Published:Updated:

டாக்டர்.ஊசீஸ்வரனின் தையல் அனுபவம்! - சிறுகதை | My Vikatan

Representational Image

"என்னடா இது! பேஷண்ட் பத்தி பேசாமல், நொறுக்கு தீனி பற்றி இந்த டாக்டர் பேசராரே!" என சிலாகிக்கும் நட்புகளுக்கு ..ஒரு சின்ன விளக்கம். 1980களில் மக்களிடம் பணப்புழக்கம் மிகவும் கம்மி. பெரும்பாலும் கடை மாத்திரைகளை நம்பி காலம் தள்ளும் மக்கள் கூட்டமே அதிகம்.

டாக்டர்.ஊசீஸ்வரனின் தையல் அனுபவம்! - சிறுகதை | My Vikatan

"என்னடா இது! பேஷண்ட் பத்தி பேசாமல், நொறுக்கு தீனி பற்றி இந்த டாக்டர் பேசராரே!" என சிலாகிக்கும் நட்புகளுக்கு ..ஒரு சின்ன விளக்கம். 1980களில் மக்களிடம் பணப்புழக்கம் மிகவும் கம்மி. பெரும்பாலும் கடை மாத்திரைகளை நம்பி காலம் தள்ளும் மக்கள் கூட்டமே அதிகம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்று மாலை வானம் மப்பும் மந்தாரமுமாய் மழை வரும்போல இருந்ததால், சற்று சீக்கிரமே என் பல்லாவரம் கிளினிக்கிற்கு சென்றேன்..

எனக்கு உதவி செய்யும் "மீனா" நர்ஸ் (நர்ஸ் படிப்பு படிக்காத பிளஸ் 2 ஃபெயில் ஆன.. , கடையை திறந்து கூட்டி பெருக்கி சுத்தம் செய்து, நோயாளிகளுக்கு கட்டுக்கட்டி ,மாத்திரை கொடுத்து, எனக்கு, போண்டா, வடை டீ என வாங்கி தந்து, அனைத்து உதவிகளையும் செய்யும் மிக அழகிய தோற்றம் கொண்ட18 வயது யுவதி.

எனை கண்டதும் சிரித்த முகத்துடன்.."குட் மார்னிங் சார்?" என வரவேற்று.. "காப்பி டீ! போண்டா பஜ்ஜி! ஏதாவது வாங்கி வரட்டுமா சார்?" என பரிவுடன் கேட்க(டீ காப்பி சிற்றுண்டி வகையராவில் அவளுக்கும் சம பங்கு உண்டு!).. "இன்னிக்கு நாயர்கட டீ வேணாமே! ரொம்ப தண்ணியா இருக்கு!

பாட்டிக்கடை வெங்கா பஜ்ஜி, மசால்வடை வாங்கிண்டு, அப்படியே, தள்ளுவண்டி காப்பி கடையில் "டபுள் ஸ்ட்ராங்கா" காபி வாங்கிண்டு வா" என அறிவுறுத்த சிட்டாய் பறந்தாள் மீனா!

"என்னடா இது! பேஷண்ட் பத்தி பேசாமல், நொறுக்கு தீனி பற்றி இந்த டாக்டர் பேசராரே!" என சிலாகிக்கும் நட்புகளுக்கு ..ஒரு சின்ன விளக்கம்.!

1980 களில் மக்களிடம் பணப்புழக்கம் மிகவும் கம்மி. பெரும்பாலும் கடை மாத்திரைகளை நம்பி காலம் தள்ளும் மக்கள் கூட்டமே அதிகம்.

அதுவுமன்றி நான் என் கடை திறந்து ஒரிரு மாதங்களே ஆகியிருந்த படியாலும், என் இளவயது "கத்து குட்டி "டாக்டர் தோற்றத்தாலும் ...

அது வளர்ந்து வரும் புறநகர் பகுதி என்பதாலும.. நோயாளிகள் வருகை மிகக்குறைவு.

ஆனாலும் மாதத்தின் முதல் வாரம் எனில், ஒரு ஐந்தாறு பேருக்கு குறைவில்லாமல் வருவார்கள். மாதக்கடைசியில் சற்றே "டல்" அடிக்கும்!

Representational Image
Representational Image

சரி வாங்க கதைக்கு போவோம்!

திடீரென்று "காப்பாத்துங்க டாக்டர்! காப்பாத்துங்க டாக்டர்! என ஒரு பத்து இருபது பேர் கொண்ட பாமர கும்பல் கிளினிக்குள்....

"திபு திபு"என நுழைவதை கண்டு என் அண்ட சராசரமும் பயத்தால் நடுநடுங்கி ஆடிப்போனது!

நான் பயின்ற ஸ்டான்லி மருத்துவமனை "கேஷுவாலிட்டியில" இதுபோல் பலமுறை கண்டிருந்தாலும், அது பற்பல மூத்த மருத்துவர்கள் கொண்ட கட்டமைப்பு என்பதால் , அங்கு பயம் என்பது எனக்கு எப்போதும் ஏற்பட்டதே கிடையாது!

ஆனால் இங்கு நிலமை வேறு, 0நானே ராஜா நானே மந்திரி, நல்லதோ கெட்டதோ... அனைத்துக்கும் நானே பொறுப்பு! என்ற எண்ணம் என் திகிலை பன்மடங்கு கூட்ட, மெல்ல என் குலசாமி _"திரௌபதி அம்மனை" வேண்டியபடி.., எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "எல்லோரும் அமைதியா இருங்க.. பேஷண்ட்டுடன் ஒருவர் மட்டும் இருங்கள். மற்ற அனைவரும் வெளியே செல்லுங்கள்!" என ஏதோ ஒரு துணிச்சலில் உச்சஸ்தாயியில் ஆணையிட,

சட்டென்று கூட்டம் பின்வாங்கியது,.,

ஒரு 16வயது மதிக்கத்தக்க இளம்பெண், தலையில் இரத்தம் சொட்டசொட்ட, அவள் தாயுடன் பரிதாபமாக என்னை பார்த்தாள்.

ஓ மை காட்! இது "ஸ்கால்ப் இஞ்சுரி"(கபால தோலில் ஏற்படும் காயம்).. அடி சிறிதாகினும் ரத்தம் அதிகமாக வெளியேறி, உடனிருப்பவர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தும், என்பதை அறிந்து கொண்டேன்.

உடனே அவளை படுக்க வைத்து காயம் ஏற்பட்ட இடத்தை கண்டுபிடித்து, கத்தரியால் அந்த இடத்தின் கேசத்தை வெட்டி எரிந்து காயத்தை நோட்டமிட்டேன்!..

நல்லவேளை.. நான் கடவுளை வேண்டியபடி, காயம் ஒன்றும் அவ்வளவு பெரிதாக இல்லை...

ஒரு முக்கால் "இன்ச்" அளவுக்கு வெட்டு காயம்தான் என்பதை

உறுதிப்படுத்தி கொண்டு, சற்றே நிம்மதியுற்று,

அந்த தாயிடம் "என்னம்மா ஆச்சு?"என்றேன் "ஒண்ணுமில்ல டாக்டர்.. இந்த சோம்பேறி நாய, பர்ணையின் விளிம்பில் இருந்த தேங்கா துருவும் அரியாமணய எடுக்க சொன்ன பாவம்! இந்த புத்திகெட்ட பொண்ணு, ஸ்டூல் போடாம எக்கி இழுத்து, அது அவ மண்டைல விழுந்து... ஒரே இரத்த களறி ஆயிடிச்சு.. எல்லா என் தல எழுத்து!". என புலம்பியபடி விவரித்தாள்.

காப்பி வாங்க போன என் ஆஸ்தான நர்ஸ் அம்மாவும் வந்துசேர்ந்து "என்னா ஆச்சி சார்?"என அவள் பங்குக்கு வினவ,

"ஒண்ணும் ஆகல, நீ ஏன் இவ்ளோ லேட்டு?"என கடிந்துகொண்டே.. "சரிசரி ! சூச்சர்(தையல்) போடணும், அதற்கு வேண்டிய டெஃப்லான் நூல், வளைந்த ஊசி, கர்வுடு ஃபோர்செப்ஸ் ,காட்டன் பாண்டேஜ் எல்லாம் சீக்கிரம் எடுத்துக்குடு! குவிக் குவிக்!"என்றேன்.. இதை கேட்ட, அடிப்பட்ட பெண்

"ஐயையோ! வேணவே வேணாம்! நான் தையல் போட்டுக்க மாட்டேன்!" என்றபடி எழ முயல, கதவுக்கு பின் எட்டிப்பார்த்த அவள் தந்தை.. "இராசாத்தி இல்ல! டாக்டர் சொல்படி கேளு கண்ணு !"என செல்லம் கொஞ்ச ,

தாயோ "இன்னாடி, ரொம்பதான் ராங்கி பண்ற.. ஒரு வேல ஒழுங்கா செய்ய துப்பில்ல" என வசுவு மழை பொழிந்தாள்.

அவள் மெல்ல என் கண்களை பார்த்து "ரொம்ப வலிக்குமா டாக்டர்..? மொள்ள போடுங்க டாக்டர்!

நான் வலி தாங்க மாட்டாதவ சார்" என கூறுகையில் அவள் கண்களில் நீர் தளும்பியது..

"அதெல்லாம் ஒண்ணும் வலிக்காதுமா, இப்ப பார் நீ வலியே தெரியாம சிரிக்க போரே" என கூறியபடி.. 2மிலி "சைலோகைன்" எனும் மரத்துபோகும் ஊசிமருந்தை அடிபட்ட பகுதிக்கு அருகாமையில் செலுத்தினேன். "ஸ்ஸ்" என சத்தம் காட்டியவள். அதன் பிறகு நான் 3 தையல்கள் போட்டு முடியும்வரை.., அவளுக்கு எதுவும் நடாவாதது போல் என்னிடம் அவள் பள்ளிகூட ஜோக்ஸ்களை பகிர்ந்து கொண்டு இருந்தாள்! நான் இறுதியில் ஸ்பிரிட்டால் சுத்தம் செய்து..

பேண்டேஜ் போட்டு முடியும் வரை, அவள் ஜோக்ஸ் நின்றபாடில்லை! அவள் தாயோ "போதும் நிறுத்து உன் பாழாப்போன சிரிப்பை" என கண்டித்ததை அவள் கண்டு கொள்ளவே இல்லை!

Representational Image
Representational Image

பிறகு "டீட்டி" ஊசி போட்டு, களிம்பு, மருந்து ,மாத்திரை, எல்லாம் எழுதி கொடுக்கையில்.. அவள் தாய்தந்தை முகத்தில் பயம் முழுதும் அகன்று மகிழ்ச்சி ரேகை நிழலாடியது.

வெளியில் ஆர்ப்பரித்த கூட்டம் எப்போதோ பறந்து சென்று விட்டது!

"எவ்ளோ பீஸ் சார்?" என அந்த அம்மாள் கேட்க, "ஐம்பது ரூபாய்" என்றதும்.. "இன்னா சார்! இம்மா ரூபா கேக்கறீங்க?", என அவள் சற்றே கோபத்துடன் கேட்க; அவள் கணவன் "தே சும்மா கட ..!.

கொஞ்சம் கம்மி பண்ண கூடாதா சார்?" என கெஞ்சும் பாவனையில் என்னிடம் கேட்க "சரி நாப்பது கொடுங்க!" என்றேன்!


சற்றும் திருப்தி அடையாத அவர், உள், வெளி ,ஜோபிகளில்

கைவிட்டு துழாவி துழாவி, சில்லறை நோட்டுக்களாக 29ரூபாயை மேஸை மேல் வைத்து

" ஏம்மே! உங்க்கிட்ட எதாச்சும் துட்டு கீதா?"என பவ்யமாய் கேட்க!

அவளோ "ஆங் ! இந்த மவராசன் என்க்கிட்ட முன்னபின்ன,துட்டா வாரி வயங்கி கீரார் பாரு!. துட்டும் இல்லே கிட்டும் இல்ல!" என அவர்கள் குடும்ப இரகசியத்தை போட்டு உடைக்க.. அவர் மெல்ல என்னருகில் வந்து "சார்! மன்ச்சிக்கங்க! இவ்ளோதான் இப்ப என்கிட்ட இருக்கு, நாளிக்கு மீதி துட்ட கொண்டாந்து, கருக்கிட்டா குட்த்துர்றன் சார்!"என மன்றாட .. அடிபட்ட அந்த பெண்..

தலையில் கட்டுடன், பூலாந்தேவி ஸ்டைலில் அமர்ந்தபடி தன் வீட்டு குடும்ப மானத்தை இருவரும்

சேர்ந்து கப்பல் ஏற்றுவதை

பொறுக்க முடியாமல்.... என் விழிகளை ஆழமாக பார்த்தபடி பார்வையால் கெ(கொ)ஞ்சியபடி,மன்னிப்பு கோரினாள்!

"சரி சரி! மாத்திரை வாங்க காசு இருக்கா?" என நான் கேட்க.. "ஆங்.. கால்ணாகூட கைல இல்ல!" என்றாள்! நான் பரிதாபப்பட்டு, அவர் கொடுத்த 29 ரூபாயில், ஓர் 5ரூபாயை அவரிடமே திருப்பிக்கொடுத்து... "தலையில் அடிபட்டு இருக்கு! மாத்திரை ஒழுங்கா சாப்பிடணும், ஜாக்கிரதையா இருக்கணும். கட்டாயம் மருந்து வாங்கி குடுங்க!" என்று கூற,"சரிங்க ஐயா " என்றார் அவள் அப்பா!

போகும்போது அந்த பெண் கண்ணாலேயே "டாட்டா" காட்டி சென்றாள்.

நான் வெள்ளை எனாமல் பேசினில் இருந்த "டெட்டால்" கலந்த சோப் தண்ணீரில் கைக்கழுவி, டவலில் துடைத்தபடி "அப்பாடா! ஒரு பேஷன்ட்டுக்கு வெற்றிகரமா சிகிச்சை செய்தோம்!" என்ற மகிழ்ச்சியில் என் சுழலும் நாற்காலியில் அமர்ந்தேன்!

"சார்! காப்பி பஜ்ஜி வடை, எல்லாம் சில்லுனு ஆரியே போச்சு சார்"என்ற மீனாவை பார்த்து, "வடை பஜ்ஜி மட்டும் குடும்மா, பசிக்குது" என கூறி, இருவரும் சாப்பிடும் போது அவள் மெல்ல என்னிடம் "சார் நீங்க ரொம்ப ஏமாளி சார்! அந்த அம்மா சொந்த ஊட்டுக்காரி ! பத்து பாஞ்சி எருமாடு வச்சிக்குனு , பால் வேபாரம் வேரா பண்ணுது சார்! அவங்க ஊட்டுக்காரர் காப்ரேஷன்ல பியூன் வேல செய்ரார்! அந்தம்மா இடுப்புல பெரிய சுறுக்குப்பை இருந்துதே, நீங்க அத பாக்கலையா சார்?. எங்க வீட்டு பக்கத்திலதான் சார் அவுங்க வீடு!"என்றாள்!

ஆனால் என் மனம் ஏனோ அவள் சொற்களில் லயிக்கவேயில்லை! லாவகமாக வலியில்லாமல் சூச்சர் போட்டு, நேர்த்தியாக டிரெஸ்ஸிங் செய்ததால், அந்த இளம்பெண், திருப்த்தியுடன் எனக்கு விழிகளால் தன் நன்றியை தெரிவித்தது மட்டுமே, அன்று இரவு முழுதும் என் நினைவை ஆட்கொண்டு இருந்தது.

(முற்றும்)


-மரு உடலியங்கியல் பாலா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.