Published:Updated:

மிலிட்டரி தாத்தா |சிறுகதை | My Vikatan

Representational Image

“இது நார்மல் ஹார்ட் அட்டாக்கா மட்டும் இருந்தா ஸேவ் பண்ணிருக்கலாம், பட் டைம் அதிகமானதால கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் போய்டுச்சு. அட்லீஸ்ட் த்ரீ அவர்ஸ்க்கு முன்னாடியே பெயின் ஸ்டார்ட் ஆயிருக்கணுமே, ஏன் இவ்ளோ லேட்டா கூட்டிட்டு வந்தீங்க?”

மிலிட்டரி தாத்தா |சிறுகதை | My Vikatan

“இது நார்மல் ஹார்ட் அட்டாக்கா மட்டும் இருந்தா ஸேவ் பண்ணிருக்கலாம், பட் டைம் அதிகமானதால கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் போய்டுச்சு. அட்லீஸ்ட் த்ரீ அவர்ஸ்க்கு முன்னாடியே பெயின் ஸ்டார்ட் ஆயிருக்கணுமே, ஏன் இவ்ளோ லேட்டா கூட்டிட்டு வந்தீங்க?”

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“ஹலமித்தி ஹபிபோ.. ஹலமித்தி ஹபிவந்தாளே… ஹலமித்தி ஹபிபோ…” அலைபேசியின் வழியாக அரபிக்குத்து பாடல் என் காதுகளில் நுழைந்து என்னை தூக்கத்திலிருந்து எழுப்பியது. என்னதான் தளபதியின் தீவிர ரசிகனாகவே இருந்தாலும் காலை 5 மணிக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது வந்த அழைப்பினால் பாடலை ரசிக்க முடியாமல் அலைபேசியின் திரையை பார்த்தேன். என் நண்பன் ‘“ரெட்” ரமேஷ்’. நீங்கள் நினைப்பது சரிதான். ரமேஷ் ஒரு அஜித் வெறியன்.

“டேய்…ரெட்டு… என்னடா காலங்காத்தால போன பண்ணி உசுர எடுக்குற…?”

“டேய் பத்ரி… உன் வீட்டு வாசல்லதான் நிக்குறேன், சீக்கிரம் எந்திச்சு வா”

இப்போது நீங்கள் நினைப்பது தவறாக இருக்கலாம். எனது பெயர் பத்ரி அல்ல கதிர். நண்பர்களுக்கு “பத்ரி” கதிர். நீங்கள் ஒரு தமிழராய் இருந்தால் அஜித் ரசிகன் “ரெட்” என்றும் விஜய் ரசிகன் “பத்ரி” எனவும் அடைமொழி வைத்திருப்பதில் உங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இருக்காது என நம்புகிறேன்.

“அப்படி என்னடா அர்ஜென்ட்?, வெய்ட் பண்ணு வர்றேன்” என்ற படியே அலைபேசியை துண்டித்து திரையின் வால்பேப்பராக இருந்த “ஃபீஸ்ட்” தளபதிக்கு ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தேன்.

அறைக்கதவை திறந்து வெளியே வந்த போது வரவேற்பறையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்திக்கொண்டிருந்த எனது தந்தை என்னை ஆச்சர்யமாய் நோக்கினார்.

“என்னடா ஆச்சு… இன்னைக்கு உன் தலைவர் படம் எதுவும் ரிலீசா? ”

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா”

“நீ சாதாரணமா இவ்வளவு சீக்கிரமா எந்திச்சுக்குற ஆளு கிடையாதே…!”

“ரமேஷ் கால் பண்ணி கூப்பிட்டான் அதான்…”

“வலிமை ரிலீஸ் ஆகி ரொம்ப நாள் ஆயிடுச்சேடா…?”

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அட போப்பா… நீ வேற இம்ச பண்ணிக்கிட்டு” என்று சலித்துக்கொண்டே வாசலை நோக்கி நடந்தேன்.

வாசலில் “ரெட்” ரமேஷ் தனது கேடிஎம் பைக்கின் உறுமலோடு காத்துக்கொண்டிருந்தான்.

“என்னாச்சு ரெட்டு?”

“நம்ம மிலிட்டரி தாத்தா ஹாஸ்பிட்டல்ல இருக்காறாம்டா…!”

“என்னடா சொல்ற.. நேத்து நைட்டு பத்து மணி வரைக்கும் நம்ம கூடதான பேசிக்கிட்டு இருந்தாரு” அதிர்ச்சியாய் கேட்டேன்.

“தெரியலடா காலைல 4 மணிக்கு நெஞ்சு வலின்னு நம்ம செந்திலுக்கு கால் பண்ணிருக்காரு…அவன்தான் அவர ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணான்”

“சரிடா கொஞ்சம் வெய்ட் பண்ணு”

வேகமாக வீட்டினுள் நுழைந்து சில நிமிடங்களில் வெளியேறினேன்.

“எந்த ஹாஸ்பிட்டல்டா…?”

“விஜயா நர்ஸிங் ஹோம்டா…?”

“இப்போ எப்படி இருக்காறாம்?”

“மிலிட்டரிக்கெல்லாம் ஒண்ணும் இருக்காதுடா… வயசுக்கு ஏத்த மாதிரி இட்லி, இடியாப்பம்னு சாப்பிடணும்.. அதவிட்டுட்டு நமக்கு போட்டியா பத்து பரோட்டா சாப்பிட்டா இப்படித்தான்”

“அது சரிதான்… செந்திலா இருக்கப்போய்தான் ஹாஸ்பிட்டல்ல சேத்துருக்கான். நமக்குலாம் கால் பண்ணிருந்தார்னா, ஏதாவது கேஸ் பிரச்சனயா இருக்கும் ஓமவாட்டர குடிச்சுட்டு படு தாத்தான்னு சொல்லிருப்போம்”

விஜயா நர்ஸிங் ஹோம்.

வரவேற்பறையில் விவரத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, செந்திலிடமிருந்து அழைப்பு.

“மாப்ள… நாங்க உள்ள வந்துட்டோம்… மிலிட்டரி இப்போ எப்படி இருக்காரு?”

“தாத்தா போயிட்டாரு மச்சான்”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என்னடா சொல்ற…?”

“சீக்கிரம் வா மச்சான்” என்ற படி இணைப்பைத் துண்டித்தான் செந்தில்.

ரமேஷின் முக மாறுதலை வைத்தே செந்தில் என்ன சொல்லியிருப்பான் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

இருவரும் ஓட்டமும் நடையுமாக அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி விரைந்தோம்.

செந்தில் பதட்டத்தோடு நாற்காலியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

“டேய் மாப்ள… எப்படிடா?” என்றேன்.

“தெரியல மச்சி.. அட்டாக்னு சொன்னாங்க. டாக்டர் இன்னும் வெளிய வரல, வந்தாதான் என்ன ஆச்சுன்னு முழுசா தெரியும்” என்று செந்தில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மருத்துவர் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறினார்.

“என்னாச்சு டாக்டர்? நேத்து நைட் கூட நார்மலாத்தான் இருந்தாரு? எப்படி திடீர்னு அட்டாக்…?” வினவினான் ரமேஷ்.

“இது நார்மல் ஹார்ட் அட்டாக்கா மட்டும் இருந்தா ஸேவ் பண்ணிருக்கலாம், பட் டைம் அதிகமானதால கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் போய்டுச்சு. அட்லீஸ்ட் த்ரீ அவர்ஸ்க்கு முன்னாடியே பெயின் ஸ்டார்ட் ஆயிருக்கணுமே, ஏன் இவ்ளோ லேட்டா கூட்டிட்டு வந்தீங்க?”

“இல்ல சார்… காலைல நாலு மணிக்குதான் நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு?”

“ஓகே. இனிமே பேசி பிரயோஜனமில்ல… நீங்க அவருக்கு என்ன வேணும்?”

“நாங்க மூணு பேரும் அவரோட நெய்பர்ஸ் ஸார்”

“அவங்க ரிலேட்டிவ்ஸ் யாரும் வரலயா?”

“இல்ல ஸார், தாத்தாவுக்கு ரிலேட்டிவ்ஸ்னு யாரும் கிடையாது, நாங்கதான் எல்லாம்”

“ஓகே.. அப்போ ஃபார்மாலிட்டிஸ் முடிச்சு பாடிய ரிஸீவ் பண்ணிக்கோங்க… ஐ ஆம் ஸாரி” என்றபடி நகர்ந்தார்.

Representational Image
Representational Image

மிலிட்டரி தாத்தாவுக்கு வயது எழுபதை நெருங்கியிருந்தது, ஆனால் அவரது கட்டுமஸ்தான உடலைப் பார்க்கும் எவரும் ஐம்பது வயதிற்கு அதிகமாக மதிப்பிடமாட்டார்கள். எங்கள் ஊர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வேலை தேடி வெளியூர் சென்றவர், முப்பது வருடங்களுக்குப் பின் இராணுவ வீரராக திரும்பி வந்தார். அப்போது நாங்கள் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் பயின்று வந்த உயர்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு சுதந்திர, குடியரசு தினத்தன்றும் கொடியேற்றும் நபர் அவராகவே இருந்தார். ஒவ்வொரு முறை கொடியேற்றிய பின்னரும், அவர் ராணுவத்தில் பணிபுரிந்த போது நடந்த பல சாகச கதைகளை எங்கள் முன் நினைவு கூர்வார்.

ஒருமுறை சீனாவுடனான போர் என்றால் மறுமுறை பாகிஸ்தானுடனான யுத்தம் அடுத்தமுறை தீவிரவாதிகளுடன் போராட்டம் என புதிது புதிதாக தனது சாகச கதைகளை கூறி மெய்சிலிர்க்க வைப்பார். அந்த நாட்கள் முதல் இப்போது வரை எங்கள் ஊர் மக்களின் நாயகன் இந்த மிலிட்டரி தாத்தாதான். அதுவும் ஒருமுறை கார்கில் யுத்தத்தின் போது, பாகிஸ்தான் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட தனது சக இராணுவ வீரரின் உடலை சிந்தும் குருதியுடன், ஆறு கிலோமீட்டர்களுக்கும் மேல் தோளில் சுமந்தவாறே நடந்து வந்து இந்திய முகாமில் சேர்த்து தானும் மயங்கி விழுந்த தருணத்தை விவரித்த போது அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் கண்களில் நீர் வழிவதைக்கூட உணராமல் அசைவற்று கேட்டுக்கொண்டிருந்தோம்.

ஊருக்கு திரும்பிய பின்னர் சிறியதாக ஒரு தள்ளுவண்டியில் சிற்றுண்டி உணவகம் ஆரம்பித்து நடத்தி வந்தார். கல்லூரி காலம் தொட்டு இப்போது வரையிலும் எங்கள் மூவரின் இரவு உணவு அவரிடம்தான்.

“ஏன் தாத்தா.. இப்படி கஷ்டப்படுற? அதான் மிலிட்டரி பென்ஷன் வரும்ல, பேசாம உக்காந்து சாப்பிடலாம்ல?” என்று எத்தனை முறை கேட்டாலும், சிரிப்பு ஒன்றே அவரது பதிலாக இருக்கும்.

மிலிட்டரி தாத்தாவின் உடலை ஊருக்கு கொண்டு வந்தபின், அவருக்கான இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாட்டைத் தொடங்கினோம்.

“டேய் பத்ரி… நம்ம மிலிட்டரியோட அடக்கம் சாதாரணமா இருந்துரக் கூடாதுடா… ஊருல உள்ள அத்தன பெருசுகளும் நம்ம சாவும் இப்படி இருக்கக் கூடாதான்னு ஏங்குற அளவுக்கு பெருசா இருக்கணும்” என்றான் ‘ரெட்’ ரமேஷ்.

“பின்ன நம்ம மிலிட்டரி என்ன சாதாரண ஆளா.. ஏற்பாடெல்லாம் தடபுடலா இருக்கணும்” என்ற படி ஆமோதித்தேன்.

அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், மிலிட்டரி தாத்தாவின் வீட்டின் எதிர்புறம் இருந்த காலி மனையில், இருபதுக்கு இருபது அடி பேனரில் ‘துப்பாக்கி’ விஜய் அருகில் சிரித்தபடி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் தாத்தா. பக்கத்து பேனரில் ‘விவேகம்’ அஜித்துடன்.

“மச்சி… எக்ஸ் சர்வீஸ்மேன் வெல்ஃபேர் போர்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிருக்கேன்.. அவங்க வந்து நம்ம மிலிட்டரிக்கு மரியாதை பண்ணா இன்னும் கெத்தா இருக்கும்டா” என்றான் செந்தில்.

பத்து நிமிடங்களில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திடமிருந்து அழைப்பு வந்தது. அலைபேசியை காதில் வைத்த செந்திலின் முகம் மாறியது.

“என்ன ஆச்சு மாப்ள?” என்றேன்.

“அவங்க ரெக்கார்ட்ல நம்ம தாத்தா பேர கண்டுபிடிக்கிறது கஷ்டமாம், அதனால டிஸ்சார்ஜ் புக்ல நம்பர் பாத்து சொல்ல சொல்றாங்க”

“டேய்… நம்ம நாட்டுக்காக முப்பது வருஷமா ரத்தம் சிந்துனவரு பேர கூட கண்டுபிடிக்க முடியாதாம்மா இவனுங்களால…” பொங்கினான் ‘ரெட்’ ரமேஷ்.

“ சரி விடு ரெட்டு… எப்படியும் மிலிட்டரி வீட்டுக்குள்ளதான அந்த டிஸ்சார்ஜ் புக் இருக்கப்போகுது ,பத்து நிமிஷத்துல கண்டுபிடிச்சுடலாம் “ என்று சமாதானப்படுத்திவிட்டு செந்திலைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.

மிலிட்டரி தாத்தா வீடு எங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றுதான். இரவுக்காட்சிக்காக திரையரங்கம் செல்லும் நாட்களில் எங்கள் மூவரின் தூக்கம் இந்த வீட்டில்தான். பரண் மேல் இருக்கும் தகரப் பெட்டியில்தான் இராணுவ ஆவணங்கள் இருப்பதாக அவர் சொன்ன நியாபகம் இருந்தது.

Representational Image
Representational Image

“செந்திலு.. இந்த டிரங் பெட்டிலதாண்டா டிஸ்சார்ஜ் புக் இருக்கும், கொஞ்சம் அந்தப் பக்கம் புடி கீழ இறக்குவோம்” என்றேன்.

இருவருமாய் சேர்ந்து கீழே இறக்கி பெட்டியைத் திறந்தோம். உள்ளே மிலிட்டரி தாத்தாவின் நான்கைந்து பழைய துணிகளுடன், சில காகிதங்களும் மட்டுமே இருந்தன. வீடு முழுவதும் அலசிப் பார்த்தும், டிஸ்சார்ஜ் புக் கிடைக்காத விரக்தியில், “வேற எங்கடா வச்சுருப்பாரு?” என்றேன்.

“கொஞ்சம் பொறுடா, இந்த பேப்பர்ல ஒரு டெல்லி அட்ரஸும், ஃபோன் நம்பரும் இருக்கு, கால் பண்ணி தாத்தாவ பத்தி ஏதாவது உருப்படியான இன்ஃபர்மேஷன் கிடைக்குதான்னு பார்ப்போம்” என்றான் செந்தில்.

செந்தில் நான்கு வருடங்கள் மும்பையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்ததால், ஹிந்தி ஓரளவு நன்றாகவே பேசுவான்.

“சுப்ரபாத் சார், மே டமிழ்நாடு சே போன் கர் ரஹா ஹுன்” என்றபடி ஹிந்தியில் பேசத்தொடங்கியவன், சில நொடிகளில் முக மலர்ச்சியுடன், அலைபேசியை காதில் வைத்தவாறே “அவருக்கு நம்ம தாத்தாவ நல்லா தெரியுமாம்டா” என்று சொல்லிவிட்டு பேச்சைத்தொடர்ந்தான்.

ஏதாவது உருப்படியான தகவல் கிடைத்துவிடாதா என்ற ஆசையுடன் அவனது முகத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தேன். தொடக்கத்தில் மலர்ச்சியாக இருந்த அவன் முகம் சற்று நேரத்தில் மாறத் தொடங்கியது. அலைபேசியை அணைத்தவன் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

காரணத்தைப் புரிந்து கொண்டவனாய், “சரி விடுடா பாத்துக்கலாம், செத்துப் போனா ஸோல்ஜர் போர்டுல இருந்து வந்து மரியாதை குடுப்பாங்கன்னு நினைச்சு தாத்தா மிலிட்டரில வேலை பாக்கல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இந்த நாட்டுக்காக உழச்சவருக்கு நாடு கொடுக்குற மரியாதை அவ்ளோதான்னு நெனச்சுக்குவோம்” என்றேன்.

“டேய் பத்ரி…. “

“அட விடுடா, இதுக்கு போட்டு இவ்ளோ ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்க?”

Representational Image
Representational Image

“டேய் நம்ம தாத்தா மிலிட்டரிலயே வேலை பாக்கலயாம்டா, டெல்லில ஒரு ஹோட்டல்ல மாஸ்டர் வேலை பாத்துருக்காரு”

“என்னடா சொல்ற?” அதிர்ந்தேன்.

“ஆமாடா, இந்த மனுசன் சொன்னது அத்தனையும் புருடா.. இப்போ நான் பேசுனவரோட அப்பாக்கிட்டதான் வேலை பாத்துருக்காரு, அப்பாக்கு உடம்பு முடியாம பையன் ஓனரானதுக்கு அப்புறம் மனுஷன் சொல்லாம கொல்லாம ஓடி வந்துருக்காரு”

“அப்போ மிலிட்டரிய பத்தி நெறைய கதை சொன்னாரேடா…?”

“அதெல்லாம் ஹோட்டலுக்கு வர்ற மிலிட்டரிகாரங்ககிட்ட கேட்ட கதயா இருக்கும்டா, இவரு பார்டரு பக்கமே போனது இல்லயாம்டா”

இருவரும் ஏமாற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறினோம், எங்கள் இருவரையும் பார்த்த ‘ரெட்’ ரமேஷ், “என்னடா எதுவும் கிடைக்கலயா? டேய் மச்சான் இத இப்படியே விடக்கூடாதுடா… நம்ம தாத்தா நாட்டுக்காக சிந்துன ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் இவனுங்க பதில் சொல்லியே ஆகணும்டா, சோஷியல் மீடியால இன்னைக்கு தாத்தாவ டிரண்டு ஆக்கி, பிரச்சனைய சி.எம் வரைக்கும் கொண்டு போகணும்டா” என சீறினான்.

“டேய் ரெட்டு, விடுடா பாத்துக்கலாம்” என்றேன்.

“என்னது விடணுமா…? அவனுங்க வந்து நம்ம மிலிட்டரிக்கு மரியாதை பண்ணுற வரைக்கும் அவரு உடம்ப ஒரு இன்ச் கூட நகர விட மாட்டேன்”

“டேய் லூசுப்பயலே… மொதல்ல அவரு மிலிட்டரிலயே வேல பாக்கலயாம்டா” என்று சகலத்தையும் கூறி முடித்தான் செந்தில்.

சலனமின்றி என்னை நோக்கி திரும்பினான் ரமேஷ்.

“ஊருல யாருக்கும் தெரிய வேணாம்டா… தெரிஞ்சா நம்ம பண்ண அலப்பறைக்கு நம்மளையும் சேத்து காரித் துப்புவானுங்க, சத்தமில்லாம தூக்கிட்டு போய் கொள்ளி வச்சுருவோம்” என்றேன்.

“ஒரு கல்யாணம் காட்சி கூட பண்ணாம, நாட்டுக்காக முப்பது வருஷமா மழையிலயும், குளிர்லயும் வேல பாத்துருக்காரு, இந்த மாதிரி ஒரு மனுஷன் நம்ம ஊர்ல பிறந்தது நம்ம ஊருக்கே பெருமை”

“இன்னைக்கு நம்ம ஊருலருந்தும் பத்து பயலுக மிலிட்டரி பக்கம் போயிருக்காணுங்கன்னா அது இவர பாத்து வந்த ஆசயினாலதான…”

கூட்டத்தில் யாரோ இருவர் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

புதிதாய் அணிவித்த இராணுவச் சீருடையில் கம்பீரமாய் படுத்திருந்தார் மிலிட்டரி தாத்தா. இந்த ஊரைப் பொறுத்தவரை இவர் எப்போதும் மிலிட்டரி தாத்தாவாக இருப்பதுதான் சரி என்ற முடிவுடன் இறுதி ஊர்வலத்தை தொடக்கினோம்.

-சுந்தரபாண்டியன்,

தூத்துக்குடி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.