Published:Updated:

அம்மா சுட்ட தோசை! | My Vikatan

Representational Image

மணி 10 என்று சுவர் கடிகாரம் காட்ட, பெண் பார்க்கும் செட் போடப்பட்டது போல மாறியது வீடு. புன்னகையைத் தவிர மற்ற நகையெல்லாம் அணிந்து, பயத்தை மறைக்க அலங்காரம் செய்து கொண்டது போல் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

அம்மா சுட்ட தோசை! | My Vikatan

மணி 10 என்று சுவர் கடிகாரம் காட்ட, பெண் பார்க்கும் செட் போடப்பட்டது போல மாறியது வீடு. புன்னகையைத் தவிர மற்ற நகையெல்லாம் அணிந்து, பயத்தை மறைக்க அலங்காரம் செய்து கொண்டது போல் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மணி இரவு 7…

வேலை முடிந்து களைப்பான முகத்தோடு தன் ஊருக்குச் செல்லும் மினி பஸ்ஸில் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா. ஜன்னல் கம்பிகளின் மேல் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்த மழைத்துளிகளை ஒவ்வொன்றாகத் தன் உள்ளங் கையில் சேகரித்துக் கொண்டே வந்தாள். அவள் இறங்கும் இடம் வந்து விட்டதாக அறிவித்து, நடந்துனர் விசில் ஊத, வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் மழையை எதிர்கொள்ள தன் குடையோடு தயாரானாள். சரியாக மழைநீரைத் தாங்கிய குழியில் அவள் கால்கள் பதிய, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். குண்டங் குழியுமாக செதுக்கப் பட்டிருந்த அந்த சிறு தார் ரோட்டில், ஊறிய கால்களோடு நடக்க ஆரம்பித்தாள். குடிசை வீடுகள் நிறைந்த இடத்தைக் கடக்கயில் தினமும் தன்னோடு வீடு வரை வரும் தெரு நாய் இன்றும் துணை வந்தது. பின்பு ஓட்டு வீடுகள் நிறைந்த இடம் வரும் பொழுது அங்கிருந்த பெட்டிக்கடையில் ஒரு பொறையை வாங்கி அதற்குக் கொடுத்தாள். அதனைக் கடந்து மாடி வீடுகள் அமைந்த தனது காலனிக்குள் நுழைந்தாள். பின்பு வாலை ஆட்டி விடை பெற்றது அந்த நாய்க்குட்டி.

மகளின் வருகைக்காகக் காத்திருந்த சந்தானம் “ என்னம்மா குடை இருந்தும் பாதி நனஞ்சுட்ட!” என்று கீர்த்தனாவின் தலையை வருடினார்.

“ஆமாம் பா… ஜீவா வந்துட்டானா”

“உள்ள தான் மா இருக்கான். அந்தக் கொடைய இப்புடிக் குடு நான் ஓரமா விருச்சு வச்சுட்டு வரேன்” என்று குடையை வாங்கிக் கொண்டார்.

Representational Image
Representational Image

“அம்மாாா…. அம்மாாா… உன் செல்ல மகள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன். டும் டும் டும்!!” என்று பறையடிப்பது  போல தன் வருகையை அறிவித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் கீர்த்தனா.  

“வா மகளே வா, கை கால் கழுவிட்டு வா ஒழுங்கா” என்று அம்மா வாசுகி செல்லமாகக் கட்டளை விடுத்தார் சமையலறையிலிருந்து.

சற்று முகச்சுழிப்போடு கைகால் கழுவி உடைமாற்றி, தோசை மணத்தைப் பிடித்துக் கொண்டே ஓடினாள் சமையலறைக்கு.

சமைக்கும் மேடையில் மின் அம்மியும், மாவுப் பாத்திரமும் இருக்க, அதற்கிடையில் கீர்த்தனாவின் தம்பி ஜீவாவும் அமர்ந்திருந்தான்.

“என்ன கீர்த்தனா.. ஏன் லேட்டு?” என்றான் ஜீவா, தோசையை முழிங்கிய படி. 

அவன் தலையில் நங்கென்று கொட்டி,

“அக்கானு கூப்பிடுடா மரியாதையா” என்றாள் கீர்த்தனா.


“ஸ்ஸ்.. அம்மா.. பாருங்கமா” என்று போலி சினுங்கள் சினுங்கினான்.

“வந்ததும் ஏன்மா அவன  வம்பிழுக்குற?”

“எறங்குடா கீழ” என்று அவனை கீழே இறக்கி விட்டு அந்த இடத்தில் கீர்த்தனா அமர்ந்து கொண்டாள். அம்மா தோசை ஊற்றி அதை ஒரு பாத்திரத்தில் போடுவதையே பார்த்தாள் கீர்த்தனா. அதை மனக்கண்ணால் பார்த்த வாசுகி,

"பயப்படாத.. அது அப்பாவுக்கு. உனக்கு நான் சுடச் சுட முறுகலாக நெய்தோசை ஊத்தித் தரேன்” என்றதும் தான் கீர்த்தனாவின் முகம் மலர்ந்தது.

“அம்மா, நீங்களும் அக்கா மாதிரி தான் அடம் பிடிப்பீங்களா பாட்டிகிட்ட, சூடா தான்  தோசை வேணும்னு.” ஜீவா ஆர்வமாகக் கேட்டான்.

“ம். நான் மட்டும் இல்ல, என் அம்மா அவங்களோட அம்மாகிட்டயும் இதே மாதிரி தான் அடம் பிடிப்பாங்களாம்.”

மேலும் தன் நினைவுக் கிடங்கில் முதல் தலைப்பில் எப்பொழுதும் குடியிருக்கும் அந்தப் பக்கத்தை ஒப்பிக்கத் தொடங்கினார் வாசுகி.

“என்னோட அம்மா கூட பிறந்தவங்க எட்டு பேரு. குடிசை வீடு, ஒழுகும் கூரை இது தான் வாழ்க்கை. காட்டு வேல முடிஞ்சு வீட்டுக்குத் திரும்பும் போது எட்டு பேரும் விறகு அடுப்பச் சுத்தி உக்கார்ந்து இருப்பாங்களாம். என் அம்மா தான் முதல் புள்ள. அதனால எல்லாரும் சாப்பிட்ட பின்ன கடைசியாதான் கெடைக்கும். ஆறிப்போன தோசை எல்லாம் என் அம்மாக்கு எறங்காதாம். என் பாட்டி முறுகலா ஊத்திக் கொடுக்குறத சாப்பிட்டுத் தான் தூங்கப் போவாங்கலாம்”

கதை கேட்டுக் கொண்டே ஜீவா சாப்பிட்டு முடித்தான்.

“என் பாட்டி என் அம்மாகிட்ட சொன்னாங்களாம், ‘அம்மா வீட்டுல இருக்குற வரையும் தான் சூடான தோசை. கல்யாணம் கட்டி வேற வீட்டுக்குப் போயிட்டா ஆறின தோசைதான்’ னு. இது என் அம்மா வோட தோசைக்கதை“

என்று கூறிக்கொண்டே சுடசுட தோசையைப் பரிமானார் வாசுகி கீர்த்தனாவிற்கு.

கீர்த்தனாவின் முகம் வாடுவதைக் கண்ட ஜீவா, மின் அம்மியைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, கீர்த்தனாவின் அருகில் அமர்ந்து ஏதோ அவளுக்கு தைரியம் கொடுப்பது போல அவள் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்டான்.

கீர்த்தனா அமைதியாகச் சாப்பிட்டாள்…

“உங்களோட தோசைக் கதைய சொல்லுங்கமா” மீண்டும் ஜீவா ஆர்வமாகக் கேட்டான்.

"என் அம்மா கல்யாணம் முடிஞ்சு குடிசை வீட்டுல இருந்து ஓட்டு வீட்டுக்குப் போனாங்க. விறகு அடுப்புல இருந்து மண்ணென்ணெய் அடுப்புக்கு மாறினாங்க. என்னோட சேர்த்து நான்கு பிள்ளைகள் பெத்தாங்க. நான் தான் முதல். இது உங்களுக்கு தெரிஞ்சது தான். என் அம்மா ஆறின தோசை சாப்பிடுவாங்க நான் சூடா முறுகலா தோசை சாப்பிடுவேன்.”

“அப்புறம்?” கண்ணீர் மழ்கக் கேட்டாள் கீர்த்தனா.

“ அப்புறம்… காலம் ஓடுச்சு. எனக்குக் கல்யாணம் ஆச்சு. ஓட்டு வீட்டுல இருந்து மாடி வீட்டுக்கு வந்தேன். மண்ணெண்ணெய் அடுப்பு கேஸ் அடுப்பு ஆச்சு. இரண்டு பிள்ளைகள் பெற்றேன். ஆறின தோசை எனக்கு, சூடான தோசை உனக்கு.” என்று கீர்த்தனாவிற்கு தோசை வைக்கும் பொழுது ஜீவாவின் கண்களும் நனைந்தன.

வாசுகி சாப்பிட அமரும் பொழுது சந்தானம் வந்தார். சூடு கம்மியாக இருந்த தோசையைப் பார்த்து சற்று முகச்சுழிப்போடு,

“வாசு… சூடா ஊத்திக் குடேன்.” என்று கேட்டார்.

மறு வார்த்தை பேசாமல் சூடாக தோசை ஊற்றிக் கொடுத்துவிட்டு, ஆறிப்போன தோசையை வாசுகி சாப்பிட்டார்.
Representational Image
Representational Image

“எல்லாரும் சீக்கிரம் போய் தூங்குங்க. காலையில பத்து மணிக்கு பெண் பார்க்க வந்துடுவாங்க” என்று சந்தானம் நினைவு படுத்தி விட்டுச் சென்றார்.

அனைவரும் அவரவர் படுக்கைக்குச் சென்றனர். விழிகளை மூடிக்கொண்டனர். ஆனால் தூக்கம் வரவில்லை.

விடிந்தது..

சமையலறையில் பல வகை உணவுப் பண்டங்கள் தங்களுக்கு உறிய சுவையை, மணமாக வீசிக் கொண்டிருந்தன..

மணி 10 என்று சுவர் கடிகாரம் காட்ட, பெண் பார்க்கும் செட் போடப்பட்டது போல மாறியது வீடு.

புன்னகையைத் தவிர மற்ற நகையெல்லாம் அணிந்து, பயத்தை மறைக்க அலங்காரம் செய்து கொண்டது போல் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

பெரியவர்களின் உரையாடலின் நடுவே கீர்த்தனாவும் - அவளைக் காண வந்த ஆர்யாவும் விழிகளால் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.

“எங்களுக்குக் கீர்த்தனாவ ரொம்பப் புடிச்சிருக்கு. எதுக்கும் பொண்ணும் பையனும் தனியா பேசிகிட்டு வரட்டுமே.” என்று ஆர்யாவின் தந்தை கூற, இவ்வாக்கியத்திற்காகவே காத்திருந்ததைப் போல மூன்று உருவங்கள் தடாலென எழுந்து நின்றன.

கீர்த்தனா- ஆர்யாவோடு சேர்ந்து ஜீவாவும் நின்று கொண்டிருந்தான்.

அனைவரும் அவனை விசித்திரமாகப் பார்க்க, ஜீவா ஆர்யாவை நோக்கி,

“உங்களுக்கு தோசை சுடத் தெரியுமா?" என்று கேட்டான்.

அனைவரும் ஜீவாவை ஆச்சா்யமாய்ப் பார்த்தனர்.

கீர்த்தனாவிற்கு ஜீவாவை அப்பொழுது அனைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

அவ்வொற்றைக் கேள்வியின் கணத்தை உணர்ந்த ஆர்யா, “தொண்ணூற்று ஒன்பது வகை தோசையும் நல்லாவே சுடுவேன்” என்று புன்னகைத்து மேலும் தொடந்தான்,


“ நான் என் அப்பாவப் பத்தி சொன்னா உங்க எல்லாருக்கும் நான் எப்படிப் பட்டவன்னு நல்லா புரியும். என் அப்பா ஒரு ஐ.டி கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. என் அம்மாக்கு கவர்மென்ட்  ஆபிஸ்ல வேலை. நான் பிறந்தப்ப என் அம்மாக்கு மெட்டர்னிட்டி லீவ் ஆறு மாசம் தான். என்னோட ரெண்டு தாத்தா பாட்டிகளுமே ரொம்ப ரொம்ப வயதானவங்க. ஸோ என்னய பாத்துக்கக் கூடிய நெலைமையில இரண்டு பக்கமுமே இல்ல. ஒரே வழி வேலைய விடுறது தான்.” என்றதும் வாசுகி சற்று சங்கடமாக ஆர்யாவின் தாயைப் பார்த்தார்.


ஆர்யாவின் தாய் சிரித்துக் கொண்டே “வேலைய விட்டது நான் இல்லங்க. ஆர்யாவோட அப்பா.” என்றதும் கீர்த்தனாவின் குடும்பமே வாய் பிளந்து நின்றனர்.


ஆர்யாவின் அப்பா தொடர்ந்தார்,

“அஞ்சு வருஷம் நான் வீட்டுல இருந்து ஆர்யாவப் பார்த்துகிட்டேன். ஆர்யா ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதும் நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.” என்றார்.


கீர்த்தனா ஆர்யாவை நோக்கி “எனக்குத் தனியா பேச எதுவும் இல்ல, உங்கள கல்யாணம் பண்ணிக்க பரிபூரண சம்மதம்" என்றாள்.


திருமணம் நிச்சயிக்கப்பட்டது...


-மலர்விழி மணியம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.