Published:Updated:

ஓர் தனித்திருப்பவனின் பிரியாணி ஆசை! | My Vikatan

Representational Image

இப்போது வயிற்றுக்குள் யாரோ வாலிபால் ஆடுவது போல் இருந்தது. இரைப்பை பசிக்கான நோட்டிபிகேஷனை தொடர்ந்து கொடுத்த வண்ணம் இருந்தது.

ஓர் தனித்திருப்பவனின் பிரியாணி ஆசை! | My Vikatan

இப்போது வயிற்றுக்குள் யாரோ வாலிபால் ஆடுவது போல் இருந்தது. இரைப்பை பசிக்கான நோட்டிபிகேஷனை தொடர்ந்து கொடுத்த வண்ணம் இருந்தது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எனக்குள் அன்று ஏதோ உதித்தது அந்த எண்ணம்…

என் ஆழ்மனதில் நீண்ட நாட்களாக பொதிந்து கிடந்த ஆசை..

அந்த தீராத ஆசையை தனித்திருக்கும் இன்றைய மதியத்தில் எப்படியாவது தீர்த்துவிட வேண்டும் என திடமாக மனதிற்கு கட்டளையிட்டு தீர்மானித்துக் கொண்டேன்..

ஏறத்தாழ 3 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாத பணிச்சூழலில் காலை சிற்றுண்டியும் சரிவர உட்கொள்ளாமல் இரண்டு இட்லிகளை சர்க்கரையுடன் தொட்டுத் தின்றிருந்தது ஏற்கனவே இரைப்பைக்கு இரையாகி செரிமானமாகி விட்டிருந்தது,

இப்போது வயிற்றுக்குள் யாரோ வாலிபால் ஆடுவது போல் இருந்தது. இரைப்பை பசிக்கான நோட்டிபிகேஷனை தொடர்ந்து கொடுத்த வண்ணம் இருந்தது.

இந்த நேரம் பார்த்து இந்த ஆசை தேவைதானா? என வயிறு நடத்திய வினாடி வினாவில் இருதயம் ஆம்!! என பதிலளித்திருந்ததது..

அது! நீண்ட நாட்களாக வயிற்றில் எட்டிப் பார்த்திடாத, வாயோ! முத்தமிடாத சுவையான பிரியாணியை தன் கைப்பட செய்து சாப்பிட வேண்டுமென்ற தீராத ஆசைதான் இப்போது எனக்குள் துளிர்விட்டு இலை விட துடித்துக் கொண்டிருக்கிறது..

சரி! முதன்முதலாக செய்யப்போகும் பிரியாணி சொதப்பி விட்டால் என்ன செய்வது??..

எதற்கும் இன்னொரு முறையும் யூடியூபை திறந்து நமக்கு பிடித்த சிறந்த அந்த சமையல் பண்டிதரின் வீடியோவைப் பார்த்து மனசுக்குள் படம் பிடித்துக் கொள்வோம்,

என மொபைலை ஆன் செய்து கண்களை திரைக்குள் மேயவிட்டு பிரியாணி செயல்முறை விளக்கத்தை மறுமுறையும் மனசுக்குள் படம் பிடித்துக் கொண்டேன்.

ஓகே! ஓகே!! ரெடியாகியாச்சு.. சும்மா தெறிக்க விடலாமா!

என இப்போது மனம் வீர வசனம் பேசி ஆட்டத்திற்கு ரெடியானது..

காய்ந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நேரத்தில் அதில் எண்ணெய் விட்டு சுமார் இரண்டு நிமிட மணித்துளியளவில் பட்டை மற்றும் லவங்கம் அதில் படரவிட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் நறுக்கி வைத்த வெங்காயத்தையும் அதில் சேர்த்தாயிற்று..

இப்போது எண்ணெயோடு உறவு கொண்ட வெங்காயம் தனக்குள் பொன்னிற மேக்கப் இட்டு பெரிய வேண்டும்..

ஆனால்..வெங்காயமோ! ஊற்றி வைத்த எண்ணெயில் நிறம் மாறாத பூக்களாக நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது..

என்னாயிற்று ஒருவேளை பிளாஸ்டிக் வெங்காயத்தை வாங்கி வந்து விட்டோமோ? என குழம்பியவனாக பாத்திரத்தை தூக்கி பார்க்கிறேன்..

அங்கே!

அடச்சே!.. பற்ற வைக்கப்படாத அடுப்பு என்னைப் பார்த்து பல்லிளித்து பரிகாசம் செய்தது..

ஆஹா! முதல்லயே தடுமாறுதே! என்ன செய்யலாம் என இதயம் தடுமாற!

என்ன இருந்தாலும் சரி! முன் வைத்த கையை பின் வைக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை இதயத்திற்கு எடுத்து வைத்து மீண்டும் ஆட்டத்தை தொடங்கினேன்..

இப்போது அடுப்பை பற்ற வைக்க செங்கனலை கக்கியவாறு தீ சுவாலையானது பாத்திரத்தின் அடியை தாக்கி ஆவியை உள் தள்ளி எண்ணெயோடு இணைந்து வெங்காயத்தை சுட்டுப் பொரித்தது..

இப்போது யூடியூபில் கண்டதுபோல் ஒன்றையும் விடாது சில குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, தயிர் பின்னர் வேகவைத்த மட்டன் துண்டுகள் அதன் பின்னர் பிரியாணி மசாலா எல்லாம் இட்டு இப்போது அதன் மனம் அடுக்களை முழுதையும் ஆக்கிரமித்து 'பிரியாணி தென்றல்' நாசியைத் தாக்கியது..

சிறிது நேரம் கழித்து....

இப்போது அடுப்பை சிம்’மில் வைத்து பாத்திரத்தை தம்' இல் இட வேண்டும்..

அரிசி வெந்து தணிந்து பிரியாணி பூப்போல் படர ஒரு அரைமணி நேரமாவது தம்' இல் இடுவதே மிக முக்கியம் என வீடியோவில் பார்த்தது நினைவில் நிற்க ..

அதற்குள் எனது நெஞ்சிற்கினிய நண்பனையும் கூப்பிடுவோமே! பிரியாணி அரிசியும் சற்று கூடுதலாகவே விட்டிருக்கிறேன்..

என செல்பேசியை எடுத்து நண்பனின் எண்ணை விரலில் தேய்த்து காதில் வைப்பதற்குள் எப்போதும் சமூக வலைத் தளங்களில் மும்முரமாக இருக்கும் நண்பன் ஒரே ரிங்கில் எடுத்து வாய்க்கருகில் வைத்து...

ஹலோ! என்றான்..

அவனிடம் பிரியாணி என சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்து வந்தவுடன் பாத்திரத்தை திறந்து சஸ்பென்ஸை உடைப்போம்! என உள்ளுக்குள் நினைந்து கொண்டேன்..

அவனிடம் சாப்பிட வருமாறு அழைத்ததும் ! தமது வாய் அகல.. என்னடா மச்சி! ஏதும் வீட்டில விசேஷமா என்றவனுக்கு..

ஒண்ணுமில்லைடா! சும்மா நாம சேர்ந்து சாப்பிடலாம்னுதான் வாடா சீக்கிரம்" என அவனை அவசர படுத்த..

"தோ! கால் மணி நேரத்துல வந்துடரேண்டா!" என்றவன் கைபேசியை துண்டித்தான்..

இப்போது அடுக்களையில் வைத்திருக்கும் பிரியாணியின் வாசனை மூக்கையும், இதயத்தையும் துளைத்தது...

இதை உண்டு களித்துவிட்டு எந்நேரமும் சமூக வலைப்பக்கங்களில் ஆக்கிரமித்திருக்கும் நண்பன் முகநூல், வாட்சப், இன்ஸ்டா, ட்விட்டர் என அனைத்திலும் நமது பிரியாணியை அப்டேட் செய்து புகழ் மாலை சூட்டுவான்! ..

அடுத்து நட்பு வட்டாரத்தில் ஐயா’தான் பிரியாணி ஐடியா கொடுக்கும் மாஸ்டராக மிளிர போகிறேன் என கற்பனை குதிரைகள் ரெக்கை கட்டி பிரியாணி புகையில் 'பிளாஷ்பேக்'காக வந்து போனது..

சொன்னபடி அடுத்த கால் மணி நேரத்தில் காலிங் பெல்லை அடித்தான்..

கதவை திறந்ததும், நல்ல நேரத்துல கால் பண்ணேடா! அப்போதான் வேலைய முடிச்சிட்டு ‘சோமாட்டோ’வில் பிரியாணி ஆர்டர் பண்ண இருந்தேன், நல்லவேளையா உன்னோட கால் வந்துருச்சு..

சரி! பசிக்குது சீக்கிரம் சாப்பாட்டை போடு! என்றவனிடம்..

தோ! முடிஞ்சிடுச்சு இருடா! அஞ்சு நிமிஷத்துல சாப்பிட்டு விடலாம்.. என்று கூறிவிட்டு!

வாசனையை உற்பத்தி செய்து கொண்டிருந்த பிரியாணி பாத்திரத்தை..

அடுப்பை கவனமாக அடக்கிவிட்டு தீக்குளிப்பிலிருந்து காப்பாற்றி வெளியே இறக்கி வைத்தேன்..

சஸ்பென்ஸ் உடைந்து விடாமல் இருக்க மூடியை திறந்து விடாமல் சாப்பாட்டு மேசை 'க்கு கொண்டு சென்றேன்..

அங்கு ஏற்கனவே பசியுடன் இருக்கும் நண்பன் சாப்பாட்டு தட்டைகளை இருவருக்கும் கழுவி எடுத்து வைத்திருந்தான்.

பிரியாணி
பிரியாணி

பாத்திரத்தை மேசையில் இறக்கி, மொத்த ஆவியும் போகாமலிருக்க மூடியை லேசாக திறந்தேன்..

பிரியாணி ஆவி மெல்ல விடுதலையாகி என் முகத்தை மிதமான சூட்டில் ஒத்தடம் வைத்தது..

கரண்டியின் துணையுடன், ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் படர்ந்திருந்த பாசுமதி அரிசிகள் மட்டன் துண்டுகளோடு கட்டிப் புரண்டு கரண்டியில் தஞ்சமடைந்தது..

அதனை அப்படியே அள்ளி முதலில் நண்பனின் தட்டில் எடுத்து வைக்க ஏற்கனவே பசியுடன் வந்திருந்தவன் என்னை எதிர்பார்க்காமல் எடுத்து வேகவேகமாக சாப்பிடத் தொடங்கினான்.

நான் அவனையே! ஒரு கண்ணால் உற்று நோக்கினேன்..,

அவனிடம் வந்து விழப்போகும் பாராட்டு மழையில் நனைவதற்காகவும், அவன் வழியே இன்னும் சற்று நேரத்தில் சமூக வலைகளில் பிரபலமாகப் போகும் எனது பிரியாணியையும் நினைந்து கற்பனை குடையை விரித்தேன்..

ஒரு பதிலும் சொல்லாமல் பசி மயக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவனிடம் ..

"என்னடா மாப்ள!, எப்படி இருக்கு நம்மளோட பிரிப்பரேஷன்".. என அவனிடம் கேட்டுவிட்டு அவனது பாராட்டு பத்திரத்தை வாசிக்க என் இதயத்தை தயார் படுத்திக் கொண்டேன்..

"பிரமாதம்டா மாப்ள! என உச்சு கொட்டிவிட்டு எனக்கு ஒரு டவுட்டுடா!" என்றான் கண்கள் விரிய...

ஆஹா!.. சந்தேகம் கேட்குமளவுக்கு நான் பெரிய பிரியாணி எக்ஸ்பர்ட் ஆயிட்டேனா! இனி நண்பர்கள் வட்டத்தில் நான்தான் 'பிரியாணி மேதை'

இனி பல பேர் என்னிடம் பிரியாணிக்கு டிப்ஸ் கேட்கப் போகிறார்கள் என இப்போதே இதயம் கற்பனை கோட்டைக்குள் குடியேற தயாராகிக் கொண்டிருந்தது..

அதற்காகவே எதிர்பார்த்ததுபோல் என்னிதழ்கள் அவனிடம் ..

"சொல்லுடா மாப்ள என்ன சந்தேகம் கேளு சொல்றேன்" என்றேன் கெத்தாக..

.......

"ஒன்னுமில்லடா மாப்ள! தக்காளி சாதத்துல எதுக்குடா மட்டன் பீஸுலாம் போட்டிருக்கே!..

எண்ணமும் எழுத்தும்

பாகை இறையடியான்..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.