சென்னையின் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடை கடையாய் ஏறி இறங்கி வாங்கிய ஆப்ப சட்டி முதல் பணியார கல் வரை சகல சமையல் சாமான்களையும் தாங்கிய பெட்டிகளை நியூயார்க் விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் போது அவற்றை எசகுபிசகாக தூக்கியதில் கமலாவின் தோள்கள் வலித்தன.
மகனையும் மருமகளையும் தேடி கண்களை சுழற்றினாள். 'ஹாய் கமலா! ஸ்ரீராமையும், மீனாவையும் தேடறியா? வர வழியில டிராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டாங்களாம். ஏர்போர்ட்ல உன்ன காக்க வெக்க விரும்பாததால என் வீட்டிலிருந்து உன்ன அழைச்சுகிறதா சொன்னாங்க", என்றபடி நியூயார்க் தமிழ் சங்க தலைவியான ரமா, கமலாவையும், அவளது நாட்டிய பள்ளி மாணவிகளையும் மலர்செண்டுகளுடன் வரவேற்றாள்.

'சென்னையில நாம அனுபவிக்காத டிராபிக் ஜாமா? அத்தனையும் சமாளிச்சு விருந்தோம்பல்ல எந்த குறையும் வராம நாம உபசாரிக்கலே? எல்லாம் பெண்டாட்டி பேச்ச கேட்டுக்கிட்டுதான் பையன் வரவேற்கக்கூட வராமலிருந்திருப்பான்', உசுப்பிவிட்ட மனதை வெளிக்காட்டி கொள்ளாமல் மாணவிகளோடு ரமாவின் ஹோண்டா காரில் புகுந்து கொண்டாள் கமலா.
மஞ்சள் , சிகப்பு , பச்சை நிற இலைகளை தாங்கிய மரங்களோடு அந்த இலையுதிர் காலத்தில் நியூயார்க் நகரமே மங்களகரமாக காட்சியளித்தது.
முப்பது வருடங்களுக்கு முன் சிங்கார சென்னையை இதே ஆச்சரியத்தோடு ரசித்தவாறு மகனை காண கிராமத்திலிருந்து ஆசையுடன் வந்திருந்த தன் மாமியாரின் நினைவு வந்தது கமலாவிற்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅப்படி வந்தவளை வயதில் மூத்தவளென்றும் பாராமல் எடுத்தெறிந்து பேசி, அவளை பற்றி ஒன்றிற்கு இரண்டாக கணவரிடமும், தோழிகளிடமும் புகார் கூறியதோடு, தன் பிள்ளைகளையும் பாட்டியிடம் அண்ட விடாமல் செய்தனவற்றையெல்லாம் மனசாட்சி சமயம் பார்த்து குத்திக்காட்டியது.
'நான் செய்த தவறுகளுக்கான தண்டனையை என் மருமகள் மூலம் அனுபவிக்கபோறேனோ?' பீதியில் ரமாவின் வீட்டை அடைந்து விட்டதைகூட கமலா கவனிக்கவில்லை.
"ஏம்மா இப்படி இளைச்சுட்டே?'
காத்துக்கொண்டிருந்த மகன் ஆசையாய் ஓடி வந்து அவளது கைகளை பற்றி கொண்டான். மருமகள் தன் கூந்தலை குட்டையாக்கி இருந்ததாலோ, அல்ல ஜீன்ஸ்சில் இருந்ததாலோ மணப்பெண் கோலத்தில் பார்த்ததைவிட இளமையாகவே தெரிந்தாள்.
கை பேசியில் மூழ்கியிருந்த ரமாவிடமும், ஆன்டனி செயிண்ட்டின் 'தி லிட்டில் பிரின்ஸ்' கதையை கை குழந்தைக்கு குரலை உயர்த்தி படித்துக்காட்டி கொண்டிருந்த ரமாவின் கணவரிடமும் கையசைத்து விட்டு தன் மகன், மருமகளுடன் கமலா நியூ ஜெர்சிக்கு பயணமானாள்.

'சாரிங் அத்தை நான் லேட்டா புறப்பட்டதாலதான் எங்களால ஏர்போர்ட்டுக்கு வர முடியில புறப்பட்ட சமயம் பாத்து ஆபீஸ்ல தவிர்க்க முடியாத மீட்டீங் வெச்சுட்டாங்க. அதனாலதான் டிராபிக் ஜாம்ல மாட்டிக்க வேண்டியதாயிடுச்சு', மகனின் தலையை உருட்டாத மருமகளின் வெளிப்படையான பேச்சிலிருந்தே அவள் தன்னை போல் இல்லை என்பது கமலாவிற்கு புரிந்தது.
சிக்கென்று இருந்த அபார்ட்மென்ட்டையும், அதில் கச்சிதமாய் பொருத்தப்பட்டிருந்த வீட்டு சாதனங்களையும், ஜன்னல் ஓரம் நேர்த்தியாய் வளர்ந்து கொண்டிருந்த புதினா, வெங்காயத்தாள், லெமன் க்ராஸ் செடிகளையும் கண்டு கமலா வியந்து கொண்டிருக்கையில், மருமகள் தயாராய் இருந்த கட்லெட், பணியாரம், கேசரியை ஓவனில் சூடாக்கி ஆசையாய் பரிமாறினாள்.
'வாக் போகலாமாங் அத்தை?' என்று அவள் அன்போடு அழைத்து சென்ற போதெல்லாம், அலுவலக அனுபவங்களை சுவாரஸ்யத்தோடு பகிர்ந்து கொண்டாள்.
வழியில் தோழிகளை சந்தித்த போது மாமியாரின் நாட்டிய திறமையை பற்றி கூறி அவர்களிடம் அறிமுக படுத்தியதோடில்லாமல், மாமியார் அரங்கேற்றிய நாட்டிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் உடன் பயணித்து, உற்சாகமும் அளித்தாள்.
ஊர் திரும்பும் நாளன்று, 'இனிப்பு சாப்பிடற பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் குறைக்க பாருங்கத்தை', என்று அக்கறையாய் வழி அனுப்பி வைத்த மருமகளிடம் நன்றிகளுடன் விடை பெற்று கொண்டாள் கமலா.
சென்னையை அடைந்து வீட்டிற்குள் நுழைந்ததும், தொலைபேசியை நாடினாள்.
கிராமத்து வீட்டில் தனியாக காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் தன் மாமியாரிடம் அன்பாய் நலம் விசாரிப்பதற்காக.
-மஞ்சுளா. சு
பெங்களூர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.