வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
20 வருடங்களுக்கு முன்னால் வரை நான் தாங்க எங்க வீட்ல துணி துவைக்கும் இயந்திரம். உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் என்றால் சமையலுக்கு அடுத்தபடியாக துணி துவைப்பது தான். அதிலும் என் கைகளாலேயே துணி துவைத்து, காய வைத்து, இஸ்திரி போடுவது போல் மடித்து அவரவர் இடத்தில் வைப்பது வரை... எல்லாமே எனக்கு மிகவும் பிடித்து நான் செய்கின்ற ஒரு விஷயம். நினைவு தெரிந்து எங்கள் வீட்டில் அவரவர் துணியை அவரவர் துவைப்பது தான் வழக்கம்.. எங்கள் வீட்டில் பித்தளை வாளிகள் ஒரே மாதிரி ஆறு இருக்கும். ஆறு பித்தளை வாளிகளிலும் தண்ணீரை கிணற்றிலிருந்து சேந்தி முக்கால் வாளி நிரப்பிவிட்டு ( கிணற்றில் தண்ணீர் சேர்ந்துவது ஒரு கலை. அது எனக்கு கைவந்த கலை) சிலோன் ரேடியோவை வைத்துக் கொண்டு (சத்தமாக) பாடல்களை கேட்டுக்கொண்டே துணி துவைப்பேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மகிழ்ச்சியாக துணி துவைக்கும் போது அந்த மகிழ்ச்சி துணியின் வெண்மையில் தெரியும். துவைக்க வேண்டிய துணிகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து , பிறகு அழுக்கு போக பிரஷ் செய்து நன்கு துணியை கும்மி, துவைக்கிற கல்லில் அடித்து வாளிகளில் நிரப்பியுள்ள நீரில் நன்கு அலசி ஒரே மாதிரி சுருக்கம் இல்லாமல் நன்கு உதறி காய வைப்பேன்.. திருமணம் ஆகியும் இதே நிலைதான் என்னவொன்று பித்தளை வாளிக்கு பதில் அலுமினிய வாளி. (அத்தை மும்பையில் இருந்து ஒரே மாதிரி வாங்கி வந்தார்கள். வாளி கனமாக இல்லாமல் லேசாக இறகு போல் இருக்கும்)
துணி துவைத்து காய வைத்ததும் "ஆமா எப்படி ஆதிரை உங்க வீட்டு துணி மட்டும் அப்படி ஒரு வெண்மையா இருக்கு?" என்னதான் நான் துவைத்தாலும் இந்த கறைகள்கள் எல்லாம் போகவே மாட்டேங்குது... நீ என்ன மேஜிக் செய்கிறாய்?" ரொம்ப நல்ல நிறத்தில் இருந்த துணி இப்போ சாயம் போய் பழைய துணி மாதிரி ஆயிடுச்சு .உங்க வீட்ல எல்லா துணியும் அப்படியே பிரெஷா இருக்கு? எங்க வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் தவறாமல் கேட்கும் கேள்வி.. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் ஒரே பதில் நான் துணியை கைகளில் துவைப்பதுதான் என்பதாகவே இருக்கும்.
ஆம் அப்படிப்பட்ட என்னை பிள்ளைகளின் படிப்பு வீட்டில் பெரியவர்களை கவனித்துக் கொள்ளுதல் குடும்ப நிர்வாகம் இவையெல்லாம் சற்று அழுத்த ஆரம்பிக்க 2006 ஆம் வருடம் பிரபல துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கினேன் .15 வருடங்களாக அந்த ஒரே இயந்திரத்தில் தான் துணி துவைக்கிறேன். அன்றாட துணிகளை மட்டுமே!
இன்னமும் கணவரின் அலுவலக உடைகளை கையில் துவைப்பதைத்தான் என் ப(வ)ழக்கமாக வைத்திருக்கிறேன்.

ஒவ்வொரு ஷர்ட்டும் ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்கியவை. இரண்டு தடவை இயந்திரத்தில் போட்டாலே அவை நிறம் மாறி... காலரில் எல்லாம் நூல் பிரிந்து வருகிறது. அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
அதேபோல் மிதியடிகளை எக்காரணம் கொண்டும் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட மாட்டேன் கொஞ்சம் அழுக்காக இருந்தாலே சுடுநீரில் சோடா உப்பு மற்றும் சோப்பவுடர் சேர்த்து இரவு முழுதும் ஊற வைத்து காலையில் துவைத்து சூரியன் வணக்கம் சொல்லும் முன் காய வைத்து விடுவேன். அதுவும் இரண்டு முறைதான். இரண்டு முறைக்கு மேல் கண்டிப்பாக அதை உபயோகப்படுத்த மாட்டேன். மாற்றி விடுவேன்.
மொத்தத்தில் துணி துவைக்கும் இயந்திரத்தை வாரம் ஒரு முறை அதற்குரிய பவுடர் போட்டு அதை நன்கு குளிப்பாட்டி, மென்மையான காட்டன் துணிகளால் துடைத்து பத்திரமாக நான் பார்த்துக் கொள்ள ...அவன் எனக்கு விசுவாசமாய்!
என் இனிய எந்திரன் அவன்!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.