Published:Updated:

கண்மணியின் தோழி! - சிறுகதை

Representational Image

தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்து கவிதாவைத் தூக்கி உட்கார வைக்க முயன்றார்கள். அவளின் கண்கள் பாதி திறந்திருக்க, அவளின் நெஞ்சுக்கூட்டிலிருந்து மட்டும் இதயத் துடிப்பு தெரிந்தது.

கண்மணியின் தோழி! - சிறுகதை

தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்து கவிதாவைத் தூக்கி உட்கார வைக்க முயன்றார்கள். அவளின் கண்கள் பாதி திறந்திருக்க, அவளின் நெஞ்சுக்கூட்டிலிருந்து மட்டும் இதயத் துடிப்பு தெரிந்தது.

Published:Updated:
Representational Image

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``கூட்டாஞ்சோறு கருவறுந்துபோனது.”

இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே கண்மணிக்கு அச்சம் தொற்றிக்கொண்டது. திரும்பிப் பார்த்து,

``என்ன பேசுற?” என்று கேட்கும்போதே,

தன்னுடன் நடந்துகொண்டு வந்திருந்த கல்லூரித் தோழி கவிதா மயக்கம் போட்டு விழுந்தாள்.

கண்மணி உடனடியாகக் கவிதாவைத் தாங்கிப் பிடிக்க முயற்சி செய்தாள். ஆனால், அதற்குள் அவள் தலை தரையில் சாய, அக்கம் பக்கம் வந்து,

``யாராவது, வாங்க” என்று சத்தமாகக் கத்தினாள்.

தெருவில் சென்றுகொண்டிருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்து கவிதாவைத் தூக்கி உட்கார வைக்க முயன்றார்கள். அவளின் கண்கள் பாதி திறந்திருக்க, அவளின் நெஞ்சுக்கூட்டிலிருந்து மட்டும் இதயத் துடிப்பு தெரிந்தது.

உடனடியாக வழியில் செல்லும் ஆட்டோவை அழைத்துக் கண்மணி ஒரு பக்கமும் வீதியில் சென்ற இரண்டு பேரும் ஆட்டோவில் ஏறினார்கள்.

ஆட்டோ பக்கத்திலிருந்த மருத்துவமனைக்குள் நுழைந்தது. அலட்சியப்படுத்தாமல் மருத்துவர் ஒருவர் கவிதாவைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இந்தப் பொண்ணு கர்ப்பமா இருக்கு.”

கண்மணி பதில் பேசத் தெரியாமல் விழிக்க, மயக்கம் தெளிந்திருந்த கவிதா எதுவும் பேசாமல் வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கான நடையைத் தொடங்கினாள்.

டாக்டருக்குக் காசு கொடுக்க வேண்டும். ஆட்டோவுக்குக் காசு கொடுக்க வேண்டும். எல்லாக் கவலைகளும் கண்மணிக்கு ஒட்டிக்கொள்ள, கவிதாவோ காணாமல் போய்விட்டாள்.

கண்மணி பொறுமையாகக் கைபேசியை எடுத்து,

``கூகுள் பே நம்பர் சொல்லுங்கள்” என்றாள்.

கவிதாவின் அவசர வெளிநடப்பு கண்மணிக்குப் பதற்றத்தைக் கொடுத்தது. வேகவேகமாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்து,

``கவிதா, கவிதா” என்று கூப்பிடுவதற்குள் நட்டநடு சாலையில் வேகமாக நடந்த கவிதா மீது வேகமாக வந்த ஒரு பேருந்து மோதியது.

கண்மணியால் அன்றிரவு தூங்க முடியவில்லை. அவளின் அம்மாவும் தங்கையும் தேற்றிக்கொண்டிருந்தார்கள்.

மறுநாள் ஒரு செய்தித்தாள் இவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தது.

``பலபேருடன் காதல் விளையாட்டு, பஸ் மோதி கல்லூரி மாணவி பலி.”

அந்தச் செய்தியைப் படிக்க முடியாமல் கோபத்தையும் அழுகையையும் வெளிபடுத்தியவாறே கல்லூரிக்குப் போகாமல் ஒரு வாரம் வீட்டிலேயே முடங்கிப்போனாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு வாரம் கழித்து அதே செய்தித்தாளை எடுத்து வந்து அவளின் அம்மா தந்தாள்.

``ஏய், இது பாரு, கவிதா எழுதிய சிறுகதை ஒன்று வெளிவந்திருக்கு,”

கடந்த வாரம் கவிதாவின் இறப்புச் செய்தி அதுவும் கொச்சையாக. இந்த வாரம் அவள் எழுதிய சிறுகதையின் தலைப்பு.

``கூட்டாஞ்சோறு கருவறுந்துபோனது.”

அந்தக் கதையை அதற்கு மேல் படிக்காமல் வேகவேகமாக எழுந்தாள்.

நேராகக் காவல்நிலையம் சென்றாள்.

``சார், கவிதா போன வாரம் இறந்துபோனாள் இல்ல, அவள் என்னோட ஃப்ரெண்ட், அவளை யாரோ பாலியல் கொடுமை பண்ணியிருக்காங்க, அது அவளுக்கே தெரியாது, அதனால்தான் கர்ப்பமாகியிருக்காள்.”

கண்மணியின் பேச்சைக் கேட்டதும் காவல்நிலை ஆய்வாளர் கதிரேசன் வெறுப்படைந்தார்.

``என்னம்மா நீ, விபத்துனு சொல்லி, கேஸை முடிக்கப்போறோம், இப்போ வந்து…”

``சார், நான் சொல்றதைக் கேளுங்கள். என் ஃப்ரெண்ட் கவிதா நல்லா கவிதை, கதை எழுதுவாள், கூட்டாஞ்சோறு கருவறுந்தது என்ற சிறுகதை எதைப் பற்றியது தெரியுமா? ரொபைனால் என்ற மயக்க மருந்து கொடுத்தால் அந்தப் பொண்ணுக்கு எதுவும் தெரியாது. மயங்கிடுவாள். அந்த நேரம் பார்த்து அவளைக் பலாத்காரம் செய்யலாம். இதைத்தான் கவிதா கதையா எழுதப் போறதா என்னிடம் சொல்லியிருக்கா. அவள் நல்ல பொண்ணு, யாரையும் காதலிக்கல, இவளுக்கு இந்தத் துன்பம் நடந்திருக்க வாய்ப்பிருக்கலாம்னு தோணுது..”

கண்மணியின் முகத்தைக் கதிரேசன் உற்றுப் பார்த்தார்.

தன்னுடைய தொலைபேசியைச் சுழற்றினார்.

``அமர், கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வா பேசணும்.”

கண்மணியை நிமிர்ந்து பார்த்துப் பேசினார்.

``நீ கம்ப்ளைன்ட் ஒண்ணும் எழுத வேணாம், உனக்குத்தான் பிரச்னை, போன் நம்பர் கொடுத்துட்டு வீட்டுக்குப் போ, நான் கூப்பிட்றேன்.”

Representational Image
Representational Image

``இல்ல, சார், பிரச்னை வந்தால் நான் பார்த்துக்கறேன்.”

கையில் வைத்திருந்த புகாரை எடுத்து வலது கையால் டேபிள் மீது வைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள்.

காவல்நிலையத்துக்குள் என்பீல்டில் வந்து இறங்கினான் அமர்.

``சார், சொல்லுங்க, வரச் சொல்லி இருக்கீங்க, நான் சரக்குக்கான மாமூல் சரியா கொடுத்து அனுப்பிட்டேனே சார்.”

கதிரேசன் முறைத்தார்.

``ரொபைனால் யாருக்காவது சப்ளை ஆச்சா?”

``சார், கஞ்சா மட்டும்தான் நம்ம பிசினஸ், நான் தொழிலில் சுத்தம், ரொபைனால் பத்தி எனக்கு எதுவும் தெரியாது சார். ஆனால், நம்ம ஊரு பணக்காரு சுந்தரேசன் பையன் பொண்ணுங்களுக்குத் தெரியாமல் மருந்து கொடுக்கணும், எதாவது இருக்கானு என்னிடம் கேட்டான், நான் அதெல்லாம் எங்கிட்ட இல்லைனு சொல்லிட்டேன்.”

அடுத்த ஒரு மணிநேரத்தில் சுந்தரேசன் பையன் கைகால் எல்லாம் வீங்கிப் போய் முகமெல்லாம் ரத்தத்தால் அடிவாங்கி இருந்தான். கதிரேசன் மிரட்டல் குரலில் கேட்டார்,

“சொல்லுடா, என்ன நடந்துச்சி”

அவனிடமிருந்த பறித்த செல்போனில் “கவிதாவைக் கூட்டுக் கொடுமை செய்வதும், அந்தப் பெண் எதுவும் தெரியாமல் மயங்கிக் கிடப்பதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன”

வேகவேகமாக சுந்தரேசன் காவல்நிலையத்துக்குள் வந்தார்.

``சார், 50 லட்சம் தர்றேன், பார்த்து செய்யுங்க.”

கண்மணிக்கு போன் வந்தது.

``ஏம்மா, நான் இன்ஸ்பெக்டர் பேசறேன், நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணும் இல்ல, அந்தப் பொண்ணு கர்ப்பம்னே டாக்டர் ரிப்பேர்ட் சொல்லல, விபத்து நடந்த அன்னைக்கு ஹாஸ்பிடல் வாசலில் கவிதாவைச் செக் பண்ண டாக்டர் தெரியாமல் கர்ப்பமா இருக்குனு சொல்லிட்டாராம், நீ வந்து கம்ப்ளைன்ட் பேப்பரை எடுத்துட்டுப் போய்டுமா.”

கண்மணி காவல்நிலையத்துக்குச் சென்றாள். புகார் மனுவை இன்ஸ்பெக்டர் டேபிளிலிருந்து வலது கையால் எடுத்தாள். ஆனால், அவளின் இடது கை டேபிளுக்குக் கீழே இருந்து ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டது.

மாவட்டத் துணைக் கண்காணிப்பாளராகப் புதியதாகப் பொறுப்பேற்றிருந்தாள் சுடரொளி. குடிமையியல் தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்திருந்தாலும் ஐ.ஏ.எஸ் படிப்பதைத் தவிர்த்துவிட்டு ஐ.பி.எஸ் தேர்வு செய்தவளாக அனைத்துச் செய்தித்தாள்களிலும் இடம்பிடித்தவள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நம்பிக்கையோடு வந்திருக்கேன், நான் தப்பான போலீஸ் கிட்ட போனால் என்னைக் கொன்னுடுவாங்கனு தெரியும்.”

கண்மணி கொடுத்த ரகசிய ஆடியோ ரெக்கார்டரில் பதிவாகி இருந்ததைச் சுடரொளி முழுவதுமாகக் கேட்டாள்.

``இந்த ஆடியோ ரிக்கார்டரை இன்ஸ்பெக்டர் டேபிளுக்கு அடியில் வைத்துவிட்டு வந்திருக்க, எப்படி வந்தது தைரியம்.”

``என் தோழி கவிதா நல்லவள், நேர்மையானவள், அவள் தப்பு செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு, அதுதான் என் தைரியத்துக்குக் காரணம்.”

சுடரொளி முகத்தில் எந்த பாவனையையும் காட்டாமல் பேசினாள்.

``நீ கம்ப்ளைன்ட் ஒண்ணும் எழுத வேணாம், உனக்குத்தான் பிரச்னை, போன் நம்பர் கொடுத்துட்டு வீட்டுக்குப் போ, நான் கூப்பிட்றேன்.”

இன்ஸ்பெக்டர் சொன்ன அதே வசனம். ஆனால், பதில் எதுவும் பேச முடியாமல் கண்மணி அங்கிருந்து எழுந்து வீட்டுக்குச் சென்றாள்.

அவள் வெளியேறும்போது கண்மணி எந்த ரெக்கார்டரையும் டிஎஸ்பி அலுவலகத்தில் வைக்க முயற்சி செய்யவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

கண்மணி வெளியேறியதும் சுடரொளி தனது தொலைபேசியைச் சுழற்றினாள்.

``என்னங்க கதிரேசன், 50 லட்சம் பேசியிருக்கீங்க, 1 கோடியா கேளுங்க, அந்தாளு தர முடியும். நாளைக்குக் காலையில சுந்தரேசன், அவங்க பையன், நீங்க எல்லோரும் அம்புஜம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் பண்ணுங்க, பணத்தை அங்கே பிரிச்சிக்கலாம்.”

Representational Image
Representational Image

சுடரொளி போனை வைத்தாள். வெளியே கண்மணியின் நிழல் தெரிந்தது. ஆனால் சுடரொளி அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அம்புஜம் ஹோட்டல் ரூம் நம்பர் 304-ல் சுடரொளி, கதிரேசன், சுந்தரேசன், சுந்தரேசன் மகன் உட்கார்ந்திருந்தனர். ஒரு கோடி ரூபாயைக் கதிரேசன் எண்ணி முடித்தார்.

சுடரொளி தன்னுடைய செல்போனை எடுத்துப் பேசினாள்,

``கண்மணி, ரூம் நம்பர் 304-க்கு வா.”

``நான் வந்து …''

``நீ எதையும் சொல்ல வேணாம், நீ ஹோட்டலுக்கு வந்திருக்க, எனக்குத் தெரியும், நீ ரூம் நம்பர் 304-க்கு வா.”

கண்மணி உள்ளே நுழைந்தாள். முகத்தில் பயம் தெரிந்தது.

இன்ஸ்பெக்டர் கதிரேசனுக்குக் குழப்பமாக இருந்தது.

சுடரொளி, கதிரேசன் பாக்கெட்டிலிருந்த ரிவால்வரை எடுத்தாள். கதிரேசனால் தடுக்க முடியவில்லை.

ஆளாளுக்கு ரெண்டு குண்டு. மொத்தம் ஆறு குண்டு. மூன்று பேரும் ரத்ததில் அலறி சரிந்த சத்தம் அந்த அறைக்கு வெளியே கேட்டிருக்காது.

அதிர்ச்சியிலும் திகைப்பிலும் கண்மணி நின்றிருந்தாள்.

``உட்காரு.”

சுடரொளி தான் கொண்டு வந்திருந்த மாத இதழ் ஒன்றை எடுத்துக் காட்டினாள்.

கவிதாவின் சிறுகதை ஒன்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது.

``பெண்கள் எழுதுகிற கதை, நான் விரும்பிப் படிப்பேன், உன் கவிதா இந்தக் கதையில் என்ன எழுதி இருக்கா தெரியுமா?

உன்னுடன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்று பார்க்காதே... உண்மையின் பக்கம் நீ நிற்கிறாயா? என்று பார்.”

கண்மணி வியப்புடன் சுடரொளியைப் பார்க்க,

``உன்னை மாதிரி என்னை மாதிரி, கவிதா மாதிரி நேர்மையின் பக்கம் நிற்கிற பெண்கள் படையை உருவாகணும், இந்தப் பணத்தை வைச்சு ஏதாவது செய், நீ புத்தி சாலி.”

சுடரொளியின் அடுத்த அழைப்பு மாவட்டக் கண்காணிப்பாளருக்கு.

``சார், ரொபைனால் கடத்தல் பிரச்னை, நம்ம இன்ஸ்பெக்டர் கதிரேசனை சுந்தரேசனும் அவன் மகனும் சுட்டுட்டாங்க. எனவே, நான் அவங்கள சுட வேண்டியிருந்தது.

சுடரொளி சொன்ன பொய்களைக் கேட்டதும் கண்மணிக்குப் புரிந்தது.

``உண்மை என்பது வார்த்தைகளில் அல்ல, அது நேர்மையின் பக்கம் நிற்பதில் இருக்கிறது.”

- சி.செந்தமிழ் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism