வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஒரு மாலை வேளையில் கடையின் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகளை துடைத்து வரிசை கிரந்தமாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் ரத்தினம்.
எதேச்சையாக அவரது கண்கள் கடைக்கு வெளியே நோக்கியபோது..
அருகேயுள்ள பள்ளியிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் வகுப்புகள் முடிந்த குதூகலத்தில் ஒருவொருக்கொருவர் சிரித்தும், பேசிக் கொண்டும் அரட்டை அடித்தபடி அவரது கடையை தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சட்டென அவரது கண்கள் கடை வாசலை நோக்க ..!
அங்கு! கதவருகில் இருந்த கண்ணாடிச் சுவரில் கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளினூடே இரண்டு சிறிய கண்கள் இரு கருவண்டுகளைப் போல் மேலும் கீழுமாக சுற்றி சுழன்று கடையின் உள்ளே உள்ள பொம்மைகளை நோட்டம் விட்டுக் கொண்டே அங்கும் இங்குமாக நீந்திக் கொண்டிருந்ததை அவரது கண்கள் சட்டென கவனித்து அதிர்ந்தது.
சற்றே! கண்களை சுருக்கி அந்த கண்களை உற்று நோக்கினார்..
அவர் கவனித்து விட்டதை கண்ட அந்த சின்னஞ்சிறு கண்களிரெண்டும் வெட்கமும் அதிர்ச்சியுமாக நீந்தும் கருவிழிகளை மூடித் திறந்து பின்னர் வாசலுக்கு வெளியே வெளிப்பட்டு பயம் கலந்த அதிர்ச்சியில் தலை குனிந்து நின்றது.
அங்கே! வகுப்புகள் முடிந்த களைப்பில் தலை களைந்து தமது தோள்களில் நைலான் புத்தகப் பையை தமது பிஞ்சு விரல்களால் பற்றி பிடித்தபடி நைந்து போயிருந்த பள்ளி சீருடையுடன் தமது வெளிறிய பழுப்பு நிற கண்களை சிறிதாய் விரித்து இதழோரம் சிறு புன்னகையை உதிர்த்து வாயிற் கதவருகில் வெளிப்பட்டாள் அந்த பிஞ்சுக் குழந்தை.
எட்டிலிருந்து ஒன்பது வயது நிரம்பி இருக்கும் அந்த சின்னஞ்சிறு சிறுமிக்கு...
அதன் சின்னஞ்சிறு கண்களிலும் உதட்டோரமும் நிறைந்து நின்ற வெட்கப் புன்னகையுடன் ஓர் ஓவியம் போல் நின்ற அந்தப் பிஞ்சு சிறுமியின் அழகு ரம்மியமாக இருந்தது.
கையசைத்து அவளை அருகே அழைத்தார் ரத்தினம்..
அவர் அழைப்பதை அறிந்ததும் அச்சத்தில் சிறிது நடுங்கியபடியே கடைக்குள் காலடி எடுத்து வைத்தது அந்த பிஞ்சு பொற்பாதங்கள்.
இப்போது அந்த உதடுகளில் துளிர்த்து நின்ற வெட்கச் சிறு புன்னகை மறைந்து பயம் அந்த இதழ்களில் பற்றிக் கொண்டதை அறிய முடிந்தது.
என்னருகே வந்ததும் தமது இதழ்களின் மேல் விரல்களை வைத்து பொத்திக் கொண்டு தமது கைகள் இரண்டினையும் கட்டிக்கொண்டு ஓர் ஆசிரியரிடம் நிற்பது போன்று பவ்யமுடன் நின்று அவரை பயம் கலந்த மரியாதையுடன் பார்த்தது.
அது ரத்தினத்தின் இதழோரத்தில் சிறிது புன்னகையை வரவழைத்தது.
“என்னப்பா என்ன வேணும் உங்களுக்கு” என்றார் ரத்தினம் வாஞ்சையுடன் ..
அதன் விருப்பத்தை எதிர்நோக்கி அவளை ஏறெடுத்துப் பார்த்தார்.

கடைக்குள் வந்தவள் ரத்தினத்தைப் பார்த்ததும் அதே இதழோரப் புன்னகையை சிந்தியவளாக நேராக அவரிடம் வந்து தாம் முன்பு பார்த்த அதே பொம்மையை தற்போதும் தமது பிஞ்சு விரல் நீட்டி காட்டினாள்..
பின்னர் தமது ஒரு கையில் இருந்த அந்த மஞ்சள் பையை கடை மேசை மீது வைத்து அதிலிருந்து ஓர் உண்டியலை எடுத்து அவர் முன்னால் வைத்தாள்..
பின்னர் தமது மெல்லிதழ் பிரித்து "மாமா இதுல உள்ள காசுக்கு அந்த பொம்மையை தருவீங்களா?. என கெஞ்சும் குரலில் வேண்டினாள்..
ஆச்சரியத்துடன் அவளது முகத்தைப் பார்த்தார் ரத்தினம் ..
தற்போதும் அந்த புன்னகை மாறாத அவளது முகத்தில் ஏதோ! களைப்பு தெரிந்தது..
அவளது கண்களில் தாம் வேண்டிய பொம்மை கிடைத்து விடுமா? என்ற ஏக்கம் தெறித்தது...
அவள் கொண்டு வந்த உண்டியலை மேசை மீது வைத்து ஒரு சிறிய குச்சியின் துணையோடு அதிலிருந்த நாணயங்களுக்கு விடுதலை அளித்தார் ரத்தினம் ..
அவை அனைத்தும் இரண்டு ரூபாய் நாணயங்கள்..
ஒருவழியாக உண்டியலுக்குள் இருந்த அனைத்து நாணயங்களும் விடுதலையான பின் அதில் ஏறத்தாழ முப்பத்திரண்டு ரூபாய்கள் இருந்தன..
அதை எண்ணிக் கொண்டிருந்த போதே! அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார் ரத்தினம்...
"இவ்ளோ நாளா எங்க பாப்பா போயிருந்த உன்ன காணலையே!",
"இந்த காசுலாம் எப்படி கிடைச்சுது உனக்கு" என்றார். அதை தெரிந்து கொள்ளும் ஆவலில்..
இந்த கேள்விக்கு அவள் பதில் சொல்லி முடித்ததும், ரத்தினத்தின் கண்களில் இரக்கம் சொரிந்து கண்ணீர் ததும்பி நின்றது..
ஆம்.,
அவளது அப்பாவும், அம்மாவும் தினக் கூலிகள், எப்போதும் காலையிலேயே வேலைக்கு சென்று விட்டு சாயுங்காலம் இவள் பள்ளி முடித்து செல்லும் போது வீட்டிற்கு வருவார்களாம்.
மதிய வேளையில் பள்ளியில் கொடுக்கும் சத்துணவை உண்டு கொள்வாள், காலை உணவுக்காக மட்டும் தம் பிள்ளைக்கு தினமும் இரண்டு இட்லிக்கான காசு ஐந்து ரூபாய் வீதம் ஒவ்வொரு நாளும் கொடுத்துச் செல்வார்களாம்.
அதில் இந்த பொம்மையை வாங்க வேண்டும் என்பதற்காகவே ஒரு இட்லி மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு மீதமிருக்கும் இரண்டு ரூபாயை சேமித்து வைத்து வந்துள்ளாள்..
தற்போது இந்த பொம்மைக்கான காசு சேர்ந்ததும் அதை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
இவை அனைத்தையும் அந்த பிஞ்சு குழந்தையின் வாய் மொழிந்து கேட்ட அவரது செவிகளும் இரக்கம் சொரிந்து சிறிது நேரம் அவளுக்காக அழுதது..
பின்பு அவள் தந்த காசுகளை எல்லாம் எடுத்து கல்லாவில் போட்டார் ரத்தினம் ..
பின்பு அவரது கரம் தூக்கி அவள் வேண்டிய அந்த பொம்மையை எடுத்து அவள் கரங்களில் திணித்தார் .
அதைக் கண்டதும் அவளது கண்களில் தெரிந்த களைப்புகள் நீங்கி, பிரகாசித்தன.,
அவள் தனது பிஞ்சு இதழ்களால் பொம்மையின் கன்னத்தில் ஒத்தடம் வைத்தாள்..
அந்த பழுப்பு நிற பொம்மை விக்கித்து அவளை முதலில் பார்த்தபோது தந்த அதே இதழோர புன்னகையை அவளுக்கு தந்து அவளோடு புறப்பட தயாரானது..
அதை வாங்கி கொண்டு திரும்பியவளை ..
“பாப்பா கொஞ்சம் நில்லுமா" என்றழைத்தார் ரத்தினம் ..
அவள் எங்கே தனது ஆசை பொம்மையை தன்னிடமிருந்து திருப்பி வாங்கிக் கொள்வாரோ? என்ற அச்சத்தில் தனது மார்போடு அதை அனைத்துக் கொண்டு பாவமாக அவரைப் பார்த்தாள்..
அந்த பார்வை அவரை ஏதோ செய்தது!!..
"பயப்படாதம்மா அந்த பொம்மை இனி உன்னுடையதுதான், அதை நீயே வைத்துக் கொள்! ஆனால் அவளில்லாமல் அவள் தம்பி இங்கு இருக்க மாட்டானே! அதனால அவளோடு சேர்த்து அவளது தம்பியையும் எடுத்துக்கிட்டு போறியா?"
எனக் கேட்டு அந்த பொம்மை அருகிலேயே இருந்த ஒரு கால் சட்டை போட்ட சிறுவன் பொம்மையையும் எடுத்துக் கொடுத்தார்..
அவளது கண்களில் ஆயிரம் மின்னல்கள் மின்னி மறைந்தன..
அவளது கால்கள் தரையில் இருந்து துள்ளி குதித்தன..
ஆனந்தத்தில் அவளது முகம் முழுக்க பிரகாசித்து கடைக்குள் ஒளியூட்டின..
அதை வாங்கியவளின் கரங்களில்
"இந்தா! அவர்களின் புத்தகப் பையையும் எடுத்துச் செல்!" என்று கூறி ஒரு சிறிய புத்தகப் பை போன்றதொரு பையையும் உபரியாக அவளது கரங்களில் கொடுத்தார் ரத்தினம்...
பரவசத்தில் "ஹையா" என கூவியவாறே கடைக்குள் நின்று ஆனந்த கூத்தாடினாள் அவள்...
அந்த பிஞ்சு நெஞ்சின் பரவசத்தை ரசித்துக் கொண்டே அவரது இருதயம் இளைப்பாறியது..
அந்த புத்தக பையினுள் அவள் கவனிக்காத போது அதில் ஏற்கனவே ஒரு இருநூறு ரூபாய் நோட்டை வைத்திருந்தார் ரத்தினம் ...
இப்போது அவரது மனம் கடையில் உள்ள அனைத்து பொருட்களும் விற்றுத் தீர்ந்து போனதை விட மேலான சந்தோஷத்தில் மிதந்தது..
அப்போது கடையின் கல்லாவின் மேலுள்ள சுவற்றை நோக்கித் தமது பார்வையை செலுத்தியவரின் கண்கள் குளம் போல் பனித்திருந்தது..
அங்கே! சந்தன மாலைக்குள் சிறைப்பட்டிருந்த புகைப்படத்தில் கையில் பொம்மையுடன் சிரித்துக் கொண்டிருந்தாள் ஒரு வருடத்திற்கு முன் ஓர் விபத்தில் தனது இன்னுயிரை இழந்திருந்த அவரது மகள் 'மங்கையற்செல்வி'.//
எழுத்து..
பாகை இறையடியான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.