Published:Updated:

சீனுவின் வேதா! | சிறுகதை | My Vikatan

Representational image

கோதை வளர்ந்து அவள் திருமணத்தின் போது , எங்கே மகளின் பிரிவை தாங்காமல் இவள் துவண்டுவிடுவாளோ என பயந்த எனக்கு , இவளே ஆறுதல் கூறியது ஆச்சரியம்.

சீனுவின் வேதா! | சிறுகதை | My Vikatan

கோதை வளர்ந்து அவள் திருமணத்தின் போது , எங்கே மகளின் பிரிவை தாங்காமல் இவள் துவண்டுவிடுவாளோ என பயந்த எனக்கு , இவளே ஆறுதல் கூறியது ஆச்சரியம்.

Published:Updated:
Representational image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தாத்தா, ரூம்ல டேபிள் மேல தண்ணீ வச்சுட்டேன். நீங்க போய் தூங்குங்க என்று கூறிய பேத்தியின் குரல் கேட்டு மெதுவாக எழுந்து அறைக்குச் செல்ல முயற்சித்தேன்.

``அப்பா .. அம்மாவோட காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. நீங்க நிம்மதியா தூங்குங்க'' என்றாள் கோதை.

அவளை வாஞ்சையுடன் பார்த்து விட்டு என் அறைக்குச் சென்று படுக்கையின் மேல் அமர்ந்தேன். பதிமூன்று நாட்கள் எப்படி ஓடின? என் வேதா இல்லாமல் என நினைக்கும் போது , ஓ வென்று கதறி அழ வேண்டும் என இருந்தது. ஆனால் அழுது தீர்த்து விட்டால், மனசு லேசாகி, அவள் நினைவுகள் மெல்ல கரைந்து விடுமோ என்ற அச்சத்தில் அழுவதைத் தவிர்த்தேன்.

என் இருபது வயதில் என்னோடு இணைந்தவள் வேதா. ஐம்பத்தைந்து வருடங்களாக அவளுடன் பிரியாமல் பயணம். இவ்வளவு வருடங்களும் ஒரு நொடியில் மாயமானதை மனம் ஏற்கவில்லை. நேற்றுதான் அவள் கரம் பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தது போல் இருக்கிறது.

மாமாவின் வற்புறத்தலில், பக்கத்து ஊருக்குச் சென்று அவளை பெண் பார்த்தேன். பதினெட்டு வயதில் என் கண்ணிற்கு அழகியாய் தோன்றினாள். வீட்டிற்கு போய் பதில் சொல்கிறோம் என்றார் என் மாமா. நான் எழுந்து , இல்ல இப்பவே சொல்லிட்றேன்., எனக்கு உங்க பொண்ண பிடிச்சிருக்கு என்று கூறி வந்து விட்டேன். மறுநாளே வேதவல்லி என்கிற வேதா வின் தந்தை என் வீட்டிற்கு வந்து திருமண நாள் குறித்துக் கொண்டு சென்றார்.

Marriage
Marriage

வேதா ஒரு நொடியாவது என்னை அவள் வீட்டில் பார்த்தாளா என என்னை நானே கேள்விக் கேட்டுக் கொண்டேன். அவளுக்குப் பிடித்துதான் இந்த கல்யாணம் நடக்கிறதா என சந்தேகம். நேராக போய் அவளை கேட்கலாம் என்றால் சந்தர்ப்பம் அமையவில்லை. திருமண நாளும் வந்தது. அவளிடம் பேச முடியாதபடி ஏகப்பட்ட சம்பிரதாயங்கள், சடங்குகள் நடைபெற்றன. தாலி கட்டும் பொழுதில் அவள் முகம் பார்த்தபோது , சிரித்த முகத்துடன் இருந்தாள். ஏதோ ஒரு நிம்மதி தோன்றியது.

திருமணமான பின் பலமுறை கேட்டேன். எதனால என்ன கல்யாணம் பண்ணின? உனக்கு என்ன பிடிச்சிருக்கா என... பிடிக்காமதான் மணமேடை வரை வந்ததேனாக்கும் என்ற பதில் மட்டுமே வரும்.

வேதாவின் வாழ்க்கை முறையே வேறு. அவளுக்கு கர்நாடக சங்கீதத்தில் நாட்டம் அதிகம். காலையில் பூஜை அறையில் அமர்ந்து பாடுவாள். இராமரையும், கிருஷ்ணரையும் பாட்டால் அழைப்பாள். நான் அலுவலகம் செல்லும் வரை , எனக்காகவே எல்லா வேலைகளையும் செய்வாள். எனக்கு பிடித்த உணவை தெரிந்து கொண்டு சமைப்பாள். நான் நன்றாக ஆடை உடுத்திக் கொண்டு அலுவலகம் செல்ல வேண்டும் என ஆசைப்படுவாள். சிறிய வயதில் தாய் தந்தையை இழந்து , மாமாவின் வளர்ப்பில் வளர்ந்த எனக்கு, இவளின் வருகைக்குப் பிறகு வாழ்க்கை வசந்தம் ஆனது.

நகைச்சுவை கலந்த அவளின் பேச்சு, கோபக்காரனான என்னை மெல்ல மெல்ல மாற்றியது. அவள் என்னுடன் வந்து சேர்ந்த சில வருடங்களில் என் கோபங்கள் எல்லாம் மாயமானது. சிரிப்பின் ரசிகனானேன். திருமணத்திற்கு பின் ஒருநாளும் என்னை விட்டு அவள் தன் தாய் வீட்டிற்கு செல்லவில்லை. அவள் எங்கே தாய் வீடு செல்ல வேண்டும் என கேட்டு , அவளை பிரிய வேண்டுமோ என பயப்படுவேன். ஆனால் அவள் ஒரு நாளும் தன் தாய் வீடு போக வேண்டும் என கேட்டதில்லை. விளையாட்டிற்கு ஒரு நாள் கேட்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உன்ன பெத்தவள போய் பாத்துட்டு ஒரு வாரம் தங்கிவிட்டு வாயேன் என்று,, அவளோ , என்னை பெத்தவளுக்கு இன்னும் நாலஞ்சு பேர் பசங்க வீட்ல பேசறதுக்கு இருக்காங்க, நான் போய்ட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்று கூறி என்னை ஆனந்தத்திற்கு உள்ளாக்கினாள். திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து தான் மகளாக கோதை பிறந்தாள். கோதை பிறந்தவுடன், வேதா என்னை கவனிப்பது குறைகிறதோ என நினைத்தேன். ஒரு நாள் அவளிடம் கேட்கவும் செய்தேன். அதற்கு அவள் ..., நம்ம இரண்டு ஜீவனோட ஜீவனே இவதானே.. நீங்க வெளி வேலய பாருங்க .. நான் இந்த குட்டி தேவதைய பார்த்துக்கிறேன் என்று என்னை சரிசெய்தாள்.

கோதையை அவள் வளர்த்த அழகே தனி. அழகாக அலங்காரம் செய்து எப்போதும் பளிச்சென்று அவளை வைத்திருந்தாள். அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவளும் ரசித்து என்னையும் குழந்தையின் ரசிகனாக மாற்றினாள். முதன் முறை அவளை விமானத்தில் கூட்டிச் சென்றபோது, விமான பணிப்பெண்கள் எனக்கு சிரித்தபடியே வணக்கம் சொல்ல,, இவள் கோதையிடம், அப்பாவ பாத்தியா, வானத்துல பறக்கறப்போ கூட அழகிகளோட பேசிண்டே வர்றார் , இன்னிக்கு பறக்கறப்போ நம்ம இரண்டு பேரையும் மறந்துடுவாரோ என்னமோ என சிரித்துக் கொண்டே கூறினாள். அவளிடம் நான் அன்று கூறவில்லை,, எத்தனைபேர் வந்தாலும் , என் மனம் உனக்கு மட்டும் தான் என்று.

சொல்லாவிட்டாலும் அது அவளுக்குத் தெரியும். அவளுக்கு வீடு நிறைய குழந்தைகள் இருப்பது பிடிக்கும். ஆனால் இறைவனின் சித்தம் ஒன்று தான் அமைந்தது. அவளை விட்டு நான் எங்கேயாவது ஊருக்குச் சென்றால், வாசலில் இருக்கும் வேப்பமரத்தின் முன் நின்று , சோகமாக என்னைப் பார்த்தபடி கையசைத்து வழி அனுப்புவாள். அவளின் அந்த வாடிய முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் போன காரியத்தை சீக்கிரமாக முடித்து சொன்ன தேதிக்குள்ளாகவே வீடு வந்து சேர்ந்து விடுவேன். கோதை வளர்ந்து அவள் திருமணத்தின் போது , எங்கே மகளின் பிரிவை தாங்காமல் இவள் துவண்டுவிடுவாளோ என பயந்த எனக்கு , இவளே ஆறுதல் கூறியது ஆச்சரியம். கல்யாணம் பண்ணின்டு சீக்கிரமே பொண்குழந்தைகள் எல்லாம் புருஷன் வீட்டுக்கு போய்டனும். அதுதான் அவங்களுக்கு நல்லது என்றாள். மாப்பிள்ளையை எப்படி தேர்வு செய்தாய்? நான் காட்டிய வரன் என்றதாலா? எனக் கேட்டேன். அப்படியும் வச்சுக்கலாம். வேதா விற்கு ஒரு சீனு மாதிரி... நம்ம கோதைக்கு ஒரு புருஷன் கிடச்சா நல்லாருக்குமேன்னு இறைவன் கிட்ட பிரார்த்தன பண்ணின்டே இருப்பேன் என்றாள். முதன் முறை அவள் என் பெயரை என் முன் உச்சரித்த தருணம் அது.

Representational image
Representational image

காலங்கள் ஓட ஓட அவளின்றி நானில்லை இப்பிறவியில் என வாழ்க்கை சென்று கொண்டே இருந்தது. பதினான்கு நாட்கள் முன் வரை தான் இவ்வளவும். இரவு படுக்கும் முன், என் கையை பிடித்துக் கொண்டு, எல்லாம் பாத்தாச்சு, போதும்னு இருக்கு வாழ்க்கை என்றாள். திக்கென்றிருந்தது எனக்கு. என்னாச்சு உனக்கு, ஏன் இப்டி பேசற என்றேன். தெரியல, உங்களுக்கு முன்னாடி நான் போய் சேந்துட்டேன்னா... நீங்க தாங்குவீங்களா என உடைந்த குரலில் கேட்டாள். முதல்ல தூங்கு, உனக்கெதுவும் ஆகாது.. ஆகவும் விடமாட்டேன் என்று அவளை சமாதானப்படுத்தினேன். அவள் சொன்ன படி, வாழ்க்கை போதும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து விட்டாள் போலும்.. மறுநாள் எழுந்திருக்கவேயில்லை. எல்லாம் முடிந்த விட்டது. ஒரு பிடி சாம்பல் அவ்வளவு தானா வேதா நீ இனி என புலம்பினேன். உன் உடல் இடபட்டிருந்த இடத்தில் எரியும் விளக்கு எனக்கு அமங்கலமாகவே தோன்றுகிறது. இனி ஒரு ஜென்மம் இருந்தால் , நான் பிறந்த உடனேயே நீயும் பிறந்து என்னருகில் வந்துவிடு என்று நினைத்தபடியே உறங்க சென்றேன்.

மறுநாள் , கோதையிடம் அவள் மகள் ஓடி வந்து .. அம்மா ..தாத்தா எவ்ளோ எழுப்பினாலும் எந்திரிக்க மாட்டேங்கறார். நீ வந்து பாரேன் என்றது.

-vinu shahapuram

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.