Published:Updated:

தேவதை வம்சம்! - சிறுகதை

Representational Image ( Pexels )

மாமியாரின் பேச்சை மீற முடியாமல் கோவிலுக்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டு, அரக்க பறக்க வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு ஒன்பதரை மணிக்கு வந்து சேர்ந்தாள் சுகன்யா...

தேவதை வம்சம்! - சிறுகதை

மாமியாரின் பேச்சை மீற முடியாமல் கோவிலுக்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டு, அரக்க பறக்க வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு ஒன்பதரை மணிக்கு வந்து சேர்ந்தாள் சுகன்யா...

Published:Updated:
Representational Image ( Pexels )

நாளை மதியம் குழம்புக்கு மசால் அரைச்சு வெச்சாச்சு, கூட்டுக்கு காய்கறி நறுக்கி பிரிட்ஜ்ல எடுத்து வெச்சுட்டா, காலையில சீக்கிரமா சமையல் வேலையை முடிச்சுட்டு, தக்ஷினா மூர்த்தி கோவிலுக்குப் போய் காவ்யா பேருக்கு அர்ச்சனை வெச்சுட்டு, அப்படியே சாய்பாபா கோவிலுக்குப் போய் தரிசனத்தை முடிச்சுட்டு அப்படியே ஆபீஸ் போயிடலாம்...


நிம்மதியாகக் கண் அயர்ந்தாள் சுகன்யா ...


அம்மா, "என்னோட யூனிபார்ம் அயர்ன் பண்ணலயா?"


"நேத்தே அயர்ன் பண்ணி வெச்சுட்டேன்டி , அலமாரில இருக்கும் பாரு!"


"ஹையோ அம்மா இன்னைக்கு வியாழக்கிழமைன்னு மறந்துட்டு, வெள்ளிக்கிழமை யூனிபார்மை ரெடி பண்ணி வெச்சிருக்கீங்க?"சலித்துக் கொண்டாள் மகள் காவ்யா.


"அச்சச்சோ சாரிடி, நீ குளிச்சுட்டு வர்றதுக்குள்ள அயர்ன் பண்ணி வைக்கிறேன்."


" அம்மா சொல்ல மறந்துட்டேன், எனக்கு இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் கிளாஸ் இருக்கு, ஆறு மணி ஆகும் முடிய,டிபன் செஞ்சு குடுத்துடுங்க!" இது மகன் அர்ஜுன்.


" கொண்டைக்கடலை சுண்டலும், கொஞ்சம் பிஸ்கட்ஸும் வைக்கிறேன், சரியா? "


"ப்ளீஸ்ம்மா ரெண்டே ரெண்டு சப்பாத்தி மட்டும் !"


"சரி போய் ரெடி ஆகு, இப்போ பண்ணிடறேன்!"


" சுகன்யா, என்னோட பைக்கை சர்வீஸ்க்கு விடறேன், உன் ஸ்கூட்டியை எடுத்துட்டு போறேன், நீ பஸ்ல போயிடு. "


"சரிங்க!"


"சுகன்யா, மதியம் சாப்பிட என்ன செஞ்சிருக்க?"

"எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, புடலங்காய் கூட்டு அப்புறம் தக்காளி ரசமும் செஞ்சிருக்கேன் அத்தை!"

Representational Image
Representational Image
Anna Pou from Pexels

" சமைக்கக்கறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமில்ல சுகன்யா? எனக்கு வயிறு கொஞ்சம் சரியில்ல, உப்பு பருப்பு பண்ணிட்டு, தயிரைக் கடைஞ்சு இஞ்சி கறிவேப்பிலை தட்டிப் போட்டு வெச்சிடும்மா. "


மாமியாரின் பேச்சை மீற முடியாமல் கோவிலுக்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டு, அரக்க பறக்க வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு ஒன்பதரை மணிக்கு வந்து சேர்ந்தாள் சுகன்யா...

"குட் மார்னிங் சுகன்யா, கோவிலுக்குப் போயிட்டு வந்துட்டியா?"


