Published:Updated:

`தச்சநல்லூர்’ நட்டு! | குறுங்கதை

Representational image ( Photo by Trip & Trek India on Unsplash )

கண்களில் கொலை வெறியுடன், கைகளில் இரத்தம் சொட்டும் கத்தியுடன் ஓடிவந்து கொண்டிருந்தான் அவன். கவிதாவை இழுத்துக்கொண்டு பதட்டத்துடன் பின்னால் நகர்ந்தான் அவள் கணவன். ஒற்றை நொடியில் அவன் அவர்களைக் கடந்து ஓடினான்.

`தச்சநல்லூர்’ நட்டு! | குறுங்கதை

கண்களில் கொலை வெறியுடன், கைகளில் இரத்தம் சொட்டும் கத்தியுடன் ஓடிவந்து கொண்டிருந்தான் அவன். கவிதாவை இழுத்துக்கொண்டு பதட்டத்துடன் பின்னால் நகர்ந்தான் அவள் கணவன். ஒற்றை நொடியில் அவன் அவர்களைக் கடந்து ஓடினான்.

Published:Updated:
Representational image ( Photo by Trip & Trek India on Unsplash )

நெல்லை மாநகரம் தனக்கே உரித்தான மாலை நேரத்து பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கீழரதவீதியில் கணவனின் கைகளைப் பற்றியவாறே நடந்து கொண்டிருந்தாள் கவிதா.

“என்னம்மா உன் ஊரு இவ்வளோ பரபரப்பா இருக்கு?”

“பின்ன என்ன உங்க ஊர மாதிரியா? வீட்ட விட்டு வெளிய வந்தா ஒரு காக்கா, குருவி கூட இல்லாம இருக்குறதுக்கு? கழுத்துல கெடக்குற செயின அத்துட்டு போனா கூட உதவிக்கு ஆள கூப்பிட முடியாது”

“நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருசம் ஆச்சு, கொலை, கொள்ளைன்னு இது வரைக்கும் எதாச்சும் எங்க ஊருல கேள்விப்பட்டுருக்கியா?”

“இங்க மட்டும் என்ன தினம் நாலு கொலை விழுகுதாக்கும்…!” என்று சொல்லி முடிப்பதற்குள் வேகமாக ஓடி வந்த ஒருவன் அவளை இடித்து தள்ளிவிட்டு ஓடினான்.

Representational image
Representational image

கீழே விழ இருந்தவளை தாங்கிப் பிடித்த அவள் கணவன் கோபமாய் ஏறிட்ட போதுதான் கவனித்தான், ஓடுபவன் முதுகில் இருந்து இரத்தம் வழிவதை. யாரிடமிருந்தோ தப்பித்துக் கொள்ளவே இப்படி ஓடுகிறான் என்பது இருவருக்கும் புரிந்தவுடன், அவன் ஓடி வந்த திசையில் ஏறிட்டனர். கண்களில் கொலை வெறியுடன், கைகளில் இரத்தம் சொட்டும் கத்தியுடன் ஓடிவந்து கொண்டிருந்தான் அவன். கவிதாவை இழுத்துக்கொண்டு பதட்டத்துடன் பின்னால் நகர்ந்தான் அவள் கணவன்.

ஒற்றை நொடியில் அவன் அவர்களைக் கடந்து ஓடினான். ஆனால் அவன் யார் என்று அடையாளம் கண்டுகொள்ள அந்த ஒற்றை நொடியே போதுமானதாக இருந்தது கவிதாவிற்கு. எந்த பெண்ணால்தான் மறக்கமுடியும் ? தன் முதல் காதலனை!

“என்னஙக இது பட்டப்பகல்ல இப்படி நடக்குது?” அதிர்ச்சி குறையாமல் பக்கத்து கடைக்காரரிடம் கேட்டான் கவிதாவின் கணவன்.

“என்ன தம்பி பண்றது? துரத்திட்டு ஓடுறான் பாருங்க அவன்தான் நட்டு. பெரிய ரௌடி. இந்த டவுணுக்குள்ளேயே இதுவரைக்கும் ரெண்டு கொலை பண்ணியிருக்கான். இது மூணாவது கொலை”

“அவன்தான் தப்பிச்சு ஓடிட்டானே!”

“இவன் மொகத்துல இருக்குற வெறிய பாத்தா தெரியலயா தம்பி, கண்டிப்பா கொன்னுடுவான்னு!”

“போலிஸ்லாம் என்ன பண்ணுதுண்ணே?”

“எல்லாம் ஆளுங்கட்சி சப்போர்ட் தம்பி, அடுத்த தேர்தல்ல ஆட்சி மாறுர வரைக்கும் இவன எதுவும் பண்ண முடியாது”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கவிதா நாம வீட்டுக்கு போகலாம், இன்னொரு நாள் ஷாப்பிங் பண்ணிக்கலாம்” என்றபடி திருமபினான் அவள் கணவன்.

கவிதா உறைந்து போய் நின்றிருந்தாள், அவளறிந்த நடராஜன் இவனில்லை. அவளது பள்ளிக்காலத்து நினைவுகள் மனதினுள் அலையாய் எழுந்தன. பள்ளியின் விளையாட்டுப் பாட வேளையில் கூட புத்தகமும் கையுமாக இருப்பவன். மாணவர்கள் பலரும் பள்ளி முடிந்து கலைந்த சீருடையில் செல்லும் போதும் காலையின் முதல் வகுப்பில் இருப்பது போல நேர்த்தியாய் இருப்பான். புத்தகத்திற்கு அடுத்தபடியாக அவன் அதிக நேரம் செலவிட்டது கவிதாவுடன்தான். நடராஜனிடம் தன் காதலை ஏற்றுக்கொள்ளச் செய்ய இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது கவிதாவிற்கு. அவனை நெருங்கும் போதெல்லாம் விலகிச்செல்வான், விடாமல் துரத்தினால்,

“ப்ளீஸ் கவிதா, என்ன தொந்தரவு பண்ணாத, படிப்பத் தவிர வேற எதையும் என்னால யோசிக்க முடியாது, புரிஞ்சுக்கோ!” என்று கெஞ்சுவான். இரண்டு நாட்கள் அவனிடம் நெருங்கக்கூடாது என்று நினைத்தாலும் மூன்றாம் நாள் அவன் பின்னே போய் நிற்பாள்.

“ஏன்டி உனக்கு வேற பையனே கிடைக்கலயா? அவனுக்கு ஒழுங்கா சிரிக்கக் கூடத் தெரியாது , போயும் போயும் இவனயா லவ் பண்ற? ஆள மாத்துடி ” என்ற தோழிகளின் அறிவுரைகளை புறந்தள்ளி அவனை தன் காதலால் வீழ்த்தினாள்.

Representational image
Representational image
Photo by Hamza Ali on Unsplash

“இதோ பாரு கவிதா, இந்த லவ்வால என் படிப்புக்கு ஏதாச்சும் டிஸ்டர்ப் ஆகுதுன்னு தோணுச்சுன்னா நாம பிரேக்அப் பண்ணிக்கனும், உனக்கு ஓகே-வா?” என்ற ஒப்பந்தம் போட்டு காதலிக்கத் தொடங்கியவன்.

அழகாகவும், அமைதியாகவும் சென்ற அவர்கள் காதலில் மணணை அள்ளிப் போட்டவன் அவர்களுடன் பள்ளியில் படித்த ரமேஷ். ஒருநாள் தனியாக இருந்த கவிதாவிடம்,

“ ஏய் கவிதா… எனக்கு உன்ன புடிச்சுருக்கு, அந்த நடராஜன கழட்டி விட்டுட்டு என்ன லவ் பண்ணு” என்று மிரட்டினான்.

“அதெல்லாம் முடியாது, இதுக்கு மேல என்ன தொந்தரவு பண்ணா நான் நடராஜன்கிட்ட சொல்லிருவேன் பாத்துக்கோ!”

“ஓ… நீ சொன்ன உடனே உங்க நடராஜன் வந்து என் சட்டைய புடிச்சுருவானோ? அப்போ இதையும் சேர்த்து சொல்லுடி” என்று அவள் கையை பிடித்து இழுத்தான்.

அழுதுகொண்டே ஓடிச்சென்று நடராஜனிடம் சம்பவத்தை விளக்கி, “நீ வந்து அந்த ரமேஷ என்னன்னு கேளுடா” என்றாள்.

“விடு கவி… இதப்போய் பெருசு பண்ணிக்கிட்டு, இன்னும் மூணு மாசத்துல ஸ்கூல விட்டே போகப்போறோம், அப்புறம் அவன் யாரோ, நாம யாரோ, இத இப்படியே விட்டுரு”

“அவன் என்கிட்ட அசிங்கமா நடந்துக்கிட்டது உனக்கு சாதாரண விஷயமா போச்சுல்ல? உன்னப்போய் லவ் பண்ணேன் பாரு எனக்கு நல்லா வேணும், இன்னையோட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று அழுதுகொண்டே ஓடிச்சென்றாள்.

அதன் பிறகான பள்ளி நாட்களில் இருவரும் ஒருவரையொருவர் விலகிச் சென்றனர். அடுத்தடுத்து வந்த தேர்வுகளும் விடுமுறையும் இவர்களின் இடைவெளியை அதிகப்படுத்தின. பின்னர் சென்னையில் உள்ள கல்லூரியில் சேரந்த கவிதா நடராஜனை மறக்கத்தொடங்கினாள். அவளின் பெற்றோர் கல்லூரி இறுதி ஆண்டிலேயே திருமணமும் செய்து வைத்தனர். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இன்றைக்குதான் நடராஜனை பார்த்திருக்கிறாள். அவனுக்கு என்னவாயிற்று? ஏன் இப்படி மாறினான்? ஒன்றும் புரியவில்லை.

“ஏங்க கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க” என்ற படி கணவனின் தோளைத்தட்டினாள்.

இருசக்கர வாகனத்தை நிறுத்தி என்னவென்று கேட்ட தன் கணவனிடம் “இதுதான் என் ஃப்ரண்டு மணிமேகலை வீடு, கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துடுறேன். நீங்க வீட்டுக்கு போங்க” என்றாள். அடுத்த தெருவில்தான் கவிதாவின் வீடு என்பதால் “சரி சீக்கிரம் பேசிட்டு வா” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அழைப்புமணியை அழுத்தவும் கதவைத்திறந்த மணிமேகலை, “ஏய் கவிதா… எப்போ ஊருக்கு வந்த? உள்ளே வா” என்று ஆச்சர்யத்துடன்.வரவேற்றாள்.

“நம்ம கூட ஸ்கூல்ல படிச்ச நடராஜன் இப்போ என்ன பண்ணிக்கிட்டூ இருக்கான்?” கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் கவிதா.

வரவேற்பரையில் அமர்ந்திருந்த மணிமேகலையின் பெற்றோர் அதிர்ச்சியுடன் நோக்கினர். “இல்லப்பா, இவளுக்கு அவனைப் பத்தி எதுவும் தெரியாது அதான் இப்படி கேக்குறா” என்றவள் “நாம இதப் பத்தி வெளிய போய் பேசுவோம்” என்று கவிதாவிடம் கிசுகிசுத்தாள்.

தெருமுனையில் அமைந்திருந்த கருமாரியம்மன் கோவிலில் அம்மனை வணங்கி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்தனர் இருவரும்.

“என்னடி நான் கேட்டதுக்கு நீ எந்த பதிலுமே சொல்லாம இருக்க? இன்னைக்கு டவுண்ல நடராஜன மாதிரியே ஒருத்தன பார்த்தேன் கையில கத்தியோட. அவன் ஒரே பையன்தான அண்ணன், தம்பி யாரும் கிடையாதுல்ல!”

“நீ பாத்தது நடராஜன்தான்டி, அப்படி சொன்னா இங்க யாருக்கும் அவன தெரியாது, ‘தச்சநல்லூர்’ நட்டு-ன்னு சொன்னா அத்தன பேருக்கும் தெரியும்.

“இதெல்லாம் நாம போன்ல பேசும் போது ஏன்டி என்ட சொல்லல?”

“உன்ட சொல்லி என்னடி ஆகப்போகுது?”

“அவன் எப்படி இப்படி மாறுனான்? நம்பவே முடியலயே!”

“அதெல்லாம் பெரிய கதைடி… நீ சென்னைக்கு படிக்க போயிட்ட, அவனும் நானும் இங்க ஒரே காலேஜ்லதான் படிச்சோம். ஸ்கூல் மாதிரிதான் காலேஜ்லயும் ஒரே புக்ஸும் கையுமாதான் இருப்பான். செகண்ட் இயர் படிக்கும் போது என் ஃப்ரண்டு ஒருத்தி திடீர்னு அவன் அவகிட்ட தப்பா நடந்துக்கிட்டான்னு சொல்லி போலிஸ்ல புகார் குடுத்துட்டா, அப்புறமா போலிஸ் அவன அரெஸ்ட் பண்ணி , காலேஜ்ல டி.சி குடுத்துன்னு மேட்டர் ரொம்ப பெருசா ஆயிடுச்சு. இது போதாதுன்னு, நியூஸ்பேப்பர்ல் இவன் போட்டோவோட நியூஸ் வந்துடுச்சு, அவனுக்குன்னு இருந்த ஒரே ஜீவனான அவன் அம்மா இத தாங்க முடியாம தூக்குல தொங்கிட்டாங்க. இரண்டு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வெளிய வந்தவன் இப்படி மாறிட்டான்”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்ணிமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்த கவிதா, “உண்மையிலேயே நடராஜன் அந்தப் பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டானா?”

“அடிப்போடி… அவன் அப்படி நடந்துக்குற ஆளா? அவக்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணது ஒரு எம்.எல்.ஏ பையன், அவன் மேலதான் கம்பளெய்ன்ட் குடுத்துருக்கா, அந்த பையன் அப்பாவோட பவர யூஸ் பண்ணி பெருசா சப்போர்ட் இல்லாத நடராஜன் மேல கேஸ மாத்திப் போட்டுட்டாங்க, அவளையும் வெளிய எதுவும் சொன்னா கொன்னுடுவோம்னு மிரட்டி பேசவிடாம பண்ணிட்டாங்க”

Temple
Temple

பதில் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்த கவதாவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவளாய் தொடர்ந்தாள் மணிமேகலை, “வெளிய வந்தவன் வெட்டு, குத்து கொலைன்னு இறங்கிட்டான். அந்த எக்ஸ். எம்.எல்.ஏ வயும் அவர் மகனையும் கொன்னவன, ஆப்போசிட் பார்ட்டி எம்.எல்.ஏ தன் பக்கம் வச்சுக்கிட்டாரு. இப்போ அவர் காட்டுற ஆள வெட்டுறது, குத்துரதுன்னு முழு ரவுடி ஆயிட்டான். இப்போ அவங்க ஆட்சி நடக்குறதால போலிஸால நடராஜன எதுவும் பண்ண முடியலன்னும், ஆட்சி மாறுச்சுன்னா கண்டிப்பா என்கவுண்டர் பண்ணிடுவாங்கன்னும் சொல்றாங்க” என்றவள் அவர்கள் எதிரே வந்த ஒருவனைப் பார்த்ததும் கவிதாவிடம்,

“நடராஜன் மொத மொதல்ல வெட்டுனது யார தெரியுமா?”

“அந்த எம்.எல்.ஏ மகனாத்தான் இருக்கும்”

“ இல்ல, இவனத்தான்” என்று எதிரே வந்தவனை கண்காட்டினாள்.

தன் எதிரே ஒற்றைக்கையுடன் நடந்து வருபவனை பார்த்தவுடன் கவிதாவால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது, பள்ளியில் தன் கையைப் பிடித்து இழுத்த அதே ரமேஷ்தான் இவனென்று.

ந. சுந்தரபாண்டியன்,

முடிவைத்தானேந்தல்,

தூத்துக்குடி மாவட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism