Published:Updated:

நின்னையே கதியென்று நினைக்கிறேனடி! | சிறுகதை | My Vikatan

Representational Image

அம்மா டீயாச்சும் குடிச்சியா? காலைக்கு சாப்ட?..கதவைத் தாள்போட பின்னாடியே வந்த மகள் ரேவதி கேட்கவும்..டீ குடிச்சிட்டேங் கண்ணு..இன்னிக்கு ஆடி வெள்ளீல்ல அம்மாவ பாக்க போகக்கொள்ள சாப்புடுவாங்களா?..

நின்னையே கதியென்று நினைக்கிறேனடி! | சிறுகதை | My Vikatan

அம்மா டீயாச்சும் குடிச்சியா? காலைக்கு சாப்ட?..கதவைத் தாள்போட பின்னாடியே வந்த மகள் ரேவதி கேட்கவும்..டீ குடிச்சிட்டேங் கண்ணு..இன்னிக்கு ஆடி வெள்ளீல்ல அம்மாவ பாக்க போகக்கொள்ள சாப்புடுவாங்களா?..

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

காலை மணி ஆறு. தலைக்குக் குளித்துவிட்டு ஈரத்தலையைத் துவட்டி முடியை நுனிமுடிச்சுப் போட்டு முதுபக்கம் தள்ளிவிட்டு விபூதியைக் குழைந்து ஆண்கள் இட்டுக் கொள்வதைப்போல் நெற்றியில் பட்டையாய் இட்டுக்கொண்டு முகம்பார்க்கும் கண்ணாடியில் பார்த்து நெற்றியின் நடுவில் ஒரு ரூபாய் காசளவில் குங்குமத்தை வைத்துவிட்டு கண்ணாடியை எடுத்த இடத்தில் வைத்து விட்டு இருகைகளையும் அலம்பிக் கொண்டாள் ஐம்பது வயது ரெங்கம்மா.

பொடவ ஜாக்கெட் நல்லாதா இருக்கு இதுபோதும். இப்ப கெளம்பினாதான் ஏழுமணிக்குள்ளாற பட்டீஸ்வரம் போய்ச் சேரமுடியும். ஆறு இருவதுக்கு பஸ்- டாண்டுல பஸ் கெளம்பிடும். வீட்லேந்து பஸ்டாண்டுக்கு நடந்து போவ பத்துநிமிஷம் ஆவும்..ரேவதி நா கெளம்புறேன். பத்ரமா இரு. யாரு கதவ தட்டினாலும் கதவ தொறக்காத சரியா..? பூவெல்லாம் வித்துமுடிச்சதும் ஒடனே கெளம்பிடுவேன் சொல்லிக் கொண்டே பூக்கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள் ரெங்கம்மா.

Temple
Temple

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மா டீயாச்சும் குடிச்சியா? காலைக்கு சாப்ட?..கதவைத் தாள்போட பின்னாடியே வந்த மகள் ரேவதி கேட்கவும்..டீ குடிச்சிட்டேங் கண்ணு..இன்னிக்கு ஆடி வெள்ளீல்ல அம்மாவ பாக்க போகக்கொள்ள சாப்புடுவாங்களா?.. வீட்டுக்கு வந்து சாப்புடுறேங்கண்ணு.. கோவிலாண்ட கணேசு கடையில தேவைன்னா டீ குடிச்சிக்கிறேன். வரேன்.. கதவ தாப்பா போட்டுக்க.. சொல்லிக் கொண்டே செருப்பை மாட்டிக் கொண்டு தெருவில் கால் வைத்தாள் ரெங்கம்மா. உதிறிப் பூவைக் கிலோ கணக்கில் வாங்கி இரவு முழுவதும் கட்டியதும் பத்துநிமிடம் கூட படுக்காமல் குளித்துவிட்டுக் கிளம்பியதும் காரணமாய் ரெங்கம்மாவுக்கு ரொம்பவும் அசந்துவந்தது.

முதுகு விரல்கள் முழங்கை கழுத்து என எல்லா இடத்திலும் ஏகத்துக்கும் வலித்தது. செவ்வரளி மஞ்சப்பூ மல்லி முல்லையென விதவிதமான பூக்கள் கூடையிலிருந்து மணத்தைப் பரப்பின. பாவம் ரேவதி அதுவும்தானே ராமுழுக்க பூ கட்டிச்சி..

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுக்கும் வலிக்குமில்ல..ப்ச்.. என்னா பண்ணுறது..எவ்வயித்துல பொறந்து அது என்னா சொகத்த கண்டுச்சு..

வயசு இருவத்து மூணு முடியப் போவுது.. அதொடுத்த பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணமாகி வயித்துல ஒன்னும் இடுப்புல ஒன்னுன்னு இருக்கையில.. எனக்கு பொறந்த பாவம்.. கல்யாணகாலம் வரவே மாட்டேங்குதே எம் பொண்ணுக்கு.. வெறுங்கையி மொழம் போடுமா.. அதுவும்தா துணிக்கடேல நாள்முழுக்க நின்னு வேலபாக்குது.. சம்பளத்த என்ன அள்ளியா குடுக்குறானுங்க கட முதலாளிங்க.. நா பூவித்து எம்மாங்காசு சம்பாரிச்சிட முடியும்.. ரெண்டுபேரும் கொண்டுவர காசு ரெண்டுவேள பசிக்காம சாப்புடதா போறுது.. இதுல குடிகார புருஷனோட அல்லாட்டம் வேற.. அவுனுக்கு.. ஏதுடா பெத்த பொண்ணுக்கு வயசு ஏறிகிட்டே போவுதே நல்ல எடமா பாத்து கட்டித்தருவோம்னு கொஞ்சமாச்சும் தோணுதா..அப்பன்னா பொறுப்பு வேண்டாம்.. பொறுப்பத்தவ.. நா ஒண்டியா பூவியாபாரம் செஞ்சு..என்னிக்கி காசுசேத்து என்னிக்கு எம்மவளுக்கு கல்யாணம் கார்த்தின்னு செய்வேன்.இதுல ரேவதி ஜாதகத்துல ராகு கேது தோஷம் வேறல்ல இருக்கு மாப்ள பாத்தா அந்த பையனுக்கும் ராகு கேது தோஷம் இருக்கணும்றாரு ஜோசியரு.. நா எங்கபோயி தேடுவேன்..

பூக்கள்
பூக்கள்

அம்மா துர்காம்மாவே தொணைனு அவளையேல்ல நம்பிக்கிட்டு கெடக்குறேன். நம்பினவங்கள கைவிடமாட்டா அவன்னு சொல்றாங்க.. இன்னும் எத்தினி நாளுக்கு நம்பிக்கிட்டுக் கெடக்குறதுன்னு தெரீலயே.. என்னிக்கு அவ கண்ணத் தொறந்து பாக்கப்போறாளோ.. வாராவாரம் செவ்வா வெள்ளின்னு அவள பாக்க பட்டீஸ்வரம் போவாம இருக்கமாட்டேனே..எத்தினி வாரம் ராகுகாலத்துல ரேவதிய கூட்டிட்டுப் போயிருப்பேன்.எம்மவள கண்ணெடுத்தும் பாக்கிலியே துர்காத்தா..கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க அம்மா தாயே துர்காம்மா என்று ஆற்றாமையோடு வாயிலிருந்து அம்பாளின் திருநாமம் வெளிப்பட பஸ்டாண்டில் கால் வைத்தாள் ரெங்கம்மா.

கும்பகோணம் பேருந்துநிலையம் அந்த காலைநேரத்திலேயே ஜேஜே என்று இருந்தது. பட்டீஸ்வரம் செல்லும் பேருந்தை சுற்றி மக்கள் ஈக்கள்போல் மொய்த்திருந்தனர்.

நிறைய ஸ்பெஷல் பஸ்களும் நிற்க அனைத்திலும் கூட்டம் கூட்டம் கூட்டம்.

ஆஹா..அடி ஆத்தி..எம்மாங்கூட்டம் நிக்கிது.. கூடயயெல்லாம் ஏத்து வாங்களா.. மனதுக்குள் கவலை எட்டிப் பார்த்தது. இது என்ன கரு வாட்டுக் கூடையா என்ன.. பூக்கூடைதானே..மனதை சமாதானம் செய்தாள்.

ரெங்கம்மாவின் மனம் பயந்தது போலவே கூடயை ஏற்ற மூன்று பஸ் கண்டக்டர்கள் மறுத்துவிட துர்க்கையின் கருணையோ என்னவோ நாலாவதாய் நின்ற பஸ்ஸில் ஏற்றிக் கொள்ளப்பட்டாள் ரெங்கம்மா.

சாதாரண செவ்வாய்.. வெள்ளிக் கிழமைகளிலேயே ராகுகாலத்தில் பட்டீஸ்வரம் துர்கையம்மன்
கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். அன்று ஆடிமாத கடைசி வெள்ளி. கடைவெள்ளி. கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும். ஜகத் ரக்ஷகி, அலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி தன்னை நாடிவரும் பக்தர்களின் வேண்டுதல்- களை வேண்டியவண்ணம் நிறைவேற்றுபவள்.. துக்கநிவாரணி.. மகிஷனை சம்ஹாரம் செய்து தேவர்களைக்காத்தவள்.தன் பக்தர்களைக் காக்க பூமிக்குவந்துவிஷ்ணு துர்கை.. என திருநாமம் கொண்டு மகாதேவனின் கோரிக்கையை ஏன்று பட்டீஸ்வரத்தில் திருக்கோயில் கொண்டு தங்கிவிட்டவள் எனத் தலபுராணம் கூறுகிறது..

சாந்தஸ்வரூபியாய் எட்டுகரங்கள் கொண்டு ஆறு கரங்களில் ஆயுதமேந்தி இடது கையொன்றில் கிளியினையும் வலது கையொன்றால் அபயம் காட்டி மூன்று நேத்திரங்களோடும் மந்தகாஸப் புன்னகையோடும் நிற்பவள். அம்மா துன்பம் போக்கிக் காப்பாயம்மா என்று அபயம் தேடி வருபவர்களை நொடியும் காக்கவைக்காமல் இதோ வந்தேன் என்று சொல்பவளைப்போல வலதுகாலை சற்றே முன்வைத்து கிளம்ப ஆயத்தமாகிவிட்டவள்போல நிற்பவள்.

Representational Image
Representational Image

உண்மையில் துர்கையம்மன் கோயில்கொண்டிருப்பது ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர்ஆலயத்தில் ஓர் தனி சன்னதியில் தான். ஆனாலும் இவளின் மகிமையால் பட்டீஸ்வரம் துர்கை கோயிலென்றே பிரசித்திபெற்றது இத்தலம். முதன்முதலாய் இக்கோயிலுக்கு வருபவர்கள் கோயிலைப் பார்த்த மாத்திரத்தில் விழிகள் விரிய அசந்துபோய் சிலையாய் நின்றுவிடுவார்கள்.

காரணம் கோயிலின் பிரம்மாண்டம். அடேங்கப்பா. எத்தனாம் பெரிய கோயில் என வாய்பிளந்து சொல்லவைத்து வாயைமூட சிறிதுநேரம் பிடிக்கவைக்கும். நவகிரகங்களில் ராகுவின் தாயாக இருக்கிறாளாம் இந்ததுர்க்கையம்மா. அதனாலேயே ராகு.. செவ்வாய் வெள்ளியில் தன்னுடைய நேரமாகிய ராகுகாலத்தில் தன் தாயாகிய இவளை தரிசிக்க வருபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் தான் எத்தகு துன்பத்தையும் தருவதில்லை யாம்.
சோழர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கிய இத்தலம் சமயக்குரவர்கள்நால்வராலும் பாடப்பட்டதலம். அதுவும் ஐந்துவயதே ஆன ஞானசம்பந்தர் சிவனை தரிசிக்கவந்தபோது அவர்வெயிலால் துன்பமடையாமலிருக்க சிவனால் முத்துப்பந்தல் அமைக்கப் பட்டதாகவும் நந்தி நகர்ந்து அமர்ந்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. போரில் ராவணணைக் கொன்ற ஸ்ரீ ராமர் தன் தோஷம்நீங்க இத்தலம் வந்து தேனுபுரீஸ்வரரை வணங்கிச்சென்றாராம். தெய்வப் பசு காமாதேனு தன்மகள் பட்டியை இக்கோயிலில் தொண்டுசெய்ய விட்டுச்சென்றதாகவும் பட்டியின் தொண்டால் ஈசன் மகிழ்ந்ததாகவும் அதனாலேனேயே பட்டியின் பெயரால் பட்டீஸ்வரம் என்று இத்தலத்திற்குப் பெயர்வந்ததாகவும் கூறுவர்.


எப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த ஸ்தலம் இது. ஆயிரம் சிறப்புகள் சொல்லப் பட்டாலும் அம்பிகை துர்க்கையின் மகிமையே இக்கோயிலை தேனுபுரீஸ்வரர் ஆலயம் என்று அறியப்படுவதைவிட பட்டீஸ்வரம் துர்கையம்மன் ஆலயமென்றே அறியப்பட வைத்துள்ளது.


காலை ஏழுமணி முதலே சேர ஆரம்பித்த கூட்டம் வெள்ளிக்கிழமை பத்தரை டு பனிரெண்டு ராகுகாலம் என்பதாலும் ராகுகாலத்தில் துர்கையைத் தரிசிப்பது விசேஷம் அதுவும் ஆடிவெள்ளியின் கடைசி வெள்ளியில் தரிசித்தால் செய்த பாவங்கள் தொலைந்து துன்பங்கள் விலகி தேவைகள் கிடைத்து விருப்பங்கள் நிறைவேறும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு துர்கையை தரிசிக்க முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள் பக்தர்கள். அங்கப் பிரதட்சணம் செய்வோரும்.. மாவிளக்கு ஏற்றுபவர்களுமாய் பலரிருக்க சாந்தஸ்வரூபியாய் மடிசார் சகிதம் அருள் வழியும் கண்களோடு அபய முத்திரை காட்டியபடி நானிருக்கிறேன் உன் துன்பம் போக்க துயரம் நீக்க உன் தேவைகளை நிறைவேற்ற என்று தன்னை நாடிவந்த ஒவ்வொரு-- வர்க்கும் சொல்வதுபோல் அருளே வடிவாய் நின்று கொண்டிருக்கும் அம்பிகை துர்கையை பக்தியோடு பார்த்தபடி கைகூப்பி நிற்பவர்களின் கண்களிலிருந்து பக்திப் பரவசத்தால் கண்ணீர் வழிந்தது.

கோயில் வாசலில் பூக்கூடையோடு வந்து அமர்ந்துகொண்டாள் ரெங்கம்மா. செவ்வரளி மல்லிப்பூ இரண்டிலும் ஒவ்வொரு முழம் பூவை துர்கைக்கென்று எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு வியாபாரத்தை ஆரம்பித்தாள். ஒருமணி நேரத்துக்குள் மொத்தப்பூவும் விற்றுத்தீர்ந்து விட.. அம்மா தாயே துர்காம்மா என்றபடி எழுந்தவள் கூடையை தேங்காய் கடைக்குள் வைத்துவிட்டு.. கடைக்காரரிடம் அண்ணே கூடை இங்கியே இருக்கட்டும்ணே சாமி கும்புட்டுட்டு வந்து எடுத்துக்குறேன் என்றபடி அம்பாளுக்கென வைத்திருந்த பூவை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் ரெங்கம்மா.


மணி பத்தரை. ராகுகாலம் ஆரம்பித்துவிட அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் தொடங்க இருப்பதை டாண்..டாண்..டாண் என்று முழங்கி கோயிலின் மணியோசை அறிவித்தது. அங்கு இங்கு என்று நின்றிருந்தவர்களெல்லாம் துர்கையம்மன் சன்னதியில் குவிய ஆரம்பிக்க கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. லலிதா சகஸ்ரநாமமும் அயிகிரி நத்தினி என்ற துர்காஷ்டகமும் குழுகுழுவாய் சேர்ந்து பக்தர்கள் சொல்லிக்கொண்டிருக்க கூட்ட நெரிசலில் தானும் ஒருத்தியாய் அம்பாளைப் பார்த்தபடி கண்களில் கண்ணீர் மல்க நின்றாள் ரெங்கம்மா..அம்மா..அம்மா..எனக்கு என்ன தேவைன்னு ஒனக்குத் தெரியாதா..எப்பம்மா எம் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கய அமச்சுக் குடுக்கப்போற.. இந்தத் தாயோட மனச ஒலகத்துக்கே தாயான ஒனக்குத்தெரியாதா.. நீயே கதின்னு ஒங் காலடீலதானே வந்து விழுவுறேன்..அம்மா.. துர்காம்பிகாம்மா எம் பொண்ணுக்கு சீக்கிரமே கல்யாணம் முடியணும்மா.. வாய்விட்டு மெதுவாய்ப் புலம்பினாள் ரெங்கம்மா.

துர்கை அம்மன்
துர்கை அம்மன்

திருமணம் பிள்ளைவரம் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர குடும்பச் சண்டை தீர நோய்தீர வியாபார விருத்தி என்று எத்தனை விதமான வேண்டுதல்கள்.. எத்தனை விதமான பக்தர்கள்.. அனைவரின் வேண்டுதலுக்கும் செவி சாய்ப்பவளல்லவா ஈரேழு உவகத்தையும் காத்து ரக்ஷிக்கும் ஸ்ரீதுர்கா.. ரெங்கம்மாவின் வேண்டுதல் அவள் செவிகளில் விழாமல் போய்விடுமா என்ன.. அபிஷேகம் முடிந்து அலங்காரம் முடிந்து திரைவிலகி தீபாராதனை காட்டப்பட்டபோது ஆலயமணியின் ஓசையும்..

ஜெயஜெயதேவி ஜெயஜெயதேவி துர்காதேவி சரணம்..விஷ்ணு துர்காதேவி சரணம்..என்றும் ஜெய்துர்கா ஜெய் துர்கா என்றும் பக்திப்பரவசத்தோடு பக்தர்கள் எழுப்பிய சரணகோஷமும் விண்ணை முட்டியது.

அர்ச்சகர் தீபாராதனைத் தட்டை நீட்ட கைகளால் கற்பூரஜோதியை கண்களில் ஒற்றிக்கொண்டு குங்குமத்தைப் பெற்றுக்கொண்டு துர்காம்மா ஒன்னதாம்மா நம்பிருக்கேன் என்றபடி நெற்றியில் இட்டுக் கொண்டாள் ரெங்கம்மா. கூட்டம் மெள்ளக் கலையத் தொடங்கியது.

மூன்று முறை பிராகாரம்சுற்றிவிட்டு கொடிமரத்தடியில் நமஸ்காரம் செய்து விட்டு அருகேயிருந்த மண்டபத்தில் அமர்ந்தாள் ரெங்கம்மா. கையிலிருந்த மஞ்சப் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து வாயில் சரித்துக் கொண்டபோது.. அம்மா என்று அழைத்தபடி ஆண் ஒருவர் எதிரில் வந்து நிற்க.. சட்டென தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு எதிரில் நின்றவரைப் பார்த்தாள்.

எங்கோ பார்த்தமுகமாய்த் தெரிந்தது என்றாலும் சட்டென யாரென்று பிடிபடவில்லை.

நீங்க நன்னிலம் தாமரைக்குளம் ராஜதொர சித்தப்பா மவ ரெங்கம்மாதானே என்று கேட்டார் எதிரில் நின்றவர்.

சட்டென எழுந்து கொண்டாள் ரெங்கம்மா.. அ..அ..ஆமா..நீங்க என்றாள் பரபரப்பாய்.

தங்கச்சி.. என்னய தெரியல.. நாந்தாம்மா ஒன்னோட பிச்சகண்ணு பெரியப்பா மவன் சேகரு..ஒன் அண்ணன்மா..சேகரண்ணன்..பாத்து முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சுதுல்ல..வயசாகிப்போச்சு.. அதான் சட்டுனு அடையாளம் தெரியல..

அண்ணே..சேகரண்ணே..கத்திவிட்டாள் ரெங்கம்மா..குடும்பப்பக காரணமா பிரிஞ்சப்புறம் இப்பதாண்ணே பாத்துக்குறோம்.. அண்ணே எப்டீண்ணே இருக்கீங்க..இப்ப எங்கண்ணே இருக்கீங்க..

தங்கச்சி வா..ஒக்காந்து பேசலாம் என்றபடி மண்டபத்தில் அமர ரெங்கம்மாவும் அமர்ந்துகொண்டாள்.

அண்ணே அண்ணே என்று பத்து தடவையாவது அழைத்திருப்பாள் பாசம்பொங்க.

சொல்லும்மா..நீ எப்டிம்மா இருக்குற.. ஓ புருஷன் அதான் மாப்ள எப்டிருக்காரு.. ஒனக்கு எத்தினி புள்ளைங்க..அவுங்களுக்கு கல்யாணங் கட்டியாச்சா..கேள்விமேல் கேள்விகேட்டார் ரெங்கம்மாவின் அண்ணன்.

அண்ணே.. எவ்வாழ்க்க அப்பிடியொன்னும் பெரிசா சொல்லிக்கிறமாரியில்லண்ணே.. எம் புருஷன் நிரந்தரமான வேலைக் கெல்லாம் போவுல.. நா பூக்கட்டி பூ வியாபாரம் பண்ணுறேன். எனக்கு ஒரே பொண்ணுண்ணே..ப்ளஸ்டூ படிச்சிட்டு ஜவுளிக்கடேல வேலபாக்குது.. வயசு இருவத்து நாலாகப்போவுது.. இன்னும் கல்யாணமாவுல.. ஜாதகத்துல ஏதோ ராகு கேது தோஷமிருக்காம்.. அதுக்கு ஏத்த ஜாதகமாதான் பாக்கணுமாம்.

என்ன சோதனையோ நாஞ்செஞ்ச பாவமோ பொண்ணு ஜாதகத்துக்கு ஏத்த ஜாதகமே கெடைக்க மாட்டு-- துண்ணே..நீண்ட வருடங்களுக்குப் பிறகு அண்ணன் என்ற உறவினையுடைய ஒருவரைப் பார்க்கிறோமே.. பார்த்த முதல் சந்திப்பிலேயே மனவருத்தத்தை யெல்லாம்கொட்டித் தீர்க்கிறோமே என்றில்லாமல் சொல்லித்தீர்த்தாள் ரெங்கம்மா..


வருத்தப்படாத தங்கச்சி..எல்லாம் அவ..அந்த ஆத்தா பாத்துப்பா என்றபடி துர்கை சந்நிதானம் நோக்கிக் கைநீட்டினார் ரெங்கம்மாவின் அண்ணன்.

 கோயில்
கோயில்

அண்ணே..நீங்க எப்டீண்ணே இருக்கீங்க..

தங்கச்சி..நா நாகப்பட்னத்துல இருக்குறேன்.ஒங்கண்ணி நாலு வருஷத்துக்கு முன்னாடி காலமாயிட்டா.. எனக்கு ஒரே மவன். எம்பிஏ படிச்சிட்டு கவர்மென்ட்டு பேங்குல மதுரேல வேலபாக்குறான். இருவத்தொம்போது வயசாவுது.

அவுனுக்கும் ஜாதகத்துல ராகு கேது தோஷமிருக்குதாம்..ஆடி கட வெள்ளியன்னிக்கி பட்டீஸ்வரம் போயி துர்கைய பாத்துட்டு ஒங்க பையம் பேருல ஒரு அர்ச்சன பண்ணிட்டு வாங்க பையனையும் அழச்சிட்டுபோங்கன்னு ஜோசியர் சொன்னாரு அதான் பையனையும் அழச்சிக்கிட்டு வந்தேன்.

அசோக்கு..அசோக்கு..மண்டபத்திலிருந்த தூணில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களைப் பார்த்து ரசித்த படியிருந்த இளைஞனை கைதட்டி அழைத்தார் ரெங்கம்மாவின் அண்ணன்.

அப்பா.. என்று அழைத்தபடி அருகில் வந்தான் அஷோக் என்ற அந்த இளைஞன். தழையத்தழைய வேட்டியும் முழுக்கை ஷர்டும் அணிந்து மிக நேர்த்தியாய் தலைவாரி பார்க்க வெகு கம்பீரமாய் அழகாயிருந்தான் அஷோக்.

அசோக்கு..இதுயார் தெரியுமா.. என்னோட சித்தப்பாரு மவ ரெங்கம்மா..நாங்குட எப்பவாச்சும் சொல்லுவேன்ல..அவுங்கதா இவுங்க.. என்னோட தங்கச்சி.. ஒன்னோட அத்த..


தங்கச்சி இவ அசோக்கு..என்னோட

மவன்..

ஓ..அப்பா..அந்த அத்தையா இவுங்க..அத்த..நமஸ்காரம் அத்த.. கையெடுத்துக் கும்பிட்டான் அஷோக்.

நல்லாருப்பா..வாழ்த்தினாள் ரெங்கம்மா.


சட்டென சிலநிமிடம் அங்கே அமைதி நிலவியது.

அப்பா..தூண்ல சிற்பமெல்லாம் சூப்பரா இருக்குப்பா..இன்னொரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு வரேன்..பாத்துட்டு வரேன் அத்த.. சொல்லிவிட்டு நகர்ந்தான் அஷோக்.

அண்ணே..இவ்ளதூரம் வந்துட்டீங்க..

வீட்டுக்கு வந்துட்டுப் போங்கண்ணே..

இங்கேந்து கும்பகோணம் பத்து கிலோமீட்டர் தாண்ணே..பிரிஞ்ச ஒரவ அம்மா துர்காதாண்ணே சேத்து வெச்சுருக்கா..வீட்டுக்கு வாங்கண்ணே..அன்பும் பாசமும் வெளிப்பட்டது ரெங்கம்மாவின் குரலில்.


தங்கச்சி.. ரெங்கு.. நா.. ஆவணிமாசம் பொறக்கட்டும்மா.. ஒவ்வீட்டுக்கு ஒம்பொண்ண எம்புள்ளைக்கு பொண்ணுகேட்டு வரேம்மா..என்றார்

ரெங்கம்மாவின் அண்ணன்.

அண்ணே..கத்திவிட்டாள் ரெங்கம்மா.

அண்ணே நீங்க என்னண்ணே சொல்றீங்க..நீங்க எங்க நா எங்க..

நா வெறும் பூக்காரிண்ணே..

நா ஊர்க்குருவிண்ணே..ஊர்க்குருவி

பருந்தாக ஆசப்படக்கூடாதுண்ணே..

அப்பிடி சொல்லாத தங்கச்சி..

முப்பது வருஷங்கழிச்சி ஒன்னையும்

என்னையும் தன்னோட கோயில்ல சந்திக்க வெச்சுருக்கா இந்த துர்காத்தா.ஒம்பொண்ணுக்கும் ஜாதகத்துல ராகுகேது தோஷம்.

எம் புள்ளைக்கும் ஜாதகத்துல ராகுகேது தோஷம். நவக்கிரகங்களையும் தனக்குள்ள அடக்கினவ ஆத்தா.. அவ ராகுவோட தாயா இந்த கோயில்ல இருக்கறதா சொல்லுவாங்க.. அவுளுத்தெரியும் யார யாரோட சேத்துவைக்கணும்னு.

எனக்கென்னவோ எம்மவன ஒம்பொண்ணோட சேத்து வைக்கணும்னு அவ நெனைக்கிறதா தோணுதும்மா..இல்லாட்டி என்னயும் ஒன்னையும் இன்னிக்கு அவளோட இந்தகோயில்ல சந்திக்க. வெச்சிருக்கமாட்டா..அவ என்ன நெனைக்கிறா என்ன செய்வான்னு யாருக்குமா தெரியும். அவளத் தாண்டின சக்தி ஏதுவும் உண்டா என்ன.அவ பெரும்சக்தி..மகாசக்தி.. ஆவேசம் வந்தவர்போல் பேசினார் ரெங்கம்மாவின் அண்ணன்.

துர்காதேவி
துர்காதேவி

வாயடைத்து பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் ரெங்கம்மா.

தங்கச்சி வாம்மா கெளம்புவோம்.. எங்குளுக்கு ரெண்டுமணிக்கு பஸ்ஸும்மா..ஆவணி பொறந்ததும் வந்துடுவோம்மா..ரெடியா இரு..சரியா..அசோக்கு வா கெளம்பலாம் மகனை அழைக்க.. அசோக் இவர்களை நோக்கி நடந்து வந்தான்.

மீண்டும் மகாசக்தி துர்காவின் சந்திதியில் மூவரும் வணங்கி விட்டுக் கிளம்ப ஆயத்தமாக

ரெங்கம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பெருகி கன்னங்களில் வழிந்ததது. அம்மா.. துர்க்காதேவி..என்தாயே.. வாய் விட்டுச் சொன்னவள் தன்னை அறியாமல் கேவினாள்.

அதோ எட்டு கரங்களும் மூன்று கண்களும் கொண்டவளாய் அபய கரம் காட்டி சாந்தஸ்வரூபியாய் அருள் மழைபொழிபவளாய் தன்னைநாடி வருபவர்கெல்லாம் வேண்டியதை வேண்டியபடி தந்து காத்து ரக்ஷிக்கும் விஷ்ணு துர்கையாம் அந்த ஸ்ரீதுர்காவுக்கு..

பட்டீஸ்வரம் துர்கையம்மாவுக்கு யாருக்கு எதை எப்படி எப்போது தரவேண்டும் என்பது தெரியாதா என்ன.. அவளே அனைத்துமாய் ஆனவள்..அவள் மட்டுமே அனைத்தையும் அறிந்தவள்.


ஜெயஜெயதேவி..ஜெயஜெயதேவி..

துர்காதேவி சரணம்.. ஜெயஜெயதேவி..ஜெயஜெயதேவி..

துர்காதேவி சரணம்..விஷ்ணு துர்காதேவி சரணம்..விஷ்ணு துர்காதேவி சரணம்.


முற்றும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.