வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
உலகத்துல இரு சாரார் இருக்கிறார்கள். ஒன்று, நம்மை உயர வைக்க நினைப்பவர்கள். மற்றொன்று, ஒடுக்க நினைப்பவர்கள். உயர வைக்க நினைப்பவர்களின் பேச்சு கடுமையாய் இருக்கும். ஆனால், விளைவு நலமாய் இருக்கும். ஒடுக்க நினைப்பவன் கூடவே இருந்து குழிபறிப்பான். சிரிச்சு சிரிச்சே கழுத்தறுப்பான். பொய்யாய்ப் புகழ்வான்!
‘ஒன்னத் தூக்கி ஒடப்புல போட!’ என்று என்னைத் திட்டின சீனிவாசன் எந்த ரகம் என்றால், உயர வைக்கிற உயரினத்தைச் சார்ந்தவர்.
என்னைத் திட்டினதெல்லாம் எனக்குப் பெரிசா தெரியலை. ஆனால், ஒன்னைத் தூக்கி ஒடப்புல போட. என்று திட்டினாரே அதுக்கு அர்த்தம்தான் புரியலை!’
திட்டினது பெரிசில்லே..! அர்த்தம் தெரியாம அவமானப்பட்டா அசிங்கமா இருக்குமே…?! மனசு கெடந்து உறுத்துமே..! எதுக்கு சார் என்னை ஒடப்புல போடணும்? அல்லாடியது என் மனசு கிடந்து. நேரே வீட்டுக்குப் போனேன்.
எங்கவீட்டு ‘ விக்கிபீடியா’ எங்க அம்மா காந்திமதிதான். அவள் அந்தக் காலத்து ஐஞ்சாங் கிளாஸ்தான்., ஆனா, பாஸ் நான், எம் ஏ ஆனா ஃபெயில். கவுண்டமணி செந்தில் பாணியில், பாஸ் பெருசா? ஃபெயில் பெருசா?”
‘பாஸ்தான்’ என்பதால், அம்மாவிடமே அர்த்தம் கேட்டுவிட ஆர்வமாய்ப் போனேன்!

‘என்னடா?’ என்று என்னை அன்பாய் வரவேற்றாள். எங்க வீட்டிலிருக்கும் விக்கிபீடியா வயது தொன்னூற்றைந்து. அவள் அந்தக் காலத்து ஆள் என்றெல்லாம் அப்படி அலட்சியமாய் இருந்துவிட முடியாது!. உலக விஷயங்கள் அத்தனையும் அத்துபடி.
‘அம்மா!, என்னை எங்க ஆபீஸ் மேலதிகாரி திட்டீட்டார்’ என்றேன்.
‘திட்டாட்டித்தான் ஆச்சரியம்!’ என்றாள் அலட்சியமாக.
அதுக்கில்லமா’ ஒன்னைத் தூக்கி ஒடப்புல போட!னு திட்டினார் அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லேன்.’ கேட்டேன்.
‘இதோ பாரு, ஒன்னத்தூக்கி ஒடப்புல போடன்னு சொன்னதுக்குக் காரணம் ரொம்ப உயர்வான விசயம்!’ பீடிகை போட்டாள்!
‘அம்மா, நானே திட்டுனதுக்குக் காரணம் தெரியாம திகைச்சுப் போயிருக்க, நீ வேற பீடிகை போடறயே?! விஷயத்தை விளக்கிச் சொல்! சீக்கிரம்…! எல்லாருக்கும் ஆயிரம் வேலை இருக்கு!’ என்றேன். உங்களுக்காகவும் சேர்த்து.
அம்மா சொன்னாள்,
மகா பாரத யுத்த காலம்., யுத்தம் நடத்த பொருத்தமான இடம் தேடிட்டிருந்தார் கிருஷ்ணபகவான்.
நல்ல மழை, இப்ப மாதிரியே! வயல்ல ஒரு விவசாயி தன் வயலுக்குள் வரப்பை மீறித் தாண்டிப் பாயும் தண்ணீரைத் தடுத்து நிறுத்த வரப்பு மண்னை வெட்டி வெட்டிப் போட்டார்., தண்ணீர் நிக்கலை., கல்லை மண்ணைப் பாறையைப் போட்டுத் தடுத்துப் பார்த்தார் நிக்கலை. என்ன பண்ணியும் வரப்பை மீறி தண்ணீர் வயலுக்குள்ள பாய்ந்தது., நெல்லெல்லாம் நாசமாப் போயிடுமேன்னு பயந்த அவன், தன் பக்கத்துல நின்னுட்டிருந்த பத்து வயசுப் பையனை, தன் மகனை மண் வெட்டியால ஒரே போடாபோட்டு ரெண்டு துண்டாக்கி, அந்த அடைப்பை அந்த துண்டுபட்ட உடலைக் கொண்டு அடைத்தான். தண்ணீர் வருவது நின்று போனதாம். பகவான் பார்த்தார்., ஈவு இரக்கம் இல்லாத இந்த இடம்தான் மகா பாரத யுத்தத்துக்கு உகந்த இடம்னு முடிவு பண்ணிட்டார். பெத்த மகன்கற உறவு பார்க்கலை. பாசம் பரிவு காட்டலை.. உறவுக்காரர்னு பாசம் பரிவு பார்க்காத இடம்தான் குருட்சேத்திர யுத்தத்துக்கு தக்க இடம்னு முடிவு பண்ணினார். ‘
‘அதுக்கும் இதுக்கும் என்னம்மா தொடர்பு?!’ இது நான்.
அம்மா சொன்னாள், ‘அவன் எப்படி தன் மகனை வெட்டி, வயல் ஒடப்புல போட்டானோ.. அது மாதிரி உன்னையும் போடணும் போட்டாத்தான் பிரச்சனை தீரும்கறதுக்குத்தான் அவர் அப்படி உன்னைத் திட்டிருக்கார். அவர் திட்டினதுக்கு வருத்தப்படாதே! எங்க கோபம் இருக்கோ அங்கே தான் குணமிருக்குன்னு அர்த்தம். ‘ என்றாள்.
‘அது சரிம்மா… அதுக்கு அப்படியா திட்டணும்?’
‘உன்னை எதுக்காகத் திட்டினார்?’
‘ உனக்குத்தான் தெரியுமே நான் ஒரு டைப்பிஸ்ட்டுனு! நான் டைப் பண்ணினதுல அதிக தப்பு இருந்தது. நீயெல்லாம் ஒரு டைப்பிஸ்ட்டா? ‘தப்பிஸ்ட்..’ டைப்பண்ணினா கைல திருத்துவாங்க, நீ டைப் பண்ணினதுக்கு அப்புறம் பார்த்தா ஏதோ, நான் கைல, எழுதுனதை நீ டைப்பிங்ல திருத்துனா மாதிரி இருக்கு. அத்தனையும் கையெழுத்து, கொஞ்சம்தான் டைப்பிங்க் உன்னைத் தூக்கி ஒடப்புல போட!’ என்றார் என்றேன்.

அந்த விவசாயி கைலயே உடைப்பை நீக்க மருந்திருக்க மண்ணை வச்சு அடைக்க முயன்று தோற்றுத்தானே கடைசில மகனை வெட்டிப்போட்டு நிரப்பினான்.?! அதுமாதிரி, பிரச்சனைக்கு உன்னைக் கொண்டே தீர்வு கண்டு பிடிக்கணும்னு சூசகமா சொல்லியிருக்கார், உனக்குக் கத்துக் கொடுத்து திருத்திடுவார்.
உலகத்து ரெண்டு வகையான மக்கள். ஒருவகை நம்மை உயர்த்துறவங்க, அவங்க பேச்சும் நடவடிக்கையும் கடுமையா இருந்தாலும், அவங்க நம்ம முன்னேற்றத்துக்கு உதவுவாங்க.
கூடவே இருந்து குழிபறிக்கறவன் மறைமுகமா நமக்கு எதிரா நம்மைப் பற்றி மத்தவங்க்கிட்ட பத்த வைக்கிற வேலை செய்வான். இவனை நம்பாதே! அவன் பெரிய பதவில கூட இருப்பான் பட்டம் கிட்டமெல்லாம் வாங்கியிருப்பான். எல்லாம் வெத்து வேட்டு!
இந்த இருசாராரில் யாராலும் ஒருத்தர் வளர்ச்சியை ஒடுக்கிட முடியாது ஒடிஞ்சு போயிடாதே! ஏன்னா, மரம் வைத்தவன் கடவுள். அவன் ஒருத்தனை தழைத்து வளர வைக்கணும்னு முடிவு பண்ணீட்டார்னா, இவங்கெல்லாம் அதன் கிளைகளைத்தான் தறிக்க முடியுமே ஒழிய, அதன் உயரும் மர உச்சியையோ, ஆழமாய்ப் பரவிவிட்ட அதன் ஆணி வேரையோ அசைக்க முடியாது.
எப்போதும் துடிப்பாய் இரு! துவண்டு போயிடாதே! திட்டறதுக்கெல்லாம் மனசுடைஞ்சுட்டா உலகத்துல வாழவே முடியாது. எதிர்ப்பில்லாம எதுவும் சுவைக்காது. புகழ்றவங்கிட்ட எச்சரிக்கையா இரு! திட்டறவனைப் பகைச்சுக்காதே!. ‘ என்றாள், என் அம்மவான விக்கி பீடியா. அவள் வீட்டில் சும்மா இருப்பது மாதிரிதான் தெரியும். ஆனா, உலக ஞானங்களை உள்ளடக்கிய வித்தகி அதான் விக்கிபீடியா என்றேன். அது எனக்கு மட்டும்தான் தெரியும்.
-வளர்கவி, கோவை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.