Published:Updated:

ரயில் சிநேகமும் சிறப்பான வெள்ளைப் பூசணி தோசையும்! | விருந்தோம்பல் | My Vikatan

Representational Image

சில ஆண்டுகளுக்கு முன் குற்றால சீசனுக்குச் சென்று சென்னைக்கு திரும்பி வரும்போது பொதிகை ரயிலில் எங்கள் எதிரே அமர்ந்து வந்த தாத்தாவும் பாட்டியும் மறக்க முடியாத ரயில் சிநேகம்.

ரயில் சிநேகமும் சிறப்பான வெள்ளைப் பூசணி தோசையும்! | விருந்தோம்பல் | My Vikatan

சில ஆண்டுகளுக்கு முன் குற்றால சீசனுக்குச் சென்று சென்னைக்கு திரும்பி வரும்போது பொதிகை ரயிலில் எங்கள் எதிரே அமர்ந்து வந்த தாத்தாவும் பாட்டியும் மறக்க முடியாத ரயில் சிநேகம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

முன்பெல்லாம் ரயில் பயணம் என்றாலே எல்லா குழந்தைகளுக்கும் (ஆம்... 6 வயது முதல் 60 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு) ஒரே குதூகலம்தான். அதிலே நம் நட்பு மற்றும் சொந்தபந்தங்கள் என்று கூடிவிட்டால் போதும். அங்கு ரகளைக்குப் பஞ்சம் இருக்காது. அப்பா ரயில்வேயில் வேலை பார்த்ததால் எங்களது பயணங்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களே!

என் பள்ளி நாட்களில் எங்கள் வீடு திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இருந்ததது. தினமும் மாலை வேளையில் நண்பர்களோடு டிராக்கில் நடந்துகொண்டு, ஸ்டேஷனில் உள்ள பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு வரும் ரயில்களை பார்த்தால் பொழுதுபோவதே தெரியாது. இப்போது பயணம் செய்யும்போதுகூட பொன்மலை ரயில்வே ஸ்டேஷனை பார்க்கும்போது, அது சிறு வயது நினைவுகளை கிளறிவிடும். இரவு நேரத்தில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்மலை வழியாகச் செல்லும். அப்போதெல்லாம் அதன் சத்தங்களை எத்தனை முறை கேட்டாலும் எங்களுக்குச் சலிக்காதவை.

Representational Image
Representational Image

நான் ஒரு பாசஞ்சர் ரயில் ரசிகை.‌ குறிப்பாக திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பாசஞ்சர் ரயிலில் செல்லும்போது அந்த மூன்று மணி நேரத்தில் வரும் சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழக்கடையம் போன்ற ஊர்கள் அனைத்தும் இயற்கை அழகு மிகுந்த கிராமங்கள் மற்றும் பசுமையான வயல்களின் நடுவே கடந்துசெல்லும்.

குறைந்த தூர பயணம் ‌என்றாலும் மொத்தம் 14 நிறுத்தங்கள். பயணத்தின்போது வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கூடை முழுக்க கொய்யாப்பழத்தை அடுக்கி வைத்து வரும் வியாபாரிகள் என்று பல விதமான மக்களைக் காண முடியும். ஜன்னலோரம் கிடைத்தால் போதும்... அந்த இதமான மெல்லிய காற்று சந்தோஷமான மனநிலையைத் தரும். அத்தனை மணி நேரம் செல்வதே தெரியாமல் இருக்கும்.

Representational Image
Representational Image
சிறுவயதில் ரயிலில் பயணம் செய்யும்போதெல்லாம் ரயில் பயணத்தில் நமக்கு எதிரே இருப்பவர்கள் ஒரு சில மணி நேரத்தில் நமக்கு பழக்கமாகி விடுவார்கள். சிறு வயதில் பல ரயில் ஸ்நேகங்களிடம் பேசி பழகிய அனுபவங்கள் ஏராளம்.

1990-ம் ஆண்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் (இன்றைய பொதிகை) கே.பாலச்சந்தர் இயக்கிய 'ரயில் சிநேகம்' மனதில் நீங்காத நினைவுகளைத் தரும். பலரும் ரயில் சிநேகம் தொடர் பார்ப்பதற்காக காத்திருந்தார்கள்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் ரயில் பயணத்தின்போது எல்லோரும் அவரவர் கையில் ஒரு ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு படங்கள், சீரியல் அல்லது சாட்டிங் செய்துகொண்டு வருகிறோம். இப்போது ரயில் சிநேகம் என்பது அபூர்வமாகிவிட்டது என்பது ஒரு கசப்பான உண்மையே.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் குற்றால சீசனுக்குச் சென்று சென்னைக்கு திரும்பி வரும்போது பொதிகை ரயிலில் எங்கள் எதிரே அமர்ந்து வந்த தாத்தாவும் பாட்டியும் மறக்க முடியாத ரயில் சிநேகம். அன்று வழக்கம்போல நாங்களும் போனைப் பார்த்து குற்றால டிரிப்பில் எடுத்த படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.

அதிக நேரம் பயணம் செய்யும்போது வயதானவர்களால் மெளனமாக இருப்பது சிரமம்தானே. அவர்கள் எங்களைப் பார்த்து சிரித்து மெதுவாக எந்த ஊர் எந்த இடம்‌ என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்கள். பிறகு போனை உள்ளே வைத்துவிட்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தோம்.

Representational Image
Representational Image

தாத்தாவும் பாட்டியும் அவர்களின் சிறு வயது கதைகள், விவசாயம் பார்த்த கதைகள் என்று சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே வந்தார்கள். ஒரு மணி நேரத்துக்குள் சொந்த ஊர் எது, சென்னையில் எந்த இடம், சென்னையைப் பற்றி மற்ற தகவல்கள் என்று தாத்தாவும் பாட்டியும் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டார்கள்.

பிறகு பாட்டி என்னிடம் 'நீ என்ன செய்கிறாய்' ‌‌‌என்று கேட்டார்கள். நான் எனது ‘விருந்தோம்பல்’ இணைய தளம் மற்றும் யூடியூப் பற்றியும், பத்திரிகைகளில் சமையல் குறிப்புகள் பதிவு செய்வதைப் பற்றியும் கூறினேன். அதற்கு பாட்டி 'ஓ அந்த குட்டி அவள் விகடன் இணைப்பு புத்தகத்தில் எழுதுவாயா’ என்று கேட்டார்கள். போனில் பார்க்க முடியுமா என்று கேட்டார்கள். அந்த வருடம் மூன்று இணைப்பு புத்தகத்தில் எனது குறிப்புகள் வெளியானதை அவர்களிடம் காட்டினேன்.

ஒரு முறைதான் பாட்டிக்கு சொல்லிக் கொடுத்தேன் பின் அவர்களே ஈஸியாக ஸ்கோர்ல் செய்து பார்த்துக்கொண்டார்கள். குறிப்புகளைப் பார்த்ததும் என்னிடம், ‘எல்லா குறிப்புகளையும் வீட்டில் செய்து பார்த்த பிறகு அனுப்பினாயோ? எந்த ஒரு வேலையையும் மெனக்கெட்டு செய்தால் பலன் நன்றாக இருக்கும். நீ செய்தது எல்லாமே அழகா இருக்கு மா' என்றார்கள்.

Representational Image
Representational Image

‘நான் உனக்கு ஒரு ஈஸியான குறிப்பை சொல்லித் தரேன்... நீ அதையும் பதிவு செய்கிறாயா’ என்று கேட்டார்கள். 'ஓ தாரளமாகச் சொல்லித் தாங்க. கரும்பு தின்ன கைக்கூலியா’ என்று என் செல்போனை எடுத்து பாட்டி சொன்னதை எல்லாம் ‌ரிகார்ட் செய்துகொண்டேன். அன்று அந்தப் பாட்டி எனக்கு ஒரு சுலபமான வெள்ளைப் பூசணிக்காய் தோசை எப்படி செய்வதென்று கற்றுத் தந்தார்கள்.

’விவசாயம் பார்க்கும் காலத்தில் வெள்ளைப் பூசணிக்காய் வைத்து நிறைய சமைப்போம்.

வெள்ளைப் பூசணிக்காயை உட்கொள்ளும்போது, அது ஏராளமான எனர்ஜியைக் கொடுக்கும்’ என்று பாட்டி ஸ்டைலாக என் மகனிடம் கூறினார்.

வெள்ளைப் பூசணிக்காய்
வெள்ளைப் பூசணிக்காய்

‘இந்தக் காயில் வழக்கமாக சாம்பார், கூட்டு, பச்சடி, அவியல் போன்ற வகைகள்தாம் செய்வோம். அதுபோக அரிசி, உளுந்து மற்றும் இந்த வெள்ளை பூசணிக்காய் சேர்த்து அரைத்து ஆரோக்கியமான எளிமையான தோசை செய்யலாம். அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து நறுக்கிய பூசணிக்காய்த் துண்டுகளையும் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து சுட வேண்டியதுதான். மாவைப் புளிக்க வைக்க வேண்டாம்’ என்றார்கள். ‘ரொம்ப ஈஸி யா செய்யலாம். நீ கண்டிப்பா 'வீட்டில்ல செய்து பார்த்து பிறகு பதிவு செய்மா' என்றார்கள்.

தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து வெள்ளைப் பூசணிக்காயைப் பற்றி கூறிய சில அனுபவத் தகவல்கள்...

* வெள்ளை பூசணிக்காய் அதிகமாக விளைந்திருக்கும் காலத்தில் காலையில் வெண்பூசணிச் சாறு அல்லது பச்சையாக நறுக்கி சிறிது தயிர் சேர்த்து சாப்பிட்டு வயலுக்குச் செல்வோம். உடம்பு நாள் முழுக்க குளிர்ச்சியாக இருக்கும்.

* வெட்டப்படாத வெள்ளைப் பூசணியை இரண்டு மாதங்களுக்கு மேல் குளுமையான உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கலாம்.

* வெண்பூசணியை தேர்ந்தெடுக்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

* இந்தக் காயை சமைத்துச் சாப்பிடுவதை காட்டிலும் பச்சையாகச் சாப்பிடும்போது அதிக சத்துக்கள் கிடைக்கும்.

Representational Image
Representational Image

இப்படி பேசிக்கொண்டே நேரம் போனதே தெரியவில்லை. போனை பார்த்துக் கொண்டு வருவதைவிட அவர்களிடம் பேசிக்கொண்டே வந்தது அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. நேரம் இரவு பத்து மணியைத் தாண்டியது. தாத்தா என்னிடம் ‘எந்த பெர்த்மா’ என்று கேட்டார். அப்பர் பெர்த் என்று கூறியதும் 'பெண்கள் கஷ்டப்படக்கூடாது. நான் அப்பர் பெர்த்தில் படுத்துக் கொள்கிறேன்’ என்றார். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவர் ரொம்ப சாதாரணமாக அப்பர் பெர்த்தில் ஏறினதைப் பார்த்து அசந்து போனேன்.

மறுநாள் காலை மேலே இருந்து ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒரு ஜம்ப் செய்தார். அவர்களிடம் சென்னையில் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் கூறிய இடம் எங்கள் வீட்டருகே இருந்ததால் நாங்களே அவர்களை வழியில் இறக்கி விட்டோம். தாத்தாவும் பாட்டியும் பிரிய மனமில்லாமல் இறங்கினார்கள். தாத்தா அவர் செல் நம்பரை என்னிடம் தந்து 'ரயில் ஃபிரண்ட் ஷண்முகவேல்' என்று பதிவு செய்துகொள் என்றார். தென்காசி வரும்போது 'எங்க வீட்டுக்கு வாமா' என்று இருவரும் சிரித்த முகத்தோடு அழைத்தார்கள்.

வெள்ளைப் பூசணிக்காய்
வெள்ளைப் பூசணிக்காய்

மறக்க முடியாத இந்த ரயில் பயணத்தில் கற்ற வெள்ளைப் பூசணிக்காய் தோசை செய்யும்போதெல்லாம் பாட்டி தாத்தாவின் பேச்சு என் காதில் ஒலிக்கும். அன்று தாத்தா பாட்டியிடம் நான் புரிந்துகொண்டது இதுதான்: ‘வயது என்பது ஓர் எண்தான். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கும் மனத்தில் ஆசையும் எண்ணமும் இருந்தாலே போதும்... வயது ஒரு தடையே இல்லை’

பிறகொரு நாள் தாத்தாவிடம் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுபோது அவருக்கு அலாதி ஆனந்தம். அவர்களோடு அன்று அமர்ந்து பேசி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வந்த அந்த இனிமையான நிகழ்வு எங்கள் மனதில் நீங்காத புகைப்படம்!

இப்போது பாட்டி கற்றுத்தந்த வெள்ளைப் பூசணிக்காய் தோசை செய்முறையை காண்போம்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 1 கப்

பச்சரிசி - 1/2 கப்

உளுத்தம்பருப்பு - 1/3 கப்

சதுரமாக நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய் - 1.5 கப்

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

 வெள்ளைப் பூசணிக்காய் தோசை ரெசிபியை விருந்தோம்பல் வீடியோவில் காணலாம்.

செய்முறை

ஸ்டெப் 1

இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுந்தம்பருப்பை சேர்த்து நன்றாக கழுவிக் கொள்ளவும். பின் 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை தோல் சீவி விதைகளை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.

ஸ்டெப் 2

இரண்டு மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு லேசாக அரைத்துக் கொள்ளவும். பின் நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3

அரைத்த மாவை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தண்ணீர் விட்டு கலந்துகொள்ளவும்.

ஸ்டெப் 4

தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி இளந்தோசைகளாக இடவும். தோசையைச் சுற்றி நல்லெண்ணெய் விட்டு வேகவிடவும். தோசையின் கீழ்புறம் பொன்னிறமாக மாறியதும் திருப்பிப் போட்டு, ஒரு நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சூடாக, தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும். இந்தத் தோசை சுவைப்பதற்கு நீர் தோசை போல மென்மையாக இருக்கும்.

வெள்ளைப் பூசணிக்காய் தோசை ரெசிபி
வெள்ளைப் பூசணிக்காய் தோசை ரெசிபி

குறைவான பொருட்களில் ஆரோக்கியமான இந்த வெள்ளைப் பூசணிக்காய் தோசையை நீங்களும் செய்து பாருங்கள். சென்ற ஆண்டு கடையம் வத்தக்குழம்பில் ஆரம்பித்து பல விதமான குறிப்புகளைப் பார்த்தோம். My Vikatan -இல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம். இந்த ஆண்டும் பல அறுசுவை அனுபவ உணவுகளோடு சந்திப்போம். இன்சுவையுடன் கூடிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.