Published:Updated:

செந்தலை குழுமம் - II #SherlockHolmes

Representational Image

கட்டுரையாளர் கா.தாஸ், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையை தமிழில் மொழி பெயர்த்து சுவாரஸ்யம் குறையாமல் உருவாக்கிய #MyVikatan கட்டுரை... (இரண்டாம் பாகம்)

செந்தலை குழுமம் - II #SherlockHolmes

கட்டுரையாளர் கா.தாஸ், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையை தமிழில் மொழி பெயர்த்து சுவாரஸ்யம் குறையாமல் உருவாக்கிய #MyVikatan கட்டுரை... (இரண்டாம் பாகம்)

Published:Updated:
Representational Image

கிளம்பிய சற்று நேரத்தில் ஜாபேஸ் வில்சனின் கடை இருக்கும் கோபர்க் சதுக்கத்தை அடைந்தோம். நான்கு வரிசைகளில் இரண்டு மாடிகள் கொண்ட மங்கலான கட்டிடங்கள் அந்த சிறிய சதுக்கத்தை சுற்றி அமைந்திருந்தன. காய்ந்த புற்களும் பழுப்படைந்த செடிகள் சிலவும் அங்கே நிலவிய புகை மூண்ட, இணக்கமற்ற சூழ்நிலையை நோஞ்சானாய் எதிர்த்துக்கொண்டிருந்தன. மூன்று வெண்கல நிற உருளைகள் தாங்கிய பிரவுன் நிற "ஜாபேஸ் வில்சன்" என்ற பெயர்ப்பலகை ஒரு மூலைக் கட்டிடத்தின் முன் தொங்கிக்கொண்டு, எங்கள் செந்தலைக் க்ளையண்ட்டின் அடகுக்கடையை எங்களுக்கு அடையாளம் காட்டியது.

ஹோம்ஸ் அந்தக் கட்டிடத்தின் முன் நின்றார். ஒரு பக்கமாய் தலையைத் திருப்பி, இடுங்கிய இமைகளின் ஊடாக அந்தக் கட்டிடத்தை மேலும் கீழும் ஆராய்ந்தார். பின், அந்தத் தெருவின் கோடி வரையிலும் அதில் இருந்த மற்றக் கட்டிடங்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே நடந்தார். இறுதியாக அடகுக்கடையின் முன் மறுபடியும் வந்து நின்று தன் கைத்தடியால் அதன் முன் இருந்தத் தரையில் பலமாக இரண்டு, மூன்று முறை தட்டினார். பின் சட்டென்று அடகுக்கடையின் முன் சென்று அதன் கதவில் சத்தமாகத் தட்டினார். பளீச்சென்று சுத்தமாக சவரம் செய்யப்பட்ட முகத்துடன் இருந்த ஒரு இளைஞனால் உடனே கதவு திறக்கப்பட்டது.

ஒரு இளைஞனால் உடனே கதவு திறக்கப்பட்டது
ஒரு இளைஞனால் உடனே கதவு திறக்கப்பட்டது
Sidney Paget 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளே வரச்சொல்லி அவன் விடுத்த அழைப்பிற்கு ஹோம்ஸ், "நன்றி. இங்கிருந்து ஸ்டராண்டிற்கு எப்படி போவது என்று கேட்பதற்காகவே கதவைத் தட்டினேன்", என்றார்.

"மூன்றாவது வலது, நான்காவது இடது", என்று அந்த உதவியாளன் பதில் அளித்துவிட்டு உடனே கதவை மூடினான்.

அங்கிருந்து நகர்ந்து சற்று தூரம் சென்ற பின், "புத்திசாலிதான்", என்றார் ஹோம்ஸ் கதவைத் திறந்த அந்த இளைஞனைப் பற்றி. "என்னுடைய கணிப்பில் லண்டனின் நான்காவது புத்திசாலி அந்த இளைஞன். "துணிச்சலில் அவனை மூன்றாவது என்று கூட சொல்லலாம். அவனைப் பற்றி ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் பரிச்சயமிருக்கிறது", என்றார்.

"மிஸ்டர். வில்சனின் உதவியாளனுக்கு இந்த விவகாரத்தில் நிறையவே சம்பந்தம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அவனைப் பார்க்கவேண்டும் என்றுதானே வழி கேட்பதுபோல் கதவைத் தட்டினீர்கள்?" என்றேன் நான்.

"அவனைப் பார்க்க அல்ல".

"பின்னே?"

"அவனுடைய கால்சராயின் முழங்கால் பகுதியைப் பார்க்க".

"அதில் என்ன பார்த்தீர்கள்?"

"நான் எதிர்பார்த்ததை".

"தரையை ஏன் தட்டினீர்கள்?"


"மை டியர் டாக்டர், இது கவனிப்பதற்கான நேரம், பேசுவதற்கான நேரம் அல்ல. இப்போது நாம் எதிரி முகாமில் இருக்கும் ஒற்றர்கள். இந்த இடத்தைப் பற்றிக் கொஞ்சம் தான் தெரிந்து கொண்டோம். இப்போது இதன் பின்னே என்ன இருக்கிறதென்று பார்ப்போம்", என்று ஹோம்ஸ் சொல்ல, அதன்படி நாங்கள் சற்று தூரம் நடந்து சென்று ஒரு திருப்பத்தில் திரும்பி அந்தக் கட்டிடங்களின் பின் பகுதியை அடைந்தோம். தொங்கவிடப்பட்டிருக்கும் ஓர் ஓவியத்தின் முன்னும் பின்னும் எப்படி முற்றிலும் வெவ்வேறாக இருக்குமோ, அது போல் இருந்தது அந்தக் கட்டிடங்களின் பின் பகுதி. நகருக்குள் வந்து போகும் போக்குவரத்தின் முக்கியமான சாலை அந்தக் கட்டிடங்களின் பின்னே இருந்தது. இரண்டு கோடுகளாக வாகனங்கள் அந்தச் சாலையில் வரிசைகட்டி சென்று கொண்டிருக்க, நடைபாதைகள் பாதசாரிகளால் நிரம்பி வழிந்தன. தெருவின் இருபுறமும் இருந்த பதவிசான கடைகளைப் பார்க்கும்போது, இவற்றின் பின்னே இருப்பவை நாங்கள் சற்று முன் பார்த்த மங்கலான பழைய கட்டிடங்கள் என்பதை நம்புவது சற்று சிரமமாகத்தான் இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ம்ம்ம்... இந்தத் தெருவில் என்ன கடைகள் இருக்கின்றன என்று பார்க்கலாம். லண்டன் நகரின் துல்லியமான வரைபடத்தை என் மனதில் இருத்திக்கொள்வது என் சுபாவம். ஹாங்...அது மோர்டிமர்ஸின் புகையிலைக் கடை, அடுத்து இருப்பது நாளிதழ் கடை, அதன் பின் சிட்டி & சபர்பன் வங்கியின் கிளை, அடுத்து ஒரு சைவ ஹோட்டல், அப்புறம் கடைசியாக மக்ஃபர்லேனுடைய கோச்சு வண்டி தயாரிக்கும் இடம். அது முடிந்தால் அப்படியே அடுத்தத் தெருவிற்குப் போய்விடுகிறது. இது போதும் டாக்டர், இன்றைக்கு நம்முடைய வேலை முடிந்துவிட்டது. இனி கொஞ்சம் நாம் உல்லாசத்தைப் பற்றி நினைக்கலாம். ஒரு சாண்டவிச்சும் கொஞ்சம் காபியும் அருந்திவிட்டு வயலின் கச்சேரிக்குப் போகலாம். செந்தலைக் க்ளையண்டுகளின் புதிர்கள் எவையும் இல்லாமல் இசையும் மெலடியும் மட்டுமே அங்கே இருக்கும்".

என் நண்பர் ஹோம்ஸ் ஒரு திறமைமிக்க வயலின் கலைஞர் மட்டுமல்ல, ஒரு சிறந்த இசையமைப்பாளரும் கூட. மாலை முழுவதும் இசைக் கச்சேரியில் ரசித்து ஆழ்ந்திருந்தார் அவர். மேடையில் ஒலிக்கும் இசைக்கேற்ப அவருடைய கைகள் தாளத்தில் அசைந்தன. முகத்தில் புன்னகையோடும் கண்களில் ஒரு மெல்லிய மிதப்போடும் அங்கிருந்த ஹோம்ஸைப் பார்த்தால் யாரும் அவரை ஒரு தளர்வில்லாத, புத்தி கூர்மையுள்ள துப்பறிவாளன் என்று நம்புவது கடினமே.

இசைக் கச்சேரியில் ரசித்து ஆழ்ந்திருந்தார்
இசைக் கச்சேரியில் ரசித்து ஆழ்ந்திருந்தார்
Sidney Paget 8

கேஸுகள் எதுவுமின்றி அவருடைய அறையில் அவர் நாள்கணக்காக அடைந்து கிடைக்கும் வேளையில், புதிதாய் ஏதேனும் கிளையண்ட் அவரிடம் வரும்போது தான் அவருடைய புத்தியும் மனமும் பன்மடங்கு துல்லியமாக வேலை செய்யும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். இசையில் அவர் ஆழ்ந்து லயித்திருப்பதைப் பார்க்கும் போது, அவ்வாறு வந்த எங்கள் செந்தலை க்ளையண்ட்டின் கேஸில் அவர் குறி வைத்துள்ள குற்றவாளி தப்புவது கடினம் என்று எனக்குத் தோன்றியது.

"நீர் வீட்டிற்கு செல்ல விரும்புவீர் அல்லவா?" என்றார் ஹோம்ஸ் கச்சேரி முடிந்து வெளியே வரும் போது.

"சென்றால் நல்லது தான்", என்றேன் நான்.

"எனக்கும் சில மணி நேரத்திற்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. இந்த செந்தலை குழுமத்தின் கேஸ் சீரியஸான ஒன்று", என்றார்.

"எப்படி?"

"ஒரு மிகப் பெரிய குற்றம் நடக்கவிருக்கிறது, வாட்சன். அதை தடுக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்று நம்புகிறேன். ஆனால் இன்று சனிக்கிழமையாய் இருப்பதால் நிலைமை சற்று சிக்கலாக இருக்கிறது. இன்றிரவு உம்முடைய உதவி வேண்டியிருக்கும்".

"எத்தனை மணிக்கு?"

"பத்து மணி சரியாய் இருக்கும்".

"பேக்கர் தெருவிற்கு பத்து மணிக்கு வந்துவிடுகிறேன்".

"நல்லது. ம்... ஒரு விஷயம், வாட்சன். நிலைமை கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உம்முடைய இராணுவ ரிவால்வரை நிச்சயம் எடுத்து வாரும்", என்றவர் சட்டென்றுத் திரும்பி கூட்டத்தினுள் நுழைந்து மறைந்து போனார்.

என் சக மனிதர்களுடன் ஒப்பிடும் போது நான் யாரை விடவும் முட்டாளில்லை என்று எனக்கு நம்பிக்கை இருந்தாலும், ஹோம்ஸுடன் நான் சம்பந்தப்படும் போது என்னுடைய அறிவீனத்தைப் பார்த்து எனக்கே பல வேளைகளில் மனம் குறுகிவிடும். அப்போது உள்ள தருணம் வரையிலும் ஹோம்ஸ் பார்த்ததை நானும் பார்த்தேன், அவர் காதுகளில் விழுந்தது என் காதுகளிலும் விழுந்தது. செந்தலை குழுமத்தின் கேஸ் எனக்கு இன்னும் குழப்பமாகவும் தெளிவில்லாமலும் இருக்க, அவர் இதுவரையில் என்ன நடந்திருக்கிறது என்பதை மட்டுமல்லாது இனிமேலும் என்ன நடக்கப்போகிறது என்பதையும் கணித்து விட்டிருந்தார். அன்றிரவு எங்கே செல்லப்போகிறோம்? நான் ஏன் என் துப்பாக்கியை எடுத்து வர வேண்டும்? எங்கே சென்று என்ன செய்யப்போகிறோம்? ஜாபேஸ் வில்சனின் உதவியாளன் ஏதோ மிக ஆழமாய் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரிந்தது. என்னால் முடிந்தவரை அந்தக் கேஸைப் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். அதில் எந்தப் பலனுமில்லாததால் அதைப்பற்றி யோசிப்பதை விடுத்து வீட்டிற்குச் சென்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரவு ஒன்பதரை மணி போல் பேக்கர் தெருவின் வீட்டை அடைந்தபோது வாசலில் இரண்டு குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. உள்ளே நுழைந்து படிகளில் ஏறும் போது மேலிருக்கும் ஹோம்ஸின் அறையிலிருந்து பேச்சுக்குரல்கள் கேட்டன. அறையினுள் நுழைந்த போது அங்கே இரண்டு பேர் ஹோம்ஸுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவரைப் பார்த்தவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் ஜோன்ஸ் என்று அடையாளம் கண்டு கொண்டேன். மெலிந்த உயரமான உருவமும் சோகமான முகத்தையுமுடைய இன்னொருவரை யாரென்றுத் தெரியவில்லை.

"ஹா! எல்லோரும் வந்தாயிற்று", என்று என்னைப் பார்த்ததும் சொன்ன ஹோம்ஸ், ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு, கைத்தடி சட்டகத்திலிருந்துத் தன்னுடைய கனமான வேட்டைத் தடியை எடுத்துக்கொண்டார். "வாட்சன், உமக்கு ஸ்காட்லண்ட் யார்டின் ஜோன்ஸைத் தெரியுமல்லவா? இது மிஸ்டர். மெரிவெதர், இன்றைய இரவின் சாகசத்தில் நம்முடைய கூட்டாளி", என்று அடுத்த மனிதரை அறிமுகப்படுத்தினார்.

"இன்றிரவு வேட்டைக்கு நாம் ஜோடிகளாகச் செல்கிறோம், டாக்டர். நமது நண்பர் வேட்டையை ஆரம்பிப்பதில் கில்லாடி. என்ன, அவருக்குத் தேவையானதெல்லாம் அவர் காட்டும் விலங்கைத் துரத்திப் பிடிப்பதற்கு ஒரு வேட்டை நாய்", என்றார் ஜோன்ஸ் என்னிடம்.

"இந்த வேட்டை கானல் நீராய் போகாமல் இருந்தால் சரிதான்", என்றார் மிஸ்டர். மெரிவெதர் இருண்ட முகத்துடன்.

"மிஸ்டர் ஹோம்ஸின் மீது நீங்கள் முழு நம்பிக்கை வைக்கலாம், சார்", என்றார் பீட்டர் ஜோன்ஸ். "அவருக்கென்று அவர் தனி வழிமுறைகள் வைத்திருக்கிறார். போலீசின் வழிமுறைகளிருந்து அவை நிரம்பவே மாறுபட்டிருந்தாலும், சில வேளைகளில் எங்களை விட அவர் மிகச் சரியாகவே கேஸ்களைத் துப்பறிந்திருக்கிறார். ஷோல்டோவின் கொலை வழக்கும் ஆக்ரா பொக்கிஷக் கேசும் அதற்கு உதாரணங்கள்".

"என்னவோ, மிஸ்டர் ஜோன்ஸ், நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆனாலும் இருபத்தியேழு வருடங்களில் இது தான் முதல் முறை என்னுடைய சனிக்கிழமை சீட்டு விளையாட்டிற்கு க்ளப்பிற்கு நான் போகாமல் இருப்பது", என்று முணுமுணுத்தார்.

"இன்றைக்கு நீங்கள் விளையாடப்போவது வெறும் சில்லறைக்காக இல்லை, மிஸ்டர். மெரிவெதர். இன்றிரவு நீங்கள் விளையாடப்போவது முப்பதாயிரம் பவுண்டுகளுக்காக. ஜோன்ஸ், உங்கள் ஆட்டம் நீங்கள் வருடக்கணக்காகத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவனை நோக்கி", என்றார் ஹோம்ஸ்.

"ஜான் க்ளே, கொலைகாரன், திருடன், மோசடியாளன். அவன் இளைஞன் தான், மிஸ்டர் மெரிவெதர், ஆனால் அவனுடைய தொழிலில் அவன் தான் முதன்மையானவன். வேறு எந்தக் குற்றவாளியைப் பிடிப்பதையும் விட, இவன் கைகளில் விலங்கு மாட்டுவதே எனக்கு நோக்கம். மிகவும் வித்தியாசமானவன், இந்த ஜான் க்ளே. அவனுடைய தாத்தா ஒரு உயர் குடியில் பிறந்த பிரபு. ஜான் க்ளேவும் கூட ஈட்டன் கல்லூரியிலும் ஆக்ஸ்ஃபோர்டிலும் பயின்றிருக்கிறான். அவன் விரல்களைப் போலவே அவன் மூளையும் நிரம்பவே வேகமானது. அவனுடைய குற்றங்களின் அறிகுறிகளை நிறைய இடங்களில் நாங்கள் கண்டிருந்தாலும், இதுநாள் வரை அவனை ஒருபோதும் பிடிக்க முடிந்ததில்லை. ஒரு நாள் ஸ்காட்லாந்தில் இருப்பான், தொட்டிலைத் திருடிக்கொண்டு, மறுநாள் கார்ன்வாலில் இருப்பான், அநாதைகளுக்கு ஆசிரமம் கட்டிக்கொண்டு. வருடக்கணக்காக அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இது வரையில் அவனை இன்னும் ஒரு முறை பார்த்தது கூட இல்லை", என்றார் ஜோன்ஸ்.

Representational Image
Representational Image

"உங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தும் பெருமை இன்று எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன், ஜோன்ஸ். ஓரிரு முறை அவன் கைவரிசையை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். அதனால் அவன் தொழிலில் அவன் முதன்மையானவன் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நாம் கிளம்பினால் சரியாக இருக்கும். நீங்கள் இருவரும் முதல் வண்டியில் செல்லுங்கள். நானும் வாட்சனும் இரண்டாவதில் பின் தொடர்கிறோம்".

குதிரை வண்டியில் போகும் போது ஷெர்லக் ஹோம்ஸ் எதுவும் பேசவில்லை. அன்று மதியம் இசைக் கச்சேரியில் கேட்ட ராகங்களைத் தனக்குத் தானே சன்னமாய் பாடிக்கொண்டு வந்தார். தெருவிளக்கேற்றிய லண்டனின் தெருக்களில் சுற்றியடித்து ஃபாரிங்டன் தெருவை அடைந்தோம்.

"அருகே வந்துவிட்டோம்", என்றார் என் நண்பர். "இந்த ஆள் மெரிவெதர் ஒரு வங்கியின் டைரக்டர். அவருக்கு இந்த விஷயத்தில் பிரத்யேக சம்பந்தம் இருக்கிறது. ஜோன்ஸ் அவனுடைய தொழிலில் ஒரு வடிகட்டிய முட்டாளாக இருந்தாலும், ஒருவன் மீது அவன் கைகளை வைத்துவிட்டால் அவன் பிடி உடும்புப் பிடியாக இருக்கும். அதனால் அவனும் உடன் இருந்தால் நல்லது என்று தான் அவனையும் வரவழைத்தேன். ஆ! இதோ நாம் சேர வேண்டிய இடம். நமக்காக அவர்கள் இருவரும் காத்திருக்கிறார்கள்".

காலையில் நாங்கள் வந்திருந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த சாலைக்குத் தான் வந்திருந்தோம். எங்கள் வாடகை வண்டிகளை அனுப்பிய பின், மிஸ்டர் மெரிவெதர் வழிகாட்ட அவரைத் தொடர்ந்து ஒரு குறுகிய பாதை வழியாகச் சென்று ஒரு கதவை அடைந்தோம்.

மிஸ்டர் மெரிவெதர் ஒரு கைவிளைக்கை ஏற்றிக்கொண்டு எங்களை அழைத்துச் சென்றார்
மிஸ்டர் மெரிவெதர் ஒரு கைவிளைக்கை ஏற்றிக்கொண்டு எங்களை அழைத்துச் சென்றார்
Sidney Paget 1

மிஸ்டர் மெரிவெதர் அந்தக் கதவைத் திறந்து விட, அதன் வழி மீண்டும் ஒரு சிறிய வழியாக நடந்து ஒரு மிகப்பெரிய இரும்பு கேட்டின் முன் நின்றோம். இதையும் அவர் திறந்துவிட, அதன் உள்ளே வளைந்து நெளிந்து கீழாக இறங்கிய படிகளின் வழியே இறங்கி மீண்டும் ஒரு பெரிய கதவின் முன் வந்தடைந்தோம். மிஸ்டர் மெரிவெதர் ஒரு கைவிளைக்கை ஏற்றிக்கொண்டு எங்களை ஒரு இருண்ட, மண்வாசனை வீசும் பாதை வழியாக மூன்றாம் கதவு ஒன்றின் முன் நிற்கச் செய்தார். அந்தக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததில் அது பெரிய பெரிய மரப் பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த பாதாள அறை என்று தெரிந்தது.

"மேலிருந்து உங்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை", என்றார் ஹோம்ஸ் கைவிளக்கைத் தூக்கி சுற்றிலும் பார்த்தபடி.

"கீழேயிருந்தும் எந்த ஆபத்தும் இல்லை", என்று தரையைத் தன் கைத்தடியால் தட்டிப் பார்த்த மெரிவெதர், "அட! என்னதிது! தரை கெட்டியாக இருப்பது போல் தெரியவில்லையே!", என்றார் ஆச்சர்யத்துடன்.

"நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால் நல்லது!" என்று ஹோம்ஸ் மெரிவெதரை கடுமையான குரலில் அதட்டினார். "ஏற்கனவே நீங்கள் இந்த காரியத்தை கெடுத்துவிட்டீர்கள். இதற்கு மேலும் எதுவும் பேசாமல், எந்த சத்தமுமின்றி, அமைதியாக அந்தப் பெட்டிகள் ஒன்றின் மேல் அமருங்கள்!" என்று கடுமையான ஆனால் மெல்லிய குரலில் கூறினார் ஹோம்ஸ்.

முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு மெரிவெதர் ஒரு பேட்டியின் மேல் அமர்ந்தார். ஹோம்ஸ் உடனே தன் பாக்கெட்டிலிருந்து பூதக்கண்ணாடி ஒன்றை எடுத்துத் தரையில் பதித்திருந்தக் கற்களின் இடையே இருக்கும் கோடு போன்ற இடைவெளியை உன்னிப்பாக ஆராய்ந்தார். அவருடைய சோதனை அவருக்குத் திருப்தியளிக்கவே, சட்டென்று எழுந்து பூதக்கண்ணாடியை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

"நமக்கு இன்னும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருக்கிறது", என்றார் தானும் ஒரு பெட்டியில் அமர்ந்து கொண்டு. "நமது அடகுக்கடைக்காரர் உறங்கச் சென்ற பின் தான் அவர்கள் துணிந்து செயலில் இறங்க முடியும். அப்படி அவர் சென்றுவிட்டால் அதன் பின் அவர்கள் ஒரு நிமிடம் கூட வீணாக்க மாட்டார்கள். எவ்வளவு சீக்கிரம் அவர்கள் வேலையை முடிக்கிறார்களோ அவ்வளவு நேரம் கிடைக்கும் அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு. இந்நேரம் நீர் யூகித்திருப்பீர், டாக்டர், நாம் இருப்பது நகரின் மிக முக்கியமான வங்கிக் கிளையின் சுரங்க அறையில். மிஸ்டர் மெரிவெதர் அதன் இயக்குனர்களில் ஒருவர். அவர் தெளிவுபடுத்துவார் உமக்கு, ஏன் இந்த சுரங்க அறையின் மீது லண்டனின் தலையாயக் குற்றவாளிகளுக்கு இவ்வளவு ஆர்வம் என்று".

"எங்களின் பிரெஞ்சுத் தங்கம் தான் காரணம்", என்று மிஸ்டர் மெரிவெதர் கிசுகிசுப்பான குரலில் விளக்கினார். "அதைத் திருடுவதற்கான முயற்சிகள் நடக்கலாம் என்று எங்களுக்கு ஏற்கனவே பல எச்சரிக்கைகள் வந்தன", என்றார்.

"உங்கள் பிரெஞ்சுத் தங்கமா?"

"ஆம். சில மாதங்களுக்கு முன் எங்கள் வங்கியின் கையிருப்புகளை ஸ்திரப்படுத்துவதற்காக நாங்கள் பிரெஞ்சு வங்கியிடமிருந்து 30,000 பவுண்டுகள் மதிப்புள்ள தங்கத்தைக் கடனாக வாங்கினோம். வாங்கிய பின் அந்தத் தங்கத்தை உபயோகிப்பதற்கானத் தேவை வரவில்லையாதலால், அது இன்னமும் அப்படியே பெட்டிகளில் உறங்கிக்கொண்டிருக்கிறது. நான் அமர்ந்திருக்கும் இந்தப் பெட்டியில் 2000 தங்கக் காசுகள் ஈயத் தாள்களில் சுற்றி அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. வழக்கமாய் எங்களிடம் கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விட அதிகமான தங்கம் எங்களிடம் இப்போது இருக்கிறது. பல இயக்குனர்களுக்கு இது கொஞ்சம் நெருடலான விஷயமாகப் பட்டது".

"அவர்கள் அஞ்சியதில் நியாயம் இருக்கிறது", என்ற ஹோம்ஸ் தொடர்ந்தார். "நாம் இப்போது நம்முடைய திட்டங்களை உறுதி செய்துகொள்ளவேண்டும். இன்னும் ஒரு மணி நேரத்தில் இது அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும், மிஸ்டர் மெரிவெதர். அது வரையில் நாம் இந்த விளக்கை மூடி வைக்க வேண்டும்", என்றார்.

"என்ன! மூடி வைத்துவிட்டு இருட்டில் காத்திருக்கவேண்டுமா?" என்றார் மெரிவெதர்.

"வேறு வழியில்லை. சீட்டுக்கட்டு ஒன்றை எடுத்து வந்திருந்தேன், உங்கள் க்ளப்பில் நீங்கள் விளையாட முடியாததை இங்கே விளையாடலாம் என்று எண்ணி. ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லை. நாம் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டிருந்தால் குற்றவாளிகள் எச்சரிக்கை அடைந்துவிடுவார்கள். இவர்கள் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள். நாம் அவர்களுக்காகக் காத்திருப்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றாலும், நாம் இங்கிருப்பதை அவர்கள் பார்த்துவிட்டால், நம்மிடம் சிக்கிவிடக்கூடாது என்ற முனைப்பில் நமக்கு ஏதேனும் தீங்கு செய்ய அவர்கள் முற்படலாம். நான் இந்தப் பெட்டியின் பின் மறைந்து கொள்கிறேன். நீங்கள் அந்தப் பெட்டிகளின் பின் ஒளிந்து கொள்ளுங்கள். அவர்கள் மீது நான் விளக்கொளியை காட்டும் போது நீங்கள் அவர்கள் மீது பாய்ந்து அவர்களை பிடித்துவிடுங்கள். வாட்சன், அவர்களில் யாரேனும் துப்பாக்கியால் சுட்டால், நீர் தாட்சண்யம் பார்க்காது உமது ரிவால்வரால் அவர்களை சுட்டுத் தள்ளும்", என்றார் ஹோம்ஸ்.

Representational Image
Representational Image

நான் ஒடுங்கி பின்னால் ஒளிந்திருந்த பெட்டியின் மீது என் துப்பாக்கியை வைத்தேன். ஹோம்ஸ் கைவிளக்கின் முகப்பின் முன் இருந்த மூடியை இழுத்து விளக்கை மூடினார். கும்மிருட்டு சடாரென்றுக் கவிழ்ந்தது. விளக்கை மூடியிருந்த மூடி சூடாகும் உலோக வாசனை, மூடியின் பின்னே விளக்கு எரிந்துக் கொண்டிருப்பதை எங்களுக்கு உணர்த்தியது. என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் இருந்த எனக்கு அந்த இருட்டும், அந்த பாதாள அறையின் மக்கிய மண் வாடையும் மனச்சோர்வை ஏற்படுத்தின.

"பின்வாங்கி தப்பித்துச் செல்ல அவர்களுக்கு இருப்பது ஒரே வழி தான்", என்று கிசுகிசுத்தார் ஹோம்ஸ். "அது அந்த வீட்டின் வழியாக அதன் முன்புறம் இருக்கும் தெருவிற்குச் செல்லும் வழி. நான் சொன்னதை நீங்கள் செய்துவிட்டீர்களல்லவா, ஜோன்ஸ்?"

"வீட்டின் முன் வாசலில் ஒரு இன்ஸ்பெக்டரையும் இரண்டு கான்ஸ்டபிள்களையும் நிறுத்தி வைத்திருக்கிறேன்", என்றார் ஜோன்ஸ்.

"அப்படியெனில் எல்லா ஓட்டைகளையும் அடைத்து விட்டோம். இனி சத்தமில்லாமல் காத்திருப்பது ஒன்று தான் நாம் செய்யவேண்டியது".

என்ன ஓர் இரவாக இருந்தது அது! என்னுடைய குறிப்புகளை பிற்பாடு எடுத்துப் பார்த்ததில் அன்றிரவு கடந்த நேரம் வெறும் ஒன்றரை மணி நேரம் தான் என்று தெரிந்தது. ஆனால் எனக்கு என்னவோ இரவு முழுதும் கழிந்து விடியல் பரவ ஆரம்பித்துவிட்டது போல் இருந்தது. என் உடலும் கை கால்களும் மரத்துப் போய்விட்டன. நான் கொஞ்சம் அசைந்தாலும் அந்த சத்தம் குற்றவாளிகளை எச்சரிக்கை செய்து விடுமோ என்ற அச்சத்தில் அப்படியே உறைந்து அமர்ந்திருந்தேன். சூழ்ந்திருந்த நிசப்தத்தில் உடன் இருந்தோரின் சுவாச சத்தங்களை என்னால் துல்லியமாகக் கேட்க முடிந்தது. ஜோன்ஸின் ஆழ்ந்து இழுக்கப்பட்ட கனமான மூச்சையும், வங்கி இயக்குனரின் மெல்லிய முனைகலான மூச்சையும் என்னால் அடையாளம் காண முடிந்தது. என் இடத்திலிருந்து ஹோம்ஸ் பூதக்கண்ணாடி கொண்டு சோதனையிட்ட தரையின் பாகத்தை என்னால் பார்க்க முடிந்தது.

திடீரென்று தரையிலிருந்து என் கண்களுக்கு ஒளிக்கீற்று ஒன்று தெரிந்தது. கல் பதித்தத் தரையில் முதலில் ஒரு மங்கலான புள்ளியாக இருந்த வெளிச்சம் சில நொடிகளில் நீண்டு ஒரு மெல்லிய கோடாக மாறியது. பின் சட்டென்று எந்தவொரு சத்தமும் இல்லாமல் தரையில் இருந்த கல் விலகி அதன் அடியிலிருந்து ஒரு கை மேல் நோக்கி வந்தது. அந்த மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் ஒரு பெண்ணின் விரல்கள் போல் தெரிந்த அந்தக் கையின் விரல்கள் நீண்டு, மேல் இருந்தத் தரையைத் துழாவின. பின் சடாரென்று அந்தக் கை உள்ளிழுக்கப்பட்டு மீண்டும் ஒரு சிறிய வெளிச்சப் புள்ளி மட்டும் எஞ்சியது. சில நொடிகளில் ஒரு பெரும் சத்தத்துடன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பெரிய கல் ஒன்று புரண்டு விழ, அதன் வழியே அடியிலிருந்து விளக்கின் ஒளி பாய்ந்து வந்தது. தரையில் இருந்த அந்தப் பிளவிலிருந்து ஒரு சிறுவனைப் போல் தோற்றமளித்த முகம் ஒன்று எட்டிப்பார்த்தது. சுற்று முற்றும் பார்த்த அந்த முகம் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, முதலில் தோள் வரையிலும், பின் இடுப்பு வரையிலும் மேலெழும்பி ஒரு முழங்காலைத் தூக்கி விளிம்பில் வைத்து மேலே ஏறி வந்தது. மொத்தமாய் மேலே ஏறிய அந்த மனிதன், பின்னே திரும்பி அவனைப் போன்றே சிறிய உருவத்துடனும் செக்கச்செவேலென்ற முடியுடனும் உள்ள இன்னொருவனை மேலேத் தூக்கி விட்டான்.

"எல்லாம் சரியாக இருக்கிறது", என்றது அந்த உருவம் கிசுகிசுப்பான குரலில். "உளியும் பைகளும் வைத்திருக்கிறாய் தானே?" என்றவன் சடாரென்று, "நாசமாய்ப் போக! குதி, ஆர்ச்சி, குதி. நான் இவர்களைப் பார்த்துக்கொள்கிறேன்", என்று கத்தினான்.

ஷெர்லக் ஹோம்ஸ் தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்துத் தாவி வந்து முதலாமவனின் சட்டைக் காலரை இறுகப் பற்றினார்.

ஷெர்லக் ஹோம்ஸ் சட்டைக் காலரை இறுகப் பற்றினார்
ஷெர்லக் ஹோம்ஸ் சட்டைக் காலரை இறுகப் பற்றினார்
Sidney Paget 2

இரண்டாமவன் தோண்டியிருந்த பள்ளத்துக்குள் மறுபடியும் தாவப் பார்க்கும் போது பீட்டர் ஜோன்ஸ் அவனைப் பிடிக்கப் பார்த்ததில் அவன் உடை கிழிந்து அவர் கையோடு வர, அந்த இரண்டாமவன் கீழே குதித்து ஓடினான். விளக்கொளி துப்பாக்கிக் குழல் ஒன்றின் மீது பட்டுத் தெறிக்க, ஹோம்ஸ் தனது கைத்தடியைக் கொண்டு அதை ஏந்தியிருந்தக் கையில் ஓங்கி அடிக்க, அது 'ணங்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.

"நீ தப்பிக்க எந்த வழியும் இல்லை, ஜான் க்ளே", என்றார் ஹோம்ஸ் அவனைப் பார்த்து.

"அப்படித்தான் தெரிகிறது", என்றான் ஜான் க்ளே அலட்டிக்கொள்ளாமல். "ஆனால் என் கூட்டாளி தப்பிவிடுவான். அவனுடைய சட்டைத் துணியைத்தான் உங்களால் பிடிக்க முடிந்திருக்கிறது", என்றான் ஜோன்ஸிடம்.

"அவனுக்காக வாசலில் மூன்று பேர் காத்திருக்கிறார்கள்", என்றார் ஹோம்ஸ்.

"ஓ! எல்லாவற்றையும் மிகச் சரியாகவே செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!" என்றான் ஜான் க்ளே.

"உனக்கும் தான்! உன்னுடைய செந்தலை திட்டம் மிகவும் புதிதான, ஆனால் பலனளிக்கும் ஒன்று!"

"உன்னுடைய கூட்டாளியை சற்று நேரத்தில் நீ பார்க்கலாம். குழிக்குள் இறங்குவதில் என்னை விட அவன் கொஞ்சம் வேகமானவன். கைகளை நீட்டு, விலங்கு மாட்ட", என்று ஜோன்ஸ் கைவிலங்குகளை எடுத்து வந்தார் ஜான் க்ளேவின் கைகளில் பூட்ட.

"உம்முடைய அழுக்குப் படிந்த கைகளால் என்னைத் தொடாதேயும்", என்றான் ஜான் க்ளே, கைகளில் விலங்கு மாட்டப்படும் போது. "என் உடலில் ராஜ ரத்தம் ஓடுகிறதாக்கும். என்னை அழைக்கும் போது 'சார்' என்று அழையும்!" என்றான் ஜோன்ஸிடம்.

"அப்படியோ?" என்று முறைத்த ஜோன்ஸ், "அப்படியென்றால் மகாகனம் பொருந்திய துரை அவர்களே! தெருவிற்குச் சென்று ஒரு வண்டியைப் பிடித்து காவல் நிலையம் செல்வதற்குப் படிகளில் மேலே ஏறுகிறீர்களா?" என்றார் நக்கலாக.

"ம்... அப்படி அழையும், வருகிறேன்!", என்ற ஜான் க்ளே, எங்கள் மூவரையும் நோக்கி, இடுப்பிலிருந்து குனிந்து மிகவும் நேர்த்தியான ராஜ வணக்கம் ஒன்றை செய்துவிட்டு ஜோன்ஸுடன் அமைதியாக சென்றான்.

"உண்மையில், மிஸ்டர். ஹோம்ஸ், உங்களுக்கு எங்கள் வங்கி எப்படி நன்றி சொல்லப் போகிறது என்றுத் தெரியவில்லை. உங்களின் இந்த செயலுக்கு வங்கி எப்படி ஈடு செய்யப் போகிறது என்றும் தெரியவில்லை. மிகுந்தத் துணிகரமாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட வங்கிக் கொள்ளையை நீங்கள் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் தடுத்தும் உள்ளீர்கள்", என்றார் மிஸ்டர் மெரிவெதர் பாதாள அறையை விட்டு வெளியே வரும்போது.

"ஜான் க்ளேயுடன் தீர்ப்பதற்கு எனக்கு ஒன்றிரண்டு கணக்குகள் பாக்கி இருந்தன", என்றார் ஹோம்ஸ். "மற்றபடி இந்தக் கேஸுக்காக நான் செலவு செய்தத் தொகையை மட்டும் உங்கள் வங்கி எனக்குக் கொடுத்தால் போதுமானது. மிகவும் வித்தியாசமான இந்த செந்தலைக் குழுமக் கேஸில் நான் ஈடுபட்டதே எனக்குப் போதிய சன்மானம்", என்று பதிலளித்தார் ஹோம்ஸ்.

அதிகாலையில் பேக்கர் தெருவின் வீட்டில் விஸ்கியும் சோடாவும் கலந்த கோப்பைகளை நாங்கள் கைகளில் ஏந்திக்கொண்டிருக்கும் போது ஹோம்ஸ் செந்தலை குழுமத்தின் கேஸைப் பற்றி விளக்க ஆரம்பித்தார். "இந்த மொத்த செந்தலை குழும வேலையின் ஒரே நோக்கம் அந்த அடகுக் கடைக்காரரை அவரது வீட்டை விட்டு வெளியே அனுப்புவது தான் என்பது எனக்கு முதலிலேயேத் தெளிவாகப் புரிந்து விட்டது, வாட்சன். கொஞ்சம் விசித்திரமான முறை தான், ஆனால் இதை விட வேறு சிறந்த வழிமுறை இருக்கமுடியாது அவர்கள் நினைத்ததை சாதிப்பதற்கு. அவனுடைய கூட்டாளியின் தலை முடி நிறம் தான் ஜான் க்ளேவிற்கு இந்த யோசனையைக் கொடுத்திருக்க வேண்டும். வாரத்திற்கு நான்கு பவுண்டுகள் என்ற தூண்டிலைப் போட்டால் தான் ஜாபேஸ் வில்சனை வெளியே இழுக்க முடியும் என்பதால் அதைச் செலவு செய்ய அவன் தயங்கவில்லை. ஆயிரக்கணக்கில் கொள்ளையடிக்கப் போகிறவன் சில பவுண்டுகள் செலவு செய்வதிலா சுணங்கப் போகிறான்? இருவரும் சேர்ந்து விளம்பரத்தைக் கொடுக்கிறார்கள். ஒரு அயோக்கியன் தற்காலிகமாக ஓர் அலுவலகத்தை ஏற்பாடு செய்ய, இன்னொருவன் அவரை அந்த விளம்பரத்திற்கு பதிலளிக்க வைத்து வேலையையும் வாங்கிக் கொடுக்கிறான். இரண்டு பேரும் சேர்ந்து வார நாட்களில் காலை முழுதும் அவர் வீட்டில் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். புதிதாய் வந்த உதவியாளன் பாதி சம்பளத்திற்கு வேலைக்கு வர சம்மதித்ததாக ஜாபேஸ் வில்சன் கூறியபோதே எனக்குத் தெரிந்துவிட்டது அவனுக்கு இந்த விஷயத்தில் நிச்சயம் வலுவான தொடர்பு இருக்கிறதென்று".

"ஆனால் உங்களுக்கு அவர்களுடைய நோக்கம் என்னவென்று எப்படித் தெரியும்?"

"அந்த வீட்டில் யாரேனும் பெண்கள் இருந்திருந்தால் இது ஏதோ அவர்கள் சம்பத்தப்பட்ட விஷயம் என்று சந்தேகித்திருப்பேன். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை என்று தெளிவாகிவிட்டது. அந்தக் கடையின் வியாபாரமும் மிகச் சிறிய அளவில் தான். இவ்வளவு பணம் செலவு செய்து இத்தகைய பரந்த ஏற்பாடுகள் செய்யும் அளவிற்கு அவருடைய வீட்டில் வேறு ஏதும் விஷயங்களும் இல்லை. ஆகையால் வீட்டினுள் எதுவும் இருக்காது என்று யூகித்தேன். அப்படியென்றால் வீட்டின் வெளியே தான் ஏதோ விஷயம் இருக்கவேண்டும். அது என்னவாக இருக்கும்? ஜாபேஸ் வில்சன் தன்னுடைய உதவியாளனுக்கு புகைப்படம் எடுப்பதிலும் எடுத்த படங்களை பாதாள அறையில் சென்று டெவெலப் செய்வதிலும் இருக்கும் ஆர்வத்தைப் பற்றிக் கூறிய போது முடிச்சு அவிழ்ந்தது. அப்புறம் தான் அவனைப் பற்றி விசாரித்தேன். அப்போது தான் தெரிய வந்தது லண்டனின் கிரிமினல் உலகின் தலை சிறந்த கிரிமினலுடன் மோதிக்கொண்டிருக்கிறேன் என்று. பாதாள அறையில் மாதக்கணக்காக, பல மணி நேரங்கள் தொடர்ந்து அவன் ஏதோ செய்து கொண்டிருக்கிறான் என்பதை வைத்துப் பார்க்கும் போது, அவன் அந்த வீட்டின் அடியிலிருந்து வேறு ஏதோ இடத்திற்கு சுரங்கம் தோண்டுகிறான் என்பது புரிந்துவிட்டது.

Representational Image
Representational Image

"இவ்வளவு விஷயங்களும் எனக்கு ஜாபேஸ் வில்சனின் கடைக்கு செல்வதற்கு முன்னாலேயேத் தெரிந்துவிட்டது. நான் அந்தக் கடையின் முன் தெருவில் என் கைத்தடியை வைத்துத் தட்டியபோது நீர் ஆச்சர்யப்பட்டீர் அல்லவா? அவன் தோண்டிய சுரங்கம் அந்த வீட்டின் முன்புறமா அல்லது பின்புறமா என்று பார்பதற்காகத் தரையைத் தட்டினேன். அப்படி சோதித்ததில் அது முன்புறம் இல்லை என்று தெரிந்தது. அதன் பின் தான் அந்தக் கடையின் அழைப்பு மணியை அழுத்தினேன். நான் நினைத்தது போலவே அந்த உதவியாளன் தான் கதவைத் திறந்தான். இதற்கு முன் சில கேஸ்களில் நாங்கள் இருவரும் மோதியிருந்தாலும் ஒருவரை ஒருவர் இதுவரைப் பார்த்ததில்லை. ஆனால் அவன் முகத்தை நான் பார்க்கவில்லை. நான் பார்க்க விரும்பியது அவனுடைய கால் சராயின் முழங்கால் பகுதியைத்தான். அவை எவ்வளவு தேய்ந்து அழுக்கு அப்பி இருந்தன என்று நீரே கவனித்திருப்பீர். அவன் மணிக்கணக்காக சுரங்கம் தோண்டுவதை அவை உறுதி செய்தன. இனி மீதம் இருந்ததெல்லாம் அவன் எதற்காக சுரங்கம் தோண்டுகிறான் என்பது தான். அந்தக் கடையின் பின் பகுதிக்கு சென்று அங்கே சிட்டி & சபர்பன் வங்கியின் கிளை இருப்பதைப் பார்த்ததும் அத்தனையும் எனக்கு விளங்கிவிட்டது. கச்சேரி முடிந்து நீர் வீட்டிற்குச் சென்ற பின் நான் ஸ்காட்லண்ட் யார்ட் சென்று ஜோன்ஸிடம் தகவல் தெரிவித்து விட்டு, பின் வங்கி இயக்குனர்களின் சேர்மனையும் பார்த்து நிலமையைத் தெளிவாக்கி விட்டு, செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டு வந்தேன். அதன் விளைவைத் தான் நீர் சற்று முன் பார்த்தீர்".

"ஆனால் அவர்கள் இன்றிரவு வங்கியைக் கொள்ளையடிக்க முயலுவார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

"அவர்கள் செந்தலை குழுமத்தை மூடியதும் எனக்குப் புரிந்தது அவர்களுக்கு ஜாபேஸ் வில்சனை அதற்கு மேலும் கடையிலிருந்து வெளியே அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என்று. அப்படியென்றால் அவர்களின் சுரங்கப் பாதை தோண்டும் வேலை முடிந்துவிட்டது என்று புரிந்துபோயிற்று. அந்தப் பாதை கண்டுபிடிக்கப்படும் முன்னரும், வங்கியில் இருந்தத் தங்கம் அகற்றப்படும் முன்னரும் அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சனிக்கிழமை அவர்களுக்கு வசதியான நாளாக இருக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால் அவர்கள் திருடிக்கொண்டு தப்பியோடுவதற்கு இரண்டு நாட்கள் கிடைக்குமல்லவா?திங்கட்கிழமை வங்கி திறந்த பின் தானே திருட்டு கண்டுபிடிக்கப்படும்?"


மிக அற்புதமாகக் கணித்தீர்கள், ஹோம்ஸ்", என்றேன் நான் என் குரலில் வெளிப்பட்ட வியப்பை மறைக்க இயலாமல். "எவ்வளவு நீள சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகள்! ஆனால் அத்தனையையும் துல்லியமாகக் கோர்த்தீர்கள்!", என்றேன் நான் வியப்பு அடங்காமல்.

"அன்றாட வாழ்வின் சலிப்பிலிருந்து கொஞ்ச நேரம் இந்த கேஸ் என்னைக் காப்பாற்றியது", என்றார் ஹோம்ஸ் கொட்டாவி விட்டுக்கொண்டே. "என் மொத்த வாழ்வும் இந்த சாதாரண வாழ்வின் பிடியிலிருந்துத் தப்பிப்பதிலேயேக் கழிகிறது. இந்த மாதிரி கேஸ்கள் என்னை அதிலிருந்து சற்று நேரமேனும் மீட்டெடுக்கின்றன".

"மனித குலத்திற்கு உபகாரம் செய்வதாகவும் ஆயிற்று", என்றேன் நான்.

"ஏதோ, சிறிதேனும் உதவியாயிருந்தால் சரிதான்", என்றபடி தோள்களைக் குலுக்கினார் ஹோம்ஸ்.

முற்றும்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism