Published:Updated:

செந்தலை குழுமம் - I #SherlockHolmes

Representational Image

கட்டுரையாளர் கா.தாஸ், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையை தமிழில் மொழி பெயர்த்து சுவாரஸ்யம் குறையாமல் உருவாக்கிய #MyVikatan கட்டுரை...

செந்தலை குழுமம் - I #SherlockHolmes

கட்டுரையாளர் கா.தாஸ், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையை தமிழில் மொழி பெயர்த்து சுவாரஸ்யம் குறையாமல் உருவாக்கிய #MyVikatan கட்டுரை...

Published:Updated:
Representational Image

கடந்த வருடத்தின் இலையுதிர் கால நாள் ஒன்றில் என் நண்பர் ஹோம்ஸைப் பார்ப்பதற்காக பேக்கர் தெருவின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, செக்கச்செவேலென்ற முடியுடைய தடித்த சற்றே வயதான ஒருவருடன் அவர் ஆழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, கதவை மூடிவிட்டு வெளியே செல்ல எத்தனித்தேன்.

"இதை விட சரியான நேரத்தில் நீர் வந்திருக்க முடியாது, மை டியர் வாட்சன்", என்றபடி என்னை வரவேற்றார் ஹோம்ஸ்.

"நீங்கள் வேலையாய் இருக்கிறீர்கள் போல் தெரிகிறது".

"ஆம்".

"அப்படியெனில் நான் பக்கத்து அறையில் காத்திருக்கிறேன்".

"அதெல்லாம் வேண்டாம்", என்றபடி அங்கே அமர்ந்திருந்தவரிடம் திரும்பி, "மிஸ்டர். வில்சன், இந்தக் கனவான் என்னுடைய மிகப் பல கேஸ்களில் என்னுடைய பார்ட்னராகவும் உதவியாளராகவும் இருந்திருக்கிறார். உங்களுடைய கேஸிலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்", என்றார்.

பருத்த முகத்தின் ஒடுங்கிய கண்களைக்கொண்டு என்னை ஒரு சிறு கேள்விக்குறியுடன் பார்த்த மிஸ்டர். வில்சன், அவருடைய இருக்கையிலிருந்து லேசாக எழுந்து எனக்கு ஒரு சிறு தலையசைப்பில் முகமன் தெரிவித்து அமர்ந்தார்.

"அந்த சோபாவில் அமரும்", என்று சோபாவை எனக்கு சுட்டிக்காட்டிய ஹோம்ஸ், தன் கைகளை சேர்த்து விரல்களை ஒன்றோடொன்று குவித்தபடி அவருடைய நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார். "வாழ்வின் உப்புசப்பில்லாத வழக்கமான விஷயங்களை விட விசித்திரமான விஷயங்களில் என்னைப் போலவே உமக்கும் ஆர்வம் உண்டு என்று எனக்குத் தெரியும், வாட்சன். அந்த சுவாரசியத்தால் தான் என்னுடைய கேஸ்களை நீர் தொகுத்துக்கொண்டு வருகிறீர், சில வேளைகளில் கொஞ்சம் மிகைப்படுத்தி", என்றார்.

Representational Image
Representational Image

"உங்களுடைய கேஸ்கள் அனைத்தும் எனக்கு மிகவும் ஆர்வம் ஊட்டுபவை", என்று நான் ஒத்துக்கொண்டேன்.

"உமக்கு நினைவிருக்கிறதா … அன்றொரு நாள் உம்மிடம் நான் மிஸ். மேரி சதர்லண்டைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன், விசித்திரமான நிகழ்வுகளுக்கும் அசாதாரணமான சம்பவங்களின் சேர்க்கைகளுக்கும் நாம் வாழ்க்கையைத்தான் உற்று நோக்க வேண்டியிருக்கிறது என்று. எப்படிப்பட்ட கற்பனையாலும் வாழ்க்கையின் விசித்திரங்களை மிஞ்சமுடியாது", என்றார் ஹோம்ஸ்.

"ஆம். ஆனால் உங்கள் கூற்றை நான் சற்று சந்தேகிக்கவே செய்தேன்".

"உண்மைதான். நீர் சந்தேகித்துக்கொண்டே இருந்தால் நான் உமக்கு எடுத்துக்காட்டிற்கு மேல் எடுத்துக்காட்டாக கூறிக்கொண்டே போகவேண்டியிருக்கும். அதன் பின்நீர் என் வாதத்தில் உள்ள உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். ஏன், இதோ மிஸ்டர். ஜாபேஸ் வில்சனையே எடுத்துக்கொள்ளுங்கள். இன்று காலை இவர் என்னைப் பார்க்க வந்தார். இவர் கூறும் கதை இதுவரை நான் கேட்காத ஒன்றாக இருக்கிறது. மிகவும் விசித்திரமான விஷயங்கள் அநேகமாக சிறு குற்றங்களுடனேயே சம்பந்தப்பட்டிருக்கும் என்று நான் கூறுவதுண்டல்லவா? சில வேளைகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் குற்றம் ஏதேனும் அங்கு நடந்திருக்கிறதா என்ற சந்தேகம் கூட எழுவதுண்டு. இதுவரை மிஸ்டர். வில்சனின் கதையைக் கேட்டதிலிருந்து இதுவும் அப்படிப்பட்ட ஒரு விஷயமோ என்றேத் தோன்றுகிறது. ஆனால் இவர் சொல்லும் விஷயங்களின் கோர்வை நான் கேட்டதிலேயே மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது", என்ற ஹோம்ஸ் மிஸ்டர். வில்சனிடம் திரும்பி, "மிஸ்டர். வில்சன், நீங்கள் இதுவரை என்னிடம் சொன்னதை மறுபடி முதலிலிருந்து சொல்லமுடியுமா? என் நண்பர் டாக்டர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாட்சன் இந்தக் கதையைக் கேட்காதது மட்டுமல்ல, நான் இதைக் கேட்பதற்கானக் காரணம். வழக்கமாக, நிகழ்வுகளின் தொடர்ச்சியைக் க்ளையண்ட்ஸ் கூறும்போது என் நினைவில் நிற்கும் அது போன்ற ஆயிரக்கணக்கான கேஸ்களின் அடிப்படையைக் கொண்டு இந்தக் கேஸும் இப்படித்தான் இருக்கக்கூடும் என்று என்னால் ஒரு வழித்தடம் அமைக்க முடியும். ஆனால், உங்கள் கேஸ், என் நினைவுக்குத் தெரிந்தவரை, தனிப்பட்டதாக இருக்கின்றது", என்றார்.

அந்தக் கொழுத்த க்ளையண்ட் ஒரு சிறு பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, அவருடைய கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு கசங்கிய செய்தித்தாளை எடுத்து தன் முழங்காலின் மீது வைத்து அதை லேசாய் நீவி விட்டு அதிலிருந்த விளம்பர பத்திகளைப் பார்த்தார். அவருக்கு வேண்டிய அந்த விளம்பரத்தை அவர் தேடிக்கொண்டிருக்கும் போது அவரைப் பற்றி ஏதேனும் தகவல்கள் அவருடைய தோற்றத்திலிருந்து, ஹோம்ஸைப் போல், கண்டுபிடிக்க முடியுமா என்று அவரை கொஞ்சம் ஊன்றிப் பார்த்தேன். ஒரு சாதாரண பிரிட்டிஷ் வர்த்தகரின் குணங்களான உருண்ட உடலையும் மந்தமான அசைவுகளையும் தவிர அவரிடம் விசேஷமாய் வேறு எதையும் என்னால் காண முடியவில்லை. சாம்பல் நிற கட்டம் போட்ட கால்சராயும், அழுக்குப் படிந்த ஒரு கருப்பு மேல் கோட்டும், கோட்டின் பொத்தானிலிருந்துத் தொங்கும் கனமான பித்தளை கடிகார சங்கிலியும் அதில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சதுர வடிவ உலோக ஆபரணம் போன்ற ஒன்றும் வேறு எதையும் எனக்கு உணர்த்தவில்லை. அவருக்கு அருகில் இருந்த நாற்காலியில், ஒரு தேய்ந்து போன தொப்பியும், வெல்வெட் காலர் கொண்ட கசங்கிய பிரவுன் நிற கோட்டும் கிடந்தன. எவ்வளவு தான் அவரையும் அவருடைய உடைகளையும் நான் கூர்ந்து நோக்கினாலும், அவருடைய எரிதழல் போன்ற செந்நிற தலையைத் தவிர அவரைப் பற்றி சொல்லிக்கொள்ளும் படி எதுவும் எனக்குத் தெரியவில்லை.

Representational Image
Representational Image

ஹோம்ஸ் என் முயற்சிகளைப் பார்த்துவிட்டு ஒரு சிறிய புன்னகையுடன் தலையை ஆட்டினார். "ஒரு காலத்தில் உடல் உழைப்பு செய்தவர், மூக்குப் பொடி போடுபவர், சீனாவிற்குச் சென்று வந்தவர், அவர் ஒரு ஃபிரீமேசன், சில நாட்களாக நிறைய எழுதும் வேலை செய்திருக்கிறார் என்ற அப்பட்டமான விஷயங்களைத் தவிர என்னால் வேறு எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை", என்றார் ஹோம்ஸ்.

மிஸ்டர். ஜாபேஸ் வில்சன் லேசாய் திடுக்கிட்டு, செய்தித்தாளில் வைத்திருந்த விரலை விலக்காமல், தலையைத் தூக்கி ஹோம்ஸைப் பார்த்தார்.

"அடக் கடவுளே! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும், மிஸ்டர். ஹோம்ஸ்? நான் உடல் உழைப்பு செய்தேன் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? நான் பார்த்த முதல் வேலையே ஒரு கப்பலின் தச்சராகத்தான்", என்றார் ஜாபேஸ் வில்சன்.

"உங்கள் கைகள், மை டியர் சார். உங்கள் வலது கை இடது கையை விட சற்றேப் பெரியதாக உள்ளது. நீங்கள் உங்கள் வலது கையினால் அதிக வேலை செய்திருப்பதால் அதன் தசைகள் உங்கள் இடது கை தசைகளை விட கூடுதலாய் வளர்ச்சியடைந்துள்ளன".

"சரி, மூக்குப் பொடியும் ஃபிரீமேசன் உறுப்பினரும்? அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?"

"அதை எப்படிக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி உங்கள் அறிவுத்திறனை நான் இழிவுபடுத்த விரும்பவில்லை".

"சரி அதை விடுங்கள். சில நாட்களாக நான் நிறைய எழுதுகிறேன் என்பது ...?"

"உங்கள் சட்டை வலது கையின் சுற்றுப்பட்டை ஐந்து இன்ச் அளவிற்கு தேய்ந்து பளபளப்பாகியிருப்பதும், உங்கள் சட்டை இடது கையின் முழங்கை மேஜை மேல் வைத்ததனால் மழமழப்பாகியிருப்பதும் வேறு எதைக் குறிக்கமுடியும்?"

"சீனா?"

"உங்கள் வலது மணிக்கட்டின் மேல் நீங்கள் பச்சைக் குத்தியிருக்கும் மீன் சீனாவில் மட்டுமே வரையப்படும் ஒன்றாகும். பச்சைக் குத்தல்களைப் பற்றி நான் ஆராய்ந்தது மட்டுமல்லாமல் அதைப் பற்றிக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். மீன்களின் செதில்களை இது போல் மெல்லிய இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் தீட்டுவது சீனர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. அது மட்டுமல்லாமல், உங்கள் கடிகார சங்கிலியில் இருந்து ஒரு சீன நாணயம் தொங்குவதைப் பார்த்ததும் உங்கள் சீனத் தொடர்பு மிகத் தெளிவாகிவிட்டது".

Representational Image
Representational Image

மிஸ்டர். ஜாபேஸ் வில்சன் வயிறு குலுங்க சிரித்தார். "என்னைப் பற்றி விலாவாரியாக நீங்கள் விவரித்ததும் நான் கூட நீங்கள் ஏதோ சாமர்த்தியமாய் செய்துவிட்டதாய் நினைத்தேன். இப்போது புரிகிறது அதில் எதுவும் அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை என்று", என்றார்.

"எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி நான் தவறு செய்கிறேன் என்று நினைக்கிறேன், வாட்சன். என் வழிமுறைகளை இப்படி நான் விளக்கிக்கொண்டிருந்தால் என் பெயரும் புகழும் வெகு விரைவில் சின்னாபின்னமாகிவிடும்", என்ற ஹோம்ஸ் ஜாபேஸ் வில்சனிடம், "உங்கள் விளம்பரத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா, மிஸ்டர். வில்சன்?" என்றார்.

"ஆ! இதோ கிடைத்துவிட்டது", என்றார் வில்சன் அந்த செய்தித்தாளின் நடுவில் விரலை வைத்தபடி. "நீங்களே படியுங்கள், சார். இதிலிருந்துதான் எல்லாம் ஆரம்பித்தது", என்றபடி அந்தத் தாளை என்னிடம் நீட்டினார்.

அவரிடமிருந்து அதை வாங்கி அதிலிருந்த விளம்பரத்தை உரக்க வாசித்தேன்:

"செந்தலை குழுமத்திற்கு: மறைந்த திரு. எஸக்கியா ஹாப்கின்ஸ், லெபனான், பெனிசில்வேனியா, அமெரிக்கா, அவர்கள் எழுதிவைத்துள்ள உயிலின் பேரில் செந்தலை குழுமத்தில் ஓர் இடம் காலியாக இருக்கின்றது. இந்த இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு வார சம்பளமாக நான்கு பவுண்டுகள் வழங்கப்படும். இதற்கான வேலை மிகவும் சுலபமான ஒன்றாகும். செந்நிற முடி கொண்ட, இருபத்தியொரு வயதிற்கு மேற்பட்ட, ஆரோக்கியமான ஆண்கள், இந்த இடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வரும் திங்கட்கிழமை கீழ்கண்ட முகவரியில் காலை பதினொரு மணிக்கு நேரில் விண்ணப்பிக்கவும்.

திரு. டன்கன் ராஸ், 7 போப்ஸ் கோர்ட், ஃபிளீட் ஸ்ட்ரீட்".

"அடக் கடவுளே! இப்படி ஒரு விளம்பரமா?" என்றேன் இரண்டு முறை வாசித்த பின்னும் ஆச்சர்யம் அடங்காமல்.

ஒரு சிறிய சிரிப்புடன் தனது நாற்காலியில் உற்சாகத்துடன் நெளிந்தார் ஹோம்ஸ். "வழக்கத்திலிருந்து கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கிறது, இல்லையா?" என்ற ஹோம்ஸ் ஜாபேஸ் வில்ஸனிடம் திரும்பி, "ம்... இப்போது முதலிலிருந்துத் தொடங்குங்கள், மிஸ்டர். வில்சன். உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றி, இந்த விளம்பரம் உங்கள் வாழ்வை எப்படி மாற்றியது என்பதைப் பற்றி ஆரம்பத்திலிருந்து ஆரம்பியுங்கள். அதற்கு முன், இந்த விளம்பரத்தின் தேதியையும் அது வந்திருக்கும் செய்தித்தாளையும் கவனித்துக் குறித்துக்கொள்ளுங்கள், டாக்டர்".

"ஏப்ரல் 27, 1890, 'தி மார்னிங் க்ரானிக்ள்'(‘The Morning Chronicle’). இரண்டு மாதங்களுக்கு முந்தையது".

"நல்லது. இனி நீங்கள் தொடருங்கள், மிஸ்டர். வில்சன்".

"உங்களிடம் நான் சொல்லிக்கொண்டிருந்தது போல் தான், மிஸ்டர். ஹோம்ஸ். நகரின் அருகில் கோபர்க் சதுக்கத்தில் (Coburg Square) ஒரு சிறிய அடகுக்கடை வைத்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாக அதிலிருந்து எனக்கு மிகச் சொற்பமான வருமானமே கிடைத்து வருகின்றது. இரண்டு உதவியாளர்கள் வைத்திருந்த இடத்தில் இப்போது ஒருவனைத்தான் வைத்திருக்க முடிகிறது. அவன் அரை சம்பளத்திற்கு வேலை செய்ய சம்மதிருக்காவிட்டால் அதுவும் கூட எனக்கு மிகக் கடினமாக இருக்கும். வேலை பழகிக்கொள்வதற்காக அவன் என்னிடம் இதற்கு சம்மதித்து சேர்ந்திருக்கிறான்".

"இவ்வளவு தாராள மனதுடைய அந்த இளைஞனின் பெயர் என்னவோ?" என்றார் ஹோம்ஸ்.

"வின்சன்ட் ஸ்பால்டிங். அப்படி ஒன்றும் அவன் இளைஞன் இல்லை. சொல்லப்போனால் அவனுடைய வயது என்னவென்றே என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவனை விடத் தெளிவான ஓர் உதவியாளன் எனக்குக் கிடைக்கமாட்டான், மிஸ்டர். ஹோம்ஸ். வேறு இடத்திற்கு வேலைக்குச் சென்றால் நான் கொடுப்பதை விட இருமடங்கு கூலி அவனுக்குக் கிடைக்கும். ஆனால் அவனே இதற்கு சம்மதித்து வேலை செய்யும் போது, வீணே நானே ஏன் அவனுக்கு இதைப் பற்றி சொல்லி அவன் மனதைக் கலைக்க வேண்டும்?"

Representational Image
Representational Image

"ஆம். அதை ஏன் நீங்கள் செய்யவேண்டும்? நடைமுறைக் கூலியை விடக் குறைந்த கூலிக்கு உங்களுக்கு வேலைக்கு ஆள் கிடைத்தது உங்களின் அதிர்ஷ்டம் தான். இப்படிப்பட்ட விஷயம் இப்போதெல்லாம் காணப்படுவதில்லை. அதனால் தானோ என்னவோ உங்கள் வேலையாள் உங்கள் விளம்பரத்தை விட ஆச்சர்யப்படவைக்கிறார்", என்றார் ஹோம்ஸ்.

"ஓ! ஆனால் அவனிடமும் குறைகள் இல்லாமலில்லை, மிஸ்டர். ஹோம்ஸ்", என்று பதிலளித்தார் மிஸ்டர். வில்சன். "புகைப்படம் எடுப்பதில் இப்படி ஓர் ஆர்வம் உள்ளவனை நான் இதுவரை பார்த்ததில்லை. எப்போது பார்த்தாலும் எதையாவது படம் எடுத்துத் தள்ளிக்கொண்டே இருக்கிறான். எடுத்த புகைப்படங்களை என் கடையின் அடியில் இருக்கும் நிலவறையில், வளைக்குள் முயல் ஓடுவது போல், எப்போதும் நுழைந்து கொண்டு அவைகளை டெவெலப் செய்வதிலேயே நேரம் கழிக்கிறான். அது தான் அவனிடம் இருக்கும் ஒரே குறை. மற்றபடி அவனிடம் குற்றம் கண்டுபிடிக்க எதுவும் இல்லை".

"உங்களிடம் இன்னும் அவன் வேலைக்கு இருக்கிறானா?"

"ஆமாம். அவனும் ஒரு பதினான்கு வயதுப் பெண்ணும். அந்தப் பெண்ணிற்கு சமையல் செய்வதும், நாங்கள் வசிக்கும் இடத்தை சுத்தப்படுத்துவதும் தான் வேலை. என் மனைவி இறந்துவிட்டாள். பிள்ளைகளோ வேறு உறவுகளோ எனக்கு யாரும் இல்லை. எங்கள் அன்றாடத் தேவைகளுக்கும் வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்தவுமான வருமானம் மட்டுமே கொண்ட எங்கள் மூவரின் அமைதியான வாழ்வில் இந்த விளம்பரம் தான் சலசலப்பை ஏற்படுத்தியது.

எட்டு வாரங்களுக்கு முன் இதே நாளில் இந்த செய்தித்தாளைக் கையில் எடுத்துக்கொண்டு ஸ்பால்டிங் கடைக்குள் நுழைந்தான்.

“‘சே! கடவுள் எனக்கு செந்நிற தலைமுடி கொடுத்திருக்கக்கூடாதா என்றிருக்கிறது, மிஸ்டர். வில்சன்!’" என்றபடி.

“‘அது ஏன்?’" என்று நான் கேட்டேன்.

"'ஏன்? ஏனென்றாக் கேட்கிறீர்கள்? இதோ செந்தலை குழுமத்தில் ஓர் இடம் காலியாக இருக்கிறது. இந்த இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதியான ஆட்களைவிட அதிகக் காலியிடங்கள் இருக்கின்றன அந்த குழுமத்தில். அதனால் அந்த குழுமத்தின் நிர்வாகிகள் என்ன செய்வதென்றுத் தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்கள். என் முடியின் நிறம் மட்டும் செந்நிறமாக மாறிவிட்டால் அங்கே எனக்கு ஒரு வசதியான வாழ்வு காத்திருக்கின்றது'.


"'அது ஏன்? எப்படி இப்படி சொல்கிறாய்?' என்று கேட்டேன்.

நான் அதிகம் வெளியே எங்கும் செல்வதில்லை, மிஸ்டர். ஹோம்ஸ். என் வாடிக்கையாளர்கள் என்னைத் தேடி வந்துவிடுவதால் நான் அவர்களைத் தேடி வெளியே எங்கும் செல்லத் தேவையில்லை. வாரக்கணக்கில் கூட வாசலைத் தாண்டாமல் இருந்திருக்கிறேன். அதனால் வெளியுலகில் என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரிவதில்லை. யாரேனும் ஏதேனும் இப்படி செய்திகள் சொன்னால் தான் உண்டு".

"'நீங்கள் செந்தலை குழுமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா?' என்றான் ஸ்பால்டிங் ஆச்சர்யத்துடன்.

"'இல்லை'.

"'எப்படி உங்களுக்குத் தெரியாமல் போயிற்று? நீங்களே அந்தக் காலியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர் தான்'.

"'என்ன பயன் அதனால்? கூலி ஏதேனும் கிடைக்குமா?'

"ஓ! ஓர் ஆண்டிற்கு சில நூறு பவுண்டுகள் தேறும். ஆனால் வேலை சுளுவு தான். உங்கள் மற்ற வேலைகளை அது எதுவும் இடைஞ்சல் செய்யாது'.

"சில நூறு பவுண்டுகள் என்றதும் எனக்கு ஆர்வம் உண்டாயிற்று. என் நிலைமையில் அந்த சில நூறு பவுண்டுகள் பேருதவியாக இருக்கும் என்பதால் அதைப்பற்றி மேலும் சொல்லும்படி அவனிடம் கேட்டேன்.

இந்த விளம்பரத்தைக் காட்டி அவன் எல்லாவற்றையும் விளக்கினான். "'இதைப் பார்த்தாலே தெரியும் குழுமத்தில் ஓர் ஆள் தேவை என்று. இது தான் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி. எனக்குத் தெரிந்தவரை இந்தக் குழுமம் திரு. எஸக்கியா ஹாப்கின்ஸ் என்ற அமெரிக்கரால் ஏற்படுத்தப்பட்டது. கொஞ்சம் வித்தியாசமான மனிதர் அவர். அவரே ஒரு செந்தலைக்காரர் தான். அதனால் அவருக்கு செந்தலை ஆண்கள் மீது கொஞ்சம் கரிசனம் அதிகம். அவர் எழுதி வைத்த உயிலின் படி அவர் இறந்த பின் அவருடைய ஏராளமான செல்வம் அனைத்தும் ஒரு சில டிரஸ்டிக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

representational Image
representational Image

இந்த சொத்துக்களிலிருந்து வரும் வருமானைத்தின் ஒரு பகுதி செந்தலை ஆண்களைப் பேணுவதற்காக உபயோகப்படுத்தவேண்டும் என்று அவர் எழுதிவைத்திருந்தார். அதன் படி தான் இந்தக் குழுமம் செயல்பட்டு வருகிறது. நான் கேள்விப்பட்டவரை எளிதான வேலைக்கு சுளையான சம்பளம்', என்றான்.

"'ஆனால் இந்த ஓர் இடத்திற்கு இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்களே!'

"'நீங்கள் நினைப்பது போல் அத்தனை பேரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது. ஏனெனில் லண்டனில் வசிக்கும் வயது வந்த ஆண்கள் மட்டும் தான் இதற்குத் தகுதியானவர்கள். மேலும், செம்பட்டைத் தலையோ அல்லது வெளிர் சிவப்புத் தலையோ இதற்குத் தகுதியில்லை. ஒரு குறிப்பிட்ட நிறத்தில், செந்தணல் போல் செக்கச்செவேலென்று இருக்கவேண்டும் தலைமுடி, உங்கள் தலை போல். நீங்கள் மட்டும் இதற்கு விண்ணப்பித்தால் மறு யோசனை இன்றி நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்'.

"நீங்களே பாருங்கள், ஜென்டில்மென், என் தலைமுடி ஓர் ஒளிரும் சிவப்பு நிறத்தில் இருப்பதை. அவன் சொல்வதை வைத்துப் பார்த்தால் செந்தலை குழுமத்தில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியது. வின்சென்ட் ஸ்பால்டிங்கிற்கு இதைப் பற்றி நிறையத் தெரிந்திருந்ததால், கடையைப் பூட்டிவிட்டு அவனை அழைத்துக்கொண்டு உடனே கிளம்பினேன். அவனுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்ததால் ஆர்வத்துடன் அவனும் என்னுடன் வந்தான். விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நாங்கள் சென்றோம்.

என் வாழ்நாளில் அதுவரை அப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை, இனிமேலும் பார்க்கப்போவதில்லை, மிஸ்டர். ஹோம்ஸ். நகரின் நான்கு திசைகளிலிருந்தும் சிவப்பின் அத்தனை சாயல்களிலும் தலைமுடி கொண்ட அத்தனை ஆண்களும் அந்த முகவரியை நோக்கிப் படையெடுத்திருந்தார்கள். ஆரஞ்சு விற்பவனின் தள்ளுவண்டி போல், அந்தத் தெருவே செந்தலை ஆண்களால் நிரம்பி வழிந்தது. இத்தனை செந்தலைக்காரர்கள் இந்த ஊரில் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை. சிவப்பின் அத்தனை சாயல்களிலும் தலைமுடிக் கொண்டவர்கள் அங்கேக் குழுமியிருந்தார்கள். ஆரஞ்சு, பழுப்பு, செங்கல், துரும்பு, செம்மண் என்று உலகில் எத்தனை சிவப்புகள் உள்ளனவோ அத்தனை சிவப்புகளிலும் தலைமுடி அங்கே இருந்தது. ஆனால் என்னுடைய தலையைப் போல் எரியும் நெருப்பின் நிறமாக இருந்தத் தலைகள் அங்கே மிகச் சொற்பமே. கூடியிருந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் நான் நம்பிக்கையிழந்துத் திரும்பிப் போகப் பார்த்தேன். ஆனால் ஸ்பால்டிங் என்னை விடவில்லை. எப்படித்தான் அவன் முன்னேறினான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் முண்டியடித்து முன்னால் சென்று என்னை அந்த அலுவலகத்திற்குச் செல்லும் மாடிப்படி வரைக் கொண்டு சேர்த்துவிட்டான். நம்பிக்கையுடன் ஏறும் வரிசை ஒன்று, மனமுடைந்து இறங்கும் வரிசை ஒன்று என்று இரண்டு வரிசைகள் அந்தப் படிகளில் ஊர்ந்துகொண்டிருந்தன. எப்படியோ அந்த ஏறும் வரிசையில் எங்களையும் புகுத்திக்கொண்டு மேலே சென்று அலுவலகத்திற்குள் ஒருவழியாக நுழைந்து விட்டோம்.

"உங்கள் அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கிறது, மிஸ்டர். வில்சன். அதன் பின் என்ன நடந்தது என்று சொல்லுங்கள்", என்றார் ஹோம்ஸ். ஜாபேஸ் வில்சன் சிறிது மூக்குப்பொடியை உறிஞ்சிக்கொண்டு அவருடைய கதையைத் தொடர்ந்தார்.

"அந்த அலுவலகத்தில் ஒரு மேஜையையும் இரண்டு நாற்காலிகளையும் தவிர வேறு எதுவும் இல்லை. என் தலையை விட சிவந்த முடியைக் கொண்ட ஒருவர் அந்த மேஜையின் பின் அமர்ந்திருந்தார். உள்ளே நுழையும் ஒவ்வொருவரிடமும் ஒரு சில வார்த்தைகள் பேசினார். பின் ஏதாவது காரணங்களை சொல்லி அவர்களை நிராகரித்து அனுப்பி வைத்தார். அவ்வளவு சுலபமாய் யாரையும் தேர்ந்தெடுக்கப்போவதில்லை என்று எனக்குப் பட்டது. என்னைப் பார்த்ததும் கொஞ்சம் அவருடைய முகம் இளகியது. நாங்கள் உள்ளே நுழைந்ததும் எங்களிடம் தனியே பேசும் பொருட்டுக் கதவை மூடினார்.

Representational Image
Representational Image
iStock

"'இது மிஸ்டர். ஜாபேஸ் வில்சன். காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வந்திருக்கிறார்", என்று ஸ்பால்டிங் என்னை அறிமுகப்படுத்தினான்.

"மிகவும் பொருத்தமானவர் போல்தான் தெரிகிறார்", என்றபடி என்னை சுற்றி வந்தார் அங்கிருந்தவர். "இப்படி ஒரு செந்தலையை பார்த்து வெகு நாட்களாகிறது", என்றபடி தலையை ஒரு பக்கமாக சாய்த்து என்னுடைய தலைமுடியைக் கூர்ந்து நோக்கினார்.

சட்டென்று முடிவுக்கு வந்தவராய் என் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். "யோசிப்பதற்கு இனி எதுவும் இல்லை, ஒரு விஷயத்தைத் தவிர", என்றவர் சட்டென்று என் தலைமுடியை இரண்டு கைகளிலும் பிடித்து பலம் கொண்டமட்டும் இழுத்தார். வலியில் நான் கத்தியதும் தான் என் முடியை விட்டார்.

'எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. உங்கள் கண்களில் துளிர்த்திருக்கும் கண்ணீர், இது உங்கள் ஒரிஜினல் முடி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இரண்டு முறை விக்குகளாலும் ஒரு முறை சிவப்பு சாயத்தாலும் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்", என்றபடி ஜன்னலுக்குச் சென்று கீழே கூடியிருந்தவர்களிடம் செந்தலை குழுமத்தின் காலி இடம் நிரப்பப்பட்டுவிட்டது என்று உரக்கக் கத்தினார். ஏமாற்றத்தின் பெருத்த முனகல் ஒன்று வெளிப்பட்டது காத்திருந்தக் கூட்டத்திடமிருந்து. கூடியிருந்த செந்தலைகள் திசைக்கொன்றாய் கலைந்து செல்ல, சிறிது நேரத்திற்கெல்லாம் மானேஜரையும் என்னையும் தவிர வேறு செந்தலைகள் எதுவும் இல்லை அவ்விடத்தில்.

"'என் பெயர் டன்கன் ராஸ். நானும் செந்தலை குழுமத்தின் பயனாளிதான்", என்றார் அந்த மானேஜர். 'நீங்கள் திருமணமானவரா, மிஸ்டர். வில்சன்? குடும்பம் இருக்கிறதா உங்களுக்கு?' என்று கேட்டார்.

இல்லை என்று நான் பதிலளித்தேன். அவருடைய முகம் உடனே வாடியது.

"'அடடா! இது கொஞ்சம் சீரியஸ் ஆயிற்றே! சிவப்புத் தலை மக்கள் பெருகவேண்டும் என்பதும் அவர்கள் பேணப்படவேண்டும் என்பதும் தான் இந்த குழுமத்தின் நோக்கமே. நீங்கள் மணமாகாதவராக இருப்பது சற்று துரதிர்ஷ்டம் தான்'.

"இதைக் கேட்டதும் என் மனம் துவண்டது, மிஸ்டர். ஹோம்ஸ். எனக்கு அந்த இடம் கிடைக்கப்போவதில்லை என்று நான் நினைத்தேன்.

"'வேறொருவராக இருந்தால் இந்த விஷயம் தள்ளுபடி செய்ய முடியாததாக இருந்திருக்கும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு செந்தலையைக் கொண்டவருக்கு சில சலுகைகள் தருவதில் தவறில்லை', என்று சில நிமிட யோசனைக்குப் பின் சொன்னவர், 'உங்களால் எப்போது இந்த வேலையில் சேரமுடியும்?' என்று கேட்டார்.

"ஏற்கனவே எனக்கு சிறிய பிசினஸ் ஒன்று இருக்கிறது", என்று சற்றுத் தயங்கியபடி சொன்னேன்.

"'ஓ! அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், மிஸ்டர். வில்சன். அதை நான் பார்த்துக்கொள்கிறேன்', என்றான் ஸ்பால்டிங்.

"வேலை நேரம் என்னவாக இருக்கும்?" என்று கேட்டேன்.

"'காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை', என்றார் ராஸ்.

"அடகுக் கடையின் பிசினஸ் அநேகமாக மாலையில் தான் நடக்கும், மிஸ்டர். ஹோம்ஸ். அதுவும் குறிப்பாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை சாயங்காலம், சம்பளத் தேதிக்கு முன் தான் பெருவாரியான ஆட்கள் வருவார்கள். ஆகையால் காலை நேரங்களில் கொஞ்சம் கூடுதல் வரும்படி பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். என் உதவியாளன் ஸ்பால்டிங் திறமையானவன் என்று எனக்குத் தெரிந்ததால், அப்படியே ஏதேனும் வேலை வந்தாலும் கூட அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது".

"'ஹாங்! இது எனக்குத் தோதான நேரம் தான். கூலி எவ்வளவு?" என்று விசாரித்தேன்.

"ஒரு வாரத்திற்கு நான்கு பவுண்டுகள்'.

"என்ன வேலை?'

"'சும்மா பெயருக்கு'.

"சும்மா பெயருக்கு என்றால்…?'

Representational Image
Representational Image

"'வேலை நேரம் முழுவதும் நீங்கள் இந்த அலுவலகத்தில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த கட்டிடத்திலாவது இருக்கவேண்டும். இதை விட்டு நீங்கள் வெளியேறினால் செந்தலை குழுமத்திலிருந்து நீக்கப்படுவீர்கள். இதில் எந்தவித சலுகையும் கிடையாது. குழுமத்தின் சட்டங்கள் இதில் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றன'.

"நான்கு மணி நேரத்தில் நான் ஏன் வெளியே செல்லப் போகிறேன்?" என்றேன் நான்.

"'உடல் நிலை சரியில்லை, பிசினஸ், தொழில், என்று வேறு எந்தக் காரணத்தை முன்னிட்டும் நீங்கள் இந்த அலுவலகத்தை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் உங்கள் இடத்தை நீங்கள் இழக்க வேண்டிவரும்', என்றார் ராஸ்.

"சரி. வேலை?"

"'என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிகா'வை நீங்கள் பிரதி எடுக்க வேண்டும். அதன் முதல் பகுதி இங்கே இருக்கின்றது. ஆனால் எழுதுவதற்குத் தேவையானக் காகிதத்தையும், பேனாவையும், மையையும், உறுஞ்சு தாளையும் நீங்கள் தான் கொண்டுவரவேண்டும். இந்த மேஜையும் நாற்காலியும் உங்களுக்குத் தரப்படும். நாளை ஆரம்பிக்க நீங்கள் தயாரா?' என்று கேட்டார் ராஸ்.

"ஓ! நிச்சயமாய்!" என்றேன் நான்.

"இந்த இடம் உங்களுக்குக் கிடைத்ததற்கு மறுபடியும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு, மிஸ்டர். வில்சன். நாளை சந்திக்கலாம்', என்றபடி என்னை வழியனுப்பிவைத்தார் ராஸ். எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை நினைத்து மிகவும் மகிழ்ந்து போய் நான் வீடு திரும்பினேன்.

"அன்றைய தினம் முழுதும் நடந்ததைப் பற்றி சிந்தித்துக் கொண்டேயிருந்தேன். இரவு வந்த போது என் மனம் மிகவும் சோர்ந்துபோய்விட்டிருந்தது. நடந்தது அத்தனையும் ஏதோ ஒரு விஷமம் என்றும் ஏமாற்று வேலை என்றும் எனக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது தான் அதற்குக் காரணம். இப்படி ஓர் உயிலை ஒருவர் எழுதுவார் என்றும், 'என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிகா'வைப் பிரதி எடுக்க இவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்றும் என்னால் நம்பமுடியவில்லை. ஸ்பால்டிங் என்னை உற்சாகப்படுத்த ஏதேதோ சொல்லிப் பார்த்தான். மறுநாள் காலையில் அங்கே செல்வதில்லை என்ற முடிவுடன் தான் நான் உறங்கச்சென்றேன். ஆனால் விடிந்ததும் என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. என்னதான் நடக்கிறதென்று அங்கே சென்று பார்த்துவிடுவதென்ற முடிவுடன், ஒரு மை புட்டி, ஓர் இறகுப் பேனா, ஏழு தாள்கள் என்று எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அந்த அலுவலகத்திற்குச் சென்றேன்.

"சந்தேகத்துடனேயே சென்ற எனக்கு அங்கே சந்தோஷமான ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கான மேஜையில் எல்லாம் தயாராயிருந்தது. மிஸ்டர் ராஸ் என் வேலையை 'A' விலிருந்து எழுதுவதற்கு ஆரம்பித்து வைத்துவிட்டு சென்றார். அவ்வப்போது வந்து எல்லாம் சரியாயிருக்கிறதா என்று என்னை மேற்பார்வை பார்த்தார். சரியாக இரண்டு மணிக்கு வந்து, நான் எழுதியுள்ளதைப் பார்த்து பாராட்டிவிட்டு என்னை வெளியே அனுப்பி கதவைப் பூட்டிவிட்டு மறுநாள் பார்ப்போம் என்று என்னிடம் விடைபெற்றார்.

இப்படியே நாட்கள் சென்றன, மிஸ்டர். ஹோம்ஸ். சனிக்கிழமை மானேஜர் வந்து என் முன் நான்கு காசுகளை பேசியபடி எனக்குக் கூலியாகக் கொடுத்தார். ஒவ்வொரு வாரமும் இதே கதை தொடர்ந்தது. காலை பத்து மணிக்கு சரியாக நான் அங்கே ஆஜராவதும், சரியாக இரண்டு மணிக்கு விடைபெறுவதும் வழக்கமானது. முதலில் அடிக்கடி வந்து என்னை பார்த்துக்கொண்டிருந்த மிஸ்டர். ராஸ் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வருவதைக் குறைத்துக்கொண்டார். அதற்கப்புறம் சில நாட்கள் கழித்து அவர் வருவதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார். ஆனாலும், என் வேலை நேரத்தில் நான் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே செல்லத் துணியவில்லை. வேலை சுலபமாகவும் கூலி கணிசமானதாகவும் இருந்ததால் வெளியே சென்று அதை இழக்க நான் விரும்பவில்லை.

இப்படியே எட்டு வாரங்கள் சென்றன. 'Abbots', 'Archery', 'Armour', 'Architecture' ஆகிவற்றைப் பற்றி எழுதியிருந்தேன். அடுத்து 'B' எழுத்தின் கீழுள்ள வார்த்தைகளை எழுதுவதை எதிர்நோக்கியிருந்தேன். பேப்பருக்கு கொஞ்சம் நிறையவே செலவாகியது. ஆனாலும் அதைப்பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை. என்னுடைய ஒரு அலமாரித் தட்டு முழுக்க என் எழுத்துக்கள் நிரம்பியிருந்த வேளையில் தான் அத்தனையும் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தது".

"முடிவுக்கா?"

"ஆமாம், மிஸ்டர். ஹோம்ஸ். அதுவும் இன்று காலையில். காலை வழக்கம் போல பத்து மணிக்கு அந்த அலுவலகத்திற்குச் சென்றேன். கதவு பூட்டப்பட்டு, அதில் ஓர் அட்டை ஆணியடித்துத் தொங்கவிடப்பட்டிருந்தது. இதோ, இதுதான் அது. நீங்களே பாருங்கள்", என்றபடி ஒரு வெள்ளை அட்டையை நீட்டினார் ஜாபேஸ் வில்சன்.

அதில்,

செந்தலை குழுமம் கலைக்கப்பட்டது

அக்டோபர் 9, 1890.

என்றிருந்தது.

Representational Image
Representational Image

அறிவிப்பையும் அதைக் கையில் பிடித்திருந்தவரின் ஏமாற்றமடைந்த முகத்தையும் பார்த்த ஹோம்ஸுக்கும் எனக்கும் சிரிப்புப் பீறிக்கொண்டு வர, இருவரும் சட்டென்று வெடித்துச் சிரித்தோம்.

"என்னைப் பார்த்து நீங்கள் சிரிப்பதாய் இருந்தால் இந்த விவகாரத்தை நான் வேறு யாரிடமாவது கொண்டு செல்கிறேன். இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறதென்றுத் தெரியவில்லை எனக்கு", என்றார் ஜாபேஸ் வில்சன், அவர் முடியைப் போலவே சிவந்து போன முகத்துடன்.

"நோ, நோ, நோ", என்ற ஹோம்ஸ், நாற்காலியிலிருந்து பாதி எழுந்த ஜாபேஸ் வில்சனை மறுபடி நாற்காலியில் அழுத்தி அமரச்செய்தார். "இந்தக் கேஸை நான் விடுவதாய் இல்லை, மிஸ்டர். வில்சன். மிகவும் வித்தியாசமான ஒன்றாய் இருக்கிறது. ஆனாலும் அதில் கொஞ்சம் நகைச்சுவையும் கலந்திருக்கிறதென்பதை நீங்களும் கூட ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். சரி, இந்த அறிவிப்பைப் பார்த்தவுடன் நீங்கள் வேறு என்ன செய்தீர்கள்?"

"இதைப் பார்த்தவுடன் எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை, சார். என்ன செய்வதென்றுத் தெரியவில்லை. சுற்றி இருந்த மற்ற அலுவலக அறைகளில் விசாரித்தேன். அவர்கள் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இறுதியில் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரிடம் சென்றேன். அவர் ஒரு கணக்கர். அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் வசிக்கிறார். அவர் கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்த 'செந்தலை குழுமம்' என்னவாயிற்று என்று அவரிடம் கேட்டேன். அப்படிப்பட்ட ஒன்றைக் கேள்விப்பட்டதேயில்லை என்று அவர் கூறினார். சரி, மிஸ்டர். டன்கன் ராஸையாவது தெரியுமாவென்றுக் கேட்டேன். அந்தப் பெயரையே கேள்விப்பட்டதில்லை என்று அவர் கூறினார்".

"நம்பர் 4-ல் இருக்கும் நபர்?" என்று கேட்டேன்.

"யார்? அந்த சிவப்புத் தலை ஆளா?" என்றார்.

"ஆம்", என்றேன்.

"ஓ! அது மிஸ்டர். வில்லியம் மோரிஸ். அவர் ஒரு வழக்கறிஞர். அவருடைய புதிய அலுவலகம் தயாராகும் வரை இந்த அறையை தற்காலிகமாக உபயோகித்துக்கொண்டிருந்தார். நேற்றுதான் காலி செய்தார்", என்றார்.

"அவரை எங்கே பார்க்கலாம்?" என்று கேட்டேன்.

"அவருடைய புதிய ஆபிஸில். முகவரியைக்கூட என்னிடம் சொன்னார். 17, கிங் எட்வர்ட் தெரு".

"உடனே அந்த இடத்திற்குச் சென்றேன், மிஸ்டர். ஹோம்ஸ். ஆனால் அது ஆபிஸ் இல்லை, செயற்கைக் கால்கள் தயாரிக்கும் பாஃக்டரி. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் யாருக்கும் மிஸ்டர். டன்கன் ராஸையோ மிஸ்டர். வில்லியம் மோரிஸையோ தெரிந்திருக்கவில்லை".

"அப்புறம் என்ன செய்தீர்கள்?" என்றார் ஹோம்ஸ்.

"நேரே வீட்டிற்குச் சென்று என் உதவியாளனிடம் யோசனை கேட்டேன். கடிதம் ஏதாவது அவர்களிடமிருந்து வரும் வரை காத்திருங்கள் என்று அவன் சொன்னான். வேறு எந்த யோசனையும் அவனுக்கும் தோன்றவில்லை. ஆனால் இவ்வளவு வரும்படி வரும் ஒரு வேலையை அவ்வளவு லேசில் விட்டுவிட எனக்கு மனமில்லை. என்னை போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட விஷயங்களில் நீங்கள் உதவுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நேரே உங்களிடம் வந்தேன்", என்று முடித்தார் ஜாபேஸ் வில்சன்.

"அப்படி நீங்கள் செய்தது தான் மிகச் சரியான காரியம்", என்ற ஹோம்ஸ் தொடர்ந்தார். "உங்கள் கேஸ் நிரம்பவே சுவாரஸ்யமான ஒன்று, மிஸ்டர். வில்சன். நீங்கள் சொல்வதிலிருந்து உங்கள் கேஸின் பின்னணியில் மிகவும் சீரியஸான விஷயங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது".

"சீரியஸான விஷயம் தான், மிஸ்டர். ஹோம்ஸ். வாரம் நான்கு பவுண்டுகள் வருமானத்தை இழக்கும் சீரியஸான விஷயம்".

"உங்களைப் பொறுத்தவரை இந்த குழுமத்திற்கு எதிராக நினைப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்வேன். மாறாக, இதுவரை கிட்டத்தட்ட முப்பது பவுண்டுகள் நீங்கள் சம்பாதித்திருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல, ‘A’ எழுத்தின் கீழ் உள்ள வார்த்தைகளைப் பற்றி நிறையவே உங்களுக்கு அறிவும் கிடைத்திருக்கிறது. செந்தலை குழுமத்தால் உங்களுக்கு இழப்பேதும் இல்லை", என்றார் ஹோம்ஸ்.

"அது உண்மை தான், மிஸ்டர். ஹோம்ஸ். ஆனால் அவர்கள் யாரென்று தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் யார், இந்த விஷமத்திற்கு ஏன் என்னை ஆளாக்கினார்கள் என்று எனக்குத் தெரியவேண்டும். இது விஷமத்தனமாக இருந்தால் அதற்கு அவர்கள் கொடுத்த விலை மிகவும் அதிகம். முப்பத்தியிரண்டு பவுண்டுகள் இதற்காக அவர்கள் செலவு செய்திருக்கிறார்கள்".

Representational Image
Representational Image

"இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவுபடுத்த முயற்சிக்கிறோம், மிஸ்டர். வில்சன். அதற்கு முன் சில கேள்விகளுக்கு நீங்கள் விடையளியுங்கள். இந்த விளம்பரத்தை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்த அந்த உதவியாளன் எத்தனை நாட்களாக உங்களிடம் வேலை பார்க்கிறான்?"

"கிட்டத்தட்ட ஒரு மாதமாக".

"எப்படி உங்களிடம் வேலைக்குச் சேர்ந்தான்?"

"நான் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து".

"அந்த விளம்பரத்தைப் பார்த்து அவன் ஒருவன் தான் வந்தானா?"

"இல்லை. கிட்டத்தட்ட ஒரு டஜன் ஆட்கள் வந்தார்கள்".

"இத்தனை பேரிலிருந்து அவனை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?"

"அவன் தான் குறைந்த சம்பளத்திற்கு வருவதாகக் கூறினான்".

"அதாவது பாதி கூலிக்கு?"

"ஆம்".

"இந்த வின்சன்ட் ஸ்பால்டிங் பார்ப்பதற்கு எப்படி இருப்பான்?"

"குள்ளமாக, சற்றே குண்டாக, ஆனால் துறுதுறுவென்று வேலை பார்ப்பான். முப்பதுக்கு மேல் இருக்கும் அவன் வயது, ஆனாலும் முகத்தில் அவனுக்கு முடியே இல்லை. நெற்றியில் ஏதோ அமிலம் பட்டத் தழும்பு ஒன்று இருக்கிறது".

ஹோம்ஸ் தன் நாற்காலியில் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தார்.

"நான் நினைத்தது சரி", என்றவர், "அவன் காது குத்தியிருக்கிறானா என்று நீங்கள் கவனித்தீர்களா?" என்று கேட்டார்.

"ஆமாம், சார். சிறுவயதில் யாரோ ஒரு ஜிப்ஸி நாடோடி அவனுக்கு அதை செய்துவிட்டதாகக் கூறினான்".

"ஹூம்!” என்றபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் ஹோம்ஸ். "அவன் இன்னும் உங்களுடன் தான் இருக்கிறானா?" என்று கேட்டார் சற்று நேரத்திற்குப் பின்.

"ஓ! இப்போது அவனை கடையில் விட்டுவிட்டுத் தான் வந்தேன்".

"நீங்கள் இல்லாத சமயத்தில் கடையில் வேலையை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டானா?"

"குறைபட்டுக்கொள்ளும் படி எதுவும் இல்லை, சார். காலையில் அவ்வளவாக எப்போதுமே வேலை இருந்ததில்லை".

"இப்போதைக்கு இது போதும், மிஸ்டர். வில்சன். ஓரிரு நாட்களில் இந்த விஷயத்தில் சற்றுத் தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இன்று சனிக்கிழமை. திங்கட்கிழமைக்குள் ஏதேனும் முடிவு தெரிய வாய்ப்பிருக்கிறது", என்றபடி ஜாபேஸ் வில்சனை வழியனுப்பி வைத்தார் ஹோம்ஸ்.

"வெல், வாட்சன், உமக்கு ஏதாவதுத் தோன்றுகிறதா ஜாபேஸ் வில்சனின் விஷயத்தைப் பற்றி?" என்று ஹோம்ஸ் கேட்டார்.

"எதுவும் தோன்றவில்லை. ஒரே மர்மமாய் இருக்கிறது", என்றேன்.

"என்னுடைய குற்ற விதிகளின் படி, ஒரு விஷயம் எவ்வளவுக்கெவ்வளவு விநோதமாய் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது இறுதியில் சாதாரணமான ஒன்றாய் இருக்கும். மிகவும் பொதுவான, வித்தியாசமான அம்சங்கள் எதுவும் இல்லாத குற்றங்கள் தான் விடை காண்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். சிறப்பம்சங்கள் எதுவும் இல்லாத பொத்தாம்பொதுவான முகத்தை நினைவில் கொள்வது கடினமாய் இருப்பதைப் போன்று. ஆனால் இந்த விஷயத்தில் நான் சற்றுத் துரிதமாக செயல்படவேண்டும்".

"அப்படியெனில் என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டேன்.

"புகை பிடிக்கப் போகிறேன்", என்று பதிலளித்தார் ஹோம்ஸ். "இது மூன்று பைப்புகள் புகைக்கத் தகுந்த பிரச்னை. ஆகையால் அடுத்த ஐம்பது நிமிடங்களுக்கு நீர் என்னிடம் எதுவும் பேசாமல் இருக்கவேண்டும்", என்றபடி அவருடைய நாற்காலியில் மெலிந்தக் கால்களைத் தூக்கி வைத்து, முழங்கால்களின் மேல் மோவாயை வைத்துக்கொண்டு கண்களை மூடினார்.

Representational Image
Representational Image

அவருடைய வளைந்த மூக்கும், வாயிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் பைப்பும் ஹோம்ஸை ஏதோ விசித்திரமான பறவையைப் போல் தோற்றமளிக்கச் செய்தன. சிறிது நேரத்தில் அவர் தூங்கி விட்டார் என்று நினைத்த எனக்கும் தூக்கம் கண்களை சுழற்ற, நானும் லேசாய் கண் அயர்ந்தேன்.

திடீரென்று நாற்காலியிலிருந்துத் துள்ளி எழுந்த ஹோம்ஸ், பைப்பைக் கணப்பு இடத்தின் மேல் தட்டில் வைத்தார்.

"இன்று மாலை ஜேம்ஸ் அரங்கில் ஓர் இசை நிகழ்ச்சி இருக்கிறது. உம்முடைய பேஷண்டுகள் உமக்கு சில மணி நேரம் ஒதுக்குவார்கள் என்று நினைக்கிறீரா, வாட்சன்?" என்று கேட்டார் ஹோம்ஸ்.

"இன்று எனக்கு வேலை எதுவும் இல்லை. என் பிராக்டிஸ் எப்போதும் அப்படி ஒன்றும் பிஸியானதில்லை".

"அப்படியெனில் வாரும். நகருக்குள் சிறிது வேலை இருக்கிறது. போகும் வழியில் மதிய உணவருந்திக் கொள்ளலாம். இன்றைய இசை நிகழ்ச்சியில் கூடுதலாக ஜெர்மானிய இசை தான் இசைக்கப்படுகிறது. இத்தாலிய அல்லது பிரெஞ்சு இசையை விட ஜெர்மானிய இசை தான் சிந்திக்க ஏதுவானது. நான் சிந்திப்பதற்கு நிறையவே இருக்கிறது", என்றவருடன் சேர்ந்து நானும் கிளம்பினேன்.

தொடரும் . . .

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.