Published:Updated:

போன்ஸாய் ! | சிறுகதை | My Vikatan

Representational Image

ரஞ்சனி சென்னைக்கு ரயிலேறும்போது ஸ்டேஷன் சென்று ‘ஐ லவ் யூ’ சொல்லி வழியனுப்ப நினைத்தான். குடும்பத்தோடு அவள் இருந்ததால் எட்ட நின்றுத்தான் அவளைப் பார்க்க முடிந்தது சரவணனால்.

போன்ஸாய் ! | சிறுகதை | My Vikatan

ரஞ்சனி சென்னைக்கு ரயிலேறும்போது ஸ்டேஷன் சென்று ‘ஐ லவ் யூ’ சொல்லி வழியனுப்ப நினைத்தான். குடும்பத்தோடு அவள் இருந்ததால் எட்ட நின்றுத்தான் அவளைப் பார்க்க முடிந்தது சரவணனால்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“ஐ...”

மனதுக்குள்  ஒத்திகைத் தொடங்கினான் சரவணன்.

முதல் ஒற்றை எழுத்தை ஒத்திகையின் போது உச்சரிப்பதேப் பெரியச் சவாலாக இருந்தது.

இன்னும் இரண்டு வார்த்தைகள் சேர்க்க வேண்டும்.

வெளிப்படுத்த வேண்டும்.

ரியாக்‌ஷன் கணிக்க வேண்டும்.

‘முடியுமா…?’

உடம்பெல்லாம் சூடு பரவிக் கொதித்தது.

நாக்கு சுருட்டிக்கொண்டு குழறத் தயாரானது.

உள்ளே அனைத்து ரத்த நாளங்களும் “பட்...! பட்...! படார்...! படார்...!” என வெடித்தன.

ஒரு சொட்டுக் கூட இல்லாமல் அனைத்துக் குருதியும் மொத்தமாய் வடிந்து, வெளியேறிவிட்டாற்போல் ‘வெலவெல...!’ வென்று வந்தது.

உள் நடுக்கம் வெளியே பரவத் தொடங்கியது.

குனிந்த தலையை நிமிர்த்த தைரியமில்லாமல் நின்றான் சரவணன்.

*****-

"சரவணா...?"

தேனாய் இனித்த குரல்.

கடைந்தெடுத்த சிற்பமாய் எதிரே ரஞ்சனி.

நிமிர்ந்து முகம் பார்க்கும் தைரியமில்லை அவனுக்கு.

"ம்...!" என்றான் பதிலுக்கு.

குரல் தீனமாய் ஒலித்தது.

"உடனே வா! னு கூப்ட்டே. வந்து நிக்கிறேன்...!" 

முறுவலித்தாள்.

“…   …  …  …  …  …”

லேசாய்த் தலைத் தூக்கினான்‌.

அவளின் அற்புதமான முறுவலில் பலமாய் அடி வாங்கினான்.

மீண்டும் இறங்கியது தலை.

‘இந்த முறுவல் முற்றிலும் மாறி மூர்கமாகிவிடுமோ...!’

“ச்சீ...!”

‘காரித் துப்பிவிடுவாளோ...?!’

“இந்த எண்ணத்தோடப் பழகாதே...!”

‘கடுமுகத்தோடு எச்சரிப்பாளோ...!?’

“போடாப் பொறுக்கி...!”

அசிங்கமாய் ஏசிவிட்டு அதிர ஓடிவிடுவாளோ...!?’

“அம்மா அவன் இப்படி பிஹேவ் பண்ணிட்டான்...!”

‘ஊர் கூட்டுவாளோ...!?’

“உங்க மகனைக் கண்டிச்சி வைங்க...!”

‘வீட்டிற்கு மிரட்டல் வருமோ...?!’

*****-

Representational Image
Representational Image

“சரவணா...!”

“…   …  …  …  …  …”

"எதுக்குக் கூப்ட்டே சரவணா…!

“…   …  …  …  …  …”

“சேதி என்னனு சொல்லு...?”

“…   …  …  …  …  …”

“சரவணா... எக்ஸாம் நெருங்கிடுச்சு. நான் படிக்கணும்.  போவட்டா...?"

ரஞ்சனி அரை வட்டமடித்துத் திரும்பினாள்.

*****-

“வாய்ப்பை விட்ராதே. சொல்லிடு. மனசுல உள்ளதைச் சொல்லிடு...!”

கூவியது சரவணனின் புத்தி.

“இது போல தனியாச் சந்திக்கும் வாய்ப்பு எப்பவும் கிடைக்காது. மிஸ் பண்ணிடாதே...! ம்...! ம்...! சீக்கிரம்...! ”

தூண்டியது மனசு.

மனசுக்கும் புத்திக்கும் இடையே சில கனங்கள் போராட்டம்

புத்தி ஜெயித்தது.

தைரியம் வந்தது.

தலை நிமிர்ந்தான்.

"ஐ லவ் யு ரஞ்சனி...!”

*****-

ரஞ்சனியின் ரியாக்‌ஷன் பார்த்தான்.

அவள் முகத்தில் முறுவல் மாறியது.

முத்து உதிர்த்தாற்போல் ‘கலகலவென’ பலமாய்ச் சிரித்தாள்.

‘எதிர்வினை மோசமானதாக இல்லை...!’

ஆறுதலாய் இருந்தது சரவணனுக்கு.

நிமிர்ந்து பார்த்தான்.

"ஓகேடா சரவணா...!" என்றாள் ரஞ்சனி.

*****- 

‘இவ்வளவு இயல்பாக இதை எதிர்கொண்டாளே ரஞ்சனி...!’

சரவணன் அதிர்ச்சியில் உறைந்தான்.

"சரவணா இதுவா நேரம் அதுக்கு...!”

“…   …  …  …  …  …”

“இன்னும் பத்து நாள் கூட இல்லை  +2 பரீட்சைக்கு. " 

"...   ...   ...   ...   ..."

“இது டிசைடிங் பரீட்சைடா. இதுல வர்ற மார்க் வெச்சித்தான் ஹயர் ஸ்டடீஸ், ஃப்யூச்சர் எல்லாம் இருக்கு...!”

"...   ...   ...   ...   ..."

"படிப்பில கவனம் செலுத்து சரவணா...!"

“ஸாரி...!” என்று தொடங்கிய சரவணைப் பேச விடவில்லை ரஞ்சனி.

“எதுக்கு சாரி. மனசுல உள்ளதை வெளீல கொட்டிட்டே. இனிமே மனசு ரிலாக்ஸா ஆயிடும். போ.. படிப்புல கவனம் வை.”

*****-

+2 ரிசல்ட்

மதிப்பெண்ணுக்குத் தக்கபடித்தானே மேற்படிப்புக்குத் தயாரானார்கள் அடுத்த தலைமுறையினர்.

நீட் கிளியர் செய்தாள் ரஞ்சனி.

எம் பி பி எஸ் கவுக்சிலிங்.

‘எம் எம் சி’ யில் அட்மிஷன்.

*****-

‘ஐடிஐ’ ல் சேர்த்தான் சரவணன்.

'மோட்டார் மெக்கானிக்’ பிரிவு.

ரஞ்சனி சென்னைக்கு ரயிலேறும்போது ஸ்டேஷன் சென்று ‘ஐ லவ் யூ’ சொல்லி வழியனுப்ப நினைத்தான்.

குடும்பத்தோடு அவள் இருந்ததால் எட்ட நின்றுத்தான் அவளைப் பார்க்க முடிந்தது சரவணனால்.

*****-

இரண்டு வருஷப் படிப்பு முடித்தான்.

தனியார் ஒர்க்‌ஷாப் ஒன்றில் மெக்கானிக் ஆனான்.

படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது;

நரகலில் ஏற்றிய வண்டிச் சக்கரத்தைக் கழற்றிக் கழுவியும்;

“காசு வாங்கறியில்ல... என்னா இது...!” வண்டியை கஸ்டமர் தள்ளிவிட, எதிர்வினையாற்றாமல் அமைதியாய் உள்வாங்கியும்;

பெட்ரோல் திருடிவிட்டதாகவும், ஸ்பேர் பார்ட் திருடிவிட்டதாகவும், கத்தும்போது, திருட்டுப்பழியை ஏற்றும்;

சமயத்தில், கணக்குக் குழறி கஸ்டமரிடம் காசு குறைத்து வாங்கிவிட, ஓனரிடம் திட்டு வாங்குவதோடு, சம்பளத்தில் பிடித்தம் செய்து நஷ்டமடைந்தும்;

ஒரு நூல் அழுத்தமாய் டைட் செய்துவிட ஸ்பேனர் நழுவி முட்டியில் அடி பட்டுச் சுரந்தும்;

தேங்கி நிற்கும் சாலையோரச் சாக்கடை நாற்றத்தில், ஸ்பேனர்களும், கிரீஸ் டப்பாவும், ஆயில் கேனும், வேஸ்டும், போல்ட்டுகளும், நட்டுகளும்... இப்படியாக ஒரு வருடம் கழிந்தது.

பொறுப்பான மெக்கானிக்...!

நல்ல வேலைக்காரன்...!

ஸ்கில்டு ஒர்க்கர்...!

இப்படியெல்லாம் சரவணன் பெயர் அங்கங்கே பரவியது.

டூவிலர் ஏஜென்சியிலிருந்து சரவணனுக்கு அழைப்பு வந்தது.

ஸ்கூட்டி ஏஜென்சி சேல்ல் அண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தான்.

சர்வீஸ் பிரிவில் வேலை சரவணுக்கு.

இங்கும் அதே

வாட்டர் சர்வீஸ்...

ஆயில் மாற்றுதல்...

காற்று பிடித்தல்...

ஃபுல் சர்வீஸ்...

ரிப்பேர் ஒர்க்...

வேஸ்ட் துணி, ஆயில் கேன், கிரீஸ் டப்பா, ஸ்பேனர், திருப்புளி, கட்டிங் பிளேயர்... என்றாலும், இங்கே சாக்கடை நாற்றம் இல்லை. கஸ்டமரிடம் மல்லுக் கட்டவேண்டியதில்லை.

தனக்கு ஒதுக்கும் வண்டியை, ‘ஒர்க் இன்வாய்ஸ்ல்’ உள்ளபடி, செய்து நிறுத்திவிட்டால் போதும்.

சரவணனின் திறமைக்குத் தக்கபடி ஊதியம் உயர்ந்துகொண்டே போனது.

அவனது மதிப்பும் அந்த வட்டாரத்தில் உயர்ந்து கொண்டே போனது.

*****-

“சரவணன்...!”

ஏஜென்சி முதலாளி குரல் கொடுத்தார்.

பின் கட்டில் சர்வீசில் இருந்த சரவணன், ‘வேஸ்ட்’ வைத்துக் கை துடைத்தபடியே ரிஸப்ஷனுக்கு வந்தான்.

அதிர்ந்தான்.

டாக்டர் ரஞ்சனி ரிஸப்ஷனில் தன் தகப்பனாரோடு அமர்ந்திருந்தாள்.

ரஞ்சனி சரவணனைப் பார்த்ததும், டாக்டர்தனமாக முறுவலித்தாள்.

அப்பாவிடம் சரவணனைப் பற்றி ஏதோ சொல்லியிருக்க வேண்டும், அவரும் இவனை மேலும் கீழும் பார்த்தார்.

“மேடம்’ க்கு நாளைக்கு ஸ்கூட்டி டெலிவரி கொடுக்கணும் சரவணன்.”

“ஓ கே சார்.”

*****-

Representational Image
Representational Image

சிற்பம் செதுக்குகிறார்போலவும், ஓவியம் புனைகிறாற்போலவும், மிக மிகக் கவனமாகவும், நளினமாகவும் கலை நயத்தோடும் கோர்த்தான் ஸ்கூட்டியை.

கார்டர் பின்னைக் கூட பலமாகத் தட்டவில்லை.

தன் காதலிக்காக ஸ்கூட்டி கோர்க்கிறானல்லவா...

யாரிடமும் எந்த வேலையும் தராமல் முழுக்க முழுக்க அந்த ஸ்கூட்டிக்கான எல்லா வேலையும் அவன் ஒருத்தனே செய்தான்.

ஒரு முறைக்குப் பல முறை ஒவ்வொன்றையும் சோதித்துப் பார்த்தான்.

மறுபடி மறுபடி துடைத்தான்.

கோவிலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, அலங்கரிக்கும் பக்தி அதில் தெரிந்தது.

தன் ஐந்து வருட சர்வீஸில் முதல் முதலாய் சரவணனே வண்டியை தள்ளிக்கொண்டு வந்து டெலிவரி கொடுத்தான்.

*****-

டெலிவரி வாங்க ரஞ்சனியின் அப்பாதான் வந்திருந்தார்.

ஏமாற்றமாக இருந்தது சரவணனுக்கு.

செட்டில்-மெண்ட் முடிந்து வண்டியை சாலையில் ஓட்டிக் காட்டினான் சரவணன்.

பின்னால் உட்கார்ந்து வந்தார் ரஞ்சனியின் அப்பா.

“மிஸ்டர் சரவணன்... வண்டிய ஓரங்கட்ட முடியுமா...?”

நிறுத்தினான்.

ரஞ்சனியின் அப்பா பேசிய அனைத்தையும் காதில் வாங்கினான் சரவணன்.

*****-

சரவணன் ஸ்கூட்டியை மாரியம்மன் கோவில் முன் நிறுத்தினான்.

“ஹாய் சரவணா...!”

சந்தோஷமாய்க் கூவியபடி அவன் முன் வந்து நின்றாள் ரஞ்சனி.

பூஜை போடச் எலுமிச்சைப் பழம், அர்ச்சனை சாமான்கள் வாங்கும் சாக்கில் அவர்களைத் தனியே விட்டுவிட்டுக் கடைக்குச் சென்றார் ரஞ்சனியின் அப்பா.

ரஞ்சனியின் முகத்தில் வாட்டம்.

“நீ புத்திசாலினு நினைச்சேன் ரஞ்சனி...”

“என்ன சொல்றே சரவணா...?”

“அப்பா எல்லா விஷயமும் சொன்னாரு...!”

“அப்படியா...! நீ என்ன முடிவு பண்ணினே...?”

“நீ உன் அப்பா சொல்ற எம் எஸ் படிச்ச மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கறதுதான் சரினு நான் நினைக்கறேன்..”

"...   ...   ...   ...   ..."

‘எட்டு வருடங்களுக்கு முன் தயங்கித் தயங்கி ஐ லவ் யூ சொன்னவன்;

ஊருக்கு ஸ்டடி லீவுக்கு வரும்போதெல்லாம் காதல் பார்வை பாத்தவன் இந்தச் சரவணன்;

 இப்போ இப்படிப் பேசுகிறானே;

ஒரு வேளை அப்பா ஏதாவது அசிங்கமாய்ப் பேசி மிரட்டிவிட்டாரோ...!?”

சந்தேகம் வந்தது ரஞ்சனிக்கு.

சரவணனே தன் கையைக் காட்டிப் பேசினான்.

“ரஞ்சனி இது ஸ்பேனர் பிடிக்கற கை;

உன்னுது ஸ்டெத் பிடிக்கற கை;

ஸ்டெத்துக்கு இன்னொரு ஸ்டெத்தான் பொருத்தம். ப்ளீஸ் எம் எஸ் படிச்ச மாப்பிள்ளையை மறுக்காதே. போன்சாய் மாதிரி உன் வளர்ச்சியை நீயே தடுத்துக்காதே”

 "ஐ லவ் யூ !" ன்னு சொன்னது பொய்யா, அதனாலத்தான் இப்படி முடிவெடுத்தியா சரவணா...!"

ஆமாம் "ஐ லவ் யூ !"  பொய்தான்... என்று சொல்லி ஒரு சில கனங்கள் நிறுத்திவிட்டு...  

"ஐ லவ் யூ ஸோமச். லவ் யூ னு சொல்லிட்டா கல்யாணம் பண்ணிக்கிட்டே ஆகணும்னு அவசியமில்லை ரஞ்சனி. இப்பவும் ஐ லவ் யூ டூ மச் ரஞ்சனி. அதான் நீ பொருத்தமான இடத்துல நடப்பட்டு வேர் ஊனி வளரணும்னு ஆசைப்படறேன்'' என்றான் சரவணன்.

சரவணனின் காதல் நிவந்தம் கண்டு ரஞ்சனியின் கண்கள் பனித்தன.

*******

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.