Published:Updated:

அப்பா! - சிறுகதை

Representational Image ( Photo by Simon Reza on Unsplash )

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டான் குணாவின் தம்பி தீபன். “மார்க் எவ்ளோ..” என்று நச்சரித்தவர்களிடம், "கோட்டவுட்டுட்டான்... இவன கல்லு மண்ணு சுமந்து படிக்க வச்சதுக்குப் பதிலா வாடா வேலைக்குனு இழுத்துட்டு வந்து விட்ருக்கனும்..." என்று கோபம் பொங்கப் பதில் அளித்தான் குணா.

அப்பா! - சிறுகதை

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டான் குணாவின் தம்பி தீபன். “மார்க் எவ்ளோ..” என்று நச்சரித்தவர்களிடம், "கோட்டவுட்டுட்டான்... இவன கல்லு மண்ணு சுமந்து படிக்க வச்சதுக்குப் பதிலா வாடா வேலைக்குனு இழுத்துட்டு வந்து விட்ருக்கனும்..." என்று கோபம் பொங்கப் பதில் அளித்தான் குணா.

Published:Updated:
Representational Image ( Photo by Simon Reza on Unsplash )

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் ஒரு குடும்பம் அழுதுகொண்டிருக்க, இன்னொரு குடும்பம் சிரித்துக் கொண்டிருந்தது.

அழுதுகொண்டிருந்த குடும்பம் குணாவின் குடும்பம். சேலத்திலிருந்து வடக்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறது அவனுடைய குடும்பம். கூலித்தொழிலாளிகளான தங்கராசுக்கும் துளசிக்கும் பிறந்த குணா, எட்டாம் வகுப்பு படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டதால் தற்போது கொத்தனார் வேலை செய்து வரும் முப்பத்தி மூன்று வயது பிரம்மச்சாரி. தண்ணி தம் என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அப்படி இருந்தும் அவனுக்குப் பெண் கிடைக்கவில்லை. பார்க்காத ஜோசியர் இல்லை ஏறாத கோவில் இல்லை. ஆனாலும் பொருத்தம் கூடவே இல்லை. ஒருபக்கம் திருமணம் ஆகாத சோகம் என்றால் மறுபக்கம் தன் உடன் பிறந்த தம்பியை இழந்த சோகம். அதனாலயே அவன் முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்பட்டது.

அப்பா! - சிறுகதை

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டான் குணாவின் தம்பி தீபன். “மார்க் எவ்ளோ... மார்க் எவ்ளோ...” என்று நச்சரித்தவர்களிடம், "கோட்டவுட்டுட்டான்... இவன கல்லு மண்ணு சுமந்து படிக்க வச்சதுக்குப் பதிலா வாடா வேலைக்குனு இழுத்துட்டு வந்து விட்ருக்கனும்..." என்று கோபம் பொங்கப் பதில் அளித்தான் குணா. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் கிட்டத்தட்ட அப்படியே பேசினார்கள். தீபனுக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகள் யார் வாயிலிருந்தும் வரவே இல்லை.

அன்று இரவு பேய்க்காற்று வீசியது. வீட்டு அருகே இருந்த தென்னை மரங்கள் தலைவிரித்து ஆடியது. கரண்ட் அடிக்கடி கட் ஆகி வந்தது. குணாவின் மனதுக்குள் அந்த இரவு எதோ ஒரு கெட்ட சகுனத்தைக் காட்டிக்கொண்டே இருந்தது. வீடு எளிய குடும்பத்துக்கே உண்டான அமைப்புடையது என்றாலும் சர்வர் சுந்தரம் படத்தில் வருவது போல் படிக்கும் அறை என்று தீபனுக்குத் தனியாக ஒரு அறை இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் தம்பி மீது அவனுக்கு அவ்வளவாகப் பாசம் இல்லை என்றாலும், அவன் தன்னைப்போல் கூலி வேலைக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் குணா. அந்த இரவில், படிக்கும் அறையில் லைட், ஃபேன் என்று எதையும் போடாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இரவு எட்டு மணிக்கே வெறுந்தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் தீபன். அவனை எழுப்பி சாப்பிட வைத்துவிட்டு அவன் அருகே படுக்கச் சென்றான் குணா. ஆனால் தீபனோ, "என்ன திடீர்னு எம்பக்கத்துல வந்து படுக்குற... நா எதாவது செஞ்சுக்குவேன்னு பயப்படுறியா... நான்லாம் எதுவும் பண்ணிக்க மாட்டேன்... நீ எங்கூட படுக்காத..." என்று விரக்தியுடன் குணாவை விரட்டினான். சிறிது நேரம் கழித்து துளசி அவனருகில் படுக்கச் செல்ல அவளையும் விரட்டினான். அவனுடைய அறைக்குள் அவன் மட்டும் தனியாகப் படுத்து உறங்க, குணாவுக்கும் துளசிக்கும் மனம் திக்திக் என்று அடித்துக் கொண்டது.

அப்பா! - சிறுகதை

இருவரும் உறங்க முடியாமல் தவித்தனர். இரவு பதினொரு மணியளவில் தங்கராசு, தள்ளாடியபடியே வீட்டிற்குள் நுழைந்தான். அவ்வளவு போதை. வீட்டிற்குள் நுழைந்தவன் சோத்துக் குண்டாக்களை உருட்டி எடுத்து வயிற்றை நிரப்பிக் கொண்டான். அவன் சாப்பிட்ட இடத்தில் பருக்கைகள் இரைந்துக் கிடந்தது. வயிற்றை நிரப்பிக் கொண்டவன் தீபனின் படிக்கும் அறைக்குப் பக்கத்திலயே கயிற்றுக்கட்டிலைப் போட்டு படுத்து உறங்கத் தொடங்கினான். அதுவரைக்கும் படிக்கும் அறையிலிருந்து சற்று தள்ளிப் பாயில் படுத்து விழித்துக் கொண்டிருந்த துளசி, “அதான் அந்த மனுசன் பக்கத்துலயே படுத்துருக்காப்ல இல்ல... இனி எதுக்கு மனசப் போட்டு தேவையில்லாம குழப்பிக்கிட்டு... தூங்குனா தான் நாளைக்கு ஒழுங்கா வேல செய்ய முடியும்...” என்று சொல்ல, துளசிக்குச் சற்று அருகே வேறொரு பாயில் படுத்திருந்த குணாவுக்கும் அதுதான் சரியாகப் பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளியே வீசிய பலத்த காற்று அடங்கிப் போயிருந்தது. இரவு நேரத்தில் புற்பூடுகளில் பதுங்கிக் கொண்டு சத்தம் எழுப்பும் பூச்சிகள் மட்டும் தங்களது வேலையைச் சரியாகச் செய்து கொண்டிருந்தன. எட்டு மணிக்கே தூங்கிவிட்டதால் பின்னிரவு இரண்டு மணி அளவில் தீபனுக்குத் தூக்கம் தெளிந்தது. அந்த இரைச்சல் இல்லாத இருளடர்ந்த அமைதியான சூழல் அவனது தவறான முடிவுக்கு உறுதுணையாக இருந்துவிட்டது. நாற்காலி பட்டென்று கீழே விழும் சத்தம், தாமதமாக உறங்கச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குணாவையும் துளசியையும் எழுப்பவில்லை. மாறாக தங்கராசு எழுந்து தீபனின் அறைக்குள் சென்றான்.

அந்த அறையின் நடுவே இருந்த ஃபேனில் சுருக்குப்போட்டுக்கொண்ட தீபனின் கால்கள் துடித்துடிக்க, போதையில் இருந்த தங்கராசோ சுய நினைவின்றி அந்த அறையின் சுவரில் நிதானமாக மூத்திரம் பெய்தான். அவன் மூத்திரம் பெய்து முடித்த நேரமும் தீபனின் கால்கள் துடிதுடித்து ஓய்ந்த நேரமும் கனக்கச்சிதமாக இருந்தது.

suicide
suicide

திரும்பி தன் படுக்கைக்கு வர முற்பட்ட தங்கராசு, வழியில் தொங்கிக்கொண்டிருந்த தீபனின் உடலை மளிகைக் கடையில் தொங்கிக்கொண்டிருக்கும் வாழைத்தாரைத் தள்ளுவது போல் மிக அலட்சியமாகத் தள்ளிவிட்டு படுக்கையில் விழுந்து உறங்கத் தொடங்கினான். அன்று காலை நான்கு மணி அளவில் துளசி எழுந்து சென்று தீபனின் அறையைப் பார்த்துக் கொடுத்த அதிர்ச்சிக்குரலில், அந்தச் சுற்றுவட்டாரமே தூக்கம் கலைந்து அவர்கள் வீட்டை நோக்கிப் பதற்றமாக ஓடி வந்தது.

துளசி, தனது தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு "வுட்டுட்டனே... என் சாமிய வுட்டடிச்சுட்டனே..." என்று கதறினாள். தங்கராசு, மொட்டை அடித்துக்கொண்டு கண்கள் சிவந்து காணப்பட்டான். குணாவுக்கு ஒரே நாளில் எல்லாம் முடிந்து போனது போல் இருந்தது. இந்தக் குடிகாரனை நம்பி உறங்கிவிட்டதால், அநியாயமாக தீபனின் உயிர் பறிபோய்விட்டதை எண்ணி மனதுக்குள் குமறிக்கொண்டான்.

தனது ஹீரோ ஹோன்டா ஸ்பெலண்டர் பைக்கில் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் இதே சிந்தனையுடன் தான் சென்றான். அந்தச் சிந்தனைகளிலயே, ஒரு முறை வடக்கே பயணிக்க வேண்டியவன் தெற்கே நெடுந்தூரம் சென்றுவிட்டான். பிறகு சுதாரித்து பைக்கைத் திருப்பிக்கொண்டு வடக்குப் பக்கம் விரைந்தான். இவனுடைய இந்தக் குழப்பமான மனநிலையை புங்கமரத்தடி புண்ணியம் தொடர்ந்து கவனித்து வந்தார்.

புண்ணியம் ஓய்வுப்பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். இப்போது உடல் தளர்ந்து ஊருக்கு நடுவே இருக்கும் புங்கமர நிழலே கதி என்று கல்கட்டிலயே படுத்துக் கிடக்கிறார். அன்று மாலை குணா வேலை முடிந்து வீடு திரும்புகையில், "ஏய் தம்பி... ஓய்..." என்று கைதட்டி அவனை அழைத்தார். அவன் வந்த ஐம்பது கிலோமீட்டர் வேகத்திற்கு பைக்கை சட்டென்று நிறுத்த முடியாமல் சிறிது தூரம் சென்று நிறுத்தி, பைக்கைத் திருப்பிக்கொண்டு வந்து புங்கமரத்தடியில் நிறுத்தினான்.

Representational Image
Representational Image
Photo by amol sonar on Unsplash

பைக்கில் அமர்ந்தபடியே "என்னங்" என்றான் மரியாதை கலந்த தொனியில். அவர், கல்கட்டில் விழுந்துகிடந்த புங்கம்பூக்களை தனது தோளில் கிடக்கும் துண்டால் விசிறி அடித்துவிட்டு, "உங்கட்ட பேசனும்... இப்படி உட்காரு..." என்று அவனை அருகே வரும்படி அழைத்தார். “நம்மட்ட இவரு என்ன பேசப்போறாரு, ஊர்க்காரரே தவுர ஒருவாட்டிகூட இவர்ட்ட எதுவும் பேசுனது இல்ல” என்று அவன் தன் மனதுக்குள் எண்ணிக்கொண்டு பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவர் அருகே தயக்கத்துடன் அமர்ந்தான்.

"இப்ப எப்படி கண்ணு உடம்பு எல்லாம் பரவாலையா... வேல பரவாலயா..." என்று மென்மையாக நட்புப் பாராட்டும் தொனியில் புண்ணியம் வினவ… "ஆங்... பரவாலங்..." என்று லேசான பதட்டத்துடன் பதிலளித்தான். அவனுடைய பதிலைத் தொடர்ந்து, லேசான சோகக்குரலில் "உன் தம்பிக்காரன் இப்படி பண்ணிக்குவான்னு நான் நினச்சுக்கூட பாக்கலப்பா... பாவம்... அவன் மனசுக்குள்ள என்ன நினச்சானோ... அவன் பெயிலானது எனக்குத் தெரியாம போயிடுச்சு, இல்லனா நா ஆறுதல் சொல்லி அவன தேத்தி விட்ருப்பேன்... எல்லாம் நேரமடா... இனி உன் நிலமய நினைச்சா தான் பயமா இருக்கு...

ஆயி அப்பனத்தாண்டி நமக்கு எதாச்சும் ஒன்னுனா உடனே முன்னாடி வந்து நிக்க கண்டிப்பா ஒரு உடம்பொறப்பு வேணுமில்லயா... சும்மாவா சொன்னாங்க தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு... இப்ப தம்பிக்காரனும் இல்லாம போயிட்டான்... இன்னும் நீ கல்யாணமும் முடிச்சுக்கல... ஆயி அப்பன்லாம் இன்னும் எவ்வளவு வருசம் கூட இருப்பாங்களோ... அதுக்குள்ள நீ உனக்குன்னு ஒரு குடும்பத்த உருவாக்கிக்கு... அதுக்கு இனிமே உங்கப்பங்காரன் தொண வேணும்... இனிமே அந்த நாய குடிக்காம பாத்துக்க நீ... நானே கூப்ட்டு, ஏன்டா... பையனே எந்தக் கெட்டப்பழக்கமும் வச்சுக்காம அங்க இங்கனு நாய் மாதிரி அலஞ்சிட்டு இருக்கான்... உனக்கு என்னடா எந்நேரமும் போத வேண்டியது கிடக்குதுனு சத்தம் போட்டுவுடலாம்னு பாத்தேன்... ஆளு கண்லயே பட மாட்டிங்குறான்... இனிமே நீ தான் எல்லாத்தயும் பாத்துக்கனும்... நீ நல்லா பொழைக்கனும்னா அப்பன் பலமா இருக்கனும்... அதுக்கு அவன் குடிய விடனும்... பாத்து பக்குவமா உங்கப்பன்ட்ட எடுத்துச்சொல்லி நல்லா பொழைக்குற வழியப்பாரு... ம்ம் நீ எதுவும் போட்டு குழப்பிக்காம தெளிவா இரு... வண்டில போறப்ப கவனமா இரு... இருட்டு கட்டிருச்சு... பாத்துப் போ..." என்று இடைவிடாமல் ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். அவர் பேசியதை பதிலேதும் பேசாமல் தலையை மட்டும் அசைத்து கேட்டுக்கொண்ட குணாவுக்கு அவர் கூறியது அனைத்தும் சரியாகவே பட்டது. “வரங்” என்று அவரிடமிருந்து விடைபெற்றான்.

மது
மது

வீட்டிற்குள் நுழைந்தான் குணா. தங்கராசு, தன்னுடைய வீட்டு அருகே உள்ள குறுகிய சந்தில் அமர்ந்து குடித்துக்கொண்டு இருந்தான். அதைப் பார்த்ததும் குணாவுக்கு கோபம் உச்சம் தொட்டது. அந்தச் சந்தில் அமர்ந்துதான் தங்கராசு எப்போதும் குடித்துக் கொண்டிருப்பான். குடித்து முடித்த காலிப்பாட்டில்கள் அங்கு மலைபோல் குவிந்துக் கிடக்கும்.

தங்கராசுவிடம் மிக வேகமாக நெருங்கி அங்கிருந்த அனைத்து பாட்டில்களையும் தூக்கி அருகே இருந்த கல்லில் வீசினான். பாட்டில்கள் அனைத்தும் பட் பட்டென்று உடைந்து சுக்கு நூறாகப் போனது. துளசி என்ன நடக்குது என்று புரியாமல் உறைந்து நிற்க, போதையில் கோபக் கண்களுடன் குணாவைப் பார்த்தான் தங்கராசு.

"நீ பாட்டில உடைச்சா எனக்கு வேற வழியில்லயா..." என்று எரிச்சலாகப் பேசிவிட்டு தனது டிவிஎஸ் பிப்டியைத் தள்ளி தள்ளி ஸ்டார்ட் செய்து ஒயின்ஷாப்புக்கு விரைந்தான். அங்கிருந்து போதையுடன் வீடு திரும்பியவன், சமையலறையில் இருந்த ஒரேயொரு பழுத்த வாழை இலையை விரித்து தனக்குத் தானே பரிமாறிக்கொண்டு உணவருந்தினான்.

வழக்கம்போல சோற்றுப் பருக்கைகள் இலையைச் சுற்றிலும் இரைந்துக் கிடந்தது. சாப்பிட்டு முடித்தவன் கையைக் கழுவிவிட்டு, சாப்பிட்டு முடித்த அந்த வாழை இலையையும் தட்டைக் கழுவுவது போலக் கழுவி வீட்டிற்குள் பத்திரப்படுத்தி வைத்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த துளசிக்கும் குணாவுக்கும் தங்கராசை அப்படியே கண்டந்துண்டமாக வெட்டி எரிந்துவிடலாமா என்றிருந்தது.

அடுத்தநாள் காலை எழுந்து மூவரும் வேலைக்குக் கிளம்பத் தொடங்கினர். தங்கராசு வீட்டைவிட்டு கிளம்பும் முன்னே, குணா அவனை வழிமறித்து, "ப்பா... இனிமே குடிக்காத... அப்டியே அந்த பீடி குடிக்கறதையும் வுட்டடிச்சிடு..." என்றான் பொறுமையாக. தங்கராசுக்கு தண்ணி அடிப்பது போலவே ஒரு நாளைக்கு பத்து பீடியாவது ஊதித்தள்ளுவதும் பிடித்தமான செயல்.

மது விலக்கு
மது விலக்கு

அன்று மாலை வேலைமுடிந்து வீட்டுக்கு வருகையில் வழக்கம்போல தள்ளாடியபடி டிவிஎஸ்ஸை உழட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் தங்கராசு. "சொன்னா கேக்குற ஜென்மமா இருந்தா தான ஆவும்... குடிச்சு குடிச்சு மூளை மழுங்கிக் கிடக்குது கருமம்... ஒரு வாட்டி சொல்லும்போதே கேட்டுக்கிட்டா பரவால... குடிக்காத குடிக்காதனு ஓயாம காலப் பிடிச்சு தொங்கிட்டே இருக்க முடியுமான்ன... எப்படியோ போய்த் தொலையட்டும்..." என்று மீண்டும் அன்று மாலை குடித்துவிட்டு வந்த தங்கராசுவைப் பார்த்து குணா தலையில் அடித்துக்கொள்ளாத குறையாகப் புலம்பித் தள்ளினான். இதற்கு முன்னே துளசி பலமுறை பலவிதமாகத் தங்கராசிடம் குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறாள். அப்போதெல்லாம் கேட்காதவன் மகன் சொன்ன பிறகாவது குடியை விட்டொழித்துருக்க வேண்டும். அப்போதும் அவன் கேட்பதாய் இல்லை.

சரியாக ஆறு மாதங்களில் தங்கராசு கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டான். இந்த ஆறு மாதங்களில் கூட குணாவுக்கு ஒரு பொருத்தமும் கூடி வரவில்லை. வயிற்று வலியால் வேலைக்குப் போக முடியாமல், "அய்யோ... அம்மா... வலி உயிர் போகுதே... ஸ்ஸ்...ப்பா... அய்யய்ய... முடியலடா சாமி..." என்பதையே மூச்சிரைக்க திரும்பத் திரும்பப் புலம்பிக் கொண்டிருந்தான். சாதாரண வயிற்று வலியாகத் தான் இருக்கும் என்று சேலம் அரசு மருத்துவமனைக்கு அவனை தூக்கிக்கொண்டு விரைந்தனர் அவனுடைய குடும்பத்தினரும் நெருங்கிய உறவினரும். அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களாகக் கிடந்தும் என்னப் பிரச்சினை என்று தெரியாமல் இருந்தனர். அவ்வப்போது நர்ஸ் வந்து வலிக்காமல் இருக்க ஊசி போட்டுச் சென்றார். கேட்கும் கேள்விக்கெல்லாம், "டாக்டர் இப்ப வந்துருவாரு... எதா இருந்தாலும் அவரு தா சொல்லனும்..." என்று பறக்கப்பறக்க பதிலளித்தபடி மற்றொரு நோயாளியைக் கவனிக்கச் சென்றார் அந்த நர்ஸ். மூன்றாவது நாள் காலையில் டாக்டர் வந்து தங்கராசுக்கு மார்பு, வயிற்றுப்பகுதிகளை ஸ்கேன் எடுக்கச் சொன்னார். ஸ்கேன் ரிப்போர்ட் அன்று மதியமே வந்துவிட, "பிரச்சினை கொஞ்சம் தீவிரமா இருக்கு... இங்க வச்சு பாக்குறது சரி வராது... தனியா பாத்தாதான் சரி வரும்... தனியா பாக்குற மாதிரி இருந்தா நான் சொல்ற ஆஸ்பத்திரில போய் பாருங்க..." என்று என்ன பிரச்சினை என்பதை தெளிவாகச் சொல்லாமல் லாபநோக்கத்தில் அங்கிருந்து தன்னுடன் கூட்டு வைத்திருக்கும் அந்தப் பிரபல தனியார் மருத்துமனைக்கு விரட்டிவிட்டார் அந்த டாக்டர்.

குணாவின் குடும்பம் அந்த தனியார் மருத்துவமனைக்குள் நுழையும் போது, ராஜேஷின் குடும்பமும் அந்த மருத்துமனைக்குள் நுழைந்தது. குணா குடும்பம் இரண்டாவது தளத்தில் இருக்க, ராஜேஷ் குடும்பம் மூன்றாவது தளத்தில் இருந்தது. உள்ளே நுழைந்ததிலிருந்து விடாமல் மருந்து சீட்டுகளை குணாவின் கையிலும், ராஜேஷின் கையிலும் தந்துகொண்டே இருந்தார்கள் அங்கு இருந்த நர்ஸ்கள். ஒரு நாளைக்குள் குணாவும் ராஜேஷும் பலமுறை தரைத்தளத்தில் இருக்கும் மெடிக்கலுக்கும் தங்களுக்குரிய தளத்திற்கும் அலைந்தனர். லிப்ட் வசதி இருந்தும் அது நோயாளிகளுக்கு மட்டுமே என்ற விதி இருந்ததால் இவர்கள் இருவருமே படிக்கட்டுகளில் நடந்து தான் சென்றனர். பல மணி நேரங்களுக்குப் பிறகு ஒரு குடும்பம் அழத்தொடங்க, மற்றொரு குடும்பம் சிரிக்கத் தொடங்கியது. சிரித்துக் கொண்டிருந்த குடும்பம் ராஜேஷின் குடும்பம்.

Representational Image
Representational Image

ராஜேஷ் திருமணம் ஆன முப்பத்தி மூன்று வயது குடும்பஸ்தன். ஆனால் பிள்ளைப்பேறு இல்லை என்ற மன உளைச்சல் இதுவரைக்கும் அவனை பாடாய்ப்படுத்தியது. சேலத்திலிருந்து தெற்கே முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகரிக வளர்ச்சியடைந்து வரும் கிராமத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரியில் சொந்தமாகக் கேண்டீன் நடத்தி வருகிறான் கேட்டரிங் முடித்திருக்கும் ராஜேஷ். கல்லூரிக்கு உள்ளேயே கேண்டீன் என்பதால் வருமானத்துக்குப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒரு மனிதனுக்குப் பிரச்சினையும் மன உளைச்சலும் எதாவது ஒரு ரூபத்தில் கண்டிப்பாக வந்தாகனுமே. ராஜேஷ்க்கு அது குழந்தையின்மைப் பிரச்சினை என்ற ரூபத்தில் வந்தது. நெசவுத்தொழில் செய்து வரும் அவனுடைய பெற்றோருக்கு அவன் ஒரே மகன் என்பதால், இருபத்தி நான்கு வயதிலயே மகேஸ்வரியுடன் திருமணம் கூடிவிட்டது. ஆனால் ஒன்பது வருடங்கள் ஆகியும் குழந்தைப் பிறக்காதது அவனுடைய குடும்பத்தாருக்குக் கடும் மன உளைச்சலை உண்டாக்கியது. பார்க்காத டாக்டர் இல்லை, ஏறாத கோவில் இல்லை. அங்க இங்க என்று நாற்பத்தொன்பது டாக்டர்களைப் பார்த்திருப்பார்கள். அனைவருமே, "உங்க ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்சனயும் இல்ல..." என்று ஒரே மாதிரியே கூறினார்கள். சொந்தக்காரர் ஒருவர் சொன்னதன் பேரில் அன்று ஐம்பதாவதாக ஒரு டாக்டரைப் பார்க்கச் சென்றனர். அவரும் மற்ற டாக்டர்கள் கூறிய அதே பதிலைத்தான் கூறினார். விரக்தியுடன் தங்களுடைய தனிக்குடித்தன வீடு வந்து சேர்ந்தனர் ராஜேஷும் மகேஸ்வரியும்.

திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்து, முதல்முறையாக ஒரு உண்மையைத் தன் கணவனிடம் அன்று சொல்லத் துணிந்தாள் மகேஸ்வரி.

"ஏங்க... உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்... இத நா நம்ப கல்யாணத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட சொல்லிருக்கனும்... ஆனா மறச்சுட்டேன்..." என்று தயங்கி தயங்கி பேசத் தொடர்ந்தாள்.

"அப்பிடி என்ன எங்கட்ட மறச்ச..." என்று லேசான முறைப்புடன் ராஜேஷ் வினவ,

"நீங்க என்னய அடிச்சுக் கொன்னு போட்டாலும் பரவால... இனியும் இத சொல்லாம இருந்தா அது ரொம்ப பெரிய பாவம்..." என்று மீண்டும் தயங்கினாள். முகத்தில் பயம் விரவிக்கிடந்தது. வெள்ளையான அவளுடைய முகம் அச்சத்தில் சிகப்பு நிறமாக மாறி இருந்தது. அவளுடைய முகத்தை வைத்து அவள் எதோ முக்கியமான விசியம் சொல்லப்போகிறாள் என்பதை புரிந்துகொண்டான் ராஜேஷ்.

"நா எங்கவூர் கவுர்மெண்ட் ஸ்கூல்ல ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தப்ப... எங்க ஸ்கூல்ல தர்மலிங்கம்னு ஒரு பயாலஜி வாத்தியார் இருந்தாரு... ஒரு நா பள்ளிக்கூடம் முடிஞ்சு சாய்ந்தர நேரம் அவரு என்னைய மட்டும் தனியா ஒரு ரூமுக்கு கூட்டிட்டுப் போயி என்னை பாலியல் வன்புணர்வு செய்தாரு... நா படிச்ச காலத்துலலாம் வாத்தியாருக்குப் பயந்து மிரண்டுபோய் அவரு எதுக்க மூச்சுடுறதுக்குக்கூட தைரியமில்லாம இருந்தேன்... சில நாள் கழிச்சு நா உண்டானத அவர்ட்ட சொன்னே... எதேதோ இங்கிலீஷ் மாத்தரய வாங்கித்தந்து கருவ கலச்சுப்புட்டாரு... அவர்கூட அப்படி இருந்தாதான் பாஸ் பண்ணமுடியும்னு சொல்லி மிரட்டுனாரு... ஆனா அது எவ்ளோ பெரிய விசியம்னு கல்யாணமாயி கொழந்தயப் பத்தி யோசிக்கும்போதுதான் புரிஞ்சுது... சின்ன வயசுலயே உண்டாயி கருவ கலச்சதால தான் எனக்கு இப்ப பிரச்சன வரு...த..." என்று பயத்துடன் எச்சில் விழுங்கி விழுங்கி பேசி முடிப்பதற்குள்,

கோபத்தின் உச்சிக்குச் சென்ற ராஜேஷ், தனது பெல்ட்டைத் தேடி எடுத்து, "ஏன்டி திருட்டு சனியனே... இத்தன வருசமா நா குழந்தை இல்லயேன்னு நாய் மாதிரி அலஞ்சிட்டு இருக்கேன்... நீ இப்ப வந்து இவ்வளவு அசால்ட்டா சொல்ற... இன்னும் என்னவெல்லாம் மறச்சிருக்க... என்னப்பாத்தா இளிச்சவாப்பய மாதிரி தெரியுதாடி" என்று சரமாரியாக அவளைத் தாக்க தொடங்கினான். அவன் அடித்த அடிகள் அத்தனையையும் துளி சத்தம் போடாமல் அவள் வாங்கிக்கொண்டாள். அவளுடைய தலைமுடி கலைந்து முகத்தில் விரவிக் கிடக்க, உடல் முழுக்க வியர்த்து கொட்டியது. உடலில் ஆங்காங்கே தடித்து காணப்பட்டது. அடிவாங்கியபடி மூலையில் குந்தவைத்து அமர்ந்திருந்தவள், நடுக்கமான குரலில் பேசத் தொடங்கினாள்

child abuse
child abuse

"நா என்ன... வேணும்னேவா செஞ்சேன்... அப்பல்லாம்.... எனக்கு என்ன ஏதுன்னு... விவரம் தெரியாத வயசு... நான் என்ன செய்றது... என்ன ஏமாத்திட்டுப் போயிட்டான் அந்த வாத்தியான்..." என்று தலையில் அடித்துக்கொண்டு விட்டுவிட்டுப் புலம்பினாள். அவள் வாயின் ஒருபுறம் ரத்தம் வடிய மறுபுறம் சலவாய் ஊத்தியது.

அவள் சொன்னதை நம்பாமல் பெல்ட்டை வேகமாகத் தூக்கி அந்த அறையின் மற்றொரு மூலையில் வீசிவிட்டு, வீட்டிற்கு வெளியே சென்று அமர்ந்தான் ராஜேஷ். சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் குளிப்பதற்காகப் பாத்ரூமிற்குள் நுழைந்தான். தான் அணிந்திருந்த துணிமணிகளை எதோ ஒரு சிந்தனையில் நனைத்தவன் குளித்து முடித்து தலையைத் துவட்ட துண்டை துழாவினான். துண்டு எடுக்க மறந்துவிட்டதால், மகேஸைத் துண்டு எடுத்துவரச் சொல்லி ஒன்றிரண்டு முறை சத்தம் போட்டான். மகேஸிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால் பாத்ரூமுக்குள் இருந்தவன் நனைந்து கிடந்த ஈரத்துணியை எடுத்துப் போட்டுக்கொண்டு பாத்ரூமிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தான். கால்கள் துடிக்கத்துடிக்க தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த மகேஸைக் கண்டு அதிர்ந்தவன் வேகமாக அவளை நெருங்க, ஈரத்துணியை அணிந்திருந்ததால் தரையில் சர்ரென்று வழுக்கி விழுந்தான். இடது முழங்கையில் நல்ல அடி. வலியைப் பொறுத்துக்கொண்டு வலது கையில் கத்தியை எடுத்துக்கொண்டு அவளிடம் நெருங்கி, விழுந்து கிடந்த ஸ்டூலை நிமித்தி ஏறி தூக்குச்சேலையை அறுத்து அவளைக் காப்பாற்றினான். அவனுடைய ஈரத்துணியில் இருந்து வடிந்த நீர் அந்த அறையில் பரவிக்கிடந்தது. இருவர் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

மகேஸிடம் அந்த வாத்தியாரின் புகைப்படம் இருக்கிறதா என்று வினவினான் ராஜேஷ். அவள் தனது பள்ளிக்கூடத்தில் எடுத்த குரூப் போட்டோவில் இருந்ததை எடுத்துக் காண்பித்தாள். அந்த வாத்தியின் முகத்தை போனில் போட்டோ எடுத்துக்கொண்டான்.

சில மாதங்களில் கருவுற்றாள் மகேஸ். மூன்று மாதம் ஆன நிலையில் மனைவியை தனது யமாகா ஆர் எக்ஸ் ஹண்ரட் பைக்கில் அமர வைத்து டாக்டரிடம் செக்கப்புக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது சாலையின் பாதி வழித்தடத்தை மறைத்து நின்றுகொண்டிருந்த காருக்குள் இருந்து முதியவர் ஒருவர், செல்போனில் யாரோ ஒருவரிடம் பல் இளிக்க பேசிக்கொண்டே, சாலையில் யாராவது வருகிறார்களா இல்லையா என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல், சைடு மிரரைப் பார்க்காமல் சட்டென்று கார் கதவை நீக்க, அந்தக் கதவு சரியாக ராஜேஷின் பைக்கில் மோதியது. பின்னாடி அமர்ந்திருந்த மகேஸ்வரி தடுமாறி அந்த தார்ச்சாலையின் நடுவே குப்புற விழுந்தாள். அவள் வலியில் துடித்துடித்துப் போக, அவளுடைய பிறப்பு உறுப்பிலிருந்து ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலையில் நின்றுகொண்டிருந்த அனைவரையும் கதிகலங்கச் செய்தது. சாலையின் ஓரத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த நான்கு நர்சிங் மாணவிகள் அவளை தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் வழியில் வந்த மினி ஆட்டோவை வழிமறித்து அதன் மூலமாக அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

பல வருடங்கள் கழித்து கருவுற்றிருக்கும் தனது மனைவிக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்து பித்து பிடித்தது போல் நின்றான் ராஜேஷ். கார்க்கதவை மிக அலட்சியமாகத் திறந்த அந்தக் கெழடு தப்பிக்க ஓட முயன்று தோற்றுப்போனது. ராஜேஷ் அந்தக் கெழடை சில நொடிகள் உற்றுப்பார்த்தான். அந்தக் கெழடு மகேஸை இளம் வயதில் பலாத்காரம் செய்த விலங்கியல் வாத்தி.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash

தனது பெல்ட்டை உருவினான் ராஜேஷ். அந்தக் கெழடுக்கு சரமாரியாக ராஜேஷின் பெல்ட்டால் அடி விழுந்தது. கிட்டத்தட்ட இருநூறு மீட்டர்கள் துரத்தி துரத்தி விளாசினான். அதற்கு மேல் அடிதாங்க முடியாத அந்தக் கெழடு ராஜேஷின் காலில் விழுந்து அத்தனை பேர் முன்பு மன்னிப்பு கேட்டது. “ஏ... அடிச்சது போதும்ப்பா... மொதல்ல பொண்டாட்டிய போயி பாரு... அவன் செஞ்சதுக்கு அவன் அனுபவிப்பான்... எதக்கவனிக்குனமோ அத விட்டுப்புட்டு.. மொதக்கெளம்பு...” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் எடுத்துக்கூறவே, பெல்ட்டைக் கீழே போட்டுவிட்டு மருத்துவமனையில் இருந்த மனைவியைப் பார்க்க விரைந்தான். ஒரு நாள் முழுக்க மருத்துவமனையில் இருந்த பிறகு, “கரு கலஞ்சிடுச்சுங்க... பொண்ணுக்கு எந்தப் பிரச்சினயும் இல்ல... நடக்கக்கூடாதது நடந்துடுச்சுத்தான்... அதுக்காக இதயே நனச்சிட்டு இருக்காதிங்க... நல்லது நடக்கும்... சரியா...” என்று ஆறுதல் கூறி மருத்துவமனை நிர்வாகம் அவர்களை வீட்டிற்கு அனுப்பியது.

அதன் பிறகு ஓராண்டு கழித்து, மகேஸ் மீண்டும் கருவுற்றாள். கருவில் நல்ல ஆரோக்கியமாக குழந்தை வளர்ந்திருந்தது. அப்போது தான், மன உளைச்சலுக்கும் உடல் உறுப்புகளின் முறையான இயக்கங்களுக்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தாள்.

அவர்களின் வசிப்பிடத்துக்கு அருகிலயே சில மருத்துவமனைகள் இருந்தாலும் பிரசவத்தின் போது திடீரென எதாவது சிக்கல் ஏற்பட்டுவிட்டால் அவ்வளவு தான், இத்தனை வருட வேண்டுதல், காத்திருப்பு அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் நேரடியாக சேலத்தில் இருக்கும் இந்த மருத்துமனைக்கு மகேஸை அழைத்து வந்துவிட்டார்கள். ஆண் குழந்தையொன்று நல்ல முறையாகப் பிறந்தும்விட்டது.

அந்த மருத்துவமனையில் போன் பேசுவதற்கென்றே தனி இடம் ஒதுக்கி இருந்தார்கள். அங்கே நின்றுகொண்டு “அப்பா ஆயிட்டேன்… ஆம்பள பையன்...” என்பதை போன் செய்து தனது உற்றார் உறவினர் நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தான் ராஜேஷ். அவனுக்குப் பின்புறம் சற்று தொலைவில் இருந்த குணா தனது உற்றார் உறவினர் நண்பர்களிடம் போன் செய்து, "அப்பா தவறிட்டாரு..." என்ற செய்தியைச் சொன்னான்.

மருத்துவமனை பில்லைக் கட்டி முடித்துவிட்டு, புற்றுச்செல்கள் நுரையீரல், சிறுகுடல் என்று ஆங்காங்கே பரவிக்கிடந்ததால் உயிர் பிழைக்க சிறிதும் வழியின்றி இறந்து போன தங்கராசுவின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல துளசியும், நெருங்கிய உறவினர்களும் அழுதுகொண்டே தயார் செய்துகொண்டிருந்தார்கள்.

தனது அப்பாவை இழந்த சோகத்தில் இரண்டாவது தள வராண்டாவில் நின்றபடி, எதையோ கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் குணா. அப்போது, அவன் தோளில் பின்புறமாக இருந்து ஒரு கை பட்டது. அது ராஜேஷின் ஒரு கை. அவனுடைய மற்றொரு கையில் கேக் பெட்டி. "எனக்கு பையன் பொறந்துருக்கான் பிரதர்... அப்பா ஆயிட்டேன்… கேக் எடுத்துக்குங்க..." என்று அவன் குணாவிடம் கேக்கை நீட்டினான். எல்லோருக்கும் கொடுத்தது போக கடைசியாக இருந்த ஒரு கேக் குணாவிடம் வந்து சேர்ந்தது. அவன் நீட்டிய கேக்கில் பாதியை மட்டும் பிட்டு எடுத்த குணா, முகத்தை சந்தோசமாக வைத்தபடி அந்தக் கேக்கை ராஜேஷுக்கே ஊட்டிவிட்டு "வாழ்த்துக்கள் ங்க..." என்றான். கேக்கை மென்றபடியே, "ரொம்ப நன்றி பிரதர்..." என்ற ராஜேஷிடம், "ம்... உங்களுக்கு குடிக்குற பழக்கம் இருக்காங்க..." என்று குணா தயக்கத்துடன் வினவ, கேக்கை முழுவதுமாக விழுங்கிவிட்டு சுற்றிமுற்றிப் பார்த்த ராஜேஷ், ஒரு கண்ணை கண் அடிப்பது போல் லேசாகச் சுருக்கி, "அடிப்பேன் பிரதர்..." என்று சிரித்தபடி பதிலளிக்க, அதைக்கேட்ட குணா ”ப்ச்” என்று கோபமாகச் சலித்துக்கொண்டு தனது அப்பாவின் சடலத்தை நோக்கி நடந்தான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism