Published:Updated:

சதுரங்க ராணிகள்! | My Vikatan

Representational Image ( Photo by Deepak kumar on Unsplash )

மனதுக்குள் சிலாகித்துக் கொண்டவள் 'என்னதான் ராணிக்கு பவர் இருந்தாலும் அது ராஜாவை பாதுகாக்க மட்டும் தான். ராஜாவுக்கு செக் வைச்சுட்டா ஆட்டமே முடிஞ்சு போயிடும்' என்று விளக்கினாள்.

சதுரங்க ராணிகள்! | My Vikatan

மனதுக்குள் சிலாகித்துக் கொண்டவள் 'என்னதான் ராணிக்கு பவர் இருந்தாலும் அது ராஜாவை பாதுகாக்க மட்டும் தான். ராஜாவுக்கு செக் வைச்சுட்டா ஆட்டமே முடிஞ்சு போயிடும்' என்று விளக்கினாள்.

Published:Updated:
Representational Image ( Photo by Deepak kumar on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கறுப்பும் வெளுப்புமான அந்த சதுரங்க அட்டையை பிரித்து வைத்து காய்களை அடுக்கினாள் சாரதா. அழகாக அணி வகுத்த அந்த சிப்பாய்களையும் மற்ற ராஜா ராணி குதிரைகளையும் பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்த கார்த்திக்கை கூப்பிட்டாள் அவள். சதுரங்கப்போட்டிகளை டிவியில் பார்த்ததிலிருந்து அவனுக்கு விளையாடும் ஆசை வந்து விட்டது.

'விளையாட கத்துக்கணும் ,அப்படின்னா முதல்லே இதெல்லாம் என்ன ,என்ன‌ என்று தெரிஞ்சுக்கோ!' வரிசையாக நிற்கும் அத்தனை சிப்பாய்கள் யானை குதிரை எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தியவள் அவற்றின் செயல்பாடுகளையும் விளக்கலானாள். ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான் அவன்.

'முதலில் எப்படி நகர்த்த வேண்டும் என்று கற்றுக் கொள். அவள் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவன் வியப்புடன் பார்த்தான்.

'அது என்ன பாட்டி ! ராணிக்கு அவ்வளவு பவர்!

ராஜாவுக்கே இல்லாத பவர்?'

அவன் கேட்டதும் அவள் திடுக்கிட்டுப் போனாள்.

'இல்லை ,ராஜ ராஜ சோழன், கரிகாலன் அப்படின்னு ராஜாங்கதான் படை எடுத்து போவார்கள் என்று படிக்கிறோமே! அதான் கேட்டேன் '

'அதுதானே ! விளையாட்டில் கூட ஒரு பெண்ணுக்கு அதிகம் பவர் கொடுத்து விடக் கூடாதே .எல்லா இடத்திலும் பெண்களை டம்மியாக வைப்பது தானே வழக்கம் !'

சரியாத்தான் யோசிக்கிறான். மனதுக்குள் சிலாகித்துக் கொண்டவள் 'என்னதான் ராணிக்கு பவர் இருந்தாலும் அது ராஜாவை பாதுகாக்க மட்டும் தான். ராஜாவுக்கு செக் வைச்சுட்டா ஆட்டமே முடிஞ்சு போயிடும்' என்று விளக்கினாள்.

'சரி பாட்டி ,ஃப்ரெண்ட் கூப்பிடறான். நான் விளையாடப் போறேன்'.சொல்லி விட்டு அவன் சிட்டாக பறந்தான்.

அவன் கேட்ட கேள்வி அவள் மனதில் சுழன்றது. நிஜமாகவே பெண்ணுக்கு உரிமை சக்தி எதுவும் கிடையாதா!

சாவித்திரி அருந்ததி கண்ணகி இவர்களின் சக்தி கணவனுக்கு பிரச்சினை என்று வந்த போதுதானே சூறாவளியாக வெளிப்பட்டது அது வரை அவர்களும் சாதாரண பெண்கள் தானே!

Representational Image
Representational Image

சட்டென்று அவளுக்கு சந்திராவின் நினைவு வந்தது.

சந்திரா அவள் வீட்டில் இப்போதும் வேலை பார்க்கும் பெண்.

சுத்தமான உடை அணிந்து சரியான நேரத்துக்கு வரும் அவளை சாரதாவுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

வேலையும் சுத்தமாக சத்தமே இல்லாமல் செய்து விட்டு போவாள்.

சாதாரணமான சூரிதார் கூட நேர்த்தியாக அணிந்து வருவாள்.

ஒரு முறை சாரதா காய் நறுக்கும் போது கையில் வெட்டிக் கொண்டாள் என்று வாங்கி வேகமாக நறுக்கி கொடுத்தாள்.

'எப்படி இவ்வளவு ஸ்பீடா பண்றே?'

சாரதா வியந்த போது அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

'எங்க அம்மா நிறைய பேருக்கு சமையல் பண்ணி சாப்பாடு கொடுத்துக்கிட்டு இருந்தாங்க . அப்போ கூட உதவி செய்த பழக்கம்.'

'அப்புறம் ஏன் அதை விட்டுவிட்டாய்?'

'கல்யாணம் ஆயிடுச்சு. அம்மாவும் இப்போ உயிரோடு இல்லை'

அவள் தலையை குனிந்து கொண்டாள். 'நாங்க மூன்று பெண்கள் . எல்லோருக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்துவிட்டு பொறுப்பு தீர்ந்தது என்று போய் சேர்ந்து விட்டார்கள்'.

அவளிடம் சாரதாவுக்கு ஒரு பச்சாத்தாபம் ஏற்பட்டது.

தினமும் காய்கறி நறுக்கும் போது அவளிடம் பேசிக் கொண்டிருப்பாள்.

இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை . சொந்த மாமனுடன் பூக்கடையில் வேலை பார்க்கும் புருஷன் என்று விவரம் சொன்னாள்.

'சொந்தம் அப்படிங்கிறதாலே நல்லா ஏமாத்துறாங்கம்மா. குடிக்கு காசு கொடுத்து கொடுத்து பணம் சரியாவே கொடுக்கறதில்லைம்மா.'

'நீ கேட்க வேண்டியது தானே?'

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'என்னம்மா சொல்றீங்க ?எந்த ஆம்பிளை தன் வீட்டு சொந்தக்காரங்களை விட்டு கொடுப்பான் !. எல்லாம் அவர் இஷ்டப்படி தான் நடக்கும். நானும் எவ்வளவோ சண்டை போட்டு பார்த்து விட்டேன்.'

'நீ அடாவடியாக பேசுவேன்னு பக்கத்து வீட்டம்மா சொல்றாங்க. நீ இப்படி சொல்றே!'

சிரித்துக் கொண்டே கேட்டாள்.

'அவங்கதானம்மா ! சொல்லுவாங்க! சொல்லுவாங்க!. நினைச்சு நினைச்சு வேலை சொல்றாங்க. பாத்திரம் ஊற வைக்காமல் காய்ஞ்சு போய் இருக்கும். இதிலே நீ நிறைய சம்பளம் கேட்கிறே !உனக்கு கொடுத்துட்டு நாங்க எப்படி சாப்பிடறது அப்படின்னு கேட்கிறாங்கம்மா.'

அட !சாரதா அயர்ந்து போனாள்.

பாவம் தான் இந்த வேலை செய்யும் பெண்கள். ஆனால் அவள் வீட்டிலேயே மஞ்சு கூட எதிர்ப்பு தான் காட்டினாள்.

'என்னம்மா ! உன் பிரியமான வேலைக்காரி நான் சொன்ன வேலையை செய்யாமல் போறா; .எல்லாம் நீ கொடுக்கிற இடம் .'

சாரதா பொறுமையாக விளக்கினாள்.

'அவள் கிளம்பி போகிற நேரத்தில் வேலை சொன்னால் அவள் எப்படி செய்வாள்? ஒரு டாக்டரோட கிளினிக் பெருக்கி சுத்தம் செய்யப் போவாள். சரியாக 9 மணிக்கு டாக்டர் வரதுக்கு முன்பு செய்யணும்.'

'ஆமாம், பத்து நிமிஷத்தில் தான் எல்லாம் கெட்டுவிடுமா !போம்மா!''

நிஜமாகவே அவளுக்கு புரியவில்லை.

வேலைக்காரி என்றால் அவள் மனுஷி இல்லையா.? எழுபத்து ஐந்து வருடம் ஆகி விட்டது என்று சுதந்திரம் கொண்டாடுகிறோம்.

மனதில் இன்னும் மற்றவர்களை அடிமையாகும் பார்க்கும் மனநிலை மாறவே இல்லையே!

நாய் பூனையை கொஞ்சுபவர்கள் சக மனிதர்களிடம் தோழமை உணர்வு காட்டுவதில்லையே! என்ன மனிதர்கள்!.அவளுக்கு வியப்பாக இருந்தது.

சாதாரணமாகவே கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த சந்திராவின் வாழ்வில் மறுபடியும் ஒரு புயல் அடித்தது.

பூ கட்டிக் கொண்டு இருந்த சுரேஷ் கால் வீங்கி வலி தாங்க முடியாமல் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தான். டாக்டரிடம் போனதில் சிறுநீரக கோளாறு என்று சொல்லி விட்டார்கள். உடனடி மருத்துவம் பார்க்க அவளுக்கு அவனின் சொந்தக்காரர்கள் உதவ மறுத்து விட்டார்கள். அவளுடைய சகோதரிகள் தான் உதவிக்கு வந்தார்கள்.

வேலைக்கு வரும் போது எல்லா விவரங்களும் சொல்வாள். 'எல்லா வேலையும் சொந்தம் என்று சொல்லி சொல்லி வேலை வாங்கி விட்டு இப்போ கை கழுவிட்டாங்கம்மா. நிறைய பணம் கொடுத்தாச்சுன்னு சொல்றாங்கம்மா! இந்த மனுஷன் இப்போ என்னை எப்படியாவது காப்பாத்து அப்படின்னு சொல்றாரும்மா. நம்ம சொல்லும் போதெல்லாம் கேட்டிருந்தா இன்னிக்கு கையில் பணமாவது இருந்திருக்கும். கஷ்டம் வரும் போது தான் பெண்டாட்டி ஞாபகம் வருது! என்ன செய்ய!'

அவள் பேசப்பேச சாரதா திகைத்து போய் நின்றாள்.

ஆனால் சாரதாவே எதிர்பார்க்காத அளவுக்கு மும்முரமாக அவனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற வெறியுடன் அவள் சுழன்றாள்.

'அவங்க ஆளுங்க முன்னாடி தலை நிமிர்ந்து நின்று காண்பிக்கணும்மா!'

Representational Image
Representational Image

எங்கெங்கோ பணத்துக்காக அலைந்தாள்.தான் வேலை பார்த்த டாக்டரின் உதவியோடு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற செய்தாள்.சாரதாவும் அவள் மேல் இரக்கப்பட்டு தேவையான பணம் கொடுத்து உதவினாள்.

அந்த சமயம் வந்திருந்த மஞ்சுவுக்குத்தான் அம்மாவின் செயல் பிடிக்கவில்லை.

'எதற்காக நீ தேவையில்லாமல் இழுத்து விட்டுக் கொள்கிறாய்.? தினமும் அங்கே கொள்ளை, இங்கே கடத்தல் என்று செய்திகள் வருவது பார்க்கிறாய்தானே ! உங்கள் இருவரையும் இங்கே தனியாக விட்டு விட்டு நான் தான் தினமும் கவலைப்பட வேண்டியிருக்கிறது!.'

'எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறாய் நீ? கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுவது ஒரு தப்பா? உதவுவதே பிரச்னை என்கிறாயே!

நல்ல செய்திகள் எதுவுமே உன் கண்ணில் படாதா? இங்கேயே சென்னையில் ஒரு வில்லன் நடிகர் தினமும் நூறு பேருக்கு சாப்பாடு போடுகிறார் தெரியுமா? எத்தனையோ மனிதர்கள் இன்னும் அந்த மனிதாபிமானத்துடன்தான் இருக்கிறார்கள். நீ எவ்வளவோ செலவழிக்கிறே.! பார்லருக்கும் துணிமணிகளுக்கும் அளவில்லாமல் விரயமாகும் பணம் ஒரு உயிரைக் காப்பாற்ற பயன்படக்கூடாதா?'

'நான் சொல்ல வந்ததே வேற!'

அவள் தன் பிடியிலேயே நின்றாள்.

'இதோ பாரு ! எல்லோருக்கும் இதயம் ஒரே மாதிரிதான் இறைவன் படைத்து அனுப்புகிறான். ஆனா மனசு இருக்கு பாரு! அது ஒரே மாதிரி இருக்காது.

சில பேருக்கு பழி வாங்குகிற மனசுன்னா சில பேருக்கு பாவம் பார்க்கிற மனசு . சில பேருக்கு பகை பாராட்டுற மனசுன்னா சில பேருக்கு பதைச்சு போற மனசு. உன்னால் முடிந்தால் உன்னை விட கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்குஇரக்கம் காட்டு.முடியாது என்றால் பேசாமல் இரு.'

அம்மாவின் கோபமான பேச்சில் அவள் ஆடிப் போனாள்.'சரி, போ ,உன் இஷ்டம்! 'என்று தாழ்ந்து போனாள்.

எது எப்படி இருந்தாலும் சந்திரா அவள் வீட்டு வேலை க்கு சரியாக வந்து விடுவாள்.சோர்ந்த முகத்துடனும் களைத்து ப் போன உடலுமாக அவள் வரும் போது சாரதா வேண்டாம் என்று++-++ எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள்.

'இல்லம்மா! இங்கே வந்துட்டு போனால்தான். எனக்கு மனசுஅமைதியாகஇருக்கும்'

.அன்பான வார்த்தைகளுக்கு அவள் ஏங்குகிறாள் என்பதை புரிந்து சாரதா மனம் நெகிழ்ந்தாள்.

வாழ்க்கை என்னும் சதுரங்க போராட்டத்தில் வாடி துவண்டு போனாலும் இறைவன் அவர்களுக்கு மனதில் திடத்தையும் உடலில் வலிமையையும் கொடுத்துதான் அனுப்புகிறான்.எத்தனை பெண்கள் சாதனைப் பெண்களாக சரித்திரம் படைக்கிறார்கள்.! வளமாக வாழ்ந்தாலும் வறுமையில் வாடினாலும் உறுதியுடன் போராடி வெற்றி பெறுகிறார்கள்.இவர்கள் அல்லவோ உண்மையான சதுரங்க ராணிகள்!

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த அவள் அழைப்பு மணி யோசையில் கலைந்தாள்.

பக்கத்து வீட்டு பெண்மணி கையில் தட்டு நிறைய சுவையான இனிப்புடன் நின்றார்.அவ்வப்போது அந்த முதிய பெண்மணி அப்படி செய்வது வழக்கம் தான்.

பரிவோ ,அரவணைப்போ இல்லாத மருமகளுடன் வாழ்ந்தாலும் தன் இனிய சுபாவத்தால் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் இவரும் ஒரு சதுரங்க ராணி தான்.மனதுக்குள் மெச்சியபடியே அவரை அமர செய்து உரையாடலானாள் சாரதா.

-Kanthimathi Ulaganathan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.