Published:Updated:

அப்பாவின் ரத்தக்கறை! | குறுங்கதை | My Vikatan

Representational Image

கதிருக்கு எழுத்துத் தேர்வு ஒரு விஷயமே இல்லை. அந்த கயிறு ஏறுவதில் தான் சிரமம். ஆனால் இந்த முறை அதையும் எப்படியோ வெற்றிகரமாக ஏறி முடித்துவிட்டான்.

அப்பாவின் ரத்தக்கறை! | குறுங்கதை | My Vikatan

கதிருக்கு எழுத்துத் தேர்வு ஒரு விஷயமே இல்லை. அந்த கயிறு ஏறுவதில் தான் சிரமம். ஆனால் இந்த முறை அதையும் எப்படியோ வெற்றிகரமாக ஏறி முடித்துவிட்டான்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வரிசையில் நான்காவது ஆளாக நின்று கொண்டிருக்கும் கதிருக்கு இது தான் கடைசி வாய்ப்பு.

இதிலும் தோல்வியைத் தழுவினால் அம்மாவை இனி சமாளிப்பது மிகவும் கடினம். மனதில் ஒருவித நடுக்கத்தோடு நீளம் தாண்டும் போட்டியில் தனது சுற்றுக்காக காத்துக் கொண்டிருந்தான் கதிர்.

மூன்று பகுதிகலாக நடந்து முடிந்த காவலர் பணி தேர்வின் கடைசிப் பகுதி இது. முதல் பகுதியான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்தடுத்த உடற்கல்வி தேர்வில் பங்கு பெற முடியும்.

கதிருக்கு எழுத்துத் தேர்வு ஒரு விஷயமே இல்லை. அந்த கயிறு ஏறுவதில் தான் சிரமம். ஆனால் இந்த முறை அதையும் எப்படியோ வெற்றிகரமாக ஏறி முடித்துவிட்டான்.

'அம்மா...இந்த ஒரு முறை மட்டும் ட்ரை பண்றேன். கிடைக்கலனா கண்டிப்பா நீ சொல்றத கேக்குறேன்'.

கதிரின் அம்மா திலகம். கிளம்பி வரும் முன் அம்மாவிடம் சொன்ன வார்த்தைகள் தான் அவன் நினைவில் வந்து கொண்டே இருந்தது.

'போலீஸ் வேல வேண்டாம் டா. அந்த வேலையால என் வாழ்க்கையில நான் பட்ட கஷ்டம்லாம் போதும்'.

'அம்மா...அப்பாவுக்கு நடந்தது ஜஸ்ட் ஒரு ஆக்ஸிடென்ட். அத இது கூட கம்பேர் பண்ணாத ப்ளீஸ்'.

'ஜஸ்ட் ஆக்ஸிடென்ட்...?' வெறுப்புடன் சிரித்தாள் திலகம்.

'நான் அந்த மீனிங்ல சொல்லலமா. அப்பாவ தான் பழி வாங்கனும்னு யாரும் அங்க வரலயே. அவரு அந்த இடத்துல இருந்தத ஆக்ஸிடென்ட்னு சொல்றேன்'.

மறுத்து பேச முடியாமலோ அல்லது பேசி பேசி அலுத்துப்போனதாலோ என்னவோ அமைதியாகிவிட்டாள் திலகம்.

கதிரின் அப்பா மூர்த்தி இறந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. மூர்த்தி சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர். மூர்த்தி இறந்த போது கதிர் பிறந்து ஒரு மாதமே ஆன கைக் குழந்தை.

'குண்டு வெடிப்பில், பாதுகாப்பு பணியிலிருந்த உங்களது கணவர் இறந்துவிட்டார்...' என்ற செய்தி தெரியவந்தபோது நெஞ்சில் இடி விழுந்ததைப் போல உறைந்து போனாள் திகலம்.

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்திடக் கூட மூர்த்தியின் உடல் கிடைக்கவில்லை.

Representational Image
Representational Image

'கே. மூர்த்தி' என எழுதியிருந்த, ரத்தக்கறை படிந்த அந்த அடையாள பலகை மட்டுமே மிஞ்சியிருந்தது.

'குண்டு வெடிப்பில் இறந்து போன குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் காசோலை. குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலை' என அரசு அறிவித்தது. எதுவும் திலகத்தின் காதில் விழவில்லை.

'கல்யாணமான ஒரு வருஷத்துலேயே புருஷன காவு வாங்கிட்டா...' என திலகத்தின் காதுபடவே பேசினர் சிலர்.

அவள் கண்களில் இருந்து பெருகும் நீர் கலந்த முலைப்பாலையே குடித்து வளர்ந்தான் கதிர்.

'நீ பெரியவனானா என்ன ஆகப் போற?'

அப்பாவின் தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு,'போலீஸ் ஆகப் போறேன்' என்பான் கதிர்.

திலகத்திற்கு ஆத்திரம் பெருக்கெடுக்கும். ஓங்கி முதுகில் ஒரு அடி வைப்பாள். அழுது கொண்டே தூங்கிவிடுவான் அவன்.

கணவர் இறந்துபோன அந்த மாதம் வந்தால் போதும். பத்திரிக்கைகளும் ஊடகங்களும் மாறி மாறி அந்த சம்பவத்தை அவளுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அப்போது இனம் புரியாத ஒரு இருள் அவளை சூழ்ந்து கொள்ளும். கொரூர கனவுகள் அவளை பாடாய் படுத்தும். அந்நாள் முழுவதும் அவள் சாப்பிடுவது இல்லை. பிரமை பிடித்தவள் போல ஒரே இடத்தில் அமர்ந்திருப்பாள்.

'அப்பாவோட சேர்த்து செத்துப் போனது மொத்தம் இருபது பேரு. அவங்க குடும்பத்த நினைச்சுப் பாரு'

அவ்வளவு ஏன்?

'அப்பா இனி வரப்போறது இல்லனு நமக்கு நல்லா தெரியும். ஆனா இந்த கேஸ்ல சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் ஆகி, உள்ளே இருக்கிற பையன் எப்போ வருவான்னு தெரியாம இத்தன வருஷம் காத்திருக்கற அந்தம்மாவ நினைச்சுப் பாத்தையா?'

மூர்த்தியின் இருபதாம் ஆண்டு நினைவு நாளில் சாப்பிடாமல் அமர்ந்திருந்த திலகத்திடம், கதிர் கேட்ட கேள்வி இது.

அதன் பிறகு மெல்ல மெல்ல தன் கணவனின் இறப்பை பற்றி திலகம் அதிகம் யோசிப்பதில்லை.

ஆனால் போலீஸ் வேலையின் மீது அவளுக்கிருந்த பயம் நீங்கவேயில்லை. கண்டிப்பாக போலீஸ் வேலைக்கு நீ போகக்கூடாது என்று சொல்லியே கதிரை வளர்த்து வந்தாள்.

ஆனால்...

கதிர், தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். கால்கள் இரண்டும் தரையில் அழுத்தமாக பதிந்திருந்தன.

வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் தந்தையின் புகைப்படம் நினைவுக்கு வந்தது. பிகில் சத்தம் அவன் காதில் பாய்ந்த அடுத்த நொடியில், கண்களை விரித்து இடது காலை முன்வைத்து ஓடத்தொடங்கினான்.

காற்றோடு பறந்து சென்று, கால்களை நிலத்தில் அவன் பதித்த போது கூடி இருந்த அனைவரும் அவனுக்காக கை தட்டி ஆராவரம் செய்தனர்.

*******

'கே. மூர்த்தி' என எழுதப்பட்டிருந்த அந்த சிறிய பெயர் பலகையை, முதல் நாள் வேலைக்குக் கிளம்பிய கதிரின் உள்ளங்கையில் அடைத்தாள் திலகம்.

அதில் இன்னமும் ரத்தக்கறை அழியாமல் மிச்சம் ஒட்டிக்கொண்டிருந்தது.

- சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.