"மார்னிங் மீரா, என் வீட்டு சூழ்நிலை தெரிஞ்சுட்டே இப்படி கேட்கலாமா மீரா?"


இந்தா இட்லியும் நிலக்கடலை சட்னியும் இருக்கு, சாப்பிட்டு வேலையப் பாரு!"

"தேங்க்ஸ் டி!"


" தேங்க்ஸ் சொன்னா இனிமேல் உனக்கு பிரேக்பாஸ்ட் கொண்டு வர மாட்டேன், சரியா? "


"சரி நீ சாப்பிட்டியா?"


"இன்னைக்கு வியாழக்கிழமை, மத்தியானம் தான் சாப்பிடுவேன்னு தெரியாதா?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"சாரி சாரி மறந்துட்டேன்!" நேத்து நைட் கெட்டுப் போன பரோட்டாவை டெலிவரி பண்ணிட்டு போயிட்டான், பார்சல் திறந்ததும் குமட்டிட்டு வந்திடுச்சு. "

"ஏன் மீரா இப்படி ஹோட்டல்ல சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கற? ஒரு பாக்கெட் தோசை மாவு வாங்கினா உனக்கு நாலு வேளைக்கு வரும். தோசை சுட்டு சாப்பிட என்ன கஷ்டம் உனக்கு?"

"தோசை சுடறது ஓகே ,ஆனா அதுக்கு சட்னி செய்யறது எவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் தெரியுமா? தோல்களைக் குலுக்கிக் கொண்டாள் மீரா.

"நீ திருந்தவே மாட்ட! உன் நல்லதுக்கு தாண்டி சொல்றேன், ஏன் எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டேங்கிற?"

" சில விஷயங்களை சீரியஸா எடுத்துக்காம இருக்கறதுதான் ஆரோக்கியம் என்னோட புருஷன் என்னை விட்டுட்டு சொல்லாம கொள்ளாம ஓடிப்போன விஷயம் உட்பட!"

"சரிங்க டீம் லீடர், நான் கேபினுக்குப் போறேன், லஞ்ச் டைம்ல பேசலாம்!"

Representational Image
Representational Image

சுகன்யாவும் மீராவும் கல்லூரிகாலத் தோழிகள், இருவரும் ஒரே கம்பெனிக்கு வளாக நேர்காணலில் தேர்வாகிப் பணியில் சேர்ந்து 15 வருடங்கள் ஆகி விட்டது.

சுகன்யாவின் கைப்பக்குவத்தைப் பாராட்டிக் கொண்டே வட்டிலைக் கழுவ வாய்ப்பளிக்காமல் விரல்களையும் விட்டு வைக்காமல் ருசித்து சாப்பிட்டாள் மீரா...

"மீரா திரும்பத் திரும்ப சொல்றேன்னு வருத்தப் படாதே, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கடி ப்ளீஸ்!"

" எதுக்கு அவனும் என்னை விட்டு ஓடிப்போகவா? "

"நீ நினைக்கிற மாதிரி ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்ல மீரா, நல்லவங்களும் இருக்காங்க!"

"என்னோட கேரக்டருக்கு எவனும் பொருந்தி வர மாட்டான், ஆள விடு."

"நான் உனக்கு உண்மையான தோழின்னா நான் சொல்றதைக் கேளு, இல்லேன்னா நீ நம்ம நட்புக்கு துரோகம் பண்றேன்னு அர்த்தம்!"

"ஓஹோ,நீ டிகிரி படிக்கும் போது ஆனந்தை உருகி உருகி லவ் பண்ணிட்டு, நல்லா சாம்பாதிக்கற மாப்பிள்ளை கிடைச்சதும் அவனை அநியாயமா கழட்டி விட்டுட்டு போனியே அதுக்குப் பேர் என்ன சுகன்யா?"

"ஆனந்த் மாதிரியே நீயும் என்னைப் புரிஞ்சுக்கல, அப்பாவை எதிர்த்துப் பேச தைரியம் இல்லாம எடுத்த முடிவு டி!"

உடைந்து போய் குலுங்கிக் குலுங்கி அழுதாள் சுகன்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"தைரியம் இல்லாதவளுக்கு எதுக்கு இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம்? எனக்கு தெரியும் உன்னால இன்னும் அவனை மறக்க முடியலன்னு. கடனேன்னு வாழ்ந்துட்டிருக்கே!"

"அப்படியெல்லாம் இல்ல மீரா, நான் சந்தோஷமான நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்துட்டிருக்கேன், அவர் என்னைக் கண்ணுக்குள்ள வெச்சு தாங்கறார். அதில் எந்தவித சந்தேகமும் இல்ல! பழைய நினைவுகள் எதுவுமில்லை இப்போ!"

Representational Image
Representational Image

"பழசெல்லாம் மறந்து போச்சு ஓகே ஆனா உன் வீட்டுக்காரர் உன்னைக் கண்ணுக்குள்ள வெச்சு தாங்கறார்ன்னு ஒரு வெடி போட்ட பார்த்தியா, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு சுகன்யா! அவர் அனுமதி இல்லாம 500 ரூபாய்க்கு ஒரு புடவை எடுத்ததுக்கு உன் புருஷனும் மாமியாரும் என்ன பேச்சு பேசினாங்கன்னு நீதானே கண்ணைக் கசக்கிட்டு சொன்ன?"


"ஆமாம் சொன்னேன், அதுக்கென்ன இப்போ, குடும்பம்ன்னா ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், தாண்டி வாழ்ந்து தான் ஆகணும்!"


"நடிச்சு தான் ஆகணும்ன்னு சொல்லு சுகன்யா, உன்னால இன்னைக்கு நீ நினைச்ச மாதிரி ஒரு கோவிலுக்குப் போக முடிஞ்சுதா? நீ உன் அம்மா வீட்டுக்குப் போய் ஒரு இரவாவது தங்கி எவ்ளோ வருஷம் ஆச்சு சொல்லு?" இது வரைக்கும் எத்தனை அலுமினி மீட்டிங்க்கு கூட உன் புருஷன் உன்னை அனுப்பியிருக்கார் சொல்லு?!"

" குடும்பத்துக்காக சில விஷயங்களை பெண்கள் தியாகம் பண்ணிதான் ஆகணும்,"


"சரிங்க தியாகத் தலைவி!"


"நான் உடம்பு சரி இல்லாம படுத்துட்டா அவரும் என் குழந்தைகளும் பார்த்துக்குவாங்க, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யாருடி பார்த்துக்குவாங்க ? "

"...........................!"

தேவதை வம்சம்! - சிறுகதை

காலாகாலத்துல ஒரு குழந்தையைப் பெத்துக்கோன்னு சொன்னேன், அதையும் நீ ஒத்துக்கல! இப்போ தனிமரமா நிக்கற, ஒரு தோழியா நீ தனியா கஷ்டப் படறதை சகிச்சுக்க முடியல மீரா!"


"என்னை நானே பார்த்துக்க முடியும்ன்னு நம்பிக்கை இருக்கு, எல்லா பிள்ளைங்களும் பெத்தவங்களை அக்கறையா பார்த்துக்கறாங்களா என்ன?"


"சரி அதெல்லாம் போகட்டும், நம்ம அக்கவுண்ட் ஆபீசர் நரேன் கிட்டத்தட்ட நாலு வருஷமா உனக்கு ப்ரபோஸ் பண்ணிட்டே இருக்கார்ல, ஒய் டோன்ட் யூ மேரி ஹிம்?"


"ஹா ஹா குட் ஜோக், அவன் ஒரு சந்தேகப் பிராணின்னு அவன் ஒய்ப் டிவர்ஸ் பண்ணிட்டுப் போயிட்டா, நானும் அந்த சாக்கடையில விழணும்ன்னு நீ எதிர் பார்க்கறியா ?"


"அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா....."


" நீ ஒண்ணும் சொல்ல வேணாம் டைம் ஆச்சு வேலையைப் பார்ப்போம் வா!"

சில மாதங்களில் மீரா பதவி உயர்வு பெற்று வெளியூர் சென்று விட, இருவருக்கும் இடையேயான தொடர்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது..


வருடங்கள் பல ஓடின...


"ஹலோ, யாருங்க பேசறீங்க?"


"ஹே சுகன்யா நான் மீரா பேசறேண்டி!"

வார்த்தைகள் வராமல் நா தழு தழுக்க "எங்கடி போய்த் தொலைஞ்ச இவ்ளோ வருஷமா?காவ்யா அர்ஜுன் கல்யாணத்துக்கு அழைக்க உன்னை காண்டாக்ட் பண்ணவே முடியல,உன்னோட மொபைல் நம்பர் எதுவும் வேலை செய்யல !"

"ஹே வெயிட் வெயிட் , பதட்டப் பட ஒண்ணுமில்ல, நான்தான் கொஞ்சம் விலகி இருக்கலாம்னு வேலையை ராஜினாமா பண்ணிட்டு அப்பாவோட கிராமத்துப் பக்கம் போயிட்டேன்!"

Representational Image
Representational Image

" என் நம்பர் எப்படி கிடைச்சது அது புது நம்பராச்சே? "

"அதெல்லாம் இந்த மீராவுக்கு பெரிய விஷயமா சுகன்யா? காவ்யா அர்ஜுன் எங்க இருக்காங்க? அவர் எப்படி இருக்கார்? மாமியார் இருக்காங்களா?"


" காவ்யா பெங்களூருல, அர்ஜுன் கனடால செட்டில் ஆயிட்டாங்க, மாமியார் தவறி எட்டு வருஷம் ஆச்சு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவரும் ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டார், லாக்டவுன் போட்டதால அர்ஜுன் காரியத்துக்கு வர முடியல, நானே எல்லாம் செஞ்சு முடிச்சேன், அந்த நேரங்களில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்!" காவ்யாவைப் பார்த்து கூட ஒன்றரை வருஷம் ஆச்சு, தனியா அல்லாடறேன் மீரா!" நா தழு தழுத்தது சுகன்யாவிற்கு.

"கூல் டவுன் சுகன்யா, இந்த உலகத்துல யாரும் யாருக்கும், எதுவும் எதற்கும் நிரந்தரம் இல்லை, நம்மை நாம்தான் பார்த்துக்கணும்."

"கரெக்ட் மீரா, நீ எப்படி இருக்க?"

" நீ எதிர் பார்த்த மாதிரி எனக்காக ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கிட்டேன். என்னோட இன்ப துன்பங்களில் பங்கெடுக்க எனக்கு குடும்பம் இருக்கு சுகன்யா!"


"அப்பாடா நன்றி கடவுளே, இப்பவாவது அவளுக்கு புத்தி வந்துச்சே! என் கனவு நினைவாயிடுச்சு! எனக்கு இப்பவே நீ சந்தோசமா வாழறதைப் பார்க்கணும் போல் இருக்கு மீரா!" தேம்பி தேம்பி அழுதாள் சுகன்யா.

Representational Image
Representational Image

அட்ரஸ் வாட்சப் பண்றேன், உடனே கிளம்பி வா, இப்போதான் நீ யார் கிட்டயும் அனுமதி வாங்கணும்னு அவசியமில்லையே? "


சந்தோஷத்தில் கை கால் ஓடவில்லை சுகன்யாவிற்கு, இரண்டு நாட்களில் மீராவைக் காண அவள் ஊரை சென்றடைந்தாள் சுகன்யா.

தோழிகள் இருவரும் ரயில் நிலையத்திலேயே கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீரில் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.


மீராவின் வீட்டு வாசலை அடைந்த சுகன்யா வார்த்தைகள் புதைந்து விக்கித்து நிற்க, மீரா அவளை அரவணைத்து உள்ளே அழைத்து சென்றாள்.


மீராவின் வீட்டு வாசலில் சுமீ கருணை இல்லம் என்ற பெயர்ப்பலகை காற்றில் அசைந்தாடியது.

அன்புடன்

நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism