Published:Updated:

புதுத் தண்ணி! | 60ஸ் கிட்ஸின் நினைவோட்டம் | My Vikatan

குளியல் - மாதிரி புகைப்படம்

இந்த ஆண்டு, எந்த ஆண்டும் இல்லாத நிகழ்வாக, மே மாதக் கடைசி வாரத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்ட செய்தியைக் கேள்வியுற்றதும், மனம் மகிழ்ந்து, பல பத்தாண்டுகள் பின்னோக்கி ஓடி விட்டது.

புதுத் தண்ணி! | 60ஸ் கிட்ஸின் நினைவோட்டம் | My Vikatan

இந்த ஆண்டு, எந்த ஆண்டும் இல்லாத நிகழ்வாக, மே மாதக் கடைசி வாரத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்ட செய்தியைக் கேள்வியுற்றதும், மனம் மகிழ்ந்து, பல பத்தாண்டுகள் பின்னோக்கி ஓடி விட்டது.

Published:Updated:
குளியல் - மாதிரி புகைப்படம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தண்ணி என்றாலே இப்பொழுது டாஸ்மாக் ஞாபகம் வந்து விடுகிறது. எங்கள் இளமைக்காலத்தில் தண்ணி என்றால், அது தண்ணீரைத்தான் குறிக்கும். வறண்டு கிடக்கும் ஆற்றில் புதுத் தண்ணி வரும் நாட்களில் குழந்தைகளின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. இந்த ஆண்டு, எந்த ஆண்டும் இல்லாத நிகழ்வாக, மே மாதக் கடைசி வாரத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்ட செய்தியைக் கேள்வியுற்றதும், மனம் மகிழ்ந்து, பல பத்தாண்டுகள் பின்னோக்கி ஓடி விட்டது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பொழுதெல்லாம் ஜூன் 12 ல்தான் பெரும்பாலும் மேட்டூர் அணை திறக்கப்படும். அணை திறப்பதற்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே மேலக் காற்று வீச ஆரம்பித்து விடும். என் பாட்டி,’மேலக்காத்து அடிக்க ஆரம்பிச்சிடிச்சி. தண்ணி வரப் போகுது.’என்று கட்டியங்கூற ஆரம்பித்து விடுவார்கள். நாங்களும், கோடை கால விளையாட்டுக்களான சோடா மூடி அடித்தல் , மதிய நேரத்தில் பிடாரி குளத்தில் சுண்டி, மாலை நேரத்தில் சடுகுடு, இடைப்பட்ட நேரத்தில் குச்சிப்பந்து, தென்னை மட்டை கிரிக்கட் ஆகியவற்றை டெம்ப்ரவரியாக நிறுத்தி விட்டு,புதுத் தண்ணியை வரவேற்க, ஆற்றுக்குப் படை எடுக்க ஆரம்பித்து விடுவோம். முதலில் ஆறு, அப்புறமாய்ப் பெரிய வாய்க்கால், அதையடுத்து சிறிய வாய்க்கால்கள் என்று தண்ணீர் கூடவே எங்கள் பயணம் நான்கைந்து நாட்களுக்குத் தொடரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்கள் ஊர் கீழப்பெருமழையிலிருந்து, மரைக்காக் கோரையாறு சுமார் ரெண்டு கி.மீ., தள்ளி இருக்கும். காவிரியாறு கிளை கிளையாய்ப் பிரிந்து கால்காலாய் ஓடி அணி செய்யும் சோழ வள நாட்டின் ஒரு சிற்றூர்தான் எங்கள் ஊர்.

காவிரியின் ஒரு கிளைதான் மரைக்காக் கோரையாறு. ஆற்றுக்குச் செல்ல, வயல்களைக் கடந்துதான் போக வேண்டும். நீர்க்காலமென்றால் வரப்பு சுற்ற வேண்டும். கோடை என்பதால் வயலின் நடுவிலேயே நடந்து செல்லலாம். ஆனாலும் கவனமாகச் செல்ல வேண்டி இருக்கும்.சில வயல்களில் உள்ள வெடிப்பில் கால் விரல்கள் சிக்க, சில சமயங்களில் சிராய்த்து ரத்தமே வந்து விடும். வண்டிச் சுவடுகள் வழியே சென்றால் காயங்களைத் தவிர்க்கலாம். சுவடுகளின் வழியே செல்லும் வயசா அது?ஆர்வமும், துடிப்பும் மேலோங்க, குறுக்கு வழிதனையே மனம் நாடும் மகத்தான பருவமல்லவா அது. சிரமங்களுக்கும், சிராய்ப்புகளுக்கும் சிறிதும் கலங்கா வயதல்லவா அது. மானெனத்தாவி, மயிலெனப் பறக்கும் காலமல்லவா அது. அந்த வயதிற்காகவும், காலத்திற்காகவும் இப்பொழுதும் இதயம் ஏங்குகிறதே.

கோரையாறு அருவி
கோரையாறு அருவி

ஆங்காங்கே வரப்புகள் வெட்டப்பட்டு, தொடரும் வண்டிச் சுவடுகளில், குப்பையேற்றப்பட்டப் பார வண்டிகள் பர பரப்புடன் ஓடின. சில வயல்களில், உழவர்கள் ஏற்கெனவே கொட்டப்பட்டிருந்த குப்பை முட்டுகளிலிருந்து, நொச்சிக் குச்சிகளால் பின்னப்பட்ட கூடைகளில் குப்பையை அள்ளி, வயல் முழுவதுக்கும் அவசரமாகப் பரப்பி விட்டுக் கொண்டிருந்தனர். சில விவசாயிகள், அறுவடைக்கு முன்னர் எலிகளைப் பிடிக்கத் தாறுமாறாக வெட்டப்பட்ட வரப்புகளை , வயலிலுள்ள பொறுக்குகளை எடுத்து அடைத்துச் சரிப் படுத்திக் கொண்டிருந்தனர். வரப்பைச் சரி பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் ஒருவர், ’என்னடா தம்பிங்களா? புதுத் தண்ணியில குளிக்கக் கெளம்பிட்டீங்களா?’ என்க,

நானும் எனது சின்ன அண்ணனும் மெல்லத்தலையாட்ட,கூட வந்த மைனரும்,செல்லத்துரையும்’ஆமாண்ணே.நீங்க வரலையா?ஆத்தில தண்ணி நெறையப் போகுதா?’என்று ஆர்வமுடன் கேட்க, ’எங்கப்பா. இந்த வேலையை முடிக்காம வர முடியாதே. மீசை பொன்னுசாமி நெறையத் தண்ணி போறதாத்தான் சொல்லிட்டுப் போனாரு.போய்ப் பாருங்க.’என்றார்.

’நல்லெண்ணை கொண்டு வந்தது நல்லதாப் போச்சு.அந்த மரத்தடி நிழல்ல உட்கார்ந்து எண்ணையைத் தேய்ச்சிக்கிட்டுப் போயிடுவோம். கொஞ்ச நேரமாவது எண்ணை ஒடம்புல சாரட்டுமே.’ என்று கூறியபடியே என் சின்னண்ணன் மரத்துப் பக்கம் திரும்ப, மூவரும் பின் தொடர்ந்தோம்.

அடித்த வெயிலுக்கு அந்த வேப்ப மர நிழல் இதமாக இருந்தது. அதிலும் தலையில் எண்ணையைத் தேய்த்ததும் கண்களில் ஒரு குளுமை டேரா போட்டது.அரைக்கால் சட்டைப் பையில் சீயக்காய்த்தூள் இருக்கிறதா என்பதை அவர்கள் செக் செய்தபடி ஆற்றை நெருங்கினர்.கரையில் ஏறி, நொங்கும், நுரையுமாகச் சுழித்தோடும் நீரைப் பார்த்ததும் அனைவர் கண்களிலும் அவ்வளவு மகிழ்ச்சி. பெரிய மதகு அருகில் ஒரு படித்துறை உண்டு.படிகளைத் தொட்டபடி சற்றே சிவந்த புதுத் தண்ணி வேகமாக ஓட,டைவ் அடிக்கத் தெரிந்த என் சின்ன அண்ணன் திடீரென தண்ணீருக்குள் பாய, நாங்களும் குதித்தோம்.தண்ணீர் கலங்கலாக இருந்தாலும், உடம்புக்குக் குளிர்ச்சியாய் இருந்தது. கர்நாடகாவின் குடகு மலையிலிருந்து வருவதாலோ,.. இக்கரைக்கும் அக்கரைக்குமாக நன்றாகக் களைக்கும் வரை நீந்திய பிறகே கரையேறினோம்.

Representational Image
Representational Image

அடுத்த நாள். பெரிய வாய்க்காலின் நடுக் கலுங்கடியிலிருந்து சுடுகாட்டுக் கலுங்கு வரை தண்ணீருடனே பயணித்தோம். நீர், வெடித்துக் கிடக்கும் பூமியினுள்ளே நுழைந்ததும், பூரானும், பிற உயிரினங்களும் அவசர அவசரமாக மேலே வர , சில, சோழ நாட்டு துணிச்சலான வீரர்களைப் போல் நீரை எதிர்த்து நீந்த, பல, நீரின் போக்கில் சென்றன. சில சிறிய பூச்சிகள் ஓடும் நீரின் மேல் படுத்தபடி பயணம் செய்தன. அவற்றை வேடிக்கை பார்த்தபடி சுடுகாட்டுக் கலுங்கை நெருங்கினோம். அது என்னவோ தெரியவில்லை. என்னதான் வாயளவில் வீரம் பேசினாலும், சுடுகாடு என்றவுடன் என் மனதில் மெல்ல ஒரு பயம் வந்து விடும். பகல்தான் என்றாலும் இதயம் படபடக்கும். எப்பொழுதோ செத்துப் போனவர்களெல்லாம் மெல்ல மனமேடையில் வந்து ஊஞ்சலாடுவார்கள்.தப்புச் சப்தம் கேட்டாலே,உள்ளம் உற்சாகமிழந்து விடும்.சுடுகாட்டுக் கலுங்கை நெருங்கும் முன்னரே நான் நைசாக நண்பர்களிடமிருந்து விலகி,புது மதகடி வந்து,வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

மூன்றாம் நாள் எங்கள் குழாம் சந்தித்தது கீழ வாய்க்காலில்.இது வீட்டுக்குப் பக்கமாக உள்ள சிறிய வாய்க்கால்.மோட்டுக் கொல்லையில் லட்ரீன் போய்விட்டுக் கால் கழுவ நாங்கள் இந்த வாய்க்காலுக்குத்தான் செல்வோம். எனவே,இரவு,பகல் என்று எந்த நேரமும் பரிச்சயமான வாய்க்கால் இது. நன்கு தண்ணீர் ஓட ஆரம்பித்ததும்,அவசரத்திற்கு இதில் குளிப்பதும் உண்டு.என்ன? உட்கார்ந்துதான் குளிக்க வேண்டும். மாலை நேரங்களில் நிறையப் பெண்கள் இங்கு குளிப்பதை அப்பொழுதெல்லாம் காண முடியும்.நீர்க் காலங்களில் இரண்டு கரைகளுக்குமிடையே ஒரு தென்னை மரத்தையோ,பனை மரத்தையோ போட்டு விடுவார்கள். கம்பக் கூத்தாடி கயிற்றில் நடப்பதைப்போல், பயந்து, பயந்து சிலர் மரத்தின் மீது சென்று வாய்க்காலைக் கடப்பதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்.

தர்காஸ்து செல்லும் அனைவருமே இந்த மரப் பாலத்தில்தான் சென்றாக வேண்டும். சற்றே வயதானவர்கள், மரத்தின்மீது ரிஸ்க் எடுக்க விரும்பாமல்,வேட்டியையும், சேலையையும் தூக்கிக் கட்டியபடி துணிந்து வாய்க்காலில் இறங்கி அந்தக்கரை சென்று விடுவார்கள்.இந்த வாய்க்கால் தெற்குத் தெருவையும் தாண்டி,வளவனாற்றில் சேரும் புது ஆறு வரை நீண்டு போகும்.புதுத் தண்ணியை வரவேற்பது உற்சாகமென்றாலும்,அத் தண்ணீரில் வரும் அட்டைகள் சில சமயம் கால்,கைகளிலோ, உடம்பிலோ ஒட்டிக்கொள்ளும். அது சில உடல்களில்தான் ஒட்டுமாம்.

 வாய்க்கால்
வாய்க்கால்

எனது மைத்துனரும் நானும் குளிக்கும்போதும்,புல்லறுத்து வரும்போதும், அவருக்கு மட்டும் இரண்டு,மூன்று முறை அட்டை ஒட்டிக்கொண்டது. அவரோ கொஞ்சமும் சங்கோஜமின்றி தனது கைகளாலேயே அதனைக் கிள்ளித் தூக்கி வீசுவார்.மாடுகளில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகள், ஒட்டும்போது சிறியதாகத் தோன்ற,சில நிமிடங்களிலேயே ரத்தத்தை உறிஞ்சி குண்டாகி விடும். ஆறு,வாய்க்கால்களிலிருந்து வரும் மாடுகளில் அட்டை ஒட்டியிருக்கிறதாவென்று எங்கள் கண்கள் தேடுவது வாடிக்கை.எனக்கு மட்டும் ஏன் அட்டை ஒட்டவில்லை என்ற கேள்வி இன்று வரை மனதிற்குள் உண்டு.

புதுத் தண்ணி வந்ததும்,குளங்களைக் குத்தகை எடுத்தவர்கள் ஆயில் எஞ்சின்கள் மூலம் தண்ணீரை இறைத்துவிட்டு மீன் பிடிக்க ஆரம்பிப்பார்கள். இறைக்கும் நீரில் குளிப்பது மற்றொரு ஆனந்தமான நிகழ்ச்சி. மீன் பிடிக்கப்படுகையில்,பெரும்பாலான வீடுகளில் மீன் குழம்புதான் இருக்கும்.வரால் மீனுக்குத்தான் முதலிடம்.வாளை மீன் குழம்பு வைக்கும்போது,அதிலுள்ள கொழுப்பு மேலே மிதக்கும்.ஆராவும்,விலாங்கும் பாம்புகளைப்போலவே காட்சியளித்தாலும் சுவை மிக்கவை.கெண்டை,கெழுத்தி என்று மீன்களின் வகை நீண்டு கொண்டே போகும்.பெரிய வரால் மீன்களை நீருள்ள வட்டமான இரும்புப் பெட்டிகளில் அடைத்து,வெளியிடங்களுக்குக் குத்தகைதாரர்கள் ஏற்றுமதி செய்வார்கள்.மீனைப் பிடித்ததும் குளங்கள் புதுத் தண்ணீரைப் பார்த்து விடும்.ஒவ்வொரு வருடமும் ஒரு சில குளங்களை மட்டும் தூர் வாரி ஆழப்படுத்துவார்கள்.

திருக்குளம், பிடாரி குளம், தாமரைக்குளம், ஐயன்குளம்,வெட்டுக்குளம், தெற்குத்தெரு குளம்,வடக்குப் பண்ணைக்குளம் என்று குளிக்கும் குளங்களுக்கும், குட்டைகளுக்கும் எங்களூரில் பஞ்சம் இருந்ததில்லை. கிணறுகளோ, அடி பம்புகளோ எங்களூரோடு உறவு வைத்துக் கொண்டதில்லை. அவையெல்லாம் உப்பு நீரையே தந்ததால், அவற்றுடனான உறவை எம் மக்கள் முறித்துக் கொண்டார்களாம். குளம், குட்டைகளெல்லாம் நிரம்பி,வயல்களிலும் நீர் வந்து விட்டால், ஊரே குளிர்ந்து விடும்.வளர் பிறைக்காகக் காத்துக் கிடப்போம். அதிலும் பௌர்ணமியன்று முழு நிலவு ஊரைச் சுற்றியுள்ள தண்ணீரில் முகம் பார்க்க,அந்த அழகை நாம் ரசிக்க,இன்னும் பல பிறவிகள் எடுத்தாலும் தப்பில்லை.

ம்.முன்பாகவே தண்ணீர் வந்து விட்டது.குளங்களும்,வயல்களும் நிரம்பி விடும்.அதை அனுபவிக்க,அனுபவித்து மகிழ்ந்த நாம் ஊரில் இல்லை.ஊரில் இருக்கும் தற்கால இளைஞர்களுக்குப் புதுத் தண்ணியின் புளகாங்கிதம் புரியவில்லை.இக்காலச் சிறுசுகள் தேவையானதை விட்டு விட்டுத் தேவையற்ற பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஊர்ப் பெண்கள் கொஞ்சமாவது நீந்தக் கற்றிருந்தால் கெடிலம் ஆற்றுப் பள்ள நீர், 10-20 வயதுள்ள ஏழு பெண்களை இப்படி அநியாயமாகப் பழி வாங்கியிருக்குமா?

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.