், பள்ளி இறுதிவரை இல்லாமலேதான் கடந்தது. சிறியவன் என்று சகஜமாக பேசமாட்டார்கள். விளையாட்டில்கூட எனக்கு வாய்ப்பு தள்ளித்தான் வரும். ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டா, என்ன?

அடுத்தடுத்து எவ்வளவோ பயணப்பட்டுவிட்டோம். இப்போதைய சூழ்நிலையில், அன்று நாங்கள் மகிழ்வுடன் அனுபவித்த குறைவான புத்தகச்சுமை, மதிப்பெண்களை பெரிது படுத்தாத பெற்றோர், கற்றலை ஊக்குவித்த ஆசிரியர், வறுமையிலும் செம்மையான குடும்பசூழல், இனியவை காணவைத்த சுற்றத்தார், இவை அனைத்தும் நினைவில், மீண்டும், மீண்டும் வரத்தானே செய்யும்!

-தர்மபுத்ரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.