வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
``இந்தாடி பாட்டிக்கு இட்லி கொண்டுபோய் வை'' என கூற,
``போம்மா நான் போகல.. பாட்டி அறைக்குள்ள போனாலே நாற்றம் அடிக்குது’’ என்று கூறினாள் ரமா.
மருமகள் மற்றும் பேத்தியின் உரையாடல், மூடி இருக்கும் அறையின் கதவை தாண்டியும் பாட்டி சகுந்தலாவின் காதில் விழுந்தது.இது புதிதில்லை.
தினமும் நடக்கும் விஷயம்தான் என்றாலும், பாட்டிக்கு இன்று ஏனோ மனம் அதிகமாக வலித்தது. பாட்டிக்கு 80 வயதை தொட்டு விட்ட நிலையில், கண் பார்வை மிக மங்கலாக தெரிகிறது.

சுவற்றை பிடித்து கொண்டுதான் நடக்க முடிகிறது. காது மட்டும்தான் சரியாக கேட்கிறது. தலைமுடி கொட்டுவது தொடர்வதால் பாட்டிக்கு மேலும் வருத்தம்தான். எத்தனை வயது ஆனாலும் பெண்களுக்கு தன் தலைமுடி மேல் அதிக அக்கறைதானே!
பாட்டி மட்டும் விதிவிலக்கா என்ன?. பாட்டியின் அறைக்குள் வரவே யாருக்கும் விருப்பம் இல்லாதபோது, பாட்டி அருகில் உட்கார்ந்து பேச யார்தான் வருவார்? வேற வழி? பாட்டி தனக்குதானே மனதுக்குள் பேசிக் கொள்வாள். தற்பொழுது என்ன பேசுகிறாள் என சற்று காது கொடுத்து நாம் கேட்போம். பேத்தியின் பேச்சை கேட்ட பின்பு தனக்குள் பேசி கொண்டாள். புலம்பல்தான்..
``இவளுக்கு என்னை பற்றி என்ன தெரியும்? சிறு தூசு உடலில் பட்டாலும் உடனே குளிப்பவள் ஆயிற்றே நான். இருந்தாலும் இவ்வளவு சுத்தம் ஆகாதும்மா என்பாரே என் மாமியார். என்னை பெண் பார்க்க வந்த பொழுது பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கிறாளே என்று சொல்லி இங்கு அழைத்து வந்தார். ஆனால் இப்போதோ எனது முகத்தில், கைகளில் சுருக்கம் விழுந்து முடிகொட்டி முதுமை என்ற பெயரில் அலங்கோலமாக இருக்கிறேனே!
இப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதால்தானோ எனது மாமியார் ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும் காலத்திலேயே மறைந்து விட்டார். நான் மாட்டி கொண்டேனே! சில வருடங்களுக்கு முன்பு கணவனும் இறந்து விட்டார். இப்போது மூத்த மகன் வீட்டில் இருக்கிறேன். இளைய மகன் வேறு ஊரில் இருக்கிறான். வயது மூப்பின் காரணமாக சில நாட்களாக என்னையும் மீறி சிறுநீர் வெளியாகிறது.

சில நேரங்களில் மலமும். இதன் காரணமாக அறை முழுவதும் நாற்றம். உடல் ஈரம் அடைந்த பிறகே உணர்கிறேன். என்னையும் மீறி நடக்கும் எனது உடலின் செயலை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்?
எனக்கு முதுமை வரும் என்றோ, இப்படி எல்லாம் அல்லல் படுவேன் என்றோ நான் நினைத்து பார்த்தது இல்லையே... நான் மட்டுமல்ல... யார்தான் நினைத்து பார்க்கிறார்கள்? அப்படி நினைத்து பார்த்திருந்தால், முதியோர்களை உதாசீனப் படுத்துவார்களா? கேவலமாக நடத்துவார்களா?
நமக்கும் முதுமை வரும் என்ற எண்ணமே இளமையில் யாருக்கும் வருவதில்லையே... மெதுவாக கதவு திறக்கப்பட முனகுவதை நிறுத்திக் கொண்டாள் பாட்டி. மெல்ல உள்ளே வந்த மருமகள் இட்லி சட்னி, சாம்பார் வைத்த தட்டை வைத்துவிட்டு நகர்ந்தாள்.
`` ஏம்மா கொஞ்சம் பாயசம் செய்து கொடும்மா.. எனக்கு சாப்பிட ஆசையாக இருக்கு’’ என்றாள் பாட்டி.
``அப்புறமா செய்து கொடுக்கிறேன் அத்தே!’’ என்று சொல்லி விட்டு போனாள் மருமகள்.
``ஒரு மாசமா சொல்றேன் செய்து கொடுக்க மாட்டேங்கிறா...’’ என்று முணுமுணுத்தபடி இட்லியை உடைத்து சட்னியில் தொட்டு வாயில் வைத்தாள்.
உப்பு, காரம் இல்லை. வயதானாலே நாக்கின் ருசி போய் விடுகிறது.

சாப்பிட்ட பின் படுக்கையில் படுத்தாள் பாட்டி. ஏதேதோ பழைய ஞாபகங்கள் நெஞ்சை அடைத்தன. உறங்கி போனாள். பின்பு வாரம் ஒருமுறை அறையை சுத்தம் செய்யும் வேலைக்காரப் பெண் பாட்டியின் அறைக்குள் வந்தாள். பாட்டியை எழுப்ப பாட்டி எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் போயிருக்கக் கூடும். தகவல் கேள்விப்பட்டு அனைவரும் வந்து அழுது தீர்த்தனர். பாட்டியின் சடங்குகளை முடித்தனர். பாட்டிக்கு காரிய நாள்: பாட்டிக்கு பிடித்த உணவுகளை படையலுக்கு வைத்தனர். அதில் பாயசமும் இருந்தது.
**
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.