வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இருபது வயது இளைஞன் முனீஸ்வரன். கருப்புநிறத்தில் ஒடுக்கு விழுந்த முகம். அவன் தனது ஸ்பெலன்டர் பைக்கில் வேங்கடப்பன் என்கிற ஊர்க்கார தாத்தாவை அமர வைத்து அரசு அலுவலகத்துக்கு அழைத்து வந்தான்.
இவ்வளவு நாட்கள்... வேங்கடப்பன், தனிஒருத்தராக பஸ் ஏறி தான் இந்த அரசு அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தார். ஆனால் அத்தனை முறை தனது ஊருக்கு அடிப்படை வசதிகள் செய்துதர கோரி கோரிக்கை மனு அளித்தபோதும் அதை சம்பந்தப்பட்ட அதிகாரி பொருட்படுத்தவில்லை. இது அவர் கைப்பட எழுதிய நூறாவது மனு என்பதால் முனீஸ்வரன், "இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பாத்துடனும்" என்று வேங்கடப்பனுக்கு துணையாக வந்துள்ளான்.
அந்த நூறாவது மனுவை செல்போனை நோண்டிக் கொண்டிருந்த அரசு அதிகாரியை சந்தித்து வேங்கடப்பன் நீட்டினார். அதை கையில் வாங்காமல், "டேபிள்ல வச்சுட்டு கிளம்பு" என்று ஒருமையில் பதிலளித்தார் அரசு அதிகாரி. வேங்கடப்பன் தனக்கு பின்னாடி நின்றுகொண்டிருந்த முனீஸ்வரனை பார்க்க,
முனீஸ் அரசு அதிகாரியை பார்த்து...
"சார் இது எங்க ஊர் சார்புல கொடுக்குற நூறாவது மனு... தயவுசெஞ்சு பரிசீலனை பண்ணுங்க..." என்று சொல்ல,
அதிகாரி செல்போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு, அவனை முறைத்து பார்த்து...
"ஓ அப்படியா விஷியம்... நூறாவது மனுவா இது... பரிசீலன பண்ணனுமா... சிறப்பா பண்ணிடுவோம்..." என்று இருக்கையை விட்டு எழுந்து, டேபிளில் இருந்த அந்த கோரிக்கை மனுவை கையில் எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி மெதுவாக நடந்தார். முனீசும் வேங்கடப்பனும் அவர் பின்னாடி நடக்க, அதிகாரி அந்த மனுவை ராக்கெட் வடிவில் மடித்து இரண்டு கைகளால் அதை பறக்கவிட்டார். அந்த ராக்கெட் வாசலருகே இருந்த, மரக்கிளைகளில் போய் நன்கு சொருகிக் கொண்டது. பலமான காற்றடித்தாலும் கீழே விழாதளவுக்கு நன்கு சிக்கியிருந்தது. அதை கண்கூட பார்த்துவிட்டு முனீசும் வேங்கடப்பனும் அதிர்ச்சியுடன் அதிகாரியை பார்க்க,
"என்ன பாக்குறிங்க... நூறு முறை இல்ல... ஆயிரம் முறை மனு கொடுத்தாலும் உங்க ஊருக்குலாம் எதுவும் பண்ண முடியாது..." என்று அலட்சிய தொனியில் சொல்லிவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வேங்கடப்பனுக்கு சுருக்கென்று இருந்தது. அவர் மனமுடைந்து போயி தலை குனிய, முனீஸ் அதை பார்த்து வெகுண்டான்.
பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து பேஸ்புக் லைவ் ஆன் செய்து, "வணக்கம் நண்பர்களே... நான் உங்கள் முனீஸ்..." என்று தொடங்கி தனது ஊர்ப்பெயர், மாவட்டப்பெயர் என எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு... மரத்தில் சொருகியிருந்த ராக்கெட்டை காண்பித்து, "எங்க ஊர் அடிப்படை வசதிகளுக்காக எங்க ஐயா வேங்கடப்பன் தொடர்ந்து மனு கொடுத்துட்டு வராரு... அப்படி கொடுக்க தொடங்கி பல வருசமாயிடுச்சு... இன்னிக்கு அவரு அதிகாரிய சந்திச்சு கொடுத்த மனு நூறாவது மனு... சார் நூறு முறை மனு கொடுக்குற அளவுக்கு எங்க நிலைமை பரிதாபமா இருக்கு... தயவுசெஞ்சு எங்க கோரிக்கைய பரிசீலனை பண்ணுங்கனு சொன்னோம்... ஆனா அந்த அதிகாரி, அந்தக் கோரிக்கை மனுவ ராக்கெட்டா செஞ்சு அதை மரத்துல சொருகி விட்ருக்காரு... அதுமட்டுமில்லாம இன்னும் ஆயிரம் முறை மனு கொடுத்தாலும் எதுவும் செய்ய மாட்டோம்னு சொல்லிட்டாரு..." என்று நடந்ததை சொல்லி மரத்தில் சொருகியிருக்கும் ராக்கெட்டை பேஸ்புக் நேரலையில் மீண்டுமொருமுறை காட்டினான்.
அதை அலுவலக ஜன்னல் வழியே பார்த்த இன்னொரு பெண் அரசு அலுவலர், பதறியடித்து வந்து அதிகாரியிடம்
"சார் சார்... அந்தப் பையன் வீடியோலாம் எடுத்துட்டு இருக்கான் சார்..." என்று சொல்ல,
அதிகாரி "இவனுங்களுக்கலாம் அந்தளவுக்கு ஆயிடுச்சா... கைநாட்டா இருந்த வரைக்கும் ஐயா சாமின்னு கையெடுத்து கும்புட்டு கேட்டுட்டு இருந்தானுங்க... நாலு எழுத்து எழுத படிக்க தெரிஞ்சதும் அத செஞ்சு கொடு... இத செஞ்சு கொடுன்னு பேப்பர தூக்கிட்டு உரிமையோட வந்து கேக்குறானுங்க..." என்று புலம்பிவிட்டு வாசலை நோக்கி வந்து,
முனீசை பார்த்து "ஏய்... என்ன பேஸ்புக்ல லைவ் போடுறியா... இதெல்லாம் பண்ணா நாங்க பயந்துடுனுமா... எவங்கிட்ட போயி என்ன சொல்லனுமோ சொல்லிக்கோ... என்ன குட்டிக்கரணம் போட்டாலும் நான் கையெழுத்து போடாம எதுவும் நடக்காது... அந்த மரத்துல சொருகி இருக்குதே அந்த ராக்கெட்டு அது எத்தன நாள் ஆனாலும் அப்படியே தான் இருக்கும்... என்னால ஒருபோதும் அத பிரிச்சு படிக்க முடியாது... உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ... " என்று ஆணவத்துடன் சொல்ல, முனீசு அதையும் லைவ் ரெக்கார்டு செய்தான்.

அதிகாரியிடம் மனு கொடுப்பதற்கு முன்பு அந்த மனுவை ஒருமுறை போட்டோ எடுத்து வைத்திருந்தான் முனீஸ். அவர்கள் கொடுப்பது நூறாவது மனு என்றாலும் அந்த மனுவில் ஒரு வார்த்தை கூட கோபத்துடனோ அல்லது மரியாதை குறைவாகவோ இல்லை.
இவ்வளவு அலட்சியத்துடன் இருக்கும் அந்த அதிகாரியிடம் பதிலேதும் பேசாமல் வேங்கடப்பனை அழைத்துக்கொண்டு அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் முனீஸ். அவர்கள் கொடுத்த மனுவை அதிகாரி உதாசினப்படுத்தியதை முனீசு பேஸ்புக்கில் பதிவு செய்த அந்த வீடியோவும்... அந்த மனுவின் போட்டோ காப்பியும் அன்றிரவுக்குள் அனைத்து நியூஸ் சேனல்களுக்கும் தீயாய் பரவ, கம்யூனிஸ்ட் கட்சியினை சார்ந்த இளைஞர்கள் நடத்தும் "ரெட் சல்யூட்" என்ற யூடியூப் சேனலில் இருந்து முனீசுக்கு அழைப்பு வந்தது. முனீஸிடம் விவரங்கள் சேகரித்து, அந்த அதிகாரி மீது வழக்குத் தொடுத்தனர் ரெட் சல்யூட் இளைஞர்கள். அடுத்தநாளே அந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்கு வர,
"முதியவரின் கோரிக்கை மனுவை அலட்சியப்படுத்தி அதை ராக்கெட்டாக செய்து மரத்தில் சொருகிய அந்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி மரத்தில் சொருகியிருக்கும் ராக்கெட் வடிவிலிருக்கும் அந்த மனுவை அந்த அதிகாரியே கைப்பட எடுத்து அதை அந்த முதியவரிடமும் அந்த ஊர் மக்களின் முன்பும் வாசித்துக் காட்ட வேண்டும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடியோவாக பதிவுசெய்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மரத்தில் சொருகியிருக்கும் அந்த ராக்கெட்டை அந்த அதிகாரி எடுக்கும் வரை வேறு யாரும் அதை தொடக்கூடாது. அந்த அதிகாரி அதை எடுத்து விரித்து படிக்கும் வரை அந்த ராக்கெட் இருக்கும் மரத்திற்கும், முனீஸ் மற்றும் முதியவரின் குடும்பத்தாருக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அந்த அலுவலகத்தில் பணியாற்றும் இதர பணியாளர்கள் வழக்கம்போல தங்களது பணியில் ஈடுபடலாம்"
என்று உத்தரவிட்டனர்.

உத்தரவு வந்த அடுத்த சில நிமிடங்களில் அந்த அதிகாரி தலைமறைவானார்.
ரெட் சல்யூட் யூடியூப் சேனல் இளைஞர்கள், முனீசு மற்றும் வேங்கடப்பன் இருவரையும் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தரும்பொருட்டு அந்த ஊருக்கு நேரடியாக வந்தனர். சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும் அந்த ராக்கெட் இன்னும் மரத்திலயே இருப்பதை தங்களது யூடியூப் தளத்தில் பதிவுசெய்தனர். அந்த சேனலில் "கண் சிவந்தால் மண் சிவக்கும்" என்ற தலைப்பில் மக்களின் அடிப்படை உரிமைக்களுக்கான போராட்டம் குறித்து உரையாடுவார்கள். அந்த நிகழ்வில் முனீசும் வேங்கடப்பனும் கலந்துகொண்டு தங்களது ஊருக்கு அநீதி இழைக்கப்படுவதை பதிவு செய்தனர்.
ரெட் சல்யூட் இளைஞர்களும் முனிசும் வேங்கடப்பனும் அவர்களது ஊர்க்காரர்களும் அந்த ராக்கெட்டை பாதுகாக்கும் பொருட்டு அந்த அரசு அலுவலகத்தின் நான்கு பக்க காம்பவுண்டு சுவர்களையும் சுற்றி இரவுபகலாக காவலுக்கு இருந்தனர். அவ்வளவு தீவிர கண்காணிப்பில் இருந்ததால் அந்த ராக்கெட்டை வேறு யாரும் எடுக்க முன்வரவில்லை. காவல்துறை சார்பில் அந்த ராக்கெட்டை பாதுகாக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்த இரண்டு காவலர்கள் அந்த இளைஞர்களுடனும் ஊர்க்காரர்களுடனும் ஒட்டவில்லை.
சம்பவம் நடந்த ஆறாவது நாள் இரவு...
அந்த அலுவலகத்தை சுற்றி இருந்த இளைஞர்களுடன் வேங்கடப்பன் தங்கியிருந்தார். அப்போது அரசு அலவலகத்திற்குள் இருந்து கேட்ட சின்ன சத்தத்தை கேட்டு அவர் அதிர, ஊர்க்காரர்களும் இளைஞர்களும் பதறி எழுந்தனர். அலுவலகத்தின் நான்கு பக்க காம்புவுண்டு சுவரை சுற்றியிருந்த இளைஞர்கள் தங்களது செல்போன் டார்ச்சை ஒளிரவிட, அந்த ராக்கெட் பத்திரமாக அதே மரத்தில் சொருகி இருந்ததை பார்த்து பெருமூச்சு விட்டனர். "நாங்களாம் அந்தக் காலத்துல இப்படி கூட்டமா தீப்பந்தம் தூக்கிட்டு அடிப்படை உரிமைக்காக போராடுனோம்... இன்னிக்கு நீங்களாம் கூட்டமா செல்போன் டார்ச் அடிச்சு போராடுறிங்க... ஆனா கிடைக்க வேண்டிய வெளிச்சம் மட்டும் கிடைக்கவே மாட்டிங்குது..." என்று வேங்கடப்பன் சொல்லிவிட்டு...
அந்த ரெட் சல்யூட் இளைஞர்களை பார்த்து,
"தம்பி ஒருவேள நீங்களாம் வராம போயிருந்தா... என்னுடைய கோரிக்கை மனு ராக்கெட்டா சொருகி இருக்கே... அதே மரத்துல நான்..." என்று தழுதழுத்த குரலில் சொல்ல...
"ஐயா... நாங்களாம் எதுக்கு இருக்கோம்... அப்படி வுட்டடிச்சிட்டு போகவா, ரத்தம் சிந்தி எங்க அப்பா அம்மா எங்கள படிக்க வச்சாங்க... நாங்களும் கூலித்தொழிலாளிங்களோட பசங்க தான்... ரெட் சல்யூட் இளைஞர்கள் எல்லாருமே முதல் தலைமுறை பட்டதாரிகள்... பத்தாவது பணன்டாவதுலலாம் நல்ல மார்க் எடுத்து "கொத்தனாரின் மகன் மாவட்டத்தில் முதலிடம்" "ஆட்டோ ஓட்டுனரின் மகன் மாநிலத்தில் முதலிடம்"னு நியூஸ்ல வந்தவங்க நாங்க... நாங்க இருக்கோம் கவலபடாதீங்க..." என்று நம்பிக்கை அளித்தார் ரெட் சல்யூட் இளைஞர் ஒருவர்.
விடிய விடிய ரெட் சல்யூட் இளைஞர்களும் ஊர்க்காரர்களும் அந்த அலுவலகத்தை சுற்றி அந்த ராக்கெட்டை வேறு யாரும் எடுத்துவிடாத வண்ணம் பாதுகாத்திட...

ஏழாவது நாள் காலையில்...
அந்த அலுவலகம் வழக்கமாக செயல்பட துவங்கியது. மரத்தில் சொருகியிருந்த ராக்கெட் அப்படியே இருக்க, அதை வீசிய அந்த அதிகாரி பைக்கில் அங்கு வந்தார். அவரை எல்லோரும் கூடிநின்று பார்க்க, அவரை ரெட் சல்யூட் இளைஞர்கள் வீடியோ எடுக்க துவங்கினர். பைக்கை சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு, முனீசையும் வேங்கடப்பனையும் பார்த்தார் அதிகாரி. வசமாக சிக்கிக்கொண்டோம் என்பதை உணர்த்தியது அவரது உணர்ச்சிகளற்ற முகம். அவர் அந்த ராக்கெட்டை எடுக்க போகிறார் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள... அதை அரசு தரப்பில் வீடியோவாக பதிவுசெய்து நீதிமன்றத்திற்கு அனுப்பும் அதிகாரிகளும்... ஊர்மக்களும்... அங்கு விரைந்து வந்தனர்.
எல்லாம் தயாராக இருக்க, வேங்கடப்பன் கூட்டத்தின் முதல் ஆளாக நிறுத்தப்பட்டார். ரெட் சல்யூட் யூடியூப் சேனல் கேமிரா, அரசு தரப்பு அதிகாரிகள் கேமிரா, இளைஞர்கள் சிலரது செல்போன் கேமிரா என்று எல்லாவற்றிலும் அதிகாரியின் முகம் பதிவாகி கொண்டிருந்தது. மரம் அருகே சென்ற அதிகாரி கைநீட்டி அந்த ராக்கெட்டை எடுக்க முற்பட, அவருக்கு அது எட்டவில்லை. சில இளைஞர்கள் வேகமாக அலுவலகத்திற்குள் சென்று, அதிகாரி வழக்கமாக அமரும் அந்த "நாற்காலி"யை எடுத்துவர, அந்த நாற்காலியின் மீது கால்கள் வைத்து ஏறி அந்த ராக்கெட்டை தன் கைகளால் எடுத்தார் அந்த அதிகாரி.
ஊர்மக்கள் எல்லாரும் கூடிநிற்க, அவர்களை எல்லாம் பார்த்துவிட்டு அந்த ராக்கெட்டை விரித்து படிக்கத் தொடங்கினார் அதிகாரி. "ம" என்ற எழுத்தை மட்டும் உச்சரித்த அதிகாரி, அதோடு நிறுத்தி... வேங்கடப்பனை ஒருகணம் பார்த்துவிட்டு, மீண்டும் அந்த மனுவை பார்த்து வாசித்தார்
"மதிப்பிற்குரிய ஐயா"
*****
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.