Published:Updated:

அட்டஸ்டேஷன் ஆபீசர்! |சிறுகதை | My Vikatan

Representational Image

இப்படிப் பல பேருக்கு உதவியிருந்தாலும், ஒருவருக்கு மட்டும் உதவ முடியாமற் போனதில் அப்பாவுக்கு வருத்தமே.

அட்டஸ்டேஷன் ஆபீசர்! |சிறுகதை | My Vikatan

இப்படிப் பல பேருக்கு உதவியிருந்தாலும், ஒருவருக்கு மட்டும் உதவ முடியாமற் போனதில் அப்பாவுக்கு வருத்தமே.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்றைக்கு அமாவாசை. அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அனுவைப் பார்க்க, தோழி கலா வந்திருந்தாள். கலா இங்கிலாந்தில், தன் கணவனுடன் வாழ்கிறாள். அவள் தம்பி, உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தவன், போர் காரணமாக, ’தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று ஊர் வந்து சேர்ந்திருந்தான். அவனைப் பார்க்க வந்தவள், அனு ஊர் வந்திருப்பதை அறிந்து அவளையும் பார்க்க வந்திருந்தாள்.

உக்ரைனில் தம்பி பட்ட கஷ்டத்தையும், குடும்பத்தினர் அனைவரும் சோறு தண்ணியின்றி 10 நாட்களாகப் பட்ட கஷ்டத்தையும் அனுவிடம் கண்ணீர் மல்கக் கூறி முடித்த பிறகு பேச்சு நாட்டு நடப்பு பற்றியும், குடும்ப நிகழ்வுகள் பற்றியும் திரும்பியது. என்னதான் வெளி நாட்டில் வசித்தாலும், நம் நாட்டுச் சிந்தனையும், பெற்றோர்களின் நிலையும் அவர்களை அலைக் கழிக்கிறது என்பது, அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. அப்படியே பேச்சு வாக்கில் கலா, தன் தங்கை அட்டஸ்டேஷன் வாங்குவதற்காக ஏதோ ஓர் அலுவலகம் சென்றுள்ளதாகக் கூற, அனுவுக்கு அப்பா சொல்லிய அட்டஸ்டேஷன் கதைகள் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வந்தன.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பா,பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கிராமத்தில். படிப்பை முடித்துக் கிராமத்தில் இருந்த போது, அப்ளிகேஷன் அனுப்ப சான்றிதழ் நகல்களில் கெஜடேட் ஆபீசர் கையெழுத்து (அட்டேஸ்டேஷன்) வாங்க,10 கி.மீ., தாண்டியுள்ள டவுனுக்குச் செல்ல வேண்டுமாம். வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு காலையில் போய் ஓர் அலுவலகத்தில் கொடுத்தால், அவர்கள் பணமும் வாங்கிக் கொண்டு, மாலையில் வரச் சொல்வார்களாம். வாடகை சைக்கிளுக்குக் காசு கொடுக்கப் பயந்து,சில சமயம் மீண்டும் 10 கி.மீ., சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்து, மாலையில் மறுபடியும் செல்வாராம். அண்ணனின் சைக்கிள் என்றால், மாலை வரை நூலகத்தில் தஞ்சம் அடைந்து விடுவாராம். பிறகு,அவர் நண்பர் ஒருவர் மின் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்ததால்,அங்குள்ள பொறியாளரிடம் இலவசமாகவே அட்டஸ்டேஷன் வாங்கி வந்து தருவாராம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்புறம் அப்பா சென்னையில் அரசுப் பணியில் சேர்ந்து, ஒரு மாமாங்கம் தாண்டிய பிறகுதான் கெஜடேட் ஆபீசர் பொறுப்புக்கு வந்தாராம். அந்தச் சமயம் பார்த்து சிட்டியிலிருந்து வீட்டை மாற்றிப் புறநகர் பகுதியில், சொந்த வீட்டுக்குக் குடி வந்தாராம். அங்கு புதிதாகக் குடியேறுபவர்கள், தக்க போக்குவரத்து வசதியின்றி அல்லற்படுவதையும், பள்ளி, கல்லூரி திறக்கும் நேரங்களில் அட்டஸ்டேஷனுக்கு அல்லாடுவதையும் பார்த்த அப்பா, அங்கு கோயிலில் நடந்த கூட்டத்தில், தான் அட்டஸ்ட் செய்வதையும், தக்க சான்றிதழ்களுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களே வரலாமென்றும், பெற்றோர்களைச் சிரமப் படுத்த வேண்டாமென்றும், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாமென்றும், காசு பணமெல்லாம் கிடையாது என்றும் கூறிவிட்டு, வீட்டு முகவரியையும் கொடுத்து விட்டு வந்து விட்டார். அப்புறம் சிறார்களே வந்து அட்டஸ்டேஷன் வாங்கிச் செல்வார்கள். அதன் பிறகு அப்பா, துணை இயக்குனர் , இணை இயக்குனர், இயக்குனர் (பொறுப்பு) என்ற உயர் பதவிகளை வகித்தாலும், ஊராருக்கு அட்டஸ்டேஷன் ஆபீசராகவே நிலைத்து விட்டார்.

Representational Image
Representational Image

மாணவ, மாணவியரை விடுத்து, புதிதாக வீடு கட்ட மனுச் செய்பவர்களும் அட்டஸ்டேஷனுக்கு வருவதுண்டு. அப்படித்தான் ஒரு நாள் அப்பாவின் நெருங்கிய நண்பர், ஒருவரை அழைத்து வர,அவர் வீடு கட்ட மனுச்செய்ய,சுமார் 76 கையெழுத்துக்கள் போட்டு,அட்டஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. அப்பா மளமளவென்று அத்தனையிலும் கையெழுத்திட, வந்தவரோ மலைத்துப் போனார். நடுவில் அவர்களுக்கு அம்மா காபியையும் கொடுத்து உபசரிக்க, அவர் ஆச்சரியத்தின் உச்சிக்கே போய் விட்டார். இறுதியாக அவர்’என்ன செய்ய வேண்டும்?’ என்று அப்பாவிடம் கேட்க, ’விரைவில் வீடு கட்டி எங்கள் நகரில் குடியேற வேண்டும்’ என்று அப்பா வாழ்த்த, அவர் அசந்து போனார்.

மற்றொரு நேர்வில், எதிர்த்த வீட்டுக்காரரின் நண்பர், வெளி நாடு குடும்பத்துடன் செல்ல,கணவன்-மனைவி சேர்ந்திருக்கும் புகைப்படத்தில் ஒரு கெஜடேட் ஆபீசர் அட்டஸ்ட் செய்ய வேண்டுமென்பதை, இரவுதான் பார்த்தாராம். அதிகாலை ஐந்தரை மணிக்கு ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து,நண்பரைக் கான்டாக்ட் செய்துள்ளார். நண்பரும் அவரை உடனே கிளம்பி வரச் செய்து,இருவருமாக வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியபோது இரவு மணி இரண்டரை. வந்தவர் அவசரத்தை விளக்க, அப்பா அட்டஸ்ட் செய்து கொடுக்க,அவர்‘என்ன செய்ய வேண்டுமென்று கேட்க,’அப்பா அமைதியாகச் சொன்னாராம்’ குடும்பத்துடன் நீங்கள் நிம்மதியாக ஊர் போய்ச் சேர வேண்டுமென்று’.

இப்படிப் பல பேருக்கு உதவியிருந்தாலும், ஒருவருக்கு மட்டும் உதவ முடியாமற் போனதில் அப்பாவுக்கு வருத்தமே.வீடு கட்ட அப்ளை செய்ய வேண்டுமென்று,நகல் பத்திரத்தில் அட்டஸ்ட் கேட்டார் அவர்.ஒரிஜினலைக் காட்டச் சொல்ல,அவரோ கூலாக,’சார்.அது பாங்க்ல இருக்கு.நீங்க இதில போட்டாப் போதும்.’என்க,’நாளைக்கி அதை வாங்கிக்கிட்டு வாங்க.நான் போட்டுத் தாரேன்’என்றார் அப்பா.அவரோ,’அது வாங்குவது கடினமென்றும்,தான் தப்பான ஆள் இல்லை’ என்றும் கூற,அப்பாவோ மறுத்து விட்டார்.அதன் பிறகு அவர் அப்பாவிடம் பேசுவதே இல்லையாம்.

இவ்வாறு அனு,அப்பாவின் கதையைக் கூறிக் கொண்டிருந்த போதுதான் அப்பா அவசரமாக வந்தார்.கலாவைக் கூடக் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று எதையோ எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியேறி,ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து வேகமாகப் போனார்.அமாவாசை என்பதால்,காய்கறியும்,வாழை இலையும் வாங்கப் போன அப்பாவுக்கு என்ன ஆனது?வீட்டுக்கு வந்து என்ன அவசரமாக எடுத்துச் செல்கிறார்?ஒன்றும் சரியாகப் புரியவில்லை அனுவுக்கு. சரி. சற்று தாமதித்துப் பார்க்கலாம் என்ற முடிவுடன் கலாவிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

Representational Image
Representational Image

சிறிது நேரத்திற்குப் பிறகு அப்பாவின் ஸ்கூட்டர் வாசலில் வந்து நின்றது. கையிலிருந்த பையில் காய்கறிகளும்,வாழையிலையும் இருப்பது தெரிந்தது.வாசலில் நின்ற அம்மாவிடம் பையைக் கொடுத்து விட்டு,நேராகக் கலாவிடம் வந்து,’சாரிம்மா.ஓர் அவசரத்ல இருந்ததால முன்னாடி வந்தப்ப உங்கிட்ட பேசாமலே போயிட்டேன்.அப்பா,அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?’என்று விசாரித்தார்.’அவசரப்படாம அனுவோட பேசிட்டு,மதியம் சாப்பிட்டுட்டு,வெயில் தணிஞ்ச பிறகு ஈவினிங் போலாம்மா. வேணும்னா நானே கூட ட்ராப் பண்ணிடறேன்.’ என்று கலாவிடம் பாசம் காட்டினார்.

அன்றைய தினம் முடிந்து,இரவு குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுதான் அனு காலையில் அப்பா அவசரம் காட்டியதைக் குறித்து வினவினாள்.’அதுவாம்மா.அது ஒரு சின்னப் பிரச்னை. நம்ம பாலத்தடியில திடீர்னு போலீஸ் நின்னுக்கிட்டு, டூ வீலர்காரங்ககிட்ட ஒரிஜினல் லைசன்ஸ் காட்டச் சொன்னாங்க. நான் பக்கத்திலதானே போறோம்னு நெனச்சி அதை எடுத்துக்கிட்டுப் போகலை. என்னையும் நிக்க வச்சுட்டாரு ஒரு போலீஸ்காரரு. எனக்கு அசிங்கமாப் போயிடிச்சு.பிறகு வந்த ஏட்டு என்னைப் பார்த்துட்டு, ’ஐயா. நீங்களா…என் பொண்ணுக்கு அவசரத்துக்கு அட்டஸ்டேஷன் போட்டுக் கொடுத்ததை நான் இன்னும் மறக்கலை ஐயா. இன்ஸ்பெக்டர் வரப் போறாரு…நீங்க கெளம்புங்க.’ என்று வார்த்தைகளாலேயே என்னைக் கெளம்ப வச்சுட்டாரு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. எப்பவோ நான் போட்ட அட்டஸ்டேஷனுக்கு இப்ப பணம் வாங்கின மாதிரி நான் கூனிக் குறுகிட்டேன்.

அவரு, வயசானவருன்னு விட்டிருந்தாக் கூட எனக்கு அவ்வளவு வருத்தம் வந்திருக்காது. அட்டஸ்டேஷன் போட்டதால விடறேன்னு சொல்லாம சொல்லிட்டாரு. லஞ்சத்தைப் பணமாத்தான் வாங்கணும்னு அவசியம் இல்லம்மா.அதைப் பொருளாவும்,இரக்கமாவும்,கருணையாவும் கூட வாங்கலாமில்ல. பைன் போட்டிருந்தாக்கூடச் சந்தோஷமாக் கட்டிட்டு வந்திருப்பேன்.அதே சமயம்,அந்த ஏட்டுக்கிட்ட வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருக்கவும் மனசில்லே.அதான்..அவசரமா வந்து ஒரிஜினல் லைசன்சை எடுத்துக்கிட்டுப் போயி,இன்ஸ்பெக்டர்கிட்டயே காட்டிட்டு வந்தேன்.’என்றார்.

அவருக்கு மகளாகப் பிறக்க வைத்ததற்காக அனு மீண்டுமொருமுறை கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள்.-மனத்திற்குள்ளாக.

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.