Published:Updated:

நிழலுக்குள் நிஜம் | சிறுகதை | My Vikatan

Representational Image

எப்போதும் தனது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் பிஸினஸ், மேட்ரிமோனி பிஸினஸ், காய்கறி வியாபாரம், மளிகை கடை வியாபாரம் என்று அங்குமிங்கும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கும் ராஜரத்தினம் தனது மகன் சதீஷ் வேலைப்பார்க்கும் மும்பை மாநகரத்துக்கு முதன்முதலாக சென்றுள்ளார்.

Published:Updated:

நிழலுக்குள் நிஜம் | சிறுகதை | My Vikatan

எப்போதும் தனது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் பிஸினஸ், மேட்ரிமோனி பிஸினஸ், காய்கறி வியாபாரம், மளிகை கடை வியாபாரம் என்று அங்குமிங்கும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கும் ராஜரத்தினம் தனது மகன் சதீஷ் வேலைப்பார்க்கும் மும்பை மாநகரத்துக்கு முதன்முதலாக சென்றுள்ளார்.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

டக் டக் டக்...டக்...டக்டக்டக்...

என்று கதவு தட்டும் சப்தம் கேட்டதும் சோபாவில் படுத்துறங்கிக் கொண்டிருந்த சதீஷ் சட்டென எழுந்து கண்களை கசக்கி கொண்டு

"ஆங் ஆங்!! இதோ வரேன். வரேன்"

என சொல்லிக் கொண்டே கதவை திறந்தான். அப்போது அவனுக்கு வந்த கொட்டாவியை அடக்க முடியாது, யசோதை முன் வாய் திறந்து உலகை காட்டிய கிருஷ்ணனை போல வாசலில் நின்றிருந்தவர் முன் வாயை "ஆவ்" என்ற சப்தத்துடன் திறக்க, அவரைப் பார்த்ததும் "ஆங்" "அம்" என வந்த கொட்டாவியை அடக்க முயற்சிக்க, அதைக் கண்டு வாசலில் நின்றிருந்த ராஜரத்தினத்தைப் பார்த்து,

"அப்பா!! நீங்க! எங்க!! இங்க?"

"ஏன் உன்னைப் பார்க்க சொல்லாம கொள்ளாம வர கூடாதோ!! தள்ளுடா."

"அப்பா!! உங்க சட்டையெல்லாம் என்னது இது?"

"ஓ! இதுவா!! இது... ஆங்! அது தான் இந்த ஊர்ல அவன் அவன் வாயில பீடாவ போட்டு மென்னுகிட்டே அங்கங்க துப்புறாங்களே அதுல எவனோ ஒருத்தன் என் சட்டையில ஆட்டோகிராப் போட்டுட்டான் போல!"

"என்னப்பா சொல்லுறீங்க?"

"அத விடுடா. இப்படி நைட்டெல்லாம் வேலைப் பார்த்துட்டு பகலெல்லாம் தூங்கறதுங்கறது என்னடா வாழ்க்கை? பேசாம எனக்கு ஒத்தாசையா ஊருலயே எங்க கூடவே இருந்திருக்கலாம் இல்ல. இப்படி ஊரு விட்டு ஊரு வந்து... இதோ இத்தனூண்டு ஒரு ரூம்ல...தேவையாடா? என்னமோ கம்ப்யூட்டிங்... அது தான் படிப்பேன்...அந்த வேலையை தான் பார்ப்பேன்னு சொல்லிட்டு இந்த மொழி தெரியாத ஊருக்கு வந்து இப்படி எல்லாம் கஷ்டப்படணுமா!!! என்னமோ போ! சரி சரி பாத்ரூம் எங்க!!! ஆங் அது தானே! என்னமோ தெரியலை இனிக்கு என்னையே எனக்கு ரொம்ப நாத்தம் அடிக்குது டா! என்னோட இந்த நாத்தத்தை என்னாலயே சகிச்சுக்க முடியல...சரி சரி நான் போய் மொதல்ல குளிச்சிட்டு வரேன்."

என்று வீட்டுக்குள் நுழைந்தது முதல் மூச்சுவிடாது பேசிவிட்டு குளியலறைக்குள் சென்றார் ராஜரத்தினம். எப்போதும் தனது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் பிஸினஸ், மேட்ரிமோனி பிஸினஸ், காய்கறி வியாபாரம், மளிகை கடை வியாபாரம் என்று அங்குமிங்கும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கும் ராஜரத்தினம் தனது மகன் சதீஷ் வேலைப்பார்க்கும் மும்பை மாநகரத்துக்கு முதன்முதலாக சென்றுள்ளார்.

"அப்பா... அம்மா, ரேணு எல்லாரும் எப்படி இருக்காங்க? அவங்க ஏன் வரல?"

"ஆங்!! நல்ல வேளை அவங்க வரல."

"என்ன?"

Representational Image
Representational Image
Photo by amol sonar on Unsplash

"டேய் மொதல்ல நீ போய் குளிச்சிட்டு வா. நான் டிபன் செஞ்சு வைக்கறேன். ரெண்டு பேருமா சாப்பிடுவோம்‌. எனக்கு உன்கிட்ட சில விஷயங்களை சொல்லணும். சொல்லிட்டு உடனே கிளம்பணும்."

"என்னது உடனே கிளம்பணுமா?"

"டேய் சொன்னத இப்பவாவது கொஞ்சம் எனக்காக கேளுடா"


"என்னமோ பா! நீங்க சொல்லறது செய்யறது எல்லாமே ரொம்ப புதுசா இருக்கு...சரி சரி டிவி ஆன் பண்ணறேன் பார்த்துட்டு இருங்க... நான் குளிச்சிட்டு வரேன்."


என்று சதீஷ் டிவியை ஆன் செய்ததும் வேகமாக அவனிடமிருந்து ரிமோட்டை பிடிங்கி டிவியை ஆஃப் செய்த ராஜரத்தினம்

"டேய் டிவி எல்லாம் எனக்கு பார்க்க வேண்டாம் டா. நீ போய் குளிச்சிட்டு வா டா"

"என்னப்பா நம்ம ஊருல என்னேரமும் டிவில நியூஸை போட்டு போட்டு பாப்பீங்க!!! என்னமோ... நீங்க சரியில்லைப்பா‌. மொதல்ல நான் அம்மாக்கு கால் பண்ணி கேட்கறேன்"

என்று சதீஷ் தன் மொபைலை எடுத்ததும் ராஜரத்தினம் வெடுக்கென அதை சதீஷ் கையிலிருந்து பிடுங்கி டிவி அருகே வைத்து விட்டு,

"நீயும் உன் அம்மாவும் பேச தொடங்குனீங்கன்னா, அப்புறம் நீ குளிக்க போன மாதிரிதான். இது இங்கேயே இருக்கட்டும் நீ போய் குளிச்சிட்டு வா."

என்று கூறி சதீஷை குளியலறைக்குள் அனுப்பி வைத்து, கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டு உப்புமா கிளறி சட்னி அரைத்து டேபிளில் வைத்து சதீஷுக்காக காத்திருந்தார். சதீஷ் குளித்து முடித்து வந்ததும் இருவருமாக உப்புமாவை உண்டு முடித்தனர்.

"ஏன் பா! இந்த உப்புமாவ கிளறிக் கொடுக்கத்தான் நீங்க ஊருலேந்து கிளம்பி வந்திருக்கீங்களா என்ன?"

"தெரியல பா. தெரியல!"

"அதுக்கில்ல... நானும் வந்ததுலேந்து பாக்குறேன் நீங்க ஆளே சரியில்லையே! அதுவுமில்லாம நீங்க உங்க வேலை எல்லாம் விட்டுட்டு வர ஆள் கிடையாதே! அது தான் கொஞ்சம் இடிக்குதுப்பா"

"டேய் நம்ம ரேணுக்கு நல்ல வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை அமெரிக்காவுல இருக்காரு. நல்ல குடும்பம். நானும் அம்மாவுமா அவங்க வீட்டுக்கெல்லாம் போய் பார்த்துட்டோம். நல்லவங்களா தான் இருக்காங்க."

"ஓ! அதுதான் விஷயமா! அதெல்லாம் சரிப்பா! அந்த பையன நம்ம ரேணுக்கு பிடிச்சிருக்கா? ஏன்னா அவ அந்த பையன கட்டிக்கிட்டா அப்புறம் அவ பாக்குற வேலையை விட்டுட்டு அமெரிக்கா போக வேண்டியிருக்குமே! அம்மணி அவங்க வேலையை விடுவாங்களா? போன வாரம் கூட நான் அவகிட்ட பேசினேன் அப்போ கூட அவ எதுவுமே சொல்லலையே!"

"அதெல்லாம் அவ அந்த பையன் கூட ஃபோன்ல பேசிட்டா. அவளுக்கும் பிடிச்சிருக்குது. அதுதான் அது விஷயமா உன்கிட்டயும் பேசிட்டு அப்படியே சில முக்கியமான முடிவுகளையும், விஷயங்களையும் உனக்கு புரிய வச்சுட்டு போக தான் வந்திருக்கேன். நீ இப்போ ஃப்ரீயா பேசலாமா?"

"என்னப்பா! பெரிய பீடிகை எல்லாம் போடறீங்க?"

"இல்லப்பா எனக்கும் வயசாகிட்டே போவுது இல்ல. அத! அத! அப்பப்ப! செஞ்சுட்டா திருப்தியாகிடும் இல்லையா. அதுதான்."

"சரிப்பா. சொல்லுங்க. கேட்டுக்குறேன்."

"ம்... இரு இரு நான் போய் என்னோட முக்கியமான ஒரு பையை எடுத்துட்டு வரேன்."

"ம்...சரிப்பா!!"

ராஜரத்தினம் பையை எடுத்துவர உள்ளே சென்றதும் சதீஷ் தனது கைபேசியை எடுத்துப் பார்த்தான். அது சுவிட்ச் ஆஃப் ஆக இருந்ததும் அதில் சார்ஜ் இல்லையோ என்றெண்ணி அதை சார்ஜில் போட்டு அதை ஆன் செய்து அதைப் பார்க்க முற்பட்ட போது ராஜரத்தினம் சதீஷின் தோளை தட்டி...

"என்ன அதுக்குள்ள மொபைல்ல என்ன வந்திடப் போகுது. அப்புறமா பார்த்துக்கோ. மொதல்ல இங்க வந்து உட்காரு."

"இல்லப்பா...மொபைல் ஆஃப் ஆகியிருந்தது. சார்ஜ் இல்ல போல அது தான் சார்ஜ்ல போட்டேன். இன்னுமா நீங்க இந்த மஞ்சபையை விடல!!! ம்...சரி சொல்லுங்க"

"இந்த மஞ்சப்பை தான் உன் அப்பனோட பேங்க் லாக்கர். தெரியுமா!!"

"சரி அப்படி என்ன வச்சுருக்கீங்க உங்க லாக்கர்ல?"

"அதை சொல்லத் தானே வந்திருக்கேன். இதோ இது தான் அந்த மாப்பிள்ளை பையனோட வீட்டு விலாசம், இது தான் போட்டோ. அப்புறம்... நம்ம ஊருலயே பெரிய மண்டபம் நம்ம சுப்பிரமணி அண்ணாச்சியோட கல்யாண மண்டபம் தான். அங்க தான் நம்ம ரேணு கல்யாணத்தை நடத்தணும். இது என்னோட பேங்க் பாஸ்புக், இது செக்புக், இதுல நான் கையெழுத்து போட்டு ஒரு மூணு செக் வச்சிருக்கேன். ஒரு புத்தகத்துல எனக்கு யார்யார் எவ்வளவு பணம் தரவேண்டியிருக்கு அதேபோல நான் யார்யாருக்கு எவ்வளவு தரவேண்டியிருக்குங்கற விவரமெல்லாம் இருக்கு. அந்த புத்தகம், நம்ம காய்கறி கடை, மளிகைக்கடை கணக்கு புத்தகம், எனக்கும் உங்க அம்மாவுக்கும்ன்னு இரண்டு லைஃப் இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கேன். அதோட பாலிசி டாக்குமெண்ட், நம்ம வீட்டு பத்திரம், அப்புறம் ராணிபேட்டையில உன் பேர்ல வாங்கின ரெண்டு கிரௌண்ட் நிலப் பத்திரம், நம்ம கடைகளோட பத்திரம் ரெண்டு, உன் பேருலையும் ரேணு பேருலையும் மாசாமாசம் டெப்பாசிட் பண்ணிட்டு வந்திட்டுருக்கேனே அதோட டாக்குமெண்ட்ன்னு எல்லாமே நம்ம வீட்டுல இருக்குற என்னோட பீரோல இருக்கு. இது தான் அதோட சாவி. இது எப்பவுமே என்னோட இந்த பை உள்ள தான் இருக்கும். உன் அம்மாவோட நகை அப்புறம் ரேணுவுக்குன்னு வாங்கின நகை எல்லாம் அம்மா பீரோல இருக்கு. நம்ம பேங்க் மேனேஜர் சுந்தரமூர்த்தி ரொம்ப நல்ல மனுஷர். அவர் உனக்கு எல்லா உதவியும் செய்துத் தருவாரு."

"அப்பா! இப்போ சென்னையிலேந்து டிரெயின் ஏறி மும்பை வந்து இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்லறீங்க? உங்களுக்கு என்ன ஆச்சுப்பா? உடம்புக்கு ஏதாவது ?"

Representational Image
Representational Image

"நான் நல்லா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா எப்போ எது நடக்கும்னு யாருக்குத் தெரியும்!! அப்போ என் பையன் நீ தவிக்கக் கூடாது இல்லையா. அதுக்கு தான் முன் எச்சரிக்கையா எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்டா எனக்கு ஒரு நிம்மதி."

"""""தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே"""''"

என்று சதீஷின் கைபேசியில் இருந்து அழைப்பு பாடல் ஒலித்தது, அதை கேட்டதும் ராஜரத்தினத்தின் கண்கள் குளமாகின. உடனே கைபேசியை எடுத்த சதீஷ்

"ஹலோ அம்மா! சொல்லுமா! என்னமா!! அப்பா என்கிட்ட சொல்லாம கொள்ளாம....."

என்று கூறி முடிப்பதற்குள் மறுபக்கத்திலிருந்து ரேணு...

"அண்ணே!!! அண்ணே!!! நம்ம அப்பா...நம்ம அப்பா...நம்மளை விட்டுட்டுப் போயிட்டார் அண்ணே! போயிட்டாரு"

"ஏய் ரேணு? என்ன சொல்லுற? அவர் இப்ப தான் ..."

என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்த சதீஷ் அதிர்ந்து போனான். ஏனெனில் அதுவரை அவனுடன் பேசிக் கொண்டிருந்த ராஜரத்தினம் அங்கு இருக்கவில்லை. உடனே தன் தங்கையிடம்

"ஏய் ரேணு! என்ன தான் நடக்குது? அப்பா எங்க? அப்பாக்கு என்ன ஆச்சு? கொஞ்சம் தெளிவா சொல்லுமா. அம்மா எங்க?"

"அண்ணே!! எனக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை உனக்கு சர்ப்ரைஸா நேர்ல வந்து சொல்லணும்னு நம்ம அப்பா உன்னை பார்க்க நேத்து காலையில கிளம்பினாரு..."

"ஐய்யோ! அழாம விஷயத்தை சொல்லுமா"

"அந்த டிரெயின் தடம் புரண்டுடுச்சாம் அண்ணே!! அதுல பயணம் செஞ்ச நிறைய பேரு இறந்துட்டாங்களாம் ணே. அதுவும் மும்பைக்கு அருகாமையில் தான் நடந்திருக்கு! அப்பா நம்பருக்கு கால் பண்ணினா நாட் ரீச்சபள்னு வருது! காலையிலேந்து உனக்கு இந்த விஷயத்தை சொல்ல கால் பண்ணிட்டே இருக்கோம். ஆனா உன் ஃபோனும் சுவிட்ச் ஆஃப்னுனே வருது."

"நீ என்ன சொல்லுற ரேணு...சரி அம்மாவை பத்திரமா பாத்துக்கோ. நான் சம்பவம் நடந்த இடத்துக்கு போய் என்ன ஏதுன்னு விசாரிச்சு உனக்கு கால் பண்றேன். பத்திரமா இரு. அம்மாவையும் பத்திரமா பார்த்துக்கோ. சரியா"

என்று கைபேசியில் சிவப்பு பொத்தானை அழுத்திவிட்டு வேகமாக தனது வீட்டிலிருந்த ஒரே ஒரு அறைக்குள் சென்று பார்த்த சதீஷ் அதிர்ந்து போனான். அங்கே அவன் அப்பா ராஜரத்தினம் படுத்திருந்தார். அதைப் பார்த்ததும் சதீஷின் மனதிற்குள் ரேணு சொன்ன விஷயம், அப்பா பகிர்ந்துக் கொண்ட விஷயங்கள், அவர் செய்து தந்த உப்புமா, அம்மாவின் முகம் என அனைத்தும் மாறி மாறி வந்து அவனை குழப்பியதில் தான் பார்ப்பது ரத்தமும் சதையுமாக இருக்கும் தந்தையையா இல்லை அவரின் நிழலான ஆவியையா என்று ஒரு நொடி திகைப்பில் ஆழ்ந்தான். அந்த அறையை விட்டு ஒரு நொடி வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்று பார்த்தான் அப்போதும் அவன் அப்பா அங்கு படுத்து இருந்ததை அவனால் பார்க்க முடிந்தது. அவன் உடனே அவனின் நண்பன் ரகுவுக்கு கால் செய்து நடந்தவற்றை விளக்கி

"டேய் ரகு இப்ப நான் என்னடா செய்வேன். இப்போ என் வீட்டுல இக்குறது என் அப்பாவா இல்ல அவரோட ஆவியான்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்குடா. என் அப்பாவுக்கு ஏதுவும் ஆகியிருக்க கூடாது டா."

"அதை அவர்கிட்டயே கேளேன்டா!"

"என்னது!! என் அப்பாட்ட போய் நீங்க உயிரோட இருக்கீங்களா இல்லையான்னு எப்படிடா கேட்கறது? எனக்கென்னவோ அவர் உயிரோட இருக்கறா மாதிரி தான் தெரியுது டா. அவர் உயிரோட தான் இருக்கணும். இருப்பாரு"

"அப்படீன்னா அவர் ஏன் உன்கிட்ட அந்த ஆக்ஸிடென்ட் சம்பவத்தை பத்தி ஒண்ணும் சொல்லல!"

"அது தான் எனக்கும் குழப்பமா இருக்கு டா ரகு."

"இரு நான் உன் ரூமுக்கு இன்னும் அஞ்சே நிமிஷத்துல வரேன். ரெண்டு பேருமா அவர்கிட்ட கேட்போம். கவலைப்படாதே. அவர் உயிரோட தான் இருக்கார்ன்னு நாம நம்புவோம். தைரியமா இருடா சதீஷ்"

ரகு சொன்னது போலவே அடுத்த ஐந்தாவது நிமிடம் சதீஷ் ரூமில் இருந்தான். அவர்கள் இருவருமாக உள்ளே படுத்திருந்த ராஜரத்தினத்தை மெல்ல தட்டி எழுப்பினர். அவரும் எழுந்து அவர்களைப் பார்த்து

"டேய் சதீஷ் நம்ம ரேணு கல்யாணத்த சுப்பிரமணி அண்ணாச்சியோட மண்டபத்துல தான் நடத்தணும்டா...இதோ என்னோட பேங்க் பாஸ்புக்...."

"அப்பா!! அப்பா!! அப்பா!! சரிப்பா சரி... நம்ம ரேணு கல்யாணத்த சூப்பரா நடத்திடலாம். நீங்க வந்த டிரெயின் ஆக்ஸிடென்ட் ஆச்சே, அதுலேந்து நீங்க எப்படி தப்பிச்சு இங்க வந்தீங்க? என்ன தான் நடந்ததுப்பா?"

"டேய் சதீஷ் நம்ம ரேணு கல்யாணத்த நம்ம சுப்பிரமணி அண்ணாச்சி மண்டபத்துல தான்டா நடத்தணும். இது என்னோட பேங்க் பாஸ்புக்...."

என்று மறுபடியும் ஆரம்பித்ததும் சதீஷ் தன் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீருடன்

"நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்கப்பா"

என்று அவரை மீண்டும் படுக்க வைத்து விட்டு ரகுவும் சதீஷும் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும்

"சரி... உங்க அப்பா வந்ததுலேந்து சொன்னதையே தான் சொல்லுறாரா?"

"இல்ல டா ரகு. வந்ததுலேந்து மனுஷன் ஏதோ ஒரு மாதிரி பரபரப்பாவே இருந்தாரு. அவரோட பேச்சு நடவடிக்கை எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா தான் இருந்துச்சு...ஏதோ எல்லா பொறுப்பையும் என் கிட்ட ஒப்படைச்சிட்டு உடனே எங்கயோ கிளம்பிப் போகணும் அப்படிங்கற மாதிரியே அவசரப் பட்டாரு. எல்லாத்தையும் சொல்லி முடிக்கற வரைக்கும் நல்லா தான் இருந்தாரு ஆனா சொல்லி முடிச்சதுக்கு அப்புறமா தான் இப்படி சொன்னதையே மறுபடியும் மறுபடியும் சொல்லுறாரு"

"சரி சரி அப்பா அப்படி ஒரு கண்டத்துலேந்து தப்பிச்சு நல்லபடியா உன்கிட்ட வந்து சேர்ந்துட்டாரு. அதை நினைச்சு நிம்மதியா இரு. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்."

என்று கூறிச் சென்றது போலவே ரகு மருத்தவருடன் வந்தான். மருத்துவர் ராஜரத்தினத்துடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஒரு ஊசியை போட்டார்.

Representational Image
Representational Image

பின் அந்த அறையின் கதவில் சாய்ந்து தனது அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்த சதீஷை தட்டிக் கொடுத்து வெளியே அழைத்து வந்த டாக்டர்,

"தம்பி... எதிர்பாராது நடந்த இந்த ஆக்ஸிடென்ட் ல உங்க அப்பா மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு. எங்கடா அவரு உங்களை எல்லாம் விட்டுட்டு எதுவும் சொல்லாம போயிடுவாறோன்னு பயந்திருக்காரு. அந்த பயத்துல எப்படியாவது உங்களைப் பார்த்து எல்லாத்தையும் விளக்கமா சொல்லி புரிய வச்சு, உங்களை தவிக்க விட்டுட கூடாதுங்கறதுல அவரு மனசு உறுதியா இருந்திருக்கு. அந்த மன உறுதி தான் அவரை எப்படியோ இங்க உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு. வந்தவரு அவர் மனசுல இருந்ததை எல்லாம் விளக்கியதும் வந்த ஜோலி முடிஞ்சிருச்சுன்னு மனசளவுல சோர்ந்துட்டார். வேற ஒண்ணுமில்ல. எந்த ஒரு பாதிப்பையும் நம்ம மனசு ஏத்துக்கறதுக்கு பல காலமெடுக்கலாம். ஆனா தனக்கு நேர்ந்த பாதிப்பினால் தன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதித்திடக்கூடாது என்பதை தான் உங்க அப்பா மனசு அந்த நேரத்திலும் யோசிச்சிருக்கு. இப்போ அவர் நிம்மதியா தூங்கறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். அவரை நல்லா பாத்துக்கோங்க. அது தான் அவருக்கு இப்போ வேண்டியது. டோன்ட் வரி. எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட்"

"ரொம்ப தாங்ஸ் டாக்டர்."

என்று டாக்டர் சென்றதும்‌ பெருமூச்சு விட்ட சதீஷ் தனது அப்பாவின் அருகே சென்று அவரின் தலையை தடவிக் கொடுத்தான். அப்போது ரகு சதீஷிடம்

"நாம என்ன தான் வெளியூரு, வெளிநாடுன்னு போனாலும் நம்ம அப்பா அம்மா எல்லாம் எப்பவுமே நம்மள பத்தியும் நம்மளோட எதிர்காலத்தைப் பத்தியும் தான் என் நேரமும் யோசிப்பாங்க போல... இல்லடா. இவ்வளவு பெரிய ஆபத்திலும், அதிர்ச்சியிலும்! பாரேன்! உன் அப்பாவுக்கு உன்னையும் உன் தங்கச்சியையும் பத்தின விஷயம் மட்டும் தான் மனசுல அழியாம ஆழமா இருந்திருக்கு. நீ தவிக்கக் கூடாதுன்னு எப்படியோ தப்பிச்சு வந்து உன்கிட்ட எல்லா விவரங்களையும் சொல்லிருக்காரு பாரேன்!!!!! அம்மா எல்லாம் இப்படி இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன், கதைகள்ல எல்லாம் படிச்சிருக்கேன் ஆனா அப்பாவும் அப்படி தான்னு இன்னைக்கு என் கண்ணு முன்னாடி பார்த்துட்டேன் டா சதீஷ்....பெத்தவங்கள கடவுள்ன்னு சும்மா வா சொல்லறாங்க. சரிடா இப்ப என்ன பண்ணப் போற?"

"அப்பாவ கூட்டிட்டு ஊருக்கு போக போறேன்"

"சூப்பர் டா சதீஷ். ஒரு ரெண்டு மாசம் அவங்க கூடவே நீ இருந்துட்டு வா?"

"இனி நான் இங்கன்னு இல்ல எங்கயுமே போக போறதில்ல ரகு. சாகப் போற நேரத்துல கூட எனக்காக யோசிச்சு, அவரோட மறைவுக்கு பின்னாடி நான் தவிக்கக் கூடாதுன்னு நினைச்ச அவரு இந்த பூமில இருக்குற வரைக்கும் அவர்கூடவே தான் இருக்க போறேன். அவர் சொன்னது போலவே அவரோட பிசினஸ் எல்லாத்தையும் இனி நான் பார்த்துப்பேன். அவர் விருப்பப்படியே ரேணுவோட கல்யாணத்தையும் செய்து முடிப்பேன். நான் வரேன் டா ரகு"

"அப்போ இங்க இருக்குற இந்த பொருளெல்லாம்!!"

"என் அப்பா முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லடா! நான் வரேன்."

"அப்போ சாயந்தரம் டாக்டர்ட்ட போகணுமே"

"இனி என் அப்பாக்கு மருந்தே நான் தான். பை ரகு."

என்று கூறிய சதீஷ் தனது அப்பாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றான். அன்றிரவு சதீஷின் அறையிலேயே தங்கியிருந்த ரகு, சதீஷுடன் சேர்ந்து பதற்றமானதில் சற்று அசந்து போய் சதீஷ் வீட்டிலிருந்த சோபாவில் படுத்துறந்கினான்.

திடீரென வீட்டின் கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் தொடர்ந்து ஒலித்தது

டக்...டக்...டக்...டக்...டக்....டக்....டக்....

உறக்கம் கலைந்த கோபத்தில் எழுந்த ரகு கண்களை கசக்கிக்கொண்டே

"யாரது? இந்த நேரத்துல?"

டக்...டக்....டக்...டக்...டக்....

"ஆங் ஆங்! வரேன் வரேன்!"

டக்டக்டக்டக்டக்........டக்....டக்...டக்

நன்றி

நா. பார்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.