Published:Updated:

பைரவம்! | சிறுகதை | My Vikatan

Representational Image

நாய்களின் வரலாறு அப்படி இருக்கும்போது ஒரு நாய் இப்படி அமைதி காக்குமா? கோவிலில் ஒரு பக்தனைப் போல நடந்து கொள்ளுமா?

பைரவம்! | சிறுகதை | My Vikatan

நாய்களின் வரலாறு அப்படி இருக்கும்போது ஒரு நாய் இப்படி அமைதி காக்குமா? கோவிலில் ஒரு பக்தனைப் போல நடந்து கொள்ளுமா?

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“கணேசா இன்னிக்கு பிரதோஷம். சாயங்காலம் அந்த பெருங்களத்தூர் பக்கத்தில இருக்கற சிவன் கோவிலுக்குப் போகலாமா?”

என் உயிர் நண்பன் அமிர்தகடேசன் மொபைலில் அழைத்தான். எங்கள் வீடு தாம்பரத்தில். போன மாதத்தில் ஒரு பிரதோஷத்துக்கு அந்த சிவன் கோவிலுக்குப் போயிருந்தான். கண்டிகைக்கு அருகில் வீட்டு மனைகள் பார்த்த பின் பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள சிவன்கோவில் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்றான். ஆயிரம் வருஷப் பழமையான கோவிலாம். அன்று பிரதோஷம் வேறு. நந்திகேஸ்வரர், சிவன் அபிஷேகங்கள், சுவாமி புறப்பாடு எல்லாம் மிகச் சிறப்பாக நடந்தன. அமிர்தன் மெய் சிலிர்த்துப் போனான்.

“எவ்வளவு சிரத்தையாக அபிஷேகம், பூஜை எல்லாம் நடக்கிறது தெரியுமா?அந்த ஊர் ஜனங்களும் பக்தியுடன் முடிந்த கைங்கர்யங்கள் செய்கிறார்கள். இனிமேல் எல்லா பிரதோஷமும் அங்கு தான். “

இன்று என்னையும் அழைத்திருக்கிறான்.

‘நாலு மணிக்குப் போகலாம்”

நானும் அமிர்தனும் வங்கிப்பணியில் ஒரே சமயத்தில் சேர்ந்தவர்கள். ஏழு வருஷப் பணிக்குப்பின் பிரமோஷன். வெவ்வேறு இடங்களுக்கு சென்றோம். நட்புச் சங்கிலி உறுதியாகவே இருந்தது. வருஷம் ஒரு முறையாவது சந்திப்போம். பணிபுரியும் இடங்களுக்கு அருகில் உள்ள கோவில்கள் - முக்கியமாக சிவன் கோவில்கள்- பற்றிப் பேசுவான், எழுதுவான். முடிந்த போது நானும் அவன் பக்திப் பயணத்தில் இணைவேன். அவனால் தான் எனக்கு திரியம்பகேஸ்வரர், நாசிக் பஞ்சவடி, உஜ்ஜைனி ஓம்காளேஸ்வரர் தரிசனம் கிடைத்தது.

பிரதோஷம்
பிரதோஷம்

35 வருஷ சர்வீஸ். ஓய்வு. பென்ஷன். மகன், மகள்கள் நல்லபடியாக இங்கும், யூ எஸ்ஸிலும் செட்டில் ஆகிவிட்டனர். தாம்பரத்தில் அடுத்தடுத்த வீடுகள். நிம்மதியான வாழ்க்கையில் ஆன்மீகமும் பெரும்பங்கு வகித்தது.

மாலை நாலரை மணிக்குக் கோவிலில் இருந்தோம். அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடந்தது. அதிலும் அந்த விபூதி அபிஷேகம் மிகச் சிறப்பு. உள்ளூர் மக்கள் மாலைகள் தொடுத்து, தேவார திருவாசகங்களைப் பாடி இறைபணியில் ஈடுபட்டார்கள். அடிக்கடி ஹர ஹர மகாதேவா கோஷங்கள் எழுந்தன. தெய்வீக அனுபவம். பிரசாத விநியோகமும் உண்டு.

அங்கு ஒரு விஷயத்தைக் கவனித்தேன். ஒரு நாய் கோவிலுக்கு உள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. பிரதட்சிணம் வந்த பின் சைவ சமய நால்வர் - அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் - விக்கிரகங்கள் இருந்த மேடைக்கு அருகில் அமைதியாக உட்கார்ந்துவிட்டது. யாரைப் பார்த்தும் குரைக்கவில்லை. யாராவது விரட்டினாலும் சில நிமிஷத்துக்குப் பின் மீண்டும் வந்துவிடும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘அது ஒண்ணும் பண்ணாதுங்க. பரம சாது” உள்ளூர்க்காரரின் சர்டிபிகேட்.

அந்த நாய் பற்றிய சிந்தனைகள் மனதில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பொதுவாக நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை தங்கள் ராஜ்ஜியமாக எடுத்துக் கொண்டு வேறு நாய்களை அண்ட விடாது. அப்படி வந்து விட்டால் அவ்வளவு தான். ஆக்ரோஷக் குரைப்புகள், சீறல்கள் அந்த அந்நிய நாய் ஓடும்வரை ஓயாது. புதியவர்கள் வந்தாலும் ஒரு சின்ன குரைப்பு இருக்கும்.

நாய்களின் வரலாறு அப்படி இருக்கும்போது ஒரு நாய் இப்படி அமைதி காக்குமா? கோவிலில் ஒரு பக்தனைப் போல நடந்து கொள்ளுமா?

எனக்கு அதிசயமாக இருந்தது. அமிர்தன் “அடப்போடா ரொம்ப தின்க் பண்ணாதே. ஏரியாவில பழகின நாயா இருக்கும். அதுனால தான் யாரையும் பார்த்துக் குரைக்கல. அது பாட்டுக்கு வரும், போகும். எதேச்சையா நடக்கற விஷயத்துக்கு எல்லாம் புதுப் புது அர்த்தம் கண்டுபிடிக்காதே. வந்தோமா, சுவாமி தரிசனம் பண்ணினோமான்னு போய்க்கிட்டே இருக்கணும். அதை விட்டு..”

சிம்பிளா சொல்லிவிட்டான்.

அதற்குப் பின்னால் நான்கு ஐந்து பிரதோஷங்கள் தரிசனம் தொடர்ந்தது. அமிர்தன் வராத ஒரு பிரதோஷத்தின் போது நான் மட்டும் சென்றிருந்தேன். வழக்கம் போல அந்த நாய்..

பூஜை முடிந்தபின் பிரசாதம் வாங்கிக்கொண்டு கிளம்ப இருந்தவனை யாரோ ஒருவர் அழைத்தார். அவருக்கு 70 வயது இருக்கும். சிவப் பழமாய் ஜொலித்தார். பூஜையின் போது சிவபுராணம், தேவாரப் பாடல்களை உருக்கமாய் பாடினவர்.

Representational Image
Representational Image

“என்ன வேண்டும் ஐயா?”

கரம் குவித்து மரியாதையுடன் கேட்டேன்.

“உங்களுக்கு அந்த நாய் பத்தி ஏதோ சம்சயம் இருக்கில்ல ?”

“இல்லை, அது வந்து.. நாய்ங்க பொதுவா அமைதியா இருக்காது. அதுவும் கோவிலுக்கு ரெகுலரா வராது. அது தான் ..”

சரி. அந்த பைரவர் சன்னதி கிட்டே உட்கார்ந்து பேசுவோம்”

பொருத்தமான இடம் தான்.

“கண்டிகைல ஒரு சிவபக்தர் இருந்தார். தினமும் காலைல இந்தக் கோவிலுக்கு வந்து சிவ தரிசனம் பண்ணிட்டு நால்வர் சன்னதில உட்கார்ந்து தேவாரம், திருவாசகம் எல்லாம் ராகத்தோட பாடுவார். ஒரு நாள் கூட மிஸ் ஆகாது. என் நண்பர் கூட. ஒரு நாள் திடீர்னு மாரடைப்பில போய்ட்டார். கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நாய் குட்டி இந்த கோவிலுக்கு வர ஆரம்பிச்சது. யாரையும் தொந்தரவு பண்ணாம நால்வர் சன்னதி கிட்ட கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போயிடும். இப்ப வருதே அந்த நாய் தான் அது. என் நண்பர் தான் அடுத்த ஜன்மத்தில நாயா வந்திருக்கார்னு நினைக்கிறேன்.”

என் முகத்தில் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்க வேண்டும்.

“நீங்க நம்பலைன்னு தெரியுது”

“அப்படி இல்லை. ஆச்சர்யமா இருக்கு. இதை அவங்க வீட்ல சொன்னா ..”

“என்னை வம்புல மாட்டி விடப் பாக்கிறீங்களே. என்ன தான் என் நண்பர் ஆனாலும் அவங்க வீட்ல போய் பெரியவர் நாயாப் பிறந்து இருக்கார், இன்னும் சிவ பக்தனா கோவிலுக்கு வந்துட்டு இருக்கார்னு சொன்னா நம்ப மாட்டங்க. அவருக்கு சிவ பதவி கிடைச்சிருக்கும்னு நம்பறாங்க. நாம ஏன் மாறுதலா சொல்லி அவங்க மனசைப் புண்படுத்தணும்?”

“இப்ப எதுக்கு என் கிட்ட சொல்றீங்க?’

“ஒவ்வொரு தடவையும் கோவிலுக்கு வரும்போது அந்த நாயை - மன்னிக்கவும் என் நண்பரை- கவனிக்கிறீங்க. அவர் என்னைப் பாத்து லேசா வாலாட்டிட்டு நால்வர் சன்னதிக்கு போயிடுவார்”

“ அப்ப ஒரு பக்தருக்கு இது தண்டனையா?”

“அபச்சாரம். அப்படி பேசாதீங்க. நீங்க பாங்க்ல வேலை பார்த்ததா சொன்னீங்க. நம்ம பாவ புண்ணியம் வரவு செலவு இருப்பு மாதிரி இல்லை. புண்ணியம் வரவு- வாழ்க்கையில நல்ல விஷயங்கள், நல்ல மனைவி, சொல் பேச்சு கேட்கும் குழந்தைகள், வீடு, வாசல் எல்லாம் கிடைக்கும். முன் பிறவியில் செஞ்ச பாவத்துக்கும் பலனை அனுபவிக்கணும். யாரும் தப்ப முடியாது”

நான் விடவில்லை.

“அப்ப ஏன் நாய் பிறவி? மீண்டும் மனிதனாகப் பிறந்திருக்கலாமே?

“மனுஷ ஆயுளை கம்பேர் பண்ணினா நாய்க்கு ஆயுள் குறைவு. சீக்கிரமே கணக்கு முடிஞ்சு, இறைவனடி சேரும். நல்ல பக்தர். அது தான் பூர்வ ஜன்ம நினைவோட கோவிலுக்கு வரார். இது தான் அவரோட கடைசி பிறவி. கட்டாயம் சிவனடி சேர்வார். யானை, சிலந்தி போன்ற ஜந்துக்கள் சிவபூஜை செஞ்சு மோட்சம் அடைஞ்சிருக்கு. அது போலத்தான் என் நண்பருக்கும் கிடைக்கும். நாப்பது வருஷ நட்பு எங்களது. அவர் போனது என்னை ரொம்ப பாதிச்சது. இப்ப இந்த வடிவத்தில வந்து ஆறுதல் சொல்லிட்டிருக்கார்”

லாஜிக்கலாகத் தான் இருந்தாலும்,

என் எண்ண ஓட்டங்களைப் படித்தவர் போல” நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம். இதை நான் யார் கிட்டயும் சொல்லல. உங்க கிட்ட சொல்லலாம்னு தோணிச்சு”

திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விடை பெற்றார்.

இரண்டு மாதங்கள் வட இந்திய யாத்திரையை முடித்துத் திரும்பினோம் நானும் அமிர்தனும்.

அடுத்த பிரதோஷத்துக்கு நான் மட்டும் போயிருந்தேன். அந்த நாயைக் காணவில்லை, சிவபக்தரையும் காணோம். யாரைக் கேட்பது என்று தெரியவில்லை.

பத்து நாள் கழித்து அமிர்தனுடன் வீட்டு மனை விஷயமாக கண்டிகைக்குப் போனோம். நல்ல இன்வெஸ்ட்மென்ட் என்று சொன்னார்கள்.

அந்த லே அவுட்டின் மெயின் ரோடை ஒட்டிய பகுதியில் ஒரு சிறிய கோவில்- புதிதாகக் கட்டப்பட்டது- தெரிந்தது.

Representational Image
Representational Image

என் பார்வை அங்கு செல்வதைக் கவனித்த தரகர், “ ஸார் அது ஒரு சிவ பக்தர் சமாதி. ஒரு மாசத்துக்கு முன்னால் ஒரு லாரி விபத்துல இறந்துட்டார். அதுல என்ன விசேஷம்னா லாரி வருவதைக் கவனிக்காம ரோடைக் க்ராஸ் பண்ணியிருக்கார். அப்ப ஒரு நாய் அவர் சட்டையைக் கவ்வி இழுத்து காப்பாத்தப் பார்த்தது. அவர் சுதாரிக்கறதுக்குள்ள லாரி மோதிடிச்சி. பலத்த அடி ரெண்டு பேருக்கும். உயிர் போறதுக்கு முன்னாடி ரெண்டு பேரையும் ஒண்ணா அடக்கம் பண்ணனும்னு கேட்டுக் கிட்டார். நல்லவர், சிவபக்தர் . அதனால் எல்லாரும் சேர்ந்து இந்த சமாதிக் கோவிலைக் கட்டினாங்க. கோவில் நல்ல ஃ பேமஸ் ஆயிடிச்சு. நல்ல கூட்டம் வருது. இந்த லே அவுட்டுக்கு விளம்பரமும் ஆயிடிச்சு”

தரகர் விளக்கம் சொன்னதுடன் தன் தொழிலையும் மறக்கவில்லை.

பைரவர் சன்னதியில் அன்று அந்த சிவ பக்தர் சொன்னது ஃப்ளாஷ் பேக்கில் வந்தது. ஆத்மார்த்தமாக அவர் சொன்னது, அவர் நம்பிக்கை எல்லாம் உண்மையாகி விட்டது. இதற்கு மேலும் நான் நம்பாமல் இருக்க முடியுமா? பக்தியுடன் சமாதிக் கோவிலில் வணங்கினேன்.

-எஸ். கோபாலகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.