Published:Updated:

மழையில் நனைந்த வான்மலர்! - சிறுகதை

Representational Image

நான்கைந்து முறை கூப்பிடல்களுக்கும் பதில் இல்லை. மங்கையம்மா வேகமாக வந்து கதவருகே நின்றாள். உள்ளே எட்டிப் பார்க்க எதாவது வழி இருக்கிறதா என்று கண்களால் மேய்ந்தாள். அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

மழையில் நனைந்த வான்மலர்! - சிறுகதை

நான்கைந்து முறை கூப்பிடல்களுக்கும் பதில் இல்லை. மங்கையம்மா வேகமாக வந்து கதவருகே நின்றாள். உள்ளே எட்டிப் பார்க்க எதாவது வழி இருக்கிறதா என்று கண்களால் மேய்ந்தாள். அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

Published:Updated:
Representational Image

வான் மலருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் தலை இப்போது அவளின் வலது கையில். அவன் மயக்க நிலையில் இருக்கிறான். வீசி சுவரில் மோதினால் இறந்து போய்விடலாம். ஆனால் இவனை உயிருடன் விட்டால் தன்னைத் திரும்பவும் கொல்ல முயற்சி செய்யலாம். மெதுவாகக் கையைத் தளர்த்தினாள்.

அவன் சுருண்டு தரையில் விழுந்தான். இங்கிருந்து கிளம்பி விடலாம். போய் கணவரிடம் சொல்லிவிடலாம். அவள் நினைத்துக் கொண்டே நகரும் போது அவளின் இடது கால் இழுக்கப்பட்டது. அதிர்ந்து போய் கீழே விழுந்தாள். இப்போது அவன் கையில் கத்தி ஒன்று பளிச்சிட்டது. நீளமான கத்தி. குத்தினால் வயிறைக் கிழித்து முதுகு பக்கம் வந்துவிடும். என்ன நினைத்தோளோ? ஆவேசத்துடன் எழுந்து அவன் வலது கையை முறுக்கினாள். வலியைத் தாங்க முடியாமல் கத்தியை நழுவ விட்டான். இடது கையால் அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினாள். அவனைச் சுழற்றி அருகில் இருந்த பள்ளிச் சுவரில் மோதினாள்.

Representational Image
Representational Image

அவள் கைகளால் அவனைத் தூக்கிச் சுழற்றிய போது பாரமாக இருந்தது. ஆனால் இப்போது எளிமையை உணர்ந்தாள். கால்களில் ஈரத்தை உணர்ந்தாள். அவன் மண்டை உடைந்து இரத்தம் கொட்டுகிறது. அவ்வளவு தான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். அவள் ஓடுகிற நேரம் பார்த்து வானம் இடிந்து மழை கொட்டியது.

விடியற்காலை 3 மணி பள்ளி வளாகத்தைக் கடந்த தார் சாலையில் ஆள் நடமாட்டம் எதுவும் தென்படவில்லை. திடீர் மழையால் வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகளைக் கண்டுகொள்ளாமல் எதிரில் தெரிந்த தெருவை நோக்கி ஓடினாள். யாரும் தென்படவில்லை. அடுத்த தெருவுக்குள் நுழைந்து வெளி பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கட்டிலில் படுத்துக் கிடந்த 8 வயது மகள் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். கால்களில் எதோ ஊர்வதை உணர்ந்தாள். மகளைப் பார்த்தாள். “செல்லம்” நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டுக் குளியறைக்குச் சென்றாள். தொட்டியில் இருந்த தண்ணீரைப் பெரிய பித்தளைச் சொம்பில் எடுத்து ஊற்றிக் கொண்டாள். உடை உடுத்தியிருப்பதை அப்போது தான் உணர்ந்து கழற்றியெறிந்து மூச்சு வாங்க குளித்தாள்.

அவன் செத்துப் போயிருப்பானா? உயிரோடு வந்து பழி தீர்ப்பானா? மீண்டும் மகளின் முகத்தைப் பார்த்தாள். மார்புகள் துடித்துக் கொண்டிருக்க அப்படியே தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலை பள்ளியை ஒட்டிய சாலையில் காவல்துறையும் பொது மக்களும் குழுமி இருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பக்கத்து ஊர் சண்முகச் சுந்தரத்தோட பையன் ரோட்டில் செத்துக் கிடக்கிறாம்பா, ஏதோ லாரி அடிச்சி ஏத்திட்டுப் போயிருக்கும் போல”

அனைவரையும் கலைப்பது காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருந்தது. பக்கத்து ஊர்க் காரர்கள் வந்து விட்டார்கள்.

“என் பையன் வண்டி அதோ அங்கே தூரத்தில் இருக்கிறது, என் பையன் வண்டியை விட்டுட்டு எதுக்காக இவ்வளவு தூரம் நடந்து வரணும்”

“ஏன்மா, அதுவெல்லாம் இப்போ தெரியாது? குடிச்சிருந்தானா? கஞ்சா அடிக்கிற பழக்கம் இருந்ததா?”

“என் பையன் கட்டித் தங்கம்”

“ஆமாம், ஊர் உலகம் எல்லாம் உன் பையனைப் பத்திச் சொல்லிடிச்சி, நைட்லா கஞ்சா அடிச்சிட்டு போதையில் வந்து ரோட்டில் படுத்திருப்பான், லாரிக்காரன் எவனோ ஏத்திட்டு போய்ட்டான்”

Representational Image
Representational Image

“என் ஜாதிக்காரனை இந்த ஊர் ஜாதிக்காரங்க அடிச்சிக் கொன்னுட்டாங்க, 50 லட்சம் ரூபாய் கொடுக்கற வரையிலும் பொணத்தைத் தூக்க விட மாட்டோம்”

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்”

கலவையான பேச்சுகளைப் பற்றி கவலைப்படாமல் அவனின் பிய்ந்து போன உடல் ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது”

“என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்? இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்?”

ரிங் டோனாக பாடல் ஒலித்ததும் வான்மலர் அலறி அடித்து எழுந்தாள். சென்னையிலிருந்து கணவர் அழைக்கிறார். நேரத்தைப் பார்த்தாள். 6 மணி. இவ்வளவு சீக்கிரம் கூப்பிட மாட்டேரே?

நெஞ்சம் பதைபதைக்க

“ஹலோ,”

“என்ன தூங்கிட்டிருக்கியா? டிவியில் தலைபோகிற விஷயம் செய்தியா போய்ட்டிருக்க, அவன் என் ப்ரெண்ட் அமுதசேகரன் வாட்சப் வீடியோ அனுப்பி இருக்கிறான், ஊர்ல என்ன நடக்குது?”

“ஹலோ” வான்மலர் உடல் உதறியது

“என்ன எதுவும் தெரியாத மாதிரி கேட்கிற, நம்ம ஸ்கூல் ரோட்டில் பக்கத்து ஊர் பையன் ஆக்சிடென்ட்ல இருந்து கிடக்கிறானாம்”

வான்மலருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. வெளியே தெருவில் சலசலப்பும் சத்தமும் அதிகம் கேட்டது. வித்தியாசத்தை உணர்ந்த மகள் கவிமொழி எழுந்து கொண்டாள்.

“இருங்க நான் அப்புறம் பேசறேன்”

நைட்டியை மெல்ல பிடிச்சிக் கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தாள். திடீரென வீட்டிற்குள் நுழைந்தவள் 8 வயது மகளைத் தூக்கிக் கொண்டாள். தன்னைத் தூக்கி வைத்து 3 ஆண்டுகளுக்கு மேலாகி இருக்குமே, எதுவுமே தெரியாமல் அம்மாவைக் கட்டிக் கொண்டாள் கவிமொழி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோள் மேல் படுக்க வைத்துக் கொண்டு கதவை மீண்டும் திறந்து வெளிபக்கம் தாழ்ப்பாள் போட்டு விட்டுத் தெருவுக்கு வந்தாள்.

“ஏய், வானு, விஷயம் தெரியுமா? எப்படித்தான் உனக்குத் தூக்கம் வருதோ?”

தெரு கடைசி வீட்டு மங்கையம்மா சொல்லிவிட்டு வேகமாக நடந்ததும் அவள் பின்னாடியே பதற்றத்துடன் பின்தொடர்ந்தாள்.

“சார், அது ஆக்சிடன்ட் தான், தலை மண்டையில லாரி டயர் வேகமாக ஏறியிருக்கு, எந்தெந்த லாரி இந்தந்த வழிகளில் போனது என்று விசாரிக்க சொல்லியிருக்கோம்”

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்?”

“மண்டை இருந்தால் தானே, சார் கண்டுபிடிக்க முடியும், உடம்புல வேறு எந்தக் காயமும் தெரியலையாம். கஞ்சா அடிச்சிருக்கான், குடிச்சிருக்கான், நடு ரோட்டில் நடந்து வந்து மயக்கம் போட்டு விழுந்திருக்கணும், வேகமாக வர்ற பல லாரிகளில் ஒன்னு ஏத்திட்டு போயிருக்கும்”

பல மாத விசாரணைக்குப் பிறகு கோப்பு முடித்து வைக்கப்பட்டது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி போதை ஆசாமி இளைஞன் மரணம்.

இப்போதெல்லாம் 6 மணிக்கு மேல் வீட்டுக்குப் பின்புறமோ தெருவிற்கோ மகளை வான்மலர் அனுப்புவதில்லை. நடந்ததைக் கணவரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்ட தைரியத்தில் மகளுக்குத் தலைவாரிக் கொண்டிருந்தாள்.

லாரி
லாரி

அப்போது கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. மகள் ஓடோடி வெளியே செல்ல வான்மலர் தடுத்தாள். தானே சென்று கதவைத் திறந்தாள். கருத்த முகம், முகமெல்லாம் 6 மாத்திற்கும் மேற்பட்ட தாடி. கலைந்து போன தலைமுடி. அழுக்காகிப் போன வெள்ளைச் சட்டை. இப்படி ஒருத்தனைப் பார்த்ததும் வான்மலருக்குப் பயம் வந்தது?

கதவைச் சாத்திக் கொண்டு வெளியே வந்தாள். “யார் வேணும்”

“கொஞ்சம் தனியா பேசணும்”

“இங்கிருந்து போ, உன்னை யாருனே தெரியாது”

“ஆனால் எனக்கு அந்த வியடிற்காலை 3 மணி விஷயம் தெரியும்”

வான்மலர் அதிர்ந்து போய் பின்பக்க சுவரில் ஒட்டிக் கொண்டாள். மகள் வெளியே வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டாள்.

“கொஞ்சம் தனியா பேசலாமா?”

பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் புதிய சூழலை உணர்ந்து வான்மலர் வீட்டை நெருங்கத் தொடங்கினார்கள். வான்மலருக்கு முகம் வியர்த்தது. அந்தத் தாடிக் காரன் பாக்கெட்டிலிலுந்து சாக்லெட் எடுத்துக் கவிமொழிக்கு நீட்டினான். அந்தப் பிஞ்சுக் குழந்தை அம்மா முகத்தைப் பார்க்க, வான்மலருக்கு ஏதாவது முடிவெடுக்க வேண்டிய தேவை இருந்தது. உடனடியாக தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்த மங்கம்மாவிடம்,

“அக்கா, இந்த கவியைக் கொஞ்ச நேரம் வீட்ல பாத்துக்கோங்க, இவரு எங்க அம்மா வீட்டிலேயிருந்து வந்திருக்கிறாராம், 5 நிமிடம் பேசிட்டு கூப்பிட்டுக்கிறேன், “

கவிமொழியைப் பிடித்து மங்கையம்மாவிடம் கொடுத்துவிட்டு அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அது சிறிய வீடு. கட்டில் இருக்கும் அறையில் தான் நாற்காலி இருக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும் காய்கறிக் கூடைகளும், கோணிப்பைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. வேறு வழியில்லை. அவள் கட்டிலில் அருகே நின்றுகொண்டு அவனை நாற்காலியில் உட்காரச் சொன்னாள்.

அவன் “உட்காரு” என்று சொல்லி கட்டிலைக் கைகாட்டினான்.

மங்கம்மாவிற்கு இருப்பு தாங்கவில்லை.

“5 நிமிஷம்னு சொன்னாள், 1 மணிநேரம் ஆகப்போகுது, தனியா ஒரு ஆளை வீட்டுல வைச்சினு புள்ளையையும் வெளியே அனுப்பிட்டு அப்படி என்ன வேலை? புருசன் வெளியூர்ல இல்லைனா இப்படித்தான்”

கவிமொழியைப் பார்த்துச் சொன்னாள்,

“உங்க அம்மா உன்னைத் தேடுவாள், நீயே போய்ட்றியா?”

உம்மென்று உட்கார்ந்திருந்த கவிமொழி வெடுக்கென்று எழுந்து தெரு கடைசி வீட்டிலிருந்து வேகமாகத் தனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மங்கையம்மாவும் அவளைப் பின் தொடர்ந்தாள்.

வீட்டை நெருங்கியதும் கதவு உள்பக்கம் தாழ் போட்டிருந்தது. மங்கையம்மா வாசற்படியைப் பார்த்தாள். அந்தத் தாடிக்காரனின் செருப்புகளைக் காணோமோ? அவன் வெளியே விட்டிருப்பானா? உள்ளே விட்டிருப்பானா?

“அம்மா”

நான்கைந்து முறை கூப்பிடல்களுக்கும் பதில் இல்லை. மங்கையம்மா வேகமாக வந்து கதவருகே நின்றாள். உள்ளே எட்டிப் பார்க்க எதாவது வழி இருக்கிறதா என்று கண்களால் மேய்ந்தாள்.

அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

புத்தம் புது ஆடை. குளித்திருப்பாள் போல. முகத்தில் அழகான ஒப்பனை. தலை நிறைய பூ. நெற்றியில் அழகான பொட்டு.

மங்கம்மாவின் கண்களில் வீட்டு நடைபாதையில் தேடியது. செருப்பைக் காணோம்.

“உன் புள்ள, அம்மா அம்மானு கேட்டது, அதுதான் கூட்டினு வந்தேன்”,

“தேங்கஸ் கா” மகளை அழைத்துக் கொண்டு உள்ளே போனாள்

“இதா ஒருத்தன் வந்திருந்தானே? அவனை நல்லா கவனிச்சியா? உங்க அம்மா வீட்டுச் சொந்தம்னு சொன்னே”

வான்மலர் போலியாக சிரித்துவிட்டு வேகமாகக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“நீ புக்ஸ் எடுத்துப் படி” என்று சொல்லிவிட்டுக் கட்டிலில் மேலிருந்த பழைய பேப்பரை எடுத்துப் படித்தாள்.

“6வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை” அந்தச் செய்தியைப் படிப்பதற்கே அவளால் தாங்க முடியவில்லை. பொன் மின்னும் கன்னங்களில் தண்ணீர் வடிந்தது.

“இது ஒரு ஆணோட காட்டுமிராண்டித்தனம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அந்த வன்முறையின் போது அந்தக் குழந்தையின் துன்பம் எப்படி இருந்திருக்கும்? அந்தக் குழந்தை எப்படி வலியைத் தாங்கியிருக்கும்? 13 வயது 14 வயது பெண் இது என்ன மாதிரியான நோக்கத்திற்கான வன்முறை என்பதைப் புரிந்து கொண்டு வலியைத் தாங்காமல் செத்துப் போக முடியும், ஆனால் இந்த 6 வயது, 7 வயது, 8 வயது? எப்படித்தான் இந்தக் கொடுமைகளைச் செய்ய முடிகிறது? இதற்கான விசாரணை, நஷ்ட ஈடாக லட்சம் ரூபாய், தண்டனை, இதுவெல்லாம் அப்புறம் இருக்கட்டும், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கைகள் மடக்கப்பட்டு, கால்கள் …. அந்த இரத்தத்தில் குளிக்க இந்த மிருகங்களுக்கு மனம் துணிவது எப்படி?” அதற்கு மேல் வான்மலரால் யோசித்துப் பார்க்கவும் முடியவில்லை. அந்தப் பழைய செய்தித்தாளைப் படிக்கவும் முடியவில்லை. கண்ணீர் மழையில் நனைந்தாள்.

அந்தத் தாடிக்காரன் அந்தப் பள்ளி வளாகத்திற்கு வந்தான். வான்மலரால் சுவரில் மோதிக் கொல்லப்பட்டவனைத் தூக்கி வந்து ரோட்டில் போட்ட அந்த நிகழ்வு மனதிற்குள் நிழலாடியது. சிகரெட் பிடிக்கலாம் என்று ஒதுங்கியவனுக்கு ஒரு பெண்ணின் கெஞ்சல் கேட்டது.

Representational Image
Representational Image

“இதோ பாரு, , இதக்கப்புறம் என் வீட்டுக்குப் பின்னாடி வந்து என் பொண்ணை எதுவும் செய்ய நினைக்காதே, இரண்டு நாளா என் பொண்ணை யாரோ வீட்டுக்குப் பின்னாடி கவனிப்பதாக எனக்குச் சந்தேகம் வந்தது, உன்னைப் பத்தி எனக்குத் தெரியும், நீ தான் என்பதைக் கண்டுபிடிச்சேன், டெய்லி நீ போதையில இருந்தாலும் விடியற்காலமே நல்லா ப்ரெஷா வந்து எங்க ஊர் பசங்களோட கிரிக்கெட் விளையாடுவேனு தெரியும். எங்க வீட்டுக் காரரோட காய்கறி மூட்டை எடுத்துட்டுப் போகும் போதும் இரண்டு மூன்று தடவை உன்னை நான் இந்த டைம்ல இங்கே பார்த்திருக்கேன், அதுதான் எதோ ஒரு தைரியத்துல வந்துட்டேன். என் பொண்ணை நினைச்சி பார்க்கிற போது எனக்கு உன் கால்களில் விழுந்து கெஞ்சி கேட்டாலும் பரவாயில்லைனு தோணிச்சி”

சொல்லிக் கொண்டே அவன் கால்களில் விழுகிறாள். அவன் கைகள் அவனின் இடுப்பைப் பிடித்துத் தூக்கியது. இழுத்துக் கட்டிப்பிடிக்க முயற்சி செய்கிறான். அவ்வளவு தான். அவன் தலையைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி அப்படியே சுற்றி ரோட்டுத் தரைக்கு விசிறி அடித்தாள்.

பழைய நியாபகம் வந்ததும், அந்தச் சுவரோம் சென்ற தாடிக்காரன் “அங்கிருந்து அந்த உயிரற்ற உடலைக் கொண்டு வந்து ரோட்டில் கடத்தி தன்னுடைய லாரியை அவன் மேல் ஏற்றிச் சென்ற” நிகழ்வைக் கவனத்திற்குக் கொண்டு வந்தான். தூங்கிக் கொண்டிருந்த க்ளீனரை நினைத்து மெதுவாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து லாரியை வேகமெடுத்தான்.

பழைய செய்தித்தாளைப் படிக்க முடியாமல் தலைகுனிந்திருந்த வான்மலர் தன்னுடைய மகளுக்குத் துன்பம் நிகழவில்லை. ஆனால் அந்தத் தாடிக்கார அண்ணாவின் மகள் எப்படியெல்லாம் துடித்துப் போயிருப்பாள். “அழகான வண்ணத்துப் பூச்சியைக் கைகளில் பிடித்து ஒவ்வொரு இறகாகப் பிய்த்துப் போட்டு, துடிக்கும் கால்களைப் பிடுங்கி எறிந்து, குண்டூசியால் உடலைக் குத்திக் கண்களால் கேவலமாக சிரிக்கும் போது, உயிரின் ஒட்டுமொத்த வலியையும் சில நிமிடத் துளிகளில் உணர்ந்து கிழிந்த உடலில் உயிரை இழந்து போய்…”

மீண்டும் அந்தச் செய்தியை ஒரு முறை பார்த்தாள். 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை. லாரி ட்ரைவரின் மகள் என அடையாளம் தெரிந்தது.

-சி.செந்தமிழ் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism