Published:Updated:

விபீஷணன்! | சிறுகதை | My Vikatan

Representational Image

அடுத்து வந்த நாட்கள்தாம் எனக்கும், அண்ணாச்சிக்கும் மிகவும் சோதனைக் காலம். இரண்டு பேர் காலம் தள்ளவே திண்டாடும் மாதக் கடைசியில், மூன்றாவதாக ஒரு ஆளுக்கும் செலவு செய்ய நேர்ந்தது கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.

விபீஷணன்! | சிறுகதை | My Vikatan

அடுத்து வந்த நாட்கள்தாம் எனக்கும், அண்ணாச்சிக்கும் மிகவும் சோதனைக் காலம். இரண்டு பேர் காலம் தள்ளவே திண்டாடும் மாதக் கடைசியில், மூன்றாவதாக ஒரு ஆளுக்கும் செலவு செய்ய நேர்ந்தது கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அதிகாலை ஆறு மணி. பெங்களூருவின் பனிக்குளிர். வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வரும் ஞாயிற்றுக்கிழமை. பேச்சுலர் ரூம். நயனும், சமந்தாவும் அதிகாலைக் கனவில் வந்து எட்டிப்பார்க்கும் நேரம். அந்த நேரத்தில் உங்கள் ரூம் கதவை ஒருவர் ' டொக், டொக்' என்று விடாமல் தட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பக்கத்தில் படுத்திருக்கும் ராஜகோபால் அண்ணாச்சி எழுந்துவிடுவார் என்ற நப்பாசையில், போர்வையை மெதுவாக விலக்கி எட்டிப் பார்த்தேன். வாயைப் பிளந்து கொண்டு, குறட்டை விட்டு அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தார் அவர். அவர் கனவில் ஒரு வேளை நடிகை வந்திருக்கக்கூடும். பாவம் முப்பத்தி நான்கு வயதாகியும் திருமணமாகாதவர். அவரது கனவில் தேவிகா, சரோஜாதேவி வந்திருந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

இப்போது ' டொக் டொக்' சத்தத்துடன் ' மாப்ள, மாப்ள ' என்ற சப்தமும் சேர்ந்து கொள்ளவே, வேறு வழி இல்லாமல் முக்கி முனகி எழுந்தேன். கதவைத் திறந்ததும் பெங்களூருவின் சில்லென்ற பனிக்காற்று முகத்தில் அறைந்தது. கூடவே 'மாப்ள' என்ற சத்தத்துடன் ஒரு உருவம் என்னைக் கட்டிப் பிடித்தது. முழுத்தூக்கமும் அதிர்ச்சியில் கலைய அந்த உருவத்தின் முகத்தை உற்றுப் பார்த்தவுடன் தான் தெரிந்தது, அது எங்கள் ஊரைச் சேர்ந்த, என்னுடன் படித்து, வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த, எனது நண்பன் சிவானந்தன் என்று.

என்னை விட நன்றாகப் படிப்பவன் சிவானந்தன். நான் டைப்பும், சார்ட்ஹேண்டும் படித்திருந்ததால் பெங்களூருவுக்கு அருகில், மைசூர் போகும் வழியில் உள்ள ஒரு பேப்பர் மில்லில் ஸ்டெனோ வேலை கிடைத்து விட்டது. அந்த பேப்பர் மில்லில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர்தான் ராஜகோபால் அண்ணாச்சி. மில் தொடங்கிய காலத்தில் இருந்தே அவர் அங்கு வேலை செய்வதாலும், மிகவும் நம்பகத்தகுந்த‌ மனிதர் என்பதாலும் அவருக்கு பேப்பர் மில் ஊழியர்களிடமும், அதை நடத்திக் கொண்டிருக்கும் வட இந்திய முதலாளிகளிடத்திலும் நல்ல மரியாதை. எனது சம்பளத்திற்கேற்ற ரூம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த போது என் மீது பரிதாபப் பட்டு,

'வாடா.. நீயும் என் தம்பி மாதிரிதான் ' என்று என்னை தன் ரூம் மெட்டாக சேர்த்துக் கொண்டவர். அது மட்டுமல்லாது ரூமுக்கு அருகில் உள்ள பிளாட்பார இரவுக்கடையில் தன் கணக்கில் சாப்பிடும் வசதியும் செய்து கொடுத்துவிட்டார்.

அரவம் கேட்டு விழித்துக் கொண்டார் ராஜகோபால் அண்ணாச்சி.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிமுகப் படலம் எல்லாம் முடிந்த பிறகு நான் மெதுவாகக் கேட்டேன்,

' என்ன மாப்ள திடீர்னு வந்திட்டீங்க?'

' ஊர்ல இருக்க முடியல மாப்ள.. எங்க போனாலும் வேலைக்குப் போகலயா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியல.. கடைசியா அம்மாவும் கூட கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. போனா வேலையோட ஊருக்குப் போவேன்.. இல்லன்ன இங்கியே இருந்திடறன்..'

தூக்கி வாரிப்போட அண்ணாச்சியைத் திரும்பிப் பார்த்தேன் பரிதாபமாக. என் நிலைமை புரிந்து பார்வையாலேயே ஆறுதல் சொன்ன அவர் சிவானந்தனைப் பார்த்துச் சொன்னார்,

' சரிங்க.. ஒரு வாரம் நம்ம ரூம்லேயே இருங்க.. ஏதாவது பார்க்கலாம்.. எதுக்கும் உங்க பயோ டேட்டா என்கிட்ட‌ கொடுத்து வைங்க‌' என்று கூறி என் பிரச்சினையின் சுமையைக் குறைத்தார்.

அடுத்து வந்த நாட்கள்தாம் எனக்கும், அண்ணாச்சிக்கும் மிகவும் சோதனைக் காலம். இரண்டு பேர் காலம் தள்ளவே திண்டாடும் மாதக் கடைசியில், மூன்றாவதாக ஒரு ஆளுக்கும் செலவு செய்ய நேர்ந்தது கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. தான் ஊரிலிருந்து ரோஷப்பட்டுப் புறப்பட்டு வந்ததால் பணம் ஏதும் கொண்டு வரவில்லை என்று கூலாகச் சொல்லி விட்டான் சிவானந்தன். ராஜகோபால் அண்ணாச்சி பணம் யாரிடமிருந்தோ பிராண்டி வந்ததாலும், இரவுக்கு பிளாட்பாரம் அண்ணாச்சி கடை அக்கெளண்ட் இருந்ததாலும் எப்படியோ தப்பித்தோம்.

விரைவில் சிவானந்தனின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டார் ராஜகோபால் அண்ணாச்சி. மில்லில் யார் யாரையோ பிடித்து சிவானந்தனுக்கு நாங்கள் வேலை செய்யும் பேப்பர் மில்லிலேயே வேலை வாங்கி விட்டார். மில்லின் உள்ளே ஷிப்ட் இன் சார்ஜுக்கு உதவியாளராக இரண்டு மாதம் ட்ரெயினிங். அது முடிந்த பிறகு அவரின் திறமையைப் பார்த்து ஷிப்ட் இன் சார்ஜாக போஸ்டிங். டெக்னிகல் வேலை என்பதால் நல்ல சம்பளம் கிடைப்பதோடு அனுபவ அடிப்படையில் பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு.

ஆனால் பொறுப்பான பதவி என்பதால் மில்லுக்கு அருகிலேயே தங்க வேண்டும். மில்லுக்குப் பக்கத்திலேயே, ஒரு அறை எடுத்துக் கொடுத்து, அங்குள்ள ஒரு மெஸ்ஸில் மூன்று வேளை சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தோம் நானும் ராஜகோபால் அண்ணாச்சியும்.

அந்தப் பொங்கலுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன். எப்போதெல்லாம் ஊருக்குச் செல்கிறேனோ அப்போதெல்லாம் ஊரில் உள்ள நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கு ஒரு விசிட் அடிப்பது வழக்கம். இல்லையென்றால், கிராமங்களில், உறவினர்கள் உரிமையோடு கோபித்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. முதல் விசிட் என் தாய் மாமா வீடு. அம்மாவின் அண்ணா. சிறு வயது முதல் என்னிடம் மிகுந்த‌ அன்பு கொண்டவர். அதிர்ந்து பேச மாட்டார். அவரின் பெண் செல்வியும் நானும் சிறு வயது முதல் விளையாட்டுத் தோழர்கள். செந்தில் என்று கூப்பிட வராததால் செஞ்சில் மாமா என்று கூப்பிடத் தொடங்கி இன்று வரை அப்படியே கூப்பிட்டு வருபவள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாமா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

' வா செந்தில் ' என்று வரவேற்றார். முன்பெல்லாம் வாடா என்று கூப்பிடுவார். படித்து முடித்து வேலைக்குச் செல்லத் தொடங்கியவுடன் 'டா' வை அவர் உபயோகப் படுத்துவதில்லை. குசல விசாரங்கள் முடிந்த பிறகு கேட்டேன்.

' அத்தை, செல்வி ஒருத்தரையும் காணோமே மாமா?'

' அத்தை தோட்டத்தில.. செல்வி பிளஸ் டூ முடித்த பிறகு டைப்பிங், ஹிந்தி, டைலரிங்னு ஏதாவது ஒரு கிளாஸ் போய் வந்துக்கிட்டு இருக்கிறா... அவ வர்ற நேரந்தா..வந்துருவா..'

ஒரு பத்து நிமிடம் பேசிக்கொண்டிருப்பதற்குள் செல்வி வந்து விட்டாள்.

'செஞ்சில் மாமா.. எப்ப வந்தீங்க..'

அவளைக் காணாது விட்ட ஒரு வருட வளர்ச்சி அவள் உடலில் தெரிந்தது. அவள் பேசும் போது காதில் போட்டிருந்த ஜிமிக்கி சுழன்றாடியது. வாய்ச்சிரிப்பு கண்களில் வழிந்தது.

மாமாவிடமும், செல்வியிடமும் விடை பெற்றுப் புறப்படும்போது செல்வி கிண்டலடித்தாள்.

'செஞ்சில் மாமா.. ராத்திரிக்கு உங்க வீட்டுக்கு சாப்பிட வரப்போறன்.. அத்தையை கோழி அடிச்சு கொழம்பு வைக்கச்சொல்லுங்க'

' உன் வயித்துக்கெல்லாம் கோழி பத்தாது.. பெரிய ஆடு வெட்டச் சொல்றேன்..வா'

எங்கள் மூவரின் சிரிப்பும் கதம்பமாய் காற்றோடு கலந்தது.

நாளாக, நாளாக எங்கள் பேப்பர் மில்லில் சிவானந்தன் தன் திறமையாலும், சாமர்த்தியத்தாலும் தவிர்க்க முடியாத ஆளாக விஸ்வரூபம் எடுத்துவிட்டான். தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது முக்கியத்துவத்தை உறுதிப் படுத்துவது மட்டுமல்லாது, மில்லின் உள்ளே அரசியலும் செய்து உயர்ந்து கொண்டே இருந்தான்.

' என்னடா, உன் மாப்பிள்ளை எனக்கே ஆப்பு வைக்கிறான்' என்று ராஜகோபால் அண்ணாச்சியையே என்னிடம் புலம்ப வைத்து விட்டான். என்னை 'மாப்ள' என்று கூப்பிடுவதையே தவிர்த்தான். அடுத்து அவன் செய்ததுதான் ஹைலைட். தனக்கு மைசூரில் உள்ள பேப்பர் மில்லில் 'வொர்க்ஸ் மேனேஜர்' பதவி கிடைத்துள்ளதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் தன்னை இப்பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுத்தான். மற்றவர்கள் சொல்லித்தான் இந்த விபரங்கள் எனக்கும், ராஜகோபால் அண்ணாச்சிக்கும் தெரியும். ரூமில் இதைச் சொல்லிவிட்டு ராஜகோபால் அண்ணாச்சி சொன்னார்,

' எங்கேயோ நல்லா இருக்கட்டும் போடா...' . அவரின் வார்த்தையில், காலம் இது போன்ற பல அனுபவங்களைக் கொடுத்திருப்பது தெரிந்தது.

Representational Image
Representational Image

தீபாவளிக்கு ஊருக்குச் செல்வதற்காக பேருந்தில் வந்து சேலத்தில் இறங்கினேன். சேலத்திலிருந்து எங்கள் கிராமத்துக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த போதுதான் கவனித்தேன். பக்கத்து இருக்கையில் எங்கள் ஊர் பண்டிதர் பழனி. எங்கள் ஊரில் முடிதிருத்தும் நிலையம் வைத்திருப்பவர். கூடவே ஜாதகம் பார்ப்பதும், கல்யாணத் தரகர் வேலையும் உபதொழில். கொஞ்சம் படிப்பறிவும் உண்டு. சொந்தமாகப் பாட்டுக் கட்டுவதுடன் ஊரில் திருவிழா என்றால் ஊர் இளைஞர்களைச் சேர்த்து வைத்து சமூக நாடகங்களும் போடுவார். என்னைப் பார்த்தவுடன் வழக்கமான சேம லாபங்களை விசாரித்து விட்டுப் பின் மெதுவாகக் கேட்டார்,

' தம்பி.. உங்களுக்கு விசயம் தெரியுமா? அப்பா, அம்மா ஏதாவது தகவல் சொன்னாங்களா? '

' இல்லங்க.. என்ன விசயம்? அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா?'

பதற்ற‌த்துடன் கேட்டேன்.

' பதட்டம் வேண்டாம். நல்ல விசயம்தான்.. உங்க மாமன் மகள் செல்விக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு..'

மனம் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. ஏனோ குப்பென்று வியர்வை தோன்றி பனியனை நனைத்தது. நெஞ்சின் படபடப்பு கூடியது. இவையனைத்தும் ஓரிரு நொடிகளுக்குள் நடந்த அனிச்சைச் செயல்.

' மாப்பிள்ளை யாரென்று தெரியுங்களா தம்பி?'

கேட்காவிட்டால் என் உள் மன உணர்வைப் புரிந்து கொள்வாரோ என்ற அச்சத்தில் கேட்டேன்,

' யாருங்க?'

' ம்..வேற யாரு? உங்க நண்பர் சிவானந்தன்தான். ஏன் உங்க கிட்ட அவர் சொல்லவில்லையா?'

ஒவ்வொரு அஸ்திரமாக விட்டு என்னை நிலை குலையச் செய்து விடுவார் போல் தோன்றியது. என் பலஹீனத்தை வெளிப்படுத்தாமல் இருக்க பெரு முயற்சி செய்ய வேண்டி இருந்தது.

அதற்குப் பின் பழனிப் பண்டிதர் கூறியதன் சுருக்கம். ஒரு நாள் சிவானந்தனும், அவன் அப்பாவும் சிவானந்தனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்து அதைச் செல்வியின் ஜாதகத்துடன் பொருத்தம் பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். செல்வியின் ஜாதகம் பண்டிதரின் கையில் இருந்ததால், உடனே பொருத்தம் பார்த்து, இரண்டு ஜாதகங்களும் பொருந்தி வருவதாகக் கூறி இருக்கிறார். உடனே பண்டிதரை உடன் அழைத்துக்கொண்டு இருவரும் செல்வியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக செல்வியின் அப்பா, அம்மா இருவரும் வீட்டில் இருந்திருக்கிறார்கள். சிவானந்தனின் அப்பா நேரடியாக‌ விபரங்கள் கூறி பெண் கேட்டிருக்கிறார். கொஞ்சம் தயக்கத்துக்குப் பின் மாமா என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

உடன் சிவானந்தன் குறுக்கிட்டு, தான் என்னை விட நான்கு மடங்கு சம்பளம் வாங்குவதாகவும், கம்பெனி தனக்கு காரும், குவார்ட்டர்ஸ் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளான். அல்லாது நான் ஆயுள் முழுதும் டைப்பிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அத்தை மாமனை வீட்டிற்குள் கூப்பிட்டு எதையோ சொல்ல மாமாவும் சம்மதித்து விட்டாராம்.

பழனிப் பண்டிதர் தொடர்ந்தார்,

' தம்பி சமீபத்தில் டிவி ல ஒரு பட்டிமன்றம் பார்த்தேன். தலைப்பு ' விபீஷணன் பண்பாளனா? கர்ணன் பண்பாளனா?' என்பது. தீர்ப்பு எப்படி வந்தது தெரியுமா? பிறந்ததில் இருந்து அண்ணனின் சோற்றை உண்டு விட்டு அண்ணனுக்குத் துரோகம் செய்தவன் விபீஷணன். சோறிட்டான் துரியோதனன் என்பதற்காகத் தன் சகோதரர்களுக்கு எதிராகப் போரிட்டு மடிந்தவன் கர்ணன். இதில் என்ன சந்தேகம்? கர்ணனே பண்பாளன் என்பதுதான் தீர்ப்பு. நான் சொல்வது புரிந்ததா?'

பண்டிதர் கேள்விக்கு இல்லை என்று தலை ஆட்டினேன்.

‘விபீஷணன் அண்ணனுக்கே துரோகம் செய்து அண்ணனின் அரியணையிலேயே ஏறி அமர்ந்தவன். சிவானந்தன் விபீஷணன். கர்ணன் செஞ்சோற்றுக் கடனுக்காக தன் சகோதரர்களுக்கு எதிராக போரிட்டு தன் உரிமைகள் அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுத்தவன். நீங்க கர்ணன் தம்பி.’.

பேருந்தும், பண்டிதரும், அவரின் வார்த்தைகளும் காற்றில் கரைய‌, என்னைப் பார்க்கும் போதெல்லாம் உதட்டைச் சுழித்து, விரலை மடக்கி பழிப்பு காண்பிக்கும் செல்வியின் முகம் மனக்கண்ணில் தோன்றியது. திடீரென்று அந்த முகம் சிவானந்தனுடையதாக மாறிப் பழிப்புக் காண்பித்தது.

-சின்னுசாமி சந்திரசேகரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.