Published:Updated:

எப்படித்தான் இருக்கிறது குழந்தைகள் இல்லாத பள்ளிக்கூடம்?! - ஓர் ஏக்கப்பதிவு #MyVikatan

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

இடைவேளைப் பொழுதுகளில் சன்னல்வழி பழிப்பு காட்டி பாசமான அணில் ஒன்று, விளையாட ஆளின்றி வெறுமனே கிடக்கிறது!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``நெடுந்தவத்தில் பள்ளிக்கூடம்..!"

எப்போதோ கரும்பலகையில் வரையப்பட்ட படத்தில் கால் அழிந்துபோன யானையொன்று,

முழுமை அடைய வேண்டி நீண்ட தவம் புரிகிறது!

தூசுபடர்ந்த மேசையின் மேல் யாருக்கோ சலனமின்றிக் காத்திருக்கும் ஒற்றை சாக்குகட்டி,

தன் தனிமை தாங்காமல் துகள் துகளாய் கரைகிறது!

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
vikatan

மதிய விருந்துகளில் தன் சுற்றத்துடன் தவறாமல் கலந்துகொள்ளும் காகமொன்று,

பரிமாற ஆளின்றி கரைந்து அழுகிறது!

சுற்றுச்சுவர் ஓரம் நட்டுவைத்த மாங்கன்று, கல்லடிக்க ஆளின்றி காய் உதிராமல் உதிர்கிறது!

வாயிற் கதவோரம் கதைகளுடன் நொறுக்குத்தீனி விற்ற பாட்டி,

தீனியுடன் தன் அனுபவத்தைப் பங்குபோட ஆள்தேடி அலைகிறார்!

அடிவாங்கி அடிவாங்கி நேரம் சொன்ன மணியொன்று, அடிக்க ஆளின்றி மௌனமாய் அழுகிறது!

இடைவேளைப் பொழுதுகளில் சன்னல்வழி பழிப்பு காட்டி பாசமான அணில் ஒன்று, விளையாட ஆளின்றி வெறுமனே கிடக்கிறது!

செல்லச் சண்டைகளில் வெள்ளைப்பூ தூவி சமரசம் செய்து வைத்த வேப்பமரம், லட்சம் பூக்களுடன் சண்டைக்குக் காத்திருக்கிறது!

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி
நா.ராஜமுருகன்

மாலை வேளைகளில் தன் கூடடைய வரும் வலசை பறவையொன்று, விட்டு விடுதலையாகும் குழந்தைகளின் கூச்சலின்றி, தான் வந்த இடம் சரிதானா என்ற குழப்பத்தில் தவிக்கிறது!

வகுப்பறை சுவரில் வரையப்பட்ட தேவதை பொம்மையொன்று, தன் சிறகு முளைத்த தோழியரைக் காணாமல் நெடுநாளாய் வடக்கிருக்கிறது!

கையுடைந்த நாற்காலியும்,

காலுடைந்த மேசையும் தங்கள் துயரத்தைப் பகிர்ந்த படி துவண்டு போய்க் கிடக்கின்றன!

வெறுமை வகுப்பறையைக் கடந்து செல்லும் ஆசிரியர், அதன் அமைதி தாங்காமல் அவ்வப்போது உடைகிறார்!

ஆயிரம் குழந்தைகளை அள்ளிச் சுமந்த பள்ளி, இன்று சுமக்க ஆளின்றி மனச்சுமையில் தவிக்கிறது!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